மாட்டு வண்டி| கவிதை | ச.குமரேசன்

மாட்டுவண்டி

மாட்டு வண்டி

 

கண்களுக்கு

கையை குடையாய் கொடுத்து

எட்டிப்பார்ப்பார் தாத்தா

காளைகளின் சலங்கையோசை

காதில் விழும்..!

 

வண்டிக்காரன் வருவான்

அவனோட பள்ளிக்கூடம் போ..

என் பல்லெல்லாம் பகலாய் மாறும்.

கால்கள் இரண்டும் காற்றில் மிதக்கும்..!

 

புத்தகப்பையை

கோதாணியில் தூக்கிப்போட்டு

சக்கர சட்டங்களில்

சரசரத்து ஏறி

முளைக்குச்சியை

இறுகப் பற்றி – உச்சியில்

 உட்கார்ந்து கொள்வேன்..!

 

கம்பு மூட்டைகளும்,

கடலை மூட்டைகளும்

எனது சிம்மாசனம்.

காளைகள்

கடந்து செல்கையில்

பாதையோர மரங்கள்

பின்னோக்கி ஓடும்..!

 

மேலிருந்து – நான்

ஊரைச் சுற்றி பார்ப்பேன்.

ஊரே என்னைப் பார்ப்பதாய் உணர்வேன்..!

 

வண்டிக்காரர்

கயிற்றை இழுத்து

பள்ளிக்கூடம் வந்துவிட்டதென்பார்.

கூட்டாளிகள் கூட்டம் கூடி விடுவர்..!

 

நான் இறங்குவேன்

என் அரியணையிலிருந்து..

அருகில் வந்து கேட்பான் – நண்பன்

என்னையும் ஒருநாள் ஏத்திக்கடா..!

 

வாழ்வில் பல

போர்கள் புரிந்து

பேரரசுகளை கைப்பற்றி

இன்று திரும்பி பார்க்கிறேன்

என் அரியணை அரவமற்று போயிற்று

நான் யாருடன் போரிடுவேன்?

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

Leave a Reply