சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 மணி. அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. சுவற்றில் ஆங்காங்கே அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொங்கும் திரைச்சீலைகள் அந்தப் படுக்கையறையை மேலும் அழகுப்படுத்தின. படுக்கையில் உள்ள போர்வைகள் கொஞ்சம் கூட கசங்காமல் சலவை போட்டதுபோல் இருந்தன. அவனுடைய நெகிர்ந்தெடுத்த தலைமுடி நீண்டிருந்தது. அவ்வவ்போது தலைமுடியைக் கோதிக்கொண்டான் பார்த்திபன். இரண்டு தலையணைகளை முன்னால் இட்டு அதற்கு மேல் கணினியை வைத்திருந்தான். சம்மணம் இட்டு இருகாதுகளிலும் ஹெட்போன் மூலம் ஆண்ட்ரூ லைன்னிடம் உரையாடிக்கொண்டிருந்தான்.
“ஹலோ, நளபாகம் சுவை உணவகத்தின் உரிமையாளர் திரு.பார்த்திபன்… நான் சிங்கப்பூரிலிருந்து ஆண்ட்ரூ லைன் பேசுறேன்”
“யா.. நான் பார்த்திபன்தான் பேசுறன். சொல்லுங்க லைன்”
என் மகளின் திருமண விழாவிற்கு தென்னகத்து இந்திய உணவு பரிமாறிட இருக்கின்றோம். தங்களுடைய நளபாக சுவை உணவுப் பற்றி இணையத்தில் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் அமெரிக்கா நியூயார்க் நகரில் தங்களின் உணவின் சுவையை சுவைத்திருக்கிறார். ரொம்ப நன்றாய் இருப்பதாகவும் சொன்னார். நானும் எங்கள் உறவுகளும் தென்னிந்திய உணவை சுவைக்க ஆயுத்தமாக உள்ளோம்” என்றார் ஆண்ட்ரூ லைன்
“ரொம்ப சந்தோசம் லைன். உங்களுக்கு எந்த வகையான பேக்கேஜ் வேண்டும். வெளிநாடுகளில் ஐநூறுக்கும் மேற்பட்டவை மட்டும்தான் எடுத்துக்கொள்வோம். அதற்கு கீழ் உள்ள பேக்கேஜ்களால் எங்களுக்கு நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐநூறு முதல் ஆயிரம் என ஐயாயிரம் வரை ஒருநாளில் எங்களால் சமைத்துத் தரமுடியும். பேக்கேஜ் அதிகம் ஆகஆக பணமும் குறையும். இது இல்லாமல் விமானப்போக்குவரத்துக்கான செலவுகளில் முக்கால் பங்கு தங்களிடமிருந்து வசூலிக்கப்படும். பாத்திரங்கள், ஆட்கள், உங்களுடைய விழா நிறைவு வரை சிங்கப்பூரில் இருக்கின்ற எங்களின் கேட்டரிங் ஆட்கள் உடனிருந்து பணிபுரிவார்கள். எங்களுடைய நிறுவனத்தில் உலகம் முழுவதிலிருந்தும் கேட்டரிங் ஆட்கள் வேலை செய்கிறார்கள்” – பார்த்திபன்
“எனக்கு சைவ உணவாக ஆயிரம் பேர் சாப்பிடுகின்ற மாதிரி வேண்டும். ஆனால், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள தூரம் 3,440 கிலோ மீட்டர். 3.45 மணி நேரம். எங்களுக்கு சரியான நேரத்தில் சுடச்சுட உணவு கிடைத்து விடுமா?” என்றார் லைன்
“விழாவின் தேதி மற்றும் உணவு வந்து சேரவேண்டிய நேரம் ஆகியவையைக் குறிப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே நான் அனுப்பி வைத்துவிடுகிறேன்” என்றான் பார்த்திபன். கொஞ்சம் உரையாடலுக்குப்பின் அனைத்து விபரங்களையும் குறித்துக்கொண்டான். அந்த விபரங்கள் அடங்கிய மெயிலையும் தன்னுடைய மேனேஜர்க்கு அனுப்பி தகவலைச் சொன்னான். போதும் என்றானது அவனுக்கு. இரண்டு பக்க நெற்றியிலும் கை வைத்துக்கொண்டு குனிந்து கொண்டான். கண்கள் தூக்கத்தை தேடின. கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அம்மாதான் காபியுடன் நின்றிருந்தாள். இவனும் தூங்கமாட்டான். அம்மாவையும் தூங்க விடமாட்டான். மணிக்கு ஒருதரம் இப்படி காபி டம்ளரை எடுத்துக்கொண்டு வந்து விடுவாள். மற்ற வேலைக்காரர்கள் யாரும் அவனின் அறைக்கு வருவதில்லை. சுடச்சுட காபி டம்ளரை மகனிடம் நீட்டினாள் அகிலாண்டம். கையில் வாங்கி வாயில் உறிஞ்சத்தொடங்கினான். விடியற்காலை இரவில் இருவரும் மௌனமாய் இருந்தார்கள்.
ஆரம்பத்தில் பார்த்திபனின் அப்பா நளன் சாதாரணமாய்தான் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்தார். அகிலாண்டத்தின் கைப்பக்குவம், வாடிக்கையாளர்களைக் கவரும் அப்பாவின் பேச்சு கொஞ்ச கொஞ்சமாய் ஹோட்டல் பெரிய அளவில் வளர்ந்தது. பார்த்திபனின் அறிவு இன்று நளபாகம் சுவை உணவகம் என உலகளவில் பேசப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பார்த்திபனின் வளர்ச்சியைக் கண்டு, அவனுக்கு உடம்பெல்லாம் மூளை என்பார்கள். எப்படி சாத்தியம்? கொஞ்ச நாள்களிலேயே அசுர வளர்ச்சி? என்று பிரமித்துபோனவர்கள் ஆயிரம் பேர். அவனின் வளர்ச்சியைப் பிடிக்காமல் வயிற்றெரிச்சலுக்கு மாத்திரையை விழுங்கியவர்கள் ஏராளம்.
“தம்பி….நான் சாயுங்காலம் சொன்னது பத்தி என்ன நினைக்கிற?” – அகிலாண்டம்மா.
“அம்மா… எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா? நான் எப்படிம்மா கல்யாணம் செஞ்சுகிறது. பாவம்! ஒரு பெண்ணோட வாழ்க்கைய கெடுக்கச் சொல்லிறியா?” – பார்த்திபன்
அப்பாவுக்குப் பிறகு உன்னை நான் கவனிச்சிக்கிட்டேன். எனக்கு பிறகு யாரு உன்ன பாத்துக்கிறது? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமாடா? இப்படியே இருந்தா எப்படி? உன்ன நினைச்சா எனக்கு கவலையா இருக்கு!
அம்மா… அதுக்காக நான் எப்படிம்மா? எனக்கு கல்யாணம்மல்லாம் வேண்டாம்மா?- அம்மாவை ஏக்கமாய்ப் பார்த்தான்.
பாக்கிறவங்க எல்லாம் உம்மகனுக்கு எப்ப கல்யாணம்? எப்ப கல்யாணம்? ன்னு கேட்கிறாங்க. கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியல.. நான் என்ன பண்றது.!
மதுரம் சொன்னதை மாலையே பார்த்திபனிடம் சொல்லியிருந்தாள். மதுரத்தின் கிளினிக்கில் ஒரு விதவைப் பெண் வேலை செய்கிறாள். கல்யாணம் ஆகி மூன்று மாதத்தில் கணவனைப் பறிகொடுத்தவள். ஏழைப்பெண்ணான அவளுக்கு ஒரு துணை வேண்டும். அந்தத் துணை நம் பார்த்திபனாகவே இருக்கட்டுமே! நான் அவளுடன் கலந்து பேசி சம்மதம் தருவதாகவும் உறுதியளித்திருந்தாள் மதுரம். அம்மாவை முறைத்துப் பார்த்தவனாய் மீண்டும் நெற்றியின் இரண்டு பக்கத்தையும் பிடித்துக்கொண்டு தலைக்கவிழ்ந்தான்.
முதல்நாளில் காலை மணி 11:00. அகிலாண்டம் மகனின் நினைவுகளில் மூழ்கியிருந்தாள். வாசலில் காலிங் பெல்லின் ஒலி திரும்ப திரும்ப கேட்டது. நினைவுகளிலிருந்து விடுபட்டவளாய் கதவை திறக்கப்போனாள் அகிலாண்டம்.
“ஹாய் அகிலா….” வந்தவள் அகிலாண்டத்தை இறுக்கமாகக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“வாடி மதுரம். எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாளாச்சே.. வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் அகிலாண்டம்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. நானும் ரொம்ப சந்தோசமா இருக்கேன். சென்னையில ஒரு வேல விஷியமா வந்தன். அதான் போற வழியில உன்னையும் ஒரெட்டு பாத்துட்டு போயிரலாமுன்னு வந்தேன். சரி நீ எப்படி இருக்க? உன்னோட பையன் எங்க?” – மதுரம்
“ம்… இருக்கேன்” முகம் வாடியவளாய் சொன்னாள். “சரி உன்னோட டாக்டர் வேலையெல்லாம் எப்படி போகுது?” – அகிலாண்டம்
“நல்லா போகுது. ஆனா நீ ஏ ஒருமாதிரியா இழுத்துட்டுச் சொல்லுற.. என்னாச்சு அகிலா”
“எனக்கென்னா கவலை இருக்க போவுது. என் பையனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு வச்சிட்டன்னா என்னோட கடமை முடிஞ்சிரும்”
“செஞ்சிட்டா போச்சு. அதுக்கென்ன?“
“அவன் கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லுறான். எனக்கும் அவன் சொல்லுறது சரிதான்னு தோனுது. ஆனா மனசு கேட்க மாட்டங்குதே. ஆமாம் மதுரம்! உனக்கு தெரியாததா?”
“நான்தான் உனக்கு பிரசவமே பாத்தன். கவலைப்படாத என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு? எப்படியும் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம். சரி எங்க உன்னோட பையன்? கடைசியா அவன நான் அண்ணா இறக்கும்போது பாத்திருந்தேன்” என்று ஆவலாய் கெட்டாள் மதுரம். அந்த அறையின் ஒரு பக்கத்தில் பார்த்திபனின் புகைபடம் தெரிந்தது. பார்த்திபனை ஒருமுறை பார்த்துவிட்டு அசந்துபோனாள். அழகோவியமாய் பிரகாசித்தான் அவன்.
“மதுரம் அத்தை சொன்னதா சொன்னல்ல அதுபத்தி என்ன நினைக்கிற தம்பி” என்றாள் அகிலாண்டம். சிறிது நேர யோசனைக்குப் பிறகு பார்த்திபன் அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“சரிம்மா… எனக்கு சம்மதம். ஆனா! அந்தப்பொண்ணுக்கிட்ட என்னைப் பற்றி எல்லாத்தையும் சொல்லிடுங்க. பின்னால ஏதாவது பிரச்சனையின்னா அது சரியிருக்காது. அதனால அந்தப்பொண்ணுக்கு ஓகேன்னா.. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்” – பார்த்திபன்
பார்த்திபன் இவ்வளவு சீக்கிரமாய் ஒரு நல்ல பதிலைச் சொல்லுவான் என்று அகிலாண்டம் எதிர்ப்பார்க்கவில்லை. அகிலாண்டம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். விடிந்ததும் உடனே மதுரத்திற்கு போன் செய்து சொல்லியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் அகிலாண்டம். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தப் பண்ணு என்று கிராமத்துப் பழமொழி ஒன்று உண்டு. ஆனால் அந்த ஆயிரம் பொய்யையும் பார்த்திபனுக்காக மதுரமும் அகிலாண்டமும் பெண் வீட்டாரிடம் சொல்லி சம்மதம் பெற்றுவிட்டார்கள்.
ஒரு நல்ல நாளில் பார்த்திபனுக்கும் கல்பனாவிற்கும் திருமணம் நடந்தது. முதலிரவு அறை அழகாய் தோரணத்துடன் அலங்கரிப்பட்டிருந்தன. பூவின் வாசனையும் ரம்மியமான வெளிச்சமும் நிலவின் குளிர்ச்சியும் அந்த இரவை சொர்க்கமாக்கியது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கல்பனாவும் அடுத்த ஓரத்தில் பார்த்திபனும் படுத்திருந்தனர். ஆனால் இருவரும் உறங்கினார்கள் என்று சொல்ல முடியாது. மனதில் ஆயிரம் ஆசைகளோடு இருமனங்களும் எண்ணங்களில் மூழ்கியிருந்தன. கல்பனாவிற்கு அந்த வீடு, இடம், வேலையாட்கள், உபசரிப்பு, கழுத்தில் தொங்கிய மிதமிஞ்சிய ஆபரணங்கள் என எல்லாமே புதியதாய் இருந்தன. குடிசை வீட்டில் மண்தரையில் கிடைத்ததை உண்ட அவளுக்கு இங்கு நடப்பது எல்லாம் புதியதாய் தோன்றியது.
ஆனால் இந்தப் பணக்கார வேஷம் அவளை திக்குமுக்காட வைத்தது. குளிக்கச் சென்றால் நான்கு பெண்கள் உடன்வந்து மஞ்சளையம் சந்தனத்தையும் பூசுகின்றனர். வெள்ளி தட்டில் நாக்குக்கு சுவையான உணவு. மயிலிறகாய் பஞ்சுமெத்தை. ஆனால், முதலிரவில் பார்த்திபன் தன்னிடம் நெருங்கி வராதது, அதுபற்றி யாரும் என்னிடம் எதுவும் கேட்காமலிருப்பது என்னுடைய கடந்த திருமணத்தின் போது எத்தனை கேலிகள், கிண்டல்கள். ஒருவேளை நான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதாலோ? அவருக்கு ஏற்னவே திருமணம் ஆகி மனைவி இறந்துவிட்டாள் என்று மதுரம் மேடம் சொன்னார்களே! அப்பாவும் அம்மாவும் என்னால் கஷ்டப்படக்கூடாது. இனியும் என்னால் ஏற்படுகின்ற சிரமத்தையும் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது, நாமும் வாழ்க்கையை இழந்து நிற்கின்றோம் அவரும் வாழ்க்கையை இழந்து வாடுகின்றார் அதனால்தானே திருமணத்திற்கு சம்மதித்தோம். பணக்கார வீட்டில் விட்டில்பூச்சியாய் அகப்பட்டுக்கொண்டோமோ? மிகவும் குளம்பிப்போயிருந்தாள் கல்பனா.
கல்பனாவின் கேள்விகளுக்கு அகிலாண்டம்தான் அவ்வப்போது எதையாவது சொல்லி சமாளிப்பாள். தன்னுடையக் குடும்பத்தைப் பற்றியும் பார்த்திபனின் திறமையையும் அவனின் வளர்ச்சியையும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வாள். திருமணமாகி மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இந்தத் தொன்னூத்தியொரு இரவுகளில் இருவரும் கட்டிலில் இரண்டு பக்க விளிம்புகளிலேயே படுத்திருந்தனர். கல்பனா கீழே சமையல் முடித்து மேலே வரும்போது குளித்து தன்னை முழுமையாக அலங்கரித்துக்கொண்டு விடுவான். ஒருநாள் கூட அவனின் வெற்றுடம்பைக் கூட கல்பனா பார்த்த்தில்லை. மகிழ்வாக ஒருநிமிடம் கூட பேசியது இல்லை.
பார்த்திபனை கல்பனாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. கணவன் தன்னை முழுமையாக ஆட்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அவன் பார்க்காத நேரத்தில் ரசிக்கவும் செய்தாள். ஆனாலும் தன்னை விலக்கி வைப்பதன் காரணம்தான் அவளுக்குப் புரியவில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றால் எதற்காக திருமணத்திற்கு சம்மதம் சொல்லி தாலி கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? மனம் பல்வேறாய் சிந்திக்கத்தொடங்கியது. இன்று இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணினாள்.
இரவு அலுவலகத்திலிருந்து வந்த பார்த்திபன் நேராக குளியலறைக்குச் சென்றான். கல்பனாவும் பின்னாலே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். குளியலறையில் பார்த்திபன் குளிக்கின்ற தண்ணீர் சத்தம் கேட்டது. பார்த்திபனுடன் என்ன பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று வரிசைப்படுத்திக்கொண்டாள். மனம் புண்படாமல் என் காதலை அவரின் இதயத்தைத் துளைத்து எடுக்கிற மாதிரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள். தண்ணீரின் சத்தம் நின்றுபோனது. ஒன்றை துணியால் உடம்பு முழுவதையும் மறைத்தவாறு ஒரு கையால் தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்தான். படுக்கையில் கல்பனா அமர்ந்திருப்பதைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் பார்த்திபன். என்ன செய்வதென்றே தெரியாமல் திருதிருவென முழித்தான். கல்பனாவே அங்கு நிலவிய சூழலைக் களைத்தாள்.
“என்னங்க என்ன புடிச்சிருக்கா” என்றாள் கல்பனா. எப்படி கேட்டாள் என்பதை அவளாளயே உணரமுடியவில்லை. ஏதோதோ கேட்க வேண்டும் என்று நினைத்தவள் திடிரென்று இப்படி கேட்டுவிட்டாள். பல்லைக் கடித்துக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். கல்பனாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று திக்கு முக்காடிப்போனான்.
“நீ வெளிய போ… நான் டிரஸ் மாத்தனும்” என்றான் பார்த்திபன்
“போக மாட்டேன். நான் உன் பொண்டாட்டிதான என் முன்னாலயே டிரஸ் மாத்து. நானும் பாக்குறன்” – கல்பனா.
“நீ இப்ப போக போறியா? இல்லையா? நீ போகலன்னா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” – பார்த்திபன்
“இப்ப எதுக்கு கோப்படுறீங்க! நான் என்ன கேட்டுட்டன். என்னை புடிச்சிருக்கா? இல்லையான்னு சொல்லுங்க? நான் போயிடுறன்” – கல்பனா. பார்த்திபனின் கையில் இருந்த சாயப்பாட்டிலை ஓங்கி தரையில் அடித்தான். அடித்த வேகத்தில் உடைந்து அதனுள் இருந்த சாயம் அந்த அறை முழுவதும் பரவியது. “வெளிய போ…..” என்று உக்கிரமாகக் கத்தினான். எதையோ பேச வந்து இங்கு வேற எதுவோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தாள். கலகம் பண்ணா வழிப் பிறக்கும் என்பார்கள். என்னோட வாழ்க்கைக்கு தேவை பணம் இல்லை. அன்புதான். அன்பை பெறுவதற்கு அக்கலகத்தில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்று எண்ணினாள் கல்பனா.
சிதறிய சாயத்தின் துளிகள் கல்பனாவின் முகத்திலும் தெளித்திருந்தது. பார்த்திபனின் உக்கிரமான கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். “போக முடியாது. நான் உன் பொண்டாட்டிதான.. நான் எதுக்கு போகனும்” என்றாள்.
“ஏண்டி இப்படி அலையிற… அப்பவே சொன்ன எங்க அம்மகிட்ட கல்யாணம் வேண்டாம்மா… வேண்டாம்மா.. ன்னு அவுங்கதான் கேட்கல. ஏதோ ரோட்ல போற ஒன்னப் புடிச்சு என் தலையில கட்டி வைச்சிட்டாங்க” தன்னிலை மறந்து பேசினான் பார்த்திபன். இதற்குமேல் கல்பனாவால் கோபத்தை அடக்க முடியவில்லை.
“நான் அலையிறனா… நான் அலையிறனா… நான் ரோட்டுல போற ஒன்னா.. பேசுவ… நீ பேசுவ.. ஏன்னா நீ பணக்காரனாச்சே! கல்யாணம் பண்ணி மூணு மாசம் ஆச்சு. அவள அம்மாவாக்க முடியல. நீயெல்லாம் பேசுற… ஆமா எனக்கு ஒரு டவுட். நீ ஆம்பிளயா… சொல்லு நீ ஆம்பளயா..” தன்னையே இழந்து பேசினாள் கல்பனா.
“ஆமாம் நான் ஆம்பளைதான்” – கத்தினான் பார்த்திபன்.
“அப்புறம் ஏன் கட்டில் விளிம்புல போயி போயிப் படுத்துக்கிற. நான் பொம்பளன்னு நினைச்சன்” – கல்பனா
“ஆமாம் நான் பொம்பளதான்! எனக்கு எந்த ஆண் மேலயும் ஆசை வராது. எந்த பெண் மேலயும் ஆசை வராது. ஏன்னென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன் நான்! ! பார் என்னை” என்று உடலில் கட்டியிருந்த ஒற்றைத்துணியை நீக்கினான். முழு நிர்வாணம் ஆனான். மின்சாரம் நின்று போனது. முன்னிரவில் சாளரத்தின் வழியாய் நேர்திசையில் முழுபௌர்ணமி வெண்மையாய் உருண்டையாய் தெரிந்தது. ரம்மியமான நிலவொலியை ஒத்த வெளிச்சத்தில் பார்த்திபனின் முழு நிர்வாணத்தைக் கண்டாள். இடது பக்கத்தொடை நடுவே பெண்ணுறுப்பும் நேராக நெஞ்சில் சின்னதாய் முலையும், வலப்பக்கத் தொடை நடுவே ஆணுறுப்பும் நேராக நெஞ்சில் வட்டமாய் காம்பும் இருந்தன. கயிலாயத்தில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒன்றாய் திருநீலகண்டனாய் இருப்பது போன்ற காட்சி. முழுகோளமாய் தலையில் நிலவுடன் ருத்ரனாய் காட்சியளித்தான் பார்த்திபன்.
கைகள் கோர்த்தன. கண்கள் கலங்கின. மனம் மகிழ்ந்தது. கல்பனா அப்படியே மயக்கமடைந்தாள். பஞ்சு மெத்தையில் மயிலெனப் படுத்திருந்தாள். அவளின் முகம் தாமரையாய் ஒளிர்ந்தது. கண்கள் மூடியிருந்தன. ஆணும் பெண்ணும் ஓர் உடலில். எப்படி சாத்தியம்? உண்மையிலேயே பார்த்திபன் தில்லைவாணனா? இறைவனையே நேரில் பார்த்தது போன்ற காட்சியல்லவா? நான் என்னுடைய பிறவிப்பயனை அடைத்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். மூடியிருந்த கல்பனாவின் கண்களிலின் ஓரத்திலிருந்து கண்ணீர் துளியானது வழிந்தது. கல்பனாவின் உடலும் இப்போது சில்லென்றானது.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்
iniyavaikatral@gmail.com
இந்த சிறுகதை ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது. வித்தியாசமான கதையம்சம் சிறப்பு ஐயா.