306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு - ஜெயலட்சுமி

       தேனி மாவட்டம், வருஷநாடு அருகே தங்கமாள்புரத்தில் 306 ஆண்டு பழமையான திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தொல்லியல் ஆய்வாளர் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவரும் தொல்லியல் ஆய்வாளரும் தமிழ் ஆசிரியருமான ஜெயலட்சுமி, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
  
          தொல்லியல் கள ஆய்வு செய்து தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்தி வருகிறேன். என் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்ததில் அச்சுவடி திருக்குறள் சுவடி என்பது தெரிய வந்தது. இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில் உரைநடையுடன் கூடியதாக இருந்தது.
           
        பல்வேறு திருக்குறள் உரையாசிரியர்களின் உரையுடன் ஒப்பிட்டுபார்த்ததில் இச்சுவடியில் உள்ள உரை புதிதாக உள்ளது. மேலும் இச்சுவடி எழுதப் பட்ட காலம் விளம்பி ஆண்டு மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இதன் காலம் 1718ம் ஆண்டு ஜூலை 31 ஆகும்.


            தற்போதைய நிலையில் 306 ஆண்டு பழமையாக உள்ளது. எழுத்துக்கள் இடைவெளி இல்லாமலும், நெடில் எழுத்துக்கள், புள்ளிகள் இல்லாமலும் உள்ளதால் இச்சுவடியானது வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்த காலத்திற்கு முந்தையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவடியின் ஒரு இதழில் ஆறு முதல் பத்து வரிகள் எழுதப்பட்டுள்ளன.  ஒவ்வொரு இதழிலும் அதன் பக்கத்தை குறிக்கும் வகையில் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு திருக்குறள் முடிந்ததும் அதன் உரையானது இடைவெளி இன்றி தொடர்ச்சி யாக எழுதப்பட்டுள்ளது. அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிசை மாற்றப்பட்டுள்ளது.


     அதிகார தலைப்புகளைத் தற்போதைய தலைப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சற்று மாறுபட்டிருப்பது வியப்பாக உள்ளது. இச்சுவடியை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு உள்ளேன். விரைவில் நூலாக்கம் உரையுடன் செய்யப்பட உள்ளது. அவ்வாறு வெளிவருமாயின் தமிழ் உலகிற்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறேன்.

ஆய்வாளர்
திருமதி ம.ஜெயலட்சுமி
தொல்லியல் ஆய்வாளர்
ஓசூர் – 635 130

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here