நூலின் பெயர்
“தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” ( மொழி: பிரன்ச்)
ஆசிரியர் பெயர் : அலெக்சாண்டர் தூமா
முன்னுரை
கட்டுரை ஒன்று எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்தவுடன்,நான் எப்பொழுதோ வாசித்த இந்த நாவல் நினைவில் வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இதை எப்படி இவ்வளவு நாள் மறந்திருந்தேன் என்பதுதான் ஆச்சரியமூட்டியது. சிறுவயதிலிருந்தே பல சிறுகதைகள், நாவல்கள் என நிறைய வாசித்திருந்தாலும், நான் முதன்முதலில் படித்த பிற மொழி நாவல் இதுதான். அம்புலிமாமா, கோகுலம் இதழ்களுடன் சுஜாதா, தமிழ்வாணன், லக்ஷ்மி, சிவசங்கரி போன்றோரை வாசிக்கத் துவங்கிய காலம் அது. இந்த ஆங்கில நாவலை வாசித்த போது எனக்கு பதினைந்து வயதிருக்கலாம். அந்த வயதில் ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாதிருப்பினும் தமிழ் நாவலைப் படிப்பதற்கு நிகராக ஒரே மூச்சாக (அகராதியின் உதவியுடன்) படித்து முடித்ததாக ஞாபகம். அந்த நாவல் பிரெஞ்சு கதாசிரியர் ‘அலெக்சாண்டர் தூமா” எழுதிய “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” (மூலம்: ஃபிரெஞ்ச்) என்ற நாவலின் ஆங்கில பதிப்பு. அதுவரை ஆங்கில நாவல்களே படித்திராத என்னை, என் சகோதரிக்குப் பள்ளியிலோ, கல்லூரியிலோ துணைப்பாடமாக வந்து, எதேச்சையாகப் படிக்க வைத்து வசீகரித்துக் கொண்டது.
எழுதும் ஆர்வம்
எத்தனையோ மனம் கவர்ந்த தமிழ் கதைகள் இருக்கையில் உள்ளன. இதை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஒரு கேள்விக்குறிதான். யோசித்து பார்த்ததில் காரணம் புலப்பட்டது. அந்த இளம் வயதில் நாவல் படித்து முடித்தவுடன், அதன் கதையோட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அது ஆங்கில நாவல் என்பதால் யாரும் படிக்கத் தவறிவிடக் கூடாது என்ற ஒரு பேராசையில்(?!!) அதை மொழி பெயர்க்கவே ஆரம்பித்து விட்டேன்!. ஆனால் அனுபவமின்மை மற்றும் பள்ளிப் படிப்பின் காரணமாக இரண்டு அத்தியாயங்களுடன் மலைத்து ஓய்ந்துவிட்டேன். அந்த வயதில் சொந்தமாகப் பள்ளிக் கட்டுரைகள் கூட எழுதியிருப்பேனா என்பதே சந்தேகம்தான். ஆகையால் என்னை முதன்முதலாக எழுதத் தூண்டிய அந்த புத்தகத்தைப் பற்றிப் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அலெக்சாண்டர் தூமா 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியராக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்து வறுமையில் உழன்று, பின் பாரீசிற்கு வந்து நாடகங்கள் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார். த்ரீ மஸ்கிடீர்ஸ் இவரது மற்றொரு புகழ்பெற்ற படைப்பாகும். “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” தூமா வால் 1844-46 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அலெக்சாண்டர் தூமாவின் தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ இதைப்பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தபின் குறிப்புகளுக்காக இணையத்தில் பயணித்தபோதுதான் இந்நாவலைப்பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவற்றின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது. 1840 களில் எழுதப்பட்ட நாவல் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணிலடங்கா வடிவங்களில் சுருக்கப்பட்டும், மாற்றப்பட்டும், மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது. 1920 – களில் பேசாமொழி படங்களில் தொடங்கி 2002 வரை பலமுறைத் திரைப்படவடிவில் எடுக்கப்பட்டுள்ளது. நான் படித்ததும் கதை சுருக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் தான் என்பதையும் அறிந்து கொண்டேன். (மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டுள்ளது)
“உனக்கு எதிரிகளே இருப்பதாகத் தெரியவில்லையா? கொஞ்சம் சிரித்து சந்தோஷமாக இருந்து பார். பிறகு தெரியும்” – சமீபத்தில் எங்கோ இதைப் படிக்க நேர்ந்தது. ஆம் இதுதான் தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோவின் அடிநாதமும். தனக்கானத் துணையை கைத்தலம் பற்றவிருந்த ஒரு கள்ளங்கபடமில்லா அப்பாவி இளைஞனின் கனவைப் பொறாமையும் வஞ்சகமும் சிதைத்தெறிந்ததை சோகம் சொட்ட விவரித்து அந்த இளைஞனின் தோளைப்பற்ற வைத்து கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் கதாசிரியர்.
திறனாய்வு நோக்குப் பார்வை
எட்மண்ட் டான்டேஸ் தான் அந்த அப்பாவி இளைஞன். கப்பல் மாலுமியான அவன் தன் திறமையால் முதலாளியின் நன்மதிப்பைப் பெற்று கேப்டன் பதவியையும் அடைகிறான். மேலும் தன் காதலி மெர்சிடீஸையும் சில நாட்களில் மணம் புரியவிருக்கிறான். வாழ்வில் நண்பர்களாய், சக பணியாளனாய், அண்டைவீட்டுக்காரனாய், முகம் தெரியா மனிதனாய்ப் பயணிக்கும் சில தீயசக்திகளுக்கு இவனின் இந்த மகிழ்ச்சியானத் தருணங்கள் மட்டுமே சதிவலையில் வீழ்த்தி சிறையில் தள்ளப் போதுமானதாக இருந்தது.
ஒருவனுக்கு எதிர்பாராத தீமைகள் நிகழ்வது, சக மனிதரில் சிலர் தீயவர் என்பதனால் மட்டும் அல்ல.தன் எதிரிகள் யார் என்ற அறியாமையில் அவன் இருப்பதால்தான். அத்தகைய அறியாமைக்கு முடிவுரை எழுத முடிந்தவனே தீமையைக் கையாளத் தெரிந்தவனாகிறான். “வசந்த விழா! வசந்தத் திருவிழா! என்று டான்டேஸ் மனம் மகிழ்ந்த மணநாளில் திருமணம் முடியும் முன்னரே தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு கோட்டைத் தீவுச்சிறையிலடைக்கப்படுகிறான். ஏனிந்த தண்டனை என்பது புரியாமலேயே பல வருடங்கள் காலங்கழித்த நிலையில் இருண்ட குகையின் விரிசல் வெளிச்சமாய் சுரங்கம் அமைத்து இவனை வந்தடைகிறார் சகக் கைதி அபே ஃபாரியா.
நாவலாசிரியர் இந்த நிகழ்வை விவரிக்கும் தருணம் அலாதியானது. மொழி தெரியா நாட்டில் “நீங்க தமிழா?” என்று செவிகளில் ஒலித்தால் எவ்வளவு ஆனந்தப்படுவீர்களோ அதற்கு நிகரான மகிழ்ச்சியைக் கதை மாந்தர்கள் அனுபவிப்பதை நீங்களும் உணர்வீர்கள். கடினமான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்க்கப் பெறும் போதுதான் ஒருவனால் தன்னுள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் வெளிக்கொணர முடிகிறது.கைதிகள் இருவரும் சிறிய ஆயுதங்களை உருவாக்குவது, தப்பித்துச் செல்ல சுரங்கம் தோண்டுவது மற்றும் இவற்றுக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் அபே ஃபாரியாவின் அபார மூளைத்திறன் ஆகியவற்றை விவரிக்கும் விதக்தில் நம்மை வாய் பிளக்கச் செய்கிறார் தூமா. திரைப்படங்களிலும் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் நம்மை நெகிழ வைக்கின்றன.
ஒன்றுமறியா டான்டேஸிற்கு என்ன நடந்திருக்குமென்பதை யூகித்துப் புரிய வைத்து,இறக்கும் தறுவாயில் புதையல் இரகசியம் சொல்லி ,தன் உயிரற்ற உடலாலும் டான்டேஸிற்கு உதவி புரியும் அபேவின் கதாபாத்திரம் இந்த கதையின் உயிர்நாடி என்றால் அது மிகையல்ல. அபே கூறிய புதையலை சில கடத்தல்காரர்கள் உதவிடன் கண்டுபிடித்து டான்டேஸ் “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” வாக உருவெடுக்கையில் கதைக்களம் சூடுபிடிக்கிறது. அதன்பின் இராமனின் வனவாசமாய் பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வைத்த வஞ்சகர்களை டான்டேஸ் பழிவாங்கும் படலம் துவங்குகிறது.ஒவ்வொரு எதிரிக்கும் ஒவ்வொரு விதமான தீர்ப்பு என பழிவாங்கல் படலத்தை அமைத்திருக்கும் விதம் மிக அருமை. அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அதே வேளையில் அவர்களுடைய கள்ளங்கபடமில்லா நல்ல வாரிசுகள் சிலருக்கும்,தன் முன்னாள் கப்பல் முதலாளிக்கும் நிதியுதவிகள் செய்தும்,வாழ்க்கை அமைத்துக் கொடுத்தும் நன்மைகள் பல செய்து தான் ஒரு நல்லவனே, வஞ்சத்தால் வீழ்த்தியதாலேயே பழிவாங்க வேண்டியிருக்கிறது என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறார் கதாநாயகன். இத்தகைய சதித்திட்டங்கள் அல்லது கதைக்கான கருவினை தன் நண்பர் ஒருவர் உதவியுடன் தூமா அமைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.எது எப்படியோ அவை வாசகருக்கு மிகுந்த விறுவிறுப்பைத் தருகின்றன.
முடிவுரை
“வரலாற்று சாகச நாவல்” என வகைப்படுத்தப்பட்டு அநீதிக்கு பழிவாங்குதலை கதைக்களமாக கொண்டிருந்தாலும், கதை மனிதநேயம்,காதல்,கருணை,நட்பு, நீதிநேர்மை,சமுதாயம்,மன்னிப்பு என எக்காலத்திற்கும் பொருந்தும் பன்முகத்தன்மை காட்டிப் படிப்போரைப் பரவசப்படுத்துகிறது “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ”. மூலவடிவம் கிட்டத்தட்ட 1700 பக்கங்கள் கொண்டிருக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் இது அதிகம் எனப் பேசப்பட்டாலும், அவ்வளவு நீளத்தையும் இரசிக்கத்தக்க வகையிலும், கதையில் தொய்வு ஏற்படாத வகையிலும் கொடுத்திருப்பதாலோ என்னவோ இலக்கிய உலகில் இக்கதை இன்னும் முடிசூடா மன்னனாகவேத் திகழ்கிறது.
நூல் விமர்சகர்
ஆனந்த்.கோ
கிழக்கு தாம்பரம்,
சென்னை – 600 059
மேலும் பார்க்க,
2.கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!!
சிறப்பு..வாழ்த்துகள்….