“டம் டம் டமார்” காலை ஐந்து மணிக்கு ஒரே சத்தம். அம்புஜம் மாமி சமையல் வாசனை தெரு முழுக்க வரும். ஆனால் கொஞ்சம் சவுண்ட் பார்ட்டி. கையும் வாயும் சும்மா இருக்காது. பாத்திரம் எடுத்தா கீழே போடாம வேலை நடக்காது. சுறுசுறுப்பும், ரசனையும் மாமிக்கு ரொம்ப ஜாஸ்தி.
நாராயண சாமி தூங்கி எழுந்தவுடன் மாமி பேச்சு ஒரு கும்மி பாட்டு மாதிரி இருக்கும். ராத்திரி தாலாட்டு பாட்டு கேட்பதும் காலைல கும்மி பாட்டு கேட்பதும் நாராயண ஸ்வாமிக்கு பழக்கமான ஒன்று.
பெருமாளுக்கு காலைல சுப்ரபாதம், இரவு லலிதா சஹஸ்ரநாமம் மாதிரி. நாராயண ஸ்வாமி வீட்டுல காலைல கும்மி இரவு ரம்யமான தாலாட்டு. அந்த இட்லி, கொட்சு, தோசை, குருமா, சப்பாத்தி, பருப்பு எல்லாம் நினைத்தாலே தூக்கம் வரும். அது ருசியா மயக்கமானு யாருக்கும் தெரியாது. தரமான சாப்பாடு சாப்பிட்டால் தூக்கம் தானே வரும். இது அனுபவத்தில் உண்மை. அம்புஜம் மாமி குரல் கேட்டது.
“வந்துட்டியா எனக்கும் உனக்கும் என்ன ஒரு பொருத்தம். நீயும் நானும் இல்லேன்னா சமையல் இல்லை. நான் எத்தனை நேரம் கஷ்டப்படணும் உன்னோட. நான் மனசுல நினைச்ச உடனே வந்துடரியே. காலைல உன் கலர் எவ்வளவு பிரெஷ் சா இருக்கு. உன் பெயர் கேட்டால் எனக்கு என் காலை வேலைகள் நியாபகம் வருது. பிள்ளையார் மாதிரி நீ தான் என் முதல் வேலை. நீ ஏன் இவ்வளவு வேலை குடுக்கறே? சில பேர் வீட்டுல வேலை கம்மி எங்க வீட்டுல உன்னால தான் வேலை ஜாஸ்தி”.
நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. தினமும் இப்படி மகன் ரமேஷ்சை வசை பாடி எழுப்புவது தப்பு. அவன் காலை நேரம் இனிமையாக இருக்க வேண்டும். சரியான நேரம் வந்தால் அவளிடம் சொல்லணும்னு நினைத்தார். அம்புஜம் மாமி, நாராயண ஸ்வாமிக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பெயர் ரமேஷ். இரண்டாம் மகன் பெயர் கிரிஷ். ரெண்டு பெரும் ஸ்கூல் படிக்கறாங்க. நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் தனி ரூம் ல படுப்பார். ராத்திரி லேட்டா டா படுப்பார். ஆபீஸ் வேலை அதிகமா இருக்கும்.
குழந்தைகள் தனி ரூம்ல படுப்பாங்க. அம்புஜம் மாமி அந்த ஏரியால பேமஸ். அவங்க ஊறுகாய், கருவேப்பிலை போடி, முருங்கை கீரை போடி, பருப்பு போடி செய்து சேல்ஸ் பண்ணுவாங்க. கை மணம் அதிகம். நாராயண ஸ்வாமி கிண்டல் அடிப்பார் “நீ பெரிய பிசினஸ் வுமன். உன் பிசினஸ் மைண்ட் சும்மா இருக்காது”.
அம்புஜம்: நான் டீச்சர் ட்ரைனிங் எடுத்து டீச்சர் ஆகணும் ன்னு நினைச்சேன். என்ன பண்றது! கடமை வீட்டிலேயே என்னை கட்டி போட்டு விட்டது. சமையல் பிசினஸ் பண்ண எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குங்க.
நாராயண ஸ்வாமி: இந்த கம்ப்யூட்டர் காலத்துலே வேலை பண்றத விட பிசினஸ் பண்றது தான் பெஸ்ட், அம்புஜம். ஊறுகா போட்டு குழந்தைகளை டாக்டர் படிக்க வச்ச பெண் இன்னிக்கு நியூஸ்பேப்பர் ஹெட்லைன்ஸ் ல பார்த்தேன்.
அம்புஜம்: பெண்கள் சுயமாக இருப்பது பெரிய விஷயம்.
நாராயண ஸ்வாமி: பெண்கள் அறிவால் சாதிப்பது அழகு தான். வள்ளுவர் சொல்லி இருக்கார்: “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து”. இதற்கு அர்த்தம், ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
அம்புஜம்: உண்மை தான். ஒரு ஆண் தன் குழந்தைகளை கண்டிப்பாக வளர்ப்பான். பெண் மானமுள்ளவர்களாக வளர்ப்பாள். தாய், தந்தை இருவரும் ஒரு குழந்தைக்கு முக்கியம். சரி, சரி நேரம் ஆச்சு நான் குளிக்க போறேன். எனக்கு வேலை இருக்கு. நாராயண ஸ்வாமி அலுவலக வேலைகளில் மூழ்கி போனார். அம்புஜம் சமையல் மற்றும் குழந்தைகள் வேலையில் கவனம் செலுத்தினாள். ரமேஷ், கிரிஷ் இருவரின் ஸ்கூல் பிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்தார்கள். ரூம்ல ஒரே சத்தம். லேப்டாப் வச்சிட்டு ஹாட்ஸ்டார்ல ஏதோ பார்த்துட்டு இருந்தார்கள்.
ரமேஷ்: கிரிக்கெட் ல ஆல் ரவுண்டர் தான் பெரிய விஷயம். கிரிஷ்: எனக்கு பேட்டிங் தான் புடிக்கும்.
ரமேஷ்: எனக்கு ரவீந்திர ஜடேஜா தான் புடிக்கும். அவரு மேட்ச் சூப்பர் ரா இருக்கும். கிரிஷ்: பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் எப்படி ஆடினார் இல்ல. அவரு ஒரு சூப்பர் பிளேயர் டா.
கிரிஷ்: இந்தியன் பிளேயர் ரோஹித் ஷர்மாவும் சூப்பர் தான். அவரு மேட்ச் பார்க்க செமயா இருக்கும். எல்லாரும் சந்தோசமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். நாராயண ஸ்வாமி ஆபீஸ் வேலை ஒரு புறமும் மகன்கள் பேசுவது ஒரு புறமும் கேட்டு கொண்டு இருந்தார். அடுத்த நாள் ஞாயிறு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவு. லீவு அன்னிக்கு வெங்காயம் போட்டு சாம்பார், கருவேப்பிலை சட்னி, கீரை கூட்டு, அவியல், பருப்பு உசிலி, உருளை கரி ன்னு நிறைய மெனு இருக்கும். பார்ப்பனர்கள் குடும்பத்தில் சாம்பார், சட்னி, உருளை கரி தான் ஸ்பெஷல் மீல்ஸ். நாராயண ஸ்வாமி ஆடிட்டர் வேலை பார்ப்பதால் வெளி ஊருக்கு போவார். ஹோட்டலில் சாப்பிடுவார். வீட்டு சாப்பாடு அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஹோட்டல் சாப்பாடு வேற வழி இல்லாம சாப்பிடுவார். கஷாயம், லேகியம், சாலட், பழம்ன்னு ஹெல்த்தியா சாப்பிடுவார். ஹோட்டல் சாப்பாடு ஜீரணம் ஆகாது. சத்தும் கம்மியா இருக்கும். வீட்டு சாப்பாடு ருசி அதிகம், சத்தும் அதிகம். சாம்பார், பொரியல், கூட்டு, துவையல் ன்னு நல்லா சாப்பிடுவார்.
ரமேஷ், கிரிஷ் காலைல லேட்டா எழுந்துப்பாங்க. எழுந்த உடனே அப்பா வோட கிரிக்கெட் விளையாட்டு, அப்புறம் சாப்பாடு, அம்மா வோட கதை நேரம், பிரண்ட்ஸ் வீடு, பிரண்ட்ஸ் கூட அரட்டைனு ஓடி போய்டும். ஞாயிறு காலை ஐந்து மணி
அம்புஜம் மாமி சவுண்ட் குடுக்க ஆரம்பிசுட்டாங்க. கும்மி பாட்டு ஆரம்பிச்சாச்சு. “என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு. நான் என்ன வேலைக்காரி ‘யா? உன் ஒருத்தனால மத்த வேலை செய்ய முடியல. இப்படி என்ன ஏன் கஷ்டப்படுத்தறே?” நாராயண ஸ்வாமிக்கு கோவம் வந்தது. சும்மா குழந்தைகளை கறிச்சு கொட்டறா. அம்மா அப்படினா வேலைக்காரி தான். இதுல என்ன குறைஞ்சி போரா இவ. சும்மா ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசரா. இன்னைக்கு சொல்லணும். இப்படி பேசாதேன்னு. மனதில் ஒத்திகை பார்த்து விட்டு ரூம் வெளியில் வந்தார் நாராயண ஸ்வாமி. நாராயண ஸ்வாமி: ஏண்டி அம்புஜம், ஏன் இப்படி சத்தம் போடறே? காலை வேலைல தூங்க விட மாட்டியா?
அம்புஜம்: நீங்க ஏன் என் பேச்சை கேட்கறீங்க. ஏதாவது பா ட்டு போட்டு கேளுங்க. நாராயண ஸ்வாமி: உன் பாட்டு கேட்டா தான் சுறுசுறுப்பா இருக்கு.
அம்புஜம்: சரி அப்போ கேளுங்க. நாராயண ஸ்வாமி: நீ ஏன் குழந்தைகளை காலை நேரத்தில் திட்டுறே? காலைல நல்ல வார்த்தை பேசணும்னு உனக்கு உங்க வீட்டுல சொல்லி தரலையா? அம்புஜம்: அது சரி, நான் என் சொந்த கதை சோக கதை சொன்னா, நீங்க குழந்தைகளை திட்டறேன்னு நினைச்சுட்டீங்களா. நான் இந்த முருங்கை கீரையோட பேசினேன்.
நாராயண ஸ்வாமி: என்ன? கீரையோட பேசினாயா? அம்புஜம்: ஆமாம் நான் கீரை கூட, பாத்திரம் கூட பேசுவேன். என் வேலை அவங்களோட தானே.
நாராயண ஸ்வாமி: சரி, ஆனால் ஏன் அழகா பிரெஷ் சா இருக்கேனு சொன்னே? ன்னு கேட்டுட்டு சிரித்தார்.
அம்புஜம்: ஆமாம், முருங்கை கீரை பிரெஷ் சா இருந்தா காலைல வாங்கி கூட்டு பண்ணுவேன். இரும்பு சத்து இருக்கு. ரொம்ப நல்லது. கீரை அழகா இருக்கு. ஆனால் வேலை அதிகம் ஆகிடுது. அதான் சொன்னேன்.
நாராயண ஸ்வாமி: ஆமாம், நீ சொல்றதும் சரி தான். நாம வேஜிடெரியன் சாப்பாடு சப்படறோம். கீரை சாப்பிட்டா நல்லது.
அம்புஜம்: சுதந்திரம், பாதுகாப்பு இரண்டுல ஏதாவது ஒன்னு தான் வாழ்க்கைல இருக்கும்ன்னு நான் ஒரு நீதி கதை படிச்சேன். அது தான் எனக்கு ஞாபகம் வருது. வேலை செய்யாம சுதந்திரமா இருந்தால் சோம்பேறித்தனமா இருக்கு. வேலை செஞ்சா அலுப்பா இருக்கு. நான் சுதந்திரமா இருக்கறத விட அங்கீகாரத்துடன் இருப்பது தான் பெரிசுன்னு நினைக்கறேன்.
நாராயண ஸ்வாமி: நீ குழந்தைகளை தான் திட்டறேன்னு நினைச்சு நான் வருத்தப்பட்டேன். உன் அன்பான கண்டிப்பு “மழை சாரல்” மாதிரி. அது கஷ்டமான சுகம் என்றார். இவர்கள் பேசுவதை கேட்ட ரமேஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து ரூம் வெளியில் வந்தான். அப்பா, அம்மா திட்டினால் சிரிப்பு தான் வரும். கோவம் வராது என்றான்.
நாராயண ஸ்வாமி: உண்மை தான். அவள் திட்டும் பொழுது “வஞ்சப்புகழ்ச்சி அணி” உபயோகிப்பாள். சொல்ல வந்ததை அழகும், அன்பும் கலந்து சொல்வாள்.
ரமேஷ்: கரெக்ட்டா சொன்னீங்கப்பா. அம்மா திட்டினால் கோவம் வராது. அப்பா திட்டினால் தான் கோவம் வரும்.
அம்புஜம்: அம்மாவின் கண்டிப்பு ஆர்வத்தையும், அப்பாவின் கண்டிப்பு வேகத்தையம் தரும். அது தான் கடவுளின் படைப்பின் ரகசியம் என்றாள்.
ரமேஷ்: உண்மை தான், அம்மா, என்றான். அம்மாவை கட்டி அணைத்து முத்தம் இட்டான்.
அம்புஜம்: இந்த முருங்கை கீரை ஒரு உண்மை கதையை உருவாக்கிவிட்டது என்றாள் சிரித்துக்கொண்டே. நாராயண ஸ்வாமி: ஆமாம், “முருங்கை கீரை கதை” நல்ல கதை என்றார். சொந்தக் காரங்க வீட்டுக்கு வந்தா சொல்ல இன்டெரெஸ்ட்டிங்கா ஏதாவது வேணுமே. சும்மா இருந்த வாய்க்கு அவல் நான் குடுத்துட்டேனா? சிரித்து கொண்டே குளிக்க சென்றார் நாராயண ஸ்வாமி. அம்புஜம் மாமிக்கு சமையல் வேலையும், குடும்ப பேச்சும் தான் சந்தோஷம். அவள் உலகம் அது தான். ஆனால் தன் உலகத்தை அழகாகவும், சுறுசுறுப்பாகவும் அவள் வைத்து கொண்டு இருந்தாள். அதனால் தான் அனைவரும் அவளை விரும்பினார்கள்.
சிறுகதையின் ஆசிரியர்
ரா. ஷர்மிளா,
ஆதம்பாக்கம்.