மணம் வீசும் மனம்|கவிதை|ச. குமரேசன்

மணம் வீசும் மனம்

மணம் வீசும் மனம்

தனிமை என்னை வாட்டியதில்லை… 

தாய் தவறிய பின் 

நான் தள்ளாடியபோதும்… 

தகப்பன் சாமியோடு

தந்தை சேர்ந்த நாளில்

தத்தளித்தபோதும்..!

 

துக்கம் தொண்டையை

கவ்விய வேளையில் – அதை

துச்சமாக தூக்கியெறி

இல்லையேல் – நீ

தூக்கியெறியப்படுவாய்..  

துவண்டு விடாமல்

தூணாகிவிடு என்றது அது… 

துடைத்தேன் கண்ணீரை

துள்ளியெழுந்தேன்..! 

 

எண்ணங்களை ஏணியிலேற்று!

ஏகாந்தத்தில் இலயித்துவிடு!

படைப்பின் இரகசியமறி!

பத்தரைமாத்து தங்கமாகு! 

ஆத்மாவின் ஆனந்தம் உணர்! 

ஆழ்மனதுள் ஊடுருவு! என்றது அது…. 

அழுகையை அப்புறப்படுத்தி

அழுக்கை அழகாக்கினேன்..! 

 

ஏன் நொறுங்கி போகிறாய்?

இது ஆப்கன் இல்லை

அதிர்ந்து விட.. 

ஈழம் இல்லை

இழந்து வாட..

சோமாலியா இல்லை

சோர்ந்து போக.. 

இரும்பாய் இரு –  நீ

இந்தியன் என்றது அது… 

இன்னல்களை விட்டெறிந்து

இனிமையானேன்..! 

 

நொடிப்பொழுதும்

நொடிந்துவிடாமல் – என்னை

பாதுகாக்கும் அது…. 

அது எது? 

 

அது

மட்டற்ற மணம் வீசும் என் மனம்…! 

மல்லிகையாய் மலரும் அது தினம்…!

 

-கவிஞர் பேரா. ச. குமரேசன், தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

Leave a Reply