பிரிமிடிவிஸம் எனப்படும் பழமைவாத இலக்கிய இயக்கம் மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டில் வளர்ந்த புதியபாணிக் கலை இயக்கத்தில் (Modern Art) தோன்றிய ஒரு வகையான உருவவாதப் போக்காகும். ஹென்றி ரூசோ (Henri Roussew 1844-1910) வின் படைப்புக்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகக் கருதப்படுகின்றன.
பழமைவாதக் கொள்கை
தொல்பழங்காலச் சழுதாயத்திற்குரிய கலை இலக்கியப் பாணிகளை, அதாவது வளர்ச்சியடையாத, எளியையான, குழந்தைத்தனமான, மிகவும் எளிதான பாணிகளைப் பின்பற்றுவதன் மூலம் பழமையைப் போற்றுவது இதன் கொள்கை.
குகைகளில் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் ஆடுமாடுகளை வரைந்த பாணியிலும் அவன் ஆண், பெண் உருவங்களை எவ்வாறு ஆடையணியின்றி வரைந்திருப்பானோ அவ்வகையில் ஓவியங்களை வரைவதும், இந்த அடிப்படையில் இலக்கியங்களைப் படைப்பதும் எனலாம்.
இந்த அடிப்படையில் பழமைவாதம் வரலாற்றுப் பூர்வமாக வளர்த்து வந்துள்ள கலை இலக்கிய விதிமுறைகளையும் உத்தி வகையில் நாம் பெற்றிருக்கிற வெற்றிகளையும் துணிவாக மறுப்பதாகும்.
இப்பழமைவாதம் எதையும் மிகைப்படுத்தலும், எதார்த்த நிலையை விளக்குவதாகச் சித்தரிக்கப்படும் தனிநபர் விளக்கத்தில் செயற்கையே சிறந்ததெனக் காட்டிப் போலிச்செல்வாக்குப் பெற முயலும் ஒருவகைப் போக்காகும்.
பழமைவாதம்
பழங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதைப் பொற்காலம் எனப் போற்றுவதும் இப்பழமைவாதத்தின் ஒரு கூறாகும். இப்பழமைவாதத்தின் சிலகூறுகள் சர்ரியலிஸத்தின் ஒரு கூறாக இருப்பதும் அறியத்தக்கது.
தமிழில் பெருஞ்சித்தனார் கவிதைகளும் உரை நடைகளும் இப்பழமை வாதத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். தமிழ் உரைநடை எவ்வளவோ, வேகமும் விறுவிறுப்பும் ஆழமும் அகலப்பார்வையும் நிறைந்ததாய் வளர்ந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சங்ககால நடையில் எழுதுவது அவர் இயல்பு. இதைப் பழமை வாதம் எனலாம்.
பார்வை நூல்
1.இலக்கிய இயக்கங்கள் – ந.பிச்சமுத்து