அனைத்தையும் தொலைத்துவிட்டு ஏங்கி ஏங்கி மரத்துப் போன கண்கள்; வெற்றிலையும் பாக்கும் போட்டுப் போட்டுக் கறைப்படிந்த பற்கள்; அயராது உழைத்ததால் தளர்ந்துபோன உடல்; வறுமைக்கும் முதுமைக்கும் இடையேயான போட்டியில் சிக்கித் தவிக்கும் ஒரு கிழவி பேருந்தில் இருந்து இறங்கி நகரத்திற்கு முதல் முறையாக வருகிறாள்.
ஒரே கூட்ட நெறிசல், நகரத்தின் சப்தமும் குழப்பங்களும் அவளுக்குப் புதியது, அவள் தன்வாழ்க்கையில் அத்தனை வாகனங்களைக் கண்டதே கிடையாது. ‘இதென்னம்மா திருவிழாவில் கூட இவ்வளவு கூட்டத்தை நான் கண்டதில்லை! இத்தனைப் பேரா இந்த ஊரிலே வாழ்கிறார்கள்’ என்ற வியப்புடன் கூடிய பயம்.
பாவம் அவளுக்குச் சாலையைக் கூட கடக்க தெரியவில்லை, யாராவது கடந்தால் வேகமாக அவர்களின் அருகில் சென்று அவர்களோடே சாலையைக் கடப்பாள். இத்தகைய வேகமான ஓட்டங்கள் கிழவிக்குப் புதியது.
கையிலே இரண்டு நூறுரூபாய் நோட்டுகளும் அவளின் இறந்த கணவர் வாங்கி தந்த ஒரு தங்க வளையலும் தவிர வேறு எதுவும் இல்லை, இவள் என்ன தைரியத்தில் நகரத்திற்கு வந்தாள் என்று தெரியவில்லை.
பள்ளியை முடித்து வீட்டிற்குச் செல்லும் குழந்தைகள் அவளின் பேரக்குழந்தைகளை நினைவுக்கூற மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள். மேலும் அவளின் நூறுரூபாய் நோட்டுக்கள் இரண்டு நாட்களே தங்கின. ஊருக்கெல்லாம் விருந்தோம்பல் செய்த கிழவிக்குப் பசி! இனி உழைக்க வலுவோ மனநிலையோ இல்லை, ஒன்று மட்டும் தெரிகிறது. அவள் பிழப்பைத் தேடி இங்கு வரவில்லை.
பசி அவளைச் சுருட்டி ஒரு பாலத்தின் அடியில் போட்டது. மெட்ரோ சப்தம் கேட்டு வளர்ந்த நகரம் மாங்குயில் சப்தம் கேட்டு வளர்ந்த கிழவியைத் திரும்பி கூட பார்க்கவில்லை. அவளின் பசி சப்தம் அந்தப் பாலத்தைத் தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை. தன் கணவனோடு வாழ்ந்த நாட்களை நினைத்துக் கொண்டே மயக்கமடைந்து படுத்துக் கிடக்கிறாள்.
சில மணி நேரங்கள் கழித்து அவளின் உடலைச் சுற்றி ஈக்கள் மொய்க்கிறது, ஆம்! அவள் வேறு உலகிற்குச் சென்றுவிட்டாள்..
வீட்டை விட்டுச் சென்றது கூட தெரியாமல் கிழவி படுத்திருந்த அறையில் எத்தனை நெல் மூட்டைகளை அடுக்கலாம் என்று வியூகித்துக் கொண்டிருக்கும் அவளின் மகனுக்கு நகரத்திற்கு வந்த கிழவி பசியால் மட்டும் இறக்கவில்லை என்று யார்தான் சொல்வது?
சிறுகதையின் ஆசிரியர்
கோ. தனுஷ் (பதிவு எண்: 132204050),
3-ஆம் ஆண்டு சட்ட மாணவன்,
சவீதா சட்டக் கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
வேலப்பன்சாவடி, சென்னை – 600 077.