சீர்வரிசை|சிறுகதை|முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்

சீர்வரிசை - சிறுகதை - முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
   சமையலறையில் தனது தாய் மேரி, சமையல் செய்யும்போதெல்லாம் கூடவே வந்து நின்று பேசிக்கொண்டிருக்கும் அவளது மகன் வில்லியம்ஸ், ஒருநாள், அவள் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பார்த்துவிட்டு,    
         
     “தேவர்குளத்தில் சோமு என்ற பெயரில் பாத்திரக்கடை இருக்கிறதா? நான் பார்த்ததே இல்லையே.” என்று வியப்புடன் கேட்டான்,

            “அப்படி ஒரு கடையும் இல்லைதான். ஏன் கேட்கிறாய்?” என்றாள்  மேரி.
         
        “இல்லை, நீ பயன்படுத்தும் எல்லாப் பாத்திரங்களிலும் ‘ சோமு, தேவர்குளம்’ என்று எழுதியிருக்கிறதே! அதான் கேட்டேன்,” என்றான்.
           
    “அது கடையில் வாங்கிய பாத்திரங்கள் இல்லைடா. என் திருமணச் சீர்வரிசைக்காக, ‘சோமு அண்ணன்’ அன்பளிப்பாய் வாங்கிக் கொடுத்தது,” என்றாள் அம்மா.
         
          “சீர்வரிசையா? அப்படி என்றால் என்னம்மா?”  வியந்து கேட்டான் வில்லியம்ஸ்.
         
         “திருமணம் முடிந்து,  பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வரும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் பொருட்கள்தான் பிறந்த வீட்டுச் சீதனம். கட்டில், பீரோவிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் என அம்மா வீட்டிலிருந்து பெண்ணுக்கு வாங்கிக் கொடுப்பார்கள். அதைத்தான் சீர்வரிசை என்பார்கள். அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்பப் பொருட்களின் தன்மை மாறுபடும். வெண்கலப் பாத்திரங்கள், செப்புப் பாத்திரங்கள் போன்ற சில பொருட்கள் வழிவழியாக பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
         
        “அப்படியா ஆச்சரியமா இருக்கே. அப்போ நீ பயன்படுத்துற பொருள் எல்லாம் ஆச்சி உனக்கு வாங்கி தந்ததா?” எனக் கேட்டான் வில்லியம்ஸ்.
         
       “எனக்குத் திருமணம் ஆனபோது, ஆச்சி எனக்கென்று எந்தப் பொருளையும் விலைக்கு வாங்கவில்லை. உற்றார் உறவினர் ஆளாளுக்கு வாங்கிக் கொடுத்த பொருட்களைத்தான் நான் தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தேன்,” என்றாள் மேரி.
         
     “அதுசரி! அதற்காக இவ்வளவு பாத்திரங்களா? யார் அந்த சோமு அண்ணன்?” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான். சோமு அண்ணனைப் பற்றி மகனிடம் அவள் பகிர்ந்தபோது, அவளும் பழைய நினைவுகளுக்குள் சென்று மீண்டாள்.
         
         ‘சோமு அண்ணன்’ லட்சுமி அக்காவின் தம்பி. தன் தாயையும் ‘பாப்பாக்கா’ என்று அழைக்கும் அன்புத் தம்பி. அவர் இராணுவத்தில் பணியாற்றுகிற காலங்களில். வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார். எல்லை காக்கும் இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பாடங்களில் படித்திருப்பதால், அண்ணனைப் பார்ப்பதற்கே அவர்களுக்குப் பெருமையாக இருக்கும். அதோடு, அவர் வரும்போது மின்சாதனப் பொருட்களான ‘டார்ச் லைட், அயன் பாக்ஸ், மிக்ஸி ‘என அவர்களின் வீட்டிற்குத் தேவையானது எதுவானாலும் மிலிட்டரி கேன்டீனில் வாங்கிக் கொடுப்பார். ஏதாவது அவசரமாகத் தேவைப்பட்டால்கூட, ‘சோமு வரும்போது வாங்கிக் கொள்ளலாம்’ என்று தாய் கூறிவிடுவாள். தொடக்கத்தில் இவை மட்டுமே சோமு அண்ணனைப் பற்றி அவள் அறிந்திருந்தது.
         
          பின்னர் அவள் வளர வளர லட்சுமி அக்கா குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகத் தொடங்கியபின், தேசத்திற்காக எல்லை காக்கும் வீரனாக மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினருக்காக சோமு அண்ணன் செய்யும் தியாகத்தையும் அவள் அறிந்தபோது, அவர் மீது அவளுக்கு மதிப்பு கூடியது.
         
         நான்கு பெண் குழந்தைகளுக்குப் பின் பிறந்தவர் சோமு அண்ணன். தன் தாய் தந்தையரைக் கவனிப்பதை மட்டும் கடமையாக எண்ணாமல், தன் உடன்பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டியவற்றையும் ஒற்றை மனிதராக மனமகிழ்வோடு செய்தவர் அவர். இரண்டு அக்காக்களுக்கு நகை போட்டு, சீர்வரிசைகள் செய்து, திருமணம் செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அக்கா பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய சீர்களையும் ஒவ்வொரு கட்டங்களிலும் செய்துவந்தார். அதுபோலத்தான் அவளுக்கும் சமையலறைப் பொருட்கள் அத்தனையும் வாங்கிக் கொடுத்தார் என்று அவள் கூறி முடித்தாள்.
         
     அப்போ உனக்கு கூட உங்க அண்ணன்மார்தான்.. அதான் பெரிய மாமாவும், சின்ன மாமாவும்தான் எல்லாம் செய்தார்களாமா?
    ஆமாம்டா கண்ணு.. தாத்தாவும் ஆச்சியும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்ததால எங்க மூவரையும் படிக்க வைக்கவே விழிப்பிதுங்கி போனாங்க.. அதனால பெரிய மாமாதான்  எனக்கு எல்லாமே செய்தான். எனக்கு முன்னாடியே அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. அப்பக்கூட அவன் பாசம் மாறல. என் கல்யாணத்தப்ப நகைவாங்க, அவன் பொண்டாட்டி.. அதான் உங்க அத்தை.. அவங்க கூட, தான் போட்டு வந்த நகையைத் தந்திருக்கிறார்கள்.  வாங்கின பீரோ கலர் நல்லா இல்லன்னு சொன்னதும், கல்யாணத்துக்கு மறுநாள் நாங்கெல்லாம் விருந்து சாப்பாட்டில் ஆர்வமாக இருக்க, பிடித்தமாதிரியான பீரோ வீடு வந்து சேர்ற வரை பெரிய மாமா ஓயவில்லை. சின்ன மாமாவுக்கு அப்போ நிரந்தர வேலையில்லை. ஆனால் வேலை கிடைச்சு, அவனுக்குக் கல்யாணம் ஆனதற்கு அப்புறம் சின்ன மாமாவும் சின்ன அத்தையும் இந்நாள்வரைக்கும் செய்துவருகின்றனர்.
         
       ஓ.. அதனால் தான் சென்றமுறை வீட்டில் ஏசி இல்லாமல் நாம வெயிலில் அவதிப்படுவதைப் பார்த்துவிட்டு, கஷ்டமான சூழலிலும் அடுத்தவாரமே அத்தையும் மாமாவும் ஏசியோடு வந்தார்களா?
     
         ஆமாம். அதான் சகோதரப் பாசம்.
  
        அப்போ.. நானும் நம்ம பாப்பாவுக்கு எல்லாம் செய்யனும்லா?
         
         செய்தா நம்ம பாப்பா எபாபவும் சந்தோஷமா இருப்பா. என்ன.. நீ செய்வியா?
         
           “என்னமா அப்படி கேட்கிற. பாப்பாக்கு மட்டுமல்ல. சோமு மாமா அவங்க அக்கா பிள்ளைகளுக்குச் செய்த மாதிரி, நம்ம மாமாமார் அவங்க தங்கச்சி பிள்ளைகளான எங்களுக்குச் செய்ற மாதிரி, பாப்பாவுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் நான் சேர்த்து செய்வேன்மா” உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லி முடித்தான் வில்லியம்ஸ்.
 
         “அடியென் தங்கம். அதுபோதும்டா எனக்கு” என்றவாறு மகனை அணைத்துக்கொண்டாள் மேரி.
         
   “அதெல்லாம் சரிம்மா, இந்தப் பாத்திரங்களில் ஏன் இவ்வளவு துல்லியமாகப் பெயரையும் ஊரையும் பொறித்திருக்கிறார்கள்? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவரிடம் இருந்து வந்ததென்றால், அவை எப்படி ஒன்னா சேர்த்தீங்க?” என்று மகன் ஆர்வத்துடன் கேட்டான்.
         
             அவள் புன்னகைத்தாள். “நல்ல கேள்வி. அக்காலத்தில் திருமணம் என்பது வெறும் இரு உள்ளங்களின் இணைப்பு மட்டுமல்ல, இரு குடும்பங்களின் சங்கமம்.. உறவுகள் வலுப்படவும், பிணைப்புகள் புதுப்பிக்கப்படவும் அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சீர்வரிசை என்பது வெறும் பொருள் பரிமாற்றம் அல்ல; அது அன்பின், ஆதரவின் அடையாளம். ஒவ்வொரு பொருளும் உறவின் ஆழத்தையும், அதை வழங்கியவரின் நல்லெண்ணத்தையும் பிரதிபலிக்கும். அதனால் தான், ஒரு பொருள் யார் கொடுத்தது என்பதைப் பிற்காலத்தில் நினைவுகூர, பாத்திரங்களில் பெயர்கள் பொறிக்கும் வழக்கம் வந்தது. உன் தாத்தா காலத்தில், சீர் கொடுப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பொறிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இது ஒருவகையில், ‘இந்த சீரில் நானும் பங்கெடுத்துள்ளேன்’ என்று வெளிப்படுத்தும் ஒரு வழி. மேலும், யார் என்ன கொடுத்தார்கள் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்ய, பெரியவர்கள் ஒரு சீதனப் பட்டியல் தயாரிப்பார்கள். அதில் ஒவ்வொரு பொருளும், அதை வழங்கியவர் பெயரும், அவர்கள் ஊரும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், பின்னாளில் யாரேனும் அதே போன்ற பொருளைக் கொடுக்க விரும்பினால், அது ஏற்கனவே வாங்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியும், மேலும், இது ஒரு வட்டியில்லா கடன்’  என்று விளக்கினாள்.
         
       தொடர்ந்து, “சோமு அண்ணன் மட்டுமல்ல… மிக்ஸி சரோ பெரியம்மா வாங்கிக் கொடுத்தது; கிரைண்டர் ஹரி அண்ணன் வாங்கிக் கொடுத்தது; எலெக்ரிக் குக்கர் மூசாவோட அத்தா அசன் அண்ணன் வாங்கி கொடுத்தது, பெரிய குக்கர் ரேவதி அக்கா, சின்ன குக்கர் லீமா அக்கா, பெரிய அஞ்சறைப் பெட்டி ரூபி சித்தி, மாவு தூக்கு வாளி லீலா சித்தி, அடுக்குச் சட்டி கருணா சித்தி” என்று அவள் கூறத் தொடங்கினாள்.
         
       “அம்மா! நிறுத்து, நிறுத்து! விட்டால் உன் அடுக்குப்பானை கவிதை நூல் மாதிரி அடுக்கிக்கொண்டே போவாய் போல!” என்று அவளை நிறுத்திய மகன், “ஏதோ, ‘வட்டியில்லா கடன்’ என்று கூறினாயே, அப்படினா என்ன? அதைச் சொல்லு முதல்ல” மேலும் ஆர்வத்துடன் கேட்டான்.
         
         அவள் விளக்கினாள், “ஆமாம், திருமணத்திற்கு அநேகர் வருவார்கள், யார் யார் என்னென்ன பொருள் வாங்கிக் கொடுத்தார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பெயர்களைப் பதிவிட்டுத் தருவார்கள். திருமண விழாவில் வழங்கும் மொய்ப் பணத்தையோ பொருளையோ, திருமண அன்பளிப்பு என்று கூறினாலும், ‘வட்டியில்லா கடன்’ என்றுதான் சொல்வார்கள். ஒரு குடும்பத்தில் திருமணம் அல்லது வேறு ஏதேனும் சுப நிகழ்ச்சி நடக்கும்போது, உறவினர்களும் நண்பர்களும் பணமாகவோ, பொருளாகவோ ‘மொய்’ எழுதுவார்கள். இது, அந்த குடும்பத்திற்கு ஒருவகையான நிதி உதவியாக இருக்கும். அதே உறவினர் அல்லது நண்பர் வீட்டில் ஒரு சுப நிகழ்வு நடக்கும்போது, மொய் பெற்ற குடும்பம், தாங்கள் பெற்ற மொய்க்குச் சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ திருப்பிக் கொடுப்பார்கள். இதைத்தான் மொய் திருப்பிக் கொடுத்தல்’ என்பார்கள். இதில் வட்டி ஏதும் கிடையாது. இது ஒருவகையான சமூகப் பிணைப்பு, பரஸ்பர உதவி. இன்றும் கிராமப்புறங்களில் இந்தப் பழக்கம் மிகவும் வலுவாக உள்ளது. சீர் வரிசையிலும் இது பொருந்தும். இன்று நாம் அவர்களுக்குச் சீர் கொடுக்கிறோம், நாளை அவர்கள் நம் வீட்டிற்குச் சீர் கொடுப்பார்கள். அதனால்தான் பொருட்களில் பெயரிடும் பழக்கம் தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது, நான் சின்னவளாக இருக்கும் போது, எங்கப் பக்கத்துவீட்டில் இருந்த ஜானகி அத்தை மகள் வடிவு அக்காவின் திருமணத்திற்கு, நம்ம ஆச்சி பால் குக்கர் வாங்கி தந்தார்கள். என் திருமணத்தின் போது ஜானகி அத்தை வீட்டில அதே போல் பால்குக்கரையே அன்பளிப்பாக வழங்கினார்கள். என்ன, நாங்க வாங்கி தரும்போது அது அலுமினியத்தில் இருந்தது. எனக்கு அவர்கள்தரும்போது, காலத்திற்கு ஏற்றார் போல அது சில்வராக மாறி இருந்தது. அவ்வளவுதான்” என்றாள்.
ஆயினும், அவளின் நினைவுகளில் அவளுக்குத் திருமணம் நிச்சயமானவுடன், அவளுக்குக் கொடுக்க வேண்டிய பொருட்களை ஒருவர் வாங்கியதையே மற்றொருவர் வாங்கிவிடாதபடி ஒவ்வொருவரும் கலந்து ஆலோசித்து, திருமணத்தின்போது வழங்கிய உற்றார் உறவினர்களின் அன்பும் அக்கறையும் காட்சிப் பிம்பமாய் வந்துதான் சென்றன. அவளின் உறவுகளை விட்டு அவள் நெடுந்தொலைவில் இருந்தாலும், ஒவ்வொரு பொருட்களையும் அவள் பயன்படுத்தும்போது, அவளின் உறவுகளுடன் உறவாடுவது போன்ற உணர்வு மேலோங்கி, அவளுக்கு ஆத்மார்த்தமான திருப்தியை அளிக்கிறது என்பதுதான் உண்மை.
         
          “உன்  அண்ணன்மாரில் இருந்து, அத்தைகள், சித்திகள், மாமாக்கள் என எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன் மகிழ்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள், இல்லையாம்மா?” என்றான் மகன்.
         
          “ஆமாம்டா கண்ணு, என் உறவுகள் மட்டுமல்ல..ஜாதி கடந்து, மதம் கடந்து ஒவ்வொருத்தரும் வழங்கிய ஒவ்வொரு பொருளும் ஒரு கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு பெயரும் ஒரு உறவின் நினைவுகளை மீட்டெடுக்கிறது. அதுதான் இந்த சீர் வரிசையின் உண்மையான அழகு,” என்று நெகிழ்வுடன் பதிலளித்தாள் மேரி.

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 44.

 

Leave a Reply