ஒவ்வொரு கால கட்டத்தில் தோன்றும் அறிவுலகக் கோட்பாடுகள் சமூகத்தினை மாற்றம் பெறச்செய்கின்றன. இலக்கியமும் வரலாறும் இக்கோட்பாடுகளினால் புதிய பரிணாமம் பெறுகின்றன. எனவே இலக்கியம் காலம்தோறும் பன்முக வாசிப்புக்கு ஆளாவதும் வரலாறும் அத்தகைய மாற்றத்தினை எதிர் கொள்வதும் இயல்பானதாகும். இன்றைய நவீன உலகில் விளிம்பு நிலை ஆய்வின் வருகை பின்காலனிய கால கட்டத்தில் துவங்குகிறது எனலாம். சமூகத்தின் ஒரத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களாக அவற்றை இனம் காண்கிறார் ஹோமி பாபா எனும் பின் – காலனியத் திறனாய்வாளர். ஆனால் ‘காயத்ரி ஸ்பிவாக்’ பண்பாட்டு மேலாண்மை குறித்த சொல்லாடல்களை முன்வைக்கிறாhர்.
இந்தியாவில் விளிம்புநிலை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக 1982 – இல் ‘ரணஜித் குகா’ அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘Subaltern Studnes’ எனும் இதழ் அமைகிறது. இது இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்களையும் மேல்தட்டு வர்க்கத்தினரையும் கடுமையாக உள்ளிட்டவர்களை மையப்படுத்தியது. வரலாற்றினை மீள் ஆய்வு செய்தது. புதிய நோக்கில் வரலாற்றெழுதியல் முறையினைக் கொண்டு வந்தது.
அடித்தள மக்கள் ஆய்வு குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்தன. விளிம்பு நிலை மக்கள் எனப்படும் ‘Subaltern’ எனும் தொடருக்கு மார்க்சியத்தின் அடிப்படையில் சமூக, அரசியல், நிலவியல், பண்பாட்டு மேலாண்மை ஆகிய அதிகார மையத்தில் இருந்து விலகியுள்ள அல்லது விலக்கப்பட்டு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த உழைக்கும் மக்கள் திரளின் கூட்டம் என்பதாக அந்தோணி குரோம்சி (1891 – 1937) எனும் இத்தாலி நாட்டு மார்க்சிய அறிஞர் வரையறைப்படுத்துகிறார். இருப்பினும் காலம், இடம், சமூகச்சூழல், பண்பாட்டு, ஆதிக்கம் ஆகியவை சமூகத்தின் விளிம்புநிலை வாழ்வினைத் தீர்மானிக்கின்றன.
இந்தியச்சூழலில் பெண்கள், தலித்துகள், மலைவாழ்மக்கள், விவசாயக்கூலிகள், நாடோடி மக்கள், கல்வி கற்கவியலாத மகளிர் எனக் குறிப்பிடலாம். இவர்கள் மேட்டிமைக்குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் சமூக வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும் குறைந்த அளவு உணவு, உடை, கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினராக உள்ளனர் எனலாம்.
விளிம்பு நிலை மக்கள் என்பதற்கு சாதி, செய்யும் தொழில், அரசியல் அதிகாரம், சமூக மேட்டிமை, பொருளியல் நிலை, பண்பாட்டு ஆளுமை ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் அல்லது சமூக கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் மக்கள் என வரையறை செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். (2002 : 50)
இளங்கோ அடிகள் படைத்த சிலப்பதிகாரம் தமிழ்ச்சமூகக் காலவெளியில் பல்வேறு வாசிப்புகளைக் கடந்து வந்துள்ளது. சிலம்பினைத் தேசிய இலக்கியமாக வடிவமைத்ததில் ம.பொ.சி. நா.வானமாமலை, சாமிசிதம்பரனார், வையாபுரிப்பிள்ளை, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சிலம்பு சைவ இலக்கியம் என்றும் இளங்கோ அடிகளின் சமயம் சமணம் அன்று: என வலியுறுத்தியவர்கள் ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வீ. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர்கள் ஆவர். மேலும், சிலம்பினை சமூகவியல், உளவியல் திறனாய்வுப் போக்கில் ஆராய்ந்தவர்கள் தெ.பொ.மீ, கா. செல்லப்பன், துரை. சீனிச்சாமி, எஸ். இராமகிருஷ்ணன் ஆவர். மார்க்சிய அணுகுமுறையில் கே. முத்தையா, இரகுநாதன் ஆகியோர் ஆளும் அரச வர்க்கத்திற்கும் வணிக வர்க்கத்திற்கும் இடையில் தோன்றிய முரண்பாட்டின் விளைச்சல்தான் சிலம்பு என்கின்றனர். நாட்டார் மரபின் அடிப்படையில் நா. வானமாமலை போன்றோர் சிலம்பில் இடம்பெறும் நாட்டார் பண்பாட்டினை மையப்படுத்துகிறார்.
புகழேந்திப் புலவர் தொடங்கி சங்கரதாஸ் சுவாமிகள் வரை இது தொடர்ந்தது. திராவிட இயக்கத்தின் வரவால் தமிழர், ஆரியர் திருமண முறை, மக்களாட்சி சிந்தனை, தமிழரின் மேன்மை, மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் அடங்கிய இலக்கியமாகச் சிலம்பு பார்க்கப்பட்டது. சான்று: பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம். இவ்வாறு சிலம்பு பன்முக வாசிப்புக்கு ஆளானது.
விளிம்புநிலை ஆய்வின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை அணுகுவது என்பது இன்றைய காலத்தின் தேவையாகும். மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் சாமானிய மக்களின் பதிவுகள் சிலம்பில் இடம் பெற்றுள்ள தன்மையினை ஆராய்வதன் மூலம் சிலம்பினை புதிய பொருண்மைத் தளத்தில் அறிந்து கொள்ளத் துணைபுரியும்.
சிலம்பில் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினைக் கீழ்கண்ட உட்தலைப்புகளில் காணலாம். அவை:
1. குற்றம் இழைப்போர் – பொற்கொல்லர், கள்வர், கல்லாக் களிமகன், சிறைவாசிகள், பொய் சாட்சி கூறுவோர்
2. செய்தொழில் / வருணம்/ சாதிப்பிரிவு – எயினர், வேடர், கானக் குறவர், ஆயர், ஆய்ச்சியர், பொருநர், பாணர், கூத்தர், பரதவர்
3. மாற்றுத்திறனாளிகள் / உடல் ஊனமுற்றோர்
4. ஏவலாளர் – அடிமைகள்
5. அந்தணர் மேன்மையும் விளிம்புநிலை மாந்தர்களின் பதிவும்.
1. குற்றம் இழைப்போர்:
பொற்கொல்லர்:
சிலம்புவில் இடம் பெறும் பொற்கொல்லன் பாத்திரம் குற்றச் செயல்புரியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தற்சார்பு, சமூக மேன்மை பெற்றிருந்தாலும் பொற்கொல்லர் கதை மாந்தர் சிலம்பு திருடியதாகப் படைக்கப்பட்டிருப்பது மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதற்கு இடமுண்டு. ஏனெனில் சிலம்பு பொற்கொல்லர் மேல் வெறுப்பு கொள்வதற்காகவே படைக்கப்பட்ட காப்பியம் என்ற விமர்சனம் உண்டு. ஆனால், ஆசாரி, பத்தர் ஆகிய பிறப்புவழிச் சாதிப்பெயர்கள் சிலம்புவில் இல்லை. தொழில் அடிப்படையில் இளங்கோ சுட்டுகிறார் என்ற ம.பொ.சி.யின் மறுப்பும் உண்டு. இருப்பினும், இழிந்தோன் எனும் பார்வையில் அடிகள். “விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லன். கூற்றத்தூதன், பொய்த்தொழிற்கொல்லன், கருந்தொழிற்கொல்லன்” என்றெல்லாம் சித்திரிக்கின்றார். மேலும், கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (இவனை இளஞ்செழியன் என்பார் அடியார்க்கு நல்லார்) பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லர்களை ஒரு பகற்பொழுதில் உயிர்ப்பலியூட்டி அரசுக் கட்டில் ஏறினான் என்ற பதிவைப் புறம் தள்ள முடியாது. குற்றம் செய்தவர் என்ற சமூக இழிவின் அடிப்படையில் மட்டுமே இங்கு பொற்கொல்லர் பாத்திரம் விளிம்புநிலைப் பாத்திரமாகக் கருதுவதற்கு ஓரளவு தர்க்கமுண்டு எனலாம்.
கள்வர்:
சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்கள் கள்வர்கள் ஆவர். இழிந்த களவுத்தொழிலைச் செய்து வாழும் கள்வர்கள் குறித்த பதிவு சிலம்புவில் உண்டு. அடைக்கலக் காதையில் (166-171) கோவலன் மேன்மக்களுக்கு உரிய இலக்கணம் உடையவனாக இருக்கிறான். எனவே, இவன் கொலை செய்தற்கு உரிய கள்வனாகத் தோன்றவில்லை என்று கூறிய காவலர்க்குக் கள்வர்தம் இலக்கணத்தினைக் களவு நூலிலிருந்து விரிவாக எடுத்துக்கூறினான் பொற்கொல்லன். கள்வர்கள் மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டினையும் துனையாகக் கொண்டிருப்பர்: எளிதில் அகப்படமாட்டார்கள்: கண்ணுக்குப் புலப்படமாட்டார்கள்: உருமாறும் தன்மை கொண்டவர்கள் என்று இடம் பெறுகிறது. “இழுக்குடை மரபிற் ஃ கட்டுண் மாக்கள்” எனச் சித்திரித்துள்ளது.
கல்லாக் களிமகன்:
கல்லாத மக்கள் குறித்துச் சிலம்பு பகர்கிறது. “கல்லாக் களிமகன் ஒருவன் கையில் / வெள்வாள் எறிந்தனன் விலங்கு ஊடறுத்தது / புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப / மண்ணக மடந்தை வான்றுயர் கூறக் / காவலன் செங்கோல் வளைய வீழ்ந்தனன் / கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (212-217) இது. கொலைக்களக்காதையில் கல்வியின்மையானும் கொலையஞ்சானுமாகிய கள்ளுண்ட களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளால் கோவலனைக் கொன்றதைக் கூறுகிறது.
இங்கு கல்வி கற்ற சமூகம் வேறு: கல்லாத மக்கள் திரள் என்பது வேறு. இக்கல்வி பெற்றவர்கள் யார் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. தோல்காப்பியரின் “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்னும் அகத்திணையியல் (28) நூற்பாவில் இடம்பெறும் உயர்ந்தோராக அந்தணர். அரசரைச் சுட்டுகிறார். “உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான்” (33) எனும் நூற்பா வணிகர்க்கு ஓதுதலின் பொருட்டும் பிரிவு நிகழ்கிறது. அப்படியாயின் உயர்ந்தோர் என்ற பிரிவிற்குள் வராதார்க்கு ஓதல் பிரிவு இல்லை என்றாகிறது. வெகுசன மக்கள் கூட்டத்திற்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
“தொன்னெறி மொழிவயின் அகுநவும்” என்ற சொல்லதிகார நூற்பாவிற்கு உரை எழுதும் சேனாவரையர், “யாட்டுளான் இன்னுரை தாரான் என்றது இடையன் எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறுதலின்றி எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறான்” என்று விளக்கம் தருகிறார். கல்வி கற்காத இம்மக்கள் குறித்துச் சங்க இலக்கியங்களில் கல்லாக் கோவலர் (அகம். 74:16; நற். 367:8; ஐங். 304:1) என்றும் திருப்பாவையில் “அறிவென்றுமில்லாத ஆயக்குலம்” என்றும் குறிப்பிடுகிறது. ஆநிரைச் செல்வம் உடைய ஆயர்குலமே இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டதற்குக் காரணம் கல்வி மறுக்கப்பட்டதே. இம்மக்கள் குறித்த இலக்கியப்பதிவுகள் அருகிக் காணப்படுகின்றன.
உடைமையற்ற கற்காத உடல் உழைப்புடைய ஏனைய விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவுகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே எனலாம். கல்வியறிவு மறுக்கப்பட்ட இம்மக்கள் பிரதிநிதியாகச் சிலம்புவில் ‘கல்லாக் களிமகனைக்’ கருதலாம். கோவலனைக் கொன்றவன் கல்வி கற்காதவன்; கள்ளுண்டவன்; முன்பின் யோசனை அற்றவன்; உணர்ச்சிமிக்கவன் என்ற பதிவுகள் உள்ளன. இப்பதிவுகள் விளிம்புநிலை மக்கள் குறித்த அக்கால மதிப்பீடாகக் கொள்ளலாம்.
சிறைவாசிகள்:
சிறைவாசிகள் குறித்த பதிவு கட்டுரை காதையில் (98-103) இடம் பெறுகிறது. கள்வர்கள், குற்றவாளிகள், பகைவர்கள் ஆகியோர் இச்சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். சுpறைவாசிகளை விடுவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதை ‘சிறைப்படுகோட்டம் சீமின்’ (126) எனவும் ‘சிறையோர் கோட்டம் சீமின்’ (நடுகற்காதை: 203) எனவும் ‘ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப்’ (194) என வரும் அடிகள் உணர்த்துகின்றன. மங்கலதேவி நன்னாளில் செய்த நாளணி வேள்வியில் ‘அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் / பெருஞ்சிறை கோட்டம் பிரிந்த மன்னரும்’ (வரந்தருகாதை: 157-158) கலந்து கொண்டனர் இங்கு அரசியல் கைதிகளான பகை அரசர்களும் விளிம்புநிலை குற்றவாளி மக்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
பொய் சாட்சி கூறுவோர்:
வறுமையில் உழலும் ஒருவன், பொருள் பெறுதலுக்காக, கற்புடை மகள் மீது பொய்ப்பழி சுமத்திப் பொய்க்கரி (பொய்சாட்சி) கூறியதால் தீயோரைத் துன்புறுத்தும் பூதம் அவனைக் கொல்லப் பிடித்துக்கொள்கிறது. இப்பதிவு அடைக்கலக்காதையில் வருகிறது. (76-85) இல்லோர் செம்மல் (வறியொர் தலவன்) எனக் கோவலனின் பெருமை பேசும் மாடலனின் கூற்றாக இடம் பெறுகிறது. பொய்ச்சாட்சி கூறியவனைப் பூதம் துன்புறுத்த அதைக் கண்டு அவன் தாய் படும் துயரத்தைக் காண் சகியாத கோவலன் அப்பூதத்திடம் சென்று, “என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென / நன்னெடு பூதம் நல்கா தாகி / நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு / பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை ஃஎன்று கூறி அவனைத் தன் எதிரே புடைத்து உண்டது. அதாவது, கீழோனுடைய உயிரின்பொருட்டு நல்ல உயிரினைக் கொண்டு மேலான நிலையை இழக்கும் தன்மை என்னிடத்தில் இல்லை எனும் பூதத்தின் கூற்றில் மேல் கீழ்: நல்லவர் நரகர் (கெட்டவர்) எனும் முரண் உள்ளதை அறியலாம்.
2. செய்தொழில் / வருணம் / சாதிப்பிரிவு:
நால்வருணம் குறித்த பதிவு ஊர்காண் காதையில் (211-213) இடம் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள தெருக்கள் பற்றிக் கூறுமிடத்து, “கூலங் குவிந்த கூல வீதியும் /பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் / அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்” என வருகிறது. கூல வீதிகளும், பகுதி வேறு தெரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பார் இருக்கும் நால்வேறாகிய தெருக்களும் முச்சந்தியும், நாற்சந்தியும், கொயிற்கடைத் தெருக்களும் அமைந்துள்ளதைச் சித்திரிக்கிறது.
செய்தொழில் அடிப்படையில் சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் குறவன் குறத்தியர், வேட்டுவரும் புறஞ்சேரியிறுத்த காதையில் யாழிசைக்கும் பாணரும் (105), மருத நிலத்து வைகறையில் பறை ஓசை கொட்டும் கிணைநிலைப் பொருநரும் (148) நடுகற்காதையில் கூத்து நிகழ்த்தும் சாக்கையனும் (77), ஆய்ச்சியர் குரவையில் ஆயரும், ஆய்ச்சியரும், கானல் வரியில் பரதவ மக்களும், வேட்டுவ வரியில் வழிவளம் பெறும் எயினர், எயிற்றியரும், விளிம்புநிலை மாந்தராகக் கொள்ளலாம். நாடுகாண் காதையில் வரும் விருந்தின் பாணி, ஏர் மங்கலம், தொழிலாளர்களின் பாடல்களைக் கொள்ளலாம்.
சிலம்புவின் துன்பமாலை விளிம்புநிலை மக்களின் ஒப்பாரிப்பாடல் வகையாகக் கருதலாம். மேலும், மாதரி பாற்சோறு படைக்கும் இயக்கி, பாசண்ட சாத்தன், சாலினி வழிபடும் கொற்றவை, வன தேவதைகள் வரத்தோமை, வட்டிகைப் பூங்கொடி ஆகியன சிலம்பில் இடம்பெறும் விளிம்புநிலை மக்களின் தெய்வங்களாகக் கூறலாம். அடைக்கலம் கொடுக்கும் வழக்கமும், நீராடிய பின் வழிபடும் மரபும் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையும் மானிட மகளைத் தெய்வமாக அலங்கரித்துக் குறி கேட்கும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்திருப்பதைச் சிலம்பு உணர்த்துகிறது.
செய்தொழில் அடிப்படையில் மேற்சொன்ன மக்கள் இனங்கள் காலப்போக்கில் வைதிகச் சமயத்தின் வருணக்கோட்பாட்டுடன் உட்கலந்து பின் அகமணம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சாதிப்பிரிவுகளாக மாறின.
3. மாற்றுத்திறனாளிகள்:
சிலம்பில் இடம்பெறும் மாற்றுத்திறனாளிகள் அரச மகளிர்க்கு குற்றேவல் புரியும் ஏவலர்களாகவும் ஆடல்மகளிரின் பணிப்பெண்களாகவும், இலஞ்சி மன்றத்தில் நோயாளிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சி என்ற குளத்தில் மாற்றுத்திறனாளிகளான கூனரும், குறளளும், ஊமையும், செவிடரும் மூழ்கி எழுந்தால் அவர்களின் உடல் ஊனம் நீங்கி நன்னிலை பெறுவதாக ‘இளங்கோ’ சித்திரித்துள்ளார். “கூனும் குறளும் ஊனமும் செவிடும் / அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப் / பழுதில் காட்சி நன்னிறம் பெற்று / வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” இந்திரவிழவூர் எடுத்த காதை (118-121)
மேலும் சேரன் செங்குட்டுவன் இமயமலை சென்று பத்தினிக்கல்லைக் கனக விசயர் முடியின் மீதேற்றி வெற்றியுடன் திரும்பி வரும் செய்தியைச் சிறுதொழில் செய்யும் குறிய கூனும் குறளும் துயிலின்றி வருந்தியிருக்கும் வெண்மாளின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியில் செறியும் வண்ணம் அரசியிடம் சென்று ‘அரசன் வந்தனன்; நின் எழிலைப் பெறுவாயாக’ என்று கூறினர். இச்செய்தி நீர்ப்படைக் காதையில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. சிறு குறுங்கூனும் குறளுஞ் சென்று / பெருக நின் செவ்வி பெருமகன் வந்தான் /நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென (214-216). பாண்டிமாதேவியின் அந்தப்புறத்தில் பணிபுரியும் கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் புரியும் மகளிர் நெருங்கிப் புடைசூழத் தான் கண்ட தீக்கனாவின் தன்மையைப் பாண்டிய அரசனிடம் எடுத்துச் சொல்லச் சென்றாள். “கூனுங் குறளும் ஊமுங்கூடிய / குறுந் தொழிலிளைஞர் செறிந்து சூழ் தர” என்று வழக்குரை காதையில் (18-19) ஏவல் தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகள் இடம் பெற்றுள்ளனர்.
நடுகற்காதையிலும் (57-58) “மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் / கூனுங் குறளுங் கொண்டன வொருசார்” என இம்மக்கள் இடம் பெற்றுள்ளனர். அங்கக் குறைபாடு உள்ளவர்களை அரசன் அந்தப்புறத்தில் பணியாளராக வைத்திருப்பதன் நோக்கம் அரச மகளிரின் மீது அரசன் கொண்ட நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது எனலாம். அதே நேரத்தில் அரச மகளிரைப் பாதுகாக்கவும் ஏவல் பணிகளைச் செய்யவும் இம்மாற்றுத் திறனாளிகளைப் பணியாளர்களாக வைத்துள்ளனர்.
சிலம்பின் திருப்பு முனைப் பாத்திரம் கூனி. கணிகையர் குலப்பெண்ணான மாதவியின் நடன அரங்கேற்றத்திற்குப் பரிசிலாக அரசன் தரும் 10008 கழஞ்சு பொன்மாலையை விற்கச் செல்லும் பணிப் பெண்ணாகக் கூனியைப் படைத்துள்ளார் இளங்கோ அடிகள். இதனை, அரங்கேற்று காதை “மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென /மானமர் நோக்கியோர் கூனி கைக் கொடுத்து /பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த /மாமலர் நெடுங்கண் மாதவி மாலை / கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு /மணமனை புக்கு”…. (166-172) எனச் சித்திரிக்கிறது. இங்கு கூனியின் இயற்பெயர் சுட்டப்படவில்லை. இது நோக்கத்தக்கது. உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடும் இம்மாற்றுத்திறனாளிகள் சிலம்புவில் இவ்வாறு வந்து போகும் பாத்திரங்களாக, அரச அதிகார மைய நீரோட்டத்தில் விளிம்புநிலைத் தன்மையில் ஓரத்திலேயே இம்மக்களின் சித்தரிப்பு இடம் பெறுகிறது எனலாம்.
4. ஏவலாளர் – அடிமைகள்:
“அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் / கடிவரை இல: புறத்து என்மனார் புவலர்” (1:25), “ஏவல் மரபின் ஏனோரும் உரியர் / ஆகிய நிலைமை அவரும் அன்னர்” (1:26) எனும் நூற்பாக்களில் தொல்காப்பியர் கூறும் செய்தியாவது அடியோர், வினைவலர், ஏவலாளர் ஆகியோர் அக இலக்கியத்தல் கதை மாந்தர்களாக இடம் பெறக்கூடாது: மாறாக, புற இலக்கியத்தில் அவர்கள் வரலாம். சிலம்புவில் ஏவலாளர் குறித்த பதிவு புறஞ்சேரியிறுத்த காதையில் வருகிறது. கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியுடன் மதுரைக்கு யாருக்கும் சொல்லாமல் செல்கிறான். இவர்களைக் காணாத சுற்றத்தினர் துயரமுற்றுத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஏவலாளர் பலவிடங்களிலும் தேட முற்பட்டனர். இதனை “இருநிதிக்கிழவனும் பெருமனைக் கிழத்தியும் / அருமனை இழந்த நாகம் போன்றதும் / இன்னுயிர் இழந்த யாக்கை என்னத் / துன்னியச் சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்/ ஏவலாளர் யாங்கணும் சென்று / கோவலன் தேடிக் கொண்ரக வெனப் பெயர்ந்ததும் / (15-62) என்று கூறி ஏவல் தொழில் செய்யும் விளிம்புநிலை மாந்தரைப் பதிவு செய்துள்ளது.
5. அந்தணர் மேன்மையும் விளிம்புநிலை மாந்தர்களின் பதிவும்:
அந்தணர் யார் என்பதற்குச் சிலம்பு கூறும் வரையறை இங்கு குறிப்பிடத்தக்கது. “ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் /முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி/ ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் / அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க” (கட்டுரை காதை: 66-70) எனும் இவ் அடிகள் ஆரியரின் வருணாசிரமக் கருத்தாக்கம் சிலம்புவில் இடம் பெற்றுள்ளதை உணர்த்துகிறது.
சிலம்புவில் வரும் அந்தணர்கள் வேதக்கல்வி பயின்றவர்கள்: அரசனுக்கு அருகாமையில் இருப்பவர்கள். ‘வரிநவில் கொள்கை மறைநூல் வழக்கத்து புரிநூல் மார்பர்’ (புறஞ்சேரியிறுத்த காதை: 38-39) முப்புரிநூல் அணிந்தவர்கள்: இரு பிறப்பாளர்கள் ஆவர். குறிப்பாக மாடல மறையோன், மாங்காட்டு மறையோன், கோசிகாமணி ஆகிய அந்தணக் கதை மாந்தர்கள் தனிச்சிறப்பிடம் பெறுகின்றனர்.
மாடல மறையோன், நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன்: சொல்லின் செல்வன்: குமரி முதல், கங்கை வரை நிலவியல் அறிவு கொண்டவன்: நீண்ட பயணம் செய்பவன்: செங்குட்டுவனிடம் வேள்வி நடத்தச் சொன்னவன்: நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் ஃ அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய ஃ பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும். (நடுகற்காதை: 176-178) சேரன் செங்குட்டுவன் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன்னைப் பரிசிலாக (துலா புருட தானம்) மாடல மறையோனுக்கு பெரு விருப்பம் கொண்டு வழங்கினான். (நீர்ப்படைக்காதை: 173-176)
காப்பிய நிகழ்ச்சிகளை ஒன்றிணைக்கும் பாலம் போன்றவன்: கோவலன் புகழ் பாடுபவன் என்று சிறப்பு மாடலனுக்கு உண்டு. புறஞ்சேரியிருத்த காதையில் கோவலன் இவன் காலில் விழுந்து வணங்குகிறான்.
மாங்காட்டு மறையோன் உறையூரில் மதுரைக்குச் செல்லும் செவ்விய வழியைக் கோவலனுக்கு கூறியவன்: திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய தலங்களில் திருமாலைத் தரிசிக்கக் குடமலை நாட்டிலிருந்து பயணப்பட்டவன்: வைணவ சமயத்தின் பெருமை பேசுபவன்.
கோசிகாமணி மதுரைக்குச் செல்லும் கோவலனைப் பின் தொடர்ந்து சென்று மாதவி தீட்டிய காதல் மடலைக் கோவலனிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான். மாதவியின் மனப்பாங்கினைப் புலப்படுத்தும் பாத்திரமாக விளங்குகிறான். இச்செய்தி புறஞ்சேரியிறுத்த காதையில் வருகிறது. இம்மூன்று அந்தணர்களும் பயணம் மேற்கொள்பவர்கள்: தனித்த ஆளுமை கொண்டவர்கள்: அதிகார மையத்துடன் நெருக்கம் மிக கொண்டவர்கள்: அரசனிடம் பல வெகுமதிகள் பெற வேதக்கல்வி உடையவர்கள்.
வீடுபேற்றினை விரும்பும் ஒரு கொள்கையுடையவர்கள்; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்பும் ஆகிய இருபிறப்பாளர்கள்; ஆகவனியம், காருகபத்தியம், தக்கிணாக்கினி ஆகிய முத்தீ வளர்ப்பவர்கள்; ரிக்கு, யசூர், சாமம், அதர்வணம் எனும் நான்மறை கற்றவர்கள்; கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி ஆகிய ஐந்து வேள்விகளைச் செய்பவர்கள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில் உடையவர்கள் அந்தணர்கள் ஆவர். இத்தகைய தன்மையுடையவன் சோணாட்டைச் சார்ந்த அறிவில் வல்ல பராசரன் எனும் அந்தணன். இவன், சேர மன்னனின் கொடைத்திறம் கேட்டு அவனிடம் சென்று தன்னுடைய நாத்திறத்தால் வாதிட்டுப் பகைவரை வென்று பார்ப்பனவாகை சூட்டப்பெற்று பொன் பரிசில் பெற்றுத் திரும்பும் வழியில் பாண்டிய நாட்டில் திருத்தங்கால் எனும் அந்தணக்குடியிருப்பில் இளைப்பாறினான். அவனைச் சுற்றி அந்தணச் சிறுவர்கள் சூழ அவர்களிடம் “அந்தணச் சிறுவர்களே, என்னுடைய ஒப்ப மறையினை ஓதி என் பண்டச் சிறுபொதி கொண்டு போமின்” என்கிறான்.
அதற்கேற்ப வார்த்திகன் புதல்வன் தக்கிணாமூர்த்தி எனும் அந்தணச் சிறுவன் அம்மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளம் நிறைமகிழ்வுடன் பராசரனோடு ஒப்ப ஓதுகிறான். அதைக்கண்ட பராசரன் அச்சிறுவனை வியந்து பாராட்டி முத்து வடப் பூணூல், கைவளை, தோடு ஆகிய தகுதிவாய்ந்த பொன்னாலான அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்து தன்னூர் சென்றான்.
பொன்பரிசிலைப் பொறாத சிலர். படுபொருள் (களவுபொருள்) வெளவிய பார்ப்பான் இவன் என்று கூறிக் காவலரிடம் கூற அவர்கள் புதையலைக் கவர்ந்த குற்றத்திற்காக வார்த்திகனைச் சிறையில் இட்டனர். அதனால். அவன் மனைவி கார்த்திகை என்பவள் பெருந்துன்பம் கொண்டு அழுது புலம்பினாள்: நிலத்தில் புரண்டு மயங்கி விழுந்தாள்: கடவுளை வெறுத்து வெகுண்டாள்: அதனால் மதுரையிலிருந்த (இதுநாள் வரை திறந்திருக்கும்) துர்க்கை கோயிற்கதவு இப்பெண்ணின் புலம்பலால் திடீரென மூடிக்கொண்டது. இதனால் பாண்டிய மன்னன் மனம் வருந்தி, எனது செங்கோல் கோடியது உண்டா? துர்க்கைக்கு உற்ற துன்பம் எதனால்? என்று வினவ கார்த்திகையின் கணவனான வார்த்திகனைச் சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் காவலர் கூறினர்.
உடனே, பாண்டிய மன்னன் வார்த்திகனை சிறையிலிருந்து விடுவித்து அவனைப் புகழ்ந்து. ‘என்னுடைய அரச நீதி தவறுற்றது; அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும்’ என்று மன்னிப்பு கேட்கிறான். மேலும், அதற்கு ஈடாக பெரிய நீர் சூழ்ந்த வயல்களை உடைய திருத்தங்கால் எனும் ஊருடன் குறைவுபடாத விளைவினை உடைய வயலூரையும் வழங்கினான். பாண்டிய நாட்டின் அரசனே மன்னிப்பு கேட்பதும் அதற்கு கைம்மாறாக ஊர்களை வழங்குவதும் ஆகிய பதிவுகள் “அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவெண் / இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நுங் கடன்எனத் /தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் / மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் / கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்” / (கட்டுரை காதை: 116-120) என்று வருகிறது. இது சிலப்பதிகார காலத்தில் அந்தணர்கள் பெற்ற மேன்மை நிலையாகக் கொள்ளலாம்.
விளிம்புநிலைப் பெண்ணான மாதரி, தம்மிடம் அடைக்கலமாக வந்த கண்ணகி கோவலன் ஆகியோரின் இறப்புக்காக மனம் வருந்தித் துன்புற்று இறுதியில் உயிர் துறக்கிறாள். அதைப்போலவே. வணிகர் குலத்தில் பிறந்த கோவலனின் நற்றாயும் கண்ணகியின் நற்றாயும் இறக்கின்றனர். வரந்தரு காதையில் தெய்வ அருள் பெற்றத் தேவந்தியின் கூற்றாக வரும் பகுதியில் கண்ணகி தாயும் கோவலன் தாயும் மாதரியும் மறுபிறவி எடுத்து வஞ்சி நகரில் பிறக்கின்றனர். இது,
“கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன் / கடவுண் மங்கலங் காணிய வந்த / மடமொழி நல்லார் மாணிழை யோருள் / அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற / இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் / ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் / சேடக்குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் / (வரந்தரு காதை: 46-52) என வருகிறது.
கண்ணகி பிரதிட்டையைக் கண்டு வணங்க வந்த மகளிருள் அரட்டன் செட்டியின் மனைவி மன மகிழ் சிறப்புடன் பெற்றெடுத்த இரட்டையாராகத் தோன்றிய மகளிர் இருவரும் (முற்பிறவியில் கண்ணகி கோவலனின் தாய்மார்கள் இவர்கள்) திருவனந்தபுரத்து அராவணையில் பள்ளி கொண்ட திருமாலுக்குத் தொண்டு செய்யும் குடும்பத்தைச் சார்ந்த சேடன் (திருவடி பிடிக்கும் அடியவன்) மகளாகப் பிறந்த சிறுமகளும் (முற்பிறவியில் மாதரி) கண்ணகி கோயிலில் இருந்தனர். கண்ணகி தாயும் கோவலன் தாயும் மாதரியும் இறந்தவுடன் சொர்க்கம் (துறக்கவுலகம்) செல்வதில்லை. ஆனால், கோவலன், கண்ணகிக்கு வானுலகம் கிட்டுகிறது. இதற்குக் காரணம் இம்மூன்று பெண்களும் அறம் செய்வதில்லை: அதனால் மேலுலகம் அவர்களுக்கு கிடைப்பதில்லை: கோவலனிடம் தானம் பெற வந்த பார்ப்பனனை மதம் யானை தாக்க வருகிறது. அம் மத யானையிடமிருந்து அப்பார்ப்பானனைக் காப்பாற்றுகிறான். இவ் அறச்செயல் தான் கோவலனுக்கு வானுலகத்தைப் பெற்றுத் தருகிறது.
கோவலன் மீது கண்ணகி கொண்ட அன்புதான் அவள் சொர்க்கம் அடையக் காரணம் எனும் பதிவும் கண்ணகி மீதுள்ள அன்பின் மிகுதியால் இடையர் குலத்து முதியளாகிய மாதரி மற்றும் வணிகர் குலத்து மாசாத்துவன் மனைவியும் மாநாய்கன் மனைவியும் கண்ணகி அணுகிய வஞ்சி மூதூரில் பிறக்கின்றனர் என்ற செய்தியும் அறம் செய்தால் பொன்னுலகம் அடைதலும் ஒருவர்பால் அன்பு வைக்கும் உள்ளமுடையோர் இந்நிலத்தில் தாம் அன்பு வைத்த இடத்தே பிறத்தல் இயல்பும் ஆகிய கருத்துக்கள் வரந்தரு காதையில் (121-138) இடம் பெற்றுள்ளன.
இப்பதிவுகளை உற்று நோக்கும்போது ஆயர்குலத்தில் பிறந்த மாதரி அடுத்த பிறவியிலும் அதே குலத்தில் பிறந்து பெருமாளுக்கு அடிமைத் தொண்டு செய்வதும் வணிகர் குலத்தில் பிறந்த கண்ணகி, கோவலன், தாய்மார்கள் மறுபிறவியிலும் அதே (வணிகர்) செட்டியார் சாதியில் அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களாகப் பிறப்பதும் ஏன் என்ற வினா எழுவது இயல்பு. காரணம் விளிம்புநிலை மாந்தரான மாதரியும், வணிகர்குல மாந்தர்களான கண்ணகி, கோவலன், தாய்மார்களும் சாதி மாறாமல் அடுத்த பிறவியில் பிறப்பது என்பது சாத்தியமா? என்ற வினாவும் உடன் தோன்றுகிறது ஒரு ஆறுதலான விசயம் இம்மூன்று பெண்களும் ஒரே நாட்டில் பிறக்கின்றனர் என்பதே அது.
தமிழ்ச் சமூக அமைப்பில் சாதி / இனம், தொழிற்பிரிவுகள் ஆகியவைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதி / இனத்தில் பிறந்துவிட்டால் அதுவே அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற கருத்தியலுக்குச் சான்றாகவும் மாதரி எனும் விளிம்புநிலைப் பாத்திரத்தைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது எனலாம்.
நிறைவாக:
சிலப்பதிகார காலகட்டத் தமிழ்ச் சமூக அதிகார அமைப்புகளின் மேல் மட்டத்தில் இருந்தவர்கள் அரசர்கள் இருப்பினும் அவர்களை இயக்குபவர்களாக அந்தணர்கள் இருந்துள்ளனர். அத்துடன் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியற்பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.
பயன்பட்ட நூல்கள்:
1. சிவசுப்பிரமணியன்.ஆ., அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை. முதற்பதிப்பு, 2002
2. வேங்கடசாமி நாட்டார், ந.மு., (உரை ஆசிரியர்), சிலப்பதிகார ராமையா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2005.
3. Bier, Jess “Srbalterin Studies” Encyclopedia of Geography, 2010. 15 Nov. 2010 http://www. Sageereference.com/geography_n1095.html.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மா. வெங்கடேசன்
தமிழ் இணைப் பேராசிரியர்
அரசு கலைக் கல்லூரி (ஆடவர்)
கிருட்டினகிரி-635 001.