காணாமலே பிசிராந்தையார் மீது நட்பு கொண்டு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் கோப்பெருஞ்சோழன் ஆவார். உரையாசிரியர்களிலேயே அதிமான மேற்கோள் காட்டப்பட்டதும், சாகாவரம் பெற்ற பாடல்களுமுடைய சங்க நூலான குறுந்தொகையை ஆராயும்போது, இவர் நான்கு (20, 53, 129, 147) பாடல்களைப் பாடியிருப்பதைக் காணமுடிகிறது. குறுந்தொகையில் இந்நான்கு பாடல்களை மட்டுமே பாடிய கோப்பெருஞ்சோழன் மன்னராக இருந்தபோதிலும் புலவர்களுக்கு ஈடாக பாடியிருப்பது வியக்கத்தக்கதாகும். இந்நான்கு பாடல்களை அடையாளம் கண்டு பொருள்கூறு நோக்கில் காணும்போது செயல், அழகு, துன்பம், வேட்கை, வருணனை எனும் ஐந்து விதமான பொருள் கூறுகள் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே, சங்கப்பாடல்கள் அனைத்தும் பல்வேறு பொருள்கூறுகளின் இணைவால் உருக்கொள்பவையாகும். அதே சமயத்தில் ‘அமைப்பியல்’ என்பது ஒரு முழுமைக்கும் அதன் பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பினை ஆய்வதை வற்புறுத்துகிறது. இந்த வகையில் ஒரு பொருள் கூறுக்கும் இன்னொரு பொருள் கூறுக்கும் இடையே உள்ள தொடர்பினை கோப்பெருஞ்சோழனின் பாடல்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குறுந்தொகை – கோப்பெருஞ்சோழன் – பொருள்கூறு – செயல் – அழகு – துன்பம் – வேட்கை – வருணனை .
செயல்
ஒருவர் தானே செய்யும் வேலையையும், பிறருக்குச் செய்யும் வேலையையும் தானே சொல்வதாகவும், பிறர் சொல்வதாகவும் அமைகின்ற செயலை இரண்டு (பாலை 20, 147) பாடல்கள் கூறப்படுகிறது.
பொருள்வயிற் பிரியக்கருதிய தலைவன் தன் கருத்தை தோழிக்குக் கூறினான். தோழி தலைவன் பிரியக்கருதியதை தலைவிக்குக் கூறும்போது தலைவனின் செயல் வெளிப்படுகிறது. அவை,
“அருளும் அன்பும் நீக்கி துணைத்துறந்து
பொருள்வயிற் பிரியோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக” (குறுந். பா. 20 ; 3 – 5)
எனும் பாடலடிகள், தோழியே தொடர்பிலார் மீது தோன்றும் அருளையும் தொடர்புடையார் மீது தோன்றும் துறந்து பொருள் தேடும் நோக்கம் ஒன்றே உடையவராக நம்மைப் பிரிந்து செல்லும் காதலர் அறிவுடையவராயின் அத்தகைய ஆற்றல் உடையவர் அவர் அறிவுடையாரே ஆகுக. இதில் அருளுக்கும் அன்புக்கும் உள்ள வேறுபாட்டை தோழியின் மூலம் புலவர் மிக அழகாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலே கூறியதுபோல இன்னொரு செயலையும் அதாவது, தலைவன் பிரிந்த இடத்து துயிலுங்கால் தலைவியை கனாவில் கண்டு விழித்து ஆற்றாமையை கனவிடம் கூறும்போது தலைவனின் செயல் வெளிப்படுகிறது. இதனை,
“……….மடந்தமையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந்தோரோ ” (குறுந். பா. 147 ; 3 – 5)
என்னும் பாடலின் மூலம், கனவினை விழித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. அதாவது, கனவே! தலைவி கொண்டு வந்து தந்தது போலக் காட்டி இனிய துயிலைக் கெடுத்து எழுப்புகின்றாய் துணையைப் பிரிந்துறைவோர் நின்னை இகழார் என்று கூறுகிறார். இதில், எல்லோரும் தூக்கத்தைக் கெடுத்த கனவை இகழ்வார். ஆனால், தலைவன் புகழ்கின்றார் என்பது வியக்கத்தக்கதாகும்.
அழகு
எந்த ஒரு கவிஞனும் அழகை வருணிக்காமல் இருந்ததே இல்லை. அதைப்போல் குறுந்தொகையில் தலைவியின் அழகை மிகவும் நுண்மையாக புலவர் இரண்டு (குறிஞ்சி 129, பாலை 147) பாடல்களில் வருணித்துள்ளார். அவை, இயற்கை புணர்ச்சி எய்தித் தலைவியைப் பிரிந்து வந்த தலைவனது வேறுபாடு கண்ட பாங்கன் இவ்வேறுபாடு நினக்கு ஏற்றலாகாது என்று வினவியவழித் தலைவன் அவனுக்கு உரைக்கும்போது தலைவியின் அழகு இடம்பெறுகிறது. இவ்வழகினை,
“மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்தப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்” (குறுந். பா. 129 ; 3 – 5)
என்ற பாடல் புலப்படுத்துகின்றது. அதாவது, தோழனே கேட்பாயாக கரிய கடலினிடையே குளிர்ந்த வளர்பிறையின் எட்டாம் நாளின் வெள்ளிய பிறைத் திங்கள் தோன்றியதுபோல கூந்தலின் பக்கமாக விளங்கும் சிறிய நெற்றியாகும் என்பதைத் தலைவன் தலைவியின் அழகை வியந்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வழகினைக் குறித்து கீழ்வரும் பாடலும் உணர்த்துகின்றது.
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் சென்றவிடத்தே துயிலுங்கால் தலைவியைக் கனாவில் கண்டு விழித்து ஆற்றாமையாலே கூறும்போது மேலும் தலைவியின் அழகானது,
“வேறிற் பாதிரிக் கூண்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலும் மாமை
நுண்புண் மடந்தையைத் ………….” (குறுந். பா. 147 ; 1 – 3)
என்ற பாடலில் வேனிற் காலத்தில் மலரும் மாதிரி மரத்தின் இதழ்கள் உட்புறம் வளைந்த பூவில் உள்ள மயிரினைப் போன்று மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாந்தளிர் போன்ற நிறத்தினையும், நுண்ணிய வேலைப்பாடுடைய அணிகலன்களையும் உடைய தலைவி என்று கனவில் வந்த தலைவியின் அழகை மிக அழகாக தலைவன் மூலம் புலவர் சித்திரித்துள்ளார். இவ்விரண்டு பாடல்களும் அடி அமைப்பில் வேறுபட்டிருந்தாலும் அழகு என்ற அமைப்பில் ஒத்துக்காணப்படுகின்றது.
துன்ப நிலை
துன்பம் என்பது அவரவர் வாழ்க்கையில் நிகழக்கூடியதாகும். ஒன்றை இழந்து விட்டால், நினைத்து நடக்காவிட்டால், எதிர்ப்பார்த்தது கைக்கூடவில்லை என்றால் அதை நினைத்து மனதில் துன்பம் ஏற்படுவது இயல்பு. இத்துன்பத்தைப் பற்றி இரண்டு (பாலை 20, மருதம் 53) பாடல்கள் கிடைக்கின்றன. அவை, பொருள்தேட கருதிய தலைவன் தன் கருத்தைத் தோழிக்குக் கூறினான். அதை, தோழி தலைவன் பிரியக் கருதியதைத் தலைவிக்குத் கூறும்போது தலைவியின் மனதில் வருத்தம் தோன்றுகிறது. இத்துன்ப நிலையை,
“மடவம் ஆக மடந்தை நாமே” (குறுந். பா. 20 ; 4)
என்ற பாடல் வரியின் மூலம் தோழியே அவரை பிரிந்திருப்பதற்குரிய அறிவில்லாத நாம் அறிவில்லாமலே ஆகட்டும் என்று கூறுவதைக் காணலாம். கீழ்வரும் பாடலும் இப்பொருளினைத் தாங்கி நிற்பதை ஆய்வின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
மணம் புரிந்துகொள்ள காலம்கடத்திய நிலையில் தோழியானவள் தலைவனுக்கு எடுத்துரைக்கும்போது தலைவியின் துன்பம் வெளிப்படுகிறது.
“எம்மணங் கினவே மகிழ்ந………
………. ……….. ……….. வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூர்ர மகளிரோ டுற்ற சுளே” (குறுந். பா. 53 ; 1, 5-7)
என்னும் பாடலில், தலைவனே! நீர்த்துறையில் நல்ல சிந்தனையுடைய நிலையில் முன் கையைப் பிடித்துக்கொண்டு நீ தெய்வத்தின்முன் நிறுத்தி கூறிய சூளுரையானது எங்களைத் துன்புறுத்தியது என்று கூறினாள். மேலே கூறிய இரு பாடல்களும் துன்ப நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
வேட்கை
வேட்கை என்பது ஏதாவது ஒன்றின்மீதோ அல்லது ஒருவர் மீதோ ஆசைக்கொள்வது வேட்கையாகும். இவ்வேட்கையானது இயற்கைப் புணர்ச்சி எய்தித் தலைவியைப் பிரிந்த தலைவனது வேறுபாடு கண்ட தோழன் வேறுபாடு உனக்கு ஏற்றாலாகாது என்று கூறியபோது தலைவனின் வேட்கை,
“எழுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் ……..
……. …….. ………… சிறுநுதல்
புதுக்கொள் யானையிற் பினித்தற்றால் எம்மே”
(குறுந். பா. 129 ; 1-2, 5-6)
என்ற பாடலில் கூறும்போது என் தோழனே சிறுவர்கள் இன்புறுதற்குக் காரணமான நட்பை உடையவனே, அறிவுடையோர்க்கும் தோழனானவனே கேட்பாயாக. ஒரு மகளின் நெற்றியானது புதிதாக காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானையைப் பிணிக்குமாறு போல என்னை பிணித்துவிட்டது என்று தன் விருப்பத்தை தோழனிடம் கூறினான் என்பது இன்றியமையாமையாகும்.
வருணனை
ஒரு இலக்கியம் அல்லது கவிதை வெற்றிப்பெற வேண்டுமானால் வருணனை என்பது முக்கிய கூறாக அமையவேண்டும். அவ்வகையில், எந்த ஒரு படைப்பாளனும் வருணனையில்லாமல் படைப்பதில்லை என்றே கூறலாம். அதாவது, தலைவன் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதிமொழி கூறிய பின்னரும் காலந் தாழ்த்தியதனால் அதைத் தாஙக்கிக்கொள்ள இயலாத தலைவியின் நிலையைக் கண்டு தோழி, தலைவனை நோக்கிக் கூறும்போது நீர்த்துறையின் வருணனை ஒரு (மருதம் 53) பாடலில் இடம்பெறுகிறது. இவ்வருணனையைப் பற்றி,
“……….. ………. ………….. முன்றில்
நனை முதிர் புன்நின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிய களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை” (குறுந். பா. 53 ; 1-5)
என்ற பாடல் எடுத்தியம்புகின்றதை, இல்லத்தின் முன்னே அரும்பு முதிர்ந்த புன்னை மரத்தினது பூக்கள் உதிர்ந்து கிடந்த வெண்மையான மணற்பரப்பு, வேலனால் ஒப்பனை செய்யப்பட்ட வெறியாட்டு நிகழ்த்தப் பெறும் இடங்கள் தோறும் செந்நெல்லின் வெள்ளிய பொரியைச் சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும், மணல் மேடுகள் செறிந்த நம் ஊரில் உள்ள அகன்ற நீர்த்துறை என வருணனை செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.
ஆய்விற்கு எடுத்துகொண்ட அவர் பாடிய நான்கு பாடல்களில் 20-ஆம் பாடலில் தலைவனின் செயலும் தலைவியின் வருத்தமும், 53-ஆம் பாடலில் மருதநில நீர்த்துறையின் வருணனையும் தலைவியின் வருத்தமும், 129-ஆம் பாடலில் தலைவனின் வேட்கையும் தலைவியின் அழகும், 147-ஆம் பாடலில் தலைவியின் அழகும் தலைவனின் செயலும் போன்ற இருவிதமான பொருள்கூறுகள் இடம்பெறுகின்றன. இதேபோல குறுந்தொகையில் மற்ற பாடல்களில் இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கூறுகள் இடம் பெறலாம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் து.கிருஷ்ணன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி. ஆர் கல்லூரி,
ஓசூர் – 635 130.
கைபேசி 9952779278
மின்னஞ்சல் d.krishnantamil@gmail.com
ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்