கிணத்துக்கடை| சிறுகதை

                          பழைய ஊர். கட்டுப்பாடுகள் அதிகம். சண்டைகளும் கலவரங்களும் சக்கரைப் பொங்கல் மாதிரி அப்பப்ப வந்து தெவட்டும். முனுசாமி அதிகாரி பொம்பளைங்க விஷியத்துல கொஞ்சம் அப்படி இப்படி. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு பொண்டாட்டிக்கும் ஆளுக்கொரு ஒரு ஆண் பிள்ளைங்க. ஊரே தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருந்தாரு. அவருடைய முறுக்கு மீசையும் கோபக்கண்களும் பார்த்தா, யாருக்குமே பயம் வரும். முனுசாமி அதிகாரியை கேட்காம அந்தவூர்ல எதுவுமே நடக்காது. ஆண்டு அனுபவிச்சிட்டு ஒருநாள் இறைவனிடம் போய் சேந்திட்டாரு. ஆனா, வக்கில புடிச்சி பத்திரத்துல தன்னோட ரெண்டு மகனுகளுக்கும் சரிபாதியா பங்கு பிரிச்சி வச்சிட்டுத்தான் போயிருக்காரு. அவருக்குப் பின்னால வந்த மகன்களும் அப்பன மாதிரி குடியும் கும்மாளமுமா இருந்தாங்க. வீட்டுல இருக்கிற பண்டப் பாத்திரங்கள வித்தாங்க.. நிலத்த மனைகளாக்கி காசப்பாத்தாங்க. வீடுகள் அதிகமாச்சு. ஊரும் பெருசாச்சு. சனி பகவான் பசங்க ரெண்டு பேரோட தலையை இறுக்கப் பிடிச்சிட்டான் போலிருக்கு. அண்ணன் தம்பிக்குள்ள ஒரே சண்டை. ரெண்டு பேரும் ஒருசில இரத்தக் காயங்களோட தப்பிச்சிட்டாங்க. இனி செத்தா கூட போவக்கூடாதுன்னு முடிவும் பண்ணியாச்சு. தங்களோட எல்லையை முள்ளுக்கம்பிகளாலும் செங்கல் கற்களாலும் தனித்தனியா பிரிச்சிட்டாங்க.

                          ஒரு விஷியத்துல முனுசாமி அதிகாரி ரொம்ப விவரம். அவங்க காட்டுல நல்லத்தண்ணி கிணறு ஒன்னு இருக்கு. நல்லா அகலமாவும் பெரியதாகவும் இருக்கும். கோடையிலும் தண்ணீ வத்தவே வத்தாது.  மக்கள் கூட்டகூட்டமா வந்து தண்ணி எடுத்துட்டு போனதால கிணத்துக்கடைன்னு சொல்லுவாங்க. அவருகிட்ட,

                          “ஏங்க அதிகாரி, உங்க கிணத்துல மட்டும் தண்ணீ எப்பவும் வத்தவே மாட்டங்குதே…. என்ன? ஏதாவது மந்திரம் தந்திரம் செய்யுறீங்களா” ன்னு ஊரார் கேட்கும் போது,

                      “அந்த கிணத்துக்கு அடியில பெரிய நீர் வீழ்ச்சி இருக்கிறதாகவும், அது ஆறாக ஓடுவதாகவும், இந்தக் கிணத்துல இருந்துதான் சூரியனின் பார்வையைப் பெற்று இருப்பதனால்தான் தண்ணீரானது தேன் போன்று சுவையா இருக்கிறதாகவும் என் அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லுவாரு” என்று ரொம்பவே பெருமைப்பட்டுக்கொள்வார்.

   ஊரே அந்தக் கிணத்துலதான் தண்ணீர் எடுக்க வருவாங்க. முனுசாமி அதிகாரி ரொம்ப கர்வமா நினைப்பார். ஒருநாளும் யாரும் வராதிங்கன்னு சொல்லவே மாட்டாரு… அந்த வட்டாரத்துல கிணத்துக்கடைன்னா தெரியாதவங்க யாருமே கிடையாது. அந்தக்கிணத்துத் தண்ணிக் குடிச்சா  கொஞ்சம் கூட சளி பிடிக்காது. யாருன்னாலும் தைரியமா அந்தத் தண்ணியைக் குடிக்கலாம். பழைய ஊருக்கு கிணத்துக்கடைதான் சாமி.. குலசாமி.

       முனுசாமி அதிகாரி கிணத்தைப் பிரிக்கும் போது பொதுமக்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் வராதபடிக்கு பிரிச்சார். கிணறு ரெண்டு மகன்களுக்கும் சரிபாதி. அதாவது, மொத்த நிலத்தின் மையப்பகுதி அக்கிணறு. வட்டமாய் உள்ள கிணற்றில் வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையாய் நேராகச் செல்வது. அந்தப் பத்திரத்தில், கிணற்றில் தண்ணீர் இருக்கும் வரை பொதுமக்கள் பிடித்துக் கொள்ளலாம். தனியாக குழாய்ப் போட்டு பிடிக்க அனுமதி இல்லை. யாரும் கிணற்றுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. என் இரு மகன்களும் அந்தக் கிணற்றுக்குப் பாதுகாவலராக இருப்பார்கள். கிணற்றைத் தூர்வாரும் செலவுகள் அனைத்தும் என் மகன்களோடு ஊர்ப்பொது மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

                          சண்டையிட்ட அண்ணன் தம்பிகள், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி சரியாகக் கிணற்றின் பாதி வழியாக செங்கல் கட்டிடம் கட்டினர். ஊர் ரெண்டாக்கப்பட்டன. அந்தந்தப் பிரிவு வேலிக்கு உள்ளிருந்தவர்கள் அந்தப் பகுதிக்கு கட்படுவாராயினர். கிணற்று நடுவில் நேராக இரண்டு அரங்கள் போடப்பட்டன. அரத்திற்கு ஆறாய் தவலைக் கட்டப்பட்டன. இப்பகுதியில் உள்ளோர் கிணற்றில் இங்கிருந்து நீர் இறைத்துக் கொள்வர். அப்பகுதியில் உள்ளோர் அங்கிருந்து நீர் இறைத்துக் கொள்வர். பொதுவா மக்கள், பெரியவரு ஊரு… சின்னவரு ஊருன்னு சொல்லுவாங்க. பெரியவரு ஊருல பூங்கொடின்னு வயசு பொண்ணு ஒருத்தி இருந்தா. கருப்பா இருந்தாலும்,  பாக்க லட்சணமா அழகா இருப்பா.

                          “என்ன பூங்கொடி! தனியா யோசனையில இருக்க! கொடி வாடுதா? இல்ல வாடாம இருக்க மாரியத்தேடுதா?” என்று புதிர்ப்போட்டாள் பக்கத்துவூட்டுக்காரி மங்கா.

                          “ஏ… மங்கா என்னப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா. ஆமா! மாரியத் தேடித்தான் இந்த கொடி வாடிக்கிடக்குது. இப்ப அதுக்கு என்ன?” என்று முறைத்தாள் பூங்கொடி.

                          “அதுக்கில்ல பூங்கொடி… உன்னப்பாத்தா ஏதோ மனசு கவலையில இருக்கிற மாதிரி தோணிச்சு. அதான் உதவலாமுன்னு பேச்சுக்கொடுத்தேன். நீ என்னன்னா இப்படி கோவிச்சிக்கிறீயே” என்று உதட்டை ஒருவாறு பிதுக்கிக்கொண்டாள் மங்கா. பூங்கொடியும் மங்காவும் ஒரு வயசுக்காரிங்கதான். மங்காவுக்கு பதிமூனு வயசிலேயே தாய்மாமனைப் புடிச்சி கட்டி வச்சுட்டாங்க. மங்காவுக்கு ரெண்டு பொட்டபுள்ளையங்க. கடைசியா ஆம்பிளை பிள்ளை ஒன்னு. ஆக மொத்தம் மூனு புள்ளையங்க. யாராவது கேட்டா, “ஏண்டி.. மூனு புள்ளைய பெத்துருக்கியே.. எப்படி கரைசேத்துவன்னு” அதுக்கு அவ சொல்லுவா, “கடவுள் கொடுத்தது. அவனுக்குத் தெரியாதா எப்படி கரைசேத்தனுமுன்னு” என்று பதில் சொல்லுவா.

                          “இல்ல மங்கா… பெரியவரும் சின்னவரும் சண்டைப் போட்டு தனித்தனியா பிரிஞ்சிட்டாங்க. இதுல வேற ரெண்டு பக்கமும் செவறு, கம்பி வேலிப் போட்டு கட்டிட்டாங்க. மாரியப் பாத்து ரொம்ப நாளாச்சு. நேத்துதான் கிணத்துக்கடைக்கிட்ட தண்ணி எடுக்கலாமுன்னு போனேன். அங்கதான் மாரியும் தண்ணிப் புடிக்க வந்திச்சு”

                          “அப்ப காதலர்கள் ரெண்டு பேரும் ஒன்னா சந்திச்சிட்டீங்க”

                          “ஆமாம்! என்ன சந்திச்சோம். கிணத்துக்கடையில ஒரே கூட்டம். பேசவே முடியல. மாரிக்கு மட்டும் கேட்குற மாதிரி, என்ன ஓங்கூட சீக்கிரம்  கூட்டிட்டு போயிடுன்னு மட்டும் சொல்லிட்டு வந்தட்டேன்”

    மாரியும் பூங்கொடியும் காதலிக்குறாங்க. சாதி வேற. பிரச்சனையும் பெரிசு. ஊரு ஒன்னா இருந்தப்ப ஒன்னா திரிஞ்சாங்க. அம்பல் அலராகிப் போனது. காதலர்கள் ரெண்டு பேத்தையும் பாக்கவிடாம செஞ்சாங்க. இதுல சண்டைப்போட்டு கிணத்துக்கடைக்கிட்ட செவுறு வேற. ஒருத்தர ஒருத்தர் பாக்காம துடிச்சிப் போயிட்டாங்க.

                          “பூங்கொடி… நீ வேற சாதி.. மாரி வேற சாதி… அதனால பிரச்சனைதான் பெரிசாகும்டி. இந்த கிராமத்துல இருக்கிறவங்கள எதிர்த்திட்டு உன்னால வாழ முடியாது”

                       “எது நடந்தாலும் எனக்கு மாரிதான் முக்கியம். என்னோட வாழ்க்கை மாரிக்கூடத்தான்” என்று திட்டவட்டமாகப் பதில் சொன்னால் பூங்கொடி.

                          “ஏதோ நீ பெரிசா பண்ணப்போறன்னு தெரியுது. எரியுற நெருப்புல யாரெல்லாம் குளிர் காயப்போறாங்கன்னு  தெரியல… நல்லது நடந்தா சந்தோசம்தான்” என்று சொல்லிவிட்டு மங்கா அழுகிற கைக்குழந்தையை தூங்கிட்டு வீட்டுக்குள் போனாள். பூங்கொடியின் மனசு ஒருமாதிரியாக இருந்தது.

                          அடுத்த ஒரு வாரத்தில் பழைய ஊர் பரப்பரப்பாகக் காணப்பட்டது. மாரியும் பூங்கொடியும் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு போலிஸில் தஞ்சமடைந்தார்கள் என்று செய்திதாளில் செய்தி வெளியாயின. பெரியவரு ஊரு, சின்னவரு ஊரு என ரெண்டு ஊர்க்காரங்களும் தங்களோட சாதிக்காக சண்டைப் போட்டுக்கிட்டாங்க. எங்கப்பார்த்தாலும் கோ…கொல்லேன்னு சத்தம் கேட்கும். எல்லாரும் ஓடுவாங்க.. தனியா யாரும் போக மாட்டாங்க. கும்பளமா நின்னு பேசுவாங்க. யாரு எப்ப வந்து வெட்டுவா? அடிப்பான்னு தெரியாத ஒரு நிலை இருந்தது. ரெண்டு பிரிவினருக்கும் இதே பயம்தான். பிரிவு செவுத்த உடைச்சி உள்ள வந்து பூங்கொடிவூட்டு ஆளுங்க விடியக்காத்தால மாரிவூட்ட கொளுத்திப்பூட்டானுங்க. இதுல தூங்கிட்டு இருந்த மாரியோட அம்மாவும்  தங்கச்சியும் நெருப்புல பட்டு முகம், கைக்காலெல்லாம் வெந்து போச்சு. அவுங்க பெரிய ஆஸ்பத்திரில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.  இதனால மாரிவூட்டு வகையறா பூங்கொடிவூட்டு மேல மிகுந்த கோபத்துல இருந்தானுங்க.  

        எப்படியாவது அவனுங்கள பழி வாங்கியேத் தீரனும். நம்ம இடத்துக்கே வந்து குடிசைய பத்த வச்சிட்டானுவ. அவனுகளை சும்மா விடக்கூடாது என்று பொறுமினார்கள் கிணத்துக்கடைக்கிட்டதான் அடிக்கடி சண்டை நடந்துகிட்டே இருக்கும். ஏன்னா? காலையில அங்க தண்ணி எடுக்க வரவங்க சும்மா இருக்கிறதுல்ல… எதையாவது கிளப்பிவிட்டுட்டு போயிடுராங்க.. அதுதான் பின்னால பத்திட்டு எரியுது. அங்க எப்பவும் பெரிய மனுசங்க ரெண்டு மூனு பேரு இருந்திட்டே இருப்பாங்க. ஏதாவது பிரச்சனையின்னா முதல்ல அடிச்சிட்டுதான் கலைஞ்சு போவச் சொல்லுவாங்க. அப்படி இருந்தும் கிணத்துக்கடைக்கிட்ட அடிக்கடி அடிதடி நடந்துகிட்டே இருக்கும்.

                          இப்படியே விட்டா ஊரு சுடுகாடா மாறிடும்.        பெரியவரும் சின்னவரும் ஒன்னா சந்திச்சு பேசுனாங்க. கிணத்துக்கடைக்கிட்ட ரெண்டு பகுதிகாரங்களையும் ஒன்னா கூட்டி பஞ்சாயத்து நடந்தது.

                          “சாதியினர். இரண்டு ஊர்களிலுமே இருவரும் சரியாய் இருக்கின்றனர். சண்டைப் போட்டு சாவுறதை விட சமாதானமா வாழ்ந்துட்டு போவோமே” என்றார் பெரியவர்.

                          “அதெப்படிங்க முடியும். என்னோட வீட்ட எரிச்சு,  பொண்டாட்டி புள்ளைய தீயில வெந்தது எனக்குதான தெரியம்” என்றார் மாரியோட அப்பா.

                          “ஏலே, அதுக்கு என்ன செய்யனுமிங்கிற… நீயே சொல்லு” என்று கத்திக்கேட்டார் சின்னவர்.

                          “அவனுங்க வீட்டுல ஒரு உசிராவது போவனும்” என்று மெதுவாய் முகத்தை திருப்பியபடி சொன்னார்.

                    “அது எப்படி முடியும்? அவுங்க வீட்டுப் பொண்ண உன் பையன் இழுத்துட்டு போயிட்டான்ல்ல. பொண்ணப் பெத்தவங்க கொஞ்சம் கோபமாத்தான் இருப்பாங்க. அதனால அவுங்க செஞ்சது சரியின்னு நான் சொல்லல. கொளுத்திய வீட்டை சீரமைத்து தரணும். ஆஸ்பத்திரி செலவ முழுசா பாத்துக்கணும். அதுக்கப்புறம் பொண்ணு மாப்பிள்ளையை சேத்துக்கிறது சேத்துகாதது அவுங்க விருப்பம். நான் சொல்லறதுக்கு கட்பட்டு இருக்கிறதா இருந்தா இருங்க. இல்லன்னா டவுன்ல போலிஸ வரச்சொல்லி ரெண்டு பேருமேலேயும் கேஸ் குடுத்துப்புடுவேன். என்ன தம்பி? நான் சொல்லுறது உனக்கும் சரிதானே” என்று தம்பியிடம் கேட்டார்.

         சின்னவரு வாயடைத்துப் போனார். இவ்வளவு நாளைக்கு பின்னர் தம்பின்னு சொல்லியிருக்காருன்னு பெருமைபட்டார். தலையை மட்டும் அசைத்து சம்மதம் தெரிவித்தார்.

                    “இளவட்ட பசங்க இரத்தத்துடிப்புல இருப்பீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க. சின்னப்பசங்க தப்பு பன்னா பெரியவங்க எடுத்துச் சொல்லிப் புரியவையுங்க. நீங்களே அவுங்கள உசுப்பிவிட்டு கலவரத்தை உண்டு பண்ணாதீங்க. இத்தோட இந்த பிரச்சனையை விட்டுடுங்க” என்றார் பெரியவர்.

                     “அண்ணாரு சம்மதிச்சாருன்னா… செவுத்த இடிச்சிட்டு எப்போதும் போல ஒன்னா இருக்கலாம்” என்று தன்னோட கருத்தை முன் வைச்சார்.

                          “எங்க அப்பா முனுசாமி அதிகாரி உழைச்ச பூமி இது. இங்க வாழனுமே தவிர, சாகக்கூடாது. எனக்கு பரிபூரண சம்மதம். கிணத்துக்கடை இனிமேல் ஊருக்கு பொது” என்றார் பெரியவர்.

                          அத்துடன் கூட்டம் முடிந்தது. மக்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசம். ஒரு பிரச்சனை உருவாகும் போதுதான் இன்னொரு பிரச்சனை முடிவுக்கு வருகிறது என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். மாரியின் அப்பாவிற்கு பஞ்சாத்தில் நடந்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எப்படியாவது அவர்களை பழிவாங்கியே ஆக வேண்டும் என்று உறுமிக்கொண்டிருந்தார். அதற்கான நேரத்தையம் திட்டத்தையும் வகுத்துக்கொண்டிருந்தார்.

                          கிணத்துக்கடை பாதுகாவலில் இருக்கும் பெரிய மனுசங்க மூனுபேரில் ஒருத்தர் மட்டும் மாரிவூட்டுக்கு  சொந்தக்காரர். அவருக்கு தண்ணிய நிறையா வாங்கி கொடுத்து கிணத்துக்கடையில இருக்கிற கிணத்துல சுமார் நாப்பது லிட்டர் விஷத்தை கலக்கச் சொல்லிட்டார். போதையில பின்னால் நடக்கும் விபரீதம் தெரியாம மத்த ரெண்டு பேரையும் வீட்டுக்குச் சாப்பிட அனுப்பினார். அமாவாசை இருட்டு. அந்த நேரத்துல மறைச்சு வச்சிருந்த விஷக்கேனை திறந்து கிணத்துகடை தண்ணில ஊத்திட்டாரு.

                 அந்த விஷமானது நேராக பூமிக்கு அடியில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் ஊற்றியது. நீர் வீழ்ச்சியின் அடிப்பகுதியில் சிவன் அண்ணாந்து பார்த்த நிலையில் வாயில் தண்ணீரானது உள்ளே விழுந்த்து. திருநீலகண்டனின் கழுத்தில் விஷம் நின்று போனது. நிலவின் ஒளி கிணற்றில் விழுந்தது. கிணற்றில் நடக்கும் அதிசயம் நிலவில் ஓவியமாய் தெரிந்தது. கிணத்துக்கடைப் பாதுகாவலர் அதிசயத்து மயங்கிப்போனார்.

                          அடுத்த நாள் செய்தித்தாளில், கிணத்துக்கடை தண்ணீர் குடித்துவிட்டு  பழைய ஊர் மக்கள்  வாந்தி, பேதியினால் அவதி. பெரிய ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதின. கிணத்துக்கடையில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் கலவரம் நடக்காமல் இருக்க காவலர்கள் குவிந்தனர். இனி யாரும் கிணத்துக்கடை தண்ணீரை உபயோகப்படுத்தக்கூடாது என்று இரும்பால் கான்கிரீட் போடப்பட்டு கிணறு மூடப்பட்டது.  செய்தியினைப் படித்துவிட்டு மாரியும் பூங்கொடியும் இறைவனின் பாதங்களில் போய் விழுந்தார்கள். அதன்பிறகு கிணத்துக்கடையில் ஒவ்வொரு அமாவாசை  அன்றும் பைத்தியக்காரன் ஒருவன் வருவான். அவன் யார்? எங்கிருந்து வருகிறான்? என்று யாருக்கும் தெரியவதில்லை. இரவு முழுக்க பயங்கரமாகச் சிரித்துக்கொண்டிருப்பான். விடிந்ததும் காணாமல் போய் விடுவான்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

Leave a Reply