உழவே தலை
♣ சேவல் கூவிடும்
செங்கமலம் பூத்திடும்
தோள் மேல் கலப்பை ஏறும்..
கயிறுகள் கைக்குள் நுழையும்..
காளைகளோடு
கம்பீரமாய் நடப்பார் தாத்தா…!
♣ வைகறை நிலவின்
வெளிச்சம் கொண்டு
வயலில் நுழைவார்..!
♣ நொகத்தடியை
நோகாமல் எடுத்து வைப்பார்..
ஏர்க்கால் தடியை
அதன் மேல் ஏற்றி வைப்பார்..
காளைகள் கொண்டு
கச்சிதமாய் பூட்டிடுவார்..
காலுக்கு முன்புறம்
கலப்பையை தூக்கி வைப்பார்..
மோலி மேல் ஒரு கையும்..
வால் மேல் மறு கையுமாய்..
அடியேதும் கொடுக்காமல்
அன்பாய் ஓட்டிடுவார்….!
♣ அந்த ஒற்றை கொலு முனையில்
ஓராயிரம் உயிர்கள் பசியாறும்…!
♣ அளவு கோலே இல்லாத
அழகான கோடு அது..
ஐந்து கால் முடியும்
ஆறாம் கால் படைசால்..
வகிடெடுத்து வாரியது போல்..
பட்டையாய் ஓட்டிடுவார்…!
♣ செம்மண் நிலமெல்லாம்
சேவல் கொண்டையாய்
சிவந்திருக்கும்..
உழுத நிலத்தில்
ஊன்றிய காலடி
ஒரு சாண் ஆழத்தில்
உறைந்திருக்கும்…!
♣ கால் பொழுது வரும்போது
காட்டையே உழுதிருப்பார்…!
♣ ஆடியில் தேடி
ஆரியமும் கம்பும் சோழமும் வரகும்
அழகாய் விதைத்திருப்பார்..!
♣ பித்தளை தூக்கு போனி
வெத்தலை பாக்கோடு
வெள்ளனே வந்திருக்கும்..
சின்னதாய் சிவந்த வெங்காயம்..
பக்குவமாய் பச்சை மிளகாய்..
பழைய சோறும் கூடவே வரும்..
சொர்க்கம் போல் எண்ணி சோற்றைச்
சாப்பிடுவார்…!
♣ உலக உயிர்களின்
உணவுக்காக..
‘உழவே தலை’ – என்ற
ஒற்றை மந்திரத்தோடு.. .!
-கவிஞர் பேரா. ச. குமரேசன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.
மேலும் பார்க்க,
இருப்பது ஆண்டுகள் முன்னோக்கி திரும்பி பார்க்க வைக்கிறது கவிதை.
கவிஞர் வேளாண்மை சார்ந்த பண்பாட்டை கண்முன் நிறுத்துகிறது….
மிக அருமை
நன்றி மா
நன்றி ஐயா🙏