மெய்க்கீர்த்தி|சிறுகதை|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

மெய்க்கீர்த்தி - சிறுகதை- முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
        ரொம்பவும் ஆச்சரியமாகவும் நம்பமுடியாததாகவும் இருந்தது சுந்தரிக்கு கொழுந்தனார் கீர்த்தி அளித்த பதில். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு ஆண்மகனா? மனைவியின் இடத்தில் இருந்து இப்படியெல்லாம் சிந்திக்க இயலுமா தன் சித்தப்பாவின் மறைவுக்குச் சென்னையில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு மறுதினமே சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சுந்தரிக்குப் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நடந்தவைகள் நினைவலைகளில் வந்து சென்றன. அப்பாவின் ஒரே தம்பியான சண்முகம் சித்தப்பாவின் மறைவு செய்தி கேட்டதுவும், வடக்குவீட்டு வாசலில் இருந்து காலையில் பணிக்குப்புறப்படும்போது ஜவ்வாது வாசனையுடன், செந்தூரப்பொட்டும், பெரிய மீசைக்கிடையே மின்னும் சித்தப்பாவின் புன்னகையும் வந்து மறைந்தன.
         
      இன்று வெள்ளிக்கிழமை, சனி ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்தால் போதும், ஞாயிறு கிளம்பி திங்கள் வேலைக்கு வந்து விடலாம், என்ற கணக்குப் போட்டு, எப்படியாவது ஊருக்குச்சென்று சித்தப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டிருந்தாள் சுந்தரி.
 புறப்படும்பொழுதே சென்னையில் வசிக்கும் பெரிய தாத்தாவின் மகன்வழி பேத்தியான தங்கை செல்வி வருகிறாளா என்று கேட்டு அவளுடன் இணைந்து சென்றுவிடலாமா? என்று எண்ணினாள்.
         
      ஆனால் தன் முதல் குழந்தைப்பேறு முடிந்து, சென்ற வாரம்தான் பிறந்தகத்தில் இருந்து சென்னை வந்திருக்கும் அவளால் எப்படி உடனே ஊருக்குத் திரும்பி வரமுடியும்? என்ற கேள்வி தனக்குள் எழும்ப, அவ்வெண்ணத்தைக் கைவிட்டுவிட்டுத் தனியாகப் பேருந்தில் ஏறி புறப்பட்டிருந்தாள் சுந்தரி.
         
      தங்களுக்குள் வேறுபாடின்றி வளர்ந்த மூன்று தாத்தா வீட்டுப் பேரப்பிள்ளைகளிலே கடைக்குட்டிதான் தங்கை செல்வி. ‘பாப்பா, பாப்பா’ என்று அக்காமார் மற்றும் அண்ணன்மார்களால் பிறந்ததிலிருந்து இன்றுவரை அழைக்கப்பட்டு அனைவருக்கும் பணிவிடை செய்பவள்.  ‘சித்தி சித்தி’ என்று அக்காமார் பிள்ளைகள் அனைவரின் சிந்தையெல்லாம் நிறைந்து, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவள்தான் செல்வி. ‘அத்தை, அத்தை’ என்று அன்பு உருக அழைக்கும் அண்ணர்மார்குழந்தைகளுக்கு மற்றொரு செவிலித்தாயானவள் தான் செல்வி. விடுமுறை, கோவில் திருவிழா, குடும்ப விழாக்கள் என ஊருக்கு வரும் அனைத்து சொந்தங்களையும் அன்புடன் உபசரிப்பவள். உறவுகளின் பிறந்தநாள், திருமணநாள்களில் அவர்களுக்கான படச்சுருளை உருவாக்கி, உறவுகளுக்கான புலனக்குழுவில் முதன்முதலில் பதிவிடுபளும் அவள்தான்.
         
       குறிப்பாக இறந்திருக்கும் சித்தப்பா மீது அவளுக்கும், அவள்மீது சித்தப்பாவிற்கும் ஒரு பாசப் பிணைப்பு உண்டு. செல்வி சித்தப்பாவை ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். சித்தப்பா, பெரியப்பா உறவுகளை அவ்வுறவு முறை சொல்லி அழைக்காமல், அவர்கள் பெயருடன் ‘அப்பா’ என்பதை இணைத்து அழைப்பதே குடும்ப வழக்கமாக இருந்தது. சண்முகம் சித்தப்பாவைக்கூட அவரின் பெயருடன் இணைத்து ‘சண்முகப்பா’ என்று தான் அனைவரும் அழைப்பர். பணி ஓய்விற்குப்பின் கடையத்தில் தன் சின்ன மகளுடன் வசித்துவந்த சித்தப்பா, என்றாவது ஊருக்கு வருகிறார் என்றால், முன்னமே வீட்டை சுத்தம் செய்ய, தண்ணீர் நிரப்பி வைக்க, உணவு செய்துவைக்க என அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து அவர்களைக் கவனித்து அனுப்புவாள் செல்வி. இரண்டு வருடங்களுக்குமுன் திருமணம் ஆகி,   இஞ்சினியர் ஆன கணவர் சென்னையில் பணிபுரிய அவளும் சென்னை வாசியாகிவிட்டாள்.
         
       சுந்தரிக்குச் சித்தப்பாவுடன் நேரடி நெருக்கம் அதிகமாக இல்லாவிட்டாலும், சித்தப்பா அவளின் திறமைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதை அவள் செல்வியின் மூலம் அறிந்திருந்தாள். ஒருமுறை செல்வி போனில் பேசியபோது, “அக்கா, சண்முகப்பா உன்னோட எழுத்துத் திறமையைப் பத்தி என்கிட்ட அடிக்கடி சொல்லுவாக. நீ எழுதிய புத்தகங்களைப் படித்துவிட்டு  ‘சுந்தரி பெரிய எழுத்தாளரா வருவா, அவள் சிறுவயதிலேயே தைரியமா பேசுவா, பள்ளியில் படிக்கிறபோதே நிறைய எழுதுவா. இன்னும் அவள் சாதிப்பா’ன்னு ரொம்ப பெருமைப்படுவாக.” என்று கூறியிருந்தாள். அந்தப் பாராட்டு சுந்தரியின் மனத்தில் ஒருவித அமைதியையும், மகிழ்வையும் கொடுத்திருந்தது. அவருக்கிடையேயான இடைவெளியைக் குறைத்து, அவர் மீது சுந்தரிக்கு ஒரு மெல்லிய பாச இழையைப் பதித்திருந்தது.
அதற்காகவே சென்ற வருடம் ஊருக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தபோது, சித்தப்பாவைச்  சந்திக்க கடையம் சென்றிருந்தாள். அப்போது அவர் சுந்தரியிடம் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசியிருந்தார். அப்போது, சுந்தரியின் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது அக்கறையான பேச்சு, மறைந்த அவளது தந்தையின் பாசத்தை நினைவூட்டியது. இதுதான் ‘இரத்தபாசமோ’ என்று வியந்துபோனாள். செல்வியைப் பற்றிப் பேச்சு எழும்போது, “பெரியவா வள்ளியூரில் இருக்கா. சின்னவா இங்க இருக்கிறா. சின்னவனும் பணி நிமித்தம் பெங்களூரில் இருக்கிறான். நான் ஊரில் இருந்த காலத்தில் பிள்ளைகளுக்கும் மேலா என்னைக் கவனித்தவள் செல்வி” என அவளின் பாசத்தையும் கவனிப்பையும் நினைவுகூர்ந்து சுந்தரியிடம் நெகிழ்ந்தவர் அவர். பாவம் அவர் இறப்பிற்கு, கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வரமுடியாத சூழலில் செல்வி இருப்பாளே என்று எண்ணியவாறே பயணித்தாள்.
           
      மறுநாள் அதிகாலையில் ஊருக்கு வந்த சுந்தரி, தெருமுழுவதும் அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலில் வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த தம்பிமார்கள் எழுந்து அவள் கைபிடித்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள, அக்கா தங்கைகளின் கணவன்மார்கள் எழுந்து வணங்க, அவர்களை வணங்கியவாறு கடந்தபோது, அவர்களுள் ஒருவராக தங்கை செல்வியின் கணவர் கீர்த்தியும் நிற்பதைக் கவனித்தாள். ‘இவர் மட்டும் வந்திருப்பார்போல’ என்று மனதிற்குள் எண்ணியவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் சுந்தரி.
         
      நடுவீட்டில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் கிடத்தியிருக்கும் தன் சித்தப்பாவின் அருகில் கனத்த இதயத்துடன் சில நிமிடங்கள் நின்று அஞ்சலி செலுத்திவிட்டு, கால்மாட்டில் அமர்ந்திருந்த தங்கைகளின் அருகில் அமர்ந்து துக்கம் விசாரித்தாள். சின்ன அத்தை களஞ்சியம், பெரிய அத்தை துரைச்சி, சின்ன தாத்தா வீட்டு அத்தை கனி, பெரிய தாத்தா வீட்டு அத்தை பாக்கியம் என மூன்று வீட்டுத் தாத்தாக்களின் பெண் வாரிசுகள்,  மருமக்கள்மார், பேத்திமார் என மொத்த உறவுகளும் நடுஅறையை நிறைத்திருக்க, ஒவ்வொருவர் அருகிலும் சென்று விசாரித்துவிட்டு அவர்களோடு அமர்ந்தாள் சுந்தரி.
குழந்தை வளர்ப்பு, பெரியோர் கவனிப்பு, பணியிடத்தில் விடுமுறை இன்மை எனப் பல காரணங்களால் முக்கிய நிகழ்வுகளில்கூட கலந்துகொள்ளாது, புலனக்குழுவில் மட்டுமே உறவுகளின் நல்லது கெட்டதுகளை விசாரத்து வந்தவள்தான் அவள். ஆதலால் சுந்தரியின் வருகையை அன்று எதிர்பாராத உறவுகளும், இரண்டு வருடங்களுக்குமுன் மறைந்த அவளது தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிக்க இயலாத தூரத்து உறவுகளும் அவளைக் கண்ட மகிழ்வில் அன்புடன் விசாரித்தனர்.  துக்க விசாரிப்புகள் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தபோது,
”எப்படி அக்கா வந்த, தனியாகவா வந்த? என்று தங்கை கலா கேட்க,
”ஆமா கலா. நேற்று இரவு கிளம்பி பஸ்ல நான்மட்டும்தான் வந்தேன்'” என்றாள் சுந்தரி.
”பாப்பாகூட அவ வீட்டுக்காரருடன் நேற்று இரவு பஸ்ல கிளம்பி காலையில்தான் வந்து சேர்ந்தாள். நீ வருவது தெரிந்திருந்தால் சேர்ந்து வந்திருக்கலாம்ல” என்றாள் செல்வியின் அக்காவான தங்கை வடிவு.
”ஓ.. அப்படியா.. செல்வியும் வந்துவிட்டாளா? வெளியில் அவள் மாப்பிள்ளையைப் பார்த்தேன்.” என்றவாறே, தான் தப்புக்கணக்குப்போட்டுவிட்டதை உணர்ந்து மனதிற்குள் வருந்தினாள் சுந்தரி. பாவம் அவள் என்ன செய்வாள்? அவள் தன் மூத்த மகனைப் பிறந்தகத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச்சென்ற இரண்டாவது வாரத்திலேயே அம்மாவைப் பெற்ற பாட்டி ஊரில் இறந்துவிட, இப்போதுதானே வந்தோம், கைக்குழந்தையுடன் எங்கே மீண்டும் ஊருக்குச் செல்வது என்று பாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வைத் தவிர்த்தவள்தானே அவள்.
”ஆமா அக்கா. பாப்பா வந்திருக்கா. அவளுக்குப் பிரியமான அப்பாவாச்சே, வராம இருக்கமுடியுமா? இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தாள். இப்போதான் ‘குழந்தை அழுகிறானு’ நந்து சொன்னதும் பார்க்கப் போயிருக்கா என்றாள் வடிவு.
         
       ஒரு கட்டத்தில் பதினெட்டுப் பட்டியில் இருந்துவந்த உறவுகளும், சம்பந்தவழி உறவுகளும் மேளதாளத்துடன் வாக்கரிசி சுமந்துவந்து துக்கம் விசாரிக்க வந்திருக்க, நடுஅறையில் கூட்டம் அலைமோத செல்வியையும் குழந்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்துடன் சற்றே வெளியேறினாள் சுந்தரி.
பந்தலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில், தங்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நபர்களின் பெயர்களைக்கூறி, அவர்கள் சார்பாக சித்தப்பாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், கூலிக்கு மாரடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர் அதற்காக அழைக்கப்பட்ட குழுவினர். அவர்களைக் கவனித்தவாறே அடுத்து இருந்த செல்வியின் அம்மா வீட்டிற்குள் நுழைந்தாள் சுந்தரி.
         
      குழந்தைக்குப் பால் ஆற்றிக்கொண்டிருந்த செல்வி, சுந்தரியைப் பார்த்ததும், “என்ன அக்கா நீயும் வந்திட்டியா? நேற்று சென்னையில் இருந்து கிளம்பும்போதே உன் கொழுந்தன், ‘உங்க அக்கா வருகிறார்களா எனக் கேள். வருவதாக இருந்தால் நம்முடன் அழைத்துச் சென்றுவிடலாம்’ என்று சொன்னாக, நான்தான் அவளுக்கு என்ன சூழலோ, நாம கேட்டு வரமுடியலனா கஷ்டப்படுவா என்று சொல்லி விட்டுவிட்டேன்’ என்று சுந்தரி மீதான தன் அன்பை வெளிப்படுத்தினாள் செல்வி.
         
       செல்வியின் கணவர் கீர்த்தி. அவருக்குத்தான் என்ன அக்கறை. அவர்கள் திருமணத்திற்குகூட சுந்தரி வரவில்லை. இருவரும் சென்னைக்கு வந்துவிடபோது, சுந்தரியைப் பார்க்க வேண்டும் என்று செல்வி விரும்ப,  தொடர்பணிகளுக்கிடையே சுந்தரி அவர்களை வீட்டிற்கு அழைக்கமுடியாத சூழலில்,  சற்றுநேரம் ஹோட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்துதந்த நல்லவர் அவர் என்று எண்ணியவாறே, வெளியில் எட்டிப்பார்க்க, இறுதிச்சடங்கிற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
         
      சித்தப்பாவின் ஒரே மகன் தம்பி கணேஷ் பெரியதாத்தா வீட்டுச் சார்பாக தம்பி தர்மன், சின்னதாத்தா வீட்டுச் சார்பாக தம்பி குமரன், தங்கை தனலட்சுமியின் கணவர் ராமர், ரேகாவின் கணவர் செல்வம், பெரிய அத்தை மகன் துரை அத்தான், சின்ன அத்தை மகன் ரவி ஆகிய எழுவரும் நீர்மாலை எடுத்துவர, சித்தப்பாவின் உடல் தெரு வாசலில் தென்ன ஓலையில் செய்த தட்டியில் வைக்கப்பட்டிருக்க, எடுத்துவரப்பட்ட நீரை ஒவ்வொருவராய் சுற்றி வந்து சித்தப்பாவின் கால்களில் ஊற்றினர். தங்கைகள் தனலட்சுமியும், ரேகாவும் கொல்லிப்பானை சுமந்து மூன்றுமுறை சுற்றிவந்தனர்.
         
      “கடைசியாக அப்பானு சத்தமா கூப்பிட்டு உடப்பிறந்தானைக் கட்டிப்பிடித்து அழுங்க” என்று தங்கை இருவரையும் தம்பி கணேஷைக் கட்டிப்பிடித்து அழும்படி குரல்கொடுத்தார் கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர். தந்தையை இழந்த துயரத்துடன் அங்குள்ளோரின் கட்டளைப்படியெல்லாம் சடங்குகளை செய்துமுடித்தனர், தம்பியும் தங்கைகளும்.
          பேத்திமார்கள் மாவிலக்குகளுடன் சுற்றிவர, மருமகள் மீனாவும், மகள் மருமகள் முறையார் அனைவரும் சித்தப்பாவின் கையில் பணத்தை வைத்து வைத்து ‘சீதேவி பணம்’ என்று தன் முந்தானைகளில் வாங்கிக்கொண்டனர். உறவுகள் இறுதியாக வாய்க்கரிசி போட அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் பேரன்மார்கள் தீப்பந்தம் பிடித்து, முறுக்கு, பழம் செலவளித்தவாறு இடுகாடுக்கு எடுத்துச்சென்றனர்.
         
      தெருமுனையிலேயே திரும்பிய பெண்கள் வீட்டு வாசலைத் தண்ணீர்விட்டு சுத்தம்செய்து, குளித்துமுடிக்க, இடுகாடு சென்ற ஆண்களும் குளித்து திரும்ப சித்தப்பாவின் சம்பந்தார் முருகேசன் மாமா ஏற்பாடு செய்திருந்த உணவை அனைவரும் உண்டு, சற்றுநேரம் பேசியிருந்துவிட்டு, இரண்டு நாட்களுக்குரிய சோர்வால் வீடுகளில் முடங்கலாயினர். சுந்தரியும் தங்கை தனலட்சுமியிடமும் தம்பி கணேஷின் மனைவி மீனாவுடனும் சித்தப்பாவின் இறுதிநாட்கள் சிகிச்சை குறித்து நீண்டநேரம் பேசிவிட்டு உறங்கிப்போனாள்.
         
  மறுநாள் சுந்தரி எழுந்து தயாரானபோது, செல்வி வீட்டு வரவேற்பு அறையில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க, குழந்தை மலரைக் கைகளில் வைத்தவாறு அவர்களுடன் நின்றுகொண்டிருந்தார், செல்வியின் கணவர் கீர்த்தி. மரியாதை நிமித்தமாக அவருடன் சுந்தரி பேசத்தொடங்க, அவர்களின் உரையாடல் நகர – கிராம வாழ்க்கைக்கான வேறுபாடு, இன்றைய கல்வி நிலை, அரசியல், பெண்ணுரிமை எனப் பல தளங்களுக்குச் சென்று வந்தது.
         
      அவற்றின் ஊடே, நேற்றிலிருந்தே உள்ளத்தில் எழுந்ததான, செல்வியால் எப்படி உடனே வரமுடிந்தது? என்ற கேள்வியைக் கீர்த்தியின் முன் வைத்தாள். “திருமணத்திற்கு முன் வரை உங்க குடும்பம் எவ்வளவு பெரியதென்று தெரியாது. திருமணத்தின் போதுதான் எவ்வளவு உறவுகளுக்குள் அவள் வாழ்ந்து வருகிறாள் என்பதை அறிந்து கொண்டேன். அப்படிப்பட்ட அவளை இங்குள்ள உறவுகளில் இருந்து பிரித்து என் ஒருவனுக்காக சென்னைக்கு அழைத்து வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு. பெரிய படிப்புப் படித்திருந்தாலும், அவளும் எனக்காக அவள் உறவுகளை விட்டுவிட்டு வந்து என்னைக் கவனித்து அன்பு செலுத்தினாள். இப்போது கைக்குழந்தையோடு தனியாக இருந்து என்னைக் கவனிக்கிறாள். அவளுக்கு கைமாறாக வேறு என்ன செய்ய இயலும்? இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அவளை அவள் சொந்தங்களுடன் உறவாட வாய்ப்பளிப்பதுதானே நியாயமாக இருக்கமுடியும்? என்று தெளிவான உள்ளத்தோடு நிதானமாகப் பதிலளித்தார் கீர்த்தி.
         
         கீர்த்தியின் தெளிவான பதிலைக் கேட்ட சுந்தரிக்கு, அவர் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு வாழ்க்கைத்துணை இருக்கிறாரா? மனைவியின் சந்தோஷத்தையும், அவளின் உறவுகளையும் தன் சந்தோஷமாகக் கருதும் ஒரு மனசு! சுந்தரிக்கு மனம் நெகிழ்ந்தது. அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. கீர்த்தி போன்றோரின் அன்பு, குடும்ப உறவுகளின் மேன்மை, மனிதநேயம் ஆகியவை என்றும் நிலைத்திருக்கும் என்பதை அந்தத் தருணம் அவளுக்கு உணர்த்தியது. எந்தச் சூழ்நிலையிலும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பைத் தளரவிடக்கூடாது எனக் கண்களில் நீர்ப்பணிக்க மனதில் உறுதிபூண்டாள் சுந்தரி. மனம் நிறைந்த அமைதியுடன் சென்னை திரும்பும் பேருந்தில் உறங்க முற்பட்ட சுந்தரி அதற்குமுன் அலைபேசியை எடுத்து  உறவினருக்கான புலனக்குழுவில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்: “நம்ம கீர்த்தி, பெயருக்கு ஏற்றார் போல் ஒரு நிஜமான ‘மெய்க்கீர்த்தி’!”

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 44.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here