மூன்று இலக்கண நூல்களின் முதற்பதிப்பு|அ.செல்வராசு

மூன்று இலக்கண நூல்களின் முதற்பதிப்பு - அ.செல்வராசு
      தமிழ் இலக்கண மரபு, ஐந்திலக்கண மரபாகும். தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூலான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐந்திலக்கணம் பேசியுள்ளது. பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணம் பேசும் இலக்கண நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தனித்தனி இலக்கணம் பேசும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட இலக்கண நூல்களின் பெயர்கள் மட்டும் அறியப் பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட நூல்கள் கிடைக்கப் பெற்றிருப்பினும் பயிலப்படும் இலக்கண நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. தொல்காப்பியம், நன்னூல், இறையனாரகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை என்பன இன்று பயிலப்படும் இலக்கண நூல்களாகும்.
          
          தமிழ் இலக்கண நூல்களின் பதிப்பு வரலாறு 1820லிருந்து தொடங்குகிறது. தாண்டவராய முதலியார் ‘இலக்கண வினா விடை’ என்ற நூலை முதலில் பதிப்பித்துள்ளார். 1824இல் ‘சதுரகராதி’யைத் தாண்டவராய முதலியாரும், இராமச்சந்திர கவிராயரும் பதிப்பித்துள்ளனர். 1828இல் ‘இலக்கண வினாவிடை’யைத் தாண்டவராய முதலியார் பதிப்பித்துள்ளார். இவற்றைத் தவிர்த்து இவரே நன்னூல், அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய மூன்று நூல்களையும் முதன்முதலாக 1835இல் பதிப்பித்துள்ளார். ‘இலக்கண பஞ்சகம்’ என அழைக்கப்பெற்றவற்றுள் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கணம் பேசும் மூன்று நூல்களும் ஒன்றாக தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஐந்திலக்கணத்தையும் சேர்த்துப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, முதலில் இம்மூன்று இலக்கணமும் பதிப்பிக்கப் பெற்றிருப்பதை, நூலின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு எடுத்துரைப்பதாய் உள்ளது. ‘இது தொடங்கிக் கால நீட்டித்தமையான் முற்றுப்பெற்ற துணையுமிப்போது வெளிப்படுத்தலாயிற்று மற்றையிலக்கணமும் பின்னரச்சுப் பதிப்பித்து வெளிப்படுத்தப்படும்’ என்பது அக்குறிப்பாகும்.
           
       இன்று வெளியிடப்பெறும் நூல்களில் இரண்டாம் பக்கத்தில் இடம்பெறும் தகவல்கள், தொடக்ககாலப் பதிப்புகளில் முகப்புப் பக்கத்திலேயே கொடுத்து விடுவது வழக்கமாகும். அதனடிப்படையில் இந்நூலின் முகப்புப்பக்கத்தில் ‘சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்த் தலைமைப்புலமை தாண்டவராய முதலியாரால் பழுதறவாராயப்பட்டு, இவராலும் மாநேசர் அ. முத்துச்சாமிப் பிள்ளை என்பவராலும் அச்சில் பதிப்பிக்கப்பட்டன’ என்ற குறிப்புக் கொடுக்கப்பெற்றுள்ளது. எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது என்ற தகவல் தரப்பெறவில்லை. பதிப்பு ஆண்டாக கிறிஸ்து ஆண்டும் சாலிவாகன சக வருடமும் தமிழ் ஆண்டின் பெயராக ஜய வருடமும் குறிப்பிடப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தமிழ் எண்களிலேயே கொடுக்கப்பெற்றுள்ளன. இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருட்கிலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும் பதிப்பிக்கப் பெற்றிருப்பதை முதற்பக்கத்தில் பார்க்க முடிகிறது. எழுத்தும் சொல்லும் அடங்கியதாக நன்னூல் உள்ளது. அகப்பொருளும் புறப்பொருளும் அடங்கியதாக முறையே, அகப்பொருளும் வெண்பாமாலையும் உள்ளன.

     நன்னூலின் சிறப்புப் பாயிரம் 15 அடிகளைக் கொண்ட ஒரே பத்தி அமைப்பில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. பொதுப்பாயிரம் உள்ளிட்ட பிற நூற்பாக்கள், நூற்பா வடிவிலின்றி உரைநடை வடிவில் கொடுக்கப் பெற்றுள்ளன. என்றாலும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டு வலது பக்கத்தில் நூற்பாக்களுக்கு என்று எண்கள் கொடுக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தொடர் எண்களுக்கும் மேற்கோள் குறியாக நட்சத்திரக் குறியீடுகள் கொடுக்கப் பெற்றுள்ளன (க). எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என ஒவ்வோர் இயலுக்கும் தனித்தனியாக வரிசை எண்கள் இடப்பெற்றுள்ளன.
      
    இரண்டாவதாக, அகப்பொருள் விளக்கம் வைக்கப்பெற்று, பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்நூலின் ‘சிறப்புப்பாயிரம் பிற்காலத்தது’ என்ற அடிக்குறிப்பு இடப்பெற்றுள்ளது. நன்னூல் அமைப்பு முறையிலேயே ஒவ்வோர் இயல்களுக்கும் தனித்தனி வரிசை எண்கள் தரப்பெற்றுள்ளன.
           
      புறப்பொருள் வெண்பாமாலையின் தொடக்கத்தில் சிறப்புப்பாயிரம் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. ‘வெட்சி’ என்பதற்கு ‘வென்றி வேந்தன் பணிப்பவும் பனிப்பின்றியும், சென்று தன்முனை யாதந்தன்று’ என இலக்கணம் கூறப்பெற்று, அடிக்குறிப்பில் ‘வென்றி வேந்தன் பணிப்பவென்பது மன்னுறு தொழில். பணிப்பின்றி யென்பது தன்னுறு தொழில்…’ எனக் கொடுக்கப்பெற்றுள்ளது. இவ்விடத்தைத் தவிர வேறு எங்கும் அடிக்குறிப்புகள் தரப்படவில்லை. இந்நூலில் இறுதியில் ‘ஐயனாரிதனார் பாடின வெண்பாமாலை முற்றிற்று முற்றும்’ எனச் சுட்டப் பெற்றுள்ளது. நூலாசிரியர் பெயராக’ஐயனாரிதனார்’ என்றும் நூலின் பெயராக ‘வெண்பாமாலை’ என்றும் கொடுக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1895இல் உ.வே.சா. பதிப்பித்துள்ள நூலில் நூலாசிரியர் பெயரும் நூலின் பெயரும் ‘சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச் செய்த புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்’ எனக் கொடுக்கப் பெற்றிருப்பதும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும். வெண்பாமாலையில் ‘வருமாறு’ என்ற சொல்லின் சுருக்கமாக ‘வ-று’ என்றும் ‘என்பது’ என்ற சொல்லின் சுருக்கமாக ‘எ-து’ என்றும் கையாளப் பெற்றுள்ளது. 
          
           முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் குறில் எகர ஒகரங்கள் புள்ளி பெறும் எனச் சுட்டியுள்ளது. அதற்கேற்ப இந்நூல் முழுவதிலும் எகர ஒகரங்கள் குறிலாக வரும் இடங்கள் அனைத்திடத்தும் மேற்புள்ளியிட்டே (எ், ஒ்) பதிப்பிக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வெழுத்துக்கள் நெடிலாக அமையும் இடங்களில் புள்ளியிடப் பெறவில்லை.
           
    தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு என்பது ஓலைச்சுவடியிலிருந்து தாளுக்கு மாறிய வரலாறு மட்டுமில்லை. அச்சுக்கலை வளர்ந்த முறை, பதிப்பு அழகியல், நூல் பெயர்களின் மாற்றம், எழுத்துகளின் வளர்ச்சிநிலை எனப் பல கூறுகளை உள்ளடக்கிய வரலாறாக அது உள்ளது. அது குறித்து அடையாளப்படுத்த வேண்டியதும் இன்றைய தேவையாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,

மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here