முருகனின் அறுபடை வீடுகள்

முருகனின் அறுபடை வீடுகள்

முருகனின் அறுபடை வீடுகள்

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம்

இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர்

மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி)

நான்காம் படைவீடு : திருவேரகம் (சுவாமிமலை)

ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்)

ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

 

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம்

            சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேற் பெருமா னின் சிறப்பான உறைவிடங்கள் ஆறு இந்த ஆறு உறைவிடங்களில் முதலாவது உறைவிடம் திருப்பரங் குன்றம்: இதுவே முதற்படைவீடு. மதுரைக்கு மேற்கே சுமார் ஐந்து மைல் தூரத்தில் திருப்பரங் குன்றம் இருக்கின்றது. இந்நகரத்தின் மத்தியில் உள்ள மலை சிவலிங்க வடிவிலமைந்து விளங்குகின்றது. இதனால் இம்மலை “பரங்குன்று” என அழைக்கப்படுகின்றது. இதையே “மாடமலி மறுகில் கூடற்குடவயின்” குன்று என திருமுருகாற்றுப்படையும் கூறுகின்றது?

            இக்குன்றிலிருந்து தவமியற்றிய குன்றக்குமரனுக்கு பார்வதி சமேதராகப் பரமசிவன் காட்சியளித்தார் என் றும், காட்சியளித்த திருநாளே தைப்பூசத் திருநாள் என்றும், இந்நாளில் பரமசிவனையும் முருகப்பெருமா னையும் மெய்யன்போடு வணங்குபவர்கள் இகபர சுகங்களைப் பெறுவர் என்றும் புராணவரலாறு கூறுகின்றது.

            சிவபெருமான், உமாதேவியார், பிரமா, விஷ்ணு முதலான தேவர்கள் கண்டுகளிக்கவும். உலகம் உவப் பவும் குமரக்கடவுள் இந்திரன் மகளாம் தேவகுஞ் சரியை இக்குன்றில் திருமணம் புரிந்தார்; இவையும் இவைபோன்ற திருவருட் செயல்களும் இத்திருத் தலத்தின் மகிமையை அறியத்தருவன.

            இக்குன்றின் வடபால் மலையைக் குடைந்து அமைந் துள்ள கோயிலில் மூல மூர்த்தியாகிய குமரக்கடவுள் ஞானஒளிகாலும் வேலைத் தமது கையில் தாங்கி தேவ சேனா தேவியுடன் எழுந்தருளி அடியார்க்கருள்புரியும் காட்சியும்; கீழ்த்திசையில் தொட்டதும் பாவங்களைப் போக்கும் சரவணப்பொய்கையும்; தென்பால் உமை யாண்டார் கோயிலும்; மேல்திசையில் பஞ்சபாண்ட வர் குகையும் மலை உச்சிக்குச் செல்லும் வழியும்; மலை உச்சியில் காசி விசுவநாதர் ஆலயமும், காசி நீர்ச் சுனைத் தீர்த்தமும் இத்தலத்திற் சிறப்பாகத் தரிசிக்கவுள்ளன.

            சரவணப்பொய்கைக்கு அருகிலுள்ள பஞ்சாட்சரப் பாறையிலிருந்து நக்கீரர் சிவபூசை செய்து தவமியற்றினார் என்பதை நினைவூட்டுமுகமாக இவ்விடத்தில் அமைந்துள்ள நக்கீரர் கோயிலையும், நக்கீரர் தவவலி மையை உலகறியச் செய்யுமுகமாக சுப்பிரமணியப் பெருமான் தம் கைவேலால் தென்பரங்குன்று மலைப் பாறை பிளந்த சுவட்டையும் இன்றுங் காணலாம்.

            சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், அருணகிரிநாதர் முதலான மெய்யடியார்கள் பாடிய திருவருட்பாடல் களும், திருப்பரங்கிரிப் புராணமும் இத்தலமகிமையை என்றும் விளங்கச் செய்கின்றன.

இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

திருச்செந்தூர்
           திருச்செந்தூர்


           திருநெல்வேலிக்குக் கிழக்கே சுமார் நாற்பது மைல் தூரத்தில் “திருச்சீரலைவாய்” இருக்கின்றது. இத்தலத்தைத் தமிழ் ஈழக்குடாக்கடல் அலைகள் ஓயாது தழுவிக் கொண்டிருக்கின்றன. இதுவே திருச்செந்தூர். இரண் டாம்படை வீடு.

            அலைகள் தழுவும் இப்பதியை நக்கீரர், திருமுரு காற்றுப் படையில் “உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீர் அலைவாய்” என விதந்து கூறியுள்ளார்.

            ”பருமணி வயிரமுத்தம் பலவளம் பிறவும் ஆழித்

             திரைஎறி அலைவாய் ஆகும் செந்திமா நகரம்”

என, கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளும் சிறப்பித்துச் சொல்லியுள்ளார்.

            தேவர்களைத் துன்பக்கடலிலாழ்த்திய சூரபத்மனுடன் பாலசுப்பிரமணியப்பெருமான் போருக்கு எழுந்தருளிவரும் போதுவழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும்கிரௌஞ்ச மலையையும் அழித்துத்திருச்செந்தூரையடைந்து இங்கு விஸ்வகர்மாவினால் வகுக்கப்பட்ட ஆலயத்தில் எழுந்தரு ளினார். இங்கு தேவகுருவாகிய வியாழபகவான் சுப்பிர மணியப்பெருமானுக்குப்பூசைசெய்து பூசித்தார். திருச்செந்தூரில் சுப்பிரமணியப் பெருமான் தங்கியிருந்து அசுரர்களின் வரலாறுகளையெல்லாம் கேட்டறிந்து, சூரனை யுந் துணைவரையும் நல்வழிப்படுத்தி ஆட்கொள விரும் பினார். இதற்காக வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூதனுப்பி அறிவுரைகளை வழங்கச்செய்தார். அறிவுரை களின் ஆற்றலை அறியாத சூரபத்மன் ஆணவ முனைப்பின் வழியே சென்று கொண்டிருந்தான். இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமையைச் செய்யக்குமாரக் கடவுள் திருச்செந்தூரிலிருந்து போருக்குப் புறப்பட்டு வெற்றி ஈட்டி மீண்டும் திருச்செந்தூர் வந்து தங்கினார் என்பது புராணவரலாறு.

            போரில் மாமரமாய் நின்ற சூரபத்மன் பிளவுபட்ட டம் மாப்பாடு இது திருச்செந்தூரிலிருந்து ஆறுமைல் தூரத்தில் கடற்கரையோரமாகவுள்ளது. இந்த இடத் தில் இன்றும் மாமரங்கள் வளர்வதில்லை எனக் கூறுகின்றர்கள்.

            சூரசங்காரம் முடிந்ததும் சுப்பிரமணியப் பெருமான் இப்பதியில் எழுந்தருளி சிவபூசை செய்தார். சிவபூசைக் கான தீர்த்தத்தை தமது கைவேலினால் தோற் தார். இதுவே ஸ்கந்தபுஷ்கரணி தீர்த்தம். பொழுது நாழிக்கிணறு என்னும் பெயருடன் விளங்கு கின்றது. இங்கு எழுந்தருளியுள்ள மூல மூர்த்தியாகிய பாலசுப்பிரமணியர் அபயம், வரதம், உருத்திராக்கம். புஷ்பம் விளங்கும் திருக்கரங்களுடன், சிவபூசை செய்யும் தியானத் திருக்கோலத்தி லெழுந்தருளியிருந்து அடியார் களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோலம் இத் தலத்திற்கே உரித்தான தனித்திருக்கோலமாக விளங்குகின்றது.

            அடியார்க்கெளியவராகிய சுப்பிரமணியப் பெருமான் ஆறுமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் கெந் திலில் எழுந்தருளியுள்ள புதுமையை – மெய்ம்மையை அறிந்து அனுபவித்த நக்கீரர் ஆறுமுகங்களிலும் பொலிந்துள்ள முருகனது அருட்கருணையை இப்படிச்சொல்லி எம்மையும் முருகனிடத்து அழைத்துச் செல்கின்றார்.

மா ருள் ஞாலம் மறு இன்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்துனிது ஒழுகிக்

காதலின் உவந்த வரம்கொடுத்தன்றே, ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ அ

ந்தணர் வேள்விஓர்க் கும்மே ஒருமுகம்

எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்

திங்கள் போலத் திசைவிளக்கும்மே, ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்

கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே, (ஒருமுகம் )

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே”

-திருமுருகாற்றுப்படை

 

மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி)

பழனி
             பழனி


            திருமகள், காமதேனு. ரியன், பூமாதேவி, அக்கினிதேவன் முதலானோர் முருகப்பெருமானை நினைத்து தவஞ்செய்த இடம் (திரு இனன்குடி) திருவாவினன்குடி. இது பழநி முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு.

            பழநிமலை அடிவாரத்தில் திருவாவினன்குடி ஆலய மும் இதன் வடகீழ்ப் பகுதியில் சரவணப் பொய்கை யும் இருக்கின்றன. சிவகிரியான பழநிமலை உச்சியில் ஞான தண்டாயுதபாணி எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிகின்றார். சுமார் நானூற்றைம்பது அடி உயர மான சிவகிரியென்னும் பழநிமலை உச்சியில் தண்டா யுதபாணியாக முருகப்பெருமான் எழுந்தருளிக் காட்சி தருகின்றார். தண்டாயுதபாணியாகவிருந்தருள் புரி யும் முருகன் திருக்கோலத்தைப் பழநிப் புராணத்தி லுள்ள கீழ்க்காணும் பாடலால் அறிந்து சிந்தை செய்வோம்.


“ஆரநூபுர வடியு முடிமிசை யொண்மீக் குடுமியழகுந்தண்டு

சேரவோர் கரனுமொக்கல் சேர்த்தியதோர் கரனுமெழில் – சிறக்க மென்றார்ப்

பாரணாதிபர் விபுதர் பரவு சிவகிரிவருபச் சிமத்துவாரச்

சேரர்கோ னாலயத்தினின்றிலகு பரஞ்சுடரைச் சிந்தை – செய்வாம்.’

            பழநிமலையைச் சுற்றிப் பிரகாரம் அமைந்துள்ளது. முருகனை வேண்டி இங்கு வரும் அடியார்கள் கிரிப்பிர தக்ஷிணம் செய்வதிலும் தவறார்.

            ஆண்டிக் கோலத்தில் எழுந்தருளிக் காட்சி தரும் முருகப்பெருமானைத் தரிசனம்செய்ய அடியார்கள் மலை உச்சிக்கு நடந்தும் மின்சார இழுவை வண்டியிலும் செல்வார்கள். திருத்தொண்டு செய்யும் யானை செல் லும் ஒருவழிப் பாதையும் ம்மலையில் உண்டு. நடந்து செல்லுமடியார்கள் தங்கிச் செல்ல மடமும் தாகசாந்தி செய்யத் தண்ணீர்ச்சாலைப் பந்தர்களும் உண்டு.

            மலைமீது ஏறிச் செல்பவர்கள் முதலில் இடும்பன் சந்நிதியைத் தரிசித்தே மேல் செல்வார்கள். இந்த இடும்பனே முதலில் காவடி கட்டி வந்து முருகப்பெரு மானின் திருவருள் பெற்றதாகவும், அன்று முதலே அடியார்கள் முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்டு அருள் பெருக்கும் வழக்கம் ஏற்பட்டதாக வும் நம்பிக்கை நிலவி வருகின்றது.

            மலையின் அடிவாரத்தில் இருக்கும் பெரிய கோயில் திருவாவினன்குடி எனப்படும் படைவீடு. பழநிக்குச் செல்லும் அடியார்கள் அடிவாரத்தில் காட்சிதரும் கந்தனையும் மலைமேல் காட்சி கொடுக்கும் பழநியாண் டவரையும் தரிசித்து நல்லருள் பெறுவார்கள்.

 

நான்காம் படைவீடு : திருவேரகம் (சுவாமிமலை)

சுவாமி-மலை
            சுவாமி-மலை


           முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்கா வது படைவீடு சுவாமிமலை. இதுவே திருவேரகம், அருணகிரிநாத சுவாமிகள் தாம் அருளிய திருப்புகழில்

“ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு

வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ

ராஜத லக்ஷண லக்ஷமி பெற்றருள் பெருமாளே”    

            எனக்கூறி, அற்புதமிக்க திருவேரகமே சுவாமிமலை என் பதைத் தெளிவு பெறச் செய்துள்ளார்கள். இத்திருப்பதி கும்பகோணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கின்றது.

            முருகப்பெருமான் கயிலையங்கிரியில் நவவீரர் முத லானவர்களுடன் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந் தார். அப்பொழுது அங்கு வந்த தேவர்கள் அனைவரும் முருகனை வணங்கிச் சென்றனர். பிரமா முருகப் பெரு மானை இளையோன் என எண்ணி வணங்காது சென்றார். பிரமாவின் செருக்கை அடக்கத் திருவுளங்கெண்ட முரு கப் பெருமான், வீரவாகு தேவர் மூலம் பிரமாவை அழைத்து வேதம் ஓதும்படி பிரமாவைப் பணித்தார்: பிரமாவும் “ஓம்” எனக்கூறிவேதத்தை ஓதத்தொடங்கி னார். முருகப்பெருமான் பிரமா வேதம் ஒது தலை நிறுத்தி முதற்கூறிய “ஓம்” என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்படி கட்டளையிட்டார். பிரணவமந்திர சொரூபி யாகிய சுந்தவேளே பொருளைக் கேட்டார் என்பதை எண்ணித் திகைத்து நின்றார் பிரமா. படைப்புத் தொழி லைச் செய்யும் பிரமா “ஓம்” என்பதன் பொருளை அறி யாதிருத்தல் தவறெனக் கூறி, நான்கு தலைகளிலும் குட் டிச் சிறையிலிட்டார். பின்னர் தேவர்கள் படைப்புத் தொழில் செய்ய பிரமாவை அனுமதிக்குமாறு சிவபெரு மானை வேண்டினர். சிவபெருமான் பிரமாவை சிறை நீக்கஞ் செய்ய எண்ணினார். இதை அறிந்த முருகப் பெருமானும் பிரமாவைச் சிறையிலிருந்து விட்டார்.

            பிரமா அறியமுடியாத பிரணவத்தின் பொருளை கந்தவேள் அறிந்துள்ளதால் இதனைத் தனக்கு உபதேசிக் கும்படி சிவபெருமான் முருகனை வேண்டினார். முருகப் பெருமான் குருமூர்த்தியாகத் தந்தையின் மடி மீதெ ழுந்தருளி, சிவபெருமான் திருச்செவியில் பிரணவப் பொருளை உபதேசித்துக் குருநாதன், சுவாமிநாதன் என் னும் திருநாமங்களைப் பெற்றார்.

            சிவபெருமானுக்குக் குருமூர்த்தியாக இருந்து பிரண வப் பொருள் உபதேசித்த இடம் காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள சுவாமிமலையாகிய திருவேரகம் என்னும் இத்திருப்பதியே. தை அருணகிரிநாதர்

குருவா யரற்கு மூபதேசம் வைத்த

குகனே குறத்தி – மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து

குடகா விரிக்கு – வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமக்கொர்

சிறுவா கரிக்கு – மிளையோனே

திருமால் தனக்கு மருநா வரக்கர்

சிரமே துணித்த – பெருமாளே

            என விதந்து கூறி மகிழ்கின்றார். சுவாமி மலைமேல் எழுந்தருளிய முருகனை வழிபடச் செல்லும் அடியார்கள் அறுபது படிகளில் ஏறிச் சுவாமி சந்நிதானத்தை அடைவர். படி ஏறத் தொடங்கும் போது முதற்படியில் தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபாடாற்றிய பின்னர் ஏனைய படிகள் வழி ஏறிச் செல்வர். இது பண்டைநாள் வழக்கு. கந்த புராண நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பல சித்திரங்களை இங்கு சுவர்களில் காணலாம். தினமும் இப்பதிக்குப் பெருந்திரளான அடியார்கள் வந்து சுவாமிநாதப் பெரு மானான முருகனை வணங்கி நல்லருள் பெறுகின்றார்கள்.


ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்)

திருத்தணி
         திருத்தணி


            மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலப்பகுதி: வளம் நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியை முருகப் பெருமான் விரும்பியுறையும் ஐந்தாம்படை வீடாகக் கொண்டருளினார். ஆறுமுகப் பெருமான் குன்றுகள் தோறும் சென்று விளையாடுவதற்கான உட்பொருள் ஆன்மாக்களின் உய்யுநெறிக்கு வழிகாட்டலேயாகும். உலக அமைப்பையும் தோற்றத்தையும் ஆழ நோக்குவார்க்குக் “கல்தோன்றி மண் தோன்றாக் காலம்” என்ற முதுமொழி உலகில் மலையே முதலில் தோன்றியதாக நினைவுறுத்தும். முதற் பொருளான முருகப் பெருமானும் உலகில் முதற் தோற்றுவித்த மலைகளில் சென்று விளையாடி ஆன்மாக்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாணிக்கவாசகரும் மலைமேல் இறை வனை நினைந்து ‘ஆராத இன்பம் அருளுமலை போற்றி” என உள்ளம் உருகிப் பாடுகின்றார்.

            குன்றுதோறாடலில் மலை, ஆற்றங்கரை, சோலை, காடு, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, மரத்தடி முதலான எல்லா இடங்களிலும் அமைந்துள்ள முருகப் பெருமான் திருக்கோயில்கள் யாவும் இடம்பெறும் என்பர். குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் அருண கிரிநாதர் திருப்புகழில் பல திருப்பதிகளைப் பாடியுள் ளார்; இவற்றுள் தமிழ் நாட்டிலுள்ள திருத்தணி, வயலூர், சுருளிமலை, இளஞ்சி, குன்றக்குடி, விராலி மலை. ஈழநாட்டிலுள்ள கதிர்காமம் முதலான திருப் பதிகள் விசேடமானவை,

            இலங்கையின் தென்கீழ்த் திசையில் கதிர்காமத் திருப்பதி உளது. ஈழநாட்டிலுள்ள காலத்தால் முற் பட்ட முருகனாலயங்களுள் இதுவும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டளவில் இராசசிங்கன் என்னும் அரசன் இத் தலம் கட்டுவதற்கு உதவியாயிருந்தான் எனச் சரித் திரக்காரர் கூறுகின்றார்கள்.

            கந்தகழி என்னும் திருநாமத்தைப் பெற்ற முருகன் பெயருக்கேற்ற தன்மையில் கதிர்காமத்தில் விக்கிரக மில்லாமலும், வேறு உருவமில்லாமலும், வேறெவ் வித சின்னமாக இல்லாமல் அருவாய் நிற்கும் நிலையில் வணங்கப்படுகின்றான். இதனாலேயே இலங்கை, இந் தியா யா ஆகிய இடங்களிலுள்ள முருகன் ஆலயங்களுள் கதிர்காமம்
தனித்தன்மை பெற்று விளங்குகின்றது.

 அதிருங் கழல்ப ணிந்து – னடியேனுன்

அபயம் புகுவ தென்று – நிலைகாண

இதயந் தனிலி ருந்து – க்கிருபையாகி

இடர்சங் கைகள்க லங்க – அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி – நடமாடும்

பதியெங் கிலுமி ருந்து – லுமைபாலா

இறைவன் தனது பங்கி – விளையாடிப்

பலகுன் றிலும மர்ந்த – பெருமாளே


            இவ்வாறு பல குன்றுகளிலுமமர்ந்த குமரப் பெரு மானின் திருவருளால் நாமும் குன்றத பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவோம் என்பதை வலியுறுத்தி அருணகிரிநாத சுவாமிகளும் பாடித் துதிக்கின்றார்.


ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

பழமுதிர்ச்சோலை
         பழமுதிர்ச்சோலை


           முதிர்ந்த பழங்களை எந்நாளும் உடமையாகக் கொண்டுள்ளது பழமுதிர்சோலை. பல அறிஞர்கள் திருமாவிருஞ்சோலை எனப்படும் அழகர்கோயில்தான் பழமுதிர்சோலை என்று கூறுகின்றனர். இங்குள்ள மலை அழகர்மலை. இம்மலையில் ஊற்றெடுத்து வருகின்ற ஆறு. சிலம்பாறு. இத்திருத்தலம் மதுரைக்கு வடக்கே பன் னிரண்டு மைல் தூரத்தில் இருக்கின்றது. ஆறாவது படை வீடாகிய பழமுதிர்சோலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் முருகப்பெருமானை நக்கீரர் ” பழமுதிர்சோலை மலை கிழவோனே” என வாழ்த்தி வளம் பெற்றார்.


            ஒளவையார் ஒருமுறை மதுரை செல்லும்போது பழமுதிர்சோலை வழியாகச் சென்றார் என்றும். தமிழ்க் கடவுளரான முருகப்பெருமான் தமிழ்த் தாயா ரான ஓவைப் பிராட்டியார் மூலம் உலகு உய்ய உயர் வான நெறியைப் போதிக்க விரும்பி, மாட்டுக்காரச் சிறுவன் வேடந்தாங்கி ஔவையார் செல்லும் வழியி லுள்ள நாவல் மரத்திலிருந்து பழங்களை உதிர்த்தபோது, ஒளவையார் பொறுக்கி எடுத்து மண் ஊதி உண்ண முயன்றார். அப்பொழுது சிறுவன் ஒளவையாரைப் பார்த்து பாட்டி பழம் சுடும் நன்றாக ஊதி ஆறியபின் உண்ணுங்கள் என்றான். ஔவையார் சிறுவன் மதிநுட் பத்தை விதந்து, தனது அறிவுக் குறைவை எண்ணி வருந்தினார். வருந்திய ஔவையார் முன் சிறுவனான முருகக்கடவுள் காட்சி கொடுத்து, ஒளவையாரிடம் இவ்வுலகத்தில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? என்னும் வினாக்களை வினாவி, தம் அருள் வழி ஒளவையார் விடை கூறவைத்தார் என்பது வரலாறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here