மீமெய்ம்மையியல் (Surrealism)

மீமெய்ம்மையியல் என்றால் என்ன? (What is means surrealism )

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இக்கால கட்டம் வரை வளர்ந்து வந்துள்ள இலக்கிய இயக்கங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று மீமெய்ம்மையியல் (சர்ரியலிசம்) ஆகும். 1924-2 ஆண்டு ஆன்றிபிரெட்டன் (Andre Breton) என்பவர் இவ்வியக்கத்தின் தன்மை குறித்தும் இவ்வியக்கத்தினர் மேற்கொள்ளும் சிலநெறிகள் குறித்தும் ஓர் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டார். அவர் கருத்துப்படி, பேசும் அல்லது எழுதும் மொழியாலோ, அல்லது வேறுவகையாலோ உள்ளத்தின் அடித்தளத்தில் இயல்பாக ஊற்றெடுத்துப் பொங்கிவரும் சிந்தனை அல்லது உணர்ச்சிக்கோவையினை ஒளிவுமறைவின்றி உள்ளத்தில் எழுந்த வண்ணமே வடித்துக்காட்டுவது ‘சர்ரியலிசமாகும்” என்கிறார்.

இவ்வியக்கத்தின் வாயிலாகக் கலையுலகில் மனித மனத்திற்குப் புதியதொரு விடுதலையளிக்கும் திசைநோக்கி ஒரு புரட்சியை உருவாக்க முடியுமென்று அவர் நம்பினார். சர்ரியலிச இயக்கத்தின் வாயிலாக உள்ளார்ந்த உணர்வு நிலையின் உண்மை நடப்பினைப் புறவுலக நடப்போடு இயைய வைத்துக் காட்டமுடியும் என்று நினைத்தார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கவிதை உலகில் மட்டுமன்றிக் கலையுலகிலும் இவ்வியக்கம் ஊடுருவலாயிற்று.

மீமெய்ம்மையியலின் வரலாறு ( what is surrealism history )

இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில் மலர்ந்த கலைப் படைப்புக்களிலெல்லாம் ‘சர்ரியலிசத்தின்’ தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகின்றது. சப்பான், எகிப்து, யுகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா. செர்மனி. போலந்து, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, அர்ஜைன்டைனா, மெக்ஸிகோ. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய அனைத்திலும் ‘சர்ரியலிசக் கவிஞர்களும் கலைஞர்களும் ஓவியர்களும் ‘சர்ரியலிச’ மதிப்பீட்டாளர்களும் இருந்திருக்கின்றார்கள். இந்நாடுகள் அனைத்திலும் இவ்வியக்கத்தின்படி கலைஞனும் கவிஞனும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களென்றும் ஒருவரையொருவர் எதிர்நோக்கிச் செயல்படுகின்றனர் என்றும் கருதப்பட்டு வந்தது.

1949 ஆம் ஆண்டு ‘சர்ரியலிச’ இயக்கத்தின் மிகப்பெரிய கலைக்காட்சியொன்று பாரிஸ் மாநகரில் நடைபெற்றது. இதில் 24 நாடுகள் பங்கேற்றன. இதற்குமுன் 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்ரியலிச உலகக் கண்காட்சியில் 18 நாடுகள் பங்கேற்றிருந்தன. அந்நாடுகள் சர்ரியலிச இயக்கத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகளையும் கலைப்பொருட்களையும் கலைப்படைப்புகளையும் அப்பொருட்காட்சிக்கு அனுப்பியிருந்தன. இவ்விரண்டு பொருட்காட்சிகளாலும் ‘சர்ரியலிச’ இயக்கம் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கின்றது என்ற கருத்து நிலைநாட்டப்பட்டது.

கடந்த நாற்பதாண்டுகளாகச் ‘சர்ரியலிச’ இயக்கம் கவிதையிலும் மிக வேகமாக ஊடுருவியிருக்கின்றது. ‘கவிதை’ என்பது வெறும் முருகியல் சுவை இன்பக்கருவி மட்டுமன்று; துண்ணியல் இயற்கையறிவை அறிவதற்கு உரிய ஊற்றுக்களமும் ஆகும் என்பது உணரப்படலாயிற்று. இங்ஙனம் உணரப்பட்ட கருத்து மாற்றம் ‘சர்ரியலிச’ இயக்கத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாக எண்ணப்படுகின்றது. காதல் பற்றியும் வியப்பு வண்ணம் பற்றியும், ‘சர்ரியலார்’ கொண்ட கொள்கைகள் புதியதொரு மனோபாவத்தினை உருவாக்கப் பயன்பட்டன.

மீமெய்ம்மையியல் இயக்கத்தின் முன்னோடிகள்

சரியலிச இயக்கத்தின் முன்னோடிகளுள் பெரும்பாலோர் பிரான்சு நாட்டில் தோன்றினர். லூயிஸ் அரகன்- (Louis Aragon), அன்டோனின் ஆர்டாட் (Antonin Artaud) ஆன்றி பிரெட்டன் (Andre Breton), ஆமி சிசரே (Aime Cesaire), ரேனி சார் (Rane Char), ரேனி கிரீவல் (Rane Crevel), ராபர்ட் டெஸ்தாஸ் (Robert Desnos), பால்எலார்டு (Paul Eluard), ஜுலியன் கிராக் (Julien Gracq) மைகல் லெய்ரிஸ் (Michel Leiris), பெஞ்சமின் பேரட் (Benjamin Peret), பிரான்ஸிஸ் பிகாபியா (Francis Picabia), ரேமாண்ட் குயினியா (Raymond Qucneau) பிலிப் சோபால்ட் (Phillippe Soupault), டிரஸ்டன் ஜாரா (Tristan Tzara), ரிம்பாடு (Rimbard) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மீமெய்ம்மையியலின் போக்குகள்

கவிதையைப் பொறுத்தமட்டில் ‘சர்ரியலிசம்’ என்பது பொறிகளால் காணும் உலகத்தைக் கவிஞன் மிகவும் தெளிவாகக் கண்டு கொள்வதற்குரிய ஓர் அறிவுக்கருவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் வாழ்க்கையின் முக்கிய சிக்கல்களைத் தீர்க்கவும் மனித வாழ்வின் அமைப்புக்களை மாற்றியமைக்கவும் புரட்சிசெய்யத் தொடங்குகிறான். இம்முறையில் முனையும் கவிஞன். படைப்பில் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற யாப்புவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய விதியில்லை. புதிய விதிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமுமில்லை.

சர்ரியலிசக் கவிதையின் முக்கிய பொருள்கள்

            காதல், புரட்சி, வியப்பு, உரிமையுணர்வு, மனித ஆசையின் விசுவரூபம், உலகத்தை நையாண்டி செய்தல், அடிமனச் சிந்தனை உலகைக் காட்டல், கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி, மனமயக்கங்களைப் பற்றிய அறிவு, அடிமனத் தூண்டுதல்களால் இயல்பாக எழுதும்முறை ஆகியவை ‘சர்ரியலிச’ எழுத்தாளர்களால் உண்மை அறிவு வாயில்களாகப் போற்றப்படுகின்றன. உறக்கநிலைக்கும் விழிப்புநிலைக்கும் உரிய விளக்கங்களுக்கும் அவ்விளக்கங்களின் நுண்ணிய பகுப்பு முறைகளுக்கும் ‘சர்ரியலிச’ எழுத்தாளர்கள் மதிப்புக் கொடுக்கின்றனர். முருகியல் நினைப்புக்களினின்றும் பகுத்தறிவியல் கட்டுப்பாட்டினின்றும் விடுபட்டுச் சுயமாக எழுதும் எழுத்தானது உள்மனத்தின் இயக்கத்தைப் புலப்படுத்துகின்றது. ‘சர்ரியலிச’ புரட்சி என்பது தருக்கத்தையும் சமுதாய நடைமுறையையும் எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் மரபு வழிப்பட்ட விதிமுறைகளையும் எதிர்த்து நடப்பதாகும்.

‘சர்ரியலிசம்’ என்பது கவிதையோடு மட்டும் தொடர்புடையதன்று; நாடகம் நாவல், திரைப்படம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றோடும் தொடர்பு உடையதாகும்.  சர்ரியலிசு எழுத்தாளர் மனத்தில் தோன்றும் காட்சிகளையோ உணர்ச்சிகளையோ, தோன்றிய அவ்வண்ணத்திலேயே எழுதித்தீர்த்து விடுவது ஒன்றே தங்கட்கு உகந்தது என எண்ணுகின்றனர். அங்ஙனம் எழுதுவதன் வாயிலாக அறிவியக்கம், தருக்கம் (Logic) ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிநின்று உரிமையோடு கலையுலகில் தங்கட்குரிய பணியினைச் செய்து முடிப்பதாக அவர்கள் உணருகின்றார்கள். மனம் எப்படிச் செல்கின்றதோ அப்படி எழுதுவதே அவர்களின் நோக்கமாகும். சுருங்கச் சொல்லின், மனத்தின் வழியே சர்ரியலிசக் கவிஞனின் கலைஞனின் வழியாகும்.

பிரெட்டன் என்பவர் சர்ரியலிச கவிதைகளை பின்வருமாறு எழுதுகிறார்.  “வசதியாக ஓரிடத்தில் உட்கார்த்து கொள்ளுங்கள்; மனக் காட்சிகளை உணரும் மனோநிலையில் இருங்கள். உங்கள் புத்திசாலித்தனம் திறமை எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இலக்கியம் என்பது எல்லாவற்றிற்கும் இழுத்துக் கொண்டு போகும் சோக மிகுபாதை என்று சொல்லிக் கொள்ளுங்கள்; வேகமாக எழுதுங்கள்; எதைப்பற்றி எழுதுகிறோமென்று முன்யோசியாமலேயே எழுதுங்கள்; என்ன எழுதியிருக்கிறோம் என்று திரும்பப் படிக்கும் ஆசையின்றி எழுதுங்கள்.  முதல் வாக்கியம் தானாக வந்துவிடும். அடுத்த வாக்கியம் என்னவென்று முடிவு செய்வது கடினந்தான். ஆனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப் படக்கூடாது. நீங்கள் விரும்புகிற வரையிலும் எழுதிக் கொண்டேயிருங்கள். முணுமுணுப்பை நீங்கள் நம்பலாம். நீங்கள் ஏதோ செய்து விட்டீர்களென்று மௌனம் உங்களை ஆட்கொள்ளும்போது அடுத்த வார்த்தையை நீங்கள் எழுதுங்கள்.  வார்த்தைகளின் அர்த்தங்களில் சந்தேகம் வரும் போது ஏதேனும் ஓர் எழுத்தினை எழுதுங்கள். உதாரணமாக I என்ற எழுத்தினை எழுதுங்கள். அந்த எழுத்தை முதல் எழுத்தாக வைத்து அடுத்த வார்த்தையை உருவாக்குங்கள்.

‘ஹிஸ்ட்டீரியா நோய்’ சர்ரியலாரின் கவனத்தை மிகவும் ஈர்த்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கவிதைக் கண்டு பிடிப்பென்று பிரெட்டனும் ஆரகனும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, இந்நோயினால் பாதிக்கப்படும் ஒருவரின் மனநிலை சாதாரண மனிதர் ஒருவரின் மனநிலையை விட உயர்ந்ததாகும். ‘ஹிஸ்ட்டீரியா’ ஒரு நோய் என்று காணாமல், “மனிதனுக்கும் அவனை அடிமைப்படுத்த நினைக்கும் தருமநெறிகளுக்குமிடையே உள்ள தொடர்பு தூண்டப்படும் போது பிறக்கும் மனநிலை என்று கண்டனர். அவ்வாறே தற்செயலாக நடந்துவிடும் நிகழ்ச்சிகளுக்கும் ‘சர்ரியலார்’ மிக்க மதிப்புக் கொடுத்தனர். புறவுலகம் போலவே அகவுலகமும் சர்ரியலார்களுக்கு மிகமிக முக்கியமானது. ‘அசுவுலகு புறவுலகு, நனவுவகு கனவுலகு, நனவு நிலை – தனவற்றநிலை, சாதாரண மனிதனின் மனோநிலை அசாதாரண மனிதனின் மனோநிலை ஆகியவற்றில் உள்ள இரண்டு எல்லைக்கோடுகளையும் மனிதன் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கையின் முழுமையான யதார்த்தம், கண்ணுக்குத் தெரிவதைவிட மிகையான யதார்த்தம் – சர்ரியலிசம் சர்ரியலிச சிந்தனையாளனுக்குப் பிடிபடுகின்றது.

”சர்ரியலிச’ மென்பது அமைதியின்றி ஓயாது அலைகின்ற மனிதமனக் கூக்குரலின் பண்ணாக ஒலிக்கின்றது. மனித மனத்திற்கு அமைதி இங்கு மில்லை; அங்குமில்லை; எங்குமில்லை; ஆயினும் மனத்தின் அடித்தளத்தில் மாளாது அடித்துக் கொண்டேயிருக்கும் உணர்ச்சி அலையின் ஊடாக இழைந்தோடும் ஒரு சோகதேகத்தைத் தணித்து இதயத்தின் வேதனைக்குத் தீர்வு காண்பதற்கும் ‘சர்ரியலிசம்’ முயலுகிறது.  மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ வகையான தொடர்புகளைக் கட்டறுத்து மனிதனை விடுதலை வானில் பறக்கச்செய்ய முயலுகிறது. உலக வாழ்வில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத மரணம் பற்றியும், நிலையாமை பற்றியும் கவலையின்றி ஆராய முற்படுகின்றது. 

மனிதனின் உயிர் வாழ்வோடு ஒட்டி உறவாடும் இயற்கையான உணர்வினின்றும் ஊற்றெடுத்துப் பிலிற்றும் இன்ப உணர்வு, உள்மனத்தின் தூண்டுதல், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களைக் குறித்து மனித மனம் எண்ணும்போது எழும் ஒருவகை அவலக்குரல் ஆகியவை சர்ரியலிசவாதிகளால் பெரிதும் போற்றப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது, மனித ஆசை நிறைவேறுவதற்குரிய வழியில் கிடக்கும் தடைக்கற்கள் தகர்த்தபட வேண்டும் எனச் சர்ரியலார் கருதுகின்றனர்.  அந்தத் தடைக்கல் பெரும்பாலும் சமுதாயமாக கண்டிப்பாக இருக்கக் கூடும்.  இரக்கப்படாமல் மாற்றியே தீர வேண்டுமென்பது சர்ரியலாக கொண்டுள்ள திண்மையான எண்ணமாகும்.

மீமெய்ம்மை இயலின் தனிச் சிறப்பு

‘சர்ரியலிசம்’ என்பது சமயமும் அன்று; அரசியலும் அன்று; அறிவு என்பது இதுவரைக்கும் கொண்டிராதிருந்த ஒரு புதியகோலத்தை, சாதாரணமாக நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒருகோலத்தைத் தாங்கி வருவது என்று சர்ரியலிச ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பகுத்தறிவுப்பார்வையில் மட்டுமே உலகத்தைக் காண்பது என்பது சர்ரியலிசத்திற்கு உடன்பாடன்று. இன்றுள்ள சமுதாய நடப்பினால் பயன் இல்லையெனில் அந்நடப்புக்குப் பதிலாகப் புதியதொரு சமுதாய நடப்பினை உருவாக்கிப் பயன்காண இக்கொள்கையினர் விழைகின்றனர்.

சிலர் ‘சர்ரியலிசம்’ என்பதைக் கடவுள் இல்லாத அருளியல் நெறியாகக் கொள்வதாகவும் தெரிகின்றது. ஆனால் உலகத்தை மாற்றவேண்டுமென்று எண்ணுகின்ற ஒருவனது தணியாத தாகத்தினைச் சர்ரியலிசம் வெளிப்படுத்துகின்றது; தணிக்கவும் செய்கின்றது. மனித மனமானது அடைகின்ற ஒரு குறுப்பிட்ட மகோன்னதமான மனோபாவத்தை – இறப்பும் பிறப்பும் உண்மையும் கற்பனையும் இறந்த காலமும் நிகழ் காலமும் இல்லாதொழிந்து முரண்பாடு நீங்கி முருகியெழும் ஒருவகைப் புதிய மனோபாவத்தைச் ‘சர்ரியலிசம்’ குறிக்கின்றது. இதுவரைக்கும் வாழாத-வாழ்ந்து மனிதனை உருவாக்கிக் கண்டு காட்டாத புதியதொரு உண்மையாக நேசித்து இன்புறுவதாகிய ஒருபுரட்சியையும் சர்ரியலிசம் செய்கின்றது.

உள்ளதை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது நிழற்படக் கலையாகும். அக்கலை போன்றதே சர்ரியலிசமாகும். சர்ரியலிச எழுத்தாளன் தான்காண்பதை ஓரளவு மெருகேற்றிக் காட்ட வேண்டு மென்பதோ, ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் பணிந்து சிறிது மாற்றிக்காட்ட வேண்டுமென்பதோ, தான்காண்பதில் உள்ள பொருளில் அல்லது காட்சியில் அல்லது மனோபாவத்திலுள்ள மாசினைத்துடைத்துக் காட்ட வேண்டும் என்பதோ அவசியமன்று. ஒருவன் தனகனவில் காண்பது போன்ற காட்சி களை சர்ரியலார் தம் கலையிலும் படைத்துக் காட்டுகின்றனர். இங்ஙனம் படைத்துக் காட்டும்போது தருக்கச்சார்பு துறக்கப்படுகிறது. ஒன்றை நடைமுறைப்படுத்திச் சோதனை செய்து பார்த்தே ஏற்றுக்கொள்வது என்ற கொள்கைக்கு இடமில்லை. அன்றியும், ஒரே பொருளின், காட்சியின் வெவ்வேறான கூறுகளை அல்லது பிரிக்கப்பட்டுத் தனித்தனியே கிடக்கும் கூறுகளைச் சர்ரியலார் மதிக்கின்றனர்.  அந்த ஒவ்வொரு கூறுக்கும் ஒருவகை முழுமை உண்டு என்று எண்ணுகின்றனர். மனித உடம்பின் ஒரு பாதியை மட்டுமே ஓவியத்தில் சர்ரியலார் தீட்டிக் காட்டி யதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. ஒரு பாதி உடம்பைக் கொண்டு முழுவுடம்பின் தன்மையை ஊகித்தறிய முடியும் என்பது அவர்களின் கருத்து. ஆயின், ஒரு பொருளை அப்படியே முழுமையாகக் கண்டாலும் சரி, அல்லது அதையே பல்வேறு கூறுகளாகப் பிரித்துக் கண்டாலும் சரி அப்பொருளை முற்றிலும் மறைத்து விடுவது நோக்கம் அன்று.

பேராசிரியர் நா. வானமாமலை புதுக்கவிதை பற்றிய தம் நூலில், சர்ரியலிசம் தோன்றிய தொடக்கம் பற்றியும் அதற்குரிய கருப் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ள செய்திகள் சர்ரியலிச இயக்கத்தின் உயிர்ப்பான சில உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன.

இதுகாறுங் கூறியவற்றால் மீ மெய்ம்மையியல் (சர்யரிலிசம்) என்ற இயக்கத்தின் போக்கினைப் பற்றியும் உயிர்ப்பான தனிஇயல்புகள் பற்றியும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இவ்வியக்கம் பற்றிய அடிப்படை உண்மைகளைப் பின்வருவாறு பகுத்துக் காணலாம்.

(1) சர்ரிலிச இயக்கம் என்பது ‘உள்மனத்தின் தடையற்ற சுயஇயக்கம்: அஃதாவது, எண்ணங்களின் செயல்முறையைச் சொல்லாய், எழுத்தால் அல்லறு வேறு முறைகளினால் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான உள்மனத்தின் தடையற்ற சுயஇயக்கம் ஆகும். அழகியல், அறிவியல் போன்ற நெறிகளைப் புறந்தள்ளிவிட்டு அறிவு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத பொழுது எழும் சிந்தனையை எழுந்த அவ்வண்ணமே எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்துவது.

(2) மனிதனின் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை சாரியலிசம் மதிக்கின்றது.

(3) கனவு, உருவெளித் தோற்றம் (hallucination) உள்மனத்தின் இயக்கம், ஹிஸ்ட்டீரியா நோய், பைத்தியக்காரத் தளம், தற்கொலை, தற்செயல் நிகழ்ச்சிகள், திடீரென நிகழும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதில் சர்ரிலிசம் முன்னே நிற்கிறது. தூங்கும்பொழுதோ தூங்குவதாக நினைத்துக்கொள்ளும் பொழுதோ மனக்கண்ணிற்குப் புலப்படும் அதிசயமான, அற்புதமான அபூதமான காட்சிகளைத் தீட்டிக்காட்டவும் சர்ரியலிசம் தயங்குவதில்லை,

(4) ஒன்றை நராய்ந்து வெளிப்படுத்தும் நிலையிலின்று மாறி ஒருவன், ‘தன்னுடைய மனதிற்குள்ளே தானே மேற்கொள்ளும் சுயமான பிரயாணத்தின்போது உணர்ந்தவற்றை அறிவியக்கத்தின் பாரிசீலனைக்கு உட்படுத்தாமல் தூய்மையாக வெளியிட வேண்டும். அப்படி வெளியிடுவதே சரியானது உண்மையானது. இவ்வாறு சர்ரியலிசவாதிகள் நம்பு கிறார்கள்.  

(5). சர்ரியலிச இயக்கத்தினர் தத்தம் கால, சமுதாய நடப்புகளில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் கேடுகளையும் நகைப்புக்குரிய செயல்முறைகளையும் அவலக் காட்சிகளையும் உள்ளபடி எடுத்துக் காட்டுகின்றனர்.

(6) சர்ரியலிச இயக்கம் தோன்றுவதற்குக் கீழ்க்காணும் உணர்வுகளின் தாக்குதல் காரணமாய் இருந்திருக்கின்றது. ‘வாழ்க்கையில் ஏமாற்றப்பட்ட சோகம்; அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாக வெறுப்பு; தன் சக்திக்கு மீறிய புறவுலக நிகழ்வுகளில் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறதே என்ற ஆற்றாமை; தன் சோகங்களுக்குக் கைகொடுக்க எந்த தேவதூதனும் இறங்கி வரவில்லையே என்ற கசப்பான யதார்த்தம்; பவித்திரமானது எனப் பாராட்டி வந்த நம் கலாச்சாரமும் நாகரிகமும் இந்தப் படுகுழிக்கா நம்மை அழைத்து வந்திருக்கின்றது என்ற பயம்.

மீமெய்ம்மை இயலும் தமிழ் இலக்கியமும்

சர்ரியலிச ஓவியம் போன்ற இயக்கம் கவிதைத்துறையிலும் சிற்பம் ஏனைய கலைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள வரலாறு ஐரோப்பிய நாடுகளிலும் மேலை நாடுகளிலும் உண்டு. ஆயின் தமிழகத்தில் அவ்வியக்கம் அரும்பி மலர்ந்த வரலாறு இல்லை. காரணம் அதற்கேற்றதொரு சமுதாயச் சூழலோ நிகழ்ச்சிப் பின்னணியோ இங்கு நீண்ட காலமாக உருவாகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிய சர்ரியலிச இயச்சுத்தின் தாக்கமும் உணர்ச்சியும் ஏனைய நாடுகளில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் அங்கு இது நடந்து முடிந்த கதை. ஆயின் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக இது தொடங்கி வளரும் கதைபோல் உள்ளது. இவ்வியக்கம் நேரடியாக இங்குப் பேசப்படவுமில்லை; இலக்கிய ஆராய்ச்சி உலகில் தனியிடத்தைப் பெற்றிடவும் இல்லை. மறைமுகமாக இலைமறை காய்போல் சர்ரியலிச இயக்கத்தின் சாயல் மிக அண்மைக் காலத் தமிழ்ப் படைப்புக்களில் சிற்சில இடங்களில் இருப்பதுபோல் தெரிகின்றது. கவிஞர் சிலருடைய படைப்புக்களைப் பயிலும் போது, நாவலாசிரியர் படைப்புக்களின் சில பகுதிகளைப் பயிலும்போது சர்ரியலிச இயக்கம் பெற்றிருந்த சில முத்திரைகளைத் தற்செயலாக நம்மால் உணரமுடிகின்றது. இன்றைய புதுக்கவிதைவாணரின் சில கவிதைகளிலும் அழுகை போன்ற சில நாவல்களிலும் சர்ரியலிச இயக்கக் கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன. இனிஒரு சான்று காண்போம்.

கோயில் என்பதும் தெய்வம் என்பதும் புனிதமானவை என்று கருதப்பட்டன. இவற்றைக் குறைகூறிப் பேசுதற்கோ இவற்றுள் குறையிருப்பினும் ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்துவதற்கோ முன்னை நாளில் பெரும்பாலான எழுத்தாளர்கள் முயன்றது இல்லை. ஆயின், இன்று தனக்கே உரிய தனித்த மனோபாவத்தோடு தனிமனிதனையும் சமுதாயத்தையும் நோக்கித் தனித்திறன் மிக்க வகையில் தனிநடையில் சில அடிப்படை உண்மைகளை மிகவும் பச்சையாக வெளிப்படுத்தும் நாவலாசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன், கோவிலைச் சுற்றியும் தெய்வத்தைச் சுற்றியும் சூழ்ந்திருக்கின்ற மனிதக்கூட்டத்தின் போலித் தனத்தைத் தம்உள்ளம் உணர்ந்தபடி, சிறிதும் ஒளிவு மறைவின்றி, உள்மனத்தின் இயக்கம் தூண்ட, பின்வருமாறு உணர்த்தி யுள்ளார்,

“மாணவர் கல்வி பயனுடையதாக மாறவேண்டும்;

தொழிலாளிக்குப் பற்றாக்குறை குறைய வேண்டும்;

நிலம் அரசாங்கத்துக்கு அல்லது மக்களுக்கு உடைமையாக வேண்டும்.

கோயில் எதிர்ப்பு எழுந்து கொண்டு இருக்கிறது;

ஏன் கொள்ளையும் நடக்கிறது.

கடவுள்மேல் மனிதன் கொண்ட கோபம் அல்ல;

அதன் சொத்து சரியாக பராமரிக்கப் படவில்லை.

நல்ல பொதுக் காரியங்களுக்கு அது பயன்படவில்லை;

பிள்ளையில்லாதவர்கள் எழுதிய சொத்து;

கொள்ளை இலாபம் அடித்தவர்கள் குவித்தசொத்து;

அதனை நாட்டுப் பிள்ளைகள் படிக்கத்

தொழில்வளம் பெருக்கப் பயன்படுத்த வேண்டும்.

இப்படியே விட்டால் கொள்ளைக்காரர்கள்

புகுந்து கொள்ளையடிப்பார்கள்;

சிலைகளைத் திருடினார்கள்;

நகைகளைத் திருடுகிறார்கள்;

வெள்ளி பொன் எல்லாம் கொள்ளை போகிறது;

அரசாங்கம் அவற்றைக் கைப்பற்றித்

தெய்வங்களை இந்தநாட்டுக் காந்திகளாக

மாற்ற வேண்டும்;

தெய்வங்களுக்கு நகை ஏன்?

பொன் வைரம் இவை

யாருடைய பிரதிநிதிகள்?

செல்வச் சீமான்களின் வாழ்க்கையைக்

கோயில் சிலைகள் மேற்கொண்டுள்ளது.

அம்மன் சந்நிதியில்

சென்று தரிசிக்கும்

வீட்டு அம்மாக்கள் தாய்மார்கள்

கண்களைப் பறிப்பது எது?

ஜெகஜ் ஜோதியாக விளங்கும்

கல்லும் பொன்னும் தானே!

இவை அணிந்தால்தான்

பெண்ணுக்கு மதிப்பு என்பதை

இந்தக் கோவில் சிலைகள் கற்றுத் தருகின்றன.

அந்த நிலை மாறிக்

கோயிலில் வெறும் சிலைகள் இடம் பெற்றால் போதும்;

செல்வக் குவிப்பு அங்கே தேவை இல்லை;

அங்கே இறைவன் இருக்கட்டும்;

இறைவி இருக்கட்டும்;

அவர்கள் நமக்கு அருள் செய்யும் திருக்காட்சி அமைந்து கிடக்கும்;

ஏனோ இப்படி என் நினைவுகள் இயங்கிக் கொண்டிருந்தன?

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here