பெண்ணியக் கோட்பாடுகள்

முன்னுரை

            உலகம் ஆண் பெண் என்னும் இருபாலராருலும் உருவாக்கப்பட்டிருக்கிறது  இரண்டும் சேர்ந்த ஒன்றே உலகம் எனப்படும்.  இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது என்பதனைச் சான்றோர் அறிவர்.  இருப்பினும் பெண் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்றும், ஆணின் கட்டுப்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் பெண்ணின் உணர்வுகளுக்குத் தடை போட்ட சூழலில் தான் பெண்ணியம் தோன்றியது.  தொடக்க காலத்தில் பெண்களுக்குச் சமூகம் பலவகையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.  கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது.  கணவணை இழந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து, காவி உடை அணியச் செய்தது.  அத்தோடு மட்டும் நில்லாமல் தனியாகப் பாய் படுக்கை, தனி வட்டில் என கொடுத்து அவர்களை தற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நிலையும் எய்தியது. இந்நிலையை மாற்ற பாரதியார், பெரியார், திரு.வி.க. போன்ற சான்றோர்கள் கைம்மை மணத்தை வலியுறுத்தினர். மேலும் பெண்களுக்கு கல்வி அவசியம் என்றும், கல்வி கற்றப் பெண்ணால் தான் தன் ககுடும்பத்தை சரிவர பராமரிக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.

பெண்ணிய திறனாய்வும், அணுகுமுறைகளும்

            சமூக எதார்த்தத்தின் மிகப் பெரிய பரப்பளவில் பெண்ணின் நிலை சமூக தத்துவார்த்த வெளியீடுகள் எளிதாக விளக்கியிருக்கின்றனர் என்பதை பெண்ணியத் திறனாய்வுகள் நம்புகின்றன.  ஏங்கெல்லாம் பெண்களின் நிலைப்பாடு விளக்கப்படவில்லையோ அங்கு அவாகளது நிலைப்பாட்டினை பாலியல் ரீதியான விளக்கம் செய்து சிதைத்திருக்கின்றனர்.  1960 – களிலிருந்து இன்றுவரை பெண்ணியம் பலரையும் பலவேறு வழிகளில் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்திருக்கிறது.  உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் தோற்றமும், வளர்ச்சியும் வெவ்வேறுபட்ட குறிக்கோள்களை உட்கொண்டதாக இருந்தது.  இந்தியாவில் பெண்கள் சதி, வரதட்சணை, உயிரோடு எரிப்பது, பால்ய விவாகம், பெண்ணைப் பாலியல் பொருளாகக் கையாளுவது, சந்தைப் பொருளாக விளம்பரங்களில் பயன்படுத்துவது,சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அடிமைத்தனம், சுரண்டல்கள் போன்றவைகளால் ஒடுக்கப்படுகின்றார்கள்.

            மற்றுமொரு நிலையில், நிலையில் ஆணாதிக்கச் சமுதாயம் பெண்ணைத் தாயாக, தாய்க் கடவுளாக உயர்வு நவிற்சி நிலையில் கூறி வந்திருக்கிறது.  இது பெண் ஆசி வழங்கக் கூடியவள், செயல்பாட்டு நிலைக்கு உட்படாதவள் என்ற கொள்கைக்கும் சாதகமாக உள்ளது.

பெண்ணியம் சொல்லாட்சி

            ‘பெண்ணியம்’ என்னும் சொல் குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைன் கூறுகின்றனர்.  ‘பெண்ணியம்’ என்னும் சொல் ஆங்கிலத்திலுள்ள ‘பெமினிசம்’ என்ற சொல்லிற்கு இணையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.  இச்சொல் ஆங்கிலத்திலிருந்து எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதனை,

            “ஆங்கிலத்தில் ‘feminism’ என்று வழங்கும் கலைச்சொல்லையே தமிழில் பெண்ணியம் என்று கூறுகிறோம்.  இந்த ஆங்கிலச்சொல் பெண்ணைக் குறிக்கும்.  இச்சொல் ‘famine’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது.  ‘பெண்’ என்னும் சொல்லுக்கு ‘பெண்ணுக்குரிய இயல்புகளை உடையவள்’ என்று பொருள்.  பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலினச் சமத்துவக் கோட்பாடுகளையும் குறிப்பிட்டு வருகின்றது.” 1 என்று கூறுகிறார் முத்துச் சிதம்பரம்.

            பெண்ணைப் பல்வேறு நிலைகளிலும் முன்னிறுத்தி அவர்களின் வழியாக சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் பெண்ணியம், பெண்ணியவாதம், பெண்னுரிமை ஏற்பு என்னும் சொற்கள் இதற்குரிய சொற்களாக வழங்கி வருகின்றன என்னும் நோக்கில் ச. முத்துச்சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம்.  மேலும் இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரேமா கூறுகையில்,

‘feminism’ என்ற ஆங்கிலச் சொல் ‘famine’ என்ற இலத்தீன் சொல்லின் திரிபு ஆகும் .  பெண் என்னும் சொல் பெண்ணுக்குரிய இயல்புகளை உடையவள் என்று கூறப்படும் போது முதலில் பெண்களின் பாலியல் பண்புகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது.  பின்பே பெண்ணின் உரிமையை பேசுவதற்காக குறிப்பிட்ப்பட்டது.”2 என்று கூறுகிறார்.  பொதுவாகப் பெண்ணியம் என்ற சொல்லாட்சியானது ஒரே வகையான கருத்தை எடுத்தியம்புவதாக உள்ளது.  ஆண் – பெண் என்னும் இருபாலரையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், பாலியல் ரீதியான கருத்துக்களை எடுத்தியம்புவதற்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது எனலாம்.

            1894 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் முதன் முறையாக இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. 

            “ பெமினிசம் என்ற சொல் பெண்ணின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது”3 என்று பொருளை தந்துள்ளதாக சி.என.;குமாரசாமி கூறியுள்ளார்.  இக்கருத்திற்கு வலுசேர்க்கம் வகையில் சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதியில்,

            feminism என்பதற்கு பெண் உரிமை ஏற்பு கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு என்று கூறியிருக்கும் பொருள் பொருத்தமுடையதாகும்.”4

            அதாவது, பெண்ணிய இயக்கம் என்பது பெண்களுக்காக போராடும் இயக்கமாகும்.  பெண்ணியத்திற்கு உலகில் உள்ளஅனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியாகவும், முக்காலத்திற்குமுரிய ஒரு விளக்கத்தை கொடுக்க இயலாது.  இதன் விளக்கம் ஒரு சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைப் பற்றிய உணர்வு நோக்கு, செயல் இவைகளைப் பொறுத்து மாறுபடும் என்று கூறுவர்.

பெண்ணியம் விளக்கம்

            உலக மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள், பெண்களது சமூக, பொருளாதார அரசியல் நிலை உலகெங்கும் ஆடவரைக் காட்டிலும் தாழ்வாகவே உள்ளது.  முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவாக இருந்தாலும், பழமைக்குமப் பழமையும், முன்னேற்றத்திற்கு முன்னேற்றமும் ஒருங்கே பெற்றிற்கும் இங்கிலாந்தாக இருந்தாலும், மக்கள் பெருக்கத்திற்கு பெயர் போன சீனாவாக இருந்தாலும், இஸ்லாமிய தேசமாக இருந்தாலும, ஜனநாயக நாடான இந்தியாவாக இருந்தாலும் இவை எல்லா இடங்களிலும் பெண்கள்pன் நிலை மட்டும் இரண்டாமிடத்ததாகவே இருந்து வருகின்றது.  இதை மாற்ற மேற்கொள்ளம் முயற்சிகளே பெண்ணியப் பிறப்பிற்கு வித்தானது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

            “சமூகத்திலும், வேலைதளத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும், இந்நிலையை மாற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளும் பெண்ணியத்தின் பரந்துபட்ட வரையறையாக இப்போதைய நிலையில் கொள்ளலாம்.”5 என்று மொலினா தேன்மொழி கூறும் கூற்று மெய்பித்துக் காட்டுவதாக உள்ளது.

            பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் நிலையினைக் கண்டு அவர்களின் சுதந்திரத்திற்காக ஆண்களும் அவர்களுடன் இணைந்து பாடுபடும் நிலை நிலவி வந்தது என்பதனை மேற்கண்ட ஆசிரியரின கூற்றின் வழியாக இறிய முடிகிறது. மேலும்,

            “பெண்ணியம் பெண்ணின் சமூகத் தகுதி நிலை குறித்து இதுவரையில் எடுத்துரைக்கப்பட்ட இலக்கியத் தரவுகளை மறுபரிசீலனை செய்யப் பெரிதும் உதவியாக இருக்கிறது.”6 என்று அரங்க மல்லிகா அவர்களின் கூற்றிலிருந்து பெண்ணின் தற்போதைய நிலை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.

            சுங்க காலத்தில் பெண் எல்லா உரிமைகளையும் பெற்றுத் திகழ்ந்தாள் என்று பழம் பெருமை பேசுபவர்கள் கருத்துரையாடுகின்றார்கள்.  ஆனால் பழைய மரபுகள் பெண்ணை அப்படியொன்றும் பெருமை படுத்தியிருக்கவில்லை.  வேதகாலம் தொட்டு ஒரு தாய், ஆண் மக்களைப் பெற்றதனாலேயே பெருமை படுத்தப்பட்டிருக்கிறாள்.  தாயாண்மைக்  காலத்தில் அவளுடைய கணவனாகிய ஆண்மகனுக்கு முதன்மையாக இருந்ததில்லை.  ஏனென்றால் ஒரு ஆண்மகனைப் பெறும் தாயானவள் அவனை நல்ல பொருப்புள்ளவனாக உருவாக்கக் கடமைபட்டிருக்கிறாள் இக்கருத்தினை வலியுறுத்தவே திரு.வி.க. ஒரு பெண் பிறவி எடுத்ததன் நோக்கமே காமத்திற்கும் அடுப்பூதுதல் போன்ற பணி செய்வதற்கும் மட்டும்; அன்று.  குழந்தைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து ஆளாக்கி சான்றோனாக்குவதே அவளின் தலையாயக் கடமையாகும்.     

            “யான் பெண்ணின் வயிற்றில் தோன்றினேன், பெண்ணுக்குள் பிறந்தேன், பெண்ணுடன் வாழ்ந்தேன், என் வாழ்விற்கு நான் தொழும் அன்பு தெய்வம் பெண்ணாகவே இருக்கிறது…”7 என்னும் கருத்து ஈண்டு நோக்கதக்கதாகும்.

பெண்ணடிமைத் தனத்தின் பரிணாமங்கள்

            இந்தியாவில் முதன்முதலில் தாய்வழிச் சமூக அமைப்பு இருந்தாலும், அது நாளடைவில் மாற்றம் பெற்று தந்தை வழிச் சமூகமாக மாற்றம் பெற்றப்பின், குடும்பம், பொருளாதாரம், அரசியல் மதம் என முதன்மையாக சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஆண்களே கையப்படுத்தி கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவு தொடங்கினர்.           

காலம் செல்லச் செல்ல பெண்ணடிமையும், ஆண்மேலாதிக்கமும் படிப்படியே தழைத்து, அவற்றின் விளைவுகள் பெண்ணின் சுரண்டல்களின் பல வடிவங்களாய்க் கிளைவிட்டு வளர ஆரம்பித்தன.இதன்விளைவாக பெண்சிசுக்கொலை, இளம் வயது திருமணம், பாலியல் கொடுமைகள், பெண்களைத் தனிமைப்படுத்துதல், கல்வி மறுப்பு, சமகூலியின்மை, கைம்மை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு இந்தியப் பெண்கள் ஆட்படுத்தப்பட்டனர்.  இவ்வாறு ஆட்படுத்தப்பட்ட பெண்களுக்கு உரிமை வழங்குவதில் அரசு காட்டும் ஈடுபாடு பற்றி வாசுகி கூறும் கருத்து ஏற்புடையது.

“ஓர் உயிரின் உரிமையை இன்னொன்று கட்டுப்படுத்தி, அதன் நன்மைகளை தான் பெற முயல்வது உரிமை பறிப்பு ஆகும்.  பேண்ணுரிமையும் அப்படிப்பட்டதே, பெண்ணுக்குரிய உரிமைகளைப் பறித்துவிட்டு அவளுக்கு எந்த அளவுக்கு உரிமை வழங்கலாம் என்று தீர்மானிக்க மாநாடுகள் கூட்டுவது முரண்பாடாக உள்ளது.”8  ஏன்று கூறுகிறார்.

            அன்றைய நாட்களிலிருந்து உலகையே புரட்டிப் போடும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்றிருந்த காலத்திலும், ஒரு பெண்ணுக்கு, வீடு, கணவன், பிள்ளைகள் என்ற நெறியே வாழ்வின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.  பேண்ணின் வாழ்க்கையில் இன்று புதிது புதிதாக முளைத்திருக்கும் சிக்கல்கள் எல்லாமே இந்த மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகின்றன.  தெய்வத்தைக் காட்டிலும் ஒரு பெண்ணுக்கு கணவன் மட்டுமே மேலானவள்.  ஆப்படிப்பட்டக் கணவனை மகிழ்வித்து, அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவனால் பெற்றிருக்கும் வாழ்வுக்கு எவ்வித பங்கமும் வராமல் வாழ்ந்து நன்றிக் கடன் செலுத்தக் கூடியவள் பெண் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.  

முடிவுரை

            பெண்ணின் சகூகத் தகுதி நிலை என்பது ஆணின் சார்பாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  கல்வி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் பெண் தனித்து நின்றும், குழுவாகச் சேர்ந்திருந்தும, பொது நிலையிலிருந்தும் ஆற்றக்கூடிய வாழ்க்கைப் பணிப்பகிர்வு ஆணின் குடும்ப முன்னேற்றம் கருதியதாக இருக்கிறது.   பெண்ணிய கோட்பாடுகள் குறித்து பல அறிஞர்கள் மொழிகின்றனர்.  பெண்ணியம் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொய்யவும் பெண்ணியம் தெளிவான விவரங்களை முன் வைக்கிறது எனலாம்.

சான்றெண் விளக்கம்

1.          ச.முத்துச்சிதம்பரம், பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்

2.          இரா.பிரேமா, பெண்ணியம் அணுகுமுறைகள்

3.          சி.என்.குமாரசாமி, பெண்ணிண நோக்கில் பாரதி

4.          MADRAS UNIVERSITY, ENGLISH TAMIL DICTIONARY

5.          மொலினாதென்மொழி(மொ.ஆ) பெண்ணியவாதம், அதன் அவசியம் குறித்த சில கேள்விகள்

6.          ஆரங்க மல்லிகா, தமிழ் இலக்கிமும், பெண்ணியமும்.

7.          திரு.வி.க, பெண்ணின் பெருமை

8.          வாசுகி, பெண்ணியம் பேசலாம் வாங்க.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி

           உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை

           செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

            ஓசூர் – 635 126

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here