புறப்பொருள் வெண்பாமாலை|பொருள் விளக்கம்|சுருக்க கையேடு

புறப்பொருள் வெண்பாமாலை – பொருள் விளக்கம்

        இந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார் ஆவார். புறப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறுவதால் இது புறப்பொருள் வெண்பாமாலை ஆயிற்று. வெண்பாக்களால் அமையப்பெற்றுள்ளது. தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் புறத்திணை இலக்கணத்தை ஏழு திணைகளாகப் பிரித்துக் கூறுவார்.  ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை பன்னிரெண்டு தினைகளாகப் பகுத்து விரிவுப்படப் பேசுகின்றது.


        பன்னிருப்படலம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்நூல் ஆசிரியர் புறப்பொருள் வெண்பாமாலையைச் செய்ததாகக் கூறுவார்கள். இந்நூலில் அமைந்துள்ள துறைகளை விளக்கும் நூற்பாக்களுக்கு ‘கொளு’ என்று அழைக்கப்படுகிறது.


தொல்காப்பியர் – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,
 பாடாண் என ஏழாக உரைப்பார்.


ஐயனாரிதனார் – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
 தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்                                    எனப்
 பத்தாகப் பகுப்பார்.
           

          போர்க்களத்தில் நடக்கும் தன்மையை, நிகழ்வை, குறிப்பை இருபக்கமும் நின்று விளக்குவதுதான் புறப்பொருள் வெண்பாமாலை. இவ்வகையான இலக்கணத்தை நேரடியாகப் பார்த்தும் அல்லது இப்படி எல்லாம் நடைபெற்று இருக்கலாம் என்று எண்ணியும் இலக்கண ஆசிரியர்கள் வரையறுத்துச் சொல்லியுள்ளது இன்றைய தலைமுறையினரை வியக்கச் செய்கிறது.


1.வெட்சிப்படலம்:


வெட்சிப்பூவைச் (குறிஞ்சி நிலத்திற்குரியது, சிவந்த நிறத்தை உடையது) சூடிய மறவர்கள் பகை நாட்டில் உள்ள மலையிலும், பிற நிலப்பகுதிகளிலும் மேய்ந்து கொண்டிருக்கின்ற ஆநிரைகளை (பசு) பிறர் அறியாதவாறு கவர்ந்து வருவர்.  இவ் ஒழுக்கத்தை வெட்சித்திணை என்பர். இது இருவகையாக நடக்கும் என்கிறார் ஆசிரியர்.


1.மன்னுறு தொழில் : அரசனின் கட்டளையை ஏற்று ஆநிரைகளைக் கவரச் செல்வது.


2.தன்னுறு தொழில் : அரசனின் ஏவலின்றி மறவர்கள் தானே பகைவர் நாட்டு ஆநிரைகளை கவர்தல்.


வெட்சித்திணை துறைகள் மொத்தம்  – 19


1.வெட்சி அரவம்: பகைவரின் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது பல்வகை இசைக்கருவிகளை முழங்கி ஆராவாரித்துச் செல்லல்.


2.விரிச்சி: தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை ஆராய்தல். நற்சொல் கேட்டல்.


3.செலவு (பயணம்): வெட்சி மறவர்கள் ஆநிரைகளை கவர பகைவர் நாட்டிற்கு செல்லுதல்.


4.வேய்(ஒற்று) : ஆநிரைப் பற்றியச் செய்திகளை ஒற்றர் ஆராய்ந்து வந்து கூறுதல்.


5.புறத்திறை: பகைவரின் மதிலைச் சுற்றி வளைத்துப் புறத்தே (வெளியே) தங்குதல்.


6.ஊர்கொலை: பகைவரின் மதிலைத் தீயிட்டு அழித்து, ஊரில் உள்ளாரைக் கொள்வது.


7.ஆகொள்: பகைவருடைய ஆக்களைக் கன்றுடன் கவர்வது.


8.பூசல்மாற்று: எதிர்த்துப் போர் செய்து, இனிப் போர் இல்லை என்று சொல்லுவது.


9.சுரத்துய்த்தல்: தம்மால் கவரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேராமல் காட்டு வழியே ஓட்டிச் செல்லுதல்.


10.தலைத்தோற்றம்: ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வெட்சித் தலைவன் முன்னே வந்து ஊரார்க்கு மகிழ்ச்சித் தோன்றும் படிச் சொல்வது.


11.தந்துநிறை: வெட்சியார் தாம் கைப்பற்றி வந்த ஆநிரைகளை ஊரின்கண் வந்து நிறுத்தியது.


12.பாதீடு: மறவர்களின் தகுதிக்கேற்ப ஆநிரைகளைப் பங்கிட்டுக் கொடுப்பது.


13.உண்டாட்டு: மறவர்கள் கள்ளினை உண்டு தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது ஆகும்.


14.கொடை: மறவர்கள் தான் பிரித்துக்கொண்ட ஆக்களைப் பிறருக்கு கொடையாகக் கொடுப்பது.


15.புலனறி சிறப்பு: சரியாக ஒற்று அறிந்தவர்களுக்கு சிறப்புச் செய்வது.


16.பிள்ளை வழக்கு: நிமித்தமாகிய சகுனம் சொன்னவர்களுக்கு ஆக்களைப் பரிசாகக் கொடுத்து சிறப்பிப்பது.


17.துடிநிலை: தொன்று தொட்டு மரபு மாறாமல் துடி கொட்பவனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்துக் கூறுவது.


18.கொற்றவை நிலை: வெற்றிக்குக் காரணமாக விளங்கும் கொற்றவைத் தெய்வத்தை வணங்குதல்.


19.வெறியாட்டு: மறக்குடி மகளிர் வேலனோடு வள்ளிக் கூத்தினை ஆடுவது ஆகும்.


2.கரந்தைப் படலம்:


கரந்தைப் பூவினைச் சூடி மாற்றார் கவர்ந்து சென்ற ஆக்களை மீட்கச் செல்வது கரந்தைத் திணை எனப்படும்.

கரந்தை திணை துறைகள் மொத்தம்  – 13


1.கரந்தை அரவம்: வெட்சி வீரர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்பதற்காக கரந்தை மறவர்கள ஓரிடத்தில் கூடுதல். அதனால் ஏற்பட்ட போர் ஓசையே ஆகும்.


2.அதரிடைச் செலவு: வெட்சி மறவர்களைப் பின்பற்றி கரந்தை மறவர்களும் பின்னால் செல்லுதல்.


3.போர்மலைதல்:வெட்சி மறவர்களோடு கரந்தை மறவர்கள் போர் புரிவது.


4.புண்ணோடு வருதல்: கரந்தை மறவர்கள் விழுப்புண்ணைத் தாங்கி வருவது.


5.போர்க்களத்து ஒழிதல்: வெட்சியாருடன் போரிட்டு கரந்தை மறவர்கள் போர்களத்தில் இறப்பது.


6.ஆளெரி பிள்ளை: தான் ஒருவனாக நின்று வெட்சி மறவர்களை வெட்டி விழ்த்திய கரந்தை வீரன் ஒருவனின் நிலையைக் கூறுவது.


7.பிள்ளைத் தெளிவு: விழுப்புண் பட்ட கரந்தை மறவன் தான் பெற்ற புண்ணைக் கண்டு மகிழ்ந்துக் கூத்தாடுவது.


8.பிள்ளைப்பாட்டு: பகை மறவனின் குடலை வேலுக்கு மாலையாக அணிந்து அவ்வேலைச் சுற்றி மறவன் ஆடுவது.


9.கையறுநிலை: தன் தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து நிற்றல்.


10.நெடுமொழி கூறல்: ஒரு வீரன் தன் ஆற்றலைத் (பெருமையை) தானே எடுத்துக் கூறுவது.


11.பிள்ளைப் பெயர்ச்சி: தீய நிமித்தங்களைப் பொருட்படுத்தாது நிரை மீட்கச் சென்றவனுடைய ஆற்றலை அரசன் சிறப்பிப்பது.


12.வேத்தியன் மலிபு: மறவர்கள் தம் அரசனைப் போற்றிக் கொண்டாடுவது ஆகும்.


13.குடிநிலை: கரந்தை மறவர்கள் தம்முடைய குடிப்பெருமையைக் கூறுவது.


3.வஞ்சிப்படலம்:


வஞ்சிப்பூவினைச் சூடி மாற்றான் மண்ணைக் கவரக் கருதி படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும்.


வஞ்சித்திணை துறைகள் மொத்தம்  – 20


1.வஞ்சி அரவம்: அணி வகுத்துச் சென்ற ஆரவார ஒலியே ஆகும்.


2.குடைநிலை: வஞ்சி அரசன் நல்ல நாளில் படையெடுப்பிற்கு முன்னால் தன்னுடைய வெண்கொற்ற குடையை எடுத்து ஊர்ச் சுற்றிச் செல்வது.


3.வாள்நிலை: நல்ல நாளில் தன்னுடைய வெற்றி வாளைப் புறவீடு விட்டது.


4.கொற்றவை நிலை: கொற்றவையின் அருளுடைமையினைப் பாராட்டி வணங்குதல் மற்றும் வஞ்சி மறவரின் போர்த்தொழிலைப் பாராட்டுதல்.


5.கொற்ற வஞ்சி: வஞ்சி அரசனின் வாள் வலிமையைச் சிறப்பித்துக் கூறுவது.


6.கொற்றவள்ளை: வஞ்சி அரசனின் வெற்றியைக் கூறி, பகை நாட்டின் அழிவிற்கு மனம் வருந்துதல்.


7.பேராண் வஞ்சி: பகைவென்ற மறவனை அரசன் பாராட்டி பரிசளித்தல், தோல்வியுற்ற பகை அரசனிடமிருந்து திறைப்பொருட்களைப் பெற்று தன் நாட்டிற்குத் திரும்புதல்.


8.மாராய வஞ்சி: அரசனால் சிறப்பிக்கப்பட்ட மறவரின் மாண்பினைக் கூறுவது.


9.நெடுமொழி வஞ்சி: வஞ்சி மறவன் பனைவர்களின் முன்னே தன்னுடைய ஆண்மையைத் தானே புகழ்ந்துக் கூறுவது.


10.முதுமொழிக் காஞ்சி: மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்துப் பாடுதல்.


11.உழபுல வஞ்சி: வஞ்சி மன்னன் பகைவர் நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துதல்.


12.மழபுல வஞ்சி: வஞ்சி மன்னன் பகைவர் நாட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்தல்.


13.கொடை வஞ்சி: தனது வெற்றியைப் பாடிய புலவர்க்கு வஞ்சியரசன் பரிசு வழங்குதல்.


14.குறவஞ்சி: வஞ்சியரசனை எதிர்த்துப் போர் செய்யும் பகையரசன் பணிந்து திறை செலுத்துவது மற்றும் போர் செய்யாமல் பகைவரை பணிய வைத்து பாசறையிலே தங்கியிருத்தல்.


15.ஒரு தனிநிலை: தன்னந் தனியாளாக நின்று பகைவரைத் தடுத்த வஞ்சி மறவனின் நிலையைக் கூறுவது.


16.தழிஞ்சி: போரில் அஞ்சி ஓடுபவர்கள் மீது படைத் தொடுக்காத தன்மையினைக் கூறுவது.


17.பாசறை நிலை: பகையரசன் பணிந்த பின்னரும் வஞ்சி அரசன் பாசறைக்கண் தங்கியிருப்பது.


18.பெருவஞ்சி: முன்பு தீயிட்டும் (உழபுலவஞ்சி) பணியாத பகை மன்னனது நாட்டின் மீது மறுமுறையும் தீயிட்டு அழிப்பது.


19.பெருஞ்சோற்று நிலை: வஞ்சி வேந்தன் தனது படை மறவர்களுக்கு மிகுந்த சோற்றைக் கொடுத்தது.


20.நல்லிசை வஞ்சி: வஞ்சி வேந்தனது வெற்றியைப் புகழ்ந்துப் பாடுதல் மற்றும் அவனால் அழிந்துப் பட்ட பகை நாட்டிற்காக வருந்திப் பாடுதல் ஆகியவையும் ஆகும்.


4.காஞ்சிப் படலம்:


தன் நாட்டைக் கவருவதற்காக பகையரசன் (வஞ்சியரசன்) படையெடுத்து வருவதை அறிந்தான் ஒரு வேந்தன். அப்படைகள் தம் நாட்டிற்குள் வராமல் தடுக்கும் பொருட்டு காஞ்சி மறவர்கள் காஞ்சிப் பூவினைச் சூடிக்கொண்டு தம் எல்லையில் நின்று தடுத்துப் போர் புரிவது காஞ்சித்திணை எனப்படும்.


காஞ்சித்திணை துறைகள் மொத்தம்  – 21


1.காஞ்சி எதிர்வு: வஞ்சி வேந்தன் படையெடுத்து வர அதனைக் கண்ட காஞ்சி வேல்மறவனின் ஆற்றலை மிகுத்துச் சொல்வது.


2.தழிஞ்சி: வஞ்சியரசனின் படை தம் நாட்டின் எல்லையைத் தொடாத படி காத்து நிற்பது.


3.படை வழக்கு: காஞ்சி வேந்தன் தன் படைமறவர்களுக்கு துணைப்படையை வழங்குவது மற்றும் படைக் கருவிகளைப் பெற்ற மறவன் தன் ஆற்றலைத் தானேப் புகழ்ந்துக் கூறுவது.


4.பெருங்காஞ்சி: காஞ்சி மறவர் போரின்கண் தமது மறப்பெருமையை வெளிப்படுத்துவது.


5.வாள் செலவு: காஞ்சி அரசன் தன் வாளைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்லுமாறுக் கூறியது.


6.குடை செலவு: காஞ்சியரசன் தன் குடையைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்ல விடுவது.


7.வஞ்சினக் காஞ்சி: காஞ்சி மன்னன் சூளுரைப்பது. உறுதிபட சினந்து கூறுதல்.


8.பூக்கோள் நிலை: மறவர்கள் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுதல்.


9.தலைக்காஞ்சி: போர்க்களத்தில் செயற்கரும் செயலைச் செய்து இறந்த மறவனின் தலையைப் பாராட்டுவது.


10.தலை மாராயம்:ஒரு பகை மறவனின் தலையைக் கொண்டு வந்த காஞ்சி மறவனுக்கு மன்னன் பெரும்பொருளைக் கொடுத்து சிறப்பிப்பது.


11.தலையோடு முடிதல்: இறந்த தலைவனின் தலையைக் கண்டு அவனுடைய மனைவி இறந்துபடுவதே ஆகும்.


12.மறக்காஞ்சி: வஞ்சி மறவர்கள் அஞ்சும்படியாகப் போர் செய்தல் மற்றும் ஒரு மறவன் தன்னுடையப் புண்ணைத் தானே கிழித்துக்கொண்டு உயிர்விடுதல்.


13.பேய்நிலை: புண்பட்டு இறந்த மறவனைப் பேய் காவல் காப்பது.


14. பேய்க்காஞ்சி: புண்பட்டுக் கிடப்பவனைப் பேய் அச்சுறுத்துவது.


15.தொட் காஞ்சி: மறவனின் புண்ணைப் பேய் தீண்டுவது.


16.தொடாக் காஞ்சி: மறவனின் புண்ணைத் தீண்டப் பேய் அஞ்சுவது.


17.மன்னைக் காஞ்சி: இறந்த மறவனின் புகழைப் பாராட்டி மனம் வருந்துவது.


18.கட்காஞ்சி: காஞ்சி வேந்தன் தன் வீரருக்குக் கள்ளினை வழங்கியது.


19.ஆஞ்சிக் காஞ்சி: கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுவது மற்றும் போரில் இறந்த கணவனுடன் மனைவியும் உயிர்விடுதல் மற்றும் கணவனை அழித்தக் கருவியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு உயிர் விடுதல்.


20.மகட்பாற் காஞ்சி: தன் மகளைக் கேட்கும் வஞ்சியரசனோடு காஞ்சியரசன் மாறுபட்டு நிற்பது.


21.முனைகடி முன்னிருப்பு: காஞ்சி வேந்தன் வஞ்சியரசனின் படையைப் புறமுதுகிட்டு ஓடச்செய்வது.


5.நொச்சிப் படலம்:  (நொச்சி – மதிலைக் காப்பது)


ஓர் அரசன் பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்றிவளைத்துக் கொள்வான். அப்போது முற்றுகையிடப்பட்ட அரசன் கோட்டைக்குள் இருந்துதன் மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு நொச்சிப்பூவினைச் சூடிக்கொண்டு போரிடுதலை நொச்சித்திணை எனப்படும்.


நொச்சித்திணை துறைகள் மொத்தம்  – 8


1.மறனுடைப் பாசி: உழிஞை மறவர்களுக்குப் புறங்கொடாமல் நொச்சி மறசர்கள் போர் செய்வது.


2.ஊர்ச்செரு: அரணுக்குப் புறத்தே உள்ள ஊரின்கண் பகைவரோடு நொச்சியார் போர் புரிவது.


3.செருவிடை வீழ்தல்: பகைவர் உள்ளே நுழைய முடியாதபடி அரணைக் காக்கப் போரிட்டு இறந்த மறவனைப் பாராட்டுவது

.
4.குதிரை மறம்: குதிரைப் படையின் மற மாண்பினைப் பாராட்டிக் கூறுவது.


5.எயிற்போர்: மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.


6.எயில்தனை அழித்தல்: எயிலைக் காக்கின்ற நொச்சி மறவர்களை பகைவர் வீழ்த்துவது.


7. அழிபடை தாங்கல்: பகைவரால் அழிந்து பட்ட காவல் படைக்கு மாறாக பிற மறவர்கள் அக்காவலில் நின்று தடுத்தல்.


8.மகள் மறுத்து மொழிதல்: மகளைக் கேட்ட பகையரசனுக்கு நொச்சி வேந்தன் பெண் கொடுக்க மறுப்பது.


6.உழிஞைப் படலம்:


பகையரசனின் கோட்டையைக் கவரக் கருதும் உழிஞை அரசன், பகைநாட்டின் காவற்காட்டையும் அகழியையும் அழித்துக் கோட்டையைக் கைப்பற்ற நினைப்பான். அதன் பொருட்டு மறவர்கள் உழிஞைப்பூவினைச் சூடி போருக்குச் செல்வது உழிஞைத் திணை எனப்படும்.


உழிஞைத்திணை துறைகள் மொத்தம்  – 28

1.குடைநாட்கோள்:உழிஞையரசன் நல்ல நாளில் தன் வெண்கொற்றக் குடையைப் போருக்கு அனுப்புவது.


2.வாள்நாட்கோள்: உழிஞையரசன் தன்னுடைய வெற்றி வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது.


3.முரச உழிஞை: பொன்னால் ஆகிய உழிஞைப் பூக்களை அணிவித்து முரசினை வழிபடுவது.


4.கொற்ற உழிஞை: பகைவரின் அரணைக் கைப்பற்ற உழிஞையரசன் படையெடுத்துச் செல்வது.


5.அரச உழிஞை: உழிஞை வேந்தனது புகழினைப் பாராட்டுவது.


6.கந்தழி: உழிஞை வேந்தனை திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது.


7.முற்றுழிஞை: சிவப்பெருமான் சூடிய உழிஞைப்பூவின் சிறப்பைக் கூறுவது.


8.காந்தள்: முருகப்பெருமான் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது.


9.புறத்திறை: பகைவர் நாட்டின் மதிலுக்குப் புறத்தே தங்குவது.


10.ஆர்எயில் உழிஞை: நொச்சியரசனுடைய அரண் வலிமையை மறவர்கள் எடுத்துக் கூறுவது.


11.தோல் உழிஞை: உழிஞையரசன் தனது கிடுகுப் (ஒரு வகைப் போர்கருவி) படையைப் பாராட்டியது. தோல் – கிடுகுக்கருவி


12.குற்றுழிஞை: உழிஞை வேந்தன் தான் ஒருவனாக நின்று போர்செய்து அரணைக் கைப்பற்றியது மற்றும் உழிஞை வேந்தனது படை காவற்காட்டைக் கடந்து செல்லுதல் மற்றும் அப்படையானது கூத்தாடிக் கொண்டு நொச்சியாரின் கோட்டைக்குள் புகுதல்.


13.புறத்துழிஞை: உழிஞை மறவர் நொச்சியாரின் காவல்காட்டைக் கடந்து அகழியை அடைதல்.


14.பாசிநிலை: உழிஞையார் அகழிக்கரையில் நொச்சியாரின் வலிமைக் கெடப் போர் புரிவது.


15.ஏணி நிலை: உழிஞை மறவர்கள் நொச்சியாளாரின் மதில்மேல் ஏணியைச் சாத்தியது.


16.எயிற்பாசி: உழிஞையார் ஏணிமீது ஏறிச் செல்லும் நிலை.

17.முது உழிஞை: உழிஞையார் பகைவருடைய மதிலின் மீது குதித்தல் மற்றும் உழிஞை ஒற்றன் பகைவர் நிலையை அறிவித்தல்.


18.அகத்து உழிஞை: மதிலின் அகத்து உழிஞையார் நொச்சியாரை வென்றது.


19.முற்றுமுதிர்வு: நொச்சி வேந்தனின் முரசினது ஒலி கேட்டு உழிஞை வேந்தன் மிகுந்த சினம் கொள்வது.


20.யானை கைக்கோள்: நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப்பற்றுவது.


21.வேற்றுப்படை வரவு: நொச்சியரசனுக்கு துணை செய்ய வேற்றரசன் வருவது.
2

2.உழுது வித்திடுதல் : நொச்சியாரின் அரணை அழித்து, கழுதைப் பூட்டி உழுது கவடி(உண்ணா வரகு) விதைப்பது.


23.வாள் மண்ணுநிலை: உழிஞை வேந்தனின் வெற்றி வாளைப் புனித நீராட்டுவது.


24.மண்ணுமங்கலம்: வெற்றிப்பெற்ற உழிஞை வேந்தன் தன்னை மணமகனாக ஒப்பனைச் செய்வது.


25.மகட்பால் இகல்: நொச்சியாரின் மகளை விரும்பி உழிஞையரசன் மதிற்புறத்தில் தங்கியிருத்தல்.


26.திறைகொண்டு பெயர்தல்: நொச்சி வேந்தனிடமிருந்து திறைப்பொருளைப் பெற்று உழிஞையரசன் தன் நாட்டிற்குத் திரும்புதல்.


27.அடிப்பட இருத்தல்: பகைவர் நாடு தன்கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருப்பது.


28.தொகை நிலை: உழிஞை வேந்தனின் ஆற்றலைக் கண்ட பகைவேந்தர்கள் பலரும் அவனிடம் தஞ்சம் புகுவது.


7.தும்பைப் படலம்:


பகையரசர் இருவர் ஓரிடத்தைப் போர்களமாகக் கொண்டு வெற்றியைக் குறிக்கோளாக வைத்துக் கடும் போர் செய்வர். இப்போர் தத்தம் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமையும். இப் போரிடத்து தும்பைப் பூவினைச் சூடி போரிடுவதுதும்பைத் திணை எனப்படும்.


தும்பைத்திணை துறைகள் மொத்தம்  – 23


1.தும்பை அரவம் : அரசனிடமிருந்து பொருள் பெற்ற படைமறவர் மகிழ்ந்து ஆரவாரம்செய்வது ஆகும்.


2.தானை மறம்: இருதிறத்துப் படைகளும் போர் செய்து அழியாமல் காத்தது. போரினை விரைந்து மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துவது. வேற்படை மறவரின் சிறப்பினை எடுத்துக் கூறுவது.


3.யானை மறம்: தும்பை அரசனுடைய யானையின் வெற்றியை கண்டவர்கள் வியந்து போற்றியது ஆகும்.


4.குதிரை மறம்: தும்பை அரசனுடைய குதிரையின் திறத்தை மிகுத்துச் சொல்லியது.


5.தார்நிலை: பகைவரின் தார்படையை (தரைப்படை) தான் ஒருவனாக நின்று தகர்ப்பேன் என ஒரு வீரன் கூறுவது மற்றும் தன் அரசனை சூழ்ந்து கொண்ட பகையரசர்களை தான் ஒருவனாக நின்று போர் செய்து காத்தல்.


6.தேர்மறம்: தும்பை அரசனுடைய தேர் வலிமையைக் கூறுவது.


7.பாண்பாட்டு: போர்களத்தில் இறந்துப்பட்ட மறவர்களுக்குரிய இறுதிக்கடன்களை பாணர்கள் செய்வது ஆகும்.


8.இருவரும் தபுநிலை: போர்களத்தில் இருதிறப் படைகளோடு அரசரும் இறந்துபடுவது ஆகும். (தபுதல் – சாதல்)


9.எருமை மறம்: புறமுதுகிட்டு ஓடும் தன்படையைச் சினந்து, தான் மட்டும் பகைவரை எதிர்த்து நின்று தடுக்கும் மறவனின் ஆண்மையைப் போற்றியது.


10.ஏம எருமை: தன்னிடமிருந்த ஒரே வேலினை யானை மீது எறிந்த பின்பும் கருவி தேடி அலையாமல் தன் தோள் வலிமையால் பகைவரை வெற்றிக் கொண்டது ஆகும்.


11.நூழில் :பகைவரின் மார்பை பிளந்த மறவன் தன் மகிழ்ச்சியின் காரணமாக போர்க்களத்தில் வேலினை கீழும் மேலுமாக சுழற்றி ஆடியது.


12.நூழில் ஆட்டு: தும்பை மறவன் ஒருவன் எறிந்த வேலானது பகைவனின் மார்பைப் பிளந்தது. அவ்வேலினைப் பறித்து பகைவர்கள் போர்க்களத்தை விட்டு ஓடும்படியாக வீசியது.


13.முன்தேர்க் குரவை: தும்பை மறவர்கள் தம் அரசனின் தேருக்கு முன் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.


14.பின்தேர்க் குரவை: தும்பை மறவர்களும் விறலியரும் தம் அரசனின் தேருக்கு பின் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.


15.பேய்க்குரவை: தும்பை அரசனின் தேருக்கு முனனும் பின்னும் பேய்மகள் நின்று ஆடுவது.


16.களிற்றுடனிலை: தன்னால் வீழ்த்தப்பட்ட யானையின் கீழ் வீழ்ந்து மறவன் ஒருவன் அதனுடன் ஒருங்கே இறப்பது.


17.ஒள்வாள் அமலை: போரில் இறந்த பகையரசனைச் சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுவது.


18.தானை நிலை: இருபக்கத்து மறவர்களும் தன் புகழைப் பேசும்படி மறவன் ஒருவன் மேம்பட்டு நிற்றலைச் சிறப்பித்துக் கூறுவது.


19.வெருவெரு நிலை: ஒருவனுடைய உடலை துளைத்த அம்புகள் அவனை நிலத்தில் விழாதபடி தடுத்து நிற்பது.


20.சிருங்கார நிலை: போர்க்களத்தில் இறந்து கிடக்கும் மறவனது உடலை அவன் மனைவி தழுவி நிற்பது.


21.உவகைக் கலுழ்ச்சி: விழுப்புண் பட்டு இறந்த கணவனைக் கண்டு அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துவது.


22.தன்னை வேட்டல்: தன் அரசன் போர்க்களத்தில் இறந்ததைக் கேட்ட மறவன் அப்போர்க்களத்திலே உயிரை விடுதல் மற்றும் களத்தில் இறந்த கணவனைக் காண மனைவி வருதல்.


23.தொகை நிலை: இருநாட்டு அரசாகளும் இறந்துபட அவர்தம் போர் மறவர்கள் மட்டும் தொடர்ந்து போர் செய்து இறப்பது.


8.வாகைப் படலம்:


பகைவரை வென்று அதற்கு அறிகுறியாக வாகை மாலையைச் சூடுவது வாகைத்திணை எனப்படும்.


வாகைத்திணை துறைகள் மொத்தம்  – 32


1.வாகை அரவம்: போர் மறவர் வாகைப்பூச் சூடியும், வீரக்கழல் அணிந்தும் ஆரவாரிப்பது.


2.அரச வாகை: வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது.
3.முரச வாகை: வாகை வேந்தனின் வெற்றி முரசைச் சிறப்பிப்பது.


4.மறக்களவழி: செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுவது.

5.களவேள்வி: வாகை அரசன் போர்க்களத்தில் வேள்வி செய்வது.


6.முன்தேர்க்குரவை: வெற்றிப் பெற்ற அரசனுடைய தேரின் முன் பேய் கூத்தாடுவது. (தும்பை.13)


7.பின்தேர்க்குரவை: வாகை அரசனின் தேரின் பின்னர் மறவர்களும் விறலியரும் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது. (தும்பை.14)


8.பார்ப்பன வாகை: வேதம் உணர்ந்த பார்ப்பனனின் மேம்பாட்டைக் கொண்டாடுவது.


9.வாணிக வாகை: அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர் தம் மேம்பாட்டைக் கூறுவது.


10.வேளாண் வாகை: வேளாளரைச் சிறப்பித்துக் கூறுவது.


11.பொருந வாகை: பிறருடைய ஒவ்வாமை நோக்கி யாரையும் இகழ வேண்டாம் என்பது.


12.அறிவன் வாகை: மூன்று காலத்தையும் உணர்ந்த அறிவனின் நிலையைஎடுத்துரைப்பது.


13.தாபத வாகை: துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது.


14.கூதிர்ப் பாசறை: காமத்தை மிகுதிப்படுத்தும் கூதிர்ப்பருவத்திலும் அரசன் பாசறைக்கண் தங்குவது.


15.வாடைப் பாசறை: வாடைக்காற்று வீசிய நிலையிலும் அரசன் பாசறைக்கண் இருப்பது.


16.அரச முல்லை: மற மாண்பினை உடைய அரசனின் நல்இயல்புகளை மிகுத்துக் கூறுவது.


17.பார்ப்பன முல்லை: அரசரின் பகை நீக்கிச் சந்து செய்து நட்பாக்கும் நடுவுநிலைமை உடைய பார்ப்பனனின் சிறப்பைக் கூறுவது.


18.அவைய முல்லை: அறம்கூறும் சான்றோரின் தன்மையைக் கூறுவது.


19.கணிவன் முல்லை: காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பிப்பது.


20.மூதின் முல்லை: பழமை வாய்ந்த மறக்குடியில் பிறந்த பெண்டியரின் மறப்பண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.


21.ஏறாண் முல்லை: மறக்குடியின் மேலோங்கும் ஒழுக்கத்தினைச் சிறப்பித்துக் கூறுவது.


22.வல்லாண் முல்லை: மறவன் ஒருவனின் ஆண்மைத் தன்மையை எடுத்துரைப்பது

.
23.காவல் முல்லை: ஓர் அரசனின் காவல் தொழிலைச் சிறப்பித்துக் கூறுதல் மற்றும் அக்காவலைச் சான்றோர் எடுத்துரைத்தல் ஆகிய இரண்டும்.


24.பேராண் முல்லை: அரசன் தன் பகைவரை வென்று அக்களத்தை தனதாக்கிக் கொண்ட சிறப்பினைக் கூறுவது.


25.மறமுல்லை: மறவன் ஒருவனின் மேன்மையைச் சிறப்பித்துக் கூறுவது.


26.குடைமுல்லை: அரசனது வெற்றிக்குடையைச் சிறப்பித்துக் கூறுவது.


27.கண்படை நிலை: அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது.


28.அவிப்பலி:மறவன் அரசனுக்காகத் தம் உயிரைப் போர்க்களத்தில் நீத்தல்.


29.சால்பு முல்லை: நற்குணங்கள் நிறைந்த சான்றோரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறுவது.


30.கிணை நிலை: வேளாளனைக் கிணை கொட்டுவோன் புகழ்ந்து கூறுவது.


31.பொருளொடு புகறல்: மெய்ப்பொருள் மீது பற்றுக்கொள்ளுமாறு கூறுதல்.


32.அருளொடு நீங்கல்: உலகப்பற்றிலிருந்து விலக வேண்டுமெனக் கூறுவது.

9.பாடாண் படலம்:


புகழ், வலிமை, கொடைத்தன்மை, இரக்கம் ஆகியவற்றில் சிறப்பைப் பெற்ற ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைக் கூறுவது பாடாண் திணை எனப்படும்.

பாடாண் திணை துறைகள் மொத்தம்  – 47


1.வாயில் நிலை: புலவன் ஒருவன் தன் வருகையை மன்னனுக்கு உரைப்பாய் என வாயிற்காவலனிடம் கூறுவது.


2.கடவுள் வாழ்த்து: அரசனால் வணங்கப்படுகின்ற கடவுளருள் ஒருவரை உயர்த்திக் கூறுவது.


3.பூவை நிலை: காயாம் பூவினைப் புகழ்ந்துக் கூறுவது.


4.பரிசில் துறை: இரவலன் தான் விரும்பியப் பொருளை அரசனிடமிருந்து கேட்பது.


5.இயல்மொழி வாழ்த்து: முன்னோர் கொடுத்ததைப் போல நீயும் கொடுக்க வேண்டும் என்றல் மற்றும் அரசனுடைய இயல்பினை எடுத்துக் கூறுவது.


6.கண்படை நிலை: அரசனுடைய ஆழ்ந்த உறக்கத்தைச் சிறப்பிப்பது.


7.துயில் நிலை: உறங்கும் அரசனை அவ் உறக்கத்திலிருந்து எழுப்புவது.


8.மங்கல நிலை: துயில் எழுந்த அரசனுக்கு வாழ்த்துக் கூறுதல் மற்றும் ஓர் அரசன் இயல்பாகவே ஆக்கத்தைப் பெற்றான் எனக் கூறுதல்.


9.விளக்கு நிலை: அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுவது மற்றும் அரசனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.


10.கபிலை கண்ணிய புண்ணிய நிலை: அரசன் கொடையாகக் கொடுக்கும் பசுவினுடையச் சிறப்பினைக் கூறுதல்.


11.வேள்வி நிலை: அரசனுடைய வேள்வியைச் சிறப்பித்துக் கூறுவது.


12.வெள்ளி நிலை: அரசனின் செங்கோன்மையைக் கோள் வழிச் சிறப்பிப்பது.


13.நாடு வாழ்த்து: ஓர் அரசனுடைய நாட்டை வாழ்த்திக் கூறுவது.


14.கிணை நிலை: கிணைப்பறை கொட்டுபவனுடைய நிலையை உரைப்பது. (வாகை.30)


15.களவழி வாழ்த்து: போரில் பெற்ற செல்வத்தை வாழ்த்துவது.


16.வீற்று இனிதிருந்த பெருமங்கலம்: அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.


17.குடுமி களைந்த புகழ்சாற்று நிலை: பகையரசரை வென்று அவர்தம் குடுமியைக் களைந்த நிலையைக் கூறுவது.


18.மண் மங்கலம்: அரசன் மகளிரோடு புணர்ந்து மகிழ்வது.


19.பொலிவு மங்கலம்: மன்னனின் மகப்பேற்றினைப் புகழ்ந்துக் கூறுவது.


20.நாள் மங்கலம்: அரசனது பிறந்தநாளைச் சிறப்பித்துக் கூறுவது.


21.பரிசில் நிலை: பரிசு பெற்றோன் தன் ஊருக்குச் செல்ல விரும்புவது.


22.பரிசில் விடை: பரிசிலருக்குப் பொருள் வழங்கிச் சென்று வருக என விடைக் கொடுப்பது.


23.ஆள்வினை வேள்வி: அரசன் இல்லறம் நடத்தும் பாங்கைச் சிறப்பித்துக் கூறுவது.


24.பாணாற்றுப்படை: ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவது.


25.கூத்தராற்றுப்படை: பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது.


26.பொருநர் ஆற்றுப்படை: பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு பொருநன் மற்றொரு
பொருநனை ஆற்றுப்படுத்துவது.


27.விறலியாற்றுப்படை:பரிசில் பெற விரும்பும் ஒரு விறலியை ஒரு வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவது.


28.வாயுறை வாழ்த்து: பின்னர்ப் பலித்துப் பயன் தரும் தன் சொல்வழி நடக்குமாறு கூறுவது.


29.செவியறிவுறூஉ: ஓர் அரசனுக்கு அறிவுரைக் கூறுவது.


30.குடை மங்கலம்: அரசனுடைய குடையினைச் சிறப்பித்துக் கூறுவது.


31.வாள் மங்கலம்: அரசனுடைய வாளைச் சிறப்பித்துக் கூறுவது.


32.மண்ணுமங்கலம்:மன்னன் மங்கல நீராடுதலின் மாண்பினைக் கூறுவது.


33.ஓம்படை: அரசனுக்கு சான்றோர் அறிவுரைக் கூறுதல்.


34.புறநிலை வாழ்த்து: வழிபடு தெய்வம் காக்குமாறு வாழ்த்துவது.


35.கொடிநிலை: அரசனுடையக் கொடியைத் தெய்வக் கொடியோடு ஒப்பிட்டுக் கூறுவது.


36.கந்தழி: திருமாலின் வெற்றியைப் புகழ்ந்து கூறுவது.


37.வள்ளி: மகளிர் முருகனுக்கு வள்ளிக் கூத்தினை ஆடுவது.


38.புலவராற்றுப்படை: அருள்பெற்ற புலவன் அது பெறாத மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்துவது.


39.புகழ்ந்தனர் பரவல்: நினைத்ததைப் பெறுவதற்காக இறைவனைப் போற்றி வணங்குவது.


40.பழிச்சினர் பணிதல்: உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்குதல்.


41. கைக்களை: ஒரு பெண் தலைவனுடைய மாலையினைப் பெற விரும்புவது.


42.பெருந்திணை: தன்னை விரும்பாத தலைவனை ஒருத்தி தழுவ விரும்புவது.


43.புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு: தலைவனின் மார்பினை இனித் தழுவ மாட்டேன் என ஊடலுற்றப் பெண் கூறுவது.


44.கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்: தெய்வப்பெண்கள் தன் இனத்தைச் சார்ந்த ஆண் தெய்வங்களை விரும்பியது.


45.கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்: மானிடப் பெண்கள் கடவுளை விரும்புவது.


46.குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி: சிறுவனை மங்கைப்பருவ பெண்ணொருத்தி விரும்புவது.


47.ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி: காதல் நிகழ்வுகள் வெளிப்படத் தோன்றும் ஊரைச் சிறப்பித்துக் கூறுவது.


10.பொதுவியல் படலம்:


வெட்சி முதல் பாடாண் ஈறாக கூறப்பட்ட படலங்கள் ஒன்பது. ஆவற்றுக்குப் பொதுவாக அமைந்த துறைகளை விளக்குவதால் இது பொதுவியல் திணை எனப்பட்டது.  ஆசிரியர் இத்திணையை நான்காகப் பகுத்துள்ளார். அவை,


I.பொதுவியற்பால


II.சிறப்பில் பொதுவியற்பால


III.காஞ்சி பொதுவியற்பால


IV.முல்லை பொதுவியற்பால என்பவனாம்.

I . பொதுவியற்பால : (12 துறைகள்)


1.போந்தை: சிறப்பு பொருந்திய பனம்பூ மாலையைப் புகழ்தல். (சேர நாட்டு பூ)


2.வேம்பு : வேப்பம் பூமாலையைப் புகழ்தல். (பாண்டிய நாட்டுப் பூ)


3.ஆர்: அத்திப்பூ மாலையைச் சிறப்பித்துக் கூறுவது. (சோழ நாட்டு பூ)


4.உன்னநிலை: உன்னம் என்னும் மரத்தினது நிலையைக் கூறுவது. இம்மரம் நிமித்தம் உணர்த்தும் மரம் ஆகும்.


5.ஏழக நிலை: அரசிளங் குமாரனாய் ஆட்டுக்கிடாயில் ஏறிவருதல் மற்றும் இளமையைப் பொருட்படுத்தாமல் அரசுரிமையை ஏற்றல்.


6.கழல்நிலை: ஓர் அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.


7.கற்காண்டல்: இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லை தேர்ந்தெடுப்பதைக் கூறுவது.

8.கற்கோள் நிலை: தேர்ந்தெடுத்த கல்லைக் கைக்கொள்வது.


9.கல் நீர்ப்படுத்தல்: தேர்ந்து எடுத்து வந்த கல்லை நீரில் போட்டு வைத்தல் மற்றும் நடுதற்குரிய இடத்தில் சேர்த்தலும்.


10.கல் நடுதல்: மறவரின் நினைவாகக் கல்லை நடுதல்.


11.கல்முறை பழிச்சல்: நட்ட கல்லினை வாழ்த்துவது.


12.இற்கொண்டு புகுதல்: கோயிலை எழுப்பி அதனுள் நடுகல்லை எடுத்துச் செல்வது.


II. சிறப்பில் பொதுவியற்பால: (11 துறைகள்)


1.முதுபாலை: பாலை நிலத்தில் தன்னுடன் வந்த தலைவன் இறந்ததால் தலைவிவருந்துவது.


2.சுரநடை: காட்டில் மனைவியை இழந்து கணவன் வருந்துவது.


3.தபுதார நிலை: மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.


4.தாபத நிலை: கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பினை மேற்கொள்வது.


5.தலைப்பெயல் நிலை: குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்து பட்டதை கூறுவது.


6.பூசல் மயக்கு: போரில் இறந்த இளைஞனின் சுற்றந்தார் அழுது ஆரவாரம் செய்வது மற்றும் மன்னன் இறந்ததற்கு வருந்துதல் ஆகியவையும்.


7.மாலை நிலை: கணவனை இழந்ததால் உயிர் விடக்கருதி மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.


8.மூதானந்தம்: இறந்த கணவனோடு உயிர் விட்ட மனைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது மற்றும் தான் எண்ணியதை முடிக்காமல் வீரன் இறந்துபடுதல்.


9.ஆனந்தம்: நிமித்தம் வேறுபட்டதால் தலைவன் நிலையை எண்ணித் தலைவி நடுங்குதல் மற்றும் இறந்துபட்ட மறவனுக்காக வருந்துவது.


10.ஆனந்தப் பையுள்: போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மகவும் வருந்துவது.


11.கையறுநிலை: தலைவனின் இறப்பைக் கண்டு சூழ்ந்திருந்தோரின் செயலற்ற நிலையைக் கூறுவது மற்றும் இறந்தோனுடைய புகழை எடுத்துக் கூறி வருந்துவதும் ஆகும்.


III. காஞ்சி பொதுவியற்பால: (6 துறைகள்)


1.முதுமொழிக் காஞ்சி: முன்னோர்களால் மொழியப்பபட்ட அறம் முதலான பொருட்களைக் கூறுதல்.


2.பெருங்காஞ்சி: கண்ணுக்குப் புலனாகும் அனைத்துப் பொருள்களும் நிலைபெறாமல் அழியும் என்பது.


3.பொருண்மொழிக்காஞ்சி: மெய்ப்பொருளை உணர்த்துவது ஆகும்.


4.புலவர் ஏத்தும் புத்தேள் நாடு: வீட்டுலகத்தின் இயல்பினை எடுத்துரைப்பது.


5.முதுகாஞ்சி: உணர்தற்கு உரிய பொருளை உணர்த்துவது.


6.காடு வாழ்த்து: இடுகாட்டினைச் சிறப்பித்துக் கூறுவது.


IV. முல்லை பொதுவியற்பால: (8 துறைகள்)


1.முல்லை: தலைவன் தலைவியோடு கூடிக் களித்த இன்பத்தின் மிகுதியை எடுத்துரைப்பது.


2.கார்முல்லை: தலைவனின் வரவுக்கு முன்னால் கார்காலம் வந்ததை கூறுவது.


3.தேர்முல்லை: பகைவென்று தேரின்மீது ஏறி வரும் தலைலவனின் நிலையைக் கூறுவது.


4.நாண்முல்லை: பெண் ஒருத்தி நாணத்தின் துணையால் தன்னைக் காத்துக் கொண்டது.


5.இல்லாள் முல்லை: கற்புடை மகளிரின் இயல்பினைக் கூறுவது.


6.பகட்டு முல்லை: வேளாளனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுவது.


7.பால் முல்லை: ஊழினது மிகுதியைச் சிறப்பித்துக் கூறுவது.


8.கற்பு முல்லை: தலைவி தலைவனின் அழகைப் பாராட்டுதல் மற்றும் தலைவன் பிரியனும் தலைவி தன் கற்பைக் காத்தல் மற்றும் தலைவன் தலைவியரின் மனைவளத்தைப் பாராட்டுதல் ஆகிய மூன்றும் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here