புறநானூற்றில் பார்ப்பன வாகை

புறநானூற்றில்-பார்ப்பன-வாகை

முன்னுரை

            சங்க கால மக்கள் தங்கள் வாழ்க்கை இயல்பினை இரு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கின்றனர். ஒன்று அகம்; மற்றுது புறம் அகம் காதலையும் புறம் வீரத்தையும் குறிக்கும் எனப்பொதுவாகக் கூறப்படுகிறது. அகம், காதலைக் குறித்தாலும் புறம், வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரம் என்பது முதன்மையான ஒன்றாகக் கருதப்பட்டு பிற ஒழுகலாறுகள் குறித்த செய்திகளும் புறத்தில் அடங்குகின்றன. அகமும் புறமும் சில கூறுகளில் ஒப்பு நோக்கிக் கூறப்படுகின்றன. அகத்திணைகளான கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகியன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி ஆகியவற்றோடு ஒப்புமையாக்கப்பட்டு உணரப்படுகின்றன. ஏழாக உரைக்கப்பட்ட புறத்திணைகள் தொல்காப்பிய காலத்திற்குப் பிறகு பன்னிரண்டாக விரித்துரைக்கப்படுகின்றன. பாடாண், காஞ்சி தவிர புறத்தின் மற்ற திணைகள் போர் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றன போரில் வெற்றி பெற்ற நிகழ்வினை உரைக்கின்ற வாகைத்திணையில் அமைந்துள்ள பார்ப்பன வாகை குறித்த கருத்துக்களை முன்வைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. புறநானூற்றில் பார்ப்பன வாகை

சாதிப்பிரிவுகள்

            சங்ககாலம் பழமையானது மட்டுமில்லாமல் தமிழர்களின் உயர்வான வாழ்க்கை நெறிமுறைகளைப் பறைசாற்றும் காலம் எனலாம். சங்ககாலச் சமுதாயத்தில் பல்வேறு சாதிப்பிரிவினர் இடம்பெற்றிருக்கின்றனர். நால்வகை வருணம் பேசப்பபடுகின்றன. ஆனால் சாதி வெறி உணர்வு பேசப்படவில்லை, குறவர், வேட்டுவர், ஆயர், கானவர், உழவர், பரதவர், நுளையர், எயினர், மறவர் எனச் சுட்டப்பட்ட தமிழ்க்குடிகள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது” (தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் – வாழ்வியல் – ப.5) குடிகள் நில அடிப்படையில் தத்தம் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இத்தகைய குடிகளில் பார்ப்பனர் இடம்பெறவில்லை. இருப்பினும் சங்கச் சமுதாயத்தில் பார்ப்பணர்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர். ஐம்பெருங்குழுவில் இடம்பெறும் புரோகிதர் பார்ப்பனராக இருக்கலாம். சங்ககாலத்தில் சாதிகள் இருந்தன. ஆனால் வேற்றுமைகள் பெரிதாகப் பாராட்டப்படவில்லை.

சங்க காலப் பார்ப்பனர்கள்

            பார்ப்பனர்கள், அந்தணர், ஐயர் என்று அழைக்கப்படுகின்றனர். நால்வகை வருணத்தில் பிராமணர் எனச் சுட்டப்படும் சொல் வழக்கு சங்க இலக்கிய நூல்களில் எங்கும் இடம்பெறவில்லை. அந்தணர் என்றும் பார்ப்பார் என்றும் சுட்டப்படுவதை சங்க இலக்கியங்களில் காணலாம். அந்தணர் என்ற சொல் பார்ப்பனரை மட்டும் குறிக்கவில்லை என்பதற்கு

                                    அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

                                    செந்தண்மை பூண்டொழுக லான்                         (குறள். 30)

என்ற வள்ளுரின் வாய்மொழி சான்றாக அமைகிறது. பார்ப்பனர் அல்லாதவர்ககளும் சிறப்பான குணநலன்களால் அந்தணர் என்று அழைக்கப்படலாம் என்ற கருத்திணை இக்குறட்பா எடுத்துரைக்கின்றது. ஐயர் என்ற சொல் தலைவர், உயர்ந்தோர், சான்றோர், என்பதைக் குறிக்கின்றன. பார்ப்பனர் என்ற சொல்லே பிராமணரைக் குறிப்பிடும் சொல்லாகும்.

பார்ப்பார்க்குரிய செயல்களும் இருப்பியல் நிலையும்

            முப்புரிநூல், கரகம், முக்கோல் மணை ஆகியவற்றை உடையவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தமையை தொல்காப்பியம் பொருளதிகார நூற்பா மரபியல் : 71 எடுத்துரைக்கின்றது. சங்க கால அகவாழ்வில் கற்பின்கண் தலைவன், தலைவியரிடையே நிகழும் ஊடலில், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களுள் ஒருவராகப் பார்ப்பார் குறிப்பிடப்படுகிறார். இதனைத் தொல்காப்பியக் கற்பியல் நூற்பா (191) சுட்டிக் காட்டுகின்றது.

            பார்ப்பார்க்குரிய செயல்கள் ஆறென மொழிவதை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகின்றது. தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுந்த உரையிலும் இதனைக் காணலாம். அவை ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்

                                                ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்

                                                முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி

                                                ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்

                                                அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க

என்ற சிலப்பதிகார அடிகளாலும் (கட்டுரை காதை 67-70) அந்தணர்க்குரிய அதாவது பார்ப்பார்க்குரிய செயல்களை அறியமுடிகிறது.

            பார்ப்பனருள் பெரியவரைக் கொண்டு வேள்விகள் நடத்தப்பெற்றிருக்கின்றன, வேள்வியின் இறுதியில் பார்ப்பனப்புலவன் தம் மனைவியுடன் துறக்கம் அடைந்ததாகவும் நம்பப்படுகிறது. இச்செய்தியை பதிற்றுப்பத்து உரைக்கின்றது. (பதிகம்-3) பார்ப்பனச் சிறுவர்கள் குடுமியுடன் இருந்ததை ஐங்குறுநூறு வழி (202:2-3) அறிய முடிகிறது. அரசனுக்காகப் பார்ப்பனர்கள் தூது சென்றிருக்கிறார்கள். இதனை அகநானூறு தெரிவிக்கின்றது. போரினைத் தடுக்கும் முறையிலும் செயல்பட்டிருக்கின்றார்கள். அரசர்களுக்கு நிலையாமையை எடுத்துரைத்து அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள், கபிலர், பரணர், நக்கீரர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலான புலவர்களாகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றனர். அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் பணிவுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பார்ப்பனர்கள் அரசர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றனர். போர் ஏற்படும் சூழலில் பாதுகாப்பான பகுதியில் சென்று தங்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைத்தல் கொடிய பாவமாகக் கருதப்பட்டிருக்கின்றது.

                                                பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்

                                                வழுவாய் மருங்கிய கழுவாயும் உள

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் (34:3-4) மேற்கண்ட கருத்தினை அறிவிக்கின்றது. அரசர்களுடைய அரண்மனையில் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் சென்று வர உரிமை இருந்திருந்தது. எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனை,

                                                “அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

                                                கடவுள் மால் வரை கண்விடுத் தன்ன

                                                அடையா வாயில்…..

            என்ற சிறுபாணாற்றுப்படையின் (204-206) பாடலடிகள் குறிப்பிடுகின்றன. தங்களுடைய கடமைகளைச் செய்யும் பொருட்டு தங்கள் இருப்பிடத்தில் வேள்வித் தூண் நடுதலை

                                                கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த

                                                வேள்வித் தூணத் தசைஇ

என்று பெரும்பாணாற்றுப்படை (315-316) குறிப்பிடுகின்றது.

            அரசரை விடவும் அந்தணர்கள் – பார்ப்பனர்கள் உயர்ந்தவராகப் கருதப் பட்டிருக்கின்றார்கள். இதனை,

                                                சிறந்த வேதம் விளங்கப் பாடி

                                                விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

                                                நிலமமர் வையத் தொருதா மாகி

                                                உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்

                                                அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்

                                                பெரியோர்……..

என்று மதுரைக்காஞ்சி (468-473) எடுத்துரைக்கின்றது. இத்தகைய தன்மையுடைய அந்தணரை – பார்ப்பனரை அரசன் துணையாகக் கொண்டு வாழ்ந்தால் பெரும்புகழ் அடையலாம் என்ற கருத்தினை,

                                                அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி

                                                ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று

                                                நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்

                                                திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ

            என்ற பதிற்றுப்பந்து (மூன்றாம் பத்து 4: 8-1) பாடலடிகள் மூலம் அறியலாம். சங்க காலப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நடப்பவர்களுக்குப் புகழ் கிட்டும் என்ற கருத்தியல் தளத்தினடிப்படையிலும், பார்ப்பனர்கள் மேல் நிலையில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

வாகைத்திணையும் பார்ப்பன வாகையும்

            சங்க காலத் தமிழரின் போர் நெறிமுறைகள் குறிப்பிடத்தக்க முறையில் அமைந்தனவாகும். போர் திடீரென ஏற்படாமல் ஒரு சில முன்னறிவிப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆநிரை கவர்தல் மூலம் போருக்கான சூழல் உருவாகத்தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற்று போர்ச்சூழல் உருவாக்கப்படுகிறது. இருதிறப் படைகளும் போரில் ஈடுபட, வாகை சூடுவது ஒருவர் மட்டுமே. அவரது இயல்பை எடுத்துரைக்கும் புறத்திணையாக வாகைத்திணை அமைகிறது.

வாகைத் திணையின் இலக்கணத்தை.,

                                                தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

                                                பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப

என்று தொல்காப்பியம் (தொல்,பொருள் புறத்திணையியல்-15) வரையறுக்கின்றது. இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர். “அது கேடில்லாத கோட்பாட்டினை யுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல்” என்று (தொல்.பொருள்.புறத்திணையியல் ப.27) கூறுகிறார். “வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தாரும், அறிவரும், தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர்” என்று நச்சினார்க்கினியர் உரை (தொல் பொருள். புறத்திணையியல் ப.347) கூறுகின்றார். இவற்றினின்று வாகை என்பதற்கு மற்றவர்களிடமிருந்து தன்னுடைய மேம்பட்ட தன்மையின் மிகுதிப்பாட்டைக் கூறுவதை இலக்கமணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய மிகுதிப்பாட்டை மேம்படுத்திக் கூறுபவர்களாக பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என எழுவரை அடக்கியதே வாகைத்திணையாகும். இதனைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

                                                அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                                ஐவகை மரபின் அரசர் பக்கமும்

                                                இருமுன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                                மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                                நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

                                                நாலிருவழக்கின் தாபதப் பக்கமும்

                                                பாலறி மரபின் பொருநர் கண்ணும்

                                                அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையின்

                                                தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.

என்று (தொல்.பொருள்.புறத். 16) கூறுகிறார். எழுவரின் மிகுதித் தன்மையே வாகை எனப்படுகிறது. இந்நூற்பா வாகைத் திணையின் பாகுபாடாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற அறுதொழிலின் மிகுதியைக் குறிப்பதாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனக் பக்கம் என்று வாகையின் பாகுபாடாகத் தொல்காப்பியர் கூற, பிற்காலத்து எழுந்த புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பன வாகை, பார்ப்பன முல்லை என்று இரு துறைகளை எடுத்துரைக்கின்றது. இவை இரண்டும் வாகைத் திணையின் துறைகளாக அமைகின்றன. ஒன்று வேள்வியினால் சிறப்புடையவனையும் மற்றொன்று போர் தடுக்கச்சென்றவனின் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது.

            பார்ப்பன வாகையின் இலக்கணத்தினை புறப்பொருள் வெண்பாமாலை

கேள்வியாற் சிறப்பெய்தி யானை

வேள்வியான் விறன் மிகுத்தன்று

என்று (வாகைப்படலம்.9) வரையறுக்கின்றது. “கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை யாகத்தான் வெற்றியைப் பெருக்கியது” என்று நூலாசிரியர் உரை (பு.வெ.மா.106) வகுக்கின்றார். யாகம் செய்த சிறப்பு வெற்றியாகிறது; வாகையாக அமைகிறது. பார்ப்பனன் செய்த யாகத்தின் சிறப்பு பார்ப்பன வாகையாகிறது. புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியார் யாகம் செய்தலின் சிறப்பைக் குறிக்கும் வகையில்

                                                ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்

                                                வேதங் கரை கண்டான் வீற்றிருக்கும் – ஏதம்

                                                சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த

                                                விடுசுடர் வேள்வி யகத்து

என்ற பாடலைச் சான்று காட்டி விளக்குகிறார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கத்தில் கூறப்பட்ட வேட்டல் (வேள்வி செய்தல்) என்பதற்கு புறநானூற்றில் அமைந்த ஆவூர் மூலங்கிழார் பாடலை (168) இளம்பூரணர் மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார். புறநானூற்றில் இரண்டு பாடல்கள் மட்டுமே பார்ப்பன வாகைத் துறையில் அமைந்த பாடல்கள் (166-305) ஆகும். ஆவூர் மூலங்கிழார் சோணாட்டுப் பூஞ்சாற்றுப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடுகிறார். தன்மனைவியருடன் சிறப்பாகப் பெரு வேள்வி செய்த கௌணியன் விண்ணந்தாயனின் மிகுதிப்பாட்டை – வேள்வி செய்த திறத்தைப்பாராட்டி,

                                                                           நன்றாய்ந்த நீணிமிர்சடை

                                                                         முது முதல்வன் வாய்போகா

                                                                        தொன்றுபுரிந்த வீரிரண்டின்

                                                                        ஆறுணர்ந்த வொருமுதுநூல்

                                                                        இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையுமுட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக

வினைக்கு வேண்டி நீபூண்ட

புலப்புல்வாய் கலைப்பச்சை

சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய

மறங்கடிந்த வருங்கற்பின்

அறம் புகழ்ந்த வலை சூடிச்

சிறு நுதற்பே ரகலல் குற்

சில சொல்லிற் பல் கூந்தலின்

நலைக்கொத்த நின் றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில் கேட்பக்

காடென்றா நாடென்றாங்

கீரேழி னீடமுட்டாது

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் றிருந்தேந்து நிலை

என்றுங் காண்கதில் லம்ம யாமே குடாஅது

பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்

உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்

செல்வ லத்தை யானே செல்லாது

மழைய ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவள ரிமயம் போல

நிலீ இய ரத்தை நீ நிலமிசை யானே

என்று நெடிய வாழ்த்துப்பா (புறம் 166) பாடுகிறார். அறம் ஒன்றை மேவி நான்கு கூறுகளை உடைய, ஆறு அங்கத்தை உடைய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோரை புறச்சமயத்தாருடைய மிகுதியைச் சாய்க்க இருபத்தொரு வேள்வித்துறையை எத்தவிதக்குறையும் இன்றி தம் ஏவல் கேட்டுச் செயல்படும் துணைவியருடன் நீரைப்போல நெய்யை ஊற்றி பல வேள்விகளைச் செய்து விருந்தினைப் போற்றிய உன்னுடைய மிகுதியான சிறப்பு மே;படுவதாகுக. இமயமலை போல் வாழ்க என்று ஆவூர் மூலங்கிழார், வேட்டலின் மிகுதியை – கௌணியன் விண்ணந்தாயனின் வேள்விச் சிறப்பை பார்ப்பன வாகைத் துறையில் பாடுகின்றார். பார்ப்பனனின் மேம்பட்ட வேள்விச் சிறப்பு அவனுடைய வெற்றியாக அமைகிறது.

பார்ப்பன வாகையும் பார்ப்பன முல்லையும்

            மதுரை வேளாசான் பாடிய புறநானூற்றுப்பாடல் (305) பார்ப்பன வாகைத்துறையில் அமைந்த மற்றொரு பாடலாகும். இப்பாடல் போர் எழுந்த சூழலில் போரைத் தவிர்க்கும் பொருட்டு தூதுச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் உரைக்கப்பட்ட பார்ப்பன வாகைத்துறையின் இலக்கணம் இப்பாடலுக்குப் பொருந்தி வரவில்லை. வாகைத்திணையில் பார்ப்பன முல்லை என்பது,

                                    கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கும்

                                    நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத் தன்று

என்று புறப்பொருள் வெண்பாமாலை (வாகைத்திணை-18) இலக்கணம் உரைக்கின்றது. இரு அரசர்களிடையே எழுந்த மாறுபாட்டை வேதம் அறிந்த பார்ப்பனன் தன்சொல் முறையால் மாற்றுகிற தன்மையைச் சொல்லுவது என்பதே பார்ப்பன முல்லைத்துறையாகும்.

மதுரை வேளாசான் பாடிய,

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்

உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே

ஏணியுஞ் சீப்பு மாற்றி

மாண்வினை யானையு மணிகளைந் தனவே

என்ற புறநானுற்றுப்பாடல் பார்ப்பனவாகைத் துறையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றுப்பாடலுக்கு உரை வகுத்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் துறை விளக்கம் தருகையில்,

            இது பார்ப்பன வாகையெனத்துறை வகுக்கப்பட்டுள்ளது. பார்ப்பன வாகையாவது கேள்வியாற் சிறப்பெய்தி யானை வேள்வியான் விறன் மிகுத்தன்று (பு.வெ.மா.8-9) எனப்படுகிறது. இது பார்ப்பன முல்லை யென்றிருப்பின் சீரிதாம்…இதன்கண் பார்ப்பான் வந்து சொல்லிய சொல் சிலவென்றும் போரொழிந் ததென்றும் கூறுவது இது பார்ப்பன முல்லை யாதலை வற்புறுத்துகின்றது (புறம்.தொகுதி.பக் 209-210) என்று கூறுகிறார். பிள்ளை அவர்களின் விளக்கம் சரியானதுதான் என்றாலும் புறநானூற்றுப்பாடலில் கூறப்பட்ட துறை பார்ப்பன வாகையாக இருக்கின்றது. இப்பாடலில் பார்ப்பனனின் மிகுதி உரைக்கப் பட்டிருகின்றது. அதாவது சொல்வன்மை உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

                                    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

                                    இகல்வெல்லல் யாருக்கும் அரிது (குறள்.647)

என்பது வள்ளுவம். சொல்வன்மை படைத்தவரை யாராலும் வெல்லமுடியாது. யாராலும் வெல்ல முடியாத சொல்வன்மை படைத்த பார்ப்பனன் என்ன கூறினான் என்பது உரைக்கப்படவில்லை. அவன் பேசியது சில சொற்களே. அதனால் உடனடியாகப் போர் விலக்கப்பட்டிருக்கின்றது. எதிர் நாட்டரசன் தன் நாட்டிற்குள் வராது இருக்க ஆணிகள் நிறைந்த சீப்பு வடிவத்திலான கருவி கோட்டை வாசலில் வைக்கப்படும். எதிரியைத் தாக்குவதற்கு நூல் போன்ற கருவிகளை எடுத்துச்செல்வர். போர்க்கோலம் பூண்ட யானை முதலான படைகள் அணிவகுக்கும். இந்நிலையில் பார்ப்பனன் வந்து பேசிய சொற்கள் சில மட்டுமே. அதன் பின்னர் உடனடியாக ஏணியும் சீப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. போர்க்கோலம் பூண்ட யானைகளின் மணிகள் முதலானவை களையப்பட்டுவிட்டன. பார்ப்பானின் சொல்வன்மை பார்ப்பன வாகையா? பார்ப்பன முல்லையா? என்ற வினா எழுகிறது. பாடல் பார்ப்பன வாகைத்துறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பன முல்லையின் இலக்கணம் தான் பொருந்துகிறதே தவிர பார்ப்பன வாகையின் இலக்கணம் பொருந்தவில்லை. வேள்வியின் சிறப்பு எதுவும் இப்பாடலில் கூறப்படவில்லை. சொல்வன்மையின் சிறப்பு உரைக்கப்பட்டிருக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் தான் பார்ப்பனவாகை, பார்ப்பன முல்லை ஆகிய துறைகள் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம்’ என்பதோடு மட்டும் அமைகிறது. அறுவகையில் ஒன்றான வேள்விசெய்தல் பார்ப்பன வாகையாகிறது. ஆனால் பார்ப்பன முல்லையை ஆறுவகையில் ஓதுவித்தலுடன் தொடர்பு படுத்தலாம்.

ஓதலும் ஓதுவித்தலும் கல்வியறிவா? நான்மறை அறிவா? என்பது வினாவிற்கு உரியது. கல்வியறிவு என எடுத்துக்கொண்டாலும் தான் கற்ற கல்வி மூலமாக பிறருக்கு வாழ்வதற்கு ஏற்ற எந்தத் தீங்கும் இல்லாத அறிவுரையாகச் சொல்லத்தெரிந்த அறிவாக இருந்தால் அவ் அறிவு போற்றப்படவேண்டிய ஒன்று. வேத அறிவு என்பது வேதங்களைப் பற்றிய அறிவா? வேதங்கள் மூலம் தான் பெற்ற அறிவா? என்பது வினா. மதுரை வேளாசான் பாடல், புறப்பொருள் வெண்பா மாலையின் பார்ப்பன முல்லைத் துறைக்கும் பொருத்தமானது என்று கூறப்பட்டாலும் பார்ப்பனவாகை என்ற துறையில் பாடல் வகுக்கப்பட்டது ஏன்? புறப்பொருள் வெண்பா மாலையில் வகுக்கப்பட்ட துறை, சங்க இலக்கியப் புறநானூற்றுப் பாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் கவனத்தில் கொள்ளவில்லையா? என்ற வினாவையும் எழுப்புகிறது. இருப்பினும் பார்ப்பன வாகைத்துறை என வகுக்கப்பட்டிருப்பது சரியென்று கூறவும் இடம் இருக்கின்றது.

ஆளுமை என்பதற்கு சொல்லப்படும் விளக்கம், எந்த ஒரு சூழலையும் தன்னுடையதாக்கிக் கொள்வதே ஆளுமை என்றாகிறது. இத்தகைய ஆளுமைப்பண்பு உயரியதாகக் கொள்ளப்படுகிறது. ஆளுமைப்பண்பிற்காகக் கூறப்படும் வரையறைகளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளுகிற பண்பைப் பார்ப்பனர் பெற்றிருக்கலாம். எந்த சூழலையும் தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிற தனித்தன்மையுடைய பார்ப்பனன் சொல்லிய சொற்கள் சில. சொற்கள் சிலவாக இருந்தாலும் கேட்பவரை அதன்படி கேட்டு நடத்தக்கூடிய வகையில் இருப்பது வாகையாக அமைகிறது.

“குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினின்றும் வேறுபடமிகுத்து மேம்படுதல் வாகைத் திணையின் ஒழுகலாறாம்”. என்ற (முனைவர் கோ.சிவகுருநாதன், வாகைத்திணை, ப.17) வாகைத்திணையின் இலக்கணத்திற்கு வெள்ளை வாரணனார் கூறுகிற உரைவிளக்கம் இங்குக் குறிப்பிடத்தக்கது. தத்தமக்குரிய அறிவு என்பதன் அடிப்படையில் கேட்டாரைப் பிணிக்கும் தகையவாய் பார்ப்பனன் சொல் அமைந்து பார்ப்பன வாகையான மதுரை வேளாசான் பாடல் அமைவதை ஏற்கலாம்.

தொகுப்புரை

            சங்க காலச் சமூகத்தில் சாதிகள் இருந்திருக்கினறன. ஆனால் சாதி வேற்றுமைகள் பாராட்டப்படவில்லை. அரசர்களுக்கு அடுத்த நிலையில் பார்ப்பனர்கள் இருந்திருக்கின்றனர். பார்ப்பார் அந்தணர் என்று குறிப்பிடப்பட்ட பிராமணர்கள் மேல்நிலையில் இருந்திருக்கின்றனர். அகவாழ்வில் வாயில்களாகவும் புறவாழ்வில் அறிவுரை கூறுபவர்களாகவும், வேள்வி செய்விப்பவர்களாகவும் விளங்கினர். புறத்திணைகளுள் ஒன்றான வாகைத்துறை வாகைத்திணையில் பார்ப்பன வாகைத்துறை, பார்ப்பன முல்லைத் துறை என இரு துறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், புறநானூற்றில் இரண்டு பாடல்கள் பார்ப்பனவாகைத் துறையில் அமைந்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிற பார்ப்பன வாகை இலக்கணத்தின்படி ஒரு பாடலும், பார்ப்பன முல்லைதுறை இலக்கணத்தின்படி ஒரு பாடலும் அமைந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பன முல்லை என துறை ஒன்றின் பெயர் இடம் பெறவில்லை. வள்ளுவர் கூறிய வாய்மொழியின் படியும் வெள்ளை வாரணனார் வாகைத் திணைக்கு உரைத்த உரையின் படியும் பார்ப்பன வாகைத்துறையிலேயே அப்பாடலை வகுத்துக்கூறலாம். பார்ப்பன வாகை எந்தச் சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் பார்ப்பனனின் வெற்றியாக அமைகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

தமிழ் இணைப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

அரசு கலைக்கல்லூரி

உடுமலைப்பேட்டை

மேலும் பார்க்க,

புறநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here