பாலைக்கலி உணர்த்தும் சமூக விழுமியங்கள்

முன்னுரை

            150 கலிப்பாக்களைக் கொண்டது கலித்தொகை. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒவ்வொரு புலவராக ஐந்து திணைகள் பற்றியும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி-கபிலர், மருதம்-மதுரை மருதனிளநாகனார், முல்லை-சோழன் நல்லுருத்திரன், நெய்தல்-நல்லந்துவனார். ஆகியோர் பாடியுள்ளனர்.

            கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார். ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் புலவர்களால் பாராட்டப் பெறுவது கலித்தொகை. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் பாலைக்கலி உணர்த்தும் சமூக விழுமியங்களை ஆராயலாம். பாலைக்கலியில் 35 பாடல்கள் உள்ளன.

விழுமியம்:

            வாழ்க்கைக்குத் தேவையானவற்றை உரைப்பதை ‘விழுமியம்’ என்ற சொல்லால் குறிப்பர்.

பாலைப் பாதை:

            பாலையின் கொடுமையை இந்நூலைப் போல விரிவாகப் பிற நூல்களில் காணமுடியாது. பாலை வழியில் செல்பவர்களின் நாக்கு வறண்டு விடுகின்றது. தண்ணீர் கிட்டவில்லை. துயரால் தடுமாறுகின்றார்கள். அப்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றது. அக்கண்ணீர் நாவை நனைத்துச் சிறிது ஆறுதல் அளிக்கிறதாம்.

                        “உள்நீர் வறப்பப் புலம் வாடு நாவிற்குத்

                                தண்ணீர் பெறா அத்தடுமாற்று அருந்துயரம்

                                கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு. (பாலைக்கலி, பாடல் எண்-5)

            இத்தகைய காட்டில் ஆறலைக் கள்வர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வழிச் செல்பவர்களை மறித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளை அடிப்பதற்குப் பொருள் இல்லை எனில், வழிச் செல்பவர்களைக் கொன்று அவர்களின் உடல்கள் துள்ளுவதைக் கண்டு மகிழ்கின்றார்கள்.

                        “கடுங்கண் மறவர் தாம்

                        கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்

                        துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வெளவலின்

                        புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆரிடை” (பாடல்-3)

எவ்வளவு கொடுமை! இக்காட்டில் பறவைகள் செல்லவில்லையாம்.

அன்பின் மாட்சி:

            பொருளீட்டச் செல்லும் தலைவனைப் பலவாறு கூறி தடுத்து நிறுத்துகிறாள் தோழி. அப்போது தலைவியின் அன்பினைப் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்.

            “மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்

            கானம் – தகைப்ப, செலவு” (பாடல்-2)

            “உயிர் வாழாள், நீ நீப்பின்”, என்று தலைவியின் அன்பு உணர்வைத் தலைவனிடம் எடுத்துரைக்கிறாள் தோழி.

            “பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?

            ஓழிக, இனி பெரும! நின் பொருட் பிணிச் செலவே”  (பாடல்-3)

என்கிறாள் தோழி. தன்னையும் உடன் அழைத்துச்செல்க என வேண்டுகின்றாள் தலைவி.

            “துன்பம் துணையாக நாடின், அது அல்லது

            இன்பமும் உண்டோ, எமக்கு?”

            இணைந்து செல்லும் அந்த இன்பத்தின் முன் துன்பமும் பொறுத்தற்கு எளிதேயாகும் என்ற தலைவியின் உள்ளப்பண்பை இதன் வழி உணர முடிகிறது.

நிலையற்ற பொருள்:

            பொருள் நிலையற்றது. செல்வம், இளமை, யாக்கை நிலையாமை குறித்துப் பாலைக்கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன. பொருளோடு திரும்பி வரும்போது, அதற்குள் போய்விடும் தலைவியின் உயிரை மீட்டுத் தரும் சக்தியும் பொருளுக்கு உளதாமோ? என்கிறாள் தோழி.

“இன் உயிர் தருதலும் ஆற்றுமோ

                        முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே” (பாடல்-6)

தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி. இல்வாழ்வு நெறியே பொருள் என்கிறாள் தோழி.

            “பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும்

            திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?”  (பாடல்-7)

என்கிறாள் தோழி.

                                    “மன்னவன் புறந்தர வருவிருந்து ஒம்பி,

                                     தன் நகர் விழையக் கூடின்,

                        இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே”        (பாடல்-7)

            விருந்தினரைப் பேணி, தலைவனுடன் கூடிக் கலந்து இன்புறுதலே தலைவிக்குச் சிறப்பு. நிலையற்ற பொருளும், தலைவியின் பால் பெறுகின்ற இல்லற இன்பமும் ஒன்றேயாகும் என்கிறாள் தோழி.

            வாழ்க்கைக்குத் தேவை பொருளை விட இல்லற வாழ்வில் பிரியாது கூடி வாழ்ந்து இணைந்து நிற்றலே என்பதைப் பாலைக்கலிப்பாடல் கொண்டு அறிய முடிகிறது.

அறம் உரைத்தல்:

            முக்கோற்பகவர் வழி அறம் உரைக்கப்படுகிறது. பெண்ணிற்குப் பிறந்த இடத்துப்பாசம் இல்லறக்கடமை தொடங்கும் போது பின் சென்றுவிடுவது இயல்பு என்பதைப் பாடல் குறிப்பிடுகிறது.

                        “பல உறு நறுஞ்சாந்தம், படுப்பவர்க்கு அல்லதை,

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்”     (பாடல்-8)

சந்தனம் மலையிலே பிறந்தாலும், மலைக்குப் பயன்தராது, பூசிக்கொள்பவர்க்கே பயன்தரும். அது போல உம் மகளும் ஓர் ஆடவனுக்குத்தான் பயன் நல்குவாள் என்கிறது பாலைக்கலி. குடும்ப வாழ்வை, நீதிகள் கூறி இணைத்து வைக்கும் பாங்கினை இப்பாடல் தெளிவிக்கிறது. முத்து, நீரில் பிறந்தாலும் நீருக்கு உதவா, இசை யாழிலே பிறந்தாலும் யாழுக்கு உதவா என்பன போன்ற நீதிகள் வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தலைவியரின் அக வாழ்வு நெறி குறித்து இப்பாடல் உரைக்கிறது.

                        “கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

                        சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

                        அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே”.

தலைசிறந்த கற்பினள் நும் மகள். அவளுக்கு எத்துன்பமும் செய்யாதீர். சிறந்தவனான தன் தலைவனோடு அவள் சென்று விட்டாள். அவர்கள் கொண்ட முடிவு சற்றும் அறநெறி தவறாத ஒழுக்கம் என்பதை அறிக என்கின்றனர் முக்கோற்பகவர். (முத்தலைக்கோல் ஏந்திய சான்றோர்)

நம்பிக்கைகள்:

            தலைவன் இன்னமும் வரவில்லையே என ஏங்கிய தலைவிக்குத் தோழி ஆற்றுவிக்கிறாள். அப்போது பல்லி ஒலி செய்கிறது. இது, தான் சொல்வதை ஆமோதிப்பது போல் உள்ளது. அச்சமயம் உன் இடக்கண்ணும் துடிக்கிறது. தலைவர் வந்துவிடுவார் என்கிறாள் தோழி. இதன் வழி பல்லி ஒலி, பெண்கட்கு இடக்கண் துடித்தல் ஆகிய நம்பிக்கைகளை அறிய முடிகிறது.

                        “பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன

                        நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே” (பாடல்-10)

என்கிறாள் தோழி.

இளமை நிலையாமை:

            தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லல் நல்லதன்று. இளமை நிலையில்லை. பொருளீட்டலை விட தலைவியோடு இணைந்து, பிரியாது வாழும் வாழ்வே நல்வாழ்வு என்கிறாள் தோழி.

                        “இளமையும் காமமும் நின் பாணி நில்லா”…..

                        கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு

                        மாற்றுமை கொண்ட வழி”     (பாடல்-11)

            கூற்றமும் மூப்பும் உளவென்ற உண்மையை மறந்தவரோடு ஒன்றாகக் கூடிப் பொருள் தேடிப் போக எண்ணுகிறாய். அது நன்மக்கள் செல்லும் வழியன்று. அறநெறிக்கு மாறான பாதை எனக்கூறி தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி.

                        “கவவுக் கைவிடப் பெறும் பொருட் திறத்து

                         அவவுக் கைவிடுதல், அது மனும் பொருளே”    (பாடல்-13)

பொருளின் மீதுள்ள அவாவைக் கைவிடுவாயாக. அதனைக் கைவிட்டுத் தலைவியுடன் பிரியாமல் கூடியிருப்பதே நிலையான உண்மைச் செல்வம் என்கிறாள் தோழி.

“செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?” (பாடல்-14)

            செம்மையான வழிகளிலிருந்து மாறுபட்டுச் சென்று பொருள் தேடுவார்க்கு, அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாக விளங்கும் என உரைக்கிறாள் தோழி. நல்வழியில் பணம் ஈட்டல் வேண்டும் என்ற சிறந்த நீதியை இப்பாடல் சுட்டுகிறது.

                        “இளமையும் தருவதோ, இறந்த பின்னே?”

            இளமை நிலையில்லை என்பதைக் கூறுகிறது இப்பாடல்., அகவாழ்வு தான் புறவாழ்வான பொருள், கல்வி, தொடர்பு ஆகியனவற்றினுள் சிறந்தது என்கிறது இப்பாடல்.,

                        “பொய் அற்ற கோள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ,

                        “பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப்படர்ந்து, நீ”

என்கிறாள் தோழி.

                        “ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

                         ஓன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிது அரோ

                        சென்ற இளமை தரற்கு”.                                  (பாடல்-17)

எனக் கூறுகிறாள் தோழி.

கற்பின் பெருமை:

            மழையும், ஞாயிறும், காற்றும் வேண்டுமோ என்றவளுக்கு, “உன் கற்பின் பெருமையால், அறக்கடவுள் தானே சென்று உதவும். அப்படியிருக்கும்போது, நீ இறைவனிடம் வேண்டுவது ஏன்?” என்று தலைவியின் கற்பின் உயர்வைக் கூறி மனக்கலக்கத்தைப் போக்குகிறாள் தோழி.

                        “தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் – தேமொழி!

                        வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்” (பாடல்-15)

இதன்வழி தலைவியின் கற்பின் உயர்வினை எண்ண முடிகிறது.

            எப்பொருள் இன்பத்திலும் தன் காதலுடன் கூடிப்பெறும் அக இன்பம் ஒன்றே சிறப்பு. சென்று போன இளமையை மீட்டுத்தருவது எவர்க்கும் அரிது என்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது.

            இளமை நிலையில்லை என்பதை மேற்கண்ட பாலைக்கலிப் பாடல்கள் விளக்கியுரைக்கின்றன.

சொல் தவறாமை:

            ஆசை மிகுந்த போது புகழ்ந்தாய், இப்போது ஒதுக்கிச் செல்கிறாய். தலைவனே நீ, சொன்ன சொல் போற்றாதவன் என இடித்துரைக்கிறாள் தோழி.

                        “உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்

                        கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்

                        பண்டும் இவ் வுலகத்து இயற்கை” (பாடல்-21)

பொருளைக் கடனாகப் பெறும்போது காட்டிய முகபாவமும், திரும்பத் தரும்போது தோன்றும் முகபாவமும் மாறுபட்டுத் தோன்றல் உலக இயற்கை என்பதை இப்பாடல் தெளிவிக்கிறது. சொல் தவறக்கூடாது என்பதை இப்பாலைக்கலிப் பாடல் வழி அறிய முடிகிறது.

இழிவான செயல்:

            நட்பாயிருக்கும் காலத்திலே அவரின் இரகசியச் செய்திகளை அறிந்து கொண்டு, பின்னர் பிரிந்த காலத்தில் பிறருக்கு அந்த இரகசியங்களை வெளிப்படுத்துவது இழிவு.

“பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம்மறை

 பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்”?(பாடல்-24)

செல்வம் உடையவராக இருந்தபோது உறவு கொண்டு அனுபவித்து, பின் அவர் வறுமையுற்ற போது ஒதுங்கிச் செல்லும் உணர்வற்றவரின் உறவு சிறப்பானதன்று என்கிறது பாலைக்கலி.

                        “செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர்

                        ஓல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்?”   (பாடல்-24)

எனவே, தலைவனே தலைவியை விட்டுப்பிரியாதே. மழை பெய்யாது போனால் உலகு வருந்தும். அதுபோல தலைவி உன் அருள் இல்லையெனில் வருந்துவாள் எனக்கூறி வாழ்வில் கூடியிருத்தலைப் புலப்படுத்துகிறது இப்பாடல்.

பொறுமை தேவை:

            அவசரப்படாது பொறுமையுடன் இருப்பின் நல்லது கிட்டும். மனம் வெதும்பிக் குயிலையும், தலைவரையும் வெறுத்துப் பேசாதே. விரைந்து வருவார் என்கிறாள் தோழி.

            “புரிந்து நீ எள்ளும், குயிலையும், அவரையும் புலவாதி”        (பாடல்-32)

தலைவர் வருவார் என நற்சொல் கூறி நெறிப்படுத்தும் தோழியின் செயல் உணரற்குரியது.

முடிவுரை

            பாலைத் திணை வழி பிரிவை உணர்த்தும் பாலைக் கலிப்பாடல்கள் சமூக விழுமியங்களைத் தெளிவாக உரைத்துள்ளன. அவ்விழுமியங்களை மனதிற் கொண்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது உறுதி.

துணை நின்ற நூல்

            கலித்தொகை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. திருத்திய பதிப்பு-1982.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.ச.ஈஸ்வரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

தேசியக்கல்லூரி (தன்னாட்சி),

திருச்சிராப்பள்ளி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here