நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் | முனைவர் நா.சாரதாமணி

நேர்மையாக நடந்து கொள் முனைவர் நா.சாரதாமணி
      நேர்மை என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக நிகழ்ச்சி ஒன்றைக் கூறலாம்.  பி.எம் நாயரின் நூலில் படித்த செய்தி, அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று அவருக்கான மாளிகையில் நுழைகிறார். அப்போது அங்கிருந்த வெள்ளை ஆடையும் தலையில் தலைப்பாகையும் அணிந்த ஒருவன் தடாலென அமர்ந்தார். இதனை பார்த்த கலாமிற்கு மனதில் எல்லோரும் எழுந்து நிற்பார்கள்; நின்றால்தானே மரியாதை; ஆனால் இவன் அமர்கிறானே என்று நினைக்கும் வேளையில் அவரின் காலில் இருந்த ஷூவை கழட்டப்போனான். உடனே அவரை தடுத்து என்ன செய்கிறாய் என்று கேட்டார். ஐயா வைஸ்ராய் காலத்திலிருந்து எனக்கு இந்த வேலைதான் என்றான். உடனே, “எனது சூவை எனக்கு கழட்ட தெரியும். இன்றிலிருந்து நீ இந்த வேலைக்கு வேண்டாம் போ” என்றார் கலாம். உடனே அங்கிருந்தவர்கள் இதை பார்த்தவுடன் வந்த முதல்நாளே ஒருவரை வேலையைவிட்டு தூக்கி விட்டாரே என்று நினைத்தனர். இதனால் அவன் தனது நான்கு விரல்களைக் காண்பித்து ஏதோ சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அந்த மனிதனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் அவன் அழுகின்றான் என்பதை கண்டவுடன் கலாம் அவர்கள் கூறினார்; பின்னால் இருக்கும் தோட்டத்தில் தண்ணீர் ஊற்றும் வேலையைச் செய் என்று சொன்னார்.

பின்னர் ஐந்து ஆண்டுகள் கடந்தன. கலாம் அவர்கள் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து மாளிகையை விட்டு வெளியேறும்போது தன்இரண்டு சூட்கேஸ்களையும் கையில் வைத்துக்கொண்டு தோட்டத்தில் தண்ணீர் தெளித்த அவனை அழைத்து வரச்சொன்னார். அவனிடம் “அன்னைக்கி உன்ன வேலையை விட்டு தூக்கிட்டேன்னு அழுத. இப்போ என்ன வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க” என்று கூறிவிட்டு நீ என்ன செய்கிறாய்? 2 வாலி நீரை கொண்டு வந்து இந்த சூட்கேஸ்களில் தெளி என்றார். வேண்டாம் ஐயா! உள்ள புக்ஸ், பேப்பர்ஸ் இருக்கும் எல்லாம் நனைந்து விடும் என்றான். பரவாயில்லை நீரைத் தெளி என்றார்.  அந்த வேலையால் தெளிக்கும்போது கலாம் அவர்கள் கூறினார் ஏன் தண்ணீர்  தெளிக்கச் சொன்னேன் தெரியுமா? இந்த ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு தூசியைக் கூட நான் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்தச்சமூகம் சொல்ல வேண்டும்; அதற்காகத் தெளிக்கச் சொன்னேன் என்றாராம் அந்த மாமனிதர் கலாம்.

இவ்வாறான நேர்மையைத் தருவதே சிறந்த கல்வி. இவ்வகையான கல்வி இன்றைய மனிதர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறதா? கல்வியானது ஒரு மனிதனுக்குப் போராட்டங்களை எதிர்கொள்ளும் துணிவைத் தரவேண்டும். துன்பங்களைக் கண்டவுடன் மற்றவருக்கு இன்னல்களை உருவாக்கும் பேடித்தனத்தை அளிக்கக்கூடாது. ஆயிரம்கோடிபேர் அமர்ந்திருக்கும் அவையில் கம்பீரமாகச் சமூகத்தில் நடத்தப்படும் அவலங்களைச் சுட்டிக்காட்டும் தைரியத்தைத் தரவேண்டும். கண்முன்னே அக்கிரமங்கள் நடந்தாலும் அவற்றை தடுக்கும் வல்லமையை தரவேண்டும். இது எனது தேசம். இங்கு தீங்கு விளைவிக்க ஒருபோதும் அனுமதியேன் என்ற நாட்டுப்பற்றினைத் தரவேண்டும். இதுதான் நேர்மையான கல்வி.

நொடிகளை வென்ற காளமேகம்
காளமேகப்புலவர் தமிழ்ப்புலமையால் நொடிகளை வென்றவர்.  கடுமையான போட்டிகளில் நேரத்தை வென்றவர். இதனால் அக்காலத்திலேயே புலவர்கள் நொடிக்கும் குறைவான நேரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. நீங்கள் எவ்விடம் சென்றாலும் எங்கு வேலை பார்த்தாலும் அவ்விடத்தில் உங்களுக்கான சுவடுகளைப் பதித்துச் செல்லுங்கள்.  விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் திரும்பும்போது ஐந்து நிமிடங்களுக்கு முன்பே தரைஇறங்கி இருந்தால் கல்பனா சாவ்லா என்ற ஒரு அறிவியல் விஞ்ஞானியை இந்த நாடு இழந்திருக்காது. காலம் என்பது மனிதன் ஒருசெயலைச் செய்து முடிப்பதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்.  ஓர் அரசன் பகைவனை வெல்ல ஏற்றகாலத்தை நோக்கி இருப்பான். ஏற்றகாலம் என்பது பகைமன்னனின் உடல்நிலை சரியில்லாதபோது, அவனுடைய படைகள் வேறுநாட்டிற்கு சென்றபோது, நாட்டில் கலகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதெல்லாம் இவ்வாறு அந்தக்காலத்தை எதிர்நோக்கி இருந்து படைகளைத் திரட்டி பகை வெல்லவேண்டும்.

நேர்மையைக் கடைப்பிடிக்க நேரத்தை செலவழியுங்கள்
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் நேர்மையைக் கடைபிடிப்பது பெற்றோரிடமாகும். கருவுற்றகாலத்திலிருந்து ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பவர்கள்தான் பெற்றோர்கள். எனவே ஒருபோதும் அவர்களுக்கு துரோகம் இழைத்து விடாதீர்கள். தனக்கென்று எதையுமே எடுத்துக் கொள்ளாமல் பிள்ளைகள் வளரவேண்டும். பிள்ளைகளுக்காக எல்லாம் என்று தியாகம் செய்துவாழும் பெற்றோர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் நம் மண்ணில் வாழ்கின்றனர். ஆற்றங்கரை ஏரிகள் போன்றவற்றின் கரை பகுதியான மணல் பரப்பில் பார்த்திருப்பீர்கள். சிறுசிறு குவியலாக மணல் காணப்படும். அதனை தள்ளிவிட்டு பார்த்தோமானால் அதில் சிறு துவாரம் இருக்கும். அந்தத் துவாரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றினால் நண்டு வெளியே வரும். அந்த நண்டு பக்கவாட்டில்தான் நடக்கும். அதன் இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறும் என்றால் பெண் நண்டின் வயிற்றில் குஞ்சுகள் இருக்கும். அவை சிறிதுசிறிதாக வளரும்போது அதன்வயிறு ஓரளவே விரிவடையும். அதற்குமேல் உள்ளே இருக்க இயலாமல் குஞ்சுகள் வெளியே வரும். அதாவது தாயின் வயிறு வெடித்து அதிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். தாய்நண்டு இறந்து விடும். பிள்ளைகளுக்குப் பிறப்பை கொடுத்துவிட்டு தான்இறப்பை தேடிக்கொள்ளும் தாய்நண்டு.

நண்டு போலவே பல பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு நல்ல செழிப்பை வழங்கிவிட்டு அவர்கள் வறுமையில் வாழ்வார்கள். அவ்வாறு உங்களுக்காக தமது சந்தோசம், ஆசை, ஆடம்பரம் போன்றவற்றையெல்லாம் மரணிக்கச் செய்யும் உங்கள் பெற்றோர்களுக்கு. துரோகம் இழைக்காமல் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று கொள்ளுங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு மாறாக செயல்பட வேண்டாம். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி பெற்றோர்சொல் உங்களை நல்வழிப்படுத்தும் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் நேர்மை
பெற்றோரிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் பிள்ளைகள் பள்ளியில் ஆசிரியரிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். அவ்வாறு நடந்து கொள்ளும் பிள்ளைகள்தான் தமது இளமைப்பருவத்தில் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உண்மையுடன் தியாகம் செய்யும் மனநிலையைப் பெறுவார்கள். தன்னை மெழுகாக உருக்கி தன்பிள்ளைகளைச் சுடராக ஒளிரச் செய்யும் பெற்றோர்களுக்கு உண்மையாக இல்லை என்றால் நீங்கள் சரியான மனிதர் இல்லை. இளசுகள் சிலர் பெற்றோர்களை அவமதித்து உங்களுக்கு என்ன தெரியும் என்று கேலி செய்து அவர்களை ஒன்றும் பேசமுடியாமல் வாயடைக்கச் செய்துவிடுவார்கள்.

உங்களுக்கு வயதாகிவிட்டது. எங்கள் காலம் வேறு! உங்கள் காலம் வேறு! அதனால் நீங்கள் பேசாமல் இருங்கள் என்று அதட்டி அமர்த்திவிடுவார்கள். இவ்வாறான பிள்ளைகள்தான் சமுதாயத்தில் யாரையும் மதிக்காமல் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் வாழத்தெரியாமல் ஊதாரிகளாகவும் போக்கிரிகளாகவும் திரிவார்கள். இவர்களால் அவர் பிறந்த குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் எந்த பயனும் இல்லை. நான் அறிந்த ஒரு பெண்மணி அவருக்கு திருமணமாகி எட்டு மாதங்களில் அவள் கணவர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அப்போது அப்பெண்ணின் வயிற்றில் 6 மாதக்குழந்தை வளர்கிறது. அவளின் பெற்றோர் என்ன கூறியும், அக்குழந்தையை வளர்ப்பேன் என்று பிடிவாதமாகப் பெற்றெடுத்து வளர்த்தாள். கூலி வேலைசெய்தாவது நான் வளர்ப்பேன்.  என் குழந்தை என் வயிற்றில் வந்து சேர்ந்துள்ளது எனவே நான் என் குழந்தைக்காகவே வாழ்வேன்  என்று வளர்த்தாள். நன்றாகவே அக்குழந்தையை வளர்த்தாள். நேர்மையைக் கற்றுக்கொடுத்து, உண்மையைச் சொல்லிக் கொடுத்தாள். அதர்மம், தியாகம், கருணை போன்ற நற்பண்புகளைப் பாலுடன் உணவுடன் சேர்த்து ஊட்டி வளர்த்தாள். அந்தக்குழந்தை பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிக்கு சென்றதும் மிகவும் மகிழ்ந்தாள். மகன் கூறுவதெல்லாம் உண்மை என்று நம்பினாள். அவனுடைய நண்பர்கள் சிறப்பானவர்கள் என்று ஆனந்தப்பட்டாள். அவள் சிறுவயதிலிருந்தே எதை செய்யக்கூடாது என்று சொல்லிச்சொல்லி வளர்த்தாளோ அதனை சாதாரணமாகச் செய்துவிட்டு வந்தான் அந்தத்தாயின் மகன். அதை பார்த்தவுடன் அவள் இறந்து விடவில்லை. அவள் மனம், மூளை இரண்டும் இறந்துவிட்டன. ஆமாம் அவள் பைத்தியம் ஆகி விட்டாள்.

தற்போது தெருத்தெருவாக என்பையன காணும் என்று கூறிக்கொண்டே நடக்கிறாள். இங்கு கவனித்தீர்கள் என்றால் அப்பெண் தன்கணவன் இறந்தவுடன் வேறுதிருமணம் செய்துகொள் என்றுகூறிய பெற்றோரின் வார்த்தைகளை ஏற்று இருக்கலாம். ஆனால் குழந்தைக்காகவே தன்வாழ்வை தியாகம் செய்தாள்.  அவ்வாறான தாயை புரிந்துகொள்ளாமல் பிள்ளை தவறு செய்தான்.

நண்டு பிள்ளைகளுக்காக வயிறு வெடித்து இறப்பதைப்போல தாயும் தன்நிலை இழந்தாள். உங்களுக்காக காலம் முழுவதும் உழைப்பவர்கள் பெற்றோர்கள்தான். அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; அவர்களிடம் உண்மையுடன் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் உயர்வு வந்தால் பெருமைப்படுபவர்கள் அவர்கள்தான். நீங்கள் வாழ்வில் தாழ்ந்தால் வேதனைப்படுபவர்களும் அவர்கள்தான். எனவே பெற்றோர்களின் வாழ்க்கையை பொன்னான காலமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.
 
காலம் என்பது இறைவன் உங்களின் கண்முன் வைத்த சொர்க்கமான வரமாகும். அந்த வரத்தை கொண்டு நீங்கள் வாழும்போதே வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிக் கொள்வதும் அல்லது நரகமாக மாற்றிக் கொள்வதும் உங்கள் செயல்களில்தான் உள்ளது. பெற்றோர்களை அழவைக்கும் பிள்ளைகள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. நேர்மையை பெற்றோரிடம் காட்டுங்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் ஆக்கங்களைப் பெறும் என்பதில் ஐயமில்லை. தன்னையே பிள்ளைகளுக்காகத் தியாகம் செய்யும் பெற்றோர்கள் செய்யும் தவறு என்பிள்ளை தவறு செய்யமாட்டான். என் வார்த்தையைத் தட்ட மாட்டான் என்று சுதந்திரம் அளித்துவிடுவார்கள் என்பதும்தான். ஒன்று கவனத்தில் கொள்ளவேண்டும்; பிள்ளைகளை நம்பலாம். ஆனால் அவர்களின் வயதை நம்ப இயலாது. பெற்றோர்கள் கொடுக்கும் சுதந்திரம் பிள்ளைகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதே பெற்றோர்களின் தோல்விக்கு காரணம்.
               
உங்களை ஆள் ஆக்குவதற்காக தம்வாழ்க்கையைப் பணயம் வைத்த பெற்றவர்களாகச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இந்த ஜென்மத்துல் பட்ட கடனை இந்த ஜென்மத்திலேயே அடைத்து விடுங்கள். அதுவே மிகவும் நலமாகும்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
முனைவர் நா.சாரதாமணியின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்க…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here