நற்றிணைக் காட்டும் யானைகளும் உணர்ச்சி மிகு வாழ்க்கையும்

உலகத்தில் வாழும் ஐந்தறிவு உயிர்களில் யானையும் ஒன்று.  பெரிய உருவமும் அதிக எடையும் கொண்ட விலங்கு.  நிலத்தில் வாழும் மனிதர்களைத் தவிர்த்து யானைகள் மிக நீண்ட காலம் உயிர் வாழக் கூடியதாகும்.  யானைகளைப் பொறுத்தவரைத் தனியாக இருப்பதில்லை.  கூட்டமாகவே வாழ்கின்றன.  தனியாக இருக்கும் யானை மதம் பிடித்து அலைந்து திரியும் என்பார்கள். யானையினங்கள் கடுமையான உழைப்பாளியாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்வு மிக்கதாகவும், அறிவுச்சார்ந்த நிலைகளில் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிப் புரியும் வகையில் யானையினங்கள் இருந்து வருகின்றது.  சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நில விலங்கான யானைகள் நற்றிணைப் பாடல்களின் வாயிலாக நோக்கும் போது உணர்ச்சி மிகு வாழ்க்கையினை நடத்துகிறது எனலாம்.

பெருங்களிறும் மடப்பிடியும்

          சங்க இலக்கியத்தில் யானையைப் பற்றியச் செய்திகளும் அவைகளின் வாழ்க்கை முறையினைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதகம், கைமா, உம்பல், வாரணம், அசனாவதி, அத்தி, அத்தினி,அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆணை, இயம், இரதி, குஞ்சரம், இராசகுஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, கரி, அஞ்சனம் போன்ற பலப் பெயர்கள் யானையைக் குறிக்க சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஆண் யானையைக் களிறு என்றும் பெண் யானையைப் பிடி என்றும்  குட்டியைக் கன்று என்றும் சொல்வர்.  வீரம் மிகுந்த ஆண் யானையை களிற்று யானை என்று கூறுவர்.  இங்கு களிறு என்பதும் யானை என்பதும் ஒரே பொருளில் வருவதைக் காணலாம்.  ஒரு வேளை களிறு என்பது யானை இனங்களில் ஒரு பெயராக அக்காலத்தில் குறித்து வந்திருக்கலாம்.  இவையன்றி களிறு என்பதற்கு வீரம் என்ற பொருள்படவும் அமைந்து, அதனால் வீரம் மிகுந்த யானையைக் களிறு என்று அழைத்திருக்க வாய்ப்பு உண்டு.  பின்னாளில் அதுவே களிற்றுயானை என புலவர்கள் சொல்லியிருப்பார்கள்.  பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை இருக்க வேண்டுமென பெரியோர்கள் சொல்லுவார்கள்.  அதனால்தான் பெண் யானையை மடப்பிடி என்று புலவர்கள் அழைத்திருப்பது வியக்கத்தக்கது.  ஆக பெண் யானைகளுக்கு மடம் என்ற பண்பு இருந்திருக்கிறது என அறியமுடிகிறது.

நற்றிணையில் யானை

          வெண்கோட்டு யானை, வயக்களிறு, பெருங்களிறு, வேழம், மா, பைங்கண் யானை, பரும யானை, ஒருத்தல், மடப்பிடி, புகர்முகவேழம் என நன்றினைப் பாடல்களில் குறிக்கப்படுகிறது.

          “இருந்செறு ஆடிய கொடுங்கவுள், இயவாய்,

          மாரி யானையின் மருங்குல் தீண்டி”  (நற்:141:1-2)

          செம்மை நிறமுடைய தலையையும், வளைந்த கொடுமை தன்மையுள்ள துதிக்கைகளை உடையனவும், ஏந்திய தந்தங்களை கொண்டதும், அகன்ற வாயையும் உடைய கரிய மேகம் போல் இருக்கும் யானைகள் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் யானைகள் மதத்தால் செருக்குண்டு கடிய சினமும் வலிமையையும் உடையது (நற்-103) என நன்றிணைப்  பாடல் குறிப்பிடுகின்றது.

உணவும் வாழிடமும்

          யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும்.  இவை மூங்கில் மற்றும் கரும்பு போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றன.  யானைகள் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன.  நற்றிணைப் பாடல் ஒன்றில்,

          “சூல் முதிர் மடப்பிடி, நான் மேயல் ஆரும்” (நற்.116:5)

          கருவுற்ற ஒரு பெண் யானையானது தன்னுடைய பசியைப் போக்க மூங்கிலின் கொழுத்த முளைப்பகுதியை ஒடித்து தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டதாம் என கூறுகிறது.  அதைப்போல பசியால் வருந்திய மென்மையான தலையை உடைய பிடி வருந்தமுற்று நின்றதாம்.  அதனைக்கண்ட பெரியகளிற்று யானையானது பக்கத்தில் இருக்கும் ஓமை மரத்தை முறித்து அதனுடையப் பட்டையை தன் பிடிக்கு உணவாகக் கொடுத்ததாம் (137,279) குழியில் ஊறிய நீரை யானையினம் சென்று உண்ணுதல் (240), நன்றாக உண்ட யானைகள் இத்தி மரத்தின் நிழலில் வந்து உறங்குகிறது (162) என நன்றிணைப் பாடல்கள் கூறுகின்றது. நன்கு வளர்ந்த  யானைகள் நாள் ஒன்றுக்கு  140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன என ஆய்வு குறிப்பிடுகிறது.  தற்போது காடுகளை அழித்து நகரங்கள் உருவாக்கப்படுவதால் தாவர உண்ணிகளான யானைகளுக்கு உணவுகள் கிடைப்பது அரியதாகிறது. மனிதர்களின் வேளாண்மை விரிவாக்கத்திற்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகின்றனர்.  காடுகளில் வாழ்ந்து வரக் கூடிய யானைகள் எங்கே செல்வது எனத் தெரியாமல் காடுகளாய் இருந்து மாற்றிய விவசாய நிலங்களை அழிக்கிறது.  மனிதர்களையும் முரட்டுத்தனமாகத் தாக்குகிறது. இதனால் மனிதர்களால் யானைகள் கொல்லப்படுகின்றன.  யானைகளின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போது யானைகள் எங்கு செல்லும்.  இவ்வாறான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முரண்பாடுகளால் ஆண்றொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாக ஆய்வு கூறுகின்றது. யானைகள் தனக்குத் தேவையான செடி, கொடி, பட்டை போன்ற தாவர உண்ணிகள் கிடைக்கப்பெறாததால் தான் ஊருக்குள் வந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை உண்டும் நாசப்படுத்தியும் விடுகின்றன என்பதை அறியலாம்.

உடலமைப்பு

          பெரும்வாரியான யானையினங்கள் ஆப்பிரிக்கக்காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.  பெரிய உருவம், தந்தம், துதிக்கை, சிறிய கண், நீண்டக் காதுகள், புடைத்த நெற்றி மேடுகள், நான்கு கால்கள், சிறிய வால் என யானையின் உடலமைப்பு அமைந்திருக்கும்.  ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெரியவையாக இருக்கும்.

(i) தும்பிக்கை

          யானைக்குக் தும்பிக்கைப் போன்று மனிதனுக்கு நம்பிக்கை வேண்டும் எனும் பழமொழி நம்மிடையே உண்டு.  அதுபோல யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கையே ஆகும்.  நற்றிணையில்,

          “இரும் பிணர்க் தடக்கை நீட்டி, நீர் நொண்டு

          பெருங்கை யானை பிடி எதிர் ஓடும்”  (நற்.186:2-3)

          நீர் சேருகின்ற இடத்தில் யானையானது தனது நீண்ட துதிக்கையால் தண்ணீரை உண்டது என்கிறது இப்பாடல்.  மேலும் வலிமை மிகுந்த நீண்ட துதிக்கையைக் கொண்டது யானை (நற்.194),யானைகள் தும்பிக்கையின் நுனியால்தான் மூச்சு விடுகின்றன (நற்.253), யானையின் தும்பிக்கைகள் தினைக்கதிர்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன(நற்.344). யானைகளின் தும்பிக்கைகள் 40,000 தசைகளாலும்; எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியதுமாகவே அமைந்திருக்கிறது.  தும்பிக்கையின் உதவியால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்கமுடியும்.  உணவு உண்ணுவதற்கும், பகை விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு வளையமாகவே தும்பிக்கை அமைகின்றது.

(ii) தந்தங்கள்

          யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன.  இவைகளுக்கு யானைக்கோடு என்று பெயர்.  இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டும் தான் தந்தம் உண்டு.  பெண் யானைகளுக்கு தந்தம் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து யானைகளுக்கும் தந்தம் உண்டு.  இந்தத் தந்தமே யானையின் கடைவாய் பற்களின் வளர்ச்சிதான் இப்படி நீண்டு இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

          யானைகளின் தந்தங்கள் 10 அடி வரை வளரக் கூடியதாகும்.  90 கிலோ கிராம் எடை வரை இருக்குமாம்.  யானையின் தந்தத்திற்கு மக்களிடத்தில் எப்போதும் வரவேற்பு உண்டு. யானையின் தந்தத்தை வெட்டி அணிகலன்களாகவும், கதவு, நாற்காலி, படுக்கைக் கால்;கள் எனச் செய்து கொள்வதனால் மக்கள் தந்தத்திற்கு பெருமளவு பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.  நற்றிணையில்,

          “புலியொடு பொருத புண் கூர் யானை

          நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்” (நற்;.65:5-6)

          புலியுடன் சண்டையிட்ட யானையானது தோற்று ஓடியது.  அதைக் கண்ட கானவர்கள் அம்பெய்தி அந்த யானையைக் கொன்றனர்.  யானையின் தந்தத்தை கானவர்கள் எடுத்தார்கள் என ஆசிரியர் கூறுகின்றார்.  இறந்த யானையின் தந்தத்தை எடுத்து பாறையின் மீது காய வைத்தார்கள் என்றும் நகங்களை ஊனின்றுப் பிரித்து எடுத்தார்களாம் கானவர்கள் (நற்.114) என்றும், யானையின் ஒற்றைத் தந்தத்திற்கு அருவியின் நீரை உவமையாகவும் சுட்டப்படுகிறது (நற்.24). மனிதர்களின் சுயநலத்திற்காக யானைகள் கொல்லப்பட்டுப் தந்தங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

(iii) காதுகள்

          யானைகள் நன்குப் பெரிய அகன்ற மடல் போன்;ற காதுகளைக் கொண்டுள்ளன.  யானையினுடைய செவியானது ஆம்பல் இலைப் போன்று அகலமாக உள்ளது என,

          “முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை” (நற்.230:1)

          நற்றிணைப் பாடல் கூறுகின்றது.  தாமரை இலைப்போல் யானையின் காதுகள் உள்ளன (நற்.310:2)என்றும், முறம் போன்ற பெரிய காதுகளை உடையது யானைகள் என உவமையாகக் கூறப்படுகின்றன.  யானையின் உடலில் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக காதுகள் பெரியதாக இயற்கை அமைத்திருக்கிறது.  காதுகளை அசைத்து காற்று குளிர்விக்கப்பட்டு உடலினுள் வைக்கப்படுகிறது.  அதனால் தான் யானைகள் எப்போதும் தன் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

(iv) கால்களும் தோலும்

          யானைகள் வலிமையான கால்களைக் கொண்டுள்ளன.  தன் உடல் எடையை தாங்குவதற்கேற்பச் செங்குத்தான கால்களும், அகன்றப் பாதங்களும் பெற்றுள்ளன.  இளைப்பாறுதலைத் தவிர மற்ற நேரங்களில் அமருவதில்லை.  தண்ணீரில் யானைகள் நன்றாக நீந்தக் கூடியவை.  யானையின் தோல் மிகவும் தடிப்பானது. தோலின் தடிமன் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் அளவுடன் உள்ளதாக இருக்கும்.  யானைகள் தன் தோல்களின் மூலம் உணர்வு திறனை வளர்த்துக் கொள்கின்றது.

(v)அறிவாற்றலும் புலன் உணர்வும்

விலங்கு இனங்களில் யானையின் மூளையே பெரியதாகும்.  யானைகள் நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டது.  அவை மட்டுமல்லாமல் யானையினுடைய கண்கள் சிறியவையாக இருப்பதால் கிட்டப்பார்வையைக் கொண்டது.  அதனால் கேட்கும் திறனையும், மோப்பத் திறனையும் அதிகமாகப் பெற்றுள்ளன.

          “களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடுநீறு” (நற். 302:7)

மக்கள் நடந்துச் செல்லக் கூடிய சுர வழியிலே யானைகள் ஒன்றோடு ஒன்று கால்களால் உதைத்து விளையாடியதால் அவ்விடமானது புழுதி நிறைந்துக் காணப்பட்டது என நற்றினைக் கூறுகின்றது. வெளிநாடுகளில் யானைகளுக்கு இடையில் கால்பந்து விளையாட்டை வைத்து வெற்றிப் பெற்ற யானைகளுக்குப் பரிசு வழங்குவதை நாம் தொலைக்காட்சியில் கண்டிருப்போம்.  அதைப் போல செக்குடியரசு நாட்டில் பராகுவே நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆசியாவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் யானை 12 ஓவியங்களை வரைந்திருக்கிறது.  அவ்வோவியங்களை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழில் (21.09.2012,ப.16) வெளியிடப்பட்டுள்ளது.  யானைகள் தண்னுணர்வு கொண்டவை.  தன்னையும், தன் இனத்தையும் விரைவில் அறிந்து கொள்ளும். யானைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என  நற்றினைக் கூறுகிறது.

                             “சிறு கண்யானைப் பெருங் கை ஈர் இனம்

                          குளவித் தன் இயம் குழையத் தீண்டி” (நற்.232:1-2)

          சிறியக் கண்ணையும், பெரிய கையையும் உடைய ஆண், பெண் யானைகள் பச்சை நிறமுடைய வயல்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் குளத்திலே குளிக்குமாம்.  அப்போது ஊடலின் காரணமாக இரு யானைகளும் மலை வாழையை உண்ணாது ஊடலைப் போக்க வழியைத் தேடிக் கொண்டிருக்குமாம்.  ஊடல் தீர்ந்தவுடன் பலா மரத்தினுடைய இனியப் பழத்தை உண்டு மகிழ்ந்ததாம்.  இப்படி உணர்வு மிக்க யானைகள் பல வாழ்ந்து வந்திருக்கிறது.

உணர்ச்சி மிகு வாழ்க்கை

    யானைகள் எப்போதும் தன் குடும்பத்துடன் சேர்ந்தே வாழும் பழக்கமுடையது. தன் குடும்பத்தில் வாழும் பிடிக்கும், கன்றுக்கும் பாதுகாப்பாக ஆண் யானைகள் இருந்து வருகின்றன.  சில நேரங்களில் மனிதர்களைப் போலவே அன்பைக் காட்டுவதில் ஒப்பற்றதாக யானைகள் விளங்குகின்றது.  கன்றுடன் பிடி நீருக்காக வந்து நின்றன. (நற்.105:4) என்றும்,

                              “பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப பத்தர்

                          புன் தலை மடப்பிடி கன்றொரு ஆர.” (நற். 92:6-7)

  பசுக்களுக்காக வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியிலே, களிற்றுயானையானது தன்னுடைய பிடியும், கன்றும் தண்ணீர் நிறைய உண்ணுமாறு செய்து தாகத்தைத் தீர்த்ததாம். பெண் யானையுடன் ஆண் யானையானது மிகுந்த விருப்பமுடன் சேர்ந்தது (317) என்றும், பிடியானது மிகுந்த வலியுடன் கன்று ஈனுகிறது.  பிடியின் வலியைப் பொறுக்க மாட்டாத ஆண் யானையானது வெளியே வந்து காத்து நின்றதாம்.  கன்று பிறந்தவுடன் கலங்கிய கண்ணீருடன் தன் பிடியையும்  கன்றையும் பார்த்தது(399:6-7) என்றும், கன்றை ஈன்ற பிடி பசியால் துடித்தது.

ஆண்யானை உணவுக்காகத் திணையைக் கவரச் சென்றது (393:2-4) பிறந்த இளம் கன்றுகள் தன் உடலை வேங்கை மரத்திலே தேய்த்துக் கொண்டதாம் (362:7) உணவுக்காக வெளியேச் சென்றிருந்த ஆண் யானை திரும்பி வந்து பார்க்கும் போது பெண் யானை இல்லாமல் போகவே; மனம் பயம் கண்டு பிளிருமாம் (317:1) ஒரு வேளை பெண் யானை இறந்தால், அவற்றைத் தாங்கிக் கொள்ளாத ஆண்யானையானது திணைக் காட்டிற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது (108:2) போன்றச் செய்திகள் நற்றிணையில் யானைகள் குடும்பம் நடத்தும் பாங்கினைச் சுட்டுகின்றது.  மனிதர்களுக்கு நிகராக அன்பு காட்டி உணர்ச்சி மிகுந்த வாழ்க்கையினை வாழ்ந்துக்கொண்டிருக்கிறது யானைகள் என்பதை அறியலாம்.

தொன்றுத் தொட்டு வரும் பகை

          நற்றிணையில் யானைக்கு பெரும்பகையாக புலியே இருந்து வருகின்றது.  கன்றுடைய வேழம் புலிக்கு பயந்து குட்டியைக் காத்து நின்றதாம். (நற்.85:5) யானையைப் பார்த்து புலி அஞ்சி ஓடியது (நற்.217:2) எனவும், சங்க இலக்கியங்களில் குறும்.141:4-5, 343:1-3, மலைபடு.307-309 கலி.38:6-7, 42:1-2, 48:1-7, 49:1-2, 52:1-4,  அகம்.332: 2-9 போன்ற செய்யுள்களில் யானையானது புலியைத் தாக்கிக் கொன்றச் செய்தி இடம் பெறுகின்றது. நற்றிணையில்,

                   தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்

                 கொன்ற யானைக் செங் கோடு கழாஅ.” (நற்.247:1-2)

          வலிமை மிகப் பெற்றுள்ள யானை தொன்றுதொட்டு வரும் பகையினால் சினந்து புலியைக் கொன்றதாம், நுழைய முடியாத குகையிடத்தில் யானை கரும்புலியைத் தாக்கிக் கொன்றது (நற்.151:2-3) போன்றச் செய்திகள் யானைக்கும் புலிக்கும் உள்ள தொடர்பை நினைவுப்படுத்துகின்றது. பல சிங்கங்கள் சேர்ந்து தனித்து வந்த யானையைக் கொல்லும்.  ஆனால், இதுவும் அரியதாகவே காணப்படுகிறது.  சங்க காலத்தில் புலிகளுக்கும் யானைகளுக்கும் சண்டை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பொதுவாக யானைகளை எந்தவொரு விலங்கும் வேட்டையாடுவதில்லை.

கடும் போராளிகள்

          ஆய் அண்டிரன் பல யானைகளை வைத்திருந்தான் (237), போர்க்காலங்களில் விரைந்து நடக்கும் யானைப் படைகள் இருந்து வந்தன (381, 43) காவல் மதிலைப் பலவற்றைச் சிதைக்கும் களிறுப் படைகள் (150)இருந்தன எனச்; செய்திகள் நற்றிணைப் பாடல்கள் கூறுகின்றன.  அக்கால மன்னர்கள் யானையின் மீது ஊர்ந்துக் செல்லவும். போர்க்களத்தில் யானைகளைப் பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்தார்கள்.

              “பொருத யானை வெண்கோடு கடுப்ப” (நற்.225:2)

முருகக் கடவுளின் வலிமையை ஒத்த சினமுடைய யானையானது போர்களத்திலேப் போரிட்டது. அப்போது அதனுடைய வெண்மையான தந்தம் குருதி படிந்து சிவந்திருக்குமாம்.  அப்படி சிவந்திருந்த குருதிப் படிந்த தந்தத்தை வேங்கை மரத்திலே குத்தி குத்தி துடைத்துக் கொள்ளுமாம் (நற்.202) இப்படி யானைகள் கடும் போராளிகளாக இருந்து வந்தன.

          யானைகளைக் கட்டிக் காப்பவருமான பாகர்கள் சரியான முறையில் உணவுக் கொடுத்தும் நன்றாகப் பாதுகாத்தும் வர வேண்டும்.  ஆனால் பாகர்கள் யானையை துருப்பு முள்ளாலேக் குத்தி துன்புறுத்தி தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் உண்டு.  அக்கால மக்கள் யானையை மதித்தார்கள்.  அதனால்தான் என்னவோ விநாயகர் கடவுளுக்கு யானையின் முகம் இட்டு போற்றி வணங்குகிறார்கள்.  இறைவன் படைத்த அரிய படைப்புகளில் யானையினங்களும் ஒன்று. அவற்றினைப் பாதுகாப்போம்; பாரம்பரியம் காப்போம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here