தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

     தொல்காப்பியம் செய்யுள் உறுப்புகள் 26+8=34 என்று குறிப்பிடுகின்றது. பிற்கால யாப்பியல் நூல்களான யாப்பருங்கலக்காரிகை, 8 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம்), யாப்பருங்கலம் 7 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு), காக்கை பாடினியம் மற்றும் இலக்கண விளக்கம் 6 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை), வீரசோழியம் 4  உறுப்புகளையும் (அசை, சீர், அடி, தொடை), கொண்டுள்ளது. பிற்கால யாப்பியல் நூல்களில் அசை என்பது பொதுவாக கூறப்பெற்றுள்ளது.  தொல்காப்பியர் அசையை நான்காகப் பகுக்கிறார். பிற்கால யாப்பியல் நூல்கள் அதை இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளன. செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான அசை எனும் உறுப்பை மையமாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொல்காப்பியர் கூறும் அசை வகைகள்

            தொல்காப்பியர் அசையை மூன்றாவது உறுப்பாகக் கொண்டுள்ளார். இதனை, இயலசை, உரியசை என்று குறிப்பிடுகிறார். மேலும், இயலசையையும் உரியசையையும் இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். இயலசை என்பது நேரசை, நிரையசை என்றும், உரியிசை என்பது நேர்பு, நிரைபு என்றும் குறிப்பிடுகிறார். இதனை,

                        “இயலசை முதலிரண் டேனவை உரியசை”

(தொல்.பொருள்,நூ. 314)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

                        “குறிலே நெடிலே குறிலினை குறில்நெடில்

                        ஒற்றொரு வருதலோடு மெய்ப்பட நாடி

                        நேரும் நிரையும் மென்றிசிற் பெயரே”

(தொல். பொருள், நூ. 312)

       என்று அசை வகைகளைக் குறிப்பிடுகிறார். மேலும், தொல்காப்பியர் உரியசையில் நேர்பு, நிரைபு எனும் இருவகை அசைகளை சுட்டுகிறார். இது நேரசையோடும் நிரையசையோடும் குற்றியலுகரம் அல்லது முற்றியலுகரம் ஆகிய இருவகை உகரமும் சேர்ந்துவரின் அவை நேர்பு, நிரைபு என்று கொள்ளப்படும் என்று குறிப்பிடுகிறார். இதனை,

“இருவகை உகரமோ டியந்தவை வரினே

நேர்பு நிரைபும் ஆகும் என்ப

குறிலிணை உகரம் அல்வழியான”

(தொல். பொருள், நூ. 313)

        எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. தொல்காப்பியத்திற்குபின் தோன்றிய பிற்கால யாப்பியல் நூல்கள் நேர்பு, நிரைபு எனும் அசை வகைகளைக் குறிப்பிடவில்லை என்பதை அறியமுடிகிறது. மேலும், நேர்பசை வரும் இடங்களை மூன்றாகப் பகுக்கிறார். அவை,

                        ♥ நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்ரசையாதல்

                        ♥  நெடில் ஒற்றைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்பசையாதல்

                        ♥ தனிக்குறில் ஒற்றினைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்பசையாதல்

என்று குறிப்பிடுகிறார். மேலும், நிரைபசை வரும் இடங்களை நான்காகப் பகுக்கிறார். அவை,

                       ♥  குறிலிணை தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥  குறிலினை ஒற்றினைச் சார்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥ குறில் நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥ குறில் நெடில் ஒற்றினைத் தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்.

என்று குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

யாப்பருங்கலம் – அசை வகைகள்

      எழுத்துக்கள் அசைந்து சேர்ந்து ஒலிப்பதால் இது அசை எனப்படுகிறது. மேலும், எழுத்துக்கள் தனித்து நின்றும் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து வருவதாலும் அசை உண்டாகின்றது. இதனை,

                        “எழுத்து அசைந்து இசைகோடலின் அசையே”

      எனும் யாப்பருங்கல விருத்தி. மேலும், அசை வகைகளை 1. நேரசை 2. நிரையசை என்று இரண்டாகப் பகுத்துக் கூறியுள்ளார், நேரசையை,

                        “நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும்

                        நடைபெறும் நேரசை நால்வகை யானே” (யா.க. நூ. 6)

       எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. குறில், நெடில் தனியாக வந்தும், அதனோடு ஒற்றடுத்து வந்தாலும் அது நேரசை எனப்படும். இதனை நான்காகக் குறிப்பிடுவதை அறியமுடிகிறது. மேலும், நிரையசையை,

                        “குறிலினை குறில்நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்

                        நெறிமையின் நான்காய் வருநிரை யசையே” (யா.க. நூ.8)

        எனும் நூற்பாவின் மூலம் இருகுறில் இணைந்து வந்தும் குறில் நெடில் இணைந்து வந்தும், இருகுறில் இணைந்தும் ஒற்றடுத்து வந்தும் குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வருதலும் நிரையசை என்று குறிப்பிடுகின்றார். இவர் நேரசைக்கும் நிரையசைக்கும் தனித்தனி நூற்பாக்களை கூறுகிறார். பிற்கால யாப்பியல் நூல்கள் இவை இரண்டையும் சேர்த்து ஒரே நூற்பாவாகக் கூறியுள்ளனர் என்பதையும்  அறியமுடிகிறது.

யாப்பருங்கலக்காரிகை  – அசை வகைகள்

            அசை வகைகளை குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும், வருவது நேர் அசை என்றும், நிரையசையை இருகுறில் இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், இருகுறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவது நிரையசை என்று குறிப்பிடுகின்றார். இதனை,

                        “குறிலே நெடிலே குறிலினை ஏனைக் குறில்நெடிலே

                        நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்

                        றறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல்

                        வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே” (யா.கா.5)

     என்று காரிகை / நூற்பாவின் மூலம் அறியமுடிகின்றது. மேலும், நூற்பாவிலேயே நேரசை, நிரையசைக்குரிய எடுத்துகாட்டுகளையும் சுட்டிச் சென்றுள்ளதையும் அறியமுடிகிறது. மேலும்,

            யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் நேர், நிரை அசைகளை சிறப்பசை, சிறப்பில் அசை என்று புதுப்பெயர் சூட்டியுள்ளார். எழுத்துக்கள் மொழியாகவே அமைந்து பொருள் பெற்று நிற்பது ‘சிறப்பசை’ என்றும், மொழிக்கு உறுப்பாக அமைந்து நிற்பன ‘சிறப்பில் அசை’ என்று வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

காக்கை பாடினியம் – அசை வகைகள்

            தொல்காப்பியருக்குப் பின் தோன்றிய காக்கை பாடினியம் அசையை நேரசை, நிரையசை என்று சுட்டாமல் தனியசை என்றும், இணையசை என்றும் இருவகையாகக் கையாண்டுள்ளார். இதனை,

                        “தனியசை என்றா இணையசை என்றா

                        இரண்டென மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே”  (கா. பா. நூ.5)

எனும் நூற்பாவின் வழி அறியமுடிகிறது. மேலும், இணையசை / நிரையசையில் இரண்டு நெடில் எழுத்துக்களோ அல்லது நெடிலை அடுத்து குற்றெழுத்தோ நிரையசையாய் வருதல் இல்லை என்று குறிப்பிடுகிறார். இதனை,

                        “நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்

                        இணையசையாதல் இலவென மொழிப” (கா. பா. நூ.6)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும், நேர்பு, நிரைபு ஆகிய அசைகளை இவர்கள் ஓர் அசையாகக் கொள்ளவில்லை. அவற்றையும் தேமா, புளிமா என்று ஈரசையாகவே கொண்டனர். இதற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களும் இந்த முறையையே கையாண்டுள்ளதையும் அறியமுடிகிறது.

இலக்கண விளக்கம் – அசை வகைகள்

            இந்நூல் ஐந்திலக்கண நூலாகும். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூல் யாப்பிலக்கணத்தில் அசை வகைகளைக் குறிப்பிடும்போது, ஏனைய பிற்கால யாப்பியல் நூல்களைப் போலவே நேர் அசை, நிரை அசை என்று குறிப்பிடுகின்றது. இதனை,

                        “நேர்நிரை என அசை ஓரிரண்டு ஆகும்” (இ.வி.நூ.713)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. நேரசை 4 என்றும், நிரையசை 4 என்றும் மொத்தம் 8 வகையாக குறிப்பிடுகின்றார். இதனை,

                        “நெடிலும் குறிலும் தனித்தும் ஒற்று அடுத்தும்

                        நடைபெறும் நேரசை நான்கு; நீங்காக்

                        குறிலினை குறில்நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும்

                        நெறிவரும் நிரையசை நான்கும் ஆகும்” (இ.வி. நூ.714)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

            குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேர் அசை என்று குறிப்பிடுகிறார். நிரையசையை குறில் இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், குறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவது நிரையசை என்று குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.

வீரசோழியம் – அசை வகைகள்

      வீரசோழியம் அசையை முதல் உறுப்பாகக் கொண்டுள்ளது. கலமும், காரிகையும் குறிப்பிடுவதைப் போன்றே அசையை நேர், நிரை என்று குறிப்பிடுகின்றது. இதனை,

                        “குறிலு நெடிலு மெனுமிசை நேரசை; குற்றெழுத்துப்

                        பெறின்முன் இவையே நிரையசை யாம்; பிழைப் பில்லைபின்பொற்

                        றிறினும்; அசையிரண் டொன்றின்முற் சீர்மூ வசையொன்றிநேர்

                        இறுவ தடைச்சீர்; நிரையிறிற் பிற்சீர் எனவியம்பே”   (வீ.சோ. நூ. 105)

எனும் நூற்பாவின் மூலம் இவரும் நேரசை, நிரையசை என்று இரண்டாகக் குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

தொகுப்புரை

    தொல்காப்பியர் அசை வகைகளை இயலசை 2 (நேர், நிரை), உரியசை 2 (நேர்பு, நிரைபு) என்று நான்காக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

      பிற்கால யாப்பியல் நூல்கள் அசை வகைகளை நேர், நிரை என்று இரண்டாகப் பகுத்துள்ளதை அறியமுடிகிறது. மேலும், நேர்பு, நிரைபு ஆகிய அசைகளை இவர்கள் ஓர் அசையாகக் கொள்ளவில்லை. அவற்றையும் தேமா, புளிமா என்று ஈரசையாகவே கொண்டனர். இதற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களும் இந்த முறையையே கையாண்டுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

      காக்கை பாடினியம் நேரசையை தனியசை என்றும் நிரையசையை இணையசை என்றும் குறிப்பிட்டுள்ளமையை அறியமுடிகிறது.

   ♥யாப்பருங்கலம் நேரசைக்கு ஒரு நூற்பாவும் நிரையசைக்கு ஒரு நூற்பாவும் தனித்தனியே கூறியுள்ளமையை அறியமுடிகிறது.

   ♥யாப்பருங்கலக் காரிகை அசைகளைக் கூறும் நூற்பாவிலேயே அதற்கான எடுத்துக்காட்டுகளையும் காரிகை ஆசிரியர் கூறிச்சென்றுள்ளதை அறியமுடிகிறது. மேலும், யாப்பருங்கல விருத்தியுரை அசை வகைகளை சிறப்பசை என்றும் சிறப்பில் அசை என்றும் வகைப்படுத்தியுள்ளதை அறியலாகிறது.

  ♥வீரசோழியமும், இலக்கணவிளக்கமும் ஒரே மாதிரியான அசை வகைகளைக் கொண்டுள்ளன. நேரசை 4, நிரையசை 4 என எட்டாக வகைபடுத்தியுள்ளதையும் அறியலாகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ல.திலிப்குமார்,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

அரசு ஆடவர் கலைக் கல்லூரி,

கிருட்டினகிரி – 635 001.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here