தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

           இக்காலத் திறனாய்வாளர் இலக்கியத்திற்குரிய உணர்ச்சிகளைப் பற்றிப் பலவாறு ஆராய்ந்து வருகின்றனர். அச்சம், அவலம், நடுக்கம், இரக்கம், காதல், வீரம் எனப் பலவாறாக இலக்கிய உணர்ச்சிகளைப் பிரித்து அறிகின்றனர். தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் மிகப் பழங்காலத்திலேயே தொல்காப்பியர் மனித மனத்தில் தோன்றும் முக்கிய உணர்ச்சிகளை எண் வகையாகக் கண்டறிந்து அவை புறத்தே புலனாகும் வண்ணங்களை விளக்கி உள்ளார். உணர்ச்சிகள் பற்றி அவர் கூறுவன இடம் பற்றியும், காலம் பற்றியும் எழும் பல்வேறு வகையான இலக்கியங்களுக்கும் பொருந்தி வருவனவாக உள்ளன. அவர் கூறும் எண்வகை உணர்ச்சிகளுள் மனிதனின் உணர்ச்சிகள் அனைத்தும் அடங்கும் எனலாம். தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்.


            உணர்ச்சியினைத் தொல்காப்பியர் மெய்ப்பாடு என்று குறிக்கின்றார். மெய்ப்பாடாவது மற்றவர்க்குப் புலனாகும் வண்ணம் மெய்யின் கண் (உடம்பின் கண்) வெளிப்படுவதாகும். இளம்பூரணர், ‘மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடு ஆயிற்று என்பார். ‘ அஃதாவது அச்சம், வெகுளி போன்ற உணர்வுகள் உள்ளத்தின்கண் முதற்கண் தோன்றிப் பின் காண்போர்க்குத் தெரியும் வண்ணம் மெய்யின்கண் படுதலாகும். செய்யுள் செய்யும்போது சுவைபடச் செய்வதற்கு இம்மெய்ப்பாடுகள் இன்றியமையாதன என்பது முன்னையோர் கருத்தாகும்.

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

            இனி, தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் காண்போம்.


நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

(மெய்ப்பாட்டியல்.3)

அஃதாவது நகை, அழுகை, இழிப்பு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என மெய்ப்பாடு என் வகைப்படும். செயிற்றியனார் என்பார்,


“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே”


என்று கூறியிருப்பதும் ஈண்டு உணரத்தக்கது.

எட்டு வகையான உணர்ச்சிகள்

            எண்வகை உணர்ச்சிகளை எடுத்துக்காட்டிய தொல்காப்பியர் ஒவ்வொரு மெய்ப்பாடும் இன்னின்ன காரணங்களால் எழுவன என்பதையும் விளக்கிச் சொல்லியுள்ளார். இன்றைய திறனாய்வுத் துறையில் நுழைவோர் தொல்காப்பியரின் செய்திகளை அறிந்து கொள்வது பயன் மிக்கதாகும்.
தொல்காப்பியர் கருத்துப்படி,

♣ நகை என்பது எள்ளல், இளமை பேதைமை, மடைமை ஆகியவை காரணமாக எழும்

♣ அழுகை என்பது பிறர் தன்னை எளியன் ஆக்கு தலாகிய இழிவு, இழவு, தளர்ச்சியாகிய அசைவு, வறுமை ஆகியவை ஏதுவாகப்பிறக்கும்.

♣ இளிவரல் என்பது மூப்பு, பிணி, வருத்தம், நல்குரவாகிய மென்மை ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣மருட்கை என்பது புதுமை பெருமை (பெருத்தல்), சிறுமை (மிகவும் நுண்ணியவாம்தன்மை). ஒன்றன் பரிணாமமாகிய ஆக்கம் ஆகியவை காரணமாகப் பிறக்கும்

♣ அச்சமாகிய மெய்ப்பாடு, அணங்கு (தெய்வம்), விலங்கு, கள்வர், இறை (ஆசான், தந்தை) ஏதுவாகப் பிறக்கும்.

♣ பெருமிதமாகிய மெய்ப்பாடு, கல்வி, தறுகண்மை (வீரம்) புகழ், கொடை ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

♣வெகுளி என்பது உறுப்பறை (அங்கமாயினவற்றை அறுத்தல்), குடிகோள் (கீழ்வாழ்வாரை நலிதல்), அலை (அலைத்தல் வைதலும் புடைத்தலும்), கொலை புலன் (ஐம்புல நுகர்ச்சி) மகளிரொடு புணர்தல், விளையாட்டு ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣ உவகையாவது. செல்வம், ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

மேற்கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளோடு வேறு வகையான பல மெய்ப்பாடுகளையும் தொல்காப்பியர் குறித்துக் காட்டுகின்றார்.

அவையாவன:

உடைமை: ஒரு பொருளுக்கு உடைமை கொண்டதால் நிகழும் மன நிகழ்ச்சி.

இன்புறல்: நண்பராகிப் பிரிந்து மீண்டும் வந்தோரைக் கண்ட வழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது.

நடு நிலைமை: சமன்செய்து சீர்தூக்கும் கோல் போலமைவது.

அருள்: எல்லா உயிரிடத்தும் அன்பு செய்தல்.

தன்மை: சாதி இயல்பு.

அடக்கம்: மனமொழி மெய்களால் அடங்குதல்.

வரைவு: செய்யத் தக்கனவும், நீக்கத் தக்கனவும் அறிந்து ஒழுகும் ஒழுக்கம்.

அன்பு: பழகுவாரிடம் செல்லும் ஒருவகைப் பற்று.

கைம்மிகல் :  குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல்

நலிதல்: பிறரை நெருக்குதல்.

சூழ்ச்சி: எண்ணங் காரணமாக நிகழும் நிகழ்ச்சி.

வாழ்த்தல் :  பிறரை வாழ்த்துதல்

நாணல்: தமக்குப் பழியாய் வருவனவற்றைச் செய்யாமை

துஞ்சல்: உறக்கம்

அரற்று :  உறக்கத்தின் கண் வரும் வாய்ச்சோர்வு.

கனவு :  நனவு போல ஒன்றைக் காண்பது.

முனிதல் :  வெறுத்தல்

நினைத்தல்: கழிந்ததனை நினைத்தல்.

வெரூஉதல்: அச்சம் போல நீண்ட நேரம் நில்லாது திடீரென்று தோன்றி மறைவதோர் குறிப்பு. இதனைத் ‘துணுக்கு” என்பர்.

மடி: சோம்புதல்.

கருதல்: மனத்தால் ஒன்றைக் குறித்தல்.

ஆராய்ச்சி :  ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மையது என ஆராய்தல்.

விரைவு: ஒன்றைச் செய்ய நினைத்து அது நிறைவேறக் காலத்தாழ்வு நேரின் அதன் பயனை எய்யா நிலையில் விரைந்து முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி.

உயிர்ப்பு: முன்புவிடும் அளவு இன்றி மூச்சினை நீளவிடுதல்.

கையாறு: காதலர் பிரிந்தால் வரும் துன்பம் போல்வது.

இடுக்கண்: துன்பமுறுதல்.

பொச்சாப்பு: மறத்தல்

பொறாமை: பிறர்க்கு ஆக்கம் முதலாயின உண்டாகும்போது அதனைப் பொறுக்காமையினால் நடக்கும் மன  நிகழ்ச்சி.

வியர்த்தல்: தன் மனத்தில் சினம் தோன்றும் போது பிறப்பதோர் புழுக்கம்

ஐயம்: ஒரு பொருளைக் கண்டபோது இன்னது எனத் துணியாத நிலைமை.

மிகை: ஒருவனை நல்ல வண்ணம் மதிக்காமை.

நடுக்கம்: ஏதேனும் ஒரு பொருளை இழக்கின்றோம் என எண்ணுவதால் நடக்கும் மன நிகழ்ச்சி

            மேற்கூறிய மெய்ப்பாடுகள் பலவும் மாந்தரின் உண்மை வாழ்க்கையில் பெரும்பாலும் நிகழ்வனவாகும். மனித வாழ்க்கை பற்றி வரும் இலக்கியத்திலும் அம் மனிதரின் உணர்வுகள் இடம் பெறக்கூடும். ஆதலின், தொல்காப்பியர் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளாகவே கொள்ளலாம். இன்றைய இலக்கியத் திறனாய்வில் இன்னமும் விளக்கப்படாமல் இருக்கும் சில உணர்ச்சிகளும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாட்டியலில் உள்ளனவாதலின் இம் மெய்ப்பாட்டியல் திறனாய்வுத் துறையில் மேன் மேலும் ஆராய வேண்டிய ஒன்றாகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் வாயிலாக உணர்த்தும் உணர்ச்சிகள் அனைத்தும் இலக்கிய உணர்ச்சிகளே.

இலக்கிய உணர்ச்சிகளை மதிப்பிடுதல்

            ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறக் கூடும் உணர்ச்சிகளுக்கு முதற்காரணமாக விளங்குபவர் அவ்வகை இலக்கியப் படைப்பாளரே ஆவர். படைப் பாளரின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்து வெளிப்படும் அளவில் படைப்பாளர் முதற்காரணமாக விளங்குகின்றார். படைப்பாளரின் உணர்ச்சியானது கலை வடிவம் பெற்ற பிறகு அவ்வுணர்ச்சிக்கு மீண்டும் ஆளாவது பயில்வோரின் மனமே ஆகும்.

            படைப்பவரின் மனம் உணர்ந்து வெளியிட்டது போலவே பயில்வோரின் மனமும் உணர்ந்து பயன்பெறுமாயின் இலக்கிய வகை வெற்றி பெற்றது எனக் கொள்ளலாம். எனவே, படைப்பவருக்கும் பயில்பவர்க்கும் இடையே உள்ள கலைஉலக ஓர் இலக்கிய வகையில் இடம் பெறும் உணர்ச்சிகளானவை வெற்றிடத்தை நிறைவு செய்யும் ஒரு கருவி எனலாம். கலை வடிவாக விளங்கும் உணர்ச்சியானது பயில்வோரை எந்த அளவுக்கு ஈர்த்து இசைவித்து இயக்குகின்றதோ அந்த அளவுக்கு இலக்கியப் படைப்பில் உணர்ந்து உணர்த்தும் உணர்ச்சிகளைப் பொதுவாக சில நெறிமுறைகளைக் கொண்டு ஆற்றலுடன் விளங்குவதாகக் கொள்ளலாம். படைப்பாளர் தம் மதிப்பிட முடியும்.

            இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சியாவது, படைப்பாளரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து எழுத்தாய் வழிந்தோடிக் கலைவடிவம் பெற்றவுடன் அழகுருவம் பெற்றுப் பயில்வோரின் உள்ளத்தே பற்றிப் படர்ந்து மீண்டும் செயற்படும் ஒன்று எனலாம். கலை உருவம் மலர்வதற்கு எந்த உணர்ச்சி காரணமாக இருந்ததோ அந்த உணர்ச்சியே பயில்வோரின் கலை அனுபவத்திற்கும் காரணமாகின்றது. உணர்ச்சியின் இயல்பும் தரமும் கூடக்கூட அஃது இடம்பெறும் இலக்கியத்தின் சிறப்பும் கூடுகின்றது. அவ்வாறாயின் இலக்கியத்தில் வரும் உணர்ச்சிகளுக்கென்று அமைந்த இயல்பும் தரமும் யாவை என அறிதல் வேண்டும் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட ஒரு முறையில் உருவாகித் தோன்றும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியானது அக்குறிப்பிட்ட சூழ்நிலையோடு அக்குறிப்பிட்ட முறையில் மிகப் பொருத்தமாகவும் மிக இயற்கையாகவும் இலக்கியப் படைப்பில் வெளிப்படுவதே அவ்வுணர்ச்சியின் இயல்புக்கு உரிய அளவுகோல் எனலாம்.

            மனித உள்ளங்கள் அனைத்துக்கும் பொதுவாய் இருப்பதும்; இடவேறுபாடு. காலவேறுபாடு ஆகியவற்றைக் கடந்து மனித உள்ளத்தை இளகச் செய்து இயக்க வல்லதாய் இருப்பதும் இலக்கிய உணர்ச்சியின் தரத்திற்குரிய அளவுகோல் எனலாம். உணர்ச்சி நன்றாக உள்ளது என்பதற்கு அடையாளம் பயில்வோரின் கவனத்தை ஆழமாக ஈர்ப்பதே ஆகும். ஆழமாக ஈர்ப்பதோடு முருகியல் சுவையோடும் கலந்து வருமாயின் மிக்க பயன் விளைகின்றது. உணர்வைப் பெருக்கி உள்ளத்தை ஈர்ப்பதோடு பண்பால் உயர்த்தவும் செய்யுமாயின் அவ்வுணர்ச்சி தலையாய உணர்ச்சி எனலாம். இந்நிலையில் கலைப்படைப்பில் ஈடுபடும் நாம் உணர்வால் நெகிழ்ந்து உள்ளத்தால் உயருகின்றோம்.

            கவிதையாயினும் நாடகமாயினும் காவியமாயினும் புதினமாயினும் மேற்கூறிய தலையாய உணர்ச்சிகளோடு விளங்கும்போது மனித சமுதாயம் கலையால் பண்பட்டு உயருகின்றது. இப்பண்பாட்டை உருவாக்கவல்ல உணர்ச்சிகளை நல்ல தரமான உணர்ச்சிகள் எனலாம். இலக்கியத்தில் இடம் பெறும் நல்ல உணர்ச்சி என்பது படைப்பாளரின் கலையாக்கத் திறனுக்கு ஒரு முத்திரையாய், ஒரு நல்ல அடையாளமாய் விளங்குகின்றது. எனவே, உணர்ச்சிப் பகுதிகள் மிகுதியாக வரும் இலக்கியமானது வெற்றி பெறுவது அதன் ஆசிரியர் அவ்வுணர்ச்சிகளின் இயல்பையும் தரத்தையும் நன்கு அறிந்து கலையாக வடித்தெடுக்கும் ஆற்றலைப் பொருத்ததாகும்.

            வின்செஸ்டர் என்பார் பின்வரும் ஐவகை உணர்ச்சிகளை உடைய இலக்கியம் நெடிது வாழும் எனக் குறிக்கின்றார்:

1. நியாயமான, தக்க உணர்ச்சி; நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.

2. ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.

3.தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உணர்ச்சி; பொருந்தாததும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி கொண்டு வரப்படாமல் இயல்பாக அமைவது

4 வாழ்க்கையின் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் அமைதல்,

5, மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய், நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்

            இலக்கியத்தில் பலப்பல வகையான உணர்ச்சிகள் இடம் பெறலாம்; எனினும் அவற்றுள் சிலவே படைப்பாளர் பலராலும் விரும்பிக்காட்டப் படுவனவாகவும் பயில்வோரால் விரும்பிப் பயிலப்படுவனவாகவும் உள்ளன. அச்சம், நடுக்கம், காதல், இரக்கம் ஆகிய உணர்ச்சிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகள் குறித்து டாக்டர் மு.வரதராசனார் கூறுவது ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

            ‘இலக்கியத்தில் பலவகையான உணர்ச்சிகளும் இடம் பெறுகின்றன. எனினும், மகிழ்ச்சி. வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றைவிட, அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளை உடைய இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது. சேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களை விடத் துன்பியல் நாடகங்கள் மிகப் போற்றப்படுகின்றன. நாடக மேடையில் இன்பக் காட்சிகளைவிடத் துன்பக் காட்சிகளைக் காணும்போது, மக்கள் உள்ளம் ஒன்றியவராய் உள்ளனர். காரணம் என்ன? கலைஞரின் உள்ளம், அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அவர்கள் படைக்கும் கலைகளிலும் அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையனவாக அமைகின்றன. ஆகவே, கலையை நுகரும் மக்களும் அவற்றில் ஆழ்ந்து ஒன்றிவிடுகின்றனர்.

            உணர்ச்சிகளுள் எந்த ஓர் உணர்ச்சியைக் கலைஞர் தம் படைப்பில் அமைத்துக் காட்டினாலும் அவ்வுணர்ச்சியின் இயல்பும் தரமும் நன்கு அமைந்து பயில்வோரின் உணர்வுக்கு நல்ல கலைவிருந்தாய் அமைவது இன்றியமையாதது இங்ஙனம் அமைவதற்கு அடிப்படையாக, படைப்பாளர் முதற்கண் அதன்கண்ட ஆழத்தோய்ந்து நீடுநினைந்து கலைக்குரிய கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்துதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தூண்டுதலால் எழுத்தாளரின் உணர்ச்சி தட்டி எழுப்பப்படினும் அவர் அவ்வுணர்ச்சிக்கு ஆளாவது போலவே நல்ல வடிவத்தோடு அதனை வெளிப்படுத்தக் கூடிய மன நிலையோடு கட்டுப் படுத்தவும் வேண்டும்.

            அப்போதுதான் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி தம் உள்ளத்தே ஆழப்பதிந்து தாக்கும்போது அத்தாக்குதலால் தான் சிதறுண்டு போகாமல் ஒருமுகப்பட்டு நின்று நல்ல வடிவம் தந்து படைத்துக்காட்ட முடியும். இந்தக் கலை வித்தகம் எழுத்தாளனிடம் அமைந்திருப்பதால்தான், பாட்டிற்கு ஓர் ஒலி நயமும் காவியத்திற்கு ஓர் இயைபும் நாடகத்திற்கு நல்ல ஒருமைப்பாடும் புதினத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கமும் சிறுகதைக்கு ஒருமுக இயல்பும் அமைய முடிகின்றது. இல்லையேல் இவற்றில் அமையக்கூடும் அறிவுக் கூறும் உணர்ச்சிக் கூறும் ஒன்றோடொன்று முட்டி மோதி முரண்பட்டு நின்று கலையின் கட்டுக்கோப்பைக் குலைத்துவிடும். வோர்ஸ் வொர்த்து என்பார் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இயற்கையாக எழுந்து கரை புரண்டோடும் ஆற்றல்சால் உணர்வுகளை அமைதி நிலையில் மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்து வெளிப்படுத்துவதே கவிதை” என்று கூறியது ஈண்டுச் சிந்தனைக்கு உரியதாகும்.

            கவிதை, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகள் பலவற்றுள் வரும் உணர்ச்சிகளைப் பொதுவாக இரண்டாகப் பகுக்கலாம். ஒருவகை: இலக்கியக் கலைஞன் தான் உணர்ந்த உணர்ச்சிகளாகவே வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றொரு இலக்கியக் கலைஞன் தான் படைத்துக்காட்டும் கதை வகை மாந்தரின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகள். இவை இரண்டுக்கும் படைப்பாளனின் கலைமனமே ஊற்றுக்களம் எனினும் அவன் எடுத்துக் கொள்ளும் இலக்கிய வகையின் அமைப்பிற்கேற்ப, தான் கலந்தும் கலவாதும் இருக்கின்றான். ஆதலின் உணர்ச்சிகளை மேற்கூறிய வண்ணம் இரண்டு விதமாகப் பிரிக்க முடிகின்றது. இனி இரண்டு சான்றுகளைக் காணலாம்.

காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறியபோதெல்லாம் பயந்தேன்

ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்

கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்.

வீணுறு கொடியர் கையினில் வாளை விதிர்த்தல் கண்(டு) என்என  வெருண்டேன்.

(ஆறாந்திருமுறை, பிள்ளைப் பெரு விண்ணப்பம்-60)


            இப்பாட்டு அருட் பிரகாச வள்ளலார் உயிர்கள் படுந்துன்பத்தைக் கண்டு இரங்கி வருந்திய நிலையில் தம் உணர்ச்சிகளாகவே பாடிய பாட்டாகும்.


நின்மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலமெல்லாம்

உன்வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன்

என் மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும்

நன்மகன் இந்தநாடு இறவாமை நய என்றான்.

(அயோத்தியா காண்டம், கைகேயிசூழ்வினைப் படலம்-36)


            பரதன் நாடாள இராமன் காடாள வேண்டும் என்று கைகேயி வரங் கேட்டவுடன் துணுக்கமுற்று வேதனையால் வெய்துயிர்த்துத் தன் மகன் நாடு கடந்து செல்லாதிருக்கவாவது உதவுமாறு அவளைக் கெஞ்சிக் கேட்கும் தயரதனின் உணர்ச்சிகளாகக் கம்பர் பாடியுள்ள பாட்டாகும் இது.

            மேற்கூறிய இரண்டு வகையில் அல்லாது மூன்றாவது முறையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறும் உணர்ச்சிப் பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உணர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றோ அல்லது ஒருவரோ அங்ஙனம் உட்பட்ட பிறகு அடையும் மெய்ப்பாடுகளை வருணனை முறையில் விரித்தோ விளக்கியோ இலக்கியக் கலைஞர் காட்டலாம். இவ்வாறு காட்டும் போதும் மாந்தரின் அல்லது மற்றவற்றின் உணர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தால்

தாங்கினள் மலர்க்கண் மிசை ஒற்றினள் தடந்தோள்

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ(டு)

ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே

சுந்தர காண்டம், உருக்காட்டு படலம், 66


            கணையாழியை அனுமன் இராகவன் கொடுத்தனுப்பிய சீதையிடத்தில் கொடுத்தவுடன் அவள் பெற்ற உள்ளத்து உவகையினைக் கம்பர் ஈண்டுச் சித்திரித்துக் காட்டுகின்றார். உணர்ச்சியால் நிகழும் செயல் முறை பற்றிய இத்தகைய ஓவியங்கள் வாயிலாகவும் நாம் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளைக் கண்டுகொள்ள முடிகிறது. சிறப்பாக, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகளில் கதை மாந்தரின் நடிப்பு அல்லது செயல் முறைகளை இலக்கியக் கலைஞர் தாமே விரித்துக் காட்டுவதின் வாயிலாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

            எல்லா வகை இலக்கியங்களிலும் உணர்ச்சிகள் இடம் பெறலாம். எனினும் காவியம் நாடகம் போன்றவற்றில், அவை இன்றியமையாதனவாகும் வயலுக்கு உரம்போலவும் பாட்டுக்குப் பண் போலவும், இலக்கியக் கலைஞனின் கருத்துக்கு வளமூட்டி வலிவும் பொலிவும் ஊட்டுவது உணர்ச்சியேயாகும். புதினம், நாடகம் போன்றவற்றில் கருத்துக்கும் இடம் உண்டு; உணர்ச்சிக்கும் நிறைய இடம் உண்டு. காரணம் அவற்றில் பெரும்பாலும் ஒருவரோ, இருவரோ இடம் பெறுவதில்லை; பல்வகைமாந்தரும் இடம் பெறுகின்றனர்.

            அதனால் பல்வகை நிகழ்ச்சிக்கும் செயல்களுக்கும் நிரம்ப வாய்ப்பு ஏற்படுகின்றது இந்நிகழ்ச்சிகளையும் செயல்களையும் கலை ஒருமைப்பாடு அமையுமாறு நடத்திச் செல்வதற்குக் காவியக் கலைஞர் அல்லது புதின எழுத்தாளர்க்கு நல்ல வளமான கற்பனை வேண்டும். எனவே பலவற்றையும் ஒன்றோடொன்று இயைபுற அமைத்துக் கலையின் கட்டுக்கோப்பு சிறிதும் சிதையாவண்ணம் படைத்துக் காட்டுவதாகிய கற்பனைக்கு மிகுதியான இடம் காவியம், புதினம் போன்றவற்றில் இருப்பதால் இவற்றைக் கற்பனை இலக்கியம் என்றும் சொல்லலாம். இக்கற்பனை இலக்கியங்களில் கதை மாந்தர் தத்தமக்கே உரிய வண்ணம் பலப்பல வகையாக அமைந்த வெவ்வேறு உள் நோக்கங்களாலும் உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டுச் செயல்படுகின்றனர்.

            அச்செயற்பாடுகளுக்கு ஏற்ற வண்ணம் நிகழ்ச்சிகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. சுருங்கக் கூறின், செயல் முறைகளுக்கு அடிப்படையாக அமையும் கதை மாந்தரின் உணர்ச்சிச் சிக்கல்கள்; கற்பனை இலக்கிய வகைகட்கு இன்றியமையாதனவாகும். படைக்கும் இலக்கியக் கலைஞர் தாம் படைத்துக் காட்டும் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அவரவர்க்கு உண்டாக வல்ல உணர்ச்சியின் தன்மையை நன்கு அறிந்து நல்ல தரத்தோடு கலை வடிவமாக வடித்தெடுத்துக் காட்ட வேண்டும்.

நன்றி

ஆசிரியர் : இலக்கியத்திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here