தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக்கலைப் பங்களிப்பு

தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக்கலைப்
முன்னுரை
          தமிழ்ப் பண்பாட்டில் முழுமை பெற்றக் கலை வடிவமாகத் தெருக்கூத்துக் கலை விளங்குகிறது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒரே இடத்தில் இணையும் ஆதி கலை. கூத்தாடுநர், களரி (கூத்தாடும் இடம்), எழுத்துப் பிரதி, பார்வையாளன் ஆகிய நான்கும் கூத்துக் கலைக்கு அடிப்படையானவை என்கிறார் கூத்தியல் ஆய்வாளர் முனைவர் கி.பார்த்திபராஜா. இம்மண்ணில் கலை உயிரொட்டமாக விளங்குகின்றது என்றால் அதற்கு அடித்தளமாக இருப்பவன் கலைஞன். கூத்துக் கலைப் பரப்பென்பது, தமிழ்க் கலைப் பரப்பில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் வாழ வைப்பது கலைகள். அக்கலைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வாழ்ந்தவர்கள் பலர். தொன்று தொட்டக் கலை மரபில் கூத்துக்கலைக்கென்றே தனியான தாகமும் வேகமும் உண்டு. தெருக்கூத்து இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வருவதற்குக் காரணம் கூத்துக்கலைஞர்கள். அக்கூத்துக் கலைஞர்களின் வழியில் வந்தவர் பண்டிதர் மு.மணியன். பன்னெடுங்காலமாய் தெருக்கூத்துக்கலை வாழ்க்கைகென்றே தன்னையும் தனது சந்ததியினரையும் அர்ப்பணித்துக்கொண்ட நிகழ்த்துக் கலைஞர் ஒருவரின் வாழ்கை வரலாற்றை இவ்வெழுத்துக்கள் திறம்பட விளக்குகின்றன. தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக் கலைப் பங்களிப்பு எனும் பொருண்மையிலமைந்த இக்கட்டுரை, பண்டிதர் மு.மணியனிடம் கண்ட நேர்காணல் மூலம் கிடைத்த தரவினடிப்படையில் அமைந்ததாகும்.

தெருக்கூத்துக் கலைஞர் மு.மணியனின் வாழ்வும் பணியும்
         கள்ளக்குறிச்சி மாவட்டம், குடியநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பண்டிதர் மு.மணியன். இவர் வயதை அரிதியிட முடியவில்லை. அவரைக்கேட்கும் போது 85 வயதிற்கு மேல் இருக்கும் என்கிறார். இவர் ந.கோவிந்தனுக்குப் பங்காளி ஆவார். கோவிந்தன் எனக்கு நான்கு வயது சின்னவன் மணியன் என்கிறதை வைத்துப்பார்க்கும் போது, இவர் கி.பி.1937 இல் பிறந்திருத்தல் வேண்டும். மணியன் முடித்திருத்தும் தொழிலாளி. இவரின் வயதை 86 எனலாம். மணியனின் தந்தை கோ.முத்துசாமி பண்டிதர் (முத்தான்), தாய் மு.பெரியம்மாள் ஆவர். இவருக்கு இரண்டு மனைவியர் 1. ஆண்டாள், 2.கொளஞ்சி. இரண்டு குழந்தைகள் ஒரு ஆண், ஒரு பெண். மணியன் தனது அப்பா காலத்திலிருந்தே தெருக்கூத்து, மேடை நாடகம் (ட்ராமா) போன்றவற்றில் பெண் வேடமிட்டு ஆடுவாராம். இவர் காலத்தில் நடைபெற்ற பல கூத்துக்களைப் பட்டியலிட்டுத் தருகிறார். நாடகத்தில் பிரத்தேயமாக பெண் வேடமிட்டு ஆடுவேன் என்பதை பெருமையோடு சொல்கிறார். தமிழ்க் கூத்து மரபில் இதிகாசங்களான பாரதம், இராமாயணம் இல்லாமல் கூத்தே நடைபெற்றதில்லை எனலாம். குடியநல்லூரில் பல நாடகக் கலைஞர்கள் இருந்து தமிழ் கூத்து மரபிற்கு உரமிட்டுடிருக்கின்றனர். அதனை மணியன் மிகவும் நேர்த்தியாகக் கூறிகிறார்.  இவர் தனது 16 வயதிலேயே கூத்தாட வந்தவர். கூத்து ஆடுவது எனக்கு பிடித்த பழக்கங்களுள் ஒன்று என இவர் கூறுவதிலிருந்தே கூத்திற்கே தன்னை அர்ப்பணித்தவர்கள் மணியன் பரம்பரையினர் என்பது புரிகிறது.

     திருக்கோயிலூர் வட்டம், ரிஷிவந்தயம் காத்தமுத்து ஆசாரி என்பவர் மணியன் போன்றோர் பின்னாளில் கூத்து வாத்தியார்களாக மாற வழிவகுத்துள்ளார் என்பது தெரிகிறது. காத்தமுத்து ஆசாரியிடம்  கூத்துக் கற்றுக்கொண்ட மூத்த மாணவராக இருந்தவர் குடியநல்லூர் நாடகக் கலைஞர் மண்ணாங்கட்டி ஆசாரி ஆவார். இச்செய்தியை மணியன் கூறுகின்றார். மணியனின் கூத்துக் கலைப்பங்களிப்பு பாராட்டற்குறியது. இவர் சம்பூர்ண ராமாயணம் மேடை நாடகத்தில் சூர்ப்பனகை வேடமிட்டு நடித்துள்ளார். இந்நாடகத்தை ஒருங்கிணைத்துப் பயிற்றுவித்த கூத்து வாத்தியார் நாடக வித்துவான் காத்தமுத்து ஆசாரி ஆவார். சம்பூர்ண ராமாயணத்தில் மணியனோடு சேர்ந்து வேடமேற்று நடித்தவர்கள் 25 நபர்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. அவர்களைப் பட்டியலிடுகிறார் கலைஞர் மு.மணியன்.

சம்பூர்ண ராமாயணத்தில் மணியனோடு நடித்த கலைஞர்கள் : (15 பேர்)
1.மொச்சைக் கொட்ட உடையார் ( இராமர்)

2.சுப்பிரமணிய உடையார் (சீதை, கைகேயி)

3.செக்காமூட்டு சந்தரகாசு (இலஷ்மணன், பரதன்)

4.மண்ணாங்கட்டி ஆசாரி (சுப்பிரமணிய ஆசாரி) – (விபீஷ்ணன், சுக்ரீவன்)

5.இராஜகோபால் நாய்க்கர் (அனுமார்)

6.சந்தூட்டு பெரியதம்பி உடையார் (தாடகை, மரவுரி சீதை)

7.பரியேறி வீட்டு பாவடை (கலியாண சீதை)

8.உம உடையான் (வேலாயுதம்) – சுமித்திரை

9.தரவுகாரமூட்டு முருகேச உடையார் – தசரதன்

10.பூசாலிவூட்டு கண்ணன் (மோகினி)

11.சூரசங்கு உடையார் (மோகினிராஜா)

12.மடத்தொடையார் (இராவணன்)

13.மினியன்(முனியன்) – கும்பகர்ணன்

14.கொறவன்(பிச்சக்காரன்) – அய்யாமூகி, அசோமுகி

15.வண்ணாமூட்டு நடேசன் (இலஷ்மணன் பாலகாண்டத்தில்)

    இப்பதினைவரை மட்டும் சொல்லிவிட்டு பாதிபேரை மறந்து விட்டேன் என்கிறார் மணியன். இராமாயண ‘ட்ராமா’ தமிழகத்திலேயே யாரும் நிகழ்த்த முடியாத ஒரு பிரம்மாண்டம் என அவர் மனமுருகி சொல்லிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இராமாயணம் கூத்தாகவும் நிகழ்த்தப் பெற்றது என்பதையும் உரைக்கின்றார். இராமயணம் தெருக்கூத்தாக, சூர்ப்பணகை கர்வ பங்கம், வாலி மோட்சம் என்ற பெயர்களில் குடியநல்லூர் மட்டுமல்லாது எல்லா ஊர்களிலும் ஆடக்கூடிய சிறப்புக் கூத்துகளாகும் என்ற செய்தியை அவர் தரும் தகவல்களில் காணமுடிகிறது.

பண்டிதர் மு.மணியன் வேடமிட்டு நடித்த நாடகங்கள்
     மு.மணியன் இராமாயணத்தில் இராமரின் தாய் கோசலையாகவும், இராவணனின் தங்கை சூர்ப்பனகையாகவும், இராவணனின் மனைவி மண்டோதரியாகவும் இராமாயண காண்டக் காட்சிக்கேற்ப தனது வடிவத்தை மாற்றியமைத்து ஆடிய கலைஞன். மணியன் பார்ப்பதற்கு எளியவர். பழகுவத்றகு இனியவர் என்று குடியநல்லூர் சூடாமணி அம்மாள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. மணியன் இராமாயணம் மட்டுமல்லாது பாரதத்தையும் நன்குக் கற்றுத்தேர்ந்தவர். பாரதத்தில் பல நாடகங்களை ஆடியுள்ளதாகத் தெரிகிறது. அவர் ஆடிய பாரதக் கதைகளில் ஒன்று ‘போர்மன்னன் சண்டை’ ஆகும். இந்த நாடகத்தை இன்று போத்துராஜா சண்டை என்ற பெயரில் நிகழ்த்துகின்றனர். இப்போர்மன்னன் சண்டை பாரதக் கிளைக்கதைகளில் ஒன்று. போர்மன்னன் கூத்தில் நாடகக் கலைஞர் மணியன் பாஞ்சாலி (திரௌபதி) வேடமிட்டு நடித்துள்ளார். புராண இதிகாசப் பாடல்களை அவருக்கு உடல் நிலை முடியாத காலத்திலும் பாடியே ஆகவேண்டுமென்ற ஆர்வத்தோடு இன்றும் படிவருவது  போற்றுதலுக்குறியது.
           
    இன்னும் பல நாடகங்களை நடித்துக் காட்டியுள்ளார். சிறுதொண்ட நாயனார் சரித்திரக் கூத்தை தெருக்கூத்தாக நடித்துள்ளார். இந்நாடகத்தில் சிறுதொண்ட பக்தனுக்கு மனைவி வெங்காட்டு நங்கையாக வேடமிட்டு நடித்துள்ளார்.
சம்பூர்ண ராமாயணத்தில் சூர்ப்பனகையின் கதையமைப்பை விளக்க முனைகிறார் மணியன். இராமாயணத்திலேயே சூர்ப்பனகை தான் நல்லவள் என்று அவர் கூறுவதை நுணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. இராமாயணக்கதை இருவரால் இயங்கியது எனலாம். ஒருவர் கூனி மந்தரை, மற்றொருவர் சூர்ப்பனகை. இந்த இரண்டு கதாப்பாத்திரங்கள் இல்லையானால் இராமாயணக் கதைப்போக்கில்லை. சூர்ப்பனகை வருகின்ற விதத்தை அழகாக இலக்கிய நயத்தோடு பாடுவான் கம்பன். ஆனால் சம்பூர்ண ராமாயணம் சாரத்தை மட்டும் கூறுகிறது.

      ஆரண்ய காண்டத்தில் இராமர், சீதை, இலக்குவன் மூவரும் பஞ்சவடியில் இருப்பார்கள். பஞ்சவடியிருக்கும் தண்டகாருண்ய வனம் சூர்ப்பனகையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி. அன்றோர் நாள் சூர்ப்பனகை தண்டகாருண்யம் வருகிறாள். அப்போது இராமனைப் பார்க்கிறாள். ஆசை பெருக்குகிறாள். இராமனைக் கூடத்துடிக்கிறாள், இராமனோடு ஆசை மொழிபேசி வேசை காடுகிறாள். இராமன் அதற்கு மசியவில்லை உடனே தனது பெண்மையின் ஆண்மையை வெளிக்காட்டுவாள் அதனை மணியன் பாடலாகப் பாடுகிறார்.
ஏ வில்லேந்திய வீரா….
           
கண்ணால நீ மயங்காதே கன்னியைக் கண்டு         
கண்ணால நீ மயங்காதே !                               – (2)         
உன்னை நம்பி நானே உற வாடினேன் பூமானே         
பாவையவள் வதனம் பாரையா ஏ….இராகவா         
காம வீரியம் தீரையா         
காயாம்பூ மேனியனே கன்னிக்குகந்த நாதா         
தீராத ஆசைதீர்க்க்கவா கோதண்ட இராமா         
மாறாத மோகம் போக்க வா…         
கண்ணால நீ மயங்காதே கண்ணியைக் கண்டு
கண்ணால நீ மயங்காதே !                               – (2)    
     (சூர்பனகைப்பாட்டு, சம்பூர்ண ராமாயணம்)
என்ற பாடலைப் பாடி முகபாவனைக்காட்டினார் மணியன். பாடும் போதே ஒருவிதமான உணர்ச்சி தோன்றியது. இந்த பாடல் மோகன ராகத்தோடும் தாளத்தோடும் பாடக்கூடிய பாடலாகுமென்கிறார். பண்டிதர் மு.மணியனின் பணிகள் போற்றுதலுக்குறியது. மறைந்து போன கலைகளை அவரின் பெயரன் தலைமுறைவரை கொண்டு சென்றுள்ளார் என்பதை நினைக்கும் போது மகிழ்வைத் தூண்டுகிறது. மணியன் இந்த வயதிலும் கூட யாராவது இராமாயணம், மகாபாரதம், கூத்துக் கதைகளைக் கேட்டால் தயங்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த அளவு கூத்தில் பாண்டித்தியம் பெற்றவர்.

நிறைவாக
    கூத்தில்  ஆழங்கால் பட்ட நயத்தகு மனிதரில் இவரும் ஒருவர். மணியனின் கலைப்பயண அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம், அந்த அளவு குறிப்புகள் உள்ளன. சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்தாலும், கலையைக் காக்க வேண்டும் பண்பாட்டை மீட்க வேண்டுமென்ற அவாவினால் கூத்தைக் கற்றுக்கொண்டார். தெருக்கூத்தால் அவர் புகழடைந்தார் கூத்தும் குடியநல்லூரில் செழித்தோங்கியது. செம்மையான தமிழ் மரபில் கூத்து தனித்த அடையாளமாக உள்ளது என்றால் அதற்கு இது போன்ற கலைஞர்கள் தான் காரணம். அப்படிப்பட்டக் கலைஞர் மு.மணியனின் வாழ்வைக் கருத்தாழம் மிக்க ஆவணப் பதிவாக இக்கட்டுரை பதிவுசெய்கின்றது.

(நாடக்க கலைஞர் மு.மணியன் அவர்களை நேர்காணல் செய்து எழுதப்பட்ட ஆவணப் பதிவுக் கட்டுரை இது. நேர்காணல் கண்ட நாள் : 19.03.2023, கிழமை : ஞாயிற்றுக்கிழமை, நேரம் : பிற்பகல் 1.00 மணி)

உசாத்துணை
1.பார்த்திபராஜா.கி., நிகழ்த்துக்கலை மரபு, பரிதி பதிப்பகம் வெளியீடு, திருப்பத்தூர், மு.பதிப்பு : 2022.

2.சிவக்ஷண்முகம் பிள்ளை.ஏகை. மங்கைபுரி சமஸ்தான வித்துவான்., சம்பூர்ண ராமாயணம், பி.இரத்தன் நாயகர் அண்ட் சன்ஸ் வெளியீடு, சென்னை, மு.பதிப்பு : 1970.

3.தகவலாளர் : பண்டிதர் மு.மணியன், வயது (86), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
4.
தகவலாளர் : பண்டிதர் ந.கோவிந்தன், வயது (90), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

5.தகவலாளர் : சூடாமணி அம்மாள், வயது (63), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ச.வாசுதேவன்
முனைவர் பட்ட ஆய்வாளர்

இலக்கியத்துறை,
மொழிப்புலம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613010

மின்னஞ்சல் : shankarvasu98@gmail

நெறியாளர் :
முனைவர் பெ.இளையாப்பிள்ளை

பேராசிரியர்,
இலக்கியத்துறை

கலைப்புல முதன்மையர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613010
ச.வாசுதேவன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் பார்க்க…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here