திறனாய்வு உத்திகள் என்றால் என்ன? உத்தியின் வகைகள் யாவை?

இலக்கியத் திறனாய்வு உத்திகள்

           உத்தி என்னும் சொல் பல்பொருள் நிலையினது. ‘உந்து’ எனும் அடிப்படைச் சொல் தொடர்பில், ஆபரணத் தொங்கல், சீதேவி உருவம் பொறித்த தலையணி என்னும் பொருண்மைகள் அமைகின்றன. “உக்தி என்ற அடிப்படையில் பேச்சு என்னும் பொருள் உணர்த்தப்படுகின்றது. வடமொழிச் சொல் மரபுத் தொடரில் சேர்க்கை, முப்பத்திரண்டு வகை உத்திகள் போன்றவை சுட்டப்படுகின்றன.

உத்தி என்பதன் விளக்கம்

          ஆங்கிலத்தில் டெக்னிக் என்னும் சொல்லால் இவ்வுத்திநிலை குறிக்கப்படுகின்றது. உந்துதல், பொருத்துதல் என்ற வினை அடிப்படையில் பாடுபொருளைக் கவிஞன் பொருத்தமுற வெளியிடும் பாங்கு அல்லது முறை உத்தி என்பதாகக் கொள்ளப்பட்டது எனக் கருதலாம். இந்த தனிச்செயல்முறை நுணுக்கத்திறம் பல வகைகளாக விரிந்து வெளிப்படுவதனை இலக்கியக் கலைச்சொல் அகராதிகளும், இலக்கியத் திறனாய்வு நூல்களும், இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளும் காட்டுகின்றன. ஒவ்வொரு கவிஞனின் தனித்தன்மையும் இவ்வுத்திகளைக் கையாளும் முறையில் வெளிப்படுகின்றது.

         மரபு உத்திகளைப் பயன்படுத்தலும், புதுவகை உத்திகளை உருவாக்குதலும் என இரு அடிப்படை நிலைகள் அமைய வாய்ப்பு ஏற்படுகின்றது. இலக்கியத் திறனாய்வின் நோக்கமே படைப்பாளனின் உத்திகளை இனம் கண்டு கொள்வதில்தான் நிறைவுறுகிறது எனும் எண்ணம் உத்தி பற்றிய ஆய்வின் முதன்மையை உணர உதவுகிறது. படைப்பாளனின் தனித்தன்மைக்கு ஏற்பவும், படைப்பாற்றலுக்கு ஏற்பவும் உத்திகள் உருவாகியும் பெருகியும் அமைவதினால் உத்திபற்றிய கொள்கைகள் கட்டுப்பட்ட வரையறைக்கு அப்பாற்பட்டுச் செல்கின்றன எனக் கூறலாம்.

உத்தியின் இயல்பு

       பல்வகைத் திறனாய்வு முறைகளில் உத்திமுறைத் திறனாய்வும்ஒன்றாக அமைகின்றது. செய்தி தெரிவிப்பதைவிட ஆற்றலுடைய வெளியீடே உத்தியின் நோக்கமாக அமைகின்றது எனலாம். இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையும் பொருள், வடிவம், வெளியீடு ஆகிய மூவிடத்தும் உத்திகள் இடம்பெற வாய்ப்பு அமைகின்றது.

பகுப்பு நெறி

    பொருளும், வடிவமும், வெளியீடும் தாமே உத்திநிலை பெற்றும், தமக்கேற்ற உத்திவகைகள் பெற்றும் அமைகின்றன. எல்லா வகை இலக்கியங்களுக்கும் பொதுவான சில உத்தி வகைகள் அமையலாம். அதே வேளையில் சில இலக்கிய வகைகளிலேயே கையாளப்படுவனவும் அமையலாம். இவற்றில் முன்னதைப் பொது உத்தி எனவும் பின்னதைச் சிறப்புத்தி எனவும் குறிப்பர்.

          பொதுவாக இலக்கியத்தைப் பொருளும் அமைப்பும் என இரு பகுப்புக் கொண்டு அவற்றிற்கேற்ப பொருள் உத்தி அமைப்பு உத்தி என்றோ, அகஉத்தி – புறஉத்தி என்றோ பகுக்கலாம். எனினும் இலக்கிய வடிவின் வெளியீட்டு முறையில் கதை உத்தி, காப்பிய உத்தி, நாடக உத்தி என்னும் முறையில் காண்பது பொருத்தமானதாகும்.

         தமிழ்மொழி இலக்கணத்தின் ஐம்பகுப்பு அடிப்படையில் உத்திகளை அணுகுதலும் உண்டு. எழுத்து உத்தி, சொல் உத்தி, பொருள் உத்தி, யாப்பு உத்தி, அணி உத்தி என ஒலிநிலை உத்தியை எழுத்து பகுப்பிலும், தொடர் உத்தியைச் சொல் பகுப்பிலும், மடக்குப் போன்ற மீண்டு வரல்களை அணிப் பகுப்பிலும் இவ்வாறு அடக்கலாம்.

உத்தியின் வகைகள்

       உத்திகள் எவையெவை என்பது பற்றிய எண்ணம் பல்வகை நூல்களில் பரந்து அமைகின்றது. நடை, கவிதை, மொழி, ஒலிநயம் போன்றன இதனுள் அடக்கப்படுகின்றன. உரையணிகளாக உருவகம், உவமை,மீமரபு உவமை போன்றனவும் இங்கு இடம் பெறும். அங்கதப் போலி ஓர் ஆய்வுமுறை இலக்கிய உத்தியாகக் கொள்ளப்படுகின்றது. பிற எல்லாக் கலைகளையும் விட இலக்கியம் ஏற்றமும், சிறப்பும் கொள்வதற்கு ஏற்ப, அதன் உத்திகளும், உயர்வும், பொருத்தமும், வகைமையும், பயிற்சியும், புதுமையும் இலக்கியத் திறனாய் வகைகளும் வளர்ச்சியும் கொண்டு அமைகின்றன. பல்வகை உத்தி பற்றிய விளக்கம் இக்கருத்திற்கு அரண் செய்யும். எனினும் உத்திகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். அவையாவன,

1.ஒலிநிலை உத்திகள்

2.சொல்நிலை உத்திகள்

3. பொருண்மைநிலை உத்திகள்

4.தொடரமைப்பு உத்திகள்

5.கூற்றுநிலை உத்திகள்

6.வெளியீட்டுநிலை உத்திகள்

7.அணிநிலை உத்திகள்

8. வடிவநிலை உத்திகள்

9.அமைப்புநிலை உத்திகள்

10.யாப்புநிலை உத்திகள்

என்பனவாகும்.

இலக்கியத்திறனாய்வில் உத்திகள்

1.ஒலிநிலை உத்திகள்

       மொழிக்கு அடிப்படையாக அமையும் ஒலி, சில உத்தி வகைகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது. சொற்பொருளுக்கும், உணர்வு வெளியீட்டிற்கும், பிற சூழல்களுக்கும் ஏற்பக் கவிஞன் இலக்கியத்தில் ஒலியைப் பயன் கொள்ளும் போது ஒலியடிப்படை உத்திகள் உருவாகின்றன. ஒலிக்குறிப்புச் சொற்களை (Onomatopoeal) பயன்படுத்தல் ஒரு வகை ஒலி உத்தியாகின்றது.

‘நெடுநீர் குட்டத்துத் துடுமென பாய்ந்து (புறம்243)

‘கண்ண டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ (மலைபடு-352)

        தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்பாகிய வண்ணம் ஒலி அடிப்படையில் பலவகைகளைக் கொண்டு அமைதல் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

‘மாவா ராதே மாவா ராதே’ (புறம் – 273 – 1)

‘வாரா ராயினும் வரினு மவர்நமக்

சியாரா கியரோ தோழி’ (குறுந் – 110 -1,2)

        போன்றன முறையே நெடுஞ்சீர் வண்ணம், அகைப்பு வண்ணத்திற்குச் சான்றாக்கப்படுகின்றன. இலயப்போக்கும் (Cadence) இவற்றுடன் ஒலி உத்தியாக வைத்துக் கருதத்தக்கது எனலாம். கருத்து அழுத்தம் தரும் ஒலிமுடிவு என்ற நிலையில் ஆசிரியத்தின் ஈற்று ஏகாரம், வெண்பாவின் ஓரசை முடிபு போன்றன கருதத்தக்கன.

‘பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே’ (ஐங்குறு – 55 4)

‘யாண்டும் இடும்பை இல’ (குறள் – 4)

2. சொல்நிலை உத்திகள்

      சொல் ஆட்சி, சொற்பயிற்சி, சொல்திறன் இவற்றின் அடிப்படையில் வருவன சொல்நிலை உத்தியாகக் கருதத்தக்கன. கவிதையின் திறன்மிக்கச் சொல்நடைக்கு வாய்ப்பாகப் பல சொல்நிலை உத்திகள் அமைகின்றன. அடைச்சொற்கள் (epithets) தொடர்ந்த ஆட்சி காரணமாகவும், குறிப்பிட்ட பொருள் தேர்ச்சிக் காரணமாகவும் உத்திநிலை பெறுகின்றன.

      இளங்கோவடிகள் பன்முறை பயன்படுத்தும் ‘மாமலர் நெடுங்கண் ‘மாதவி’: மாடலனைக் குறிக்கும் ‘மாமறை முதல்வன்’; பழந்தமிழ் இலக்கியத்தில் பன்முறை பயிலும் ‘மாந்தளிர் மேனி’ போன்றவற்றை இங்கு கருத்தில் கொள்ளலாம்.

     தொன்மைச் சொல் மீது ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாக பழஞ்சொற்களைப் பயன்படுத்தலும் கவிதை முறையாக அமைகின்றது. இலக்கிய நடையில் பின்பற்றப்படும் உத்திமுறையாக இது காணப்படுகின்றது. இல்லக்கிழத்தி, இளிவரல், அல், அப்பு, புகன்றிடுவேன், சூட்டுவேன் போன்ற முற்காலச் சொல்வடிவங்கள் மிக அண்மைக் கால இலக்கியத்துள் பயின்று வருவதை சான்றாகக் காட்டலாம்.

     பல்பொருளுடைய ஒரு சொல் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் ஓரிடத்தில் பயன்படுத்தப்படுவதும் ஒரு உத்திமுறை ஆகும்.  சான்று.

‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட’ (சிலம்பு – 53-54) என்பதாகும்.

       கவிதை அடியின் தொடக்கமும், முடிவும் ஒரே சொல்லாக அமையப் பெறுவதும் உத்திவகையாகக் கருதத்தக்கதாகும். தொடர், தொடர் பகுதி என்பதிலும் இது அமையும். உதாரணமாக,

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாத் தலை’ (குறள் – 411)

என்பன போன்று வரும் குறட்பாக்களைக் குறிப்பிடலாம்.

3. பொருண்மை நிலை உத்திகள்

       சொல்நிலை உத்திகளுடன் தொடர்பு கொண்டு அமைவன பொருண்மை அடிப்படை உத்திகள். சொல்கொள்ளும் பொருண்மை காரணமாக ஏற்படும் உத்தி. பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட வெளியீட்டு உத்தி, முரண்பொருண்மை, மயக்கப் பொருண்மை, பல் பொருண்மை பெருக்கு என இப்பொருண்மை உத்திகள் பரந்து விரிகிறது.

முரண் உத்தி:

       முரணான அல்லது தம்முள் எதிரான இரு கருத்துக்களை அருகருகே அமைத்துக் கூறும் முரண் உத்திமுறை பொருண்மை உத்திமுறையின் வகைகளுள் ஒன்றாக அமைகின்றது. சான்றாக,

‘ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண்’ (ஆத்திச்சூடி – 8,9)

‘நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று’ (குறள் -222)

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

4. தொடரமைப்பு உத்திகள்

          தொடரமைப்பு அடிப்படையிலும், பல உத்திகள் அமைந்து காணப்படுகின்றன. விளி, கேள்வி, பதில், எதிர்வாதம், வியப்பு. இணைத்தொடர், பழமொழி எனப் பல வகைகளாக இது விரிகின்றது. முன்னிலை மொழிகளும், படர்க்கை அழைப்புகளுமாக விளித்தொடர்கள் வாழ்வில் அமைவது போன்று இலக்கியத்திலும் அமைகின்றன.

     கேட்பன போலவும் கிளக்குந போலவும் கொண்டு ஞாயிறு, திங்கள், அறிவு, நாண் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி மொழியும் தலைவியின் காமமிக்க கழிபடர்கிளவியாக அமைவன இலக்கியத்திற்கு உத்தியாக அமைகின்றது

‘தம்முடைய தண்ணளியும் தாமுந்தம் மான்தேரும்.

எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க

அம்மென் இணர அடும்பு கான் அன்னங்காள்

நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்’

என்றமைந்த சிலப்பதிகாரப் பாடலை தொடரமைப்பு உத்திக்குச் சான்றாகக் காட்டலாம்.

5.கூற்றுநிலை உத்திகள்

          தொடரமைப்பு உத்திகளிலிருந்து சிறிது வேறுபட்டு அமைவன கூற்றுநிலை உத்திகள். இவற்றை பாத்திரங்கள் செய்திகளைத் தரும் கூற்று உத்திகள் எனவும், ஆசிரியன் இலக்கியத்தை அளிக்கும் முறைவகை உத்திகள் எனவும், இலக்கியத்தில் அமையும் கூற்றுநிலை உத்திகள் எனவும். இலக்கியத்தில் பயன்படும் வெளியீட்டு முறை உத்திகள் எனவும் பலநிலைகளில் கூறலாம்.

     இலக்கியத்தை அளிக்கும் முறையில் நனவோடை அல்லது உட்தனிமொழி (Interior Monologue) என்பனவும் கூற்றுநிலை உத்தியாகக் காணப்படுகின்றன. உளவியல் புதின ஆய்வாளர் இதனைச் சிறப்பாகக் சுட்டுகின்றனர். தலைவி நெஞ்சுக்கு உரைப்பதாக வரும் அகப்பாடலில் இவ்உட்தனிமொழி அமைகின்றது.

“உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ

யாருழைச் சேறிஎன் நெஞ்சு” (குறள்-1248)

என்ற குறட்டாவினை கூற்றுநிலை உத்திமுறைக்குச் சான்று காட்டலாம்.

6.வெளியீட்டு நிலை உத்திகள்

         வருணனை, கற்பனை, எதிர்மை (Irony) போன்றவை வெளியீட்டு நிலை உத்திகளாக அமைகின்றன. சில நோக்கம் கருதியும், பயன் எதிர்பார்த்தும், நயம் விரும்பியும், நிறைவு விழைந்தும் இவ்வுத்திகள் கையாளப் பெறுகின்றன.  

        பின்புல வருணனை உத்திக்கு கடனாக அமைவதை அகப்பாடல்கள் காட்டுகின்றன. காலம் மற்றும் இடம் பற்றி குறிப்புத் தருவதோடு உள்ளுறை இறைச்சிக்கும் இது களனாகின்றது. காப்பியம் போன்ற நெடும் யாப்புகளில் பாத்திர வருணனை, செயல் வருணனை, செலவு வருணனை போன்ற பல அமைந்து உறுப்பு நிலைபெறுகின்றன.

       வருணனை என்பது சொல்லில் அமைக்கப்படும் காட்சியாகும். ஒரு பொருள், காட்சி, மாந்தரின் தோற்றம் அல்லது பண்பினைக் காட்சிப் படுத்துவது வெளியீட்டு உத்தியாகும். பண்பு. பாத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டவோ, மாற்றியமைக்கவோ, கதைக் கருவின் வளர்ச்சிக்கு வாய்ப்பாகத் தடைகளை ஆக்கவோ, நீக்கவோ இது உதவுகின்றது.

“தாழ்இருள் தூமிய மின்னித் தண்ணென

வீழ்உறை இனிய சிதறி, ஊழின்

கடிப்புஇகு முரசின் முழங்கி, இடித்திடித்தும்

பெய்க இனி, வாழியோ பெருவான்.. -” (குறு-270)

        என்ற குறுந்தொகைப் பாடலில் மழைக் காட்சி உணர்த்தப்படுகின்றது. கண், செவி, ஆகிய இருபுலனுக்கும் ஏற்ப இச்சொற்காட்சி அமைந்துள்ளது. மேற்கண்ட பாடலை வெளியீட்டு உத்திக்கு தக்கச் சான்றாகக் காட்டலாம்.

7.அணிநிலை உத்திகள்

        கூற்றுமுறை உத்திகளுடன் ஓரளவு தொடர்பு கொள்வன அணிநிலை உத்திகள். இலக்கிய அமைப்பில் பெருமளவில் இவை பயன்படுகின்றன. அழகு, விளக்கம், தெளிவு. நயம் போன்ற பன்முகப் பயன்பாட்டில் இவை இடம் பெறுகின்றன. கூற்று முறை அணிகளை (Figure of Speach) மூன்று வகையாகப் பிரித்து ஆராய்கின்றனர். ஒன்று கூறுகளை இணைப்பதால் உருவாவது; இரண்டு கூறுகளை நீக்குவதால் உருவாவது; மூன்று ஒத்த அல்லது இணையான ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

        இவ்வாறன்றி, காதுக்கு நயம் அளிப்பன; மனத்துக்கு இன்பம் அளிப்பன; இரண்டையும் கவருவன என்ற பிறிதொரு அடிப்படையிலும் மூன்று பகுப்புக்களில் காண்பது உண்டு. உவமை, உருவகம் முதலான அணிகளின் பயன்பாடு பல்வேறுபட்டதாக  அமைகின்றது.

          தெளிவுப்படுத்தவும், விளக்கம் காட்டவும், ஊக்கம் ஊட்டவும். இயங்காப் பொருளை இயக்கவும், தொடர்பினைத் தூண்டவும், நகைச்சுவை உணர்வினை எழுப்பவும், அழகுணர்ச்சியை ஏற்படுத்தவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. முருகியல் இன்பப்பயன் அணிநிலை உத்திகளின் முதன்மை நோக்காக அமைகின்றது.

        அணிகளுள் உவமையே தலைமையும், சிறப்பும் பொருந்தியதாகக் ஒப்புமைப்படுத்திக் கூறும் இவ்வுவமைகள் இலக்கியத்திற்கு நயம் கருதப்படுகின்றது. வெவ்வேறு வகையைச் சேர்ந்த இருபொருள்களை சேர்க்கின்றன. உவமைகள் கையாளப் பெறாத இலக்கியங்களே இல்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

       உவமைக்கு அடுத்து இடம் வகுப்பது “உருவகம் எனலாம். கருத்தும், கருவியும் ஆகிய இரு கூறுகளால் இவ்வுருவகம் அமைந்ததாக விளக்குவர். இவற்றுள் கருத்து என்பது கூறவிழைந்த பொருள்; கருவி என்பது அக்கருத்து வெளிவரும் உருவம்.

இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார காவியத்தில்,

“கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழிந்தாங்கு

இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்

திங்களும் ஈண்டுத் திரிதல் உண்டுகொல்”

             என்று இந்திரவிழா காணவந்த பெண்களைத் திங்களாகவும். வானவல்லியாகவும், கமலமாகவும், கூற்றமாகவும் காட்டுவது முழு உருவகமாக அமைகின்றது. உருவகம் பல ஒருபொருள்மேல் தொடர்ந்து வந்து ‘மாலை உருவகமாக அமைதலும் உண்டு.

”———————————————–வானச்

சோலையிலே பூத்த தனிப்பூவோ, நீதான்

சொக்க வெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ”

       என்று தம் புரட்சிக்கவி காவியத்தில் ‘நிலவினை’ மாலை உருவகமாக அமைத்துக் காட்டியிருப்பது உருவக உத்தீக்குச் சான்றாகிறது.

       நுண்பொருளுக்குப் பருப்பொருள் வடிவம் கொடுத்து ஆற்றல் உடையதாகச் செய்து. இலக்கியப் படைப்பிற்கு உதவுவதில் உவமையும். உருவகமும் முன்னிற்கின்றன. இவ்வுருவகம் குறியீட்டு நிலைக்கு உயரும் போது பிறிதொரு உத்தி உருவாகின்றது (Symbol) குறியீட்டின் சிறப்பு அது உணர்த்தும் குறிப்புப் பொருளிலும், உருவகத்தின் நேரடித் தொடர்பினை விட்டு மீள்வதிலும் அமைகின்றது என்பர்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்ததுகாடு – தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”

என்ற பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ சிறந்ததொரு குறியீடு எனலாம்.

          உணர்வுக்கு முதன்மை கொடுத்து இலக்கியம் இயற்றப்படுகிறது. சுவையணி, மெய்ப்பாடு பற்றிய எண்ணங்கள் இங்கு சிந்திக்கத்தக்கது. படைப்போனின் உணர்வு வெளிப்பாடும், கற்போனின் உணர்வுப் பிரதிபலிப்பும் ஆகிய இருநிலைகள் இங்கு அமையலாம். தன்னுணர்ச்சிக் கவிதையில் கவிஞனின் சொல்லாட்சி அவன் உணர்வை வடித்துத் தருவதில் வெற்றிக் காண்பதனை உத்திச் சிறப்பாகக் கொள்ள முடிகின்றது. உணர்வின் மிகுதிக்கேற்பச் சொல், தொடர், வெளியீட்டமைப்பும் உருவாகின்றன.

“பார், சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்

எத்தனை தீப்பட்டெரிவன? ஓகோ!

என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!

எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்! வெம்மைத் தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடி

நீலப் பொய்கைகள்! அடடா…” (பாஞ்சாலி சபதம் – 152)

எனும் பாரதி பாடல் அடிகள் இதற்குச் சான்றாகின்றன.

8. வடிவநிலை உத்திகள்

      அணிநிலை உத்தியினின்று ஓரளவு வேறுபட்டு நிற்பன, அழகு, நயம், புதுமை, பயன் போன்ற பல்நோக்குக் காரணமாக அமைவன வடிவுநிலை உத்திகளாகும். நூல் அல்லது இலக்கிய வகைக்கு ஏற்ப அதன் உத்திகள் வேறுபட்டு உருவாகின்றன. எல்லா மொழியிலும் பெரும்பாலும் பண்டைய இலக்கியங்கள் செய்யுள் வடிவில் அமைந்தமையால் யாப்பு உத்திகளும் இடம்பெற வாய்ப்பு மிகுகின்றது.

       காப்பியம், நாடகம் போன்ற தொடர்நிலை இலக்கியங்கள் பல அமைப்பியல் உத்திகட்கு கடனாகின்றன. பாடு பொருள் ஆக்கத்திற்குக் கவிதைத் தலைவியின் அருள் வேண்டுதல் (INVOCATION) காப்பியத் தொடக்க உத்தியாக அமைகின்றது. காப்பியத்துக்கு மட்டுமன்றி எந்த நூலுக்கும், இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் இறைவாழ்த்துத் தொடக்கம் இடம் பெறுவது மரபுத் தொடர்ச்சிக்காட்டும் உத்திவகைகளுள் ஒன்றாக அமைதல் குறிப்பிடத்தக்கது.

      காப்பியக் கதைத் தொடக்க உத்தியாக நடுவில் தொடங்குதல் என்பது அமைகின்றது. காப்பிய உத்தி நிலையிலிருந்து பரந்து தற்காலத்தில் நாடகம், கதை, புதினம் போன்ற புனைவுகளுக்கும் இது விரிந்துள்ளது.

        இடைக்காட்சி (Interlude) பண்டை நாடக் கூறாக அமைந்துள்ளது. இடைவேளையை நிரப்பி இவை அமைகின்றன. குழுப் பாடகரும் (Chorus) நாடகப் போக்கிற்கு உதவும் உத்திநிலையில் நாடகாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டனர்.

       நகைச்சுவை இடையீடு தொடர்நிலை இலக்கியத்தின் மற்றொரு உத்தியாகத் தென்படுகிறது. ஒரு காட்சியாகவோ, கிளைக்கதையாகவே கூட இது அமையமுடியும். சீரியமுனைப்பு உள்ள நாடகத்தில் இடையில் வந்து உணர்வுத் தணிப்புச் செய்தல் இதன் முக்கிய நோக்கமாக அமைகின்றது. முன் நிகழ்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைத்து பின் தொடரும் நிகழ்வுக்கு மனத்தைச் செலுத்தவும் இது உதவுகிறது. சிலம்பில் கொலைக்களக் காட்சிக்குப்பின் அக்கொடுமையின் உணர்வுத் தணிப்பாசித் தொடரும் ஆய்ச்சியர் குரவையின் இசையும் ஆடலும் இங்கு நினைக்கத்தக்கன. சிலப்பதிகாரம் காப்பியமாயினும், நாடகப் பாங்குடைமை பற்றி இக்கூறு இணைவுப் பொருத்தம் புலப்படுகின்றது.

          சிக்கல் அவிழ்தல் (Denuouement) தொடர்நிலை இலக்கிய முடிப்பு உத்தியாகக் கருதத்தக்கது. நாடகம், காப்பியம், கதை போன்ற பலவகை இலக்கியங்கள் இதனைக் கொண்டு முடிகின்றன. தொடக்கம் முதல் முடிவுவரை ஆக்க அமைப்புக் கூறுகளுடன் இணைந்து வரும் இவ்வுத்தி முறைகளுடன், அடியார்க்கு நல்லார் கூறும் முகம், பிரதிமுகம், கருப்பம். விளைவு. துய்த்தல் ஆகியனவற்றை இணைத்து நினைக்கலாம். கதைப் போக்குக்கு உரிய படிநிலை உத்திகளாக இவை அமைகின்றன எனலாம்.

9.அமைப்புநிலை உத்திகள்

          தொடர்நிலை இலக்கியங்கள் சிலவற்றின் இவ்ஆக்க அடிப்படையின் அமைப்பு உத்திகள் ஒரு பாலாக, பிற சில கூறுகளின் அடிப்படையிலும் அமைப்பு உத்திகள் காணப்படுகின்றன. அமைப் பொருண்மைகள் சில இலக்கங்களிடையே அமைந்து, அவற்றை ஆட்சிநிலை உத்தியாகக் கருதச் செய்கின்றன. ஒரு அடிப்படை நிகழ்வுக் சூழல், பாத்திரம் அல்லது உருவருணனையில் இவ்அமைப்புப் பொருண்மை வாழ்வியலிலும் அவ்வாறே இலக்கியத்திலும் அமைந்து தொன்மை வகை அமைப்பொருண்மையாகச் சுட்டப்படுகின்றது.

       ஒரு பெண் கல்லாகுதலும் மீண்டும் தன் உருப்பெறலும், கண்ணகி கூறும் கற்புடைப் பெண் கதையிலும் அகலிகை வாழ்விலும் அமைந்து நிகழ்வுச் சூழலில் ஒருமை காட்டுகின்றது. கணவனால் கைவிடப்பட்ட பெண், அனாதைக் குழந்தை, மாற்றாந்தாய் போன்ற பல பாத்திரங்கள் பலகால பல்வகை இலக்கியங்களில் அமைந்து பாத்திரம் – பண்பு அடிப்படையில் அமைப் பொருண்மை காட்டுகின்றன. சாபமளித்தல், போரில் வீரச் செயல்புரிதல், நெய்தல் தலைவி காமம் மிக்க கழிபடர்க்கிளவியுடன் இரங்கல் போன்ற பலவற்றின் பயிற்சியால் செயல் அமைப் பொருண்மை காணப்படுகின்றது.

      பழமையான கருத்து ஒன்று மீண்டும் இலக்கியத்தில் மற்றும் கற்பனைப் படைப்பில் பயின்று வருவதற்குக் காரணம் அது படைப்போனின் ஆழ்மனத்தில் பதிந்து கிடத்தலே எனவும் இத்தகு கருத்துகள் மக்களின் ஆழ்மனப் பதிவுகள் எனவும் உளவியல் அடிப்படையில் கருதுவர். இவ்வாறு ஒர் அடிப்படை அமைப்பொருண்மையைக் கையாளுவதன் வாயிலாகக் கவிஞன் தன் எண்ணங்களை வெளியிடுவதாலும், தன் நோக்கம் நிறைவேறுவதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாலும் அவை உத்திநிலை பெறுகின்றன எனலாம்.

10. யாப்பு நிலை உத்திகள்

       யாப்பு உத்திகள் செய்யுள் இலக்கிய வகைகளில் மிக இன்றியமையாத இடம் பெறுகின்றன. செய்யுளின் ஒழுங்கமைப்புக்கு மிகத் தேவையான உத்திநிலையை யாப்பு வடிவம் அளிக்கிறது. செய்யுள் அடியின் பொருள் ஒழுங்கு, பாடலின் ஓசை ஒழுங்கு, ஒலி விட்டசை போன்ற பல கூறுகளைக் கருதுவதற்கு இடம் அமைகின்றது.

         யாப்பின் இன்றியமையாக் கூறாக ஓசையொழுக்கு அமைகின்றது. செய்யுளின் ஆக்க உறுப்புகளில் இது இடம் பெறுகிறது. படைப்பாசிரியனின் கருத்து, பொருள் இவற்றிற்கேற்ற வெளியீட்டு நிலையில் உருவாகும் பாங்கு இதன்கண் அமைவதால் இதில் ஆக்குவோனின் தனித்தன்மையும் வெளிப்படுகின்றது. சிறந்த பாடல்களில் உணர்வோடு ஒன்றியே ஓசையொழுங்கு புலப்படுகின்றது.

      கவிஞனின் தனித்தன்மைக்கு ஏற்பவும், அவன் கையாளும் பாடுபொருளுக்கு ஏற்பவும் யாப்பு உத்திகள் உருவாகின்றன; கையாளப்படுகின்றன. இதனால் மரபு யாப்பு வரைமுறைக்கு உட்பட்டே இலக்கியம் பலவும் ஆக்கப்படுகின்றபோதும், உத்தி வேறுபாடுகளும், புதுமைகளும், தனித்தன்மைகளும் இடம் பெறுகின்றன.

          வெளியீடே உத்திக்கு மிகுதியான இடம் அளித்த போதும், வெளியீட்டுக் கூறுகளே பெரும்பான்மையாக உத்தி உருப் பெற்றபோதும், பொருளும் வடிவும் கூட உத்திக்கு இடனாயும் உத்தியாயும் இயன்ற நிலை மேற்கண்ட செய்திகளால் புலப்படுகின்றன. இதன் அடிப்படையில் இலக்கியத் திறனாய்வு உத்திகள் அமையப் பெற்று ஆய்வு மேற்கொண்டு இலக்கியத்திற்கு வலிமையும், பொலிவும் சேர்க்கின்றன எனில் அது மிகையாகாது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here