திருமந்திரத்தில் ஞானம்

திருமந்திரத்தில் ஞானம்

முன்னுரை

            எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!!! தன்னுள் விளையும் எல்லா கேள்விகளுக்கும் தானே பதிலாகி நின்ற நிலை யாரொருவர் அடைகிறாரோ அவரே ஞானவான். அதுவே திருவடி அடைந்த நிலை, முக்தி, பிறவா நிலை, மரணமில்லா பெருவாழ்வு என பலராலும் பலவாறாக பேசப்படுகின்ற ஞானத்தன்மையாகும்.  திருமூலர் அடைந்த நிலையினை இவ்வுலகியல் மக்கள் பெறவேண்டி எழுதப்பெற்றதே திருமந்திரமாகும். அவ்வாறு, இறைவனை அடையும் தன்மையினை திருமூலர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார். அவற்றுள் பெறுவதற்கு அறிய வழி ஞானமாகும். அவ்வாறு திருமந்திரம்வழி திருமூலர் கூறும் ஞானத்தன்மை, ஞானத்தின் பண்பு நலன்கள், ஞானவேடதாரிகள் நிலை ஆகியவற்றை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஞானம் – விளக்கம்

            அறிவின் முதிர்ந்த நிலை ஞானமாகும். ஏனென்றால், பெருவெடிப்பு கொள்கையின் படி இவ்வுலகில் எல்லாப் பொருளும் ஒற்றை பொருளில் இருந்து வந்தவையே. என்பது அறிவியலாளர்கள் கருத்துப்படி எல்லாப் பொருளுள்ளும் தன்னையும், தன்னுள் எல்லா பொருட்களையும் பார்த்து, எந்த பொருளிடத்தும் அன்னியம் இல்லாமல் நின்ற நிலையினை உணரும் தன்மை ஞானத்தன்மையாகும். ஞானம் அடைபவர் தன்னடக்கம் உள்ளவராகவும், மனத்தினை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொள்பவராகவும் இருக்க வேண்டும். மேலும், உண்மையானது – உண்மையற்றது எது என்று பொருள்களை பிரித்தறியும் திறத்திக் கொண்டவர்களேத் தன்னிலை உணர்வதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். 

            இந்த உலகில் பிறந்து ஞானத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து பந்த பாசம், இன்பங்கள், துன்பங்கள், தன்னுடைய மனதின் ஆசைகள் அனைத்தையும் அனுபவித்து அவற்றில் நிலையாமைத் தன்மையினை உணர்ந்து நிலைத்தன்மையுடையப் பேரறிவாளனாகிய இறைவன் மீது பற்றுக்கொண்டு, அவற்றின் பால் ஒன்றுதலே இறைத்தன்மை பெறுதலாகும். ஞானம் என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவதன்று. இது  குருவின் ஞான மொழிவழி பயணமாகும். மன இருளினை வென்று ஆன்மாவில் பேரமைதியினைக் காணும் நிலையாகும். உபநிஷதங்கள் இரண்டு வகையான ஞானத்தினை நமக்கு கூறுகின்றது. அவை, அபரஞானம், பரஞானம் என இருவகையாகும்.

            அபரஞானம் என்பது கீழ்நிலை ஞானமாகும். இவை ஒருவன் புறக்கருவிகளாகிய ஞான இந்திரியங்கள், கன்ம இயந்திரங்களின் வாயிலாக உணரப்படுவது அபராஞானமாகும். படித்தலின் மூலமாகவும், மற்றும் உலகியல் பொருள்களின் மூலம் அனுபவிக்கும் உணர்வுகள் இவையாவும் நிலையற்ற தன்மைக் கொண்டது என்று உணரும் உணர்வு கீழ்நிலை ஞானம் என ஞானியர்கள் கூறுகின்றனர்.

            பரஞானம் உயர்ந்த நிலை ஞானமாகும். இரு ஞானியர்களுக்கும் இறைவனின் அருள் பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற ஞான நிலையாகும். குருவின் அருளினால் இறைவனின் திருவடிப் பேற்றினைப் பெற்ற மனிதர்கள் அதைப் பற்றி சிந்தித்து அவற்றையே தியானித்து அவற்றுடனே ஒன்றி இருக்கின்ற நிலை பரஞானமாகும். ஞானத்தின் முழுமையான  நோக்கம் என்பது தன்னிலை உணர்ந்து இறைநிலைச் சார்ந்து என்றும் பிறவா பெருநிலையினை அடைதலேயாகும்.

ஞானமும் – குருவும்

            உயிர்களைப் படைத்து அருளிய இறைவன் அவ்வுயிர்களுக்கு இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கி அருளும் பொருட்டு மாயையினையும், கன்மத்தினையும் சேர்த்து பக்குவத்திற்காக உலகத்தில் பிறப்பெடுக்க வைத்துள்ளார். உயிரானது இறைவனாகிய குருவின் திருவருளால் திருவடிகாட்டப்பெற்று இன்ப – துன்ப நிலையினைக் கடந்து தன்னுடைய மாயைத் தன்மையினையும், போகப்பொருள்கள் மீதான தாகம் விட்டொழிந்து பிறவா யாக்கையானாகிய இறைவனின் திருவடியினை பெறத்துடிக்கும் ஆன்ம மனிதர்களுக்கு குருவே வழிகாட்டுவார். இதுவே கலியுக தர்மமாகும்.

            குருவானவர் சீடனின் உயிர் பக்குவத்திற்குத் தகுந்தார் போல மாயைச் சூழ்நிலையினைக் கொடுத்து அவற்றின் மூலம் உயிருக்கும் மெய்பொருளை அறிவித்து பொய்யான மாயைத்தன்மைக் கொண்ட பொருட்களை அறிவித்து இறைத்தன்மையை அறியச் செய்பவர் குருவேயாகும். உண்மையான ஞானத்தினை அடைந்த குருவால் மட்டுமே அவ்வழியில் வரும் சாதகனுக்கு வழியினைக் காட்டி அருளிட முடியும். அதுவன்றி இவ்வுலக வாழ்வில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தோன்றியுள்ள குருமார்களின் பொய்மொழி சிந்தித்தால் ஞானம் வராது மீண்டும் பிறப்பதற்கான நிலையினையே மேலும் ஏற்படுத்திக் கொள்ளுபடியாகிவிடும். பொய் குருவினை நாடிச்செல்லும் ஆன்ம சாதகனுக்கு திருமூலர்,

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும்  குழிவீழுமாறே”  திருமந்திரம் (பாடல்.1680)

மாயைத் தன்மையினை நீக்கியருளும் குருவினைக் கொள்ள வேண்டும் என்றும், அறியாமையினை நீக்கா குருவினைக் கொள்வாரேயானால் பொய் குருவுடன் அவரும் குழி வீழ்வார் என்று திருமூலர் தம்மந்திர பாடலில்; சிறந்த குருவினுக்கான இலக்கணத்தையும், குரு இல்லா தன்மை கொண்டவர் அடையும் நிலையினையும் எடுத்துரைக்கின்றார். ஒரு சிறந்த குருவானவர் ஆன்ம சாதகனுக்கு ஏற்படும் அறியாமை என்னும் மாயையினை நீக்கி நிலைத்தன்மைக் கொண்ட அறிவதற்கான இறைவனின் திருவடியினைக் காட்டுவார்.

            இறைவன் மீது பக்தி கொண்டெழுகச் செய்து, இறைவனுடைய திருவடியினைக் காட்டி, பிரணவ மந்திரத்தின் உபதேசம் செய்து உயிர்களின் மனமாயையாகிய அழுக்கினைப் போக்கி, பசு, பாதி, பாசம் என்னும் முப்பொருளின் இயல்புகளை அறிவித்து, ஆன்மாவை ஆட்கொள்ள உள்ளத்துள்ளே எழுந்தருளி இருப்பவரே உண்மையான ஞான குரு ஆவார். தூயவனான பரம்பொருள் சிவபெருமானே ஆவார். ஞானமே குரு வடிவாக வந்து மன அழுக்கினை நீக்கி, பரிசுத்தம் செய்து தன்னுடைய ஞானத் தன்மையினை இறைவனே அவருடைய அளப்பெருங் கருணையினால் உயிர்களுக்கு தருகின்றார். அவற்றை அறியாமலே இவ்வுயிர்கள் மாயையில் கட்டுண்டு கிடக்கின்றன.        சிவப் பரம் பொருள்தான் ஞான குருநாதன் என்பதை,

“குருவே சிவம்எனக் கூறினான் நந்தி

குருவே சிவம்என்பது குறித்து ஓரார்

குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்

குருவே உரைஉணர்வு அற்றதோர் கோவே” திருமந்திரம் (பாடல்.1581)

எனும் பாடல், இறைவனே குருவடிவாகி வந்துள்ளதை தமக்கு நந்தியாகிய குரு சொன்னதாகத் தம் குருவின் மொழியினைத் திருமூலர் எடுத்துரைக்கின்றார். பரம்பொருளிடத்துப் பொருளிடத்து பக்தி செலுத்திப் பிறவிப் பயன் அடைய வேண்டும் என்கின்ற திடமான மனம் கொண்டு முயலுபவருக்கு ஞானமாகிய பேரின்ப வாழ்வு அருட்சக்தியின் திருவாருளால் எளிதில் கிட்டும்.

ஞான வேடம்

            ஞானத்தன்மை பெற்ற இறையடியார்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று திருமூலர்,

“ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவர்

தான்உற்ற வேடமும் தற்சிவ யோகமே

ஆன அவ்வேடம் அருள்ஞான நாதனம்

ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாதவனுக்கே”

எனும் திருமந்திர பாடல், சிவப் பரம்பொருளுக்கு அடிமைப்பட்டு, அவனருள் பெற்றவர்களே அடியவர் ஆவார்கள். மற்றவர்கள் ருத்ராச்சம் அணிந்து, திருநீறு  பூசியும், காவி உடை உடுத்தியும், தண்டம், சடாமுடி வைத்திருந்தாலும் இறைவனின் அருள் பெறாதவர்கள் அடியார் அல்ல என்றும், இறைவனின் அருள் பெற்றவர்கள் சிவவேடத்தில் இல்லாத போதிலும் அவரே உண்மையான அடியாகளாவார்கள்.

            தவத்தால் உயர்ந்த பற்றற்ற ஞானியர்களுக்கு காதனி குண்டலம் தான் ஏற்றிருக்கும் தவக்கோலம், தன்னைச்சிவனோடு பொருந்தச் செய்யும். தவவேடமே இறைவன் அருளைப் பெற்றுத்தர செய்யும் சாதனமாகும். சிவஞானம் பெற்றிராதவருக்கு இந்த வேடம் வெறும் சுமையேயாகும் என ஞானிகளின் வேட நிலையினைத் திருமூலர் எடுத்துரைக்கின்றார்.

தனிமனித வாழ்வியலில் ஞானம்

            இறைவனை அடைவதற்கு சைவ சான்றோர்கள் அமைத்துள்ள மார்கங்கள்  சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்காகும். அவற்றையே திருமூலர் தம் பாடல்களிலும் விளக்கியருளியுள்ளார்.

அவையே,

சரியை                     –           இறைவனுக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு புரிதல்.

கிரியை                   –           பக்தி நிலையில் நின்று இறைவனுக்கு பூசை செய்தல்.

யோகம்                   –           ஆசனங்கள் செய்து மனம், உடல் தகுதி படுத்துதல்.

ஞானம்                    –           தியானத்திலே இறைவனை சிந்தித்திருத்தல்.

என்னும் நான்கு நிலையாகும்.

            இவற்றின் முறையே இந்நான்கினையும் அவரவர் பக்குவ நிலைக்கேற்ற வகையில் நான்கு நிலைகளும் முறையே; ஒன்றுடன் ஒன்று கூடி நின்று பதினாறு நிலையில் பிரிந்து வருகின்றன. அவை, சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரிiயியில் ஞானம்            என சரியையினை மூலமாகவும் மற்றவற்றைத் துணைக்கொண்டுத் தொண்டு நிலையில் இருந்தும் ஞானத்தை பெறுதல் சைவத்தில் சாத்தியமாகும். திருநாவுக்கரசர் கொண்ட மார்கம் சரியையாகும்.

            மேலும், திருஞானசம்பந்தர் கொண்ட கிரியையினை மூலமாகவும் மற்ற மார்கத்தினை துணையாகக் கொண்டு செயல்படுவது கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என மேற்சொன்ன மார்க்கத்தினைக் கொண்டும் இறைவனை அடையலாம். மேலும், யோகத்தை மூலமாகவும் மற்றவற்றை துணையாகவும் கொண்டு யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் கொண்டும் இறைவனை அடையலாம். அவ்வாறு சுந்தரர் கொண்ட மார்க்கம் சரியையாகும்.

            மேலும், ஞான வழியாகிய இறைநிலையை குருவின் உபதேசமொழிவழி நின்று அவற்றை சிந்தித்து, தியானித்து பயிற்சியால் மேற்கொண்டு வருபவர்களும், பக்தி நிலையிலும், ஆசனங்கள், தொண்டு போன்றவற்றை செய்வது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு நிலையாகும். இங்கு கூறப்பட்ட மார்க்கத்திலேயே ஞான நிலையில் வரும் மார்கங்களே மிகவும் உயர்ந்த மார்கங்களாகும். மாணிக்கவாசர் மேற்கொண்ட மார்க்கம் ஞானமார்கமாகும். இங்கு ஞானத்தில் ஞானம் அடைபவர்கள் வெகு சிலரேயாவார்கள். பிறர் யோக மார்க்கத்திலும், பக்தி மார்க்கத்திலும், நின்று இறைநிலையினை வேண்டி நிற்கின்றனர்.

            இவ்வாறாக,  இறைத்தன்மையினை உணர்ந்த மெய்ஞானிகள் சைவ சமயத்தின் வழி நின்று சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகையான மார்க்கத்தில் உண்மையினை உணர்ந்த ஞானிகள் பயன்படுத்திய அவ்வழியினையே இங்கு அருளியுள்ளார்கள். மேலும், திருமூலர் சொல்லும் ஞான மார்க்கத்தினை விளக்கமாக காண்போம்.

திருமந்திரத்தில் – ஞானம்

            உலகப் பிறவியில் பிறந்த பிறவியிலேயே மிகவும் உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும். ஏனென்றால், தன்னிலை உணர்ந்து இறைநிலையினை சாரும் பாக்கியம் மனிதனுக்கன்றி வேறு பிறவிகளுக்கு இல்லை. தேவாதி தேவர்களும் வேண்டும் பிறவியாக இருக்கின்றது இந்த மானுட பிறவியேயாகும். உண்மைப் பொருளை அறியும் மெய்ஞானத்தை அறிவதை விட மேலான அறம் இந்த உலகத்தில் வேறு இல்லை. ஞான மார்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த மார்கம் வேறில்லை.

            நாதமும், நாதவடிவான மனமும், மனம் பெற்ற உணர்வும், உணர்வு உணர்த்துகின்ற ஆணவமும் ஆகிய மூன்றையும் செயல்படுத்தி, சிந்தனை செயல் செய்து மனதை வென்று அடக்கித் தன் வசப்படுத்தியவர்களே உயர்ந்த தவஞானியர்களாவார்கள். என்பதை,

            “சத்தமும் சத்த மனனும் தகுமனம்

            உய்ந்த உயர்வும் அகந்தையும்

            சித்தஎன்று இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்

            சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்கமே” திருமந்திரம் (பாடல்.1468)

என்னும், திருமந்திரப்பாடல் இறைநிலைப் பெற்ற ஞானியர்கள் பற்றி கூறுகின்றது. அவ்வாறு ஞானமடைந்தவர்கள் ஏற்படுத்திய மார்க்கமே சன்மார்க்கம் அதாவது ஞான மார்கமாகும். சிவஞானம் என்பது உயிர்கள் தம்மிடமே நினைப்பால் உண்டாக்கிக் கொண்டிருக்கின்ற உலகங்களைத் தன்னைச் சுற்றியுள்ள இன்னும் பல உலகங்களை எல்லாம் நமக்கு சிவனருளால் அருளப்பெற்றவை இந்த சிவ நல்லறிவே பின்னர் சிவனருள் என்ற மேலான பெரும் பேற்றை பெற்றுத் தரும். சிவன் அருள் அறிபவனும், அறியும் பொருளும் என்று இரண்டாக இல்லாமல் அறிபவனே அறியப்படும் பொருளாக ஒன்றிக் கலந்துவிடுவதே சிவலோகமாகும்.

            இவ்வாறான இறைத்தன்மை கொண்ட ஞானம் நமக்கு ஆசாரம் எல்லாம் தருவனவாக அமைகின்றது. அதாவது, அசைவதும், அசைவற்றிருப்பதுமாகிய பல்வேறு நிலைகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகம் மேன்மையான பல நல்ல உயர்வுகளைப் பெறச் செய்யும். பேரறிவு நிறைந்து பெருகும் இடம் சிந்தையாகும். அதாவது சிந்தை ஞானத்தின் விளைநிலமாகும். யோகம் முதலான சாதனங்களின் வழியாக மூலாதாரத்தில் இருந்து மேலே சென்று உயிர் ஆற்றலானது ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும். அமுத நீரை அருந்தி உயிருக்குக் கேடு விளைவிப்பதான பந்த பாச மலங்களை வேரறுத்துச் சிவப்பரஞ்சுடரோடுக் கூடுவதே ஞானமாகும். இதுவே, உயர்ந்த ஞான நிலையாகும். இது குருவின் துணையின்றி நிகழாது. இங்கு உலகியல் உணவில் இருந்து தற்சார்ப்பு உணவாகிய ஞான அமுதத்தினை சுவைத்து உயிர் வாழலாம்.

            உண்மையில் சைவம் என்பது காய்கறி உணவு வகை சார்ந்தது கிடையாது. அசையாத தன்மையில் இருந்து பெறப்படும் உணவே சைவமாகும். அதுவே ஞான அமிர்தமாகும். அந்த ஞானமிர்தமே உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் கொடுக்கவல்லது. அசைவம்; என்பது அசையாத தன்மைக்கு எதிர் தன்மையில் அசைத்து பிற உயிர் தன்மையினை எதிர்பார்த்து பிறச்சார்ப்பு உணவு முறையினைக் கைக்கொள்வது அசைவமாகும். சைவத்தில் ஞானத்தையே உணவாக உட்கொள்வதால் இங்கு பாவ புண்ணியம் கணக்கு இருப்பதில்லை. ஞானம் விசேடம் என்பது நாடும் பரம்பொருளைக் கண்டறிவதாகும். ஞான நிர்வாணம் என்பது மெய்ப்பொருளை அறிந்துணரும் அருள் வயமாதலாகும்.  ஞான ஆபிடேகம் என்பது ஞான குருவின் பாதம் பணியும் சிவயோக சித்தியாகும்.  ஞான சமயம் என்பது ஆத்ம தரிசனம், சிவதரிசனம், சிவபோகம், சிவயோகம் என்னும் நான்கு நிலையாகும். அவ்வாறு, ஒவ்வொரு ஞானிகளுக்கும் மேற்சொன்ன நான்கு உயர்குணங்களை பெற்றிருக்க வேண்டும்  என்கிறார் திருமூலர்.

“ஞானிக்கு உடன்குணம் ஞானத்தில் நான்கும்

மோனிக்கு இலைஒன்றும் கூடாமுன் மோகித்து

மேல்நிற்றலாம் சக்திவித்தை விளைந்திடும்

தான் குலத்தோர் சரியை கிரியையே” திருமந்திரம் (1473)

என்னும் திருமந்திரப் பாடலில், ஞானநிலையில் இருக்கும் தவ யோகிகள் மாயையின் சூழ்ச்சியில் சிக்கி மீண்டும் கீழ்நிலைக்கு  வரக்கூடும். எனவே,  ஞான நிலையில் இருப்பவரும் மௌன சமாதியில் இருக்கும்போது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் (மறைஞானம்) என்னும் நான்கு மார்க்கத்தினை எண்ணங்களினால் செய்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இது சுத்த ஞானிகளுக்கு தேவையில்லை. எனவே, ஆதார நிலையில் இருந்து யோகம் செய்வோருக்கு ஏற்றது சரியையும் கிரியையேயாகும்.

            ஞானத்தில் சரியையாகிய அருள் தொண்டும், ஞானத்தில் கிரியையாகிய அகமார்ந்த பக்தியும், ஞானத்தில் யோகமாவது நாதாந்த முடிவில் பர ஒளியைக் கண்டு மகிழ்ந்திருத்தலாகும். மேலும், ஞானிகள் அடைகின்ற ஞானத்தில் ஞானம் என்பது ‘நான்’, ‘எனது’ எண்ணும் அகப்பற்றும், புறப்பற்றும் இல்லாதிருப்பதாகும். இவ்வாறு, நான்கு மார்க்கத்தின் நிலையில் நின்று ஞானத்தினை பெற்றவர்களுக்கு புண்ணிய பலன்களான நன்மையும், பாவப் பயனாகிய தீமையும் இறைவனின் கருணைக்கு உட்பட்டவர்களுக்கு நெருங்காது.  ஞான மார்க்கமாகிய சமய நெறி என்பது தன்னை அறிவதும், தன்னுள் பரப்பொருளைத் தரிசித்து செயலற்று நிற்பதே பரிபுரண ஞானமாகும்.

முடிவுரை

            இந்த உலகில் பிறந்த அனைத்து உயிருமே இறைவனிடத்து இருந்து வெளிப்பட்டவையேயாகும். அவற்றில் மறைந்து கிடக்கும் மலங்கலாகிய ஆணவம் நீங்கும் பொருட்டு உயிர்களுக்கு கன்மத்தினையும், மாயைப் பொருட்களையும் கூட்டுவித்து ஆணவ மலத்தினை இறைவன் நீக்குகின்றான். அவ்வாறாக, பலப்பிறவிகள் எடுத்து பெறுவதற்கரிய மனிதப் பிறப்பினை  நாம் இங்கு எடுத்திருக்கின்றோம். வேறு எந்த பிறவி எடுத்தாலும் இறைவனை சிந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மனிதனோ இன்னும் இறைநிலையினைப் பற்றி சிந்திக்காமல் மாயை என்னும் அறியாமையில் இருக்கின்றார்கள். நிலையாமையினை உணர்ந்து நிலையான தன்மை கொண்ட இறைவனின் திருவடியினை வேண்டி அவன் அடிப்பணியவே இப்பிறவியினை நாம் அனைவரும்; பெற்று இருக்கின்றோம் என அiனைவரும் உணர வேண்டும்.

            இவ்வாறாக, உயர் நிலையாகிய இறைவனின் திருவடிப்பேற்;ற பெற்றுள்ள அருளாளர்களின் வழியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நிலையினை திருமூலர் தம்முடைய மந்திர பாடல்கள் வழி நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார். ஞான மார்க்கத்தில் நின்று ஞானத்தனை அடைந்தவர்களுள் திருமூலரும் ஒருவராவார். ஆனால், அவையாவும் குருவின்றி செயல்படாது. எனவே, திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு மார்க்கத்தில் உயர்ந்த வழியாக ஞானத்தை குருவின் அருள் வேண்டி ஞானத்தை அடைவோம்! அதற்கான மார்கத்தினை பின்பற்றுவோம்! பிறப்பில்லா பெருவாழ்வினை அனைவரும் அடைவோம்! என்னும் கருத்தை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கின்றோம்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

1.          ஞா. மாணிக்கவாசகன்                           –           திருமூலர் – திருமந்திரம்,

                                                                                                மூலமும் – விளக்க உரையும்,

                                                                                                மண்ணடி, சென்னை – 600 001,

                                                                                                உமா பதிப்பகம்,

                                                                                                பத்தாம் பதிப்பு – சனவரி – 2016.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

இ-மெயில்: omarivruom.999@gmail.com

Leave a Reply