திருக்குறளில் ஊழ்|ர. அரவிந்த்|ஆய்வுக்கட்டுரை

திருக்குறளில் ஊழ்
முன்னுரை
                தமிழ் இலக்கியங்கள் நமக்கு கிடைக்கப்பெற்ற மிகவும் பழைமையானது தொல்காப்பியம். அதற்கு, பிறகு தோன்றிய இலக்கண, இலக்கியங்களில் வினைப்பற்றிய செய்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வினை என்பதற்கு ஒரு செயல் அல்லது தொழில் என பொருள். இவ்வினையை நல்வினை, தீவினை என வகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பது செயலின் விளைவாகவும், தொழிலின் பயன் எனவும் பொருள் கொள்ளலாம். இதனை, நற்பயன், தீப்பயன் என்றும் வகைப்படுத்தலாம்.
                மனிதன் நல்ல செயல்களை செய்தால் பயனாக நன்மையையும், தீய செயல்கள் செய்தால் தீமையான விளைவுகளை பெறுவான். இவ்வினையின் வினைப்பயனை நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும் என்ற கருத்தினை அனைத்து சமயங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. கிமு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை நம்பிக்கைகள் சமயத்தின் துணைக்கொண்டு பரிமாண வளர்ச்சி பெற்று கருத்தாக்கம் அடைந்திருக்கிறது. மேலும் தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினைப் பற்றியும், திருக்குறளில் ஊழ் பற்றியும் செய்திகளையும் விளக்கமாகவும் பின்வறுமாறு காண்போம்.
ஊழ்வினை – விளக்கம்
                ஊழ்வினை என்ற சொல்லை ஒரு வினைத்தொகை என்று எடுத்துக் கொண்டால் இச்சொல் ஊழ்ந்த வினை, ஊழ்கின்ற வினை, ஊழும் வினை என்று முக்காலத்தினையும் உணர்த்தும்.        
             ஊழ்  வினை ஸ்ரீ ஊழ்வினை
                அகராதியில் ஊழ் என்ற பகுதிச் சொல்லுக்கு முதிர்வு என்ற பொருளும் வினை என்பதற்கு செய்யும் செயல் என பொருள் தருகின்றது. எனவே ஊழ்வினை என்பது வினை முதிர்வு என்ற பொருளையே குறிக்கிறது. மேலும்,  பழைமை, பழவினைப்பயன், முறைமை, தடைவ, முடிவு, பகை, மலர்ச்சி, சூரியன் என்றும் பொருள் அகராதியில் கூறப்பட்டுள்ளது.
                ஊழ் என்ற பகுதிச் சொல்லுடன் முறை, விதி, வினை என்ற சொற்கள் சேர்ந்து ஊழ்முறை, ஊழ்விதி, ஊழ்வினை, ஊழ்வினைப்பயன், ஊழி என்ற சொற்களுக்கு முறையே வினைப்பயன்முறை, பழவினைப்பயன், பழவினை, கருமபலன், விதி என்றும் அகராதிகள் பொருள் கூறுகின்றன.
தொல்காப்பியத்தில் ஊழ்
                தொல்காப்பியம் இன்று தமிழ் நூல்களில் காலத்தால் பழைமையானது. தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துக் கொள்ள பெரிதும் துணைப்புரிவதோடு மட்டுமல்லாமல் ஊழ்வினை பற்றிய கருத்துகளையும் அறிந்துக் கொள்ள துணைபுரிகிறது.
ஊழ் என்ற சொல்லை ஓர் இடத்தில் மட்டும் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும்  இச்சொல் வினைபயனை குறிக்கப்பெறவில்லை, அதற்கு மற்று சொல்லாக பால் என்ற சொல்லாச்சியை பயன்படுத்தியுள்ளார்.
                தலைவனும் தலைவியும் இல்லறத்தில் வாழ்ந்து மறுப்பிறவியில் சேர்வதற்கும், பிரிவதற்கும் வினைப்பயனே காரணம் என்றும், தலைவன் தலைவி இருவருக்கும் கண்ட உடனேயே புணர்ச்சி வேட்கை தோன்றாது அவையும் வினையின் ஆணையின் படியாகவே நடக்கும் என அனைத்திற்கும் ஊழையே முன்நிறுத்துகின்றார்.
     “…பால தாணையின்…” எனும் 1037 – ஆம் நூற்பாவில் பால் என்ற சொல் ஊழ்வினை பொருளையே குறிக்கப்பயன்படுத்தியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் ஊழ்
                பதினென் மேற்கணக்கு நூல்களான எட்டுத்தொகையையும், பத்துப்பாட்டையும் உற்றுநோக்கும் போது சங்க மக்களின் வாழ்க்கை, இறைகோட்பாடு, ஊழ்வினை போன்ற பண்பாட்டு கூறுகளை அறிந்துக் கொள்ள முடிகின்றது.
          எட்டுத்தொகையில் 83 இடங்களில் ஊழ் சொல்லையும் இதன் திரிபு சொற்களையும் காணமுடிகிறது. பத்துப்பாட்டில் 12 இடங்களில் வினைபற்றியும் 95 இடங்களில் ஊழ் என்ற சொல் பிற பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஊழ்வினையை குறிக்க அச்சொல்லிற்கு மாறாக உதிர்தல், மலர்தல், அலர்தல், முதிர்தல், சொரிதல், முறையே, பலமுறை, காரணம், பொருந்துதல், நிறம் வெளுத்தல், மாறி மாறி, முளைத்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
     ‘மக்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்து மரபைக் காப்பது ஊழே’ என்ற நம்பிக்கையிக் அடிப்படையிலேயே ஊழ்வினை பேசப்பட்டதே தவிர இறையியல் அடிப்படையில் பேசப்படவில்லை. இருப்பினும் இம்மை, மறுமை சிந்தனை சங்க மக்களிடம் இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியே ஊழ்வினை நம்பிக்கை வளர தொடங்கியது எனலாம். சங்க காலத்தில் அகப்புற வாழ்க்கையின் அனுபவத்தின் அடிப்படையிலேயே ஊழ்வினை கேட்பாடு தோன்றியுள்ளதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது.
கம்பராமாயணத்தில் ஊழ்
                கம்பர் ஊழ் என்ற சொல்லையும் அதற்கு நிகரான விதி என்ற சொல்லாட்சியையும் 338 இடங்களில் வினையினைப்பற்றி பேசுகின்றார். மேலும் வினையை குறிக்க அருவினை, ஆய்வினை, இருவினை, ஊழ்வினை, ஏய்வினை, கருவினை, சூழ்வினை, தீவினை, தொல்வினை, மாயவினை,  மெய்வினை, வல்வினை, வெவ்வினை என்ற சொல்லாட்சியையும் கையாண்டுள்ளார். விதி வினை என்ற சொல் விதியில் வினை என்னும் சொல்லைத் தாங்கி நின்றாலும், ஊழ் விதிவசம் என்ற பொருளையே தருகின்றது.
பகவத்கீதையில் ஊழ்
                  பகவத்கீதையில் கர்மபந்தத்தை நல்லகர்மா, கெட்டகர்மா என்று இரு வகைப்படுத்தலாம். பொதுநலத்தில் இடுபாடுகொண்டுள்ளவர்கள் நல்லகர்மாவையும், சுயநலம் கொண்டவர்கள் கெட்டகர்மாவையும் உடையவர்கள் என் குறிப்பிடுகின்றது. மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் வேள்வியாக செய்தால் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறலாம் என்று பகவத்கீதையின் கருத்தாகும் இதனை, பதஞ்சலி முனிவர் ‘கைவல்யநிலை’ என பெயரிடுகின்றார்.
அயல்நாடுகளில் ஊழ்
                 கர்மாவைக் கிரேக்கர்கள் ‘விதி’ என்றும், சீனர்கள் (tao) என்றும் ஏ என்றும், பாலி மொழியில் ‘கம்மா’ என்றும், திபெத்தில் லாஸ் (Las) என்றும், ஜப்பானில் கோ அல்லது இங்கா (Go or Inga) என்றும் ஊழ்வினையினை குறிக்க பயன்படுத்தியுள்ளார்கள். எனவே வினையையும் வினையின் பயனையும் பிற நாட்டவர்களிடமும் இருந்திருக்கின்றது.
சமயக் காப்பியங்களில் ஊழ்
     காப்பியங்கள் ஒவ்வொன்றும் சமயங்களை தாங்கி நின்று அச்சமயத்தின் பண்பாட்டினை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களும், ஐஞ்சிருகாப்பியங்களும் ஊழ்வினைப் பற்றியும், மறுபிறப்பு பற்றியும், ஊழ்வினையில் இருந்து விடுபடும் வழியையும் இதனால் பெறும் பயன்களையும் காப்பியங்கள் உணர்த்துகின்றது.
சைவத் திருமுறைகளில் ஊழ்
     கி.பி 2-ஆம் நூற்றாண்டிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் மக்களின் ஊழ்வினை நம்பிக்கை பற்றிய சிறந்த தெளிவான கருத்துக்களை காட்டுகின்றது. இறைவனை தொழுவதன் மூலமாக வினைப்பயளில் இருந்து விலகமுடியும் என் திருமுறைகள் உணர்த்துகின்றது.
பதினென் கீழ்கணக்கில் திருக்குறள்
                 பதினென் கீழக்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் தனக்கென தனியிடம் பெற்றுள்ளது. தமிழ் மக்களின் பண்பாடு, வாழ்கைமுறை, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துகளை தாங்கி நிற்கிறது.
                  திருவள்ளுவர் காலத்தினைப் பற்றி பல்வேறு கருத்துக்களள் இருந்தாலும் கிமு.31 – இல் பிறந்தார் என திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது. சான்றாதரங்கள் வழி ஆராயும் பொழுது கிமு. 2-ஆம் நுற்றாண்டு முதல் கிபி. 5-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் திருக்குறள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிட முடிகிறது.
திருக்குறள் சமயம்
     திருக்குறள் அனைத்து சமயக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, எனவே திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் எனறும் உலக மக்களுக்கொள்ளாம் பொதுவான நூலாக திகழ்கின்றது.
திருவள்ளுவர் கூறும் ஊழ்
      திருவள்ளுவர் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் ஊழ் கேட்பாட்டை படைத்துள்ளார். ஊழ்வினை தொடர்பான செய்திகளையும் தம் குறள்வழி எடுத்துரைக்கின்றார். ஆனால் உரை எழுதியவர்கள் சிலர் உழிவினை கருத்தை ஏற்றும் சிலர் மறுத்தும் உரை எழுதியுள்ளார்கள். வள்ளுவர் ஊழ் அதிகாரத்தில் வினையைக் குறிக்க ஆகூழ், இழவூழ், உண்மை, தெய்வம், பால், போகூழ் என்ற சொற்களை தம் குறளில் பயன்படுத்தியுள்ளார்.
      வள்ளுவர் முன்வினை, பழவினை, கொள்கையுடையவர் என்பதற்கு 5இ 10இ 38இ 62இ 98இ 107இ 126இ 319இ 339இ 345இ 349இ 351இ 356இ 357இ 358இ 361இ 362இ 398இ 459இ 538இ 835இ 972இ 1002இ 1042இ 1318 ஆகிய குறள்கள் சான்றாக திகழ்கின்றது. வள்ளுவர் ஊழ்  நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதோடு மட்டுமின்றி ஊழ் பற்றிய நம்பிக்கை அவர் காலத்து மக்களிடம் இருந்தமையையும் காணமுடிகிறது.
ஊழ் அதிகாரம் கூறும் ஊழ்
    ஊழ் என்ற அதிகாரத்தில் செல்வம், முயற்சி, அறிவு நன்மை, தீமை, நிலையாமை, துறவு, ஊழின் வலிமை என்ற கருத்துக்களை தொடபுபடுத்தி ஊழ்வினையினை வள்ளுவர் தம் குறள் வழி விளக்குகிள்றார்.
     முதல் இரு குறளில் செல்வம், முயற்சி பற்றியும், மூன்றாவது குறளில் அறிவைப் பற்றியும், நான்காவது குறளில் செல்வத்திற்கும் அறிவிற்கும் உள்ள வேறுபாடு பற்றியும், ஐந்தாவது குறளில் நன்மை, தீமை பற்றியும், ஆறாவது குறளில் செல்வம் நிலையாமை பற்றியும், ஏழாவது குறளில் செல்வ நுகர்ச்சி பற்றியும், எட்டாவது குறளில் துறவு பற்றியும், ஓன்பாதவது குறளில் இன்ப, துன்ப துகர்;ச்சி பற்றியும், பத்தாவது குறளில் ஊழின் வலிமை பற்றியும், விளக்கி ஆள்வினை உடைமையில் முயற்சியால் ஊழயும் நீக்க முடியும் என்ற தன்நம்பிக்கையையும் விளக்குகின்றார்.
ஆகூழ், போகூழ்
“ஆகூழால் தொன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகூழ் தோன்றும் மடி” (குறள்: 371)
எனும் குறளில், ஊழில் நன்மை செய்வதை ஆகூழ் என்றும், தீமை செய்வதை போகூழ் என இருவகைபடுத்துகின்றார்.
      ஆகூழ்  ஸ்ரீ ஆகும் ஊழ் , ஆகல் ூ ஊழ், நல்வினைபயன். (முயற்சி, அறிவு, உண்மை, விளைவித்தல், பொருள் சேர்தல், அனுபவித்தல்)
     போகூழ் ஸ்ரீ போகும் ஊழ், இழக்கச் செய்யும் ஊழ், தீவினைபயன். (சோம்பல், பேதைமை, உண்மையின்மை, தீவினை, பொருள் அழிதல், அனுபவித்தலுக்கு இடையூறு)
அறிவு
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவு மிகும்” (குறள்: 373)
எனும் குறளில், மனிதனுக்கு இயல்பாக இரண்டு குணங்கள் அவை நற்குணம், தீயகுணம் இவை அடிப்படையிலேயே காணப்படுவது. அறிவு என்பதும் கல்வியால் அமையும் என்பார்கள், ஆனால் வள்ளுவர் கல்விகற்றாலும் இயல்பாக அமையப் பெற்ற அறிவே செயல்களில் மேலோங்கி நிற்கும் அதுவே உண்மையானஅறிவு என் கூறுகின்றார்.
செல்வம், அறிவு வேறுபாடு;
     மனிதனுடைய செல்வத்திற்கும், அறிவிற்கும் தொடர்பில்லை. இவை இரண்டையும் தேடுகின்ற முயற்சி வேறுவேறாக இருந்தாலும் இரண்டையும் நல்லூழால் மட்டுமே பெற முடியும். இவற்றை,
“இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தௌ;ளியர் ஆதலும் வேறு” (குறள்: 374)
எனும் குறளில், இல்லறத்தார் தேடுவது பொருள், துறவறத்தில் இருப்பவர் விரும்பி முயன்று பெறுவது தெளிவான அறிவாகும் எனவே இரண்டும் வேறுபாடு கொண்டவை என்கிறார்.
நன்மை, தீமை
     செல்வம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற பொழுது ஏற்படுகின்ற இடையூறுகள் கூட அவனுக்கு நல்லூழ் இருந்தால் நன்மையாகமாறும், தீயூழ் இருந்தால் செயலில் பாதகமாக முடீயும் என்று,
“நல்லவை எல்லாஅம் தீயவாம்; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு” (குறள்: 375)
எனும் குறளில் குறிப்பிடுகின்றார்.
செல்வம் நிலையாமை
“பரினும் ஆகாவாம் பாலல்ல்  உய்த்துச்
சொரியினும் போகா தம” (குறள்: 376)
எனும் குறளில், மனிதன் பெற்றுள்ள அனைத்து செல்வங்களும் ஊழின் அடிப்படையிலேயே நிலைத்து நிற்பதும், நிலைக்காமல் போவதும். ஊழே என காரணம்காட்டுகின்றார்.
செல்வ நுகர்ச்சி
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
 தொகுத்தார்க்கும் துய்ந்தல் அரிது” (குறள்: 377)
எனும் குறளில், ஒருவன் கோடிக்கணக்கான செல்வத்தை பெற்றவனாக இருந்தாலும் கூட அவன் செய்த ஊழ் வினையின் அடிப்படையிலேயே செல்வத்தை அனுபவிக்க முடியும் என்கிறார்.
துறவு
“துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்” (குறள்: 378)
எனும் குறளில், “உலகில் உறவுக்கும், துறவுக்கும் ஊழ் வேண்டும்” அனைத்து பொருள்களை விழைந்து போற்றாமல் யாவற்றையும் துறப்பதே துறவாகும். உயிருக்கு உய்தி தருகிற துறவு யாருக்கும் எளிதில் கிட்டுவதில்லை, நல்லூழ் உடையவனுக்கே நலமாய்க் துறவு கூடிவரும்.
இன்பம், துன்பம் நுகர்ச்சி
“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?” (குறள்: 379)
எனும் குறளில், ஒருவன் இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என எண்ணிவிட்டல் துன்பங்கள் பெரியதாக தோன்றாது. ஊழ் வகுத்தபடி வரும் இன்பத்தையும், துன்பத்தையும் அனைவரும் நுகர்ந்தே ஆக வேண்டும். வேறுவழியில்லை அதை மாற்றி அமைக்கவும் முடியாது என் கூறுகின்றார்.
ஊழ்வினை வலிமை
“ஊழிற் பெருவழி யாவுள மற்றொன்று
சூழனும் தான்முந் துறும்” (குறள்: 380)
என்ற குறளில், ஊழைவிட வலிமையானது எதுவுமில்லை. அப்படிபட்ட ஊழை வெல்ல நினைத்தால் அவனுக்கு முன்நின்று அவனது முயற்சியை முந்தி நிற்கும் ஆற்றல் கொண்ட ஊழ் என வலிமையை குறிபிட்டுள்ளார்.
     ஊழின் வலிமையை கூறிய வள்ளுவர் பொருட்பால், ஆள்வினை உடைமையில்,
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” (குறள்: 620)
எனும் குறளில், ஒருவன் இடைவிடாது  முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிடலாம். இக்கருத்தை மேம்போக்காக பார்த்தால் முன்னுக்கு பின் முறணாகவும் தோன்றும். ‘உப்பக்கம்’ என்றால் முதுகுப்பக்கம் ஊழை புறமுதுகிட்டு ஓடச் செய்தல் என பொருள் படுகிறது.
      இப்பிறப்பில் மேற்கொள்ளும் நல்லூழ் முயற்சியால் அடுத்த பிறவியில் நலமாய் வாழ வள்ளுவர் ஊழை விலக்குவதற்கும், அதனை அகற்றுவதற்கும், மாற்றுவதற்கும் மனிதன் முயற்சி செய்தால் ஊழ் அவன் முயற்சியை வென்றுவிடும். இந்த உண்மையை உணர்ந்தால் துன்பத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தீவினைபயனான துன்பத்தை அனபவித்து விடமுயற்சியால்  நல்லூழ் செய்து ஊழை இப்பிறவியில் அல்லாது மறுபிறப்பிலாவது குறைத்து வீடுபேற்றை பெறவும், அனைவருக்கும் விடமுயற்சியை முன்நிறுத்துகின்ற வகையிலேயே இக்குறள் அமைந்துள்ளது.
முடிவுரை
     தமிழ் இலக்கியத்தில் பல நூல்களில் ஊழ்வினை கருத்துக்களை கூறியிருப்பினும் திருக்குறளில், அனைத்து சமயங்களும் எற்றுக்கொள்ளும் வகையில் செல்வம், முயற்சி, அறிவு நன்மை, தீமை, நிலையாமை, துறவு, ஊழின் வலிமை போன்ற கருத்துக்களுடன் தொடபுபடுத்தியும், நல்வினைப்பயனையும், தீவினைப்பயனையும் விளக்குவதோடு மட்டுமல்லாமல். நல்லூழ் துணைக்கொண்டு இவ்வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை அனுபவித்து கடமைகளை உணர்ந்து,  அச்சத்தின் விளைவாக புதிய குற்றங்களை செய்யாமல் இடைவிடாத முயற்சியால் நல்லூழை செய்து இப்பிறவியில் இல்லையெற்றாலும் மறுபிறவியில் நல்வினையின் பயனால் சிறுக சிறுக ஊழை குறைத்து வீடுபேற்றை அடையும் வழியினையும், சமூகத்தில் தீய செயல்களை தடுக்கும் வகையிலும் ஊழ்வினை கருத்துக்களை விளக்கியும். விடமுயற்சியால் இருந்தால் ஊழ்வினையை புற முதுகு காட்டி ஓடவைக்க முடியும் என்று முயற்சியை வழிவுருத்தும் வகையில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here