திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்று|முனைவர் இரா. அருணா| ஆய்வுக்கட்டுரை

திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்று
ஆய்வுச் சுருக்கம்
   சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களில் தோழி கூற்று முக்கியப் பங்கு வகிக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்றின் பங்கு பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் தோழி கூற்றுப் பற்றிக் கூறப்பட்டுள்ளதை இங்கு விவரிக்கப்படுகிறது. பதினெண்மேற்கணக்கு நூல்களில் அகம் ஐந்திணையில் தோழி கூற்று எவ்வகையில் அமைந்துள்ளது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. திணைமாலை நூற்றைம்பதில் இடம் பெற்றுள்ள ஐந்திணையில் தோழி கூற்று வரும் இடங்களை இங்குச் சுட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் தோழி கூற்றின் முக்கியத்துவத்தை எளிதாக விவரிக்கப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்
     திணைமாலை நூற்றைம்பது, தோழி கூற்று, ஐந்திணைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்.

முன்னுரை
     திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இந்நூலை எழுதியவர் கணிமேதாவியார். இவர் சமணச் சமயத்தைச் சார்ந்தவர். இந்நூல் 153 அகப்பொருள் சார்ந்த பாடல்களைக் கொண்டது ஆகும். ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலைப் போலத் தந்துள்ளமையால் திணைமாலை என்றும், பாடல் அளவினால் திணைமாலை நூற்றைம்பது என்றும் இந்நூல் பெயர் பெற்றது. இந்நூல்,

குறிஞ்சி – 31 பாடல்கள்

நெய்தல் – 31 பாடல்கள்

பாலை – 30 பாடல்கள்

முல்லை – 31 பாடல்கள்

மருதம் – 30 பாடல்கள்  – மொத்தம் 153 பாடல்களை உள்ளடக்கியது.

இந்நூலில் உள்ள பாடல்களில் தோழி கூற்றின் பங்கு பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

      அறவோர் என்பவர்கள் அறத்தின் வழி நடப்பவர்கள், அறத்தைப் பற்றி சிந்திப்பவர்கள், அறத்தின் வழி இயங்கச் சமுதாயத்தை நல்லாற்றுப் படுத்துபவர்கள், மனித நல மேம்பாட்டையே முதன்மைப்படுத்திச் செயற்படுபவர்கள். இத்தகைய அற உணர்வாளர்களில் அகப்பாடல்களில் பங்குபெறும் தோழி கூற்றின் பங்கு பற்றி இனி விரிவாகக் காண்போம்.

அகப்பாடல்களில் தோழிக்கான அறம்
     அறம் எனப்படுவது பல பண்புகளைத் தழுவிய பொதுச் சொல்லாயினும், ஈண்டு பெண்ணுக்கு உரிய முதற்பண்பான கற்பையே குறிக்கும். இறையனார் களவியல் உரையாசிரியரும் “அறம் என்பது தக்கது; தக்கதைச் சொல்லி நிற்றல் தோழிக்கும் உரியது” என்று கூறப்பட்டுள்ளதை அறிகிறோம்.

அறத்தொடு நிற்றலில் தோழியின் பங்கு
       கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்தல் என்பது பொருள். களவொழுக்கத்தைப் பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டும் என்பது நோக்கமில்லை. தலைவி ஏற்கனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள் என்பதை முதன்மையாக வலியுறுத்துவதே அறத்தொடு நிற்றலின் நோக்கம். வேறு வழியெல்லாம் பயனற்றுப் போற காலை “அறத்தொடு நிற்றல்” என்னும் நேர்நெறியைத் தலைவியும் தோழியும் மேற்கொள்வர் என்பதிலிருந்து தோழிக்கூற்றின் அறம் விளங்குகிறது.

தொல்காப்பியர் கூறும் அறத்தொடு நிற்றலில் தோழியின் பங்கு
      தொல்காப்பியர் களவையும் காந்தருவத்தையும் இணைத்துக்காட்டி இரண்டின் இயல்பும் ஒன்றெனக் கூறுவது போல் தோன்றினாலும் இரண்டையும் இனங்கண்டு அறியப் பயன்படுவது அறத்தொடு நிற்றல் ஆகும்.

“காந்தருவருக்குக் கற்பின்றிக் களவு அமையவும்பெறும்;
ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது”
என்ற நச்சினார்க்கினியர் தெளிவுரையில் தலைவி தோழி குரைத்த பின் அல்லது தோழி தானே அறிந்த பின் இருவருக்கும் மணமுடித்து வைக்கத் துணிவாள். அதன் பின்னரே அறத்தொடு நிற்றல் முறையாக நிகழும் என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

வாயில்களின் கடமையில் தோழியின் பங்கு
தலைமகன் தலைமகள் ஆகியோருக்கிடையேயான அன்பின் பிணைப்பு இழை அறுபடாமல் காக்கும் அற உணர்வு வாய்க்கப் பெற்றவர்களாகவே வாயில்கள் அமைவதைத் தொல்காப்பியத்தின் வழி அறிய முடிகின்றது. இதில் குறிப்பாகத் தோழி என்பவள் பெரிதும் கடமை உணர்வில் பொலிவுற்று விளங்குகின்றாள். அதானால்தான் தோழியைத் தொல்காப்பியர்,

“சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே(தொல்.1072)
எனவரும் தோழியைப் பற்றிய வரையறையிலும் வாயில்களின் கடமை உணர்வின் வெளிப்பாட்டை உணர முடிகின்றது.

பிரிவு காலக் கூற்றில் தோழியின் பங்கு
எதிர்வரும் துயர் நிலை உரைத்தல்

போக்கற்கண் உரைத்தல்

விடுத்தற்கண் உரைத்தல்

பிரிவினால் தன் துயர் உரைத்தல்

தலைபெயர்த்து உரைத்தல்

வன்புறை உரைத்தல்

இவை அனைத்துமே பிரிவு காலக் கூற்றில் தோழியின் பங்கு ஆகும்.

சங்க இலக்கியத்தில் ஐந்திணையில் தோழி கூற்றின் பங்கு
      சங்கக் கால நூற்களாக விளங்கும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் அகப்பொருள் ஏழு திணைகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் பல துறைகள் இடம் பெற்றுள்ளன. அன்பின் ஐந்திணையாக அகனைந் திணையாகப் போற்றப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகளும் நிறைந்த அளவு தோழி கூற்றுப் பெருவாரியாகப் பாடல்கள் பங்கு பெற்றன என்பதை அறிய முடிகிறது.

குறிஞ்சித் திணையில் தோழி கூற்று – 289 பாடல்கள்

பாலைத் திணையில் தோழி கூற்று – 178 பாடல்கள்

முல்லைத் திணையில் தோழி கூற்று – 52 பாடல்கள்

மருதத் திணையில் தோழி கூற்று – 96 பாடல்கள்

நெய்தல் திணையில் தோழி கூற்று – 180 பாடல்கள்

ஐந்திணையில் தோழி கூற்று – 795 பாடல்கள்

உவமப்போலி கூறுவார் வரையறையில் தோழி கூற்று
     உவமை ஒன்று கூற, அதனுள் உள்ளுறையாக அமையும் பொருள் வேறாக அமைபவை உவமப்போலிகள். இந்நிலையில், அகத்திணை மாந்தர்களில் தோழி அறிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டே உவமப்போலிகள் வரையறுத்தால்தான் உவமப்போலி சிறப்பு பெற்று உண்மை உணர்வு ஒளிகிறது.
“கிழவி சொல்லின் அவளறி கிளவி;
தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது”        (தொல்.1247)
“தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற் குரியர் கொள்வழி யான”                   (தொல்.1252)
இப்பாடலில், தோழியும் செவிலியும் பொருந்தும் இடம் பார்த்து, கேட்போர் கொள்ளும் முறை அறிந்து உவமப்போலி அமைய உரை நிகழ்வதை அறிய முடிகிறது.

சங்க இலக்கிய வாசிப்பில் முக்கியப் பங்குபெறும் தோழி கூற்று
      ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துநிலை உடைய வாசகர்கள் இருக்கமுடியும் என்பதை வாசிப்புக் கோட்பாடு உணர்த்துகிறது. அடுத்த நிலையில் தொகுப்பாசிரியரே பதிவுசெய்யப்பட்ட வாசகர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சங்க அகப்பாடல்களில் திணை துறைக் குறிப்புகள் ஆகியவற்றை ஆராயும் போது உணர்வுகளை அறிவு அடிப்படையில் பகுப்பதில் ஏற்படும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் ஏற்படுவதை அறிய முடிகிறது.

“நிலந்தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்நாட்டின்
நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே”
                                                                                                                                   (குறுந்.130வெள்ளிவீதியார்)
இந்தப் பாடலைத் தலைவி கூற்றாகவும், தோழி கூற்றாகவும் துறை வகுக்கப்பட்டுள்ளது
.
தோழி – பிரிவிடை ஆற்றுவித்தது,

தலைவி – பிரிவு ஆற்றாமை,

செவிலி – தலைவியைத் தேடத் துணிந்து.

தோழி கூற்று என்பதற்கு,

     “பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாமையாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன், நின் ஆற்றாமை நீக்குக எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.”
“தோழி தூதுவிடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையைக் கூறியதுமாம்” என்பது தலைவியின் ஆற்றாமையை விளக்குகிறது.
திணைமாலை நூற்றைம்பதில் ஐவகைத் திணையில் தோழி கூற்றுகுறிஞ்சித் திணையில் தோழி கூற்று
1.தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று, தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது

2.தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

3.பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது

4.தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது

5.இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது

6.பின்னிலை முடியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது

7.தோழி நெறி விலக்கியது

8.வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

9.நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது

10.செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது

11.தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது ஆற்றாமையால் சொல்லியது

12.’நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனா’ என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது

13.பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

14.பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது

15.கையுறை மறை

16.ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏற்றுக்கொண்டு கையுறை எதிர்த்தது

17.பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன் தனது ஆற்றாமை சொல்லியது

18.’நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்’ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்

19.தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதியைச் சொல்லியது

20.தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது

21.தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது

22.பகற்குறிக்கண் இடம் காட்டியது

23.தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது

நெய்தல் திணையில் தோழி கூற்று
1.புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது

2.இரவும் பகலும் வாரல்’ என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது

3.தோழி வரைவு கடாயது

4.நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

5.வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது

6.தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது

7.நயப்பு; கையுறையும் ஆம்

8.தலைமகனைத் தோழி வரைவு கடாயது

9.பகற்குறியிடம் காட்டியது

10.தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது

11.தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது

12.தோழி வரைவு கடாயது

13.தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது

14.தலைமகனைத் தோழி வரைவு கடாயது

15.தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது

16.தோழி வரைவு கடாயது

17.தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது

18.இப்பொழுது வாரல்!’ என்று தோழி வரைவு கடாயது

19.பாங்கற்குத் தலைமகன் கூறியது

20.தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது

21.தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?’ என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது

பாலைத் திணையில் தோழி கூற்று
1.தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறீஇயது

2.தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது

3.பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

4.முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது

5.ஆற்றாள்!’ எனக் கவன்ற தோழிக்கு, ‘ஆற்றுவல்’ என்பதுபடச் சொல்லியது

6.பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

7.தலைமகனது செலவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகினது இயற்கை கூறி, ஆற்றாது உடன்படுத்துவித்தது

8.தலைமகன் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது

9.தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது

10.தலைமகள் தோழிக்குச் செலவு உடன்படாது சொல்லியது

11.புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது

12.புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது

13.சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது

14.தலைமகன் செலவு உடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது

முல்லைத் திணையில் தோழி கூற்று

1.பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது

2.தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது

3.மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

4.பருவம் அன்று’ என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

5.பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது

6.பருவம் அன்று’ என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள், ‘பருவமே’ என்று அழிந்து சொல்லியது

7.பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது

8.பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

9.வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

10.பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது

11.பருவம் அன்று’ என்று வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாது சொல்லியது

12.பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

13.பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது

14.பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

15.பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய், ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது

16.வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான், தூதிற்குச் சொல்லியது

17.பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது

18.தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது

19.பருவம் அன்று’ என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

20.குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண் கேட்டதனால், துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது

மருதத்திணையில் தோழி கூற்று
1.விறலி தோழியிடம் கூறியது.

2.காமக்கிழத்தி தோழியிடம் கூறியது.

3.தலைவி தோழிக்குக் கூறியது.

4.தலைவி மகனைப் புகழ்வதுபோல் தந்தையைத் (தலைவனை) புகழ்ந்து தோழியிடம் கூறியது.

5.தோழி செவிலிக்குக் கூறியது.

6.தோழி தலைவனிடம் கூறியது.

7.தோழி செவிலிக்குக் கூறியது

8.தோழி கூறியது.
9.தலைவி தோழியிடம் வினவியது.

தொகுப்புரை
♣ அக்காலம் முதல் இக்காலம் வரை அறம் என்பது வாழ்வின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.

இலக்கண நூல்கள், சங்க நூல்கள் மற்றும் இக்கால நூல்கள் அறத்தை முதன்மையாக உணர்த்துகிறது.

திணைமாலை நூற்றைம்பதில் தோழி கூற்று என்பது முக்கிய இடம் பிடித்துள்ளதற்கு அறத்தொடு நிற்றலே காரணமாகும் என்பதை விளக்கப்பட்டுள்ளது.

அகம் ஐந்திணைப் பாடல்களில் தோழியின் கூற்றே முக்கியப் பங்கு வகிக்துள்ளதை நாம் இவ்வாய்வின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

இலக்கண மரபின் அடிப்படையிலும் தெளிவான கருத்துகளைக் கொண்ட அகப்பாடல்களில் தோழி கூற்று நிலைபெற்றுள்ளதை உணர முடிகிறது.

இக்கால வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட அகப்பாடல்களில் சிறப்பு மிக்கதாக அமைவது தோழி கூற்றே என்பது அறிய முடிகிறது.

திணைமாலை நூற்றைம்பதில் அறத்தொடு நிற்றலில் தோழி கூற்று முக்கித்துவம் பெறுவதை இவ்வாய்வு கட்டுரையின் வழி தெளிவாகிறது.

துணை நூற்பட்டியல்
1.திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் – ஞா. மாணிக்க வாசகன் – முதல் பதிப்பு-நவம்பர்,2011 – உமா பதிப்பகம், 18,பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை – 600001.

2.தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் கொள்கைகள் – ந.வள்ளியம்மாள் – சாரதா பதிப்பகம் – ஜி-4, சாந்தி அடுக்ககம், 3ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14.

3.தொல்காப்பிய ஆய்வுத் தெளிவுகள் – பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு – முதல் பதிப்பு-ஆகஸ்ட்,2016 – மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108.

4.சங்க அகப்பாடல்கள் தோழி கூற்று – முனைவர் இரா. நிர்மலா – முதல்பதிப்பு-2010 – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113.

5.சங்க இலக்கியத்தில் உவமைகள் – டாக்டர் ஆர். சீனிவாசன் – முதல் பதிப்பு-2012 – ஹர்ஷா புக் ஹவுஸ், எண்.22/73, காந்தி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-600033.

6.யாப்பும் நோக்கும்(தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்) – முனைவர் செ. வை. சண்முகம் – முதல் பதிப்பு-2006 – மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் இரா. அருணா,
மொழியியல் ஆய்வாளர்,

கோபிசெட்டிபாளையம்
arunatamilgobi@gmail.com
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here