தமிழ் இலக்கியக் கதைகளில் அறநெறிமுறைகள்|ஆய்வுக்கட்டுரை|முனைவர் பெ.இளையாப்பிள்ளை

தமிழ் இலக்கியக் கதைகளில் அற நெறிமுறைகள்
முன்னுரை
           தமிழ் இலக்கியங்கள் நம் வாழ்வை படம் பிடித்து காட்டும் காலப் புகைப்படக் கருவிகள் என்றே சொல்லலாம் பாட்டும் தொகையும் பழந்தமிழ்ப்  பனுவல்கலாம். சங்க இலக்கியங்கள் நம் பண்பாட்டை வெளிப்படுத்தும் விழுமியங்களாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களோடு மக்களாக பயணித்த புலவர்களினுடைய கவிதை வரிகளினூடே அறநெறிகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன பண்பாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. சங்கம் தொடங்கி சமகாலம் வரை உள்ள பலவகைப்பட்ட இலக்கியங்களில் அறநெறி முறைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை விளக்கும் இக்கட்டுரை அவற்றின் பின்புறமான இவ்விளக்கியம் அக்கதையை கூறும் சான்றோர் அவை அன்று பயன்பட்ட விதம் ஆகிய எல்லாவற்றையும் திறம்பட விளக்குவதாய் அமைந்துள்ளது.

அறநெறிக் கதைகள் கூறும் இலக்கியங்கள்
               கதைகள் இன்று இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் அன்றோ! பாமர மக்களின் பொழுது போக்கிற்காகவும், அவர்கள் நாளும் உரையாடும் உரையாடல்களிலும், ஒருவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளையும் செவிவழியாக கடத்தப்பட்டு இன்றைக்கு நூல்களாக அச்சுக்கு ஏறி பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதை பார்க்கும் போது பன்னெடுங்காலக் கதைகள் வழி அறநெறிச் சிந்தனைகளை பழந்தமிழ் மக்கள் எந்த அளவிற்குக் கையாண்டுள்ளனர் என்பது புலப்படும். மன்னனுக்கும் மக்களுக்கும் ஒரே நீதி என்ற உயர்ந்த அறநெறியை வெளிப்படுத்தும் விதமாய் பாண்டியர் வரலாறு ஒரு செய்தியை பகர்கின்றது. மதுரை மாநகரை ஆண்டு வந்த அரசன் பொற்கை பாண்டியன். அவன் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அந்தணரின் இல்லக் கதவை தட்டியதன் காரணத்தால் தன் அறநெறியினின்று தவறிவிட்டோம் என்று அறிந்து தன் கையை தானே வெட்டிக் கொண்டார். வெட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாது பொன்னாலாகிய மற்றொரு கையை செய்து மாட்டிக் கொண்டான் என்பதை சங்கநூற்கதைகளின் வழி நாம் அறிந்து கொள்கிறோம். வெட்டுண்ட கைக்குப் பதிலாக அரசன் பொன்னால் கை செய்து அமைத்துக் கொண்டான்” என்கிறார் மு.அருணாச்சலம் (தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள், பக் ; 22) சான்றோர் செய்யுள்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் தங்களுக்குள்ளே பல்வேறு விதமான மக்கள் மொழி கதைகளை பதிவு செய்து வைத்திருக்கின்றன. அக்கதைகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வகையான அறநெறி முறைகள் பின்பற்றப் பட்டிருக்கும்.
வீடென்றால் அந்த வீட்டில் நல்ல மனையாள் இருக்க வேண்டும். மனையாள் மட்டும் போதாது. அந்த மனையாளுக்கு கல்வியறிவில் சிறந்த புதல்வனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் அந்த வீடு வீடாக இருக்கும் என்பதை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை சான்றாதாரத்துடன் விளக்குகின்றது. அவை.,
மணிக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர் மனக் இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கு
                                                  
ஓதின் புகழ்சால் உணர்வு   (நான்மணிக் ; பாடல் – 101)

என்ற பாடலின் வழி அறிய முடிகின்றது. இல்லானகத்தில் ஒரு பெண் முடமானவளாகவாவது இருத்தல் வேண்டும். இல்லையேல் அது வீடாக இருக்காது பிணம் எரியும் சுடுகாடாக இருக்கும் என்னும் அறத்தை நாலடியார் கூறும் செய்யுற் கதை பதிவுசெய்கின்றது.
மாண்ட மனையாலை இல்லான் தன்னிலகம்
காண்டர்க்கு அறியதோர் காடு”    
(நாலடி ; பாடல் – 361)
நசையில்லாமல் எந்த ஒரு பெண்ணையும் ஆடவன் பின்தொடரக் கூடாது அப்படி பின்தொடர்ந்தால் அவனுக்கு என்ன விதமான தீங்கு நேரும் என்பதை உதயகுமாரன் மரணத்திலிருந்து நமக்கு புலப்படுத்துகின்றது மணிமேகலை காப்பியம்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
                            உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்”         (மணி.அடி ; 228-231)

என்பதை அள்ளி அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபி கதையின் மூலம் மணிமேகலை வெளிப்படுத்தும் அறநெறிமுறைப் பாங்கினை பார்க்கவியலும். தெய்வ நம்பிக்கையைப் பற்றுதலோடு பற்றிக் கொண்டிருந்தால் என்றாவது ஒரு நாள் கடவுள் காட்சி கொடுப்பான் என்பதை சுந்தரரின் வரலாற்றுக் கதையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதிலும் ஒருவகையான அறம் பின்பற்றப்பட்டுள்ளது. கிழவனாக வந்து இறைவன் ஆட்கொண்டவற்றை திருவெண்ணெய்நல்லூர் திருப்பதிகம் பத்தும் திறம்பட எடுத்துரைக்கின்றது.

“நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை
பேயாய்த் திரிந்து எய்தேன் பெலாகா அருள் பெற்றேன்
                                                                                                  
(ஏழாம் திருமுறை.வெண்ணைநல்லூர் பதிகம் ; பாடல் – 02)
             
   தான் கொண்ட கொள்கையில் நேர்மையும் பய பக்தியும் கொண்டால் தெய்வத்தையே கணவனாக ஏற்கலாம் என்ற ஆண்டாளின் கதை வழி அறம் வெளிப்படுகின்றது. அதை.,

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தொழீ!நான்
                                                                                                                                             
(நாச்சியார் திருமொழி ; பாடல் – 58)
             
   பெரியாழ்வார் பெற்றெடுத்த பொற்கொடி ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றுக் கதையின் வழி அறம் கொண்டு நிற்பதை காண முடிகின்றது. அது கற்பனையாயினும் அதன் உள்ளே ஒரு அறம் பொதிந்து கிடப்பதை காண முடிகின்றது. மாலவனே வந்து மாலை சூட்டுவான் எனும் மகத்தான ஒரு நெறி கொண்ட கொள்கையில் நேர்மையும் பற்றும் கொண்டு எந்த ஒரு பெண்ணிருக்கிறாளோ அவளுக்கே அது சாத்தியமாகும் என்பதை திறம்பட திருப்பாவையும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் உரைக்கிறது.
  
              எட்டு மகளிரை மணந்தாலும் கூட கடைசியில் அவனுக்கும் நிலை பெற்றது வீடுபேறு நிலை தான் என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி குறிப்பிடுகின்றது. காதலைக் கூட அறத்தின் வழியில் இட்டுச் செல்கின்ற தமிழில் காப்பியக் கதைகள். என்னிலை ஆயினும் கடைசியில் வீடுபேறு நிலைதான் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. அறநெறியை சொல்லும் முதற்காப்பியமான சிலப்பதிகாரம் அம்மானைப் பாட்டில் கோவிலன் கதை என்று வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ந்து கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் மேற்கோள் இட்டுக் காட்டுகின்றார். அவை.,
 “சிலப்பதிகாரக் கதை பிற்காலத்தில் பல படியாக வேறுபட்டு வழங்குவதாயிற்று கோவலன் கோவிலனாகவும், கண்ணகி கர்ணகையாகவும், மாதவி மாதகியாகவும், மாசாத்துவான் மாச்சோட்டானாகவும் ஆயினர். கதையும் அங்காங்கே பல மாறுபாடுகளை அடைந்துள்ளது. கண்ணகி துர்கையின் அவதாரம் என்று கதை தொடங்குகிறது. கோவிலன் கதை என்று அம்மானைப் பாட்டில் ஏற்றப்பட்ட நூலால் இவை தெரிகின்றன”. (தமிழ்க் காப்பியங்கள்,பக் – 155) பலவகைப்பட்ட கதைகளின் மூலம் அறநெறிமுறைகள் காணப்பட்டிருப்பினும்., பிற்காலத்தில் தோன்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, விவேக சிந்தாமணி, உலகநீதி போன்ற அறநூல்கள் பலவாறாக அறத்தைக் கதைக்குள் புகுத்தி மக்களிடம் சென்றுள்ளன.
              
  ஔவையாரின் மூதுரை ஒரு கதை சொல்கின்றது. நெல்லுக்கு பாய்ச்சும் நீரானது நெல்லோடு இணைந்து வளரும் புல்லுக்கும் பாய்வதைப்போல் நல்லவர் ஒருவர் இம்மண்ணுலகில் இருந்தாலே அவரால் எல்லாருக்கும் மழை பொழியும் என்ற உயறிய அறத்தை மூதுரை கூறுகின்றது.அப்பாடல்.,

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியொடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை”     (மூதுரை : பாடல் – 10)

       பெற்ற பிள்ளை வயதில் மூத்து விட்டால் அப்பாவின் சொல்லைக் கேட்க வேண்டு, மனைவியானவள குடும்ப அதிகாரப் பொறுப்பிற்கு வந்து விட்டால் அவள் தனது கணவன் என்று கருதிப் போற்றுதல் வேண்டும். தன்னிலையில் இருந்து உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டால் பணிவைக் கையாளுதல் வேண்டும் இல்லையேல் அது பாழாய் போனதே என்று விவேக சிந்தாமணி கூறுகின்றது. அப்பாடல்.,

“பிள்ளைதான் வயதில் மூத்தான் பிதாவின் சொற்புத்திக் கேளான்
கள்ளினற் குழலாள் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்
                                                                                                                                     (விவேகசிந்தாமணி : பாடல் – 03)

என்ற பாடலின் வழி அறியமுடிகின்றது. கதைகள் பலவகைப்பட்டன. அக்கதைகளில் ஏதோ ஓர் அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும். முன்னோர் சொல்லும் நன்னெறிக் கதைகள், ஐந்து தந்திரக் கதைகள் என கதைகள் பொருண்மைப் புலப்பாட்டிற்கேற்ப வழிவழியாக அறநெறிக் கதைகள் கடத்தப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் உள்ளன.

முடிவுரை
               
      அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் மெய்பொருளைக் கதைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைப்பவை தமிழ் இலக்கியங்கள். அவற்றில் அறநெறிகளைச் சொல்லும் இலக்கியங்கள் அற இலக்கியங்கள் என்னும் தொகுதியில் அடங்குவன. அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்னும் சான்றோர் செய்யுட்கள் தொடங்கி சமகால அறக்கதைகள் வரை மானுடம் உய்க்கும் பொருட்டு அறநெறிமுறைகள் வழுவாது காத்துள்ளவற்றை பதிவு செய்யும் நோக்கில் இக்கட்டுரையானது அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை
1.இசைவாணர் கதைகள், மயிலை சீனி.வேங்கடசாமி, இரண்டாம் பதிப்பு ; பிப் –  2022, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை –  600006

2.தமிழ் காப்பியங்கள், கி.வா.ஜெகந்நாதன், முதல் பதிப்பு 2016, வெளியீடு : தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை – 600 008

3.மு.அருணாச்சலம் (தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள், பக் ; 22)

4.நான்மணிக் : பாடல் – 101)

5.(நாலடி ; பாடல் – 361)

6.(மணி.அடி ; 228-231)

7.(ஏழாம் திருமுறை.வெண்ணைநல்லூர் பதிகம் ; பா – 02)

8.(நாச்சியார் திருமொழி : பா – 58)

9.(மூதுரை : பாடல் – 10),

10.(விவேகசிந்தாமணி : பாடல் – 03)

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் பெ.இளையாப்பிள்ளை
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
கலைப்புல முதன்மையர்,
பேராசிரியர் – இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010
மின்னஞ்சல் : pelayapillai@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here