தமிழர் பண்பாட்டில் வெற்றிலை | Betel in Tamil Culture

வெற்றிலை என்றால் என்ன? | வெற்றிலைக்கதையும் காரணமும் | வெற்றிலையின் வகைகள் | வெற்றிலையின் பகுப்பு முறைகள் | இலக்கியங்களில் வெற்றிலை | வெற்றிலை வளர்ப்பு | கொடி பதியம் போடுதல் | செம்பக்கால்| பாக்குவிதை நடுதல் | குத்தகை முறை| கொடி இறக்குதல்| உரமும் பாதுகாப்பும் | விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் | ஆட்டுக்கால் ஏணி (அ) கோஷம் | ஏணி | வெற்றிலைக்கிள்ளுதல் | வெற்றிலை விற்பனை நிலை | மண்டி |சந்திக்கும் பிரச்சனைகள் |கெடு வெற்றிலை | வெற்றிலையின் பயனும் மருத்துவக்குணமும்| பழக்கவழக்கங்கள் |வெற்றிலை பற்றிய பொதுக்கருத்துகள்

முன்னுரை

      மண்ணில் விதைத்த விதை விருச்சமாய் வளர்ந்து மக்களுக்குப் பல நன்மையே செய்கின்றன. செடி கொடி மரங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பலனை நமக்கு அளித்து வருகின்றன. இலை பூ காய் கனி என அனைத்துமே உயிர்கள் வாழ் துணையாக நிற்பதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் செய்கின்றன. தானியங்கள், கிழங்குகள், காய்கள், கனிகள் போன்ற வரிசையில் இலை என்னும் சொல்லக்கூடிய கீரைவகைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இலையில் உண்டாகக் கூடிய கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை உணர முடிகின்றது. இச்சுவையானது பல்வேறு மருத்துவக்குணங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் கார்ப்புச் சுவையுடைய வெற்றிலை என்னும் கொடியானது தமிழகத்தில் ஆங்காங்கு பயிரிட்டு வருகின்றனர். தமிழ் பாரம்பரியத்தில் வெற்றிலைக்கு முதல் மரியாதை தரப்படுகின்றது. மங்கல நிகழ்ச்சிகளில் தாம்பூலம் என்கிற பெயரில் வெற்றிலையை முதன்மை படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலைக்கொடியின் வளர்ப்பு பயன்பாடுகள் பற்றி இவ்வாய்வுக் கட்டுரையின்கண் காண்போம்.

வெற்றிலை என்றால் என்ன?

         வெறுமை + இலை, வெற்று + இலை = வெற்றிலை. இங்கு வெற்று என்பது வெற்றி என்பதைக் குறிக்கின்றது. வெற்றிலைக்கால், வெற்றிலை தோட்டம் என்பார்கள். உலகினில் பல்வேறு இலைகள் இருப்பினும் இவ்வெற்றிலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதே ஆகும். வெற்றிலை Piper Betle என்கின்ற தாவரவகையாகும். ஆங்கிலத்தில் Betel Pepper என்பர். மிளகு வரிசை, மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்தது. வெற்றிலைக்கு வேறுப்பெயர்களாகத் தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியிலும் வெற்றிலை, வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, திரையல், வேந்தன், இகனி எனத் தமிழிலும் உண்டு. “வெற்றிலைக்குத் தமிழகம் பூர்வீகம் இல்லை என்கின்றார்கள். இவ்வகையான தாவரத்தை மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்”1 இந்தியாவைத் தவிர மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகளவில் தமிழகத்தில் வெற்றிலை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கருர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் பொன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

வெற்றிலைக்கதையும் காரணமும்

             வெற்றிலையானது மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றாலும் தமிழகத்தில் அதற்கென்று கதை ஒன்றும் உள்ளது. சங்ககாலத்தில் இரண்டு ஆடு மேய்கும் சிறுவர்கள் தங்களின் ஆடுகளைக் காட்டில் எங்கு கொண்டுப்போய் விட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த ஆடுகள் மீண்டும்மீண்டும் சென்று மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை இரண்டு சிறுவர்களுக்கும் ஆடுகள் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு யார் முதலில் செல்வது என்பது போட்டியாக நடந்தது. ஒரு சிறுவன் ஆடு நிற்கும் இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்று அங்கு பக்கத்தில் படர்ந்திருக்கும் கொடியிலுள்ள இலையைப் பறித்து நான்தான் வெற்றிப்பெற்றேன் என்றான். வெற்றிப்பெற்ற சிறுவன் ஊருக்குள்ளே சென்று வெற்றிப்பெற்றமைக்கு அடையாளமாகத் தன்கையில் வைத்திருந்த இலையைக்காண்பித்தான். அதைபார்த்த பெரியோர்கள் நீ வெற்றிப்பெற்றதால் வெற்றி + இலை = வெற்றிலை எனக் கூறியுள்ளனர். மேலும் வெற்றிலையைச் சாப்பிட்ட ஆடுகளுக்கு எந்தவொரு நோயும் வராமல் இருப்பதைக் கண்டு அவர்களும் சாப்பிடலாயினர்.

         பூமியில் வெற்றிலைக்கொடி இல்லாமல் இருந்ததாம். இந்திரலோகத்து அரம்பைகளில் ஒருத்தி சாபம் பெற்றுப் பூமிக்கு வந்தாளாம். அவளோ தாம்பூல ரசிகை. பூமியில் வெற்றிலை கிடையாது என்று அவளுக்குத் தெரியும். பூமிக்கு வெற்றிலைக்கொடியைத் தனது மறைவிடத்தில் ஒளித்துக்கொண்டு வந்தாளாம். ஆகவேதான் வெற்றிலைக்கு அதன் தற்போதைய வடிவமும் மணமும் கிடைத்ததாம். அந்தக்கதையை வாசித்த பலர் வெற்றிலையை முகர்ந்து பார்த்துக் கிளர்ச்சியுற்று ஆமோதித்ததுண்டு. (கி.ரா. கதைகளிலிருந்து)

       இவ்வாறாக வெற்றிலையைப் பற்றிய கதைகளும் அவை இவ்வுலகிற்கு வந்த காரணங்களும் மக்களிடையே நம்பப்பட்டு வருகின்றன.

வெற்றிலையின் வகைகள்

  • வெள்ளை வெற்றிலை என்கிற கற்பூர வெற்றிலை – இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • கருப்பு வெற்றிலை – கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.
  • காப்பி வெற்றிலை – பளிச்சென்று மின்னுவது போல் இருக்கும். (தங்க நிறத்தில்)
  • பேகருப்பு வெற்றிலை – கருப்பு அதிகமுள்ள பச்சையாக இருக்கும்.

இவ்வெற்றிலையானது அனைத்து வகைகளிலும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. கொழுந்து வெற்றிலை : கொழுந்து வெற்றிலை என்பது தளிராக இருக்கும்போதே பறித்துக்கொள்வது.

2. முத்தின வெற்றிலை : நன்றாக உருவான பிறகுப் பறித்துக்கொள்வது.

வெற்றிலையின் பகுப்பு முறைகள்

1. கொடியில் தனியாகக் கிளைவைத்து இருப்பது பாலை வெற்றிலை ஆகும். அதாவது நல்ல வெற்றிலை என்பார்கள்.

2. கொடியிலே வெற்றிலை வருவது சக்கை வெற்றிலை என்பார்.

3. கோணலாகவும் காய்ந்ததும் வேண்டமென்று ஒதுக்குவதும் கழுவன வெற்றிலைகள் ஆகும்.

105 வெற்றிலை (100 – 105 வரை தோரயமாக) – 1 கவுளி

2 கவுளி சேர்ந்தது – 1 கட்டு

30 கட்டு (அதாவது 60 கவுளி) – 1 வத்து

1 முழம் என்பது – 4 கொடி

200 கொடி சேர்ந்தது – 1 கட்டு

50 முழம் சேர்ந்தது – 1 கட்டு

இவ்வாறாக வெற்றிலையின் பகுப்பு முறைகள் வைக்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களில் வெற்றிலை

         வெற்றிலை பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் நிறையவே காணக்கிடக்கின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெற்றிலை சம்பந்தப்பட்ட குறிப்புகளும் மக்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் விதமும் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. மதுரை நகர வீதிகளில் நாளங்காடியில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அங்கு பண்டங்களை வாங்க மழவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றனர்.

“நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்” ( மதுரை.401)

           மழவர்கள் நன்கு வளர்ந்த கொடியிலிருந்து பறிக்கப்பட்ட வெற்றிலையை அங்காடியிலிருந்து பெற்று சங்கை சுட்டு உண்டாக்கிய சுண்ணாம்பையும் சீவிய பாக்கையும் சேர்த்து வாயிலே எச்சில்ஊற மென்று சுவைத்தார்கள். அப்படிப்பட்ட மழவர்கள் பண்டங்களை வாங்கும் வரையில் உயர்ந்த மாடங்களின் நிழலிலே தங்கியிருந்தார்கள் என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இதன்மூலம் வெற்றிலையோடு பாக்கும் சுண்ணாம்பும் மதுரையில் நாளங்காடி தெருவில் விற்பனை செய்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

“உண்டுஇனிது இருந்த உயர்பே ராளர்க்கு

அம்மென் திரையலோடு அடைக்காய் ஈத்த”

                                                                                                                          (சிலம்பு. கொலைக்களக்காதை.54-56)

     மதுரையில் ஆய்ச்சியர்கள் உடனிருந்து கவுந்தியடிகளின் வழிகாட்டுதலின்படி தன்னுடைய கணவன் கோவலனுக்குக் கண்ணகி இனியதும் சுவையுடையதுமாகிய உணவினைச் சமைக்கின்றாள். சாப்பிட்டு முடித்த கோவலனுக்கு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியும் பாக்கும் சேர்த்துச் சுருளாக மடித்துத் தருகின்றாள் கண்ணகி என்கிறார் இளங்கோவடிகள்.

“அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;” (கம்ப.காட்சிப்.15)

        மெல்+அடகு = மென்மையான வெற்றிலை. இலங்கையில் சிறைபட்டிருக்கும் சீதை கூற்றாக மேற்கண்ட வரி அமைந்துள்ளது. என்னுடைய கணவன் இராமபிரான் சாப்பிட்ட பின்பு வெற்றிலையை மடித்துக்கொடுக்க நான் அவருடன் இருக்கவில்லையே என வருந்துவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.

“சந்த பூக்கச் சாடை பாக்கிலை

கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்”

                                                                                             (சிலம்பு.இந்திரவிழா ஊரெடுத்த.157) என்கிறது.

வெற்றிலை வளர்ப்பு

       வெற்றிலை வளர்ப்புப் பகுதியைத் தோட்டம் என்கின்றனர். வெற்றிலை சாகுபடி என்பது மற்ற விவசாயிகளைக் காட்டிலும் தனித்துவமானது ஆகும். ஏனெனில் வெற்றிலை வளர்ப்பில் காலம், சூழ்நிலை, மண், தண்ணீர் போன்றவற்றிற்கு ஏற்ப ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகுந்த போராட்டங்களையேச் சந்தித்து வருகின்றனர். கருமண், செம்மண், சேடைமண் உள்ள இடங்களில் வெற்றிலைப்பயிர்கள் நன்றாக வளரும் என்கிறார்கள் வெற்றிலை விவசாயிகள். குறிப்பாக ஏரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மண் அதிக சத்துகள் நிறைந்ததாகவும் இலைகள் நன்றாக வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

          ஒரு செவ்வக வடிவிலான நிலத்தை டிராக்டரில் உழுவதைக் காட்டிலும் மாட்டு உழவுக்கொண்டு ஆழமாக உழ வேண்டும். அதுவும் முதலில் கிழக்குத் திசையிலிருந்து ஏர் ஓட்டினால் அடுத்து, தெற்கிலிருந்து ஓட்ட வேண்டும். அடுத்து மேற்குத்திசை, வடக்குத்திசை என மொத்தம் நான்குமுறை மாட்டு உழவால் ஆழமாக உழவேண்டும். ஒரு பக்கமாகத் தண்ணீர் செல்வதற்குப் பாத்திக்கட்டி தெற்கு வடக்காக ஒன்றடி வாக்கில் வாய்க்கால் போட வேண்டும். நிலத்தில் இரண்டரை அடிவிட்டு பாத்திக்கட்ட வேண்டும்.

கொடி பதியம் போடுதல்

         பாத்திப்போட்டவுடன் தண்ணீரானது நிலம் முழுவதும் நன்றாகப் பாய்ந்து ஊறவேண்டும். முதலில் தங்களுடைய மண்ணில் எந்த வெற்றிலையைப் போட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என்று அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு பதியம் போடக்கூடிய கொடியை ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தோட்டத்திலிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கியும் கொள்கின்றனர்.

         பதியம் போடுதல் என்பது அனைவராலும் செய்ய முடியாது. இத்தொழிலில் பலகாலம் இருந்து பழக்கம் பட்டவர்களே பதியம் போடுகின்றனர். மேலும் அவர்களின் கையில் பதியம் போட்டால் வெற்றிலை நன்றாக வளரும் என நம்பிக்கையும் கொள்கின்றனர். அதற்குச் ‘சீவிக்கட்டுதல்’ என்று அழைப்பர்.

      நிலத்தைச் சுற்றிலும் பாக்கு மரத்தாலான பட்டையை இறுக்கிக்கட்டி தென்னங்கீற்றைக் கொண்டு கட்டுகின்றார்கள். இந்த வேலியானது காற்றிலிருந்து வெற்றிலைக்கொடிகளைப் பாதுகாக்கும் என்கின்றனர். மேலும் வேலியைச் சுற்றிலும் ஐந்து அடிக்கு ஒன்றாக வாழைக்கன்றினை நட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுகின்றனர்.

முதலில் அகத்தி, சௌண்டல் மற்றும் முருங்கை விதையை ஊன்றுகின்றனர். இது ஆடி மாதத்தில் துவங்கப்படுகிறது.  அகத்தி நன்றாக வளர்ந்த பிறகு ஐப்பசியில் வெற்றிலைக்கொடி பதியம் போடப்படுகிறது. சௌண்டல் செடியானது கொஞ்சநாள் விட்டுத்தான் வளரும். வெற்றிலைக்கொடியை எடுத்துக்கட்டுவதற்கு அகத்தி மரம் தேவைப்படுகிறது. அகத்தி மரம் மூன்று வருடங்களுக்குள் பட்டுப்போய் விடும். அதன்பிறகு சௌண்டலில் சேர்த்துக் கொடிக்கட்டுவார்கள். ஒருசில நேரங்களில் மூங்கில் குச்சிகளை மண்ணில் ஊன்றி கொடி கட்டப்படுகின்றன.

    வெற்றிலைக்கு நிழல் அவசியம் என்பதால் அகத்தியையும் சௌண்டலையும் முருங்கையும் துணைப்பயிர்களாகப் பயிரிட்டு வருகின்றனர்.

செம்பக்கால்

       இளம்பருவ வெற்றிலை கொடியைச் ‘செம்பக்கால்’ என்பார். ஆரம்பக்கட்ட வளர்ச்சி என்பதால் பாத்துப்பாத்துச் செய்தாக வேண்டும். நான்கு நாளைக்கு ஒருமுறை கட்டாயம் தண்ணீர் கட்ட வேண்டும். வெற்றிலை கொடிக்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ந்தால் கொடி அழுகிவிடும். மண்ணில் ஈரம் இல்லையென்றால் கொடி காய்ந்துவிடும். அதனால் எப்போதும் கொடிக்காலில் ஈரப்பதத்துடனே இருப்பது அவசியமாகிறது. ஏனெனில் வெற்றிலை தோட்டம் மிகுந்த வெப்பசலனமாக இருக்கும். தொட்டத்தில் வேலை செய்பவர்கள் வேட்டி சட்டையில்லாமல் கோவணம் அல்லகு கால் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள்.

பாக்குவிதை நடுதல்

     வெற்றிலைப் பயிரோடு பாக்குக் கன்றுகளை நட்டு ஊடுபயிராக வளர்க்கவும் செய்கின்றனர். பாக்குப்பழங்களாக இருப்பின் தைமாதம் விதைப்போடுவார்கள். ஒருவேளை பாக்குக்கன்றுகளாக இருப்பின் வெற்றிலைக்கொடி பதியம்போட்டு அடுத்த ஆடியில் நடப்படுகின்றது. வெற்றிலை தோட்டம் அழிந்தவுடன் பாக்கு மரக்கன்றுகளை வளர்த்து அதிலிருந்து பாக்குக்காய்களை உற்பத்திச் செய்கின்றனர்.

குத்தகை முறை

      நிலம் வைத்திருப்பவரிடமிருந்து விவசாயி ஒருவர் வெற்றிலை கொடி நடுவதற்குக் குறைந்தபட்சம் நான்கு வருடத்திற்குக் குத்தகை கேட்பார். குத்தகைக்குப் பணம் மட்டும் பெற்றுக்கொள்வாரும் உண்டு. பாக்குக்கன்றுகளை வளர்த்தும் பணமும் கொடுக்கவேண்டும் எனவும் குத்தகை பேசப்படும். குத்தகைமுறை என்பது ஆளுக்காளுக்கு மாறுபட்டு நிற்கும். பாக்கு மரங்கள் குழை தள்ளியவுடன் நிலவுரிமையாளரிடம் நிலத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும். காய்ந்துபோனது அனைத்தும் குத்தகை எடுத்தவருக்கும் பச்சையாகவுள்ள அனைத்தும் நிலவுரிமையாளருக்கும் பொருந்தும் எனவும் குத்தகை பேசப்படுகிறது. குத்தகை என்பது கூட்டாகவும் தனியாகவும் செய்யப்படும். பொதுவாக அரை ஏக்கர்க்கு இரண்டு ஆண் விவசாயிகள் கட்டாயம் தேவைப்படுகின்றனர். இதனை ’தோட்டம் பேசுதல்’ என்றும் சொல்லப்படுகிறது.

கொடி இறக்குதல்

       முதலில் செம்பக்கால் வெற்றிலையைக் கிள்ளயவுடன் கொடியை இறக்கி வைக்கவேண்டும். ஆடியில் பதியம் போட்டால் அடுத்த ஆடியில் கொடி இறக்குவார்கள். வெற்றிலை அகத்தியிலும் சௌண்டலிலும் நாரால் கட்டப்பட்டிருக்கும். கொடிக்கு இடதுப்பக்கம் ஒருஅடி குழி வெட்டி அகத்தியில் கட்டியிருக்கும் கொடியை எடுத்து மண்ணில் பதியம் போடுவார்கள். எடுத்துக்கட்டின கொடி என்பது அனைத்து அகத்தி மரங்களிலும் சரியாகப் பொருந்தி நேராகக் காணப்படும். இந்தச் சமயங்களில் ஏரியிலிருந்து மண்ணைக் கொண்டுவந்து கொட்டி வெற்றிலைக்கு உண்டான சத்தினை அதிகப்படுத்துவார்கள். ஆறுமாதம் கழித்து வலதுபுறமாகக் கொடி இறக்குவார்கள். அப்போது இவ்வெற்றிலைக்கொடியானது ‘முத்தினக்கால்’ என்று அழைக்கப்படும்.

உரமும் பாதுகாப்பும்

     மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணமே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஏரிமண், களிமண், சேடை மண் ஆகியவற்றையும் பிற இடங்களிலிருந்து எடுத்துவந்து கொட்டப்படுகிறது. இதனால், மண் சத்து நிறைந்தாகவும் வெற்றிலை கொடிகள் நன்கு வளர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றன. இங்கு வெற்றிலையில் நோய் ஏற்பட்டால் மோரில் தண்ணீர் கலந்து தெளித்தலும் மொளகா பவுடர், சாம்பல் போன்றவைகளைத் தூவுதலும் நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர். ஒருசில விவசாயிகள் மட்டும் காம்ப்ளக்ஸ் (மருந்து) வாங்கி தெளிப்பதும் உண்டு. காம்ப்ளக்ஸ் தெளித்தால் ஒருவாரத்திற்கு வெற்றிலை கிள்ள மாட்டார்கள்.

விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள்

வெற்றிலை வெட்டி (இனியவை கற்றல்)
இனியவை கற்றல் – தமிழர் பண்பாட்டில் வெற்றிலை

கேள்விக்குறி வடிவிலான கத்திகள் ( பெரிதும் – சிறிதும் ), வெற்றிலை வெட்டி (நகவெட்டி, வெற்றிலை வெட்டும் கருவி), மண்வெட்டி, கடப்பாறை, ஆட்டுக்கால் ஏணி அல்லது கோஷம் ஏணி போன்றவைகள் அனைவரது வீட்டிலும் இருக்கும். அக்கால வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் அனைவரும் சைக்கிளையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்தச் சைக்கிளில் வெற்றிலையும் சிறியதாகக் கத்தி ஒன்றையும் எப்போதும் வைத்தே இருப்பார்கள்.

          வெற்றிலை கத்தி                    இனியவை கற்றல்

ஆட்டுக்கால் ஏணி (அ) கோஷம் ஏணி

         ஏழுபளுவு உள்ள ஏணியில் மேலே ஓட்டையிட்டு இரண்டு கம்புகளாக முன்பகுதியில் நிறுத்தப்படும். தனியாக நிற்கும் ஏணிக்கு பாதுகாப்பாக இக்கொம்புகள் நிற்கின்றன.

வெற்றிலைக்கிள்ளுதல்

     வெற்றிலைக்கிள்ளும்போது மேற்கூறிய பகுப்புமுறைகளில் எவ்வகையான வெற்றிலையைக் கிள்ளப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றிலை வெட்டியை வலதுகையில் போட்டுக்கொள்ள வேண்டும். கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து வெற்றிலையைக் கிள்ளவேண்டும். கிள்ளிய வெற்றிலையை இடதுகையில் ஒவ்வொன்றாக அடுக்கவேண்டும். அடுக்கிய வெற்றிலைகள் நூறிலிருந்து நூற்றைந்து வரையாக இருக்கலாம். இதை கவுளி என்பர். இப்படியாக அறுபது கவுளிகளைக் கொண்டது ஒரு வத்தாகக் கருதப்படுகிறது. ஒரு வத்தாகத்தான் தென்னங்கீற்றால் கட்டி விற்பனைக்குக் கொண்டுச்செல்வார்கள். இதனை ‘தென்னங்கோட்டை ’ என்பார்கள்.

வெற்றிலை விற்பனை நிலை

        வெற்றிலை விற்பனை என்பது காலச்சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும். விவசாயிகள் கிள்ளிய வெற்றிலையை மார்கெட் மற்றும் மண்டி என இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

அ) மார்கெட்

       அனைத்து விவசாயிகளும் வெற்றிலைகள் கொண்டுவரும் சந்தை ஆகும். அவ்சந்தையில் ஏலம் விடுவதற்கென புரோக்கர்கள் செயல்படுவார்கள். தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் வெற்றிலை வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் வெற்றிலையின் தரம்பார்த்து ஏலம் கேட்பார்கள். இங்கு புரோக்கர்கள் மூலமாகத்தான் வெற்றிலையை வாங்கவோ விற்கவோ முடியும். நூற்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்வார்கள். பணமும் உடனடியாக விவசாயிகளின் கைகளில் கொடுத்துவிடுவார்கள். மார்கெட் என்பது சுற்றுவட்டாரத்தில் ஒன்றுதான் இருக்கும். விவசாயிகளும் இவற்றைவிட்டால் அடுத்து மண்டிக்குத்தான் செல்லவேண்டும்.

ஆ) மண்டி 

     வெற்றிலை விவசாயத்தில் பழக்கப்பட்டவரும் தமிழ்நாடு மற்றும் பிற மாநில வியாபாரிகளை நன்கு அறிதவர்களும் தனியாக வெற்றிலை மண்டி வைத்திருப்பார்கள். இதுபோல் பல நபர்கள் ஆங்காங்கே வெற்றிலை மண்டி நடத்துவார்கள். நாம் யாருடைய மண்டியிலும் வெற்றிலையை விற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய வெற்றிலையை வெளியூர்களில் விற்றுவிட்டு அதற்கேற்றவாறுதான் பணம் கொடுப்பார்கள். இந்த வகையில் பணம் உடனடியாகக் கையில் பணம் கிடைக்காது. இவ்வகையான முறையானது தற்போது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெற்றிலைக்கு நல்லவிலை போகும். மற்ற நேரங்களில் குறைந்த அளவிலேயே விற்கும்.

வெள்ளை வெற்றிலை ரூபாய் 2000 – திற்கு விற்பனை ஆகுமென்றால்,

கருப்பு வெற்றிலை ரூபாய் 2000 – திற்கும்,

சக்கை வெற்றிலை ரூபாய் 4000 – திற்கும் (காலத்திற்கேற்ப)

கழுவுன வெற்றிலை ரூபாய் 600 – க்கும்,

காபி வெற்றிலை சுமார் ரூபாய் 3500 – க்கும் விற்பனை ஆகும்.

        இவற்றில் காபி வெற்றிலை இருபது நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிள்ள முடியும். மற்ற வெற்றிலைகளை இருபத்தைந்து நாட்களுக்குள்ளே கிள்ள முடியும்.

சந்திக்கும் பிரச்சனைகள்

             வெற்றிலை விவசாயிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். தங்களுடைய சொந்தநிலம் என்றால் குத்தகை பிரச்சனை வராது. இல்லையெனில் நிலம் குத்தகை பேசுவதற்கு போதும்போதும் என்றாகிவிடும். நிலத்துக்காரர்கள் பேசின ஆண்டுகள் முடிந்தவுடன் காலிசெய்துவிட வேண்டும் என்பார்கள். அப்போதுதான் நம்முடைய வெற்றிலைப் பயிர் நன்றாக வளர்ந்திருக்கும். இப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்படுகிறது. குத்தகை என்றாலும் இரண்டு நபரோ அல்லது நான்கு நபரோ அதற்குமேலுள்ள நபர்களோ சேர்ந்துதான் குத்தகை எடுப்பார்கள். மொத்தமாகச் செலவு செய்ததற்கு அனைத்து விவசாயிகளும் பணத்தொகையைப் பங்கிட்டுக்கொள்வார்கள். கொடிக்காலின் சரிபாதியாக ஆளுக்காளுக்குப் பிரித்துக்கொள்வார்கள்.

         கூட்டுமுறை விவசாயம் என்பது ஒருப்பக்கம் நல்லதே என்றாலும் சில நேரங்களில் சிக்கலிலும் முடிந்துவிடுகிறது. ஏதாவது ஒருஆள் தோட்டத்தைவிட்டு விலகுகின்றார் எனில் வேறொரு ஆளை அவ்வளவு எளிதாக உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். அப்படியும் வரவேண்டும் என்றால் இங்குள்ள கட்டுப்பாடுகளைச் சொல்லி அதற்கு சம்மதம் பெற்ற பின்னரே அனுமதிப்பர். இல்லையெனில் விட்டுச்சென்ற கொடிக்காலை இருக்கின்ற அனைவரும் பணத்தொகையைக் கொடுத்துவிட்டு சரிப்பாதியாகப் பிரித்துக்கொள்கின்றனர். இவற்றில் யாரேனும் ஒருவரே கூட வாங்குவதும் உண்டு. நிலத்துக்காரர் தன்னுடைய நிலத்தில் நெல், கரும்பு, சோளம் என ஏதாவது பயிரிட்டுயிருந்தால் பகலில் அவர் தண்ணீர் கட்டிக்கொள்வார். அப்படியானால் வெற்றிலை விவசாயிகள் இரவில்தான் தண்ணீர் கட்ட முடியும். உதாரணமாக ஐந்துபேர் கூட்டாக இருக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். முதலில் ஒருவர் மட்டும் இரவு நேரத்தில் அனைவரது கொடிக்காலுக்கும் தண்ணீர் கட்டவேண்டும். நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னொருவர் தண்ணீர் கட்டுவார். இப்படி ஒவ்வொருவராகச் சுழற்சிமுறையில் தண்ணீர் கட்ட வேண்டும். சிலநேரங்களில் இரண்டு பேர்கூட தண்ணீர் கட்டுகிறார்கள். ஆனால் அதிகப்படியாக இரவில் ஒருவரே தண்ணீர் கட்டுகிறார்கள்.

      இரவுநேரம் என்பதால் இருட்டு, பறவைகளின் சத்தம், விஷப்பூச்சிகள், பாம்புகள் என விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். சிலநேரங்களில் அமானுஷிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன என்று கற்பனையிலோ அல்லது பயத்திலோ காட்டை விட்டு ஓடியும் வந்துள்ளனர்.

கெடு வெற்றிலை

       ஒருவருக்கு இந்த நாளன்று வெற்றிலையைத் தருவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டால், சரியாக அந்தநாளில் சொன்னச்சொல் தவறாமல் வெற்றிலையைக் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் சரியான சண்டைகளும் வருவதுண்டு. இதற்கு ’கெடு வெற்றிலை’ என்பர். இத்தகுநிகழ்வானது வெற்றிலை விவசாயிகள் புரோக்கர்களிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்றுக்கொள்வதுண்டு. அப்பணத்தை திருப்பி தரமுடியாமல் வெற்றிலையாகக் கொடுத்துக் கழித்துக்கொள்வார்கள். மாறுபட்டு நின்றால் பணத்தைத் திருப்பிக் கேட்பார்கள். வெற்றிலை தோட்டத்தில் கொடிக்காலில் இந்த இரண்டு கால்களும் கெடு வெற்றிலைக்காக ஒதுக்கப்பட்டது என வைத்துக்கொள்வர்.

வெற்றிலையின் பயனும் மருத்துவக்குணமும்

  • வெள்ளை வெற்றிலையை வாயில்போட்டு மென்று தின்றால் வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கும்.
  • வெற்றிலை என்பது மனித உடலில் ஜீரண சக்திக்கு வழிவகுக்கிறது.
  • வெற்றிலை பாக்கோடு சுண்ணாம்பு சேர்த்து மெல்லும்போது உடலுக்குச் சுண்ணாம்பு சத்துச் சேர்கிறது. இதனால் பற்கள் வலிமையுள்ளதாக மாறுகிறது.
  • இரண்டு வெற்றிலைகள், கைப்பிடியளவு வேப்பிலைகள், அருகம்புல் ஒரு கைப்பிடியோடு அரைலிட்டர் தண்ணிரீல் நன்றாகச் சுடவைத்து அவற்றை வடிகட்டி மூன்று வேளையும் குடித்து வந்தால் சக்கரை நோயானது கொஞ்சகொஞ்சமாய் குணமாகும்.
  • வெற்றிலையோடு மிளகும் தேங்காய்த்துண்டும் சேர்த்து வாயில் மென்று முழுங்கினால் தேள் விஷம் நீங்கும் என்பார்கள்.
  • நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெற்றிலைசாரும் இஞ்சிசாரும் சமஅளவு கலக்கிக் கொடுத்தால் தீரும்.
  • நெஞ்சுசளி உள்ளவர்களுக்கு வெற்றிலையோடு மஞ்சள், மிளகுச் சேர்த்துக் கசாயம் செய்து கொடுப்பதை இன்றளவும் நம் வீடுகளில் பார்க்கலாம்.
  • பாலில் வெற்றிலை சாரை கலந்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
  • வெற்றிலையால் உமிழ்நீர் பெருகும். பசியை உண்டாக்கும். தாய்மார்களுக்குப் பால் சுரக்க வைக்கும். காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை வலுபடுத்தும். உடம்பில் நறுமணத்தை அதிகரிக்கும்.
  • யானைக்கால் வீக்கத்திற்கும் வலி நிவாரிணியாகவும் வெற்றிலையானது பயன்படுகிறது.
  • தொடர் இருமலை கட்டுப்படுத்த வெற்றிலையோடு கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் குணமாகும்.
  • வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி உடம்பிலுள்ள கட்டிகளின்மேல் பற்றாகப் போட்டால் கொப்புளங்கள் பழுத்து உடையும்.
  • வெற்றிலைக்கொடியின் வேரைச் சுவைத்து விழுங்கினால் வெங்கலத்தைப்போல் குரல்வளம் பெருகும்.
  • பாம்புக் கடித்தவர்களுக்கு வெற்றிலைச்சாறு கொடுத்தால் விஷம் முறியும். அதனால்தான் நாகவல்லி எனவும் அழைக்கின்றனர்.
  • இரவுப் படுக்கும்முன் வெற்றிலைச் சாறுடன் ஓமத்தைச் சேர்த்துக் குடித்து வர மூட்டுவலி, எலும்புவலி ஆகியவை குணமாகும்.
  • வெற்றிலை இலைகளைத் தலையில் ஒட்டிக்கொண்டால் ஒற்றைத்தலைவலி, தலைபாரம், தலைவலி உடனடியாக நீங்கும்.
  • உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகளைக் கொண்டது.
  • வாய் சம்பந்தப்பட்ட புண்களைக் குணமாக்குகிறது.
  • வெற்றிலையில் நார்ச்சத்து 84.4 சதவீதமும், புரதசத்து 3.1 சதவீதமும் கொழுப்புச் சத்து 0.8 சதவீதமும் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, தயமின், ரிபோபிளேவின், புரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
  • தீக்காயங்கள் பட்ட இடத்தில் கொழுந்து வெற்றிலையைக் கட்ட புண்கள் விரைவில் ஆறும்.
  • சிறுகுழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்படும்போது வெற்றிலை காம்பைக் கிள்ளி ஆசானவாயினுள் நுழைத்து வைத்தால் சிறுதுநேரத்தில் மலம் வெளிப்பட்டுக் குழந்தையின் வயிறு தூய்மையாகும்.
  • வெற்றிலையோடு தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து சொரி, சிரங்கு, படை மீது தடவினால் குணமாகும்.

பழக்கவழக்கங்கள்

வெற்றிலையோடு பாக்குச் சேர்த்து தாம்பூலம் என்கின்றனர்.

சுபநிகழ்ச்சிகளான திருமணங்கள், வரவேற்பு, நிச்சயதார்த்தம், பண்டிகைகள் போன்ற மங்கல நிகழ்வுகளில் தாம்பூலம் என்பதை முன்னிறுத்தியே நடத்தப்படுகிறது.

மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் பாக்கு வெற்றிலையை மாற்றிக்கொண்டால் பாதித்திருமணம் முடிந்துவிட்டது என்றே அர்த்தம். இதற்கு நிச்சயதார்த்த தாம்பூலம் என்றே கூறுவர். இப்படி செய்வது என்பது மரியாதை நிமித்தமாகவும் லட்சுமிகடாஷம் கிடைக்கும் எனவும் நம்பினர்.

வெற்றிலை – பாக்குப் போடுவது ஆண்பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டவுடன் மனைவி கணவனுக்கு வெற்றிலை தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் பழக்கம் இன்றளவும் நம்முடைய தமிழர் பண்பாட்டில் இருந்துவருவதைக் காணலாம்.

பண்டையக் காலத்தில் தங்களுடைய அழகுப்பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தனர்.

’வெற்றிலைப்பெட்டி’ என்ற ஒன்றை சிலர் இன்றளவும் வைத்திருப்பதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெற்றிலை பயிரிடப்பட்டாலும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குத் தனிச்சிறப்பு உண்டு. “வெற்றிலைக்குக் கும்பகோணம்” என்பார்கள். இதற்குச் ’சேட்டு வெற்றிலைகள்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு.

மொகலாய மன்னர்கள் வெற்றிலை பழக்கத்திற்காகப் பெரும்பணத்தைச் செலவு செய்தார்கள். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச்செலவுக்காகச் சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதும் ஒதுக்கி வைத்தார் என்ற செய்தியும் இருக்கிறது.

மார்க்கோபோலோ, ஷான்மார்ஷ் போன்ற சர்வதேச பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலைப் போடும் பழக்கத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வெற்றிலை பற்றிய பொதுக்கருத்துகள்

வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டால் கையால் எடுத்துத் தரக்கூடாது. ஏனெனில் நள்ளிரவில் பேய்கள் அழகிய சினிமா நடிகைகள்போல் வேடம் புனைந்து வந்து வழிமறித்து வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்குமாம். விரலால் எடுத்துக்கொடுக்க கூடாது. கத்தியால் எடுத்துத் தரவேண்டும்.

வெற்றிலையில் ஆண் – பெண் வெற்றிலையும் உண்டு என்கிறார்கள். வெற்றிலையின் பின்பக்கம் காம்புக்குக் கீழே கோடு நேர்ச்சரியாக இருந்தால் பெண் வெற்றிலை எனவும், கோணல்மானலாக இருப்பின் ஆண் வெற்றிலை எனவும் அழைக்கின்றனர்.

கிராமங்களில் வயல், தோட்டம், காடு, விளைநிலங்களில் வேலைப்பார்க்கும் ஏழைமக்கள் ஓய்வு நேரத்தில் வெற்றிலைப்போடுவதும் பகிர்ந்து அளிப்பதும் இனாம் கேட்பதும் தினந்தோறும் நடப்பவையே ஆகும்.

வெற்றிலைப் போடும் பழக்கம் தமிழகத்தில் நிறைய மக்களுக்கு உண்டு.

ஆடைகளில் விழும் வெற்றிலைக்கரையானது ‘அம்மா என்றாலும் ஆத்தா என்றாலும் போகாது!’

நல்ல உணவுக்குப்பின் தாம்பூலம் தருவது நன்று.

வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களிடையே பெரியோர்கள் சொல்லி வைப்பார்கள்.

முடிவுரை

        தமிழர்ப்பண்பாடு என்பது பல்வேறு காரண காரியங்களாலும் பழக்கவழக்கங்களாலும் நாகரீகப் பண்பாட்டோடு இணைந்து வரையறுக்கப்பட்டது. தமிழ்ப்பேசும் மக்கள் ஒவ்வொருவரும் நம்முடைய பாரம்பரியத்தைக் காக்க போராடி வருகின்றனர். தமிழர்ப் பண்பாட்டோடு ஒத்துப்போகிற அனைத்தும் பாதுக்காக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலைப் பயிரிட்டும் சபகாரியங்களுக்கும் பயன்படுத்தியும் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உட்புகத்தியும் வந்துள்ளனர். தமிழ் மக்களின் மனதோடு வெற்றிலை என்பது வெற்றிக்கொண்டு விட்டது எனலாம்.

            வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை நிலங்களிலே தோட்டம் போடுகின்றனர். இவர்களுக்கு சாதி, மதம் என்கிற பேதம் எதுவுமில்லை. தொழில் தெரிந்த அனைவரும் வெற்றிலைப் பயிர் செய்கின்றனர். மருத்துவக்குணம் நிறைந்த இவ்வெற்றிலைத் தொழிலை இன்றை இளம்தலைமுறையினர் மறந்து போயுள்ளனர். தமிழர் பாரம்பரியத்தைக் காக்கவும் வெற்றிலைத்தொழிலை நடத்தவும் இளைஞர்களும் முன்வர வேண்டும்.

சான்றெண் விளக்கம்

1.திரு.மு.கணேசன் நாயக்கர், வயது 65, பெத்தநாயக்கன் பாளையம், வெற்றிலை விவசாயி, வெற்றிலை வியாபாரி – வெற்றிலையைப் பற்றிய முழுத்தகவல் அளித்துள்ளார்.

2.திரு.கந்தன் உடையார், வயது 85, பெத்தநாயக்கன் பாளையம், வெற்றிலை விவசாயி – வெற்றிலையைப் பற்றியத் தகவல் அளித்துள்ளார்.

3.இணையத்திலிருந்து,

       1.தினமணி, தமிழரின் அகவாழ்வில் வெற்றிலை பாக்கு, வே.சிதம்பரம். 20.09.2012.

       2.theebamttamil.com, தமிழர் வாழ்வில் வெற்றிலை பாக்கு, 06.08.2016.

      3.Wordpress.com, வெற்றிலை பாக்கு தொடர்பான வரலாறு, 11.01.2013

      4.Sudhgar Krishnan channel, வெற்றிலை வளர்ப்பு மற்றும் மருத்துவப்பயன்கள், 16.09.2020

      5.ஆய்வுக்கட்டுரை, நாஞ்சில்நாடன், தீதும் நன்றும் (18) வெற்றிலை

     6.வெற்றிலை, 01.01.2017, மூலிகை அறிவோம், சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

3 COMMENTS

  1. வெற்றிலை பற்றிய முமுமையான தொகுப்பு. சிறப்பான ஆய்வு. வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here