சோஷலிசப் பெண்ணியம் (Socialist Feminism)

சோஷலிசப் பெண்ணியம்

    சோஷலிசப் பெண்ணியம் (Socialist Feminism)

     சோஷலிசக் கருத்துக்கள் ராபர்ட் ஓவன், சார்லஸ் புரியர், செயிண்ட் சிமான்ஸ் முதலியோரது கோட்பாடுகளில் ஆரம்ப காலங்களிலேயே பரவிக் கிடந்தன. அவர்கள் ஏற்றத் தாழ்வுகளற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முயன்றனர்.

      1973-களில் மார்க்சிசக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ள அமெரிக்கப் பெண்ணியவாதிகள், மார்க்சிசம், பெண்ணியம் ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கும் இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகளை ஒழுங்குபடுத்தவும், பெண்கள் அனுபவிக்கும் எல்லா விதமான நசுக்குதலின் காரணங்களையும் அறிந்து அவற்றை நீக்கும் முறைகளை ஆராயவும் பெண்ணியக் குழுக்களை ஏற்படுத்தினர். தனித்தியங்கிய பெண்ணியவாதிகளும், மார்க்சிசவாதிகளும்கூட இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
            இந்த முயற்சியின் விளைவாக ஏற்பட்டதுதான் சோஷலிசப் பெண்ணியம் / பெண்ணிய சோஷலிசம். இது பெண்ணியக் கருத்துக்களின் மூலமும் மார்க்சியக் கருத்துக்களின் மூலமும் பெண்ணடிமையின் காரணங்களை ஆராய முற்பட்டது.

பெண்ணடிமையின் காரணங்கள்

            ஜூலியட் மிட்சல் (Juliet Mitchell) என்பவர் தனிநபர் சொத்துரிமையை அழித்து விடுவதால் மட்டும் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்பதனைச் சுட்டிக் காட்டுகின்றார். தனது கருத்துக்களை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். பெண்கள் ஏன் எல்லா சமூகங்களிலும் நசுக்கப்படுகின்றார்கள்; எவ்வாறு நசுக்கப்படுகின்றார்கள் என்பதனை ஆராய்வது முக்கியம். இதை நான்கு முக்கியக் கூறுகளில் மறுஆய்வு செய்ய வேண்டும். அவை உற்பத்தி, மனித மறு உற்பத்தி, பாலியல், குழந்தை வளர்ப்பு என்பனவாகும். பெண்கள் பொது வேலைகளிலிருந்து விலக்கப்பட்டதற்கு அவர்களது உடற்கூறுகள் காரணமன்று; சமூகமே காரணம். அதனால் பெண்கள் சமூகத்தில் ஆண்களுடன் வேலைகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டாலும், சமூக நிலையும், சமூகத்தின் மதிப்புகளும் மாறாதவரை பெண்களுக்குச் சமத்துவம் கிடைக்காது.

            இரண்டாவது, பெண்கள் குழந்தை பெறும் வேலையின் காரணமாகக் குடும்பத்தில் முடக்கப்பட்டுள்ளனர். அதனால் குடும்பம் என்ற அமைப்பை அழித்துவிட்டால் பெண்கள் விடுதலை அடைவர் என்ற கருத்தும் சரியல்ல. இது குடும்பத்தின் பங்குப் பணிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட தவறு. இப்பங்குப் பணிகளை ஆராய்ந்து அவற்றைத் தகர்க்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குடும்பத்தில் மனித மறுஉற்பத்தி, பாலியல், குழந்தை வளர்ப்பு, இவை முக்கிய பங்குகள் ஆகும்.

            இதில், மனித மறுஉற்பத்தி குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் எளிதில் கிடைப்பதன் மூலம் கட்டுப்படும். குடும்பத்தில் ஆண் பெண்களுக்கிடையே நிலவும் சமத்துவமற்ற அதிகாரம், ஆண், பெண்ணைச் சுரண்ட அனுமதித்தது. இருவருக்கும் சமமான பாலியல் சுதந்திரம் கிடைக்கும்பொழுது இந்நிலை மாறும். அப்பொழுது குடும்பம் தேவையற்றதாகும். பெண்கள் குழந்தைகளைப் பெறுவதால் அவர்களே குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்ற கொள்கையை மாற்ற வேண்டும். இதனால் குடும்பம் என்பது பொருளாதாரத்தோடு மட்டும் சம்மந்தப்பட்டதன்று; வேறு நிலைகளோடும் சம்மந்தப்பட்டதென விளங்கும்.

            சோஷலிசப் பெண்ணியம் எல்லாப் பெண்களும் பாலின அடிப்படையில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்தை ஒப்புக்கொண்டாலும், சமூகத்தில் பல்வேறு வகைப்பட்ட கூறுகளும் பெண்களை நசுக்கக் காரணமாயுள்ளன என்பதையும் ஒப்புக் கொள்கின்றது. நாடுகள், இனம், வயது, அறிவுத்திறன், மதம், வர்க்கம் இவைகளும் பாலினப் பாகுபாடுகளினூடே செயற்படுகின்றன என்று வலியுறுத்துகின்றது. அதாவது, உலகம் முழுவதும் பெண்கள் அனைவரும் ஒரே வர்க்கமாக நசுக்கப்படுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் தாம் சார்ந்த மற்ற கூறுகளோடு, தம் இன ஆண்களோடு சேர்ந்தும் பல்வேறு விதமான நசுக்குதல்களுக்கு உட்படுகின்றனர்.

            அதனால் பாலினமோ, வர்க்கமோ நசுக்குதலின் அடிப்படைக் காரணி என்று விவாதிப்பதைவிட, எல்லாப் பிரச்சனைகளும் பெண்களைத் தாக்கும் பிரச்சனைகள்தான்; அதனுடன் வர்க்க, இனப் பிரச்சனைகளும் அடங்கும் என்று கொள்வது பொருத்தமாகும். அதனால் பெண்களின் பிரச்சனைகளை மற்றப் பிரச்சினைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் முழுமையான கண்ணோட்டத்தோடு நோக்க வேண்டும். இக்காரணங்களினால் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் பொழுது மற்ற சோஷலிசப் புரட்சிகரக் குழுக்களோடு ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென்பது அவர்கள் கருத்தாகும்.

            சோஷலிசப் பெண்ணியவாதிகள், மார்க்சிசத் தத்துவத்தில் காணப்படும் பொருளுற்பத்தி என்ற கருத்தை மனித மறு உற்பத்தி உள்ளிட்ட வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும், உள்ளடக்குமாறு விரிவுபடுத்தினர். அவர்கள் கருத்துப்படி, மனித மறுஉற்பத்தி என்பது குழந்தைகளை ஈன்றெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடும் பணியாகாது. அது உயிரைப்படைப்பதுடன், மக்களை வளர்த்து, ஆளாக்கி, சமூக நிலைக்குத்தக்கவாறு உருவாக்கி, சமூகத்திற்குத் தொழிலாளர்களை வழங்கும் பணியுமாகும். அதனால் உற்பத்தி என்னும் சொல் மனித மறு உற்பத்தியையும் குறிக்குமாறு விரிவு படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.


            சோஷலிசப் பெண்ணியம் பெண்களின் வேலை என்ற பதத்திற்கும் புதிய விளக்கத்தை அளித்தது. பெண்கள் வீட்டில் செய்யும் வேலை வெளியில் ஆண்கள் செய்யும் வேலைக்கிணையான  மதிப்பைக் கொண்டது. ஆனால் அதற்கு தகுந்த மதிப்போ, ஊதியமோ அளிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிற்று சோஷலிசப் பெண்ணியவாதிகள் தீவிரப் பெண்ணியவாதிகளைப் போன்று வாழ்க்கையில் தனி மனித அனுபவமே புற உலக அனுபவம் என்ற கருத்தைக் கொண்டவர்கள். அதாவது வாழ்க்கையின் வெளி, உட்பகுதிகள் என்ற பாகுபாட்டை நிராகரிக்கின்றனர்.


            சோஷலிசப் பெண்ணியம் மார்க்சிச நோக்குடன் தீவிரப் பெண்ணியத்தையும் சேர்த்து நோக்குகின்றது. இது வர்க்கப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டையும் அழிக்க வேண்டுமெனக் கருதுகின்றது. இது முதலாளித்துவத்தையும் ஆண் நாயகத்தையும் ஒழித்து, சமூகத்தின் எல்லாவிதமான சுரண்டுதல்களையும் நீக்கி, ஆண்மை பெண்மை என்ற பாகுபாடற்ற சமூகத்தை நிறுவப் பாடுபடுகின்றது.


 பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

            மிதவாதப் பெண்ணியவாதிகளைப் போலன்றி சோஷலிசப் பெண்ணியவாதிகள், சமூக அமைப்பே குறைபாடுள்ளது. அதனால் ச்மூக அமைப்பைப் புரட்சியின் மூலம் மாற்ற வேண்டுமென விழைகின்றனர். மேலோட்டமான சீர்திருத்தங்கள் முழுமையான பலனளிக்காது என்பது அவர்களது கொள்கையாகும். சோஷலிசப் பெண்ணியவாதிகளும், பெண்கள் ஆண்களிடமிருந்து பிரிந்து, தனித்த குழுக்களாகப் போராட வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

            பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் சமூக அமைப்பு மட்டுமல்லாது ஆண்களும் இவர்களுக்கு எதிரிகள்தான். உலகம் முழுவதும் நிலைபெற்றிருக்கும் சமூக அமைப்பு ஆண்களுக்குச் சாதகமாகவே உள்ளதால் ஆண்கள் தற்போதுள்ள சமூக அமைப்புக்கெதிராகப் போராட முன்வரமாட்டார்கள். இந்நிலையைப் பெண்ணியவாதிகளும், சோஷலிசவாதிகளும் பெண்ணிய இயக்கத்தில் மும்முரமாக ஈடுபடும்பொழுது உணர்ந்து கொண்டனர்.

            சில ஆண் சோஷலிசவதிகள் பெண்களின் விடுதலையை முக்கிய குறிக்கோளாகக் கொள்வது தனிநபர் சொத்துரிமையை அழிக்கும் நோக்கத்தைப் பின் தள்ளிவிடும் எனப் பயந்தனர். சிலர் பெண்களுக்கு எதிரிகளாவும் இருந்தனர். பெண்களின் இயல்பு சோஷலிசப் புரட்சிக்கு எதிரிடையாக உள்ளது எனச் சிலர் குறை கூறினர். வேறு சிலர், பெண்களின் காம உணர்ச்சியில் இருந்து ஆண்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று எச்சரித்தனர்.

            இக்காரணங்களினால் பெண்ணிய வாதிகள், ஆண்கள் தங்கள் தாழ்நிலையை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர்; பெண்களின் தாழ்நிலையைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என உணர்ந்து அதிருப்தியுற்றனர். இவ்வெண்ணங்களினால் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தனித்துப் போராட வேண்டுமென்ற எண்ணம் சோஷலிசப் பெண்ணியவாதிகளிடையே வலுப்பெற்றிருந்தது.

            சோஷலிசப் பெண்ணியவாதிகள் ஆண்களைப் போன்று பெண்கள் பொது வேலைகளில் ஈடுபடவேண்டும்; பெண்கள் தங்களது தனிவேலை அல்லது குடும்ப வாழ்க்கை முறைகளினால் கட்டுப்படுத்தபடக் கூடாதென வலியுறுத்தினர். மேலும், தற்கால இயந்திர வளர்ச்சி பெண்கள் உடல் வலிமை குறைந்தவர்கள், அதனால் சில வேலைகளுக்குப் பயன்படமாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்ற உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.


            சோஷலிசப் பெண்ணியவாதிகள் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் பொது வேலைகளில் ஈடுபட அவர்களுக்குச் சம கல்விவாய்ப்பு அளிக்கப்படுதல் வேண்டும். என வலியுறுத்தினர்.


            குடும்பம் என்ற அமைப்பை அழிக்க வேண்டும்; குடும்பம் அல்லாது வேறு வகையான வாழ்க்கை முறைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களது வழி முறைகளில் ஒன்றாகும். கூட்டு வாழ்க்கை, சுதந்திரமான மண உறவுகள், இவைகள் பெண்களுக்குக் குழந்தைப் பேற்றிலிருந்து சுதந்திரம் அளிக்கும். பிறந்த குழந்தைகளுக்குப் பெற்றோர் பெயர் தெரியாவிட்டால் சமூகத்தால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படாத நிலைமாற வேண்டும்; குழந்தை வளர்ப்பு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பவையும் இவர்களது வழிமுறைகள் ஆகும்.

குறைபாடுகள்

பெண்கள் பாலியல் காரணங்களினால் நசுக்கப்படுவதற்கும், முதலாளித்துவ வர்க்கத்தினரால் நசுக்கப்படுவதற்கும் அடிப்படையில் உள்ளன என்பதை சோஷலிசப் வெவ்வேறு காரணங்கள்
பெண்ணியவாதிகள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயின், அவர்களால் ஆண்நாயகத்தின் அடிப்படையான காரணத்தைக் கண்டுகொள்ள இயலவில்லை.

அதே போன்று, முதலாளித்துவத்திற்கும் ஆண் நாயகத்திற்கும் அடிப்படையில் உள்ள தொடர்பையும் அவர்களால் சரியான முறையில் விளக்க இயலவில்லை. இவை பற்றிய கருத்து வேறுபாடுகளினால் சோஷலிசப் பெண்ணியம் இடதுசாரி, வலதுசாரி என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. 1980-களில் இடதுசாரிகளின் கை அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஓங்கிய பொழுது சோஷலிசப் பெண்ணியம் வீழ்ச்சியுற்றது.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க, 

1.மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

2.மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here