செவ்வியல் இலக்கியங்களில் கைம்மை

முன்னுரை

            சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பென்டிங் பிரபு காலத்தில் ஒழிக்கச் சட்டமியற்றப்பட்டது. இராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூப் கன்வர் என்ற பெண் தன் கணவனை இழந்தபிறகு உடன்கட்டையேற்றப்பட்டு இறந்திருக்கிறாள். அம்மாநிலத்தில் இவ்வழக்கமானது கடுமையான அரசியல் சட்டத்திற்கு அப்பாலும் செயல்பட்டு வருவதைத்தான் இச்செயல் காட்டுகின்றது. பெண்கள் சிலரை சதி கவர்ந்திருப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கணவன் இறந்த பிறகு பெண்கள் வாழும் நெறி கடுமையான விதிகளுக்கு உட்பட்டதாய் இருந்திருக்கின்றது. காலப்போக்கில் முழுமையான மாற்றத்தினை அடைந்திருக்கின்றது என்று கருதப்பட்ட போதிலும் ஆயினும் முற்றிலுமாக மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண் விதவை என்று அழைக்கப்படுகிறார். ‘சொல்லில்கூட பொட்டு இல்லையே என்று வருத்தப்படுவதற்கு, கைம்பெண் என்று அழைத்தால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு கிடைக்கும்’ என்ற கூற்று ஆறுதல் வார்த்தையாகத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் சங்க காலத்தில் கைம்பெண்நோன்பு பெண்ணிற்கு ஆறுதல் அளிப்பதாக அமையவில்லை. சங்க காலத்தில் கைம்மை எத்தகு நிலையில் இருந்திருக்கின்றது என்பதை இக்கட்டுரை நுவல்கின்றது.

சங்க கால மகளிர்

            சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. பொற்காலத்தில் பெண்கள் ஆடவருக்கு நிகரானவர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமான உரிமையினையும் பெற்றிருக்கிறார்கள். ஆடவரைப் போலவே கள் அருத்தியிருக்கிறார்கள்.1 அரசியல் காரணமாய் தூது சென்றிருக்கிறார்கள்.2 சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய நிலை மிக உன்னதமாய் இருந்திருக்கின்றதா? என்பது வினாவுக்குரியதாய் இருக்கிறது. கணவனை இழந்த சங்ககாலப்பெண்டிர் நிலை குறிப்பிடும்படியாக இல்லை. இந்திய மரபு வழிப்பட்ட (?) பெண்களாகவே இருந்திருக்கின்றனர். பிற்காலத்தில் வீடுபேறு பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மிகவும் கொடிய பழக்கந்தான் உடன்கட்டை ஏறுதல். இப்பழக்கத்தினை சங்க காலமகளிரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக சம உரிமை படைத்தவர்களாக விளங்கியவர்களிடம் உடன்கட்டை ஏறல் இருந்தமை வியப்புக்குரியதே.

கைம்மை நோன்பு

            திருமணத்திற்கு முன்பிருந்தே பூச்சூடி வளையலணிந்து நல் உணவு உண்ட மகளிர் கணவரை இழந்த பிறகு அனைத்தையும் துறந்தவராகின்றனர். பஞ்சணையிலோ, நல்ல படுக்கையிலோ படுத்துறங்கிய மகளிர் பாயும் இல்லாது சிறிய கற்கள் நிறைந்த வெறுந்தரையில் படுத்து உறங்கியிருக்கின்றனர். தாளிப்புடன் கூடிய நல்ல கொழுவிய சுவையுடனான அடிசிலைத் தவிர்த்து நறு நெய்யின்றி நீர்ச்சோற்றையும் புளிகூட்டப்பட்ட வேளைக் கீரையினையும் உணவாகக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அவ்விடத்து உண்டான புல்லரிசியினையே தம் உணவாக உட்கொண்டனர். இதனை

                                    …………………… நறுநெய் தீண்டா

                                    துடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

                                    வெள்ளெட் சாந்தோடு புளிப்பெய் தட்ட

                                    வேளை வெந்தை வல்சியாகப்

                                    பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்”

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நீர்ச்சோறோ, புல்லரிசிச்சோறோ யாதாயினும் அதனை கணவனை இழந்த மகளிர் முறையான நேரத்தில் உண்டார்களா எனில் இல்லை எனலாம். நேரந்தவறி உண்ணும் நிலை கணவனை இழந்த பிறகே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

                                    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்

                                    தின்னா வைக    லுண்ணும்

                                    அல்லிப் படூஉம் புல்லா யினவே

என்று ஒக்கூர் மாசாத்தனார் கணவனை இழந்த பெண்ணொருத்தியின் நிலையினை எடுத்துக் காட்டுகின்றார்”4 கணவனை இழந்து கைம்மை நோன்பு வாழும் பெண்களை தொடி கழி மகளிர்5, ஆளில் பெண்டிர்6, உயவல் பெண்டிர்7, கழிகலமகளிர்8, கழிகல முகடூ9, பருத்திப்பெண்டிர்10, என்று குறிப்பிடுகிற நிலையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

இறந்தவருக்கு உணவிடுதல்

            கணவன் இறந்த பிறகு அவன் இறந்த இடத்தினை அவனுடைய மனைவி சாணத்தால் மெழுகி புல்லின்மேல் உணவு இட்டு அவனுக்குப் படைப்பாள். வேள் எவ்வி என்ற அரசன் இறந்தபின் அவனுடைய மனையில் அவன் மனைவியின் நிலையினை வெள்ளெருக்கிலையார் என்ற புலவர்

                                    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்

                                    தன்னமர் காதலி புன்மேல் வைத்த

                                    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்

என்று காட்டுகின்றார்11. இதே போன்று இன்னுமொரு காட்சி. மீனிறைச்சியினைப் பலருடன் சேர்ந்து விருந்துண்ணும் இடமானது. கணவன் இறந்து பட்டதும் மாறி விடுகின்றது. இறந்த கணவனுக்கு உணவு படைக்க வேண்டி சிறிய இடத்தினை அழுத கண்களோடு ஆவின் சாணத்தால் மெழுகுகின்றாள் மனைவி.

                                    அடங்கிய கற்பி னாய்துதன் மடந்தை

                                    உயர்நிலை யுலக மவன்புக வார

                                    நீறாடு சுளகிற் சீறிடநீக்கி

                                    அழுத லானாக் கண்ணள்

                                    மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே

கண்ணீரையும் சாணத்தோடு மெழுகுகின்ற இந்நிலையை தும்பை கோகிலவானர் படம்பிடித்துக் காட்டுகின்றார்12.

கூந்தல் களைதல்

            பெண்ணுக்கு அழகினைத் தருவது கூந்தல். மயிலின் தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிட்டுக் கூறக்கூடியகூந்தலை அகிற்புகையூட்டியும் வாசனைத் திரவியங்களைப் பூசியும் அழகுபடுத்துவர். ஐந்து வகையான பகுப்புகளில் மிகச் சிறப்பாக ஒப்பனை செய்து அழகுபடுத்துவர். இதனை ஐம்பால், சில்லைங் கூந்தல் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. இவையனைத்தும் கணவர் உயிருடன் இருக்கின்ற காலம் வரையிலுமே. கணவர் இறந்தபின்னர் திரவியங்களால் பெண்கள் தம் கூந்தலை அழகுபடுத்துவதில்லை. மாறாகக் கூந்தலை குறைத்துக் கொண்டிருக்கின்றனர். வளையல் போன்ற அணிகலன்களை அணிவதையும் இழந்திருக்கின்றனர். இந்நிலையினை,

                                    கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

என்று தாயங்கண்ணியார் குறிப்பிடுகின்றார்13. கணவர் இறந்த பின்னர் பெண்கள் வளையல் அணியாதிருப்பதை

                                    வளையில் வறுங்கை யோச்சி

என்று குளம்பந்தாயனாரும் கயமனாரும் தம் பாடல்களில் கூறுகின்றனர்.14 கூந்தலைக் குறைத்துக் கொள்வது தவிர முழுவதுமாகக்களைந்து விடுகின்ற பழக்கமும் இருந்திருக்கின்றது. கைம்பை நோன்பிற்காகப் பெண்கள் தங்கள் கூந்தலை மழித்துக் கொண்ட நிலையினை

                                    ஒள்நுதல் மகளிர் கைம்மை கூர

                                    அவிர் அறல் கடுக்கும் அம்மென்

                                    குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே

என்று கல்லாடானார் பாடிய பாடல் வழி அறியலாம். காரியாதி என்ற சிற்றரசன் இறந்த பின்பு அவனுடைய பொலிவிழந்த மனையின் அழகை ஆவூர் மூலங்கிழார் உரைக்கையில் கணவனை இழந்த பெண்ணின் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கின்றார்.

                                    கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

                                    கழிகல மகடூஉப் போல

                                    புல்லென் றணையாற் பல்லணி யிழந்தே

            என்ற இப்பாடலடிகள் கணவனை இழந்த பெண் தலைமயிரை – கூந்தலை மழித்தலோடு அணிகலன்களையும் துறந்த நிலையினை அறிவிக்கின்றன.16 இதனை மாறோக்கத்து நப்பசலையார் பாடலும் உறுதிப்படுத்துகின்றமையைக் காணலாம். பூக்களையும் தழையினையும் சூடுவது கூட கணவன் உயிருடனிருக்கும் காலத்து மட்டுமே. கணவன் இறப்பிற்குப் பின்னர் இவற்றை அணியாது இருந்திருக்கின்றனர்.

                                    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வார

                                    தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்

                                    சிறுவெள் ளாம்பல் அல்லி யுண்ணும்

                                    கழிகல மகளிர் போல

என்பன அப் பாடல் அடிகளாகும்.17 இத்தகைய நிலையே கைம்மை நோன்பாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனைக் கைம்மைக்கொடுமை என்றே கூறலாம். சங்க காலத் தமிழரிடம் வழக்கிலிருந்த கூந்தல் கலையும் பழக்கம், பிற்காலத்தில் தமிழகத்தில் ஆரியர்கள் வந்தேறிய பிறகு அவர்களிடம் இப்பழக்கம் ஒட்டிக்கொண்டது. கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் தலைமுடியை மழித்துக்கொண்டு கைம்மை நோன்பின் ஒரு கூறினை பின்பற்றி இருந்தனர். சிலப்பதிகார காலத்தில் இக்கைம்மை நோன்பு துறைகளில் நீராடுவதோடு தொடர்கின்றமையைக் காணலாம்.18

கைம்மைத் துயருக்கு மாற்று

            கூந்தலை மழித்து, பூ, தழையாடை முதலியனவற்றைத் துறந்து அணிகலன்களை இழந்து தூய நல்லரிசியினை விலக்கி நீர்ச்சோற்றையும் புல்லரிசிச் சோற்றையும் உண்டு. பஞ்சணையினையும் பாயினையும் நீக்கிப் பருக்கைக் கற்கள் நிறைந்த தரையில் படுத்துறங்கி வாழுகிற வாழ்க்கை கைம்மை நோன்பு ஆகும். இந்நோன்பிற்கு சங்க கால மகளிர் மாற்று தேடினர். அஃது இக்கைம்மை நோன்பினை ஏற்க மறுப்பதோ எதிர்த்துப் போராடுவதோ என்ற வழியில் அமையவில்லை. உயிர் துறப்பதன் மூலமே தீர்வு கண்டிருக்கின்றனர். கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறுதல் அல்லது காடுகிழாள் கோயில் முன்பு தீ மூட்டப்பட்டு அதனுள் இறங்குவதைத் தெரிவு செய்திருக்கின்றனர் புறங்காட்டில் காடுகிழாள் கோயில் முன்பு தீயினுள் இறங்கி பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு உயிர்துறந்தமையை மதுரைப் பேராலவாயர் பாடியிருக்கிறார்.19

            கைம்மை நோன்பின் கொடுமையினை நன்கறிந்த பெருங்கோப்பெண்டு தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்ததும் உடன்கட்டையேறத் துணிகிறாள். நாட்டின் நிலை குறித்து அரசியல் சுற்றத்துச் சான்றோர் தடுக்கின்றனர். பெருங்கோப்பெண்டு இதனைப் பொல்லாச் சூழ்ச்சி என்று கூறி உயிர்துறக்க முயல்கின்றாள்.

                                                பல்சான் றீரே பல்சான் றீரே

                                                செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்

                                                பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

என்பது அவரது கூற்று 20 கைம்மை நோன்பின் கொடுமையினைத் தாளமுடியாமையினாலேயே இக்கூற்று வெளிப்பட்டிருக்கின்றது. ஒருவர் இறந்தபின் இறந்தவரை எரிக்கின்ற பழக்கமும், புதைக்கின்ற பழக்கமும் உள்ளன. எரிக்கின்ற பழக்கம் உடையோரிடம் கணவனை இழந்த பெண்தீ வளர்த்து தீயினுள் இறங்குவாள். புதைக்கின்ற பழக்கம் உடையோர் இறந்தவரைப் பெரிய தாழியுள் இட்டுப்புதைப்பர். அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பெற்ற முதுமக்கட்டாழிகள் இதனை நமக்கு அறிவிக்கின்றன. இது குறித்துப் புறநானூற்றிலும் அகச்சான்று உள்ளது. கணவனை இழந்த பெண்ணொருத்தி கலஞ்செய்து கொடுக்கும் குயவரிடம் மிகப்பெரிய கலம் கேட்கிறாள். கணவனோடு தன்னையும் சேர்த்துப் புதைப்பதற்காகப் பெரிய கலத்தினைக் கேட்கின்றாள்.

                                                கலஞ்செய் கோவே கலஞ் செய் கோவே

                                                ………………………………………….

                                                வியம்மல ரகன் பொழி லீமத்தாழி

                                                அகலிதாக வனைமோ

என்பது அப்பெண்ணின் வேண்டுகோளாக அமைகிறது.21 கணவன் இறப்பிற்குப் பின்னர் பெண்கள் எரிந்தோ, புதைந்தோ, கைம்மை நோன்பை முடிந்திருக்கின்றனர்.

அகப்பாடலில் கைம்மைக் கொடுமை

            இரவில் தலைவன் தலைவியைச் சந்திக்க வருகின்றான். களவின்பத்தில் மிகுதியும் விருப்புடைய தலைவன் செயலைத் தோழி வரைவுகடாவுதல் காரணமாய் கண்டிக்கிறாள். கடுமையான ஆபத்துகளுக்கிடையே வாரற்க என்கிறாள். இவ்வாபத்து பற்றிக் கூறுகையில் தலைவன் நாட்டில் உள்ள குரங்கின் செயலை எடுத்துக்காட்டுகிறாள். ஆண்குரங்கு இறந்துபட்டதும் பெண் குரங்கு தன்னுடைய குட்டியை உறவினரிடம் கொடுத்து விட்டு கைம்மை நோன்பின் துயர் தாளமுடியாமல் அல்லது அடைய விரும்பாமல் மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தன்னுயிரினைக் போக்கிக் கொள்கின்றது.

                                                கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்

                                                கைம்மை உய்யாக்காமர் மந்தி

                                                கல்லா வன்பறழ் கிளைமு தற் சேர்த்தி

                                                ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்.

என்ற இந்த அகப்பாடல் அடிகளில் ஐந்தறிவுடைய குரங்கின் மேல் சங்க கால மகளிரின் நிலை ஏற்றிக் கூறப்படுகிறது.22 கைம்மை நோன்பு கொடுமையானது என்பதும் இந்நோன்புக் கொடுமையினின்று மீள உயிர் துறத்தலைத் தீர்வாகக் கொண்டமையும் என்பது வெள்ளிடை மலையாகிறது.

உடன்கட்டை ஏறக் காரணம்

            ஒத்த அன்புடையவராய் நல்லறமே கொண்டு வாழ்வது இல்லறம். இந்த இல்லறத்தில் இன்ப துன்பங்களைத் தங்களுக்குள் சமமாய் பங்கெடுத்துக் கொளல் வேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் ஒன்று உயர்ந்தோ, குறைந்தோ இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் அங்குச் சமநிலை இல்லை. சங்க காலந்தொட்டு இன்று வரை துன்பங்கள் எப்பொழுதும் பெண்களின் சொத்தாகவே விளங்குகின்றன. திருமணச் சடங்கில் அம்மி மிதித்தல் என்ற சடங்கு ஒன்றுண்டு. அம்மி எதற்காக மிதிக்கப்படுகிறது? கணவனுடைய வாழ்க்கைப்பாதை கரடு முரடானதாக இருந்தாலும் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்டு, மனைவி கணவனோடு செல்லுதல் வேண்டும். இச் செய்தியைத்தான் அம்மி மிதித்தல் என்ற சடங்கு உள்ளடக்கியிருக்கின்றது. பெரும்பாலும் பெண்ணுக்கே இது போன்ற அறிவுரைகள் பல கூறப்படுகின்றன. ஆணுக்கு இத்தகைய அறிவுரை கூறும் சடங்கு இல்லை. கணவன் இறந்த பெண் கைம்பெண், விதவை என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றாள். வெண்ணிற ஆடை உடுத்துகின்றாள். ஆனால் மனைவியை இழந்த கணவனை இது போன்று அடையாளம் காட்டக்கூடிய சொல்லோ, ஆடையோ ஒன்று கூட இல்லை.

சங்க காலத்திலும் இத்தகைய நிலையில் மாற்றம் இல்லை. ஒத்த அன்புடையவரில் கணவன் இறப்பின் மனைவியே பல துன்பங்களைப் பெறுகிறாள். நல்ல உணவில்லை, படுக்கையில்லை, அணிகலன்களை அணிவதுமில்லை. கூந்தலை இழந்து கண்ணீர் மல்க, கணவன் இறந்த இடத்தினை மெழுகி விண்ணுலகில் வாழும் கணவனுக்கு உணவு படைத்து வாழும் வாழ்க்கை நரக வாழ்க்கையாகத்தான் இருக்கின்றது. மனைவி இறந்த பிறகு கணவனுக்கு இது போல் எந்தவிதமான விதிமுறைகளும் கிடையா. மனைவி இறந்த பிறகு எந்த ஒரு கணவனும் தலைமயிரை மழித்துக்கொண்டு நீர்ச்சோறோ, புல்லரிசிச் சோறோ உண்டு வெறுந்தரையில் படுத்துறங்கி மனைவி இறந்த இடத்தினை மெழுகி விண்ணுலகில் (?) வாழும் மனைவிக்கு உணவு படைத்து நோன்பிருப்பதில்லை. மீறி மீறிப் போனால் கொஞ்சம் வருத்தப்படலாம். கைம்மை நோன்போ, உடன்கட்டை ஏறலோ, கணவனுக்குக் கிடையா. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தம் பெருங்கோப்பெண்டு இறந்த பொழுது.

                                    யாங்குப்பெரி தாயினு நோயல வெனைத்தே

                                    உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்

                                    கள்ளி போகிய களரியம் பறந்தலை

                                    வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்

                                    தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி

                                    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை

                                    இன்னும் வாழ்வ லென் னிதன் பண்பே

என்று வருந்த மட்டுமே முடிகிறது.23 தலைவியை விட்டுப்பிரிவது துன்பமெனப் புலம்புகிற தலைவன் கூற்றும் இருக்கத்தான் செய்கிறது. அக்கூற்று

                                    வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த

                                    அரிசில் அம்தௌ;ளறல் அன்னயிவள்

                                    விரி ஒலி கூந்தல் விட்ட மை கலனே என்று வெளிப்படுகிறது.24

தலைவியைப் பிரிந்து வாழும் நாட்கள் வீணான பதர் போன்றவையே என வருந்துகிற (எல்லாம் எவனோ? பதடி வைகல்) தலைவனையும் பார்க்க முடிகிறது.25 இவை விகிதாச்சார அளவில் மிகவும் சிலவே. ஆனால் சங்ககாலப் பெண்கள் தாங்கள் இல்லாமல் தலைவர்கள் – ஆண்கள் வாழ மாட்டார்கள் என்று அளவுக்கு அதிகமான நம்பிக்கையினை ஆண்கள் மீது வைத்திருக்கின்றார்கள். இதனை

                                    நீரின்ற மையா உலகம் போலத்

                                    தம்மின்ற மையா நம் நயந் தருளி என்றும் 26

                                    நம்மை விட்டு அமையுமோ மற்றே என்றும் 27

பாடப்படும் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. தாமின்றி தலைவன் இல்லை எனும் எண்ணம் பெண்களுக்கு மிகுதியாக இருந்ததைப் போலவே தலைவன் இல்லாத வாழ்க்கை ஒன்றுமில்லாத பாழ் என உறுதியாக நினைத்த பெண்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். தலைவனுடைய தற்காலிகப் பிரிவைத் தாள முடியாமல்,

                                    நின் இலது இல்லா இவள் என்றும்28

                                    ……….              இவளே

                                    வருவை ஆகிய சின்னாள்

                                    வாழா னாதல் நற்கு அறிந்தனை என்றும்29

                                    ……….              காதலர்

                                    ஒரு நாள் கழியினும் உயிர் வேறு படூஉம் என்றும்30

                                    உயிர்க்கு உயிர் அன்னர்                            என்றும்31

                                    யாம் எங் காதலர்க் காணேம் ஆயின்

                                    செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

                                    கல்பொரு சிறுநுரை போல

                                    மெல்ல மெல்ல இல்லா குதுமே                என்றும்32

                                    நீயெமக்கு இன்னாதன பல செய்யினும்

                                    நின்னின்று அமைதல் வல்லாம் ஆறே              என்றும்33

                                    விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்

                                    இன்னுயிர் அல்லது பிறிதொன்று

                                    எவனோ? தோழி நாம் இழப்பதுவே                    என்றும்34

புலம்புகிற பெண்ணின் குரலையே அதிகமாகக்கேட்க முடிகிறது. தலைவனை விட்டுப் பிரிந்து துன்புறுவதைவிட அவனுடன் சேர்ந்திருக்கின்ற காலத்திலேயே உயிர் பிரிந்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற தலைவியின் துயரத்தினை – பிரிவுக்கொடுமையினை தலைவன் இல்லாத வெறுமை நிலையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதனை சிறைக்குடி ஆந்தையாரின்,

                                    பிரிவ ரிதாகிய தண்டாக் காமமொடு

                                    உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து

                                    இருவேம் ஆகிய உலகத்து

                                    ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே

என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன 35 களவுக்காலத்திலும் கற்புக்காலத்திலும் தலைவனின் குறுகிய காலப் பிரிவும் கூட மிகப்பெரிய வருத்தத்தினையும் துன்பத்தினையும் தரும்போது அவன் இல்லாத வாழ்வு, கைம்மை நோன்பு நோற்று வாழும் வாழ்வு வாழமுடியாத ஒன்றாகவே ஆகிறது.

            கைம்மை நோன்பு தமிழ் மரபென்றும் வடமரபில் காணப்படாதது என்றும் கூறப்பட்டதை மறுத்து போரில் இறந்து பட்ட வீரர்களுடைய மனைவியரின் வீரயுக நம்பிக்கை சார்ந்ததாக அமைந்ததே கைம்மை நோன்பு என்ற கருத்துரைக்கப்படுகின்றது. 36 தமிழ்மரபு, வீரயுக நம்பிக்கை வைதீக மரபு என எதுவாகப் புனைந்து கூறப்பட்டாலும் கைம்மை நோன்பு கொடியதாக இருந்திருக்கின்றது. இதனைத்தாங்கிக் கொள்ள முடியாமல் தாங்கிக் கொண்டு வாழுகிற ஆற்றல் இல்லாமல் உடன்கட்டையேறுதலைப் பெண்கள் ஒருவிதக் கட்டயாத்தின் பேரில் ஏற்றுச் செயல்பட்டிருக்கின்றனர். இது ஒரு வகையான ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடாகும்.

            இத்தகைய ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பெண்ணால் நேரடியாக எதிர்த்துப் போராட ஆற்றல் இல்லை. அல்லது இல்லாத நிலை ஆக்கப்பட்டிருக்கின்றது. கடுமையான நோன்புகளை மேற்கொண்டு வாழ்ந்து ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்வதைவிட உயிர் துறப்பதே மேல் என்ற முடிவுக்கே சங்க கால மகளிர் வந்திருக்கின்றனர். அக்காலச் சமுதாயத்தின் மீது தங்களது எதிர்ப்புணர்வைக்காட்டும் கருவியாகவே உடன்கட்டையேறுதலைக் காணமுடிகிறது. சுக வாழ்வு வாழுகிற அரசப்பரம்பரையில் தோன்றிய பூதப்பாண்டியன் மனைவிக்கும் இதில் விலக்கு இல்லை. பிற்காலத்தில் மதச்சாயம் பூசப்பட்டு வீடு பேறு அடையும் வழியாக மாற்றப்பட்டு விட்டது. வீடு பேறு மனைவிக்கு மட்டுமே. கணவனுக்கு இல்லை. இத்தகைய சமுதாய அமைப்பே, சங்க கால மகளிர் உடன்கட்டையேறல் என்ற பிற்போக்கான முடிவினை எடுக்கக் காரணமாகின்றது.

நிறைவுரை

            சங்க காலமகளிர் அரசியல், தூது, கல்வி, கள்ளுண்ணல் போன்றவற்றில் ஆண்களுக்கு நிகராக ஆற்றல் பெற்றிருக்கின்றனர். கணவனை இழந்த பிறகு கைம்மை நோன்பு என்ற கொடுமையினை அனுபவித்திருக்கின்றனர். ஆண்களுக்குச் சமமாக ஆற்றல் கைவரப் பெற்றிருப்பினும் கணவனை இழந்த பிறகு வாழத் தகுதியற்றவராகவே இருந்திருக்கின்றனர். ஏனெனில் கணவனை இழந்த பிறகு வாழும் பெண்ணின் வாழ்வு நெறி இயல்பானதாக இல்லை. கழிகல மகளிர், கழிகல மகடூஉ, பருத்திப் பெண்டிர், உயவல் பெண்டிர், தொடிகழி மகளிர் என்று பல பெயர்களால் கைம்பெண்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். களவிலும் கற்பிலும் தலைவனின் சிறு பிரிவைக் கூட தாங்க இயலாது வருந்தக்கூடியவளாகப் பெண் விளங்குகிறாள். கணவனை இழந்த பிறகு கடுமையான கைம்பெண் நோன்பு நோற்று வாழ வேண்டுவது பெண்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு இந்நோன்பு விதிக்கப்படவில்லை. பின்பற்றப்படவும் இல்லை. களவொழுக்கத்திலும், கற்பொழுக்கத்திலும் தலைவனை விமர்சிக்கிற தலைவி, கணவன் இறந்தபிறகு தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகிறாள். இது தலைவன் மீதுள்ள அன்பின் மிகுதி எனக்கொள்ள இயலாது. பிற்போக்குத்தனமான இம்முடிவு அக்காலச் சமுதாயத்தைப் பழி வாங்குவதாகவே அமைகின்றது.

குறிப்புகள்

1.          பட்டினப்பாலை 106-108 புறநானூறு 235

2.          புறநானூறு.95

3.          புறநானூறு.246.5-9

4.          புறநானூறு.248. 3-5

5.          புறநானூறு 238: 6

6.          நற்றிணை 353 : 1

7.          புறநானூறு 246 : 10

8.          புறநானூறு 248 : 14

9.          புறநானூறு 261 : 18

10.        புறநானூறு 125 : 1,325:5)

11.        புறநானூறு 234, 2-4.

12.        புறநானூறு 249, 10-14.

13.        புறநானூறு 250. 4-5.

14.        புறநானூறு 253;5, 254;4

15.        புறநானூறு 25:12-14

16.        புறநானூறு 261. 18-20

17.        புறநானூறு 280. 11-14

18.        சிலப்பதிகாரம் துன்பமாலை 39,43

19.        புறநானூறு.247

20.        புறநானூறு.246:1-3

21.        புறநானூறு.256

22.        குறுந்தொகை 69:1-4

23.        புறநானூறு.245

24.        நற்றிணை 1:6-7

25.        குறுந்தொகை 323:1

26.        நற்றினை 1:6-7

27.        குறுந்தொகை 317:5

28.        ஐங்குநூறு 179:4

29.        நற்றிணை 19:7-9

30.        நற்றிணை 141:11-12

31.        குறுந்தொகை 218:5

32.        குறுந்தொகை 290:3-6

33.        குறுந்தொகை 309:7-8

34.        குறுந்தொகை 334:4-6

35.        குறுந்தொகை 57:3-6

36.        பெ.மாதையன், சங்க இலக்கியத்தில் குடும்பம், பக்.119-120 (மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

முதல்வர்

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி,

திருப்பூர் – 641 602

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here