செய்தியின் இயல்புகள் | Nature of the News

செய்தியின் இயல்புகள் | Nature of the News

செய்தியின் இயல்புகள்

            ஒன்று செய்தியா இல்லையா வென்பதை முதலில் செய்தியாளர் தீர்மானித்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். அவர் திரட்டுகின்ற எல்லாம் செய்திகளாக வெளிவருவதில்லை. ஆசிரியர் குழு செய்திகள் எனக் கருதுவதே செய்தித்தாளில் அச்சாகின்றன. செய்தித்தாளில் அச்சாகும் எல்லாவற்றையும் வாசகர்கள் செய்திகளாக எண்ணுவதில்லை. சிலவற்றை தேவையற்றவை என்று படிக்காமல் ஒதுக்குகின்றனர். ஆனால் பொதுவாக ஒன்றைச் செய்தி மதிப்புடையதாகக் கருத அதில் என்னென்ன தன்மைகள் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.


1. கால அண்மை (Timeliness) :

            செய்திகள் ‘சுடச்சுட’ இருக்க வேண்டும். புதுமலர்களைப் பெண்கள் விரும்புவது போல புதிய செய்திகளையே மக்கள் படிக்க விரும்புகின்றனர். ‘காலம்’ என்பது செய்திக்கு உயிர் மூச்சு; காலம் கடந்த செய்தி உயிரற்ற உடல் போன்றது. அதற்கு மதிப்பு இல்லை.


2. இட அண்மை (Proximity) :

            தங்களுக்கு அருகில், தங்களைச் சுற்றி நடப்பதில் இயல்பாக மக்களுக்கு ஆர்வம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் தில்லியில் நடைபெற்ற ஒன்றைவிட சென்னையில் நடைபெற்ற ஒன்றைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றார். பக்கத்து மாநிலத்தில் ஆட்சி மாறுவதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படுவதில்லை. தங்களது மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் அதுவே பொதுப் பேச்சாகின்றது.


3.உடனடியானவை (Immediacy) :

            செய்திகளை உடனுக்குடன் தர வேண்டும். முதலில் வரும் செய்திக்கு மதிப்பு அதிகம். ஆதலால் தான் செய்தித்தாட்கள் செய்திகளை முதலில் பெற்று (Scoop) வெளியிடப் போட்டியிடுகின்றன. செய்திகளை முந்தித் தரும் இதழ்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறுகின்றன.

4. முதன்மையானவை (Prominence) :

            எவை நாட்டில் முதன்மையான இடத்தையும், புகழையும் பெறுகின்றனவோ அவை செய்திகளாகப் போற்றப்படுகின்றன. முதன்மை பெறும் மனிதர்கள்,இடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை செய்தித்தாளில் இடம் பெறுகின்றன.

5. அளவு (Size) :

            செய்தியின் கருப்பொருள் மட்டுமல்ல, அது தொடர்புடைய மக்களின் பரப்பளவை ஒட்டியும் செய்தியாகின்றது. புகழ்பெற்ற எழுத்தாளரின் இறுதி ஊர்வலத்தில் பத்துப்பேர் மட்டுமே கலந்து கொண்டால் செய்தி ஓர் அமைச்சரை வரவேற்க இருவர் மட்டுமே வந்திருந்தால் செய்தியாகின்றது. முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் யாருடைய இறுதி இறுதி ஊர்வலத்தில், இதுவரை சென்னையில் ஊர்வலத்திலும் கூடாத அளவிற்கு மக்கள் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்க செய்தியாகின்றது.


6. நிகழ்விடத்திலேயே கிடைப்பவை (Spot News) :

            ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நேரடியாக பங்கு பெற்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தரும் செய்தி சிறப்பிடம் பெறுகின்றது. விபத்து நடந்த இரயிலில் பயணம் செய்து, உயிர்த்தப்பியவர், விபத்தைக் கண்ணால் கண்டபடி விவரிப்பது சிறப்புச் செய்தியாகும்.


7. விளைவுகளை உடையவை (Consequences) :

பின் விளைவுகளை ஏற்படுத்தும் எந்த நிகழ்ச்சியும் நடவடிக்கையும் மக்களின் ஆர்வத்தை தூண்டும் செய்திகளாகின்றன. நாட்டுடைமையாக்கினால் பல பொருளாதார வங்கிகளை விளைவுகளை ஒருவரை அந்தச் எதிர்பார்க்கலாம். ஒரு கட்சியில் புகழ்பெற்ற கட்சியிலிருந்து விலக்கினால் அரசியல் விளைவுகள் ஏற்படும்.

8. வியப்புக்குரியவை (Oddity):

செய்தியில் புதுமையானதாக, வியப்பிற்குரியதாக ஏதாவது இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அதனை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் அழித்துவிட்டால் அது நடைமுறை இயல்புக்கு மாறுபட்ட செய்தியாகின்றது.


9. மோதுபவை (Conflict):

முரண்படுபவையும் மோதுபவையும் செய்தியின் தன்மையைப் பெறுகின்றன. மனமொத்து வாழ்கின்ற கணவனும் மனைவியும் செய்தியாவதில்லை. ஆனால் விவாக விலக்கு செய்தியாகின்றது.


10. ஐயப்பாட்டிற்குரியவை (Suspense) :

ஏன், எதனால் நடைபெற்றதென்று வெளிப்படையாகத் தெரியாதவற்றில் செய்திகள் உள்ளன. குற்றங்களைப் பற்றிய செய்திகள் இப்படிப்பட்டவைகளாகும்.


11. உணர்வு பூர்வமானவை (Emotional Appeal):

மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகளை உடனடியாக செய்தித்தாட்கள் வெளியிட வேண்டும். இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் சுடப்பட்டதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க…

1.செய்திகள் என்றால் என்ன? What is NEWS?LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here