சிலம்பில் தொல் சமூக மரபும் மாற்றங்களும்

சிலம்பில்-தொல்-சமூக-மரபும்-மாற்றங்களும்

முன்னுரை

            ஒவ்வொரு இனத்திற்கும் தனித்த அடையாளங்களும் தமக்கான பண்பாட்டு விழுமியங்களும் உண்டு. பழந்தமிழரும் அத்தகு தனித்த அடையாளங்களோடும் பண்பாட்டு விழுமியங்களோடும் வாழ்ந்தனர். இடையில் நிகழ்ந்த பண்பாட்டு தாக்குதல்கள் அவ்வடையாளங்களையும் விழுமியங்களையும் சிதைத்தும் மாற்றியும் போட்டன. தொல் தமிழரின் பண்பாட்டு மரபுகளையும் அவை மாற்றம் பெற்ற விதத்தையும் காட்டுவதாக இவ்வுரை அமைகிறது.

இறைவனும் அடையாளங்களும்

            பழந்தமிழ்ச் சமுதாயம் பல்கடவுள் சமயத்தை அடிப்படையாகக் கொண்டது. பல்கடவுள் சமயத்தில் அடையாளம் மிக முக்கியக் காரணியாகத் திகழ்கின்றது. அடையாளத்திலும் குறிப்பாக நிறம், உடை, மாலை ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. திணைக்குரிய கடவுளரில் முல்லைக்கு மாயோனும் குறிஞ்சிக்கு முருகனும் கடவுள். இதனை

            “மாயோன் மேய காடுறை உலகமும்

            சேயோன் மேய மைவரை உலகமும்” என்பார் தொல்காப்பியர்

                                                                                                (தொல்காப்பியர் அகம்.5)

முருகனுடைய நிறம் சென்னிறம். எனவே அவன் சேயோன் எனப்பட்டான். அவனுடைய அடையாளப்பூ செங்காந்தள். இது ஒண்செங்காந்தள் கல்மிசை கவியும் நாடன் (குறு.185.6,7) ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் (குறு.284,3) என குறிஞ்சிக்குரிய கருப்பொருளாகப் பேசப்படுகிறது. குறிஞ்சித்திணைக்குரிய கருப்பொருளான இம்மலர் முருகனின் அடையாள மலராகவும் கொள்ளப்பட்டுள்ளது.

                                    “செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

                                    செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்

                                    கழல்தொடிச் சேஎய் குன்றும்

                                    குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”

                                                                                                (குறு.1) என்று பாடுகின்றார்.

வெற்ப! போர்க்களத்தில் எதிர்த்த அவுணர்கள் சாயுமாறு கொன்று வீழ்த்தி, அந்த அசுரர்களைத் தரையோடு தரையாய்த் தேய்த்து இல்லையாம்படி செய்த சிவந்த நேரான அம்பினையும் பகைவனைக் குத்தியமையால் செந்நிறம் படிந்த கொம்புகளையுடைய யானையையும், கழல இடம்பட்ட வீரவளையினையும் உடைய முருகப் பெருமானுக்குரிய இந்த மலை உதிரநிறம் வாய்ந்த பூக்களைக் கொண்ட செங்காந்தளின் பூக்களை உடையது.

            இப்பாடல் ‘தோழி கையுறை மறுத்தது’ என்ற துறை விளக்கத்தில் மட்டுமே அகப்பொருள் தன்மையையும் பெறுகிறது. எனவே திணையின் கருப்பொருள் திணைக்குரிய கடவுளுக்கு அடையாளப் பொருளாகியுள்ளது எனலாம்.

            முல்லைக்குரிய கருப்பொருள்களில் குறிப்பிடத்தக்கது கொன்றை மலர். அழகும் சிறப்பும் அதனை பலப் புலவர்களின் பாடல் பதிவைப் பெற வைத்துள்ளது.

            ‘பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப்பூங்கொன்றை’ (குறு.21:3,4) ‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை (குறு.66.1) காசின் அன்ன போதுஈன் கொன்றை’ (குறு.148.3) போன்றவை தக்க சான்று.

            முல்லை நிலத்திற்குரிய இம்மலர் அத்திணைக் கடவுளான திருமாலுக்கு ஆகாமல் பாலைத் திணைக்குரிய கடவுளான கொற்றைக்குரியதாகச் சிலப்பதிகாரம் பேசுகின்றது. இதனை,

                                    கொன்றையும் துவளமும் குழுமத் தொடுத்த

                                    துன்று மலர்ப்பிணையல் தோள் மேலிட்டாங்கு

                                    அசுரர் வாட அமரர்க் கடிய

                                    குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே. (சிலம்பு.12.11)

என்னும் அடிகள் தெளிவுபடுத்தும்.

                                    திருமாலின் படைகளாகச் சங்கு சக்கரமும் முன்வைக்கப்படுகின்றன.

                                   ‘வள்உருள் நேமியான் வாய்வைத்தவளை போல’ (கலி.105.9)

                                    இகல் மிகு நேமியான் நிறம் போல (கலி.119:3)

                                    செருமிகு நேமியான் தார் போல (கலி.127:4)

            சங்கத்தமிழ் மரபில் நேமியை உடையவனாதலின் நேமியோன் என்றே அழைக்கப்படுகின்றான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

            சிலம்பில் கொற்றவைப் பரவலில் சங்கும் சக்கரமும் கொற்றவையின் படைக்கருவிகளாகக் காட்டப்படுகின்றன.

            “சங்கமும் சக்கரமுத் தாமரைக் கையேந்தி“ என்கிறது சிலம்பு (சிலம்பு.12:10) எனவே குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருளான காந்தள் மலரும் செந்நிறமும் முருகனின் அடையாளங்களாக்கப்பட்டன. ஆனால் முல்லைக்குரிய கருப்பொருளான கொன்றை மலர் அந்நிலக் கடவுளான திருமாலுக்குரிய அடையாளப் பொருளாகாமல் கொற்றவைக்கு உரிய அடையாளாமாகவும் திருமாலின் படைக்கருவிகளான சங்கும் சக்கரமும் கொற்றவையின் படைக்கருவிகளாவும் ஆக்கப்பட்டுள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

கற்பும் பெருங்கற்பும்

            எதனாலும் எவராலும் குலைக்க முடியாத உள்ள உறுதிப்பாடே கற்பு. இதைதான் வள்ளுவர் ‘கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்று கூறுகின்றார். கற்பை உயிரைவிட சிறந்ததாகத் தொல்தமிழர் மதித்தனர்.

                                   உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்

                                    செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று            (தொல்.1058)

என்பர் தொல்காப்பியர். இதற்கு விளக்கம் கூறும் வ.சுப.மாணிக்கனார் “நாணைக்காட்டிலும் கற்புச் சிறந்தது என்று நெறி தெளிந்த பெண்கள், கற்புக் காவலின் பொருட்டு நாண் வேலியைக் கடந்து செல்வார்கள். அதுவும் அகப்பொருளேயாம் எனத் தொல்காப்பியம் விதந்து மொழிகுவர் என்பார் (தமிழ்க்காதல். ப.212)

            பெண்ணுக்கு உயிரினும் மேலானதாக வலியுறுத்தப்பட்ட இந்தக் கற்பு ஆடவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. பரத்தைமை என்பது சங்ககாலத்து ஒரு ஒழுக்கமாகக் கருதப்பட்டதே இதற்குக் காரணம் எனலாம். பின்னர் வந்த வள்ளுவரும் இதனை அடியொற்றியே பிறன்மனை நோக்காமையைப் பேராண்மையாகப் போற்றினார். பிறன்மனை நோக்குதல் மட்டுமே ஆடவர்க்குக் குற்றமாகக் கருதப்பட்டது. எனினும் தலைவியருக்கு ஊடல் ஒரளவுக்குத் துணைநின்றது. தான் கற்புள்ளவளாக இருப்பதுபோல தன் கணவனும் கற்புள்ளவனாக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் உரிமையை ஊடல் தலைவிக்கு ஒரளவு தந்தது.

            இந்த நிர்ப்பந்தத்திலிருந்து தலைவனை விடுவித்து அவனுக்குப் பூரண விடுதலையைத் தருவதற்காக் கொண்டு வரப்பட்டதுதான் பெருங்கற்பு. பெருங்கற்பு என்பது தலைவனைத் தெய்வ நிலைக்கு, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வது. இதைத்தான் வள்ளுவர் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று கூறுகின்றார்.

            இளங்கோவடிகள் கானல் வரிப் பாடலில்

            திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சிக்

            கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி

            கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற் கண்ணாய்

            மங்கை மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி

            மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி

            கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி

            கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற் கண்ணாய்

            மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி என்பார்.

                                                                                                                                                    –           (கானல் 7:2,3)

            காவிரிப் பெண்ணே உன் தலைவனான காவிரி நாடன் உன்னை விட்டு கங்கை என்னும் பெண்ணை நாடிச் சென்றான். ஆனாலும் நீ புலவாது ஒழிந்தாய். உன் தலைவன் உன்னை விட்டு கன்னியை நாடிச் சென்றான். ஆனாலும் நீ புலவாது ஒழிந்தாய். இது உன் பெருங்கற்பைக் காட்டுகிறது. எனவே தலைவனைக் கட்டுப்படுத்த தலைவியிடமிருந்த ஒரே அத்திரமான ஊடலையும் பறித்துத் தலைவனுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதே பெருங்கற்பு எனலாம்.

            இந்தப் பெருங் கற்பின் அடுத்தநிலை பிற நெஞ்சுப் புகாமை, அதாவது அவள் குற்றமற்றவளாக இருப்பினும் குற்ற நோக்கோடு ஒருவன் அவளைக் கண்டால் அது அவள் கற்புக்கு பங்கம் விளைவிக்கும்.

            கற்புடை மகளிர் எழுவரைக் குறிப்பிடும் இளங்கோவடிகள், கணவனைப் பிரிந்திருந்த தலைவி அவன் வருமளவும் தன்னைக் கல்லுருவாக மாற்றிக்கொண்டு அவன் திரும்பி வந்தபிறகு கல்லுரு நீங்கினாள் என்றும் ‘கணவனைப் பிரிந்த தலைவி அவன் திரும்பி வருமளவும் தன் அழகிய உருவைக் குரங்கு உருவாக மாற்றிக்கொண்டு அவன் வந்தபிறகு பழைய உருவைப் பெற்றாள்” என்றும் கூறுவர். தன் இயற்கை அழகு பிறர் நெஞ்சு புகுதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதே இம்மாற்றத்துக்குக் காரணம் எனலாம்.

                        கொலைக்களக் காதையில் கோவலன் செய்கைக்கு வருத்தம் கொண்ட கண்ணகி

                        “அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்

                        துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

                         விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை“ (சிலம்பு.16.71-74)

என்று கூறுவார். கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் அறவோர், அந்தணர் துறவோர்க்கு அளித்தலும் விருந்து எதிர்க்கோடலுமாகிய இல்லறக் கடமைகளைச் செய்யவும் இச்சமூகம் அனுமதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. படிதாண்டா நிலையையே இது காட்டுகிறது.

எனவே பெண்ணுக்கு மிக மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆண்களுக்கு எல்லையில்லா சுதந்திரத்தை வழங்க புகுத்தப்பட்டதுதான் இப்பெருங்கற்பு என்றால் மிகையாகாது.

பண்டமாற்றும் வணிக மரபுகளும்

            சங்ககாலத்தில் பண்டமாற்று முறைதான் வழக்கிலிருந்து. தங்கள் விளைபொருளில் மிகுதியாக உள்ளவற்றைப் பக்கத்துத் திணைகளில் கொண்டு கொடுத்து அதற்கு ஈடாக அந்நில மக்களிடம் உள்ள பொருள்களை வாங்கி வந்தனர். பொருளுக்குப் பொருள் என்ற நிலையில்தான் இந்த பண்டமாற்று நிகழ்ந்துள்ளதே தவிர பொருளுக்கான மதிப்பு இங்குக் கணக்கில் கொள்ளப்படவில்லை. ‘பாலோடு வந்து கூழோடு பெயரும் யாடுடை இடையனை குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. வேடன் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக்கொண்டதைக் கோவூர்கிழார் பாடுகின்றார்.

                                    “நெல்லின் நேரே வெண்கல் உப்பென்றும்”

                                    “நெல்லும் உப்பும் நேரே ஊரீரே என்றும்”

            உமணர் கூறி விற்றுப் பண்டமாற்றாகப் பெற்றதைச் சிறு படகுகளில் கொண்டு சென்றதை அகநானூறு காட்டுகிறது. இங்ஙனம் பண்டமாற்றுப் பெருவழக்காக இருந்தாலும் செம்பு, வெள்ளி, பொற்காசுகள் பற்றிய குறிப்புகளையும் காணமுடிகிறது.

            சிலம்பில் கோவலன் தந்தை மாசாத்துவானையும் கண்ணகி தந்தை மாநாய்க்கனையும்

                                     “மாகவாண் நிகர் வண்கை மாநாய்கன்“ என்றும்

                                   ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்

                                    வருந்தி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான்’

என்றும் அறிமுகப்படுத்துகின்றார்.

            அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகம் செய்த சாத்தர் கூட்டமாகச் சென்றதோடு அவர்களோடு வில் வீரர்களையும் அழைத்துச் சென்றனர். இந்தச் சாத்துக்களின் தலைவன் மாசாத்துவான் என்று அழைக்கப்பட்டான். மரக்கலங்களாகிய நாவாய்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் அயல் நாடுகளில் விற்றார்கள். நாவாயில் கடல் வாணிகம் செய்தவர்கள் நாவிகர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் எனப் பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்க்கர் என்று வழங்கப்பட்டது என்பர்.

            உற்பத்தியின் மிகையைப் பண்டமாற்று செய்த பழந்தமிழர் மரபு மாறி உற்பத்தியோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு கூட்டம் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, பெரும்பொருள் ஈட்டிச் செல்வந்தர்களாகத் திகழ்ந்தமையைச் சிலம்பு காட்டுகின்றது. உற்பத்தியில் ஈடுபட்ட பழந்தமிழரில் ஒரு சிலர் உற்பத்தியை விட்டு இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வணிகர் என்ற பெயரைப் பெற்றார்களா? அல்லது புதிய கூட்டம் தமிழகத்தில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டதா? என்பது மேலும் ஆய்வுக்குரியது.

ஊழ்வினை

            சங்க காலத்தில் ஊழ் பற்றிய நம்பிக்கை இருந்தது. காரணமறிய முடியாத சில நிகழ்வுகளுக்கு ஊழ்வினையைக் காரணமாக்கினர். தலைவனும் தலைவியும் சந்திக்க முதல் சந்திப்பே காதலாக மாறுவதற்கு ஏதோ ஓர் உந்து சக்தி இருக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்கு ஊழ் என்று பெயரிட்டனர்.

            சிலம்பில் ஊழ்வினை மிக வலிமை வாய்ந்ததாக இம்மையை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகக் காட்டப்பட்டுள்ளது.

            கானல்வரியில்தான் ஊழ் தன் பணியைத் தொடங்குகிறது. விடுதல் அறியா விடுப்பினாக மாதவி மனையில் கிடந்த கோவலனை வெளியேற்றும் முதல் பணியை அது செய்கிறது. 

            கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து

            மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினான் என

            யாழிசைமேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்”

                                                                                                (சிலம்பு 7.53-57) என்கிறார்.

            மாதவியைப் பிரிந்து வந்த கோவலனை மதுரைக்குக் கொண்டு செலுத்தியதும் ஊழ் இதனை ‘ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப’ தீவினை வந்து உறுத்தியதன் பயனாக, உள்ளம் தன்னைச் செலுத்தக் கோவலனும் கண்ணகியோடு வெளியேறத் துணிந்தான்.

            கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குச் செலுத்திய பின் ஊழ்வினை தன் பணியைச் செம்மையாக முடித்துக் கொண்டது.

                        வினைவிளை காலம் ஆதலின், யாவதும்

                        சினை அலர் வேம்பன் தேரான் ஆகி

                        ஊர்க் காப்பாளரைக் கூவி ஈங்கு என்

                        தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு

                        கன்றிய களவன் கையதாகில்

                        கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைகளம் 16:148-153)

எனக் கட்டளையிடுகிறான்.

            மாதவியிடம் மகிழ்வுற்றிருந்த கோவலனை அவளிடமிருந்து பிரித்து, கண்ணகியிடம் சேர்த்து இருவரையும் மதுரைக்குத் துரத்தி நீநிநெறி தவறா பாண்டியனை நீதி தவற வைத்து கோவலனைக் கொன்று தன் பணியைச் செம்மையாக முடித்துக்கொண்டதாக இளங்கோ குறிப்பிடுகின்றார்.

குடும்ப அமைப்பு

            சங்ககால குடும்ப அமைப்பு தாய்வழிச் சமூக எச்சங்களாகவே காட்சி அளிக்கின்றன. அகப்பாடல்களில் தலைவி செவிலித்தாய், நற்றாய், தலைவியின் தந்தை, தலைவியின் சகோதரர்கள் மட்டுமே இடம்பெறுகின்றார்கள். தலைவனின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இடம்பெறவில்லை.

            மூதின் முல்லை பாடல்களில் தலைவி போருக்கு அனுப்பும் குடும்ப உறுப்பினர்களின் வரிசையைப் பார்க்கும்போதும் முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்புகின்றாள். அடுத்தநாள் போருக்குக் கணவனை அனுப்புகின்றாள். இறுதியாகத் தன் மகனைப் போருக்கு அனுப்புகின்றாள். எனவே தலைவன் திருமணத்திற்குப் பின்பு தலைவியின் இல்லத்தில் வாழ்ந்ததையே இப்பகுதிகள் நமக்கும் தெளிவுபடுத்துகின்றன.

            சிலம்பு அதற்கு மாற்றான ஒரு பதிவை நமக்குக் காட்டுகிறது. மாசாத்துவான் இல்லத்திலே கோவலன் கண்ணகியின் மண வாழ்க்கைத் தொடங்குகிறது.

                                    கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும்

                                    மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை

                                    நெடுநிலை மாடத்து, இடைநிலத்து இருந்துழி

                                                                                                                              (சிலம்பு.2:11-13)

என்பார். இப்பகுதிக்கு விளக்கம் கூறும் உ.வே.சா அவர்கள் “கோவலன் கண்ணகிபால் மிகவும் அன்பு வைத்து நலம் பாராட்டி இன்புற்றுத் தருக்கி மகிழ்ந்து நடக்கும் நாட்களில் ஒரு நாள். அக்கோவலன் தாயாகிய பெருமனைக் கிழத்தி யென்பவள், கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையைச் செவ்விதாக நடத்திக் கைத்தேர்ந்து உயர்ச்சிப் பெற்று விளங்குதலைக் காணவேண்டி வேறோரு மாளிகையில் இல்லறம் நடத்த வேண்டும் பொருளைக் கொடுத்துக் குடிவைத்தாள்” என்பார்.

            ஆக தாய்வழி சமூக அமைப்பு தந்தை வழிச் சமூக அமைப்பாக மாற்றம் பெற்றதையும், கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் அமைப்பாக மாற்றம் பெற்றதையும் இப்பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

முடிவுரை

            திணைக்குரிய கருப்பொருள்களே அத்திணைக்குரிய மக்களுக்கும் கடவுளுக்கும் அடையாளப் பொருளாக இருந்திருக்க வேண்டும். குறிஞ்சிக் கடவுள் முருகனுக்கு அத்திணைக்குரிய செங்காந்தள் அடையாளப் பூவாக இருந்துள்ளது. ஆனால் முல்லைநிலக் கடவுளான மாயோனுக்கு அந்நில மலரான கொன்றை அடையாளமாகக் கொள்ளப்படவில்லை. மாறாக கொற்றவைக்குரிய அடையள மலராக இதனைச் சிலம்பு குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

            சங்க இலக்கியங்களில் முல்லைநிலக் கடவுளான மாயோனுக்குரியவையாக பேசப்பட்ட படைக்கருவிகளான சங்கும், சக்கரமும் சிலம்பி;ல் பாலைநிலக் கடவுளான கொற்றவைக்குரியவையாகப் பேசப்படுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

            ஊடல்வழி கணவனின் பரத்தமை ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாக செயல்பட்ட பெண்ணை கணவனை, தெய்வ நிலையிலும் கேள்விக்கு அப்பாற்பட்ட நிலையிலும் வைத்துப் பார்க்கும் பெருங்கற்புக்கு உரியவளாக்கி கணவனின்றி பிச்சையிடவும் உரிமையற்ற நிலையில் அவளை நிறுத்தி படிதாண்டா பத்தினியாக்கி பெண்ணின் இயக்கத்தை முற்றிலும் முடக்கிவிட்ட நிலையைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

            பண்டமாற்றாக இருந்த சங்ககால வாணிபம் உற்பத்தியில் பங்குபெறாத இடைத்தரகர்களின் கைக்குமாறி உற்பத்தியாளர்கள் அதே நிலையில் இருக்க இடைத்தரகர்களான இவ்வணிகர்கள் பெருஞ்செல்வம் பெற்று அரசர்களுக்கு இணையாகத் திகழ்ந்த நிலையைச் சிலம்பு காட்டுகிறது.

            காரணம் அறியாச் சில நிகழ்வுகளுக்கு உழ்வினையைக் காரணம் காட்டிய தமிழர் இம்மையை நிர்ணயிருப்பதும் இயக்குவதும் ஊழ்வினைதான் என்ற நிலைக்கு மாறிவிட்டதைக் சிலம்பு காட்டுகிறது.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்

தமிழ்த்துறை

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

காந்திகிராமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here