சங்க இலக்கியத் தொகுப்பும் அதன் சமூகப் பின்புலங்களும்

சங்க-இலக்கியத்-தொகுப்பும்-அதன்-சமூகப்-பின்புலங்களும்

      ‘பாட்டும் தொகையும்’ என்றும், ‘தொகைநூல்கள் என்றும், ‘எட்டுத்தொகை நூல்கள்’, ‘பத்துப்பாட்டு நூல்கள்’ என்றும், ‘சங்க இலக்கியங்கள்’ என்றும், ‘பதினெண் மேற்கணக்கு நூல்கள்’ என்றும் கூறப்பட்டு, இன்று நாம் வழங்கி வருகின்ற பழந்தமிழ் இலக்கியங்கள்,

1.          பாடப்பட்ட காலம்

2.          எழுதப்பட்ட காலம்

3.          தொகையாக்க காலம்

4.          இலக்கண காலம்

5.          உரைக் காலம்

6.          பதிப்புக் காலம்

        என்ற படிநிலைகளில் உருவாகி, இன்று நம் கைகளில் கிடைத்துள்ளது. இப்படிநிலைகளில் பல்வேறு அரசியல், சமய, மொழிநிலைகளின் ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக தொகைநூல்களின் தொகையாக்க அரசியல், சமய, மொழிப் பின்னணிகள் என்ன என்று காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            இன்றைக்குச் சங்க இலக்கியங்கள் என்று பெயரிடப்பெற்று, நம் பார்வைக்கு வந்துள்ளகிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் பல்வேறு இடங்களிலிருந்து பாடப்பட்டு, பின் எழுதப்பட்டு அதற்குப்பின் தொகுக்கப்பட்டவை. தொகுக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய வரலாறு, அவற்றின் பின்னணி, அவற்றின் தேவை போன்றவை முதலில் விளக்கப்பட வேண்டும்.

            தொகைநூல்கள் எட்டாக நமக்குக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் குறுந்தொகை, நடுந்தொகை (நற்றிணை), நெடுந்தொகை (அகநானூறு), புறத்தொகை (புறநானூறு) என்ற நான்கு மட்டும்தான் தொகைநூல்கள். மற்ற நான்கும் ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து ஆகியவை தொகுக்கப்பட்ட காலத்தில் (சற்று முன் அல்லது சமகாலத்தில்) உருவாக்கப்பட்டவைசேர்க்கப்பட்டவை.

            பாடல்வரிகளான அடிகளின் அடிப்படையில்தான் 4-8 (குறுந்தொகை) 9-12 (நடுத்தொகை) 13-31 (நெடுந்தொகை) முதலில் தொகுக்கப்பட்டன. இவ்வடிகளுக்குப் புறம்பாக உள்ளவை புறத்தொகை. இறையனார் களவியல் உரை காலத்தில்தான் (கி.பி 7-ஆம் நூற்றாண்டு) நாம் இன்று குறிப்பிடுகின்ற அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறையனார் களவியல் உரையில் ‘பத்துப்பாட்டு’ என்பதோ, ‘பாட்டும் தொகையும்’ என்பதோ, ‘தொகைநூல்கள்’ என்பதோ, ‘பதினெண் மேற்கணக்கு’ என்பதோ குறிக்கப்பெறவில்லை. கி.பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேராசிரியரின் தொல்காப்பிய உரையில்தான் ‘பாட்டினும் தொகையினும் வருமாறு கண்டு கொள்க’ (செய்யுளியல் 50) என்று எடுத்தாளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

            கி.பி 7-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை மூலம் ‘சங்கச் செய்யுள்’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. சமணச் சங்கத்திற்குப் போட்டியான வைதீகச் சங்க உருவாக்கமாகவும் சமணர்களின் எழுத்துத் தொகுப்பு முயற்சிக்கு எதிரான தொகையாக்க முயற்சியாகவும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடப்பட்டன. கே.என். சிவராஜபிள்ளை இவற்றைச் ‘சங்கச் செய்யுள்’ என்றழைக்கக் கூடாது என்றும் தவறான சொல்வழக்கு என்றும் குறிப்பிடுகின்றார். க. கைலாசபதி இவற்றை ‘பாண்பாட்டு’ என்று அழைக்கலாம் என்கிறார்.

            தொகையாக்கத்தில் சமயம், அரசியல், மொழிக்கல்வி என்ற பின்னணிகள் தொழிற்பட்டுள்ளன. அரசியல் என்பது பாண்டியரைமதுரையை முன்னிறுத்தும் போக்கு களவியல் உரை மூலம் வெளிப்படுகின்றது. தொகுத்தார், தொகுப்பித்தாரில் சோழர்கள் இடம்பெறவில்லை. பதிற்றுப்பத்து சேரர்களுக்குரியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தொகையாக்கத்தில் சோழர்கள் இடம்பெறவில்லை என்றாலும், புறப்பாடல்களில் சோழ மன்னர்கள் பாண்டியர், சேரர்களைவிட அதிகம் இடம்பெற்றுள்ளனர் (70 பாடல்கள்) என்பது முரணாக உள்ளது. பாணர் பாடியதாகக் கருதப்பெறும் பழம் பாடல்களில் சோழர்கள் அதிகமாகவும், புலவர்கள் பாடியதாக உள்ள பாடல்களில் சேர, பாண்டியரும் இடம்பெற்றுள்ளனர்.

            தொகையாக்கத்தின்போதுகூட திணை, துறை, கூற்று போன்றவை கொடுக்கப்படவில்லை. உரையாசிரியர் காலத்தில் அல்லது பதிப்புக் காலத்தில் இவை குறிக்கப்பெற்றவை. மேலும், ‘கொளு’ என்கிற அடிக்குறிப்பிற்கும் பாடல்களுக்கும் தொடர்பு இல்லாமல் அமைந்துள்ளன. சான்றாக, குறிப்பிட்ட மன்னனின் (சேர, சோழ, பாண்டியர்) பெயர் அடிக்குறிப்பில் இடம்பெற, பாடல்களின் செழியன், கிள்ளி, வளவன், மாறன், பொறையன் என்று பொதுப்பெயர்களிலேயே சுட்டப் பெறுகின்றனர். அரசப்புலவர்கள் 15 பேர் பாடியதாக அடிக்குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அதற்கான தரவு பாடல்களில் இல்லை.

            பாணர்கள் பாடிய பாடல்கள் தொன்மையானவை. அவை வாய்மொழிப் பாடல்களாக வெளிப்பட்டவை. அவை அகப்பாடலால் ஆனவை. புலவர்களின் செய்யுள் மரபில் வந்தவை. ஆசிரியப்பாவால் இயன்றவை. பாணர் பாட்டுக்கும் புலவர் செய்யுளுக்கும் கால இடைவெளியால் வேறுபாடுண்டு.

            ‘புலவர்களின் அதிகாரமும் தகுதியும் பாணர்களின் அதிகாரத்திற்கும் தகுதிக்கும் காலத்தாற் பிற்பட்டன’ என்ற க. கைலாசபதியின் கூற்று பாணர்கள் முந்தியவர்கள் என்பதையும், புலவர்கள் பிந்தியவர்கள் என்பதையும் உறுதிசெய்கிறது. (பக்.175)

            “தொல்காப்பியர் காலத்தில் ‘அகவல்’ என்னும் பெயர் ஆசிரியம் என்னும் பெயரால் அகற்றப்பட்டு விட்டது.” (பக்.175) என்ற கூற்றும் அகவல் பாடுவதற்குரிய பாண்மரபாக இருந்து ‘ஆசிரியம்’ என்று செய்யுள் எழுதுவதற்குரிய புலவர் மரபாக மாறியதைக் காட்டுகிறது.

            எழுத்துரு கையாளப்பட்டபோது, பாடப்பட்டவற்றுள் சில எழுத்துவடிவம் பெறலாயின. எழுதப்பட்ட காலத்துத் தேவைக்கேற்ற பாடல்களே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எழுதப்பட்ட முயற்சியும் சமணர்களால் உருவானது என்பதை கா.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அக்காலகட்டம் மதஞ்சார்ந்த கல்வியாக அல்லாமல் இருந்தது என்பதை முதற்காலகட்ட தொகைப்பாக்கள் உணர்த்துகின்றன.

            எழுத்து சார்ந்த கல்வியும் பாட்டும் வந்தவுடன் இலக்கணத்தில் ஒரு மொழியின் எழுத்து, சொல் பற்றிய சிந்தனை உருவாகின்றது. பேச்சுமொழி எழுத்துமொழியாக உருவெடுக்கின்ற சூழலிலும் பிறமொழி ஊடாடுகின்ற நிலையிலும் ஒரு மொழியின் எழுத்து, சொல் போன்றவை சுட்டப்பட வேண்டிய அல்லது வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுகின்றது. அதனைத் தொல்காப்பியம் சிறப்புற நிறைவேற்றியுள்ளது. எழுத்தும் சொல்லும் மொழியின் இலக்கணம். இதற்கடுத்து, இலக்கியத்தின் இலக்கணமாகிய பொருளதிகாரம் முன்வைக்கப்படுகின்றது. இலக்கியத்தின் உருவ, உள்ளடக்க, உத்தி மற்றும் யாப்பு குறித்துப் பேசப்படுகிறது. தொல்காப்பியத்தின் இந்தப் பொருளதிகாரம் குறித்த கருத்துக்கள் இன்றையவரையில் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கு இட்டுச் செல்கின்றது.

            அகம், புறம் என்பதற்குத் தொல்காப்பியத்தில் விளக்கம் இல்லை. எழுத்து, சொல் அதிகாரங்களில் தலைச்சூத்திரம் அமைந்ததுபோல் பொருளதிகாரத்திற்கு இல்லை. இதுபற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னரே குறிப்பிட்டுள்ளார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்குப் புறனடை அமைந்ததுபோல் பொருளதிகாரத்திற்கு அமையவில்லை. மேலும் தலைவன் கூற்று இருப்பதுபோல் தலைவி கூற்று இடம்பெறவில்லை. இதுபற்றி இளம்பூரணர் கூறுகையில் ‘தலைமகன் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினர் போலும்’ என்கிறார். மேற்குறித்த ஐயங்களுக்குத் தெளிவான விடைகள் ஏதமில்லை. பொருளதிகாரம் பின்னர் சேர்க்கப்பட்டது என்ற கருத்தும், தொல்காப்பியம் ஒருவரால் எழுதப்பட்டதன்று என்ற கருத்தும், ஒரு சிந்தனைப் பள்ளியின் கருத்துருவாக தமிழ் இலக்கணம் எழுந்ததன் வடிவமே ‘தொல்காப்பியம்’ என்ற கருத்தும் குறிப்பிடத்தக்கது.

            தொல்காப்பியத்திற்கு முன்னரே பாடப்பட்டு, எழுதப்பட்ட, கல்விநிலையில் பயிலப்பட்ட பழந்தமிழ் நூல்கள் என்ற வரிசையில் குறுந்தொகை, நெடுந்தொகை, நடுந்தொகை, புறத்தொகை போன்றவற்றின் இலக்கண மரபுகளும், தொல்காப்பியத்தின் சமகாலத்தில் நிலவிய இலக்கியத் தரவுகளின் இலக்கண மரபுகளும் இடைச்செருகலாக வந்த இலக்கண மரபுகளும் கொண்ட களஞ்சியமாகவே தொல்காப்பியம் விளங்குகின்றது.

            அகப்பாடலுக்குரிய பா வடிவமாகிய கலி, பரிபாட்டு இரண்டும் தொல்காப்பியத்தில் சுட்டியிருப்பது பழைய தமிழ்ப் பாடல்களுக்கு என்றால் அப்பாடல்களில் கலி, பரிபாடல் கொண்ட பாடல்களின் சான்றில்லை. எல்லாமே அகவல் அல்லது ஆசிரியப்பா வடிவங்களே. சமகால இலக்கியத்தில் பயின்றிருக்கிறதென்றால் கலித்தொகை, பரிபாடலுக்குப் பின் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

            மற்றொருநிலையில், முன்பிருந்த அகத்துக்குரிய கலி, பரிபாட்டு பாவகை வழக்கொழிந்த நிலையில், புதிய உள்ளடக்கம் கொண்டு பழைய வடிவங்கொண்டவையாக வெளிப்பட்டிருக்க வேண்டும். கலித்தொகை பிற்காலத்தது என்பதற்கு, பாலைக்கலியில் இளவேனில் காலம் தலைவனைப் பிரிந்த தலைவி வருந்தும் காலமாகச் சுட்டப்பட, பழைய இலக்கியங்களில் கார்காலமே தலைவியை வருத்தும் காலமாகச் சுட்டப்பட்டிருப்பதன் மூலம் உறுதி செய்யலாம். அவ்வாறே தொடக்கத்தில் மக்கள் காதலுக்குரிய பரிபாடல் வடிவம் தெய்வமும் காதலும் இணைந்த ஒன்றாக பிற்காலப் பரிபாடல் வடிவமாக வெளிப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

            தொகையாக்க காலத்தில் சிற்றரசுகளை அழித்துப் பேரரசுகள் நிலைநிறுத்தப்பட்டது. பாண்டியர், சேரர்கள் தொகுப்பித்தவர்களாக அடிக்குறிப்புகள் சுட்டுகின்றன. இறையனார் களவியல் உரையில் அரசியல் நிலையில் பாண்டியர்களைச் சார்ந்தும் சமயநிலையில் சைவத்தைச் சார்ந்தும் சமணர்களுக்கு எதிராகச் சங்க நடவடிக்கையைக் காட்டித் தமிழை இறைவர்களோடு சேர்த்தும் கட்டமைக்கப்பட்ட முயற்சி வெளிப்படுவதாக கா. சிவத்தம்பி முதல் இன்றுவரை பல அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தொகையாக்க அரசியலுக்கு மாறாக, சோழர்கள் பற்றிய பாடல்கள் புறத்தொகைப்பாடல்களில் இடம்பெற்றிருப்பதும், பாண்டியர், சேரர்தம் முயற்சி பலனளிக்கவில்லையா? தொகையாக்க முயற்சியில் சோழர்தம் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

            தொகையாக்கத்திற்குப் பின்னரே, உரை முயற்சிகள் தொடங்குகின்றன. சமணராகிய இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியதும் பேராசிரியர், நச்சினார்க்கினியர் அதற்குப்பின் உரை எழுதியதும் வரலாற்றுண்மை. பத்துப்பாட்டு போன்றவற்றிற்கு நச்சினார்க்கினியரின் உரையை நாம் காணமுடிகின்றது. உரையாசிரியர்கள் மூலமாகவே சங்கப்பாட்டு என்பதும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பதும் திணை, துறை, கூற்று போன்றவையும் அகம், புறம் என்பதற்கு விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. உரையாசிரியர்களின் மகத்தான பங்களிப்பு என்பது, தொல்காப்பியம் மற்றும் பழந்தமிழ் நூல்களை இழக்காமல் காத்ததோடு தம்காலச் சிந்தனைகளுக்கேற்ப அவற்றை மறுவாசிப்பு செய்து இடையறவுபடாமல் காத்துவந்ததாகும்.

            அச்சுப்பண்பாடு அறிமுகமான 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான பதிப்பு முயற்சிகள் உரையாசிரியர்களுக்கடுத்த மாபெரும் பணியைச் செய்தது. ‘கொளு’ என்கிற அடிக்குறிப்புகள் இன்னாரை இன்னார் பாடியது என்ற வரையறைகள் இப்பதிப்புக் காலத்தில்தான் செய்யப்பட்டன. பிரதிபேதம், பாடபேதம் போன்றன உரையாசிரியர் காலத்தில் தொடங்கப்பட்டாலும் பதிப்புக் காலத்தில் அவை செம்மைவடிவம் பெறலாயின. மாற்றி எழுதுதல், நீக்குதல், இடைச்செருகல் போன்றவைகள் இப்பதிப்புக்காலத்தில் செய்யப்பட்டன.

            மேற்கூறியவற்றால், எழுதப்பட்ட காலத்திலிருந்து இலக்கண உருவாக்கம், தொகையாக்கம், உரையாக்கம், பதிப்பாக்கம் என்ற பல்வேறு படிநிலைகளில் பாடப்பட்ட பழந்தமிழ் நூல்கள் குறிப்பாக, தொகைநூல்கள் சமய, அரசியல், மொழிக்கல்வி என்ற பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு இன்றைக்குக் கைகளில் தவழுகின்ற இலக்கியங்களாக, இறுதிவடிவம் பெற்றவையாக, அடிப்படைத் தரவுகளாக விளங்குகின்றன என்பது புலனாகின்றது.

பயிலரங்கப் பொழிவிற்குப் பயன்பட்ட நூல்கள்

1.          மு.வை. அரவிந்தன்                                –           உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம்,

சிதம்பரம், 1983.

2.          க. கைலாசபதி                                      –           தமிழ் வீரநிலைக் கவிதை,

கு.வெ.பாலசுப்பிரமணியன்,

(மொழிபெயர்ப்பு), குமரன் பதிப்பகம்,

சென்னை, 2006.

3.          அ. பாண்டுரங்கன்                              –           தொகை இயல், தமிழ் ஆய்வரங்கம்,

புதுச்சேரி, 2007.

4.          பா. இளமாறன்                                   –           பதிப்பும் வாசிப்பும் : தமிழ் நூல்களின்

பதிப்பு மற்றும் ஆய்வு

சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.

5.          கா. சிவத்தம்பி                                  –           சங்க இலக்கியமும் கவிதையும் கருத்தும்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,

சென்னை, 2009.

6.          சிலம்பு நா. செல்வராசு                   –           சங்க இலக்கிய மறுவாசிப்பு –

சமூகவியல் மானுடவியல் ஆய்வுகள்

காவ்யா, சென்னை, இரண்டாம் பதிப்பு 2009.

7.          து. சீனிச்சாமி                                  –           செவ்வியல் இலக்கியம்

புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010.

8.          க. ஜவகர்                                        –           திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்

காவ்யா, சென்னை, 2010.

9.          பெ. மாதையன்                              –           தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களில்

காலமும் கருத்தும்

நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2011.

10.        ப. மருதநாயகம்                           –           தமிழின் செவ்வியல் தகுதி

இராச குணா பதிப்பகம், சென்னை, 2012.

11.        துளசி ராமசாமி                           –           பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புற பாடல்களே

விழிகள் பதிப்பகம், சென்னை, 2012.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.ம.மதியழகன்

பேராசிரியர்

புதுவைப் பல்கலைக்கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here