ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
மனிதனுக்கு நம்பிக்கையை உண்டாக்கிய கடவுளை வழிபாடுகள் நடத்தி வேண்டிக்கொண்டார்கள். அவை வழிபாடுகள், பூசைகள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்தமான முறையில் இறைவனுக்கு வழிபாடுகளை நடத்தினான். மனிதர்கள் நடத்திய வழிபாடுகள் இரண்டு விதமான வேற்றுமைகள் உள்ளடக்கியிருந்து வந்தன.
(1) இன்னவை வேண்டுமென இறைவனுக்கு வழிபாடுகள் நடத்துதல்
(2) இறைவனால் இன்னவையெல்லாம் கிடைத்தது என மகிழ்ச்சி பொங்க வழிபாடுகள் நடத்துதல்
ஆகிய இரண்டு வகைகளில் பெரும்பாலும் மனிதர்கள் தனக்கு என்ன வேண்டும் என வலியுறுத்தும் வழிபாடுகளே அதிகம் நடந்தேறியுள்ளன. கிடைக்கும்வரை இறைவனைப் பக்தி பரவசம் பொங்க பாடுகின்றவர்கள்; கேட்டவைகள் கிடைத்தவுடன் இறைவனை மறந்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதிலேயே மிகுந்த அக்கறைகாட்டத் தொடங்குகின்றனர். அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டின் முறைமைகளைக் கூற விழைகிறது இவ்வாய்வுக்கட்டுரை.
வழிபாட்டின் நோக்கம்
பிரிந்து பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடவும், தனக்குள் ஏற்பட்ட நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தவும், உறவுகளோடு சேர்ந்து இறைவனை வணங்குதல் வழிபாட்டின் நோக்கமாகக் பார்க்கப்படுகிறது. எப்படிப்பட்ட மனிதனையும் கண்களை மூடி இறைவனைக் கையெடுத்து வணங்கப்படும்போது அவனின் ஆழ்மனது தீய எண்ணங்கள் விலகி நல்லெண்ணங்கள் தோன்ற வழி வகை செய்கிறது. வழிபாட்டின்போது பின்பற்றப்படும் கற்பூரதீ, மேளச்சத்தம், நறுமணம் ஆகியவை ஆழ்மனதை மேய்ந்து கொண்டிருக்கின்ற எண்ண அலைகளை ஒருநிலைப்படுத்தி நிற்கும்.
வழிபாட்டின் தோற்றமும் பின்னணியும்
இயற்கையை வழிபட்ட மனிதர்கள் முதலில் இயற்கையையே வழிபாடு செய்து வந்தனர். இயற்கை மூலமாக பெறப்பட்ட பயன்களை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தனர். பின்னாளில் உருவ வழிபாடு வந்த பிறகு வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாற்றங்களையும் தமிழக மக்கள் பெரிதும் விரும்பி ஏற்றுக் கொண்டனர்.
எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும். இறைவனிடம் வேண்டுதலும் வழிபாடுகள் நடத்துவதும் தமிழகத்தில் தொன்று தொட்டு நடந்து வந்துள்ளன. மனிதனுக்கு இறைவனிடமிருந்து எளிமையாகக் கிடைத்திருக்கும் வரை வழிபாடுகள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்காது. மனிதர்களிடத்தில் ஆசைகள் அதிகமானதால் மற்றவனைவிட எனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்பதிலேயே வழிபாடுகள் தோன்றியிருக்கக் கூடும்.
திராவிடர்கள் ஆரியர்கள் என வழிபாடுகளைத் தங்களுக்குத் தெரிந்த வகையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதிலும் திராவிடர்கள் கடுமையான முறையில் வழிபாடுகள் நடத்தி வந்திருக்கக் கூடும் என இலக்கியங்களும் (கண்ணப்ப நாயனார் புராணம், சிறுத்தொண்டர் நாயனார் புராணம்) வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைப் பார்க்க முடியும்.
வழிபாடுகள் நிகழ்த்த காரணம்
(i) வானம் பொய்த்து போதல்
(ii) உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சி பொங்க இருத்தல்
(iii) இறைவனை மகிழ்வித்தல்
(i) கூத்து கலைகள்
(ii) வேடிக்கைகள்
(iii) இறைவன் திருவீதி உலா
(iv) பக்தி பரவச நிலை
(iv) பிரச்சனைகளில் இருந்து விடுபட
(V) குடமுழுக்கு
(vi) பயத்தின் காரணமாக
மேற்கூறிய காரணங்களால் வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன. வானம் பார்த்து ஏமாந்து போன விவசாயிகள் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்கின்றனர். உறவுகள் ஒன்று கூடி குலசாமி விழா எடுத்து வழிபடுகின்றனர். இறைவனை மகிழ்வித்து நாடும் நகரும் மக்களும் விலங்குகளும் பிற உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் இருக்கவும் நம்முடைய தமிழகக் கலைகளை வளர்க்கவும் செய்கின்றனர். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், கோயில் கட்டி குடமுழுக்கு நேரங்களிலும் இறைவனுக்காக வழிபாடு நடத்துகின்றனர். வழிபாடுகள் நன்றாக முடிந்தவுடன் தம்முடைய ஊரானது சீரும் சிறப்புமாக இருக்கின்றது என அக்கால மக்கள் நம்பினர். தோற்றத்தில் சக்தி மிகுந்த தெய்வங்களுக்கு (காளி) பயத்தின் காரணமாகவும் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.
வழிபாட்டு முறைகள்
தமிழக மக்களிடையே பெருந்தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என இரண்டு வகையாகக் பிரித்துப் பார்க்கலாம். பெருந்தெய்வ வழிபாடுகளில் சூடம் ஏற்றுதல் தேவார திருவாசக பஜனை பாடுதல், இறைவனை வாய்விட்டு அழைத்தல், பூச்சூடல், அலங்கரித்தல் போன்ற முறைகளில் பின்பற்றப்படுகிறது. அந்தணர்கள் இக்கோயில்களில் வழிபாடு நடத்துகிறார்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். வாயில் துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்யப்படுகின்றது. கிராம தெய்வங்களுக்கு பூச்சூடல், படையல், அலங்கரித்தல், மணியோசை, ரத்த காவு போன்ற முறைகளில் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. மொட்டை அடித்தல், பலியிடல், காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல் (காது குத்துதல்), அங்கப்பிரதட்சணம் செய்தல் (கோவிலைச் சுற்றி உருண்டு வருதல்), மண் சாப்பாடு, தொட்டில் கட்டுதல், காப்பு கட்டுதல், விரதம் போன்றவைகள் நேர்த்திக்கடன்களாக தமிழக மக்கள் பின்பற்றுகின்றனர். வழிபாட்டு முறைகளில் பால்குறி வழிபாடு இருந்ததாக, “ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் சிவலிங்க வழிபாடு செய்து வந்தனர். இவ்வழிபாட்டை பால்குறி வழிபாட்டு வடிவமாகக் கொள்கின்றனர்”1 என்று கே.கே.பிள்ளை கூறுகிறார்.
சங்க இலக்கியத்திலும் வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளன. அம்மக்கள் அதிகம் இயற்கை வழிபாட்டையே முன்னிறுத்தி வணங்கி வந்துள்ளனர். அவ்வகையில் சங்க கால வழிபாடுகளை பற்றி ஆராய்வோம்.
உழவர்கள் வழிபாடு
உழவர்கள் நடத்தும் வழிபாடுகள் ஊர்கள் தோறும் வேலனால் கூட்டியும் மெழுகியும் அழகுற அமைக்கப்பட்டு இருக்கும். அவ்விடமானது செந்நெல்லின் வெள்ளியப் பொரியைச் சிதறினார் போன்று காட்சியளிக்கும். இத்தகைய வளம் பொருந்திய பழமையான ஊரில் இறைவனுக்கு வழிபாடு நடத்தினார்கள். குறுந்தொகையில்,
“தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணுங்குக” (குறுந்.164 3-4)
அறிவு மிகுந்தவர்களும் உழவினைத் தொழிலாகக் கொண்டவர்களும் உறவுகளில் குறைகள் காணாதவர்கள் ஆகிய முதிர்ந்த வேளிர் குளத்திற்கு உரியவர்கள். இறைவனை பூக்களைத் தூவி வழிபட்டார்கள் என்கிறது குறுந்தொகை பாடல். உழவர்கள் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை முதலில் இறைவனுக்குப் படைத்த பின்புதான் எடுத்துக் கொண்டார்கள். குறிஞ்சி நிலத்துக்குரிய தலைவன் தன்னுடைய தோட்டத்தில் தினை விதித்துள்ளான். அத்தினையும் நன்றாகக் குறுத்து தோன்ற விளைந்து நின்றது. சுற்றத்தாருடன் வயலுக்குச் சென்று தினைக்கதிரை அறுத்து இறைவனுக்கு பலியிட வேண்டும் என்று நினைத்தான்.
“கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்சை, ஆடுமகள்” (குறுந்.105 2-3)
ஆனால், தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையின் முற்றிய பாலுடன் சேர்த்த செழுமையைக் கண்ட மயிலானது இத்தினை இறைவனுக்கானது என்று அறியாமல் கொத்தித் தின்றதாம். குறிஞ்சி நிலத்தலைவனும் முருகப்பெருமானே உண்டதாக மகிழ்ந்து போனான் என்கிறார் நக்கீரர். மலைகளை வேலியாக உடைய அழகிய கிராமம். திருமண நாளை அறிவிப்பது போன்ற வேங்கை மரங்கள் வீடுகள் தோறும் பூத்து நின்றன. ஒவ்வொரு பொன் நிறப்பூக்கள் உதிர்ந்து விழுந்து பரவி அழகிய முற்றத்தினை அழகு செய்யும். தம்முடைய இல்லத்தை காவல் காத்தும் தீங்கு நேராவண்ணம் பாதுகாத்தும் இருக்கின்ற கடவுளுக்கு எம் அன்னையானவள் நாள்தோறும் செய்யும் பூசைகள் பூக்கள் பலவுடன் சேர்த்து வழிபாடு நடத்துகிறார்கள்.
“ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
விரவுப்பூம் பலியொடு விரைஇ, அன்னை” (அகம்.232 11-12)
குளிர்ச்சி பொருந்திய துறையில் உள்ள தெய்வத்தை தலைவி தன் தோழிகளுடன் சேர்ந்து தொழுது வழிபட்டாள் என்கிறது அகநானூறு. சங்க காலத்தில் பூக்களை வைத்து வழிபாடுகள் நிகழ்த்தி வந்துள்ளதை அறிய முடிகிறது. கயல்மீன் போன்ற அழகிய மையுண்ட கண்களை உடையவர்கள். தங்களுடைய காதுகளில் கனத்த குழை அணிந்தவர்களும் ஆகிய பெண்கள் மாலைப் பொழுதில் இறைவனை வழிபட தயாராகின்றனர். தங்களுடைய வீட்டில் இருக்கும் வழிபாடு பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். குறுந்தொகையில்,
“கயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர்
கையுறை ஆக நெய்பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை” (குறுந்.398 3-5)
இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வணங்குகின்ற ஒளிப் பொருளாகிய தெய்வத்திற்கு நல்ல பசுவின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யினால் விளக்கு ஏற்றப்படும். அப்படிப்பட்ட இனிய மாலைப் பொழுதாக விளங்குகிறது என்கிறார் குறுந்தொகை ஆசிரியர் பெருங்கடுங்கோ,
“அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு” (நற்.9 1-2)
இவ்வுலகத்தில் மனிதனாகத் தோன்றிய அனைவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார். நீண்ட காலம் வாழ வேண்டுமானால் மனிதன் நோய் நொடியின்றி வாழ வேண்டும். அவ்வாறாக மனிதனுடைய மனதில் ஏற்படும் தீய குணங்களாகப் பொய், கோபம், காமம், குரோதம் போன்றவற்றை அறவே ஒழித்து வாழ முற்படவேண்டும். அப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திடம் நீண்ட ஆயுளை தந்து அருளுக என வேண்டிக் கொள்வார்களாம் என்கிறார்.
உழவர்களின் வழிபாட்டு மரபுகள்
உழவர்கள் தங்களுக்கென்று வழிபாட்டு முறையினை அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தனர். அவை நம் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் பொருந்தி நிற்பனவே ஆகும். குறுந்தொகையில்,
“மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி.” (குறுந்.263 1-4)
ஆற்றின் இளம் குட்டி அறுத்து இரத்தத்தை எடுப்பார்கள். தினைச்சோற்றோடு சூட்டோடு இருக்கும் இரத்தத்தைச் சேர்த்து இறைவனுக்கு பலியாகக் கொடுப்பார்கள். வழிபாடு முடிந்தவுடன் அந்த இரத்தச்சோற்றைக் குழந்தைப்பேறு இல்லாதவர்களிடம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. வழிபாட்டின் வழியாகக் கொடுக்கப்படும் இரத்தச்சோற்றை உண்ணும் பெண்களுக்கு விரைவாக குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கையும் நம் மக்களிடையே இருந்து வருகின்றது. மேலும், வழிபாட்டின்போது இசைக்கருவிகள் முழங்கியும் விண்ணை பிளக்குமாறும் வாசிக்கப்படுகின்றன. ஆனால் இவ்வழிபாடு ஊருக்குப் புறத்தே நிகழும் என்கிறது பண்டைய இலக்கியங்கள். ஊருக்கு வெளியே உழவு வேலை செய்த காட்டின் ஒரு பகுதியிலேயே பெரும்பாலும் நடக்கின்றது. இதனாலேயே இன்றளவும் குறிப்பிட்ட வயல்வெளிகளில் ஏதாவது ஒரு கோயில் இருப்பதைக் காண முடியும்.
மழை வழிபாடு
‘நீரின்றி அமையாது உலகு‘ என்பார் வள்ளுவர். வானம் பொய்த்து விட்டால் நிலம் வறண்டு போகும். உழவர்கள் அழிந்து போவார்கள். மக்கள் பசி பட்டினி என்று செத்து மடிவார்கள். மழைநீர் உயிர் நீர். அக்காலகட்டத்தில் மக்கள் மழையை வணங்கியுள்ளனர். மழை கடவுளான வருண பகவானுக்கு விளக்கேற்றி மலர்களைத் தூவி போற்றியுள்ளனர்.
“அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேன்மார்” (நற்.165 3-4)
எனக் குறிஞ்சிநிலத்துக் கானவன் கூறுவதாக இவ்வரிகள் அமைந்துள்ளது. தலைவிக்கும் தனக்கும் திருமணம் விரைவில் நடக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். எங்களுடைய மலையானது தற்போது மழை இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. ஆனால் எங்களுடைய மலை தெய்வத்தின் அருளால் சூழ்ந்தது. அதனால் அத்தெய்வத்தின் கோபம் தணியுமாறு எங்கள் சுற்றத்தோடு விரும்பி வந்து இம்மலை தெய்வத்தை வணங்கினோம் என்றால் மழையானது கொட்டும். அவ்வாறாக மழை வருமானால் எங்களுடைய மலையானது குளிர்ச்சிப் பொருந்திய வளம் உடையதாக மாறும் என்கிறான். மழைக்காக வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
“மலை வான் கொள்க! என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று, மழை மேற்கு உயர்க! எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,” (புறம்.143 1-3)
தெய்வத்தை அன்றாடம் வணங்கும் குறமக்கள். அவர்கள் மழையற்றுக் காலத்து மழையைப் பெய்ய வேண்டி தங்களின் மலைகளில் மிகுந்த பலியைத் தூவி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இங்கு பலி என்பது மஞ்சளுடன் பூக்களை அரிசியுடன் சேர்த்து வணங்குதல். இவ்வழிபாட்டில் முடிவாகக் குறவர்கள் வாழும் மலை முழுவதும் கடும் மழை பெய்ததாம். அளவுக்கு அதிகமாக மழை பெய்து அதனால் மழை வேண்டாம் என்று மீண்டும் தெய்வத்திற்கு வழிபாடு செய்கின்றனர். அதன் பொருட்டு மழையானது அவ்விடத்தில் நின்று வேறு இடத்தில் மழை பெய்தது என்கிறார் ஆசிரியர்.
இதன் மூலம் மழைக்காக மக்கள் வேண்டி நின்றலும் மழை அதிகம் பெய்து விட்டால் மழை நிற்கும் படியும் மக்கள் தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளனர் என்பது புலனாகிறது.
“மாரி வாய்க்க! வளம் நனிசிறக்க!
என வேட்டோளே, யாயே யாமே” (ஐங்.10 2-3)
ஒவ்வொரு காலமும் மழை நீரானது பொய்க்காமல் பெய்ய வேண்டும். இந்த உலகத்தின் நன்மை ஒன்றையே கருதியும் உலக வாழ்வுக்கு இன்றியமையாத மழை வளத்தையும் அதன்மூலம் உண்டாகும் செல்வச் சிறப்பையும் எப்போதும் மக்கள் விரும்பி நிற்பார்கள். மலைகளின் மீது விதைத்து வளர்ந்த துணை பயிருக்கு மழை வேண்டி குறமாந்தர்கள் ஆரவாரம் செய்தனர் ஆராவாரம் செய்தால் மேகம் மழை பொழியும் என்பது பழங்கால நம்பிக்கையாகும்.
நெல் வழிபாடு
அந்தக் காலத்தில் மக்கள் உணவாக உட்கொள்ளும் அரிசி நெல்லினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். யாருக்கேனும் தானம் தருவதிலும் நெல்லினியே முதலிடம் பெற்றது எனலாம். இறைவன் வழிபாட்டின் போது நெல்லினை தூவி வழிபாடு நிகழ்வினை நிகழ்த்தியுள்ளனர். நெல் வயல்களில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற பழக்கமும் இருந்து வந்துள்ளது. ஏனெனில் உண்ணும் நெல்லினைக் கடவுளுக்குச் சமமாக வைத்து வணங்கி வந்துள்ளனர் சங்ககால மக்கள்.
“அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்த்திரி கொளிஇ,
நெல்லும் மலரும் தூஉம் கை தொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர” (நெடுநல் 41 – 44)
மகளிர் வெண்ணிறச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் அணிந்த முன் கையை உடையவர் ஆவார். முத்துப்போன்ற பல்லினை உடையவர். மடமை குணத்தைக் கொண்டவர்கள். இம்மகளிர்கள் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் மலர்களை அழகிய பூந்தட்டுகளில் நிரப்பி வைத்திருப்பர். அப்பூக்கள் மலர்ந்து வாசம் வருவதைக் கண்டு மாலைநேரம் வந்திருப்பதை உணர்வர். சாயங்கால நேரத்தில் இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில் எண்ணெய் தோய்த்த திரியை கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவி கைக்கூப்பி வீட்டு தெய்வத்தை வழிபட்டார்கள் என்கிறார் நக்கீரர்.
“நல்நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரோடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின்” (நற்.288 5-7)
தலைவன் பொருள்மேல் சென்றுள்ளான். தலைவிக்குப் பசலை நோய்ப் படர்ந்திருந்தது. அப்போது அந்தப் பக்கத்தில் ஒரு முதுமை மிக்க கட்டுவிச்சி என்கிற குறி சொல்பவள் செல்கிறாள். தலைவியானவள் அவளை அழைத்து தலைவனின் வரவை பற்றி குறிக்கேட்கிறாள். தன் வீட்டிற்கு முன்னால் அப்பொழுதுதான் களத்தில் இருந்து அறுத்து வரப்பட்ட நெல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தெய்வமாக மதிக்கும் நெல் கட்டுக்கு முன்னால் வைத்து தலைவி குறிக் கேட்கிறாள். இவ்விடத்தில் நெல்லினைக் கடவுளாக வைத்து தலைவி பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.80 6-7)
அஞ்சத்தக்க குகையும் குரலெடுத்து அலறும் இரவுப்பொழுது. தலைவன் இல்லாமல் வருந்தும் தலைவி மாறுகண் துயிலாமல் தலைவனை நினைத்து வருந்துகிறாள். அப்பொழுது தலைவனின் வரவைக் காண நெல்லும் நீரும் தூவி விருச்சி கேட்கும் முதுநிலை பெண்டிர்கள் இன்சொற்களானது தலைவியின் துயரத்தைப் போக்கும் என்கிறது புறநானூறு.
“நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்.335 12)
தம்மோடு பொருந்தாத பகைவரைப் போர்முனையில் எதிர்நின்று தடுத்து நிறுத்தி அவர்களுடைய ஒளியுடைய ஏந்திய கொம்புகள் உடைய யானைகளைக் கொன்று இறந்து பட்டவனுக்கு வைக்கப்பட்டுள்ள நடுகல்லில் தெய்வமாய் நின்றவனை நெல்லை தூவி வணங்கி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இவ்விரண்டைத் தவிர வேற கடவுள்கள் இவ்வூரில் இல்லை என்கிறார்கள். நெல்லினைத் தூவி வழிபடும் நெல்லினை தானம் கொடுத்தும் நெல்லினை முன்னிறுத்தி கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
தை வழிபாடு
உழவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாதம் தை மாதம் ஆகும். அப்பொழுதுதான் நெல்லினை அறுவடை செய்வார்கள். இந்த வருடத்தில் எம்மண்ணில் நிறைய அறுவடையைக் கொடுத்ததாகக் கடவுளுக்குப் பூஜை செய்து வணங்குவார்கள்.
“தைத் திங்கள் தண் தயம் படியும்” (நற்.80 7)
தகுந்த நாணம் கொண்டவளான தலைவி தைத்திங்களில் குளிர்ந்த நீரிலாடி நோன்பு மேற்கொண்டாள். நோன்பின் பயனாகத் தலைவன் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாள். மேலும் சூளோடு வாடிய நெற்பயிருக்கு நடு இரவில் மழை பெய்தது. அதனால் தை நோன்பு இருந்தவனுக்குப் பின்பு உண்ணுதலை போல் இருந்தது இம்மழை என்கிறார் புறநானூற்று ஆசிரியர்.
“தையல் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?” (கலி.59 13)
இப்பாடலில் தலைவியின் அரிய பண்புகள் சுட்டப்பட்டுள்ளன. நின்னை ஒத்த மகளிர் சூழ வகைவகையாக அணி புனைந்து தைத்திங்களில் நீராடிய தவத்தின் பயனெல்லாம் தலைவி பெறுகின்றாள் என்கிறார் ஆசிரியர். “தை நீராடுதல் இளம் பெண்களால் நிகழ்த்தப் பெறும். சங்க இலக்கியங்களில் சுட்டப் பெறும் நிகழ்வு. பண்டையத் தமிழர் தம் பண்பாட்டு தொடர்புடையது. மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கி தை முழுமதி நாள்வரை நாட்காலையில் நீராடி நோன்பிருந்து வழிபடுவர். திருப்பாவை, திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைநீராடல் அடிப்படையாக அமைந்தது எனலாம். தைநீராடும் மகளிர் பிறர்மனைக்கு சென்று பாடி ஐயம் ஏற்று கிடைத்தவற்றைப் பிறருக்கு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது சிறந்ததொன்றாகக் கருதப்பட்டது. ‘ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி’ என்னும் ஆண்டாள் பாசுரச் செயலுக்கு முன்னோடி கலித்தொகை தலைவியின் இச்செயல்”2 என்கிறார் முனைவர் ஆ விசுவநாதன் அவர்கள். இவ்வாறாக நோன்பு சங்க காலத்திலிருந்து இன்றுவரை நம் பெண்களிடையே இருந்து வருவதைக் காணமுடிகிறது.
வழிபாட்டு முறையில் பலியீடு
சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளைப் பலி கொடுத்துக் கடவுளை வணங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பூக்கள், நெல் போன்றவையே இறைவனுக்கு பலியிடப்படும் உணவாக அமைந்தது. பிற்காலத்தில் சமூக மக்களிடம் ஏற்பட்ட மாறுதல்களில் விலங்குகளைப் பலி கொடுப்பது வழிபாட்டு மரபுகளில் வைத்துக் கொண்டனர்.
இந்த வழக்கமானது சிறு தொழில்கள் செய்து வருபவர்களிடமிருந்தும் சிறுதெய்வங்களை வணங்கி வருபவர்களிடமிருந்தும் வந்துள்ளன என்பதாகக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு கிணறு வெட்டும் தொழிலாளி கிணற்றை வெட்டும் போது ஏதோ ஒரு விபத்தின் காரணமாக இரத்தக் காயம் ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதைப்போல கருவிகள் மூலம் செய்யப்படும் அனைத்து வாழ்வாதார தொழில்களுக்கும் பொருந்தும். இத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னரே விலங்குகளை கொற்றவை ஆகிய சிறு தெய்வத்திற்கு இரத்த பலி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு செய்தால் வேலை செய்யும் இடத்தில் பெரிய இழப்பு ஒன்றும் வராது என நம்பிக்கை வைத்திருந்தனர். இதன் பொருட்டே கடவுள்களுக்கு வழிபாட்டின்போது பலிகொடுப்பது வந்திருக்கலாம் என அறிய முடிகிறது.
காக்கைக்குப் பலி உணவு
காக்கைகள் நம்முடைய இறந்த முன்னோர்கள் என்று இன்றளவும் நம் மக்களால் நம்பப்படுகிறது. அம்மாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு பலியாக இடப்படும் உணவை வைத்து காக்கை உண்டவுடன் நாம் சாப்பிடும் பழக்கமும் இன்றளவும் நம்மிடையே உள்ளது.
“விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே” (குறுந்.210 6)
நள்ளி என்பவனுடைய தொண்டி என்னும் நகரில் வாழும் தலைவிக்கு விருந்தினர் வரவைக் காக்கையானது கரைந்து சொல்லியது. அதனால் விண்ணில் அரிசியால் ஆக்கிய சோறானது வேறு களங்களில் நிரம்பி இருந்தாலும் விருந்தினர் வரவை சொல்லிய காக்கைக்கு இடும் பலி உணவானது சிறிய அளவிலேயே உடையது ஆகும் என்கிறார் ஆசிரியர்.
மறுஇல் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபின் நின் இளையோடு ஆரப்” (ஐங்.391 1-2)
வேற்று நிறக்கலப்பு சிறிதும் இல்லாத தூய கருநிற சிறகுகள் கொண்ட காக்கை. உறவினர்கள் வருகையைக் கரைந்து உணர்த்தியது. தலைவி அக்காக்கைக்கு பலி உணவாக நல்ல நிணமும் ஊனும் கலந்து உயர்ந்த உணவை பொற்கலத்தில் வைத்துக் கொடத்தாளாம் என்கிறது ஐங்குறுநூறு.
“மாசு இல் மரத்த பலி உண் காக்கை” (நற்.281 1)
குற்றமில்லாத மரத்தில் இருந்து கொண்டு மக்கள் கொடுக்கின்ற பலி உணவுக்காக காத்திருந்தது காக்கை என்கிறார்.
“செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவவு முனையின்” (பொருந.183 – 184)
மருதநில மரச்சோலைகள் நிரம்பியிருக்கும் ஊரில் வாழும் குடிமக்கள் காக்கைகளுக்கு நாள் தவறாமல் பலி உணவினை வழங்குவார்களாம். அதுவும் உரத்தோடு சேர்ந்த சிவந்த சோற்றுப் பலியைக் காக்கைக்குப் படைப்பார்கள் என்கிறது பொருநராற்றுப்படை. நெடிய விழுதுகள் இறங்கிய கடவுள் உறையும் ஆலமரம். அங்கு கடவுளுக்கு படைத்து வைத்த பலி உணவை காக்கைகள் உண்ணுமாம் என்கிறது நற்றிணை (343:4 – 5) பாடல்.
பலியிடுதல்
பல பிளவுகளையும் குகைகளையும் உடைய மழை பக்கத்திலுள்ள வெற்றி பொருந்திய கொற்றவைத் தெய்வத்திற்கு மக்கள் பலி கடன் செய்ய நேர்ந்து கொள்கிறார்கள். இதனால் நோன்பின் காரணமாகக் காப்பு நாண் அணிதல், நிமித்தம் பார்த்தல், விரிச்சி கேட்டல் போன்றவைகள் செய்கின்றனர்.
கரிய கண்ணையுடைய கருணைக்கிழங்கின் பொரியலோடு செந்நெல்லாற் சமைத்த வெண்மையான சோற்றுப் பலியைக் தெய்வத்திற்கு இடுவார்கள். அவ்வாறு இடும் இல்லங்கள் பல உள்ள பழமைமிக்க ஊர் என நற்றிணை (367:3-4) கூறுகிறது. பலியிடும் வழக்கம் ஆரம்பத்தில் சோற்றைத்தான் பலியாகக் கொண்டனர். பிற்பாடுதான் விலங்குகளைப் பலியாகக் கொடுக்கும் பழக்கம் வந்திருக்கக்கூடும்.
“மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை” (நற்.73 2- 4)
கோடைக்காலத்தில் வலிய வாயை உடைய வளமை மிக்க பழமையான ஊரிடத்தே தெய்வத்திற்கு வழிபாட்டோடு இடப்படும் ஊன் மிக்க பலிச் சோற்றினை உண்பதற்காகத் தான்வாழும் பாழான மன்றத்தை இடித்துக் கொண்டு எழும் என்கிறார் ஆசிரியர்.
“தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்” ( அகம்.309 4-5)
பால் தரும் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்த வெட்சி மறவர்கள் தம்மோடு போரிட்ட கரந்தை மறவர்களைக் கொன்றனர். வலிய காட்டு வழியில் நெடுந்தொலைவு விரட்டி வந்தனர். அவ்வூரில் தெய்வம் வாழும் பருத்த அடி மரத்தை கொண்ட வேப்பமரத்தை கண்டனர். கவர்ந்து வரப்பட்ட நல்ல பசுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொன்று அதன் குருதியைத் தெய்வம் உறையும் மரத்தின் மேல் தெளித்து வழிபட்டனர். பலியிட்டுக் கொடுத்த புலாலைச் சமைத்து உண்டார்கள். தனக்கு எவ்விதமும் தீங்கு வரக்கூடாது என்று பலியிட்டு வேண்டிக் கொள்கின்றனர். பலிக்காகத் தாயின் முலைப்பால் கிடைக்கப் பெறாது மெல்லிய தளிராகிய தளை உணவை உண்ணக் கூடிய மிக்க இளமையுடைய ஆட்டுக்குட்டியைக் கடவுளுக்குப் பலியிட்டு வந்துள்ளனர் என அகநானூறு (292: 3 – 4) கூறுகின்றது.
தெய்வ வழிபாட்டின்போது விலங்குகளைப் பலி கொடுப்பது மட்டுமின்றி கள்ளினையும் உணவாகப் பலி கொடுத்துள்ளனர். நாட்பட்டு முதிர்ந்த கடிய வேகங்கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறியுடைய அந்தக் கள்ளினை முதலில் ஓங்கி உயர்ந்த உச்சியை உடைய தெய்வம் வாழும் மலைக்கு படைத்துவிட்டுப் பிறகு அம்மக்கள் அருந்தினார்களாம் என்று அகநானூறு (348:3 – 8) கூறுகிறது. சுவரில் ஓவியமாக வரையப்பட்ட அழகிய கடவுள் அவ்விடம் விட்டு நீங்கி சென்றதால் இடமானது பொலிவிழந்து காணப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு இடைவிடாது நடத்தப்பெறும் பலியும் மறக்கப்பட்டது. வருடந்தோறும் இறைவனுக்கு கொடுக்கும் பலியானது மக்களின் வறுமையால் நிறுத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
“கள்ளும் கண்ணியும் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,” (அகம்.156 13 – 15)
நீர் நிரம்பியுள்ள குளத்தின் மேல் உறைந்திருக்கும் கடவுளுக்குக் கள்ளையும் மாலையும் சாத்தப்படுகிறது. பலியாக நிமிர்ந்து நேர்க்கொண்ட கொம்பினையும் தொங்கும் காதுகளையுடைய வெள்ளாட்டுக் கிடாயினையும் கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட செய்யுளில் கையுறை என்பது கடவுளிடம் தான்வேண்டியது நடந்தேறினால் அம்மக்கள் கடவுளுக்குக் காணிக்கையாக எதைக்கொடுக்க நினைத்தார்களோ அவற்றை கொடுத்துத் தன்னுடைய கணக்கைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வகையான பழக்கவழக்கங்கள் இன்றளவும் நம் சமூக மக்களிடையே இருந்து வருவதைக் காணமுடியும்.
முருகன் வழிபாடு
குறிஞ்சிக்கடவுள் முருகன். தமிழ் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். தமிழகத்தில் குறவர் இனத்தில் வள்ளியை காதல் திருமணம் செய்ததால் முருகக்கடவுள் மருமகன் ஆனார். முருகன் என்றால் அழகு, இளமை என்று பலவாறு பொருள் கொள்ளலாம். குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தாங்கள் நுகர்ந்த இன்பத்தை இறைவனாக எண்ணி வழிப்பட்டார்கள். அவ்வாறு வழிப்பட்ட இறைவனை முருகு என்று அழைத்து வந்தார்கள். குறுந்தொகையில்,
“சிறு மறி கொன்று, இவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய” (குறும்.362 4-5)
பலவாய செய்த பொருட்களில் தினை அரிசி சோற்றுப்பலியுடன் ஆட்டின் சிறிய குட்டியைக் கொன்று அதனுடைய இரத்தத்தைத் தலைவனுடைய நெற்றியில் பூசியும் முருக கடவுளான உனக்கு வழிபாடு செய்கின்றோம். இப்பலியினை ஏற்றுக்கொள்க என்கிறார் ஆசிரியர். சங்க காலத்தில் பெண்களுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் காலத்தில் இவ்வகையான வழிபாடுகள் நிகழ்த்தப்படுவது உண்டு. அதிலும் முருகப்பெருமானை முன்னிறுத்தியே இவ்வகையான வழிபாடுகள் நடந்தேறியுள்ளன. குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவன் தன்னுடைய குடி தெய்வமாகிய முருகனை வழிபட்டு வழங்குகின்றான் என்ற செய்தியை ஐங்குறுநூறு (257) பாடல் கூறுகிறது. மேலும் சிறுகுடி என்ற சிற்றூரில் முருகவேளுடன் கூடிச் சென்ற வள்ளி நாயகியும் சேர்ந்து காட்சியளிக்கும் செய்தியை நற்றிணை (82) கூறுகிறது.
“அணங்கு என உணரக் கூறி, வேலன்
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே” (நற்.322 10-12)
தலைவிக்குப் பசலை நோய் படர்ந்து விட்டது. இந்நோய்க்கான காரணம் முருகவேள்தான் என்று நினைக்கிறாள் தாய். அதனால் துடி முதலிய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க பாடியும் நறுமணமுள்ள பூக்களைத் தூவி துதித்தும் இந்த ஆட்டுப் பலியை ஏற்றுக்கொள்க எனத் தலைவியின் தாய் வழிபாடு நிகழ்த்துகிறாள். வீட்டின் முன்னால் அழகிய கண்களை உடைய மணலைப் பரப்பியும், இல்லத்தைச் செம்மண்ணால் பூசியும், பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வந்துள்ளனர் (கலி.114:13 – 15).
வழிபாடுகள் ஒவ்வாரு மனிதனையும் நம்பிக்கை சார்ந்த வாழ்வினை வாழ வைத்ததோடு தம்முடைய முன்னொர்களின் வரலாறுகளையும் குடிப்பெருமைகளையும் காக்க உதவியிருக்கிறது.
சான்றெண் விளக்கம்
1. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.171
2.முனைவர் அ.விசுவநாதன், கலித்தொகை மூலமும் உரையும், NCBH, ப.250
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.