சங்ககால இலக்கியத்தில் கூத்துக்கலையின் வளம்

iniyavaikatral.in
பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்த மனிதனுக்குப் பொழுது போக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும், தன் அறிவு சார்ந்த காரணங்களிலும் தன்னை கலையின் மீது ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். காலையில் எழுந்து வயலுக்குச் சென்று வேலை செய்து மாலை வீடு திரும்பும் உழவனுக்கு உடல் அசதியோடு மனச்சுமையும் கூடியிருக்க வேண்டும். அவன் சந்தோசத்தில் இருக்க வேண்டிப் பாடலைப் பாடியும், கைகளைத் தட்டியும் இசையை எழுப்பி இருக்க வேண்டும். அல்லது பொருட்களைத் தட்டியோ உரசியோ  ஒலி எழுப்பி இருக்க வேண்டும். அதனோடு நடனம்  ஆடித் தான் மட்டும் சந்தோசம் அடையாமல் தன்னைப் போன்ற பிற மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்க வேண்டும். இசையோடு கூடிய நடிப்புக்கலையே கூத்துக்கலையாகும். மக்களை இன்புறச் செய்யும் நிகழ்ச்சி கூத்து ஆகும். இக்கலையில் மக்கள், மன்னர்கள், புலவர்கள் என்று அனைவரும் பங்கு பெற்றனர். விறலியர், வயிறியர், கோடியர், கண்ணுளர், ஆரியர் எனக் கூத்தர்களை இலக்கியங்கள் சுட்டுகின்றன. இவ்வகை கூத்துகலைப் பற்றி இக்கட்டுரையின்கண் ஆராயப்படுகிறது.

காதலும் கூத்தும்

            காதலர்கள் சந்தித்துக்கொள்ளவும், குறியிடம் குறிப்பிடுவதற்கும், தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதற்கும் இக்கூத்துக்கலை களமாக விளங்கியுள்ளது. கலித்தொகையில்,

                        “தொழீஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை

                         அரக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல்” (கலி.104:69-70)

என்று மகளிர் குரவைக் கூத்து நிகழ்த்தியதைக் காணமுடிகிறது. இவ்வகைக் கூத்தில் தலைவி, தோழியோடு ஆடியதையும், அப்போது தலைவன் தலைவியைக் காண வருவதையும், அவர்களிடையே காதல் மலர்வதையும் பாடலாசிரியர் சுட்டுகிறார். ஆட்டனத்தியை எதிர்ப்பார்த்த ஆதிமந்தி இத்துணங்கைக் கூத்தில் இருப்பானோ என்று சுற்றிப் பார்த்ததாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

            தலைவன் காதிற் குழையும் கழுத்தில் மாலையும் அணிந்து குறுகிய பல வளையல்களையும் அணிந்தவனாய் விழாக்காலத்தில் தலைவியோடு துணங்கை ஆடியதாகப் பின்வரும் நற்றிணைப்பாடல் எடுத்துரைக்கிறது.

                        “குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்

                         விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல” (நற்.50:2-3)

என்னும் அடிகள் மேற்கூறிய செய்தியினை உரைப்பதைக் காணலாம். “மதுரைத் தமிழ்க் கூத்தனார் தமிழரின் கூத்துக்களை ஆடிக்காட்டுவதில் புகழ்பெற்றிருந்தார்”1 என்று வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை குறிப்பிடுவது இங்கு சிந்தித்தற்குரியது.

புறமும் கூத்துக்கலையும்

            போர்க்காலங்களில் வீரர்களை ஊக்கப்படுத்தவும், எழுச்சியூட்டவும் பழங்காலத்தில் கூத்துகள் நடத்தப்பட்டன. இதனை அகநானூற்றின் 22ஆம் பாடல் உறுதி செய்கிறது. கூத்து வகைகளில் முன்தேர்க்குரவை, பின்தேர்க் குரவை என இரண்டு வகைக் கூத்துக்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகைக் கூத்துக்களைப் பற்றி தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களும் இயம்புகின்றன. பதிற்றுப்பத்தில் கூட,

                        “குருதி பனிற்றும் புலவுகளத் தோனே

                         துணைவகை ஆடிய வலம்படு கோமான்” (பதிற்று.57:3-5)

மேற்கண்ட அடிகள் துணங்கைக் கூத்து போர்க்காலங்களில் நிகழ்த்தப்பட்டதை உறுதிசெய்கின்றன.

குரவைக் கூத்து

            “பண்டைய சமுதாயத்தில் விளங்கிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களுள் ஒன்று குரவைக்கூத்து. குரவைக் கூத்தின் மலை நடனம் என்று அபிதான சிந்தாமணி குறிக்கின்றது. ஏழு அல்லது ஒன்பது மகளிர் கூடி ஆடும் ஆட்டம் என்று உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். குரவையில் பங்கு கொள்வோர் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளுதல் குரவைக் கூத்தின் தலையாய நெறிமுறையாகும்”2 என்று பாக்யமேரி குறிப்பிடுவது குரவைக் கூத்தின் நிகழ்த்துமுறையை விளக்கியுரைக்கிறது. எனவே இக்கூத்தினைப் பெண்கள் மட்டும் ஆடியிருக்க வாய்ப்பில்லை. ஆண்களும் பெண்களும் கலந்து ஆடியிருக்க வேண்டும். இவ்வகையான குரவைக் கூத்து ஆடுவதால் தலைவன் தலைவியின் நெருக்கம் அதிகமாக்கப்படுவதற்கான சூழல் உருவாவதை உணரலாம்.

                        “வணங்கு இறைப் பணைத்தோள் எவ்வளை மகளிர்

                         துணங்கை நாளும் வந்தன் அவ்வரைக்” (குறும்.364:5-7)

பரத்தையானவள் தலைவியைப் பழித்துரைக்கிறாள். அவளைக் தண்டிக்க நினைத்த தலைவி குரவைக்கூத்து விழா நடக்கும் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்நாளும் வந்தது. இப்போது பரத்தை யாருடன் குரவைக் கூத்து ஆடுகின்றாள் எனப் பார்ப்பதாக ஆசிரியர் உரைக்கின்றார்.  இக்குரவைக் கூத்து சில நேரங்களில் குடும்பங்களில் குழப்பம் தோன்றுவதற்கும் வழிகோலியது. கலித்தொகையின் 65ஆம் பாடலும், பரத்தையோடு தலைவன் குரவை ஆடுவதால் அதனைக் கண்ட தலைவி வருத்தமுறுவதும் பாடலடிகளில் சுட்டப்படுகின்றன. இச்செய்தியினைக் கலித்தொகையின் 66ஆம் பாடலும், நற்றிணையின் 50ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 328ஆம் அடியும் எடுத்துரைக்கக் காணலாம். அகநானூற்றில் இக்குரவைக் கூத்து, கீழ்க்காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது என கூறுகிறது.          

                      “குரவை தழீஇ யாம் மரபுளி பாடி

                         தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்” (கலி.103:75-76)

 என்னும் கலித்தொகை அடிகளில் குரவைக் கூத்தில் ஏற்றினை அடக்கிய தலைவனும் கலந்துகொண்டு சுற்றத்தார் மகிழும்படி ஆடியதை அறியமுடிகிறது.

குரவைக் கூத்தின் நன்மைகள்

            குரவைக் கூத்தினை வெறும் பொழுதுபோக்குத் தன்மை மட்டும் கொண்டதாகக் கருதிவிட முடியாது. இதன் மூலம் சமுதாய நன்மைகள் பல நிகழ்ந்தன.

                1. “ஒரு நிலத்தினைச் சேர்ந்த மக்கள் பிறிதொரு நிலத்தில் சென்று குரவை நிகழ்த்தினர். சமுதாய ஒற்றுமை மேலோங்கியது.

               2. ஊசல், அலவனாட்டு, பொய்தலாடல் முதலிய மகளிர் விளையாட்டுக்களைப் போலவே குரவைக் கூத்து சிறந்த பொழுது போக்காக

                விளங்கியன.

             3. சூதாட்டம் முதலான தீய பொழுது போக்குகளில் இருந்து இளைஞர்களை மன மாற்றம் செய்தன.

           4. குரவை, பழந்தமிழர் இசைக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சிறுபறை, தொண்டகப்பறை, ஆம்பற் குழல், தண்ணுமை என்று

              பலவித இசைக்கருவிகள் குரவையால் பயன்பட்டன.

         5.குரவைச் செய்யுள் என்ற மரபு பாவியற்றும் புலமைத் திறத்தை வளரச் செய்ததனைக் குரவையினால் ஏற்பட்ட மிகப்பெரிய 

           நன்மையாகக் கருதலாம். இது கூத்து இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பெரிய வரவாகும்”3

    என்று குரவைக் கூத்தினால் நிகழ்ந்த நன்மைகளைப் பட்டியலிடுவர் பழந்தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள்.

துணங்கைக் கூத்து

            குரவைக்கு முன் தோன்றி குரவைக்கு முன்னரே வழக்கிழந்து போனது இக்கூத்து வகை. துணங்கைக் கூத்து அதிகம் போர்ச்செய்திகளை எடுத்துரைக்கப் பயன்பட்டது. இதில் மகளிர் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததைக் காணமுடிகிறது. பரத்தையர்கள் பாடும் துணங்கைக் கூத்து எனக் கலித்தொகையும் (70), பெண் வேடமிட்டு பெண்களுடன் சேர்ந்து ஆடுகின்றான் தலைவன் என்றும், பிறகு துணங்கைக் கூத்து ஆடியவுடன் ஆண் எனத் தெரிந்ததும் தலைவனின் ஆடை கிழிந்து போனதாகவும் கலித்தொகையின் 73ஆம் பாடல் எடுத்துரைக்கிறது. இரவு நேரத்தில் துணங்கைக் கூத்து நிகழ்த்தியதாகப் பதிற்றுப்பத்து (52) குறிப்பிடுகிறது.

வெறியாட்டு

            கூத்து வகைகளில் ஒன்றான வெறியாட்டு என்பது பெண்களுக்காக நிகழ்த்தப்படுவதாக இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பெண்களுக்குப் பேய் பிடித்து விட்டதாக நற்றாய் நினைத்துக்கொண்டு வேலனை அழைத்து வெறியாட்டு நடத்தினர். தலைவிக்குத் தலைவனுடன் காதல். தலைவி தலைவனை நினைத்து உருகுகின்றாள். தலைவனோ வருவேன் என்று சொல்லிச் செல்கிறான். தலைவனுடன் பேசாமலும், பார்க்காமலும் இருக்கும் தலைவி உண்ணாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றாள். எப்பொருளைப் பார்த்தாலும் தலைவனின் முகமே தெரிகின்றது. இவ்வாறு காதல் நோயால் வாடும் தலைவியின் நிலை தவறாக நற்றாயினாலும் செவிலியினாலும் புரிந்துகொள்ளப்பட்டு இது பேய் பிடித்ததின் விளைவு என்று எண்ணி வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

                        “கிழவோன் அறியா அறிவினள் இவளென

                         மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்” (தொல்.பொருள்.களவு.நூ.27)

             என்னும் தொல்காப்பிய நூற்பாவானது, நம் குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து நட்பு கொள்ளத் தெரியாத அறிவினையுடையாள் என நற்றாயும் செவிலியும் எண்ணிக் குற்றமற்ற சான்றோரிடத்துக் கூறுகின்றனர் என்று உரைப்பதைக் காணலாம்.

                        “மறிக் குரல் அறுத்து தினைப் பிரப்பு இரீஇ

                         செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் இறங்க

                         தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா” (குறும்.263:1-3)

          என்ற பாடலின் வழி வெறியாட்டானது, களவொழுக்கத்தில் உடன்பட்டு நிற்கும் தலைவியின் நிலையை அறியாத நற்றாய் வெறியாட்டு நிகழ்ச்சி நடத்தத் தயாராகின்றாள். வெள்ளாட்டின் குட்டியினது கழுத்தை அறுத்து, தினை அரிசி நிரம்பிய பிரம்பின் கூடையை வைத்து, ஆற்றின் நடுவே அமைந்த மணல் திட்டில், பல இசைக்கருவிகள் ஒலிக்க, வேலன் முதலியோரை ஆவேசித்துப் பல தெய்வங்களை வேண்டுவார்கள் என்று  உரைக்கின்றது.

            பாவை ஒன்றில் பொறி இணைத்து விட்டால் அது எவ்வாறு தானே இயங்கி ஆடுமோ அவ்வாறு வெறியாட்டு ஆடினார்கள் என்று அகநானூறு (98) கூறுகின்றது. திருமுருகாற்றுப்படையில் தெய்வம் ஏறப்பட்டு வெறியாட்டு ஆடப்படுவதையும் (273), இவ்வெறியாட்டு ஒரு விழாவிற்கு ஒப்பாகக் கருதப்பட்டதையும் அறியலாம்.

                        “பொய்மணல் வரைப்பில் கழங்கு படுத்து அன்னைக்கு

                         முருகு என மொழியும் வேலன் மற்று – அவன்” ( ஐங்குறு.249:1-2)

            புதிதாகக் கொண்டுவரப்பட்ட மணலைப் பரப்பி அதன் மேல் வெறியாட்டுக் களம் அமைக்கப்பட்டதையும் அன்னையால் வரவழைக்கப்பட்ட வேலன் மணலின் மீது கழற்சிக்காய்களைப் பரப்பிய பின் குறிபார்த்துத் தலைவியின் மெலிவிற்குக் காரணம் உரைப்பான் என்னும் செய்தி இடம்பெறுகிறது. இதன்வழி வெறியாட்டு ஒரு பேயோட்டும் சடங்காக நிகழ்த்தப்பட்டதை அறியலாம்.

                        “முதுவாய் பெண்டிர் அது வாய் கூற

                         களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி

                         வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து

                         உருவச் செந்திணை குருதியொடு தூஉய்

                         முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (அகம்.22:7-11)

              என்ற அடிகளில் முருகவேளை வழிபடுவதற்கு வேலனை வெறியாட்டு நிகழ்த்த நற்றாய் அழைத்தமை புலப்படுகின்றது. வெறியாட்டு குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களிலும் காணப்படுகின்றன. நற்றிணையில் 268, அகநானூற்றில் 370, ஐங்குறுநூற்றில் 245, 248, குறுந்தொகையில் 53, 360ஆம் பாடல் ஆகியவை வெறியாட்டு நிகழ்த்தப்படும் சூழலை மிக விரிவாகப் பேசுகின்றன. வேலன் முதலாயினாரிடம் வெறியாட்டு முதலிய செயல்களைச் செய்யுமாறு கூறி, முடிவில் இவளை அணங்கிய துறைவனைத் தாய் அறிந்து கொண்டாள் என ஆசிரியர் கூறுகின்றார். எனவே வெறியாட்டு நிகழ்த்தப்படுவது பெரும்பாலும் நோய்த்தீர்த்தற் பொருட்டு மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளதை இதன்வழி அறியமுடிகிறது.

          இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருப்பினும், துன்பப்பட்ட மனிதனுக்கு ஆடலும் பாடலும்தான்; என்றைக்கும் புத்துணர்வை தருகின்றன. மேலைநாடுகளில் ஏனோ தானோவென்று ஆடுகின்ற மனிதர்களுக்கு மத்தியில் ஒரு கோட்பாட்டோடு உன்னதமான கலையைப் போற்றவும் வளர்த்திடவும் தமிழன் செய்திருக்கிறான். நாகரீக தோற்றத்தினால் திரைப்படம், இணையம் இவற்றின் தொடர்பால் பழங்காலத்து செவ்வியக் கலையான இக்கூத்துகலைகள் மக்களிடம் வழக்கிழந்து போய்விட்டன. ஆனாலும், கிராமங்களில் நடைபெறவிருக்கும் திருவிழாக்களின் போது இக்கலைகளைக் காணமுடியும்.

சான்றெண் விளக்கம்:

1.கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், சென்னை – 13, ப.157

2.எஃப். பாக்கியமேரி, காலந்தோறும் தமிழர் கலைகள், அறிவுப்பதிப்பகம், சென்னை-14,ப.64

3.மேலது.ப.69                     

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

 

 

 

 

 

                                    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here