கோபல்ல கிராம நாவலில் குடும்ப உறவுகள்

இனியவை கற்றல்

            மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இஃது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிலவி வரும் சிறந்த அமைப்பாகும். மனிதன் பல நிறுவனங்களோடு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை  இணைத்துக் கொண்டாலும் குடும்பமே அவனது தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் குடும்பமே சமுதாயம் உருவாக அடிப்படையாக அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். மனிதனை விலங்கு நிலையிலிருந்து பிரித்துக் காட்டுவது குடும்பமே ஆகும்.

      “குடும்பமே சமுதாயத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாகயுள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை பாசம் போன்ற உன்னத அபலாசைகளும் தேவைகளும் முழுமையாகத் திருப்தி பெறுகிறது.”5 என்ற கருத்து குடும்பத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

            ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைந்து குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். குழந்தைகள் பெறும் போது குடும்பம் என்ற அமைப்பு முழுமை பெறுகிறது. குடும்பம் என்பது தந்தை, தாய், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்டது. அத்தகைய உறவுகளுடைய குடும்பம் தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என்ற இரு வகைகளில் சமுதாயத்தில் நிலவி வருகின்றது. தனிக்குடும்பம் என்பது சிலரையும் கூட்டுக்குடும்பம் என்பது பல நபர்களையும் கொண்டு விளங்குகின்றது. குடும்பங்களில் சிக்கல் எழுவது இயற்கை. அதனைக் களைத்து வாழ்ந்தால்தான் இன்பமும் அமைதியும் நிலைபெறும். குடும்பத்தின் இத்தகைய தன்மைகளைக் குறித்துக் கோபல்ல கிராமம் நாவல் வெளிப்படுத்தியுள்ள விதத்தை இப்பகுதி ஆராய்கின்றது.

கணவன் – மனைவி உறவு

            திருமணமான பின் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உறவு முறையே கணவன் – மனைவி உறவு ஆகும். ஒரு குடும்பத்திலுள்ள அன்புறவுகளில் கணவன் மனைவி உறவே சிறந்த உறவாகக் கருதப்படுகிறது. குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சமமாகவும் மதிப்புக் கொடுப்பவராகவும் விளங்க வேண்டும். விட்டுக் கொடுத்து அன்புகொண்டு, சந்தேகப்படாமல் இணைந்து வாழும் வாழ்க்கையே வெற்றி பெற்ற கணவன் – மனைவி வாழ்வாக அமையும். தான் என்ற எண்ணம் இன்றி இருவரும் செயல்பட வேண்டும். இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். உணர்வுகளுக்கு ஒருவருக்கொருவர் மதிப்பளித்து வாழ வேண்டும்.

        “குடும்பம் சமூக நிறுவனங்களில் இன்றியமையாதது, முதலில் தோன்றியது எனலாம். இக்குடும்பம் அமைய ஆணி வேராக இருப்பது திருமணம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியாக இல்வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். உலகில் முதன் முதலில் தோன்றிய உறவு கணவன் – மனைவி உறவாகும். குழந்தைப்பேறு கணவன் – மனைவி உறவை அடையாளப்படுத்துகின்றது.”6  என்ற கருத்து கணவன் – மனைவி உறவின் சிறப்பை பதிவு செய்துள்ளது.

            நாவலில் வரும் சொக்கலிங்கம் என்பவர் ஆசாரித் தொழில் செய்பவர். அவரது மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஊடல் காரணமாக, அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு அவர் மனைவி வெளியேறுகிறாள். ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள் நீண்ட நேரம் நடந்த களைப்புத் தீர, நீர் வேட்கைக்காக நீர்நிலையைத் தேடுகிறாள். நீர்நிலையைக் கண்ட அவள் நீரைப் பருகி தாகம் தணிகிறாள். அப்போது அங்கு வந்த கள்வன் ஒருவன், அவள் நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை புரிகிறான். மனைவியைக் காணாது அவளைத் தேடி வந்த ஆசாரி அதே இடத்திற்கு வருகிறார். அங்குத் தன் மனைவி இறந்து கிடப்படதைப் பார்த்து மிகுந்தத் துயர் அடைகிறார். தன் மனைவியின் இறப்பை ஏற்காது கதறும் கணவனின் நிலையை,

             “அட பாதகத்தி உனக்கு இப்படி ஒரு சாவு வரும்ண்னு நாநினைக்கலையே ஆத்தா… ஐயோ ஐயோ… என் உயிரு போகமாட்டேங்குதே; என் உயிரு போகமாட்டேங்குதே… அவர் தனது முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு அவள் மீது விழுந்து புழுவாய்த் துடித்தார்.”7 என்ற கருத்தானது வெளிப்படுத்தியுள்ளது. இதன்வழி, மனைவி இறப்பு எண்ணி தனக்கு இறப்பு வேண்டும் என்று எண்ணும் கணவனின் அன்பை அறிய முடிகிறது.

            கணவன் – மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்படக் காரணமாக இருப்பதில் சந்தேக உணவர்வும் ஒன்று. மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவனோ, கணவனின் ஒழுக்கத்தின் மீது மனைவியோ சந்தேகம் கொள்ளும் போது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. ஆசாரி மீது அவர் மனைவி கொண்ட சந்தேகமே பிரிவுக்கும் இறப்புக்கும் காரணமாயிற்று எனலாம். ஆசாரி தன் அத்தை வீட்டுப்பெண் பூப்புக்கு நகை செய்து எடுத்துச் செல்வதை அவர் மனைவி விரும்பவில்லை. மீறி கணவன் (ஆசாரி) சென்றதையும் அதனால் அவருக்கும் அப்பெண்ணுக்கும் தவறான உறவு என்று எண்ணியும் ஆசாரியின் மனைவி ஊடல் கொண்டு பிரிகிறாள். இதனை,

             “என் அப்பா கூடப்பிறந்த அத்தவீடு மஞ்சனங்கிணறுதல இருக்கு. எனக்கு அங்கனே ஒரு முறைப் பொண்ணு உண்டும். அது பூத்து மூணுமாசமாச்சி. அது ஒரு நகை, செஞ்சி கொண்டு போனேன். இவளுக்கு அது பிடிக்கலை. பிடிக்கலைண்ணு வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். சொல்லியிருந்தாக் கூட நா செஞ்சிருக்கமாட்டேன். நா ஒண்ணும் ஊராருக்குச் செய்யலையே; செய்ய வேண்டியவுகளுக்குச் செய்யணுமில்லயா? நாளைப் பின்னே அவுகளும் வேண்டாமா? ஆனால், இவ என்னை அப்படி நினைக்கல, ஒருமாதிரி நினைச்சிட்டா வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரே மோடி.”8  என்ற கருத்தானது வெளிப்படுத்தியுள்ளது. இதன்வழி சந்தேகம் கணவன் – மனைவியிடையே பிரிவுக்குக் காரணமாவதை அறிய முடிகிறது.

            இறந்த ஆசாரியின் மனைவியைப் புதைக்கின்றனர். புதைக்கும் போது ஆசாரி மண் தள்ளுகிறார். மண்ணைத்தள்ளிய ஆசாரி, தன் மனைவி அன்பைக் கொடுத்தான், நான் அவளுக்கு மண்ணைத் தள்ளுகிறேனே! என்று வருத்தம் கொள்கிறார். இதனை,

“குழிக்குகுள் சடலத்தை இறக்கினார்கள் மண்ணைத் தள்ளி மூடுவதற்கு முன் ஆசாரியார் இரண்டு கைகளாலும் மூன்று தடவை மண் அள்ளிப்போட்டார். தாயீ, உன் கையிலே எனக்கு சோறு போட்டே; நா உனக்கு மண் அள்ளிப் போடுதேன் என்றார்.”9   என்ற கருத்தின் வழி ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

பெற்றோர் – பிள்ளைகள் உறவு

            கணவன் – மனைவி உறவு மூலம் மனைவி குழந்தை பெறும் போது அக்குழந்தை ஆணாக இருப்பின் மகன் என்றும், பெண்ணாக இருப்பின் மகள் என்றும் உறவு நிலைச் சுட்டப்படுகிறது. ஒரு சிறந்த சமுதாயத்தையும் எதிர் காலத்தையும் உருவாக்குவதில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகள் இடையே இணக்கமான உறவு இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தைப் பெற்றோர்கள் நல்க வேண்டும். அதுபோலக் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடாமல் காக்க வேண்டும்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.”10  

என்ற குறளும்,

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்”11

         என்ற குறளும் தந்தை மகனுக்குச் செய்யும் கடமையையும் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையையும் பதிவு செய்துள்ளது.

            ஆந்திர தேசத்திலிருந்து குடிபெயர்ந்து கம்மவர்கள் தமிழ்நாட்டிற்கு வரக் காரணம் முஸ்லீம்களின் கொடுமையே ஆகும். அத்தலைமுறையில் அவ்வினக்குழுவின் தலைமை வீட்டில் இருந்த சென்னா என்ற பெண்ணின் அழகில் மயங்கிய முஸ்லீம் ராஜா அவளைத் திருமணம் செய்து கொள்ள எண்ணியதே இடப்பெயர்வுக்குக் காரணம் ஆயிற்று. முஸ்லீம் ராஜா பெண் கேட்க வேறு வழியின்றி அவர்கள் சம்மதிக்கின்றனர். அப்போது சென்னாவின் தாய் மகளின் வாழ்வை எண்ணி வருந்தும் அன்பை,

        “தனது மகள் இவ்வளவு அழகாய் இருக்காளே என்று பெருமைப் பட்ட சென்னாவின் தாய், ஐயோ இவள் ஏன் இவ்வளவு அழகோடு பிறந்தாள் என்று கண்ணீர் விட்டாள்.”12 என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது. இதன் வழி, மகளின் அழகு அவளுக்கு ஆபத்தாய் முடிந்ததை எண்ணியும், அவளின் வாழ்க்கைத் துன்பத்தில் சிக்குவதை எண்ணியும் வருத்தம் கொள்ளும் தாயின் சிறப்பை அறிய முடிகிறது.

            கோபல்ல கிராமத்திற்குப் பக்கத்து கிராமத்து இளைஞன் ஒருவன் சிறு வயது முதலே தீய வழியில் சென்றான். மேலே குறிப்பிட்ட ஆசாரியின் மனைவியை நகைக்கு ஆசைப்பட்டுக் கொன்றவன் இவனே. அவனின் தாய், இவன் தீய வழியில் செல்வதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டாள். வீட்டில் அவன் தாய் உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களைத் திருடிச் செல்வான். தடுக்கும் தாயை அடிப்பான். மகனின் இத்தகைய அவலப் போக்கை எண்ணி வருந்தும் தாயின் நிலையை,

“பாவீ, உனக்கு இரக்கம் இல்லையாடா?

என் எலும்பை சந்தனமாய் அறைச்சி அரும்பாடு பட்டு

உன்னை வளர்த்தனேடா; பெத்த தாயைக் கை நீட்டி

அடிக்கெயடா பாவி என்று கதறுவாள்.”13

என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது. இதன் வழி, தீய வழிக்குச் செல்லும் மகனைத் தடுக்கும் தாயை மகன் அடித்துத் துன்புறுத்தும் அவலத்தை அறிய முடிகிறது.

பாட்டி – பேத்தி உறவு

            திருமணத்தின் மூலம் கணவன் – மனைவி உறவு பெறும் இருவர்களுக்குப் பிறக்கும் மகன், மகள் வளர்ந்து திருமணம் செய்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு தான் தாத்தா – பாட்டி, பேரன் – பேத்தி உறவு முறையாகும். அதாவது, ஒரு தலைமுறை இடைவெளி விட்ட நபர்களுக்குள் ஏற்படும் உறவு ஆகும். தந்தை – தாய்க்கும் அவர்களின் பிள்ளைகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு முறைதான் பேரன் – பேத்தி உறவு முறையாகும். திருமணமானப் பெண்ணின் தாய் தந்தைக்கும் இஃது பொருந்தும்.

            ஆந்திர தேசத்திலிருது முஸ்லீம்களின் கொடுமையால் இடம் பெயர்ந்த கம்மாளர்கள் தமிழ்நாட்டில் கோபல்ல கிராமத்தை உருவாக்கினர். அவர்கள் குடிபெயரக் காரணம் அவர்களின் இனக்குழுத் தலைமைக் குடும்பத்தில் இருந்த சென்னா என்ற அழகுப் பெண்மணிதான். வியாபாரிகளைப் போல வந்த முஸ்லீம்கள் அவள் அழகை வியந்து ராஜாவிடம் கூற, படையுடன் வந்து அவளைக் கட்டாயத் திருமணம் செய்ய முயல்கிறான். அம்மக்களும் சம்மதம் தெரிவிப்பது போல் தெரிவித்து இரவில் ஒவ்வொருவராகத் தப்பித்து ஊரை விட்டு வெளியேறுகின்றனர். ராஜாவின் படைகள் அவர்களைப் பின் தொடர அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகின்றனர். நீண்ட தூரம் நடந்த களைப்பால் சென்னாவின் பாட்டியால் நடக்க முடியவில்லை. சென்னாவின் தந்தை பக்கத்தில் ஊர் இருந்தால் பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம் என்று கூற, சென்னாவோ பாட்டியைப் பிரிய விரும்பாது யாரும் பிரியக்கூடாது. பாட்டியை விட்டுப் போகலாகாது என்று கூறும் பாசத்தை, “அப்பா, இந்தக் கணத்தில் நாம் பிரியவே கூடாது; நமக்கு சாவு வந்தாலும் சரி, வாழ்வு வந்தாலும் சரி; நமக்கு எல்லாம் அவனே துணை.”14  என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது.

கூட்டுக்குடும்ப அழிவு

            ஒரு குடும்பத்தில் உறவுடைய நபர் பலர் சேர்ந்து வாழ்வது கூட்டுக்குடும்பம் ஆகும். ஆலமரம் போன்றது கூட்டுக் குடும்பம் ஆகும். ஒரே இரத்தப் பந்தம் உடையவர்கள் ஒன்றாக வாழ்வது இவ்வமைப்பு முறையாகும். இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணத் தம்பதியர்கள் வாழ்வர். இதுவே காலத்தால் முற்பட்ட குடும்ப அமைப்பு முறையாகும். அதாவது, பெற்றோர்கள் அவர்களது மகன்கள், மகள்கள், மகன்களின் மனைவிகள், அவர்களது குழந்தைகள் என்று அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கும் அமைப்பு முறையே கூட்டுக்குடும்பம் ஆகும். இங்குதான் மரபும், பண்பாடும் காக்கப்படுகின்றன.

“ஒரே மரபு வழி சார்ந்த இரத்த உறவுடைய இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே வீட்டில் ஒரே தலைமையின் கீழ் தங்களின் மனைவியர்களுடனும் குழந்தைகளுடனும் கூடி வாழ்தலையே கூட்டுக் குடும்பம் என்பர்.”15 என்ற கருத்துக் கூட்டுக் குடும்பத் தன்மையைப் பதிவு செய்துள்ளது.

            தொழில் மயமாதலின் விளைவாலும், தான் தனது என்ற நிலையாலும், ஒருவர் உழைப்பில் பலர் வாழும் நிலையாலும் போன்ற பல காரணங்களினால் கூட்டுக் குடும்பம் சிதைவிற்கு உள்ளாகிறது.

                 “கூட்டுமனித சக்தியின் உழைப்பை நம்பி இருந்த காலத்தில் கூட்டுக் குடும்பமே பிரதானமாக இருந்தது. வரவர கூட்டுக்குடும்பங்கள் உடைந்துபோக ஆரம்பித்தன. தாயாதிகள் பாகப் பிரிவினை செய்து கொள்ள ஆரம்பித்தார்கள்.”16 என்ற கருத்துக் கூட்டுக் குடும்ப அழிவிற்குப் பாகப் பிரிவினையும் ஒரு காரணமாக அமைவதைக் குறிப்பிட்டுள்ளது.

தொகுப்புரை

குடும்பமே சமுதாய அமைப்புகளில் மிகச்சிறந்த பண்பாட்டின் கருவூலமாக விளங்கும் அமைப்பாக உள்ளது.

கணவன் – மனைவி உறவுக்குள் சந்தேகம் தோன்றக் கூடாது. தோன்றினால் இருவரும் பேசி அதனைத் தீர்த்துக் கொள்வதுதான் நலம்.

 தாய்மையே உறவுகளில் தலையாய உறவாகும். தன் பிள்ளைகள் ஒழுக்கம் தவறும் போது, தீயநெறியைச் சேரும் போது, நல்ல வாழ்க்கை அமையாத போதும் வருந்துவதோடு திருத்தவும் முயற்சிக்கும் சிறந்த உறவு.

பாட்டிக்காகத் தன் உயிரையும் துச்சமாக எண்ணும் பேத்தி உறவைப் பற்றியும், சொத்துப் பிரச்சனை கூட்டுக் குடும்ப அழிவிற்கு அடிப்படையாக அமைவதையும் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கங்கள் அனைத்தும் கோபல்ல கிராமம் புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே ஆகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திரு.பொ.சிவலிங்கம்

ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here