கிருகபதி – கிருகிணி |கவிதை|பிரபுவ

கிருகபதி - கிருகிணி

கிருகபதி – கிருகிணி

இரவெல்லாம் ஜொலித்த

விண்மீன்களை மறைத்து

காரிருளை விளக்கிட

கீழ்திசையில் சுடர்மிகும்

பொலிவுடன் ஒளிர்ந்தே

புதுப்பிறவி எடுத்து

பிறந்தது ஆதவன்!

 

எங்கோ பிறந்து

எங்கோ வளர்ந்து

நிலையில்லா உலகிலே

நிலையில்லாத ஒன்றைத்தேடி

நித்தம் நித்தம்

நிலையில்லாது அலைந்து

அநாதையாய் இறுதியில்

ஆதரவில்லாது  இறந்திட்டார்

அங்கே ஒருவர்.

 

இழவுவீட்டில் ஒலித்ததே!

தாரை தப்பட்டைகளின் சத்தம்

மெல்லிய கீதமாக இசைத்ததே

எங்கோ தூரத்திலிருந்து.

 

பத்துவீடுகள் தள்ளியிருக்கும்

பெரியதொரு மழைமரத்தின்

கிளையிலே குடியிருந்த

உயிரினங்கள் யாவுமே

பொழுது விடிந்தது;

பொழப்பை பாருங்களென்றே

ஆர்பரித்து கூச்சலிட்டது.

 

பக்கத்து வீட்டு நீர்க்குழாயில்

வைத்த குடம் தண்ணிர்

வழிந்து ஜோவென்று

அழுது கொண்டிருக்க,

 

வீட்டின் உள்ளே உள்ள

மின்விசிறியானது

இளந்தென்றல் காற்றை

நுழையவிடாது

ட்டட, ட்டட என்றே

தடைபோட்டே தாளமிட்டது.

 

கடந்துசெல்லும் நேரத்தை

காணமுடியாது போயினும்

காதுகளால் உணர்த்திடவே

டிக், டிக், டிக் என்று

கடிகார முள் ஓசை

செவிகளை செவிடாக்காமல்

ஓசை எழுப்பியது.

 

சமையலறையில் மிக்சி

ஒருபுறம் உய்ய்ய்ய்ய்…

என்று எரிச்சலூட்டிட

குக்கர் மறுபுறம்

உச்ஷ்ஷ்ஷ்…

என்று கடுப்பேத்தியது.

 

இப்படி அனைத்தையும்

கேட்டு கொண்டே

படுக்கையிலே இருந்து

பாதி துயில் தெளிந்து

மீதி துயில் தெளியாது

கிரக்கத்தில் இருந்தார்

கிருகபதி என்னும்

மாண்புமிகு தலைவன்!

 

அப்போது கிருகிணி என்னும்

மானமிகு தலைவி

பக்கம்வந்து பக்குவமாய்

படுக்கையிலே அமர்ந்து

இதமாக உரசினாள்!

இனிதே காலை

ஸ்பரிசத்தை அனுபவித்திட.

 

பட்டென்று கோபம்

பத்திக்கொண்டு வந்திடவே!

எழு, தூரம் சொல்!

தூக்கம் கலைக்காதே!

தொலைந்துபோ, சனியனே!

என்று அப்போது

சிடுசிடுத்தான் கிருகபதி.

 

என்னது? எங்க? கொஞ்சம்

இன்னொருமுறை

சொல்லுங்க? பார்க்கலாம். 

உம்பல்லை உடைத்து

உம்கையில் கொடுத்திடுவேன்!

 

மாலைநேர மயக்கத்துக்கு

மதுவாகிய நான்!

காலைநேரம் வந்ததும்

சனியனாகி விட்டனோ!

 

மாலைமாயமாய் போனதும்

காலை பொழுதில்

காரியமொன்றும் இல்லாதுபோமோ!

காரியம் ஆகும் வரை

கண்ணே! கண்மணியே!

கலைமகளே! கட்டிக்கரும்பே!

என்றே என்னை வர்ணித்து

புகழ்பாடி கால்களை

பிடித்து அமுக்கி

காரியம் சாதித்திட்டீர்!

 

காரியம் முடிந்ததும்

ஏனோ இப்போது

கண்ணால் பார்க்கவும்

கதியில்லாத கலையிழந்த

மகளாகி போனேனோ!

 

நீர்! நல்லா ஞாபகம்

வைத்துக் கொள்ளும்!

மாலைநேரம் மீண்டுவரும் – உமக்கு

மதி மயங்கும் மயக்கமும் வரும்

எனக்கு நல்ல தூக்கமும் வரும்.

 

அப்போது உம்மைப்

பார்த்துக் கொள்கிறேன்.

எட்டியுதைக்கும் கழுதையா மாறியே

எட்டி எட்டி உம்மை உதைக்கிறேன்.

வாருங்கள் பார்க்கலாம் என்றே

மணம்புரிந்த மணவாளனிடம்

மல்லுக்கு நிற்கபோவதில்லை.

 

மனதில் தோன்றியதை

மனதோடு புதைத்துச்

சொன்னாள்.

 

ஆசையாய் அருகில் வந்தால்

ஆசையை காட்டும். அல்லவே!

அமைதியாய் இருந்திடும்.

 

வன்சொல் தவிர்த்து

இன்சொல் பேசிடுவீர்!

இன்சொல்லே மீண்டும்

உம்மை தேடி வரும்.

 

காரண காரியம் ஏதுமின்றியே

வாழ்வதாகவே உறுதிக்க்கொண்டு

கரம்பிடித்தீர்; கண்அவனாக.

பிரபஞ்சம் முழுவதுமுள்ள

இன்சொல் யாவும்

இனிதே வந்து சேரும் உம்மையே!

என்றாள் கிருகிணி!

 

 குறிப்பு

கிருகபதி – இல்லறத்தான்; குடும்பத்தலைவன்

கிருகிணி – இல்லாள்;

குடும்பத்தலைவி

மழைமரம் – தூங்கமுஞ்சி மரம்

ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712.

karpraba@gmail.com

 

மேலும் பிரபுவ அவர்களுடைய படைப்புகளைப் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here