கலைஞர் நூற்றாண்டுக் கவிதை | இளங்கவி ச. வாசுதேவன்

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை

(விருத்தப்பா – எண்சீர் விருத்தம்)

 
காலத்தால் வற்றாத கடலின் நீரே
கற்பனைகள் ஊறிவரும் கவிதை நீரே
ஞாலத்தில் புகழ்படைத்த தலைவர் தன்னுள்
நற்றமிழில் தென்றலென பேசும் அண்ணல்
காலமெனும் சக்கரத்தில் ஏறி நின்று
கனிவுடனே உலாசெல்லும் இனிய நெஞ்சன்
கோலமுடன் உரைவீச்சு நடத்தும் அன்பன்
திருக்குவளை மண்ணீன்ற தமிழர் நண்பன்!

 

காலையில் உதிக்கின்ற கருத்துப் பூத்தீ!
கரும்பினிலே இனிக்கின்ற சாரும் ஆனான்
சோலையில் விளையாடும் சிவந்த வேங்கை
சுந்தரனாய் அரசியலைக் காத்த வேந்தன்
மாலையில் வெளியாகும் வீண்மீன் தோழன்
மகிழ்வினையே தொண்டர்க்கு வழங்கும் ஆசான்
சாலையில் நடந்துவரும் தங்கத் தேரு
சரித்திரத்தில் யாருமில்லை என்றே கூறு!

 

வள்ளுவருக்குக் கோட்டத்தை அமைத்துத் தந்தார்
வானளவு வள்ளுவனார் சிலையை வைத்தார்
உள்ளுவதை உயர்வாக எண்ணும் வேங்கை
உள்ளத்தில் தமிழ்கொண்டு அருளும் செங்கை
கொள்கையிலே பெரியாரை இணைப்பார்; அந்த
பெரியாரின் கோட்பாட்டைப் பிடிப்பார் நன்றாய்
கள்ளமிலா மானிடருள் இவரும் ஒருவர்
கலைஞரெனும் பெயர்கொண்ட இன்பத் தமிழர்!

 

வற்றாத பாக்களுக்கும் உரைக ளுக்கும்
வழித்தோன்றல் இவர்தானே தமிழர் நெஞ்சில்
கற்றழியாய் குடி கொண்ட கழகத் தலைவர்
கன்னித்தமிழ் திருவாரூர் பிறந்த இளைஞர்
கொற்றவனாய் சிலகாலம் நாடு காத்த
கோடியான தலைவரிலே இவர்பே ருண்டு
நற்றமிழாள் ஈன்றெடுத்த அழகுச் செண்டு!

 

பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி
பேச்சினிலே இடி முரசை அறையும் நம்பி
ஊரறிஞர் அன்பழகன் போற்றும் தோழன்
உத்தமராய் தமிழ்நாடு ஆண்ட தீரன்
பாரறிஞர் பல்லோரும் ஏத்தி ஏத்தி
பாவலர்கள் பாமாலை சாற்றிப் போற்றும்
வீரறிஞர் இளநகையே முகமாய் நிற்கும்
முத்தமிழின் காவலரே வாழ்க! வாழ்க!!

 

திருக்குவளை மாகடலில் விளைந்த முத்து
திருக்குறளும் காப்பியமும் இவரின் சொத்து
கருத்துக்கள் கூறுகின்ற கேணி தானே
கற்பனைகள் பிறப்பெடுக்கும் வாணி தானே
விறுப்புடனே கவியரங்கம் பலவாய்க் கண்டார்
வெற்றிகளை மாலையாய் ஏற்றுக் கொண்டார்
மறுப்பொன்றும் பேசாத மனித மாண்பு
மகத்துவமே இவர்வடிவாய் விளங்கும் பண்பு!

 

அவ்வையெனும் தமிழ்க்கிழத்திச் சொல்லி வைத்த
அறக்கருத்து மிக்கதமி ழில்லை என்று
அவ்வையோடு வள்ளுவனார் கம்பன் தன்னை
வாஞ்சையுடன் இளங்கோவின் சிலம்பு கொண்டு
இவ்வூரைத் தமிழுக்கு கொடுத்த எங்கள்
கலைஞர்பு ழெந்நாளும் அழியாது என்று
கொவ்வைத்த மிழ்கூறும் புலவர் நெஞ்சில்
புகுந்திட்ட தமிழ்க்கோவே வாழி வாழி!

 

குமரியிலே குறள் தந்த வள்ளுவர்க்கு
குரல் போலே சிலை வைத்தீர் எவரும் காணார்
அமரர்போல் அரசாலும் வானூர் எல்லாம்
அன்பான மலர்கொண்டு போற்று வாராம்
சமரென்னும் அரசியலில் களமும் கண்ட
சமரசனே சக்தியனே சான்றோர் நெஞ்சில்
இமயம்போல் உயர்ந்திட்ட உந்தன் அன்பு
இனித்திடுமே எந்நாளும் அதுவே தெம்பு!

 

கலையோடும் இலையோடும் புகுந்து சென்று
கதைவசனம் பலவோடும் பொழுதும் வாழ்ந்து
மலையான தமிழ்க்கவிதை மரபைக் கொண்டு
மானமுள்ள தமிழுக்குச் செய்தாய் தொண்டு
வலைவீசி பிடித்துவிட்டாய் சொல்மீன் தன்னை
வலைத்திட்டாய் அனைவரையும் கருத்தால் பேச்சால்
உலைவிளையும் நெற்கதிரும் நீரும் நீதான்
உலகாள உதித்திட்ட சூரியன் நீதான்!

 

சங்கப்பா மிளிருகின்ற சபைகள் தோறும்
சரித்திரத்தின் நாயகனே உந்தன் தேரும்
எங்களது வீதிகளில் ஓடும் நாளும்
எழிலான தேமாங்காய் புளிமா தேடும்
மங்காத புகழ்படைத்தப் பரிதி உன்னை
மகிழ்ச்சியுடன் புகழ்ந்தேத்தும் சிறுவன் என்னை
மங்காத சூரியனாய் ஒலி கொடுத்து
நூற்றாண்டு கண்டவரே காப்பீர் நன்றாய்!

 

இளங்கவி ச வாசுதேவன் (நடுநாட்டுத்தமிழன்)
முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி,
தமிழ்ப்பற்றாளன்,
குடியநல்லூர் கிராமம்,
வேங்கைவாடி அஞ்சல்,
கள்ளக்குறிச்சி வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 206
மின்னஞ்சல் : shankarvasu98@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here