“ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடை ஆளுமை”

        ஆதிகாலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்தான் கண்டதை உண்டான் மரப்பொந்து, குகை எனத் தங்கி தட்பவெப்பங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான்.  இவ்வுலகத்தில் நிலைபெற, கரடு முரடாக இருந்த மலையைக் காடாக்கினாhன்.  காட்டை வயலாக்கினான்.  உடலுழைப்பையே அதிகமாகக் கொடுத்துப் பல நிலங்களைத் தனதாக்கிக் கொண்டான்.  அந்நிலங்களில் மக்கள் பலர் வேலைச்  செய்திருப்பார்கள்.  அம்மனிதனே தலைவனாகியிருப்பான்.  ஐந்திணை நிலத்தில் உள்ள மக்களின் செயல்பாட்டுத் திறனுக்கேற்ப சிறுகுடித் தலைவனே பின்னாளில் மன்னனாகியிருப்பான்.  “தமிழகத்தில் ஒரு மன்னரின் கோலில் கீழ் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை முல்லை நிலத்திலேயே தோன்றியிருக்கக்கூடும்”1 என டாக்டர் ந. சுப்ரமண்யன் கூறுகிறார். முல்லை நிலத்தில் உள்ள மக்களுக்கும் மன்னர்களுக்கும் இருக்கும் தொடர்பே  இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.  முல்லை நிலத்தில் ஆநிரைகளைக் கவர்தலும் மீட்டலும் நடைபெற்றிருக்கிறது.  இதன் அடிப்படையிலேயே மன்னர்கள் இருவருள்ளும் சண்டை நிகழ்ந்து வந்துள்ளது என்பதை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

            தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பெரும்வேந்தர்களால் ஆளப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி.  பெரும் நிலப்பரப்பு, வீரம், அனைத்து நிலங்களும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மனத் திண்ணம் போன்றவையே இம்மூவேந்தர்களையும் பேரரச மரபாக வரலாறு சுட்டுகின்றது.  பரந்து விரிந்த இம்மண்ணிலே எத்தனையோ  தலைவர்கள் தோன்றியிருப்பார்கள்.  அவர்களும் தனக்கென ஒரு நிலம், மக்கள்,  சமுதாயத்தை உருவாக்கி நலம் பெற ஆட்சி நடத்தியிருப்பார்கள்.  வல்லமை உள்ள மன்னர்கள் குறுநில மன்னர்களை வலிய போருக்கு அழைத்துத் தோற்கடித்துள்ளார்கள்.  அந்நிலத்தில் உள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். “அரசன், இறைவன், காவலன், மன்னன், வேந்தன் ஆகிய சொற்கள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக ஆட்சி பெற்றிருந்த போதிலும் மன்னன், வேந்தன் என்ற இவ்விரு சொற்களின் ஆளுமையே மிகுதி.  மன்னர் என்ற சொல் குறுகிய மன்னனையும், வேந்தன் என்ற சொல் முடியுடை ஆட்சித்தலைவராகிய சேர, சோழ, பாண்டியரையும் குறிக்கின்றது”2 என அரங்க. இராமலிங்கம்  அரசர்களின் பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகின்றார்.  அப்பேரரசர்கள் போர் நடக்காமல் இருக்க அக்குறுநில மன்னர்களைக் கப்பம் கட்டும்படி வலியுறுத்தினார்கள். 

இப்படிப் பெயரே இல்லாமல் குணமும் பண்பும் நிறைந்த எத்தனையோ சிற்றரசர்கள் வரலாற்றில் இடம் பெறாமல் போயிருக்கிறார்கள்.  அந்த வகையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடைத்திறனும், ஆளுமையும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

மன்னன் நல்லியக்கோடன்

            ஆற்றுப்படை – வழிப்படுத்துதல், நெறிப்படுத்துதல், பரிசில் பெற்ற பாணன் ஒருவன் வறுமையில் வாடும் மற்றொரு பாணனிடம் ஓய்மானாட்டு நல்லியக்கோடனிடம் பரிசிலைப் பெறுமாறு கூறுகின்றான்.  தொண்டடை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் ஓய்மான் நாட்டில் மாவிலங்கைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன்.  இவனுடைய ஆட்சியின் கீழ் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் போன்ற நகரங்கள் அடங்கியிருந்தன.

            “உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்” (சிறுபாண். 122)

            தமிழகத்தில் சிறந்து விளங்கிய குடிகளுள் ஒன்று ஓவியர்குடி ஆகும்.  ஓவியர் குடியில் பிறந்ததனால் நல்லியக்கோடன் ஓவியர் பெருமகன் எனப்பட்டான்.  ஓவியர் குடியே பின்னாளில் ஓய்மாநாடு என்றானது.  இவ் “ஓவியர் குடி நாகர் குடியினுள் ஒரு பிரிவாகும்”3 என நாராயண வேலுப்பிள்ளை கூறுகிறார்.  நீண்ட மூங்கில் மரங்கள் நிறைந்து விளங்குகின்ற மலையை உடையவன் நல்லியக்கோடன் ஆதலின் இவனைக் குறிஞ்சி நிலத்தலைவன் எனச் சான்றோர்கள் கூறுவார்கள்.  வீரத்திலும் குணத்திலும் சங்ககால மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  கடையெழு வள்ளல்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்தவன்.

சேர, சோழ, பாண்டியர்கள்

            பெரிய வாயையுடைய எருமை, கொழுத்த மீன்கள்  காலடியிலேயே பட்டு நசுங்கும்படி வயலியே இறங்கி நடந்தது.  அங்குள்ள செங்கழுநீர் மலர்களை மேய்ந்தது.  மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கின்ற ஒரு பலா மரத்தின் நிழலை அடைந்தது.  தேன் கமழும் அந்தச் செங்கழுநீர் மலர்களை மென்று கொண்டே காட்டு மல்லிகைகள் நிறைந்த படுக்கையிலேப் படுத்துக் கொண்டது.

                        “கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்

                        கழுநீர் மேய்ந்த கடவாய் எருமை

                        பைங்கறி நிவந்த பலவின் நிழல்” (சிறுபாண். 41-43)

இவ்வடிகளால் எருமையின் செயலை எடுத்துக் காட்டுவதன் வாயிலாகச் சேர நாட்டின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் விளக்குகிறார்  ஆசிரியர். கொற்கையின் செல்வம் முத்தும் உப்புமாகும்.  மதுரை மாநகரமானது மகிழ்ச்சி மிகுந்திருக்கின்ற மக்கள் வாழும் தெருக்களையுடையது என்றும்,   தமிழ்சங்கம் நிலைபெற்று மதுரையில் வளர்ந்தது எனவும், பாண்டிய நாட்டின் வளத்தையும், தமிழின் சிறப்பைப் பற்றியும் ஆசிரியர் உரைக்கின்றார்.

              “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்

               மகிழ் நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 66-67)

      மேலும் வயல்களிலே தாமரைகள் பூத்திருக்கின்றன.  அத்தாமரைகளிலே வண்டுகள் தங்கள் பெடைகளைத் தழுவிக் கொண்டு சீகாமரம் என்னும் பன்ணைப் பாடிக் கொண்டிருக்கின்றன எனச் சோழ நாட்டின் வளத்தைக் குறிப்பிடுகிறார்.  நல்லியக்கோடனுடைய நாட்டிலே  எண்ணற்ற செல்வங்கள் இருந்தன,  வளமிகுந்த சேர பாண்டிய சோழ நாட்டைக் காட்டிலும் வற்றாத செல்வங்கள் குவிந்திருந்தன.  ஓய்மானாடே உயர்ந்த செல்வமுடைய நாடு என்பதைக் குறிக்கவே முடியுடை வேந்தர்கள் மூவர் நாட்டையும் புகழ்ந்து பாடுகின்றார்”4 என சாமி சிதம்பரனார் கூறுகின்றார்.

            நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடனின் சிறப்பைக் கூறும்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வலிமை, வளத்தை விட நல்லியக்கோடனின் வளம் மேன்மையுடையது என்பதை அறியலாம்.

கடையெழு வள்ளல்கள்

            சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமல்லாமல் கடையெழு வள்ளல்களை விடவும் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறந்தவனாகவே விளங்குகின்றான்.

            “பெருங்கல் நாடன் பேகன்

            மறம்பின் கோமான், பாரியும்

            கழல்தொடித் தடக்கை, காரியும்

ஆர்வ நன்மொழி, ஆயும்

            அரவக் கடல்தானை அதிகனும்   

            நளிமலை நாடன், நள்ளியும்

            ஓரிக் குதிரை, ஓரியும்” (சிறுபாண். 85-113)

            பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியமான், நள்ளி, ஓரி போன்ற ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையைப் புகழ்ந்த பின்னர் இவர்களுக்குப் பிறகு நல்லியக்கோடன் ஒருவனே நடத்தி வந்தான் என ஆசிரியர் குறிப்பிடுவது நல்லியக்கோடனின் உன்னதக் கொடைத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

வறுமையிலும் வண்மை

            நாட்டிலே என்னதான் வாரிக் வாரிக் கொடுக்கும் மன்னன் இருந்தாலும், தவறாது பொழியும் மழை பொய்த்து விட்டால் மக்களால் என்ன செய்ய முடியும்?  தன்னை நாடி வந்தவர்களுக்கு கைமாறு பார்க்காமல் உதவின நல்லியக்கோடனுடைய ஓய்மானாட்டிலும் வறட்சியால், பஞ்சத்தால் வறுமை உண்டாயிற்று,

            “வளைக்கைக் கிணைமகள், வள்ளுகிர்க்குறைத்த

            குப்பை வேளை உப்பிலிவெந்ததை,

            மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து” (சிறுபாண். 136-138)         

பசியினால் வருந்தி வாடுகின்ற கிணைவாசிப்போன் மனைவி அவள் வீட்டிலே உணவை ஆக்குவதற்கு ஒரு பண்டமும் இல்லை. உடனே அவள் குப்பையிலே பயிரான வேளைக் கீரையைக் கூர்மையான நகத்தினால் கிள்ளியெடுத்தாள்.  உப்பில்லாமல் வேகவைத்தாள். அண்டை வீட்டார்கள் அதைப் பார்த்தால் பரிகசிப்பார்களே என்று நாணமடைந்து வாயில் கதவைச் சாத்திக் தாளிட்டுக் கொண்டாளாம்.  வீட்டினுள்ளே நிறைந்த தன் சுற்றந்துடன் உண்டாள் என ஆசிரியர் குறிக்கின்றார்.  சேர, சோழ, பாண்டியர் மற்றும் கடையெழு வள்ளல்களின் சிறப்பையும், கொடைத் திறனையும் கூறிய ஆசிரியர் இப்படிப்பட்ட வறுமை நிலையையும் கூறியுள்ளார்.  தன் மக்கள் பஞ்சத்தால் வாடி வருந்தும் போது நல்லியக்கோடனே நேரில் வந்து நலம் விசாரித்தும், அக் குடும்பத்திற்கு தேவையான கொடையளித்தும் இருக்க வேண்டும் என்பதால் தான் ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.  மன்னனே நேரடியாக மக்களின் குறையைக் கேட்டுத் தீர்த்து வைத்துள்ளான் என்பது நல்லியக்கோடனின் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது.        

விருந்தோம்பல் பண்பு

            தன்னை நாடி வந்தவர்களுக்கு வயிராற உணவைக் கொடுத்தவன் நல்லியக்கோடன்.  நெய்தல் நிலத்திலே வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள்.

            “வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்” (சிறுபாண். 163) வறல் குழல் என்பது காய்ந்த கருவாட்டைக் குறிக்கும். இந்தக் கருவாட்டுக் குழம்பினைச் சுடச்சுட ஒவ்வோரிடத்தும் பெற்றுக் கொள்ளலாம்.  வேடர் குலப் பெண்கள் சோற்றோடு புளியைச் சேர்த்துச் சமைப்பார்கள். தான் வேட்டையாடிக் கொண்டு வந்த ஆமானையும் சமைப்பார்கள்.  புளிச் சோற்றோடு ஆமான் கறியையும் விருந்தினர்க்கு இட்டுத் தானும் உண்டார்கள்.  

            உழவர் குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள்.  வயல்களிலே பிடித்த நண்டையும், காட்டிலே விளைந்த பீர்க்கங்காயையும் சேர்த்து சமைத்தார்கள் என்பதை,

            “இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த    

            அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு,

            கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவிர்;” (சிறுபாண். 193-195)

என ஆசிரியர் கூறுகிறார். இவ்வாறு எயினர்கள், வேடர்கள், உழவர்கள் ஆகியோர் விருந்தோம்பலைச் செய்து வந்தார்கள். அரசனான நல்லிக்கோடன் தான் மட்டும் விருந்தோம்பலைக் கடைபிடித்ததோடு நின்றுவிடாமல் தன் மக்களையும் அவ்வாறு செய்ய வைத்து   நாட்டில் உள்ள மக்களிடையே உதவும் பண்பையும் வளர்த்தான். மேலும் மூங்கிலின் உட்பட்டையை உரித்தலைப் போன்று தூய ஆடையினை உடுக்கத் தருவான்.  பாம்பின் நஞ்சேறி மயக்கினார்ப்போன்று களிப்புத் தரும் கள்ளைப் பருகத் தருவான்.  வீமன் மடை நூலில் குறித்தப்படி சமைக்கப்பட்டப் பல்வேறு உணவு வகைகளை அவனே பக்கத்தில் நின்று பரிசிலரை உண்ணச் செய்யும் தகைமையுடையவன் நல்லியக்கோடன் என்னும் மன்னன்.  முடிவேந்தரின் அரண்களை அழித்து அப்பகைவர் நாட்டில் பெற்ற பொருள்களைக் கொண்டு தன்னை நாடி வந்தவர்களின் வறுமையைப் போக்கியவன்.  பாணர்களுக்கு வேலைப்பாடு அமைந்த தேர், யானை, குதிரை முதலியவற்றையும், பல வகையான ஆடை, அணிகலன்களையும் அளவின்றித் தந்து உதவக் கூடியவன் ஆவான்.          

நல்லியக்கோடானின் குணநலன்கள்

            போர் வீரர்களும், பெண்களும், மக்கள் பலரும் நல்லியக்கோடனின் குண நலன்களைப் போற்றுகின்றனர். வேந்தனிடம் இருக்க வேண்டிய பண்புகளாக “1)ஆண்மை, 2) அருள், 3) கொடை, 4) காட்சிக்கு எளிமை. 5) நாள்தோறும் நல்லற வினைகள் செய்தல், 6) அன்பு மனைவியரைப் பிரியாமை,”5 போன்றவை கண்டிப்பாக வேண்டும் என அரங்க. இராமலிங்கம் கூறுகிறார்.  சிறுபாணாற்றுப்படையில்; நல்லியக்கோடனைப் பற்றிக் குறிக்குங்கால்

            “செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,

                இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,

                செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ரத்த,” (சிறுபாண். 207-209)

என்கிறார். சான்றோரும், போர் மறவரும், அரிவையரும், பரிசிலரும் அவனை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.  செய்ந்நன்றி மறவாப் பண்பினன், சிற்றினம் சேராச் சிறப்பினன், இனிய முகத்தினன், அவன் வீரத்திற்கு அஞ்சிப் பகைவர்கள் அடிபணிவார்கள்.  அவனுடைய அருளும் திறன், வெகுளாமைப் பண்பு, அஞ்சாமை, ஆண்மை முதலியவை நல்லியக்கோடனின் குணநலன்களாகக் கூறப்படுகின்றன.

            தாய், தந்தை, ஆசிரியர், தமையன், அந்தணர், அறவோர் ஆகியோரைப் பலகாலும் வணங்கும் தன்மை உடையவன். உழவர்களுக்கு நிழல் போன்றவன். பரிசிலருக்கு நல்லியக்கோடன் தந்தையைப் போன்றவன்.

            வறுமையுற்றுக் கிடக்கும் மக்களுக்குத்தான் கொடை தேவைப்படும். உழைப்பினால் செல்வ நிலைகளில் வளர்ச்சி பெற்று இருக்கும் மக்களுக்குக் கொடையும் மன்னனின் அவரவணைப்பும் தேவைப்படாது.  ஆனால் வறுமை நிலையில் வாடிக் கிடக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி புரிதலே உண்மையான அன்பாக இருக்க முடியும்.  இத்தமிழகத்தில் பல அரசர்கள் ஆண்டிருப்பினும், வெளியில் தெரியாத ஓய்மானாட்டு நல்லியக் கோடனின் கொடையும் ஆளுமையும் பாராட்டத்;தக்கது.

சான்றெண் விளக்கம்

1.         சங்ககால வாழ்வியல், டாக்டர்.ந.சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், ப.49

2.         சங்க இலக்கியத்தில் வேந்தர், அரங்க. இராமலிங்கம், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.30

3.         பத்துப்பாட்டு (முதற்பகுதி) எம். நாராயண வேலுப்பிள்ளை, முல்லை நிலையம், சென்னை, ப.113.

4.         பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், சாமி. சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை, ப.67.

5.         சங்க இலக்கியத்தில் வேந்தர், அரங்க இராமலிங்கம், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.98.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here