ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு

      இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை நிறுத்தி, அதனின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆய்ந்துப் பார்ப்பது மனிதனின் இயல்பாகும். அத்தகைய வழிநின்று தோன்றியதே ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஒரேக் கூறாக அமைந்தப் பொருட்களை ஒப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லை. நேர்முரணாக உள்ளப் பொருட்களையும் ஒப்பீடு செய்வது வழக்கமில்லை. ஒப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இருபொருள்களின் ஒத்த தன்மைகள் மட்டுமே போதுமானதாக உள்ளது.

1. ஒத்த சமுதாய – வரலாற்றுச் சூழல்களில் பிறக்கும் இலக்கியங்கள், ஒத்த தன்மை உடையதாக இருத்தல்.

2. ஏற்புத்திறனை அதிகளவில் கொண்டு, ஓர் இலக்கியம், இன்னோர் இலக்கியத்தை தனது செல்வாக்கில் உட்படுத்துதல்

3. மொழி, இனம், நாடு, கடந்து, பலதரப்பட்ட புவியியல் கூறுகளை மீறி, இலக்கியங்கள் தன்னகத்தே ஒன்றுபட்ட பண்பகளைக் கொண்டிருத்தல்

4. குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும், கூறுகளும், தெளிவான நிலையில் விளக்கமாக காணக்கூடிய கருத்து நிலை ஒப்பீடு ஒப்பீட்டுத் திறனாய்வில் கருதுகோளாக அமைந்துள்ளது.

     ஒன்றனை ஒன்று ஒப்பீடு செய்வது உயர்ந்தப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே ஒழிய, என்னுடைய இலக்கியம்தான் உயர்ந்தது என்று செம்மாப்புக் கொள்வதற்கு அல்ல. சில உலக இலக்கியங்கள் ஒப்பீட்டு முறையில் திறனாய்வு செய்யப்பட்டதன் காரணமாக, அதனின் பொதுமைப் பண்புகள் கண்டறியப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதனின் பின்னணி இயங்கியல் முறையில் சரியாக இனம் காணப்படுகிறது. ஏனைய திறனாய்வு வகைகளைப் போன்று சிறந்த முறையில் அமைந்திருந்தாலும், இது பரந்த தளத்தை உடையதாக உள்ளது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

      ஒப்பீட்டுத் திறனாய்வானது, இன்று வளர்ச்சிப் பெற்று “ஒப்பிலக்கியம்” (Comparative Literature) என்று தனி அறிவுத்துறையாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சி நிலைக்கு வித்திட்டப் பெருமை ஃபிரான்சு நாட்டினைச் சாகும். பிறகு சில மாற்றங்களுடன் அமெரிக்காவில் வளர்ச்சியடையத் தொடங்கியது. அமெரிக்கா – இந்தியானா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெச். ஹெச். ரீமாக் (H.H.Remarce) கூறிய வரையறையே ஒப்பிலக்கியத் துறையில் பெரிதும் பின்பற்றப்படுகிறது. ஒரு நாட்டின இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுகையில்

1. அவற்றிற்கிடையேயான உறவு நிலை

2) சமுதாயவியல் கொள்கை

3) தத்துவம்

4). இசை, ஓவியம், கூத்து போன்ற கலைநிலை வடிவங்கள்,

     எனப் பலதரப்பட்ட நிர்ணயக் கூறுகளை உடைய இலக்கியங்களின் மேன்மையை வெளிப்படுத்தி மனித உள்ளத்தில் ஒரு ஒற்றுமை உணர்வினை வளர்க்கச் செய்கிறது என்கிறார்.

1. ஹேரி லெவின்

2. ரெனே வெல்லக்

3. ரெனே எதேம்பிள்

4.பால் வான்தீகம்

5. உல்ரிச் வெய்ஸ்டீன்

போன்ற பலர் ஒப்பீட்டு திறனாய்வுத் துறையில் பல விளக்கங்களை அளித்துள்ளனர். பிரெஞ்சு ஒப்பிலக்கியக் கொள்கையானது. பிற கருத்து நிலைகளையோ, கலைக் கொள்கையையோ ஏற்றுக்கொள்வதில்லை. ஒப்பிலக்கியத் துறையானதுதிறனாய்வுத் துறையோடு இணைந்தே வளர்கிறது.

தமிழில் ஒப்பீட்டுத் துறை

         இலக்கியத்தையும், படைப்பாளியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது நம்நாட்டில் தொன்றுதொட்டு பழங்காலம் முதல் இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. தமிழ் உரையாசிரியர்கள் தாம் உரைகூறும் நூற்களுக்கும், பாடல் வரிகளுக்கும் பிற-இணையான இலக்கண-இலக்கிய மேற்கோள்களை ஒப்பீட்டு முறையில் எடுத்துக் காட்டுகின்ற போக்கு, பாராட்டத் தகுந்த அளவிலே இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இத்தகைய சிறப்புவாய்ந்த ஒப்பியல் நோக்கு தமிழகத்தில் பரவலாகவே வளர்ச்சியடைந்து விரைந்து வளர்ந்தும் வருகிறது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

     1885ஆம் ஆண்டில் ஜி.யூ.போப் அவர்கள் தமிழிலக்கியத்தைப் பார்த்து “பழைய தமிழ்க்காப்பியங்களைப் பார்க்கிற பொழுது, அவற்றிற்கும், அவற்றிற்குச் சமமான கிரேக்க இலக்கியத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைப் புலனாகிறது என்கிறார்.”

1. உருவம்

2. உள்ளடக்கம்

3. சமுதாய நிலை

       என்ற மூன்றும் பெருமளவில் ஒத்துப்போகின்றது. அதேபோல் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகையில்  “தமிழின் புறப்பாடல்கள் ஹோமரின் காவியத்திற்கு அடிநிலையான இசைப்பாடல்களோடு ஒத்து முடிகின்றன.’ என்கிறார். எஸ்.வையாபுரிப்பிள்ளை தனது காவிய காலம் (1952) நூலில் குறிப்பிடுகையில் இதனின் கருத்துக்கள் ‘Heroic Age’ எனப்படும் கிரேக்க கருத்து நிலையோடு ஒத்து முடிகின்றன என்கிறார். இத்தகைய கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் ‘Tamil Heroic Poetry’ என்னும் தலைப்பில் பிரிட்டன் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவ்வாராய்ச்சிக்கு அடிநிலையாக இருந்தது ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும்.

          தமிழில் ஒப்பீட்டு முறைத் திறனாய்வின் வளர்ச்சியினை வ.வே.சு அய்யரின் “Kamba Ramayana – A Study” எனும் நூல் கம்பனை, வால்மீகி, மில்டனுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது ஒப்பீட்டு திறனாய்வுக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here