பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரினங்களே இல்லாமல் பூமி வரண்டு போய் மலடாக இருந்தது. காலத்தின் மாற்றம் காரணமாக தட்பவெட்ப சூழ்நிலையின் அடிப்படையில் தண்ணீர் பூமியில் உருவானது. தண்ணீர் மண்ணோடு கலந்து சேறுயுடைத்தாகி ஈரம் கலந்த பூமியாய் மாறியது. அவற்றிலிருந்து ஓரறிவு உயிராகிய நுண்ணுயிர்கள் தோன்றியன. அதன் பின்னர் ஒவ்வொரு உயிராய் பிறந்திருத்தல் வேண்டும். இப்படியாக இப்பூவுலகு பல ஆண்டுகாலம் கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சியடைந்து குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இவ்வாறு தோன்றிய மனித இனங்களுள் முதன்மையாக இருப்பவர்கள் பெண்களே ஆவார்கள். இவர்கள் மூலமாகத்தான் மனித இனத்தைப் பெருக்கிக் கொள்ள ஆயுத்தமானர்கள். இவ்வுலகத்தின் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இரத்தச் சம்பந்தப்பட்ட மனிதர்கள் தேவைப்பட்டார்கள். இதனால் அக்காலத்திலே பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். நாடோடியாக வாழ்ந்து திரிந்த மனிதர்கள் பெண்களை முன்னிறுத்தி தாய்வழிச் சமூகமாக வாழ்ந்து வந்தனர். தனக்கென ஒரு இடம், வயல், சமூகம், கிராமம், நாடு என்று வகுக்கும் பொழுது ஆண்கள் முன்னிலை வகிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் அவர்களை மிக்க மன வலிமையுள்ளவர்களாகவும், வம்சத்தை விருத்தி செய்பவர்களாகவும் இருக்கின்றனர். வம்சத்தின் அடிவிழுதாக பெண்கள் விழங்கினார்கள். அக்காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு காரணங்களும் பெண்களின் நிலையறிந்தே செய்யப்பட்டுள்ளன என்பதையும், அனைத்து விதமான சடங்குகளும் அவர்களை முன்நிறுத்தியே நிகழ்த்துகின்றனர் என்பதை இன்றளவும் நம்மால் அறிய முடிகிறது. தமிழ்க்கடவுள் முருகன் என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் சிறுந்தெய்வங்களையே வணங்கி வருவதைக் காணலாம். அத்தெய்வங்கள் பலருக்கு குலந்தெய்வங்களாக பெண் தெய்வங்கள் இருப்பதையும் அறியமுடிகிறது. நம் பாரத நாட்டின் கங்கை, காவிரி என ஆறுகளின் பெயர்கள் பெண் பெயர்களாக இருப்பதும், முல்லை, செந்தாழை போன்ற பூக்களின் பெயர்களும் இருப்பதையும் உதாரணமாக காட்ட முடியும். இதனடிப்படையிலேயே அக்காலத்தில் பெண்கள் முதன்மைப் படுத்தப்படுகிறார்கள்.
பிற்காலத்தில் ஆணாதிக்கச் சமூகம் பெண்களை அடக்கி ஆள நினைத்தது. அதற்காக பெண்களை மனதளவில் வலிமையற்றவள் என நம்பவைத்தது. ஆண்கள் செய்யும் வேலைகளை தன்னால் செய்ய முடியாது என பெண்களை உணர செய்தனர். அதுதான் பெண்கள் வீழ்ச்சியடைவதற்கான முதல்படியாக அமைந்தது. சில நூறு வருடங்களுக்குப் பிறகுதான் தான் அடிமைப்பட்டு கிடக்கின்ற எண்ணம் அப்பெண்களுக்குத் தோன்றியது. பலப்போராட்டத்தின் விளைவாக இன்று பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை இன்றைய எதார்த்த வாழ்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
சங்க இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி என்பார்கள். பழந்தமிழக இலக்கியங்கள் அக்கால மக்களின் அழகினை எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும். அக்கதையில் அனுபவம், நெகிழ்ச்சி, பாராட்டு, ஆசை, காதல், வீரம், அன்றாட மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் என படிப்பவர்களை தலை நிமிர வைக்கும். சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனும் இரு கண்களைக் கொண்டது. அகத்திணையில் களவு, கற்பு என வாழ்க்கை நிகழ்வுகளைச் சுட்டுவார்கள். திருமணத்திற்கு பிறகு வாழும் கற்பு வாழ்க்கையில் சங்ககால தலைவி ஒருத்தி தன்னுடைய புகுந்த வீட்டின் பெருமையை பறைச்சாற்றுகின்றாள். ஒரு பெண் இப்படியும் இருப்பாளா? என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆசிரியர் அழகாக வடித்துள்ளார். ஐங்குறுநூற்றில் கபிலர் இயற்றிய இருநூற்று மூன்றாம் பாடல் மட்டும் இவ்வாய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்டு ஆராயப்படுகிறது.
அன்னாய் வாழிப் பத்து
“அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய – அவர் நாட்டு
உவலைக் கூவற் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே” (ஐங்குறுநூறு.203)
சங்ககால தலைவன் ஒருவனுக்குப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. தலைவியும் அழகான பெண். தலைவன் வீட்டில் இருவரும் இல்லறம் சிறக்க தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகின்றார்கள். ஓரிரு மாதங்கள் கழித்து அம்மாவின் ஞாபகம் தலைவிக்கு வருகின்றது. கணவனிடம் கேட்டு சம்மதம் பெறுகின்றாள். கணவன் அழைத்துச் செல்ல பிறந்த வீட்டை அடைகிறாள் தலைவி.
பிறந்த வீட்டிற்கு தலைவி வந்தவுடன் பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சியில் திழைத்தார்கள். சொந்தங்கள், பக்கத்து வீட்டு தோழிகள், தெரிந்தவர்கள் என அனைவரும் தலைவியைப் பார்க்க வருகின்றார்கள். வருகின்ற பெண்கள் சும்மாதான் வருவார்கள். ஆனால் போகும் போது எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டு சென்று விடுவார்கள். அன்றும் அதைப்போலத்தான் தலைவியை மட்டும் தனியாக வீட்டிலுள்ள சமையலறைக்குள் இழுத்துச் சென்றார்கள். சமையலறைதான் பெண்களின் கோட்டை. நிறைய வீட்டுப் பெண்கள் சமையலறையில்தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். சமையலறைக்குள் தலைவியைச் சுற்றிலும் அத்தைமார்கள், அக்காமார்கள், தோழிமார்கள் எனத் திருமணமானப் பெண்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அங்கே தலைவியிடம் குசலம் விசாரிக்கிறார்கள். ‘உன்னோட கணவன் நல்லா பாத்துகிறாரா?’ ‘உன்னுடைய மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தி எல்லாம் நல்லா பேசுறாங்களா?’ ‘நல்லா சாப்பிடுறியா?’ ‘கணவன் வீட்டுல உனக்குச் சோறே போடறது இல்லையா? இப்படி எலும்பும் தோளுமா வந்திருக்க?’ ‘மழை பொழிந்ததா?’ ‘தலைவன் கூட சந்தோசமா இருக்கியா?’ என அடுக்கடுக்காய் கேள்விகள் தலைவியின் செவியினுள்ளே சென்று மனதிலே நின்றது. அதிலும் அந்த கடைசி கௌ்வி, அந்த அத்தை கேட்டாளே… அந்த கேள்வியைக் கேட்டவுடன் அனைவரும் சிரித்தனரே… அந்த கேள்வி தலைவிக்கு இதயத்தில் நுழைந்து வெட்கத்தை வரவழைத்தது.
என் கணவனுடைய நாடு வறட்சி மிகுந்து இருக்கும். எங்களுடைய வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு குளம் உண்டு. அக்குளம் வறட்சியினால் தண்ணீர் குறைந்து போய் சேறோடு மண்டிக்கிடக்கும். பக்கத்தில் இருக்கும் மரங்களின் தழைகள் அக்குளத்தில் விழுந்து அசுத்தமாக்கியன. அந்த வழியில் செல்லும் விலங்கினங்கள் அக்குளத்தில் தழைகளால் சேறு படிந்த தண்ணீரை தன்னுடைய நாவால் நக்கி குடிக்குமாம். அப்படிப்பட்ட எச்சில் தண்ணீரைதான் நான் குடத்தில் எடுத்து வருவேன். அத்தண்ணீரின் சுவையானது. என்னுடைய பிறந்த வீட்டில் அம்மா பாசத்தோடு கொடுக்கக்கூடிய பசுவின் பாலோடும் காட்டில் இருந்து எடுக்கப்பட்ட தேனையும் சாப்பாட்டுடன் சேர்த்து கொடுப்பார்கள். இவை இரண்டும் கலந்த சுவையானது அமிழ்தை மிஞ்சும். அப்படிப்பட்ட உணவை விட தீஞ்சுவையைப் போன்று இனிமையாய் இருந்தது என்றாளாம். இதைக்கேட்ட அப்பெண்கள், புகுந்த வீட்டின் பெருமையை இதைவிட வேறெப்படி சொல்ல முடியும் என்று வாயடைத்துப் போனார்களாம்.
அன்பும் பாசமும்
“அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்” ( நற்றிணை.110:9-10)
தலைவி மிகுந்த அறிவாற்றலையும் நல்லொழுக்கத்தையும் உடையவள். எதையும் ஆராய்ந்து அறிந்து செயல்படுபவள். எந்த சூழ்நிலையிலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்பவள். மணந்து கொண்ட தலைவனையும், தான் புகுந்த வீட்டில் உள்ள உறவுகளையும் எக்காலத்திலும் விட்டுக்கொடுக்காதவள். தன் குடி என நினைத்து நாளும் போற்றுபவள். வறட்சியான பகுதியில் வாழும் தலைவியின் பதில் சாமர்த்தியமானது. பெற்றோர்களை விட்டு என்றும் பிரியாத தலைவி முதன்முதலில் திருமணத்தால் பிரிகின்றாள். புது உறவு என்பதால் புதியதில் பிடிக்கவே செய்யும். போகப்போக கணவன் வீட்டுச் சூழலும் உறவுகளும் கசப்பைத்தான் வரவழைக்கும். சண்டையிட்டு தாய் வீடு திரும்பிய எத்தனையோ பெண்கள் உண்டு. ஐங்குறுநூற்று தலைவி தாய் வீட்டிற்கு வந்திருப்பது சண்டையிட்டுக் கொண்டு வந்தவள் இல்லை. தலைவனோடு சேர்ந்து தாயகம் வந்திருக்கிறாள்.
தலைவியின் பதிலையும், திருமணத்திற்குப் பின் முதன்முதலாய் தாய் வீட்டிற்கு தலைவி வருகிறாள் என்பதைப் பார்க்கும் போது, இவர்கள் இருவருக்கும் ஓரிரு மாதங்கள் முன்புதான் திருமணம் நடந்திருக்க வேண்டும். அதனால் இவர்களுடைய திருமணம் பங்குனி மாதம் அல்லது சித்திரை மாதம் நடைபெற்றிருக்கலாம். திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீட்டிற்கு தலைவி வந்திருக்கிறாள். இம்மாதங்கள் கோடைகாலம். அதனால் அங்கு வறட்சி மிகுந்திருந்தது. ஏனெனில் அவ்வூரின்கண் ‘உவலை’ (குளம் அல்லது கிணறு) உண்டு என பாடல் அடிகள் கூறுகின்றது. கண்டிப்பாக தண்ணீர் இருந்திருக்க வேண்டும். அக்குளம் மழைக்காலத்தில் தண்ணீரால் மிதந்து இருந்திருக்கும். தலைவி அக்குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றாள் எனில் ஊர்க்குளத்தில் மக்கள் அனைவரும் குடிக்க தண்ணீர் எடுத்திருக்க வேண்டும். குளம் இருப்பின் ஊர் பெரிய பரப்பளவு உடையதாகவும், மக்கள் கூட்டாக வாழக்கூடியர்களாகவும் இருந்திருப்பார்கள். கோயில், வழிபாடு, திருவிழாக்கள், கலைகள் என பண்பாடு சிறக்க வாழ்ந்திருப்பார்கள். தலைவியின் கூற்றுக்கு, கணவனின் உண்மையான காதலும் மட்டுமின்றி சொந்தபந்தங்களின் அன்பும், அவ்வூரில் நடைபெற்ற விழாக்களும் அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியும்தான், மான் போன்ற விலங்கினங்கள் நக்கி குடித்த எச்சில் தண்ணீரைக் கூட சுவையானதாக இருந்தது என்று தலைவி சொல்ல முடிந்தது.
ஆடி மாதப்பிரிவு
தலைவி தாய் வீட்டிற்கு வந்திருப்பது ஆடி மாத பிரிவே. ஆடி மாதம் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் தாய்க்குக் குழந்தை பெற்றெடுப்பதில் சிரமம் அதிகமாகியுள்ளது. ஒருசில நேரங்களில் தாய்க்கும் குழந்தைக்கும் உயிர் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. இதன் காரணமாகவே தலைவனின் பெற்றோர் தலைவியை தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் அக்குடும்பத்திற்கு நல்லது இல்லை. குறிப்பாக சித்திரை மாதம் பிறக்கும் முதல் ஆண் குழந்தை பெற்றோர்களில் ஒருவர் இறப்பார்கள். இல்லெனில், தாய் தந்தை மறு திருமணம், வறுமை, பிரிவு, தனித்திருத்தல் ஆகியன நடக்கும். ஆனாலும் சித்திரை மாதத்தில் பிறந்த ஆண்மகன்கள் சிறந்த புத்திசாலியாக விளங்குவார்கள். எதையும் சாதிக்கும் திறனுடன் இருப்பார்கள். இவையெல்லாம் இருந்தாலும் பெற்றோர்கள் சரியான முறையில் வாழ முடியால் இருப்பதால் யாரும் சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையை வேண்டாம் என்பார்கள். இப்படிப்பட்ட காரணங்களால்தான் முதல் கரு ஆடி மாத்தில் உண்டாகி சித்திரையில் உதிக்க வேண்டாம் என்று அக்கால பெரியோர்கள் எண்ணினார்கள். இதற்கு மிகச்சான்றாக, மகாபாரதத்தில் கர்ணனின் பிறப்பைச் சுட்டிக்காட்டலாம். சூரியன் மகனாக அவதரித்தான். அவனின் தர்மமும் வீரமும் நாடறியும். பேராண்மையுடையவன். மாற்றத்திற்காகப் போராடி தீயவர்களோடு நட்பு கொண்டான். பெற்றதாய் தந்தை அருகில் இல்லாமல் தனிமைப் படுத்தப்பட்டவன்.
நீரின்றி அமையா உலகு
திருமணமான புதியதில் தம்பதியர் இருவருக்குள்ளும் சண்டை, சச்சரவு வருவது இயல்பே. இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பும் பெண்கள் அதிகம். அந்தச் சண்டைகளை சமாளித்து வெற்றி காண்பவளே குடும்பத் தலைவியாக நிமிர்கிறாள்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்” (குறள்.133:10)
ஊடலுக்குப் பிறகே காமம் பிறக்கும் என்று வள்ளுவர் கூறுகின்றார். ஐங்குறுநூறு பாடலின் மூலம் தலைவன் உடைய வீடு வறுமையால் நிறைந்தது என்பதுபோல் உள்ளது. ஏனெனில் ‘தேன் மயங்கு பாலினும் இனிய’ என்று தாய் வீட்டில் தலைவி தேனும் பாலும் கலந்த சோற்றை உண்டாள் என்கிறார். அப்படிப்பட்ட உணவு கணவன் வீட்டில் இல்லை. இருப்பினும் தலைவனின் அன்பின் காரணமாக மானுண்டு எஞ்சிய கலங்கல் நீர் சுவையானது என்கிறாள்.
“நீர்இன்று அமையா உலகம் போலத்” (நற்றிணை.1:6)
“நீர்இன் றமையாது உலகுஎனின்” (குறள்.2:10)
இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. மழைநீர், ஊற்று நீர் என எங்கும் பரவியிருக்கிறது. உயிரினங்களுக்கு மிக தேவையான உணவுப்பொருட்களில் தண்ணீர்தான் முதலிடம் வகிக்கின்றது. மேற்கூறியக் காரணங்களால் தலைவன் வீடும் வசதி படைத்தவர்கள்தான். கோடை வெப்பத்தின் காரணமாகவே தலைவியின் கூற்று அமைந்துள்ளது. தலைவியும் பிறந்த வீட்டில் புகுந்த வீட்டின் பெருமையைக் கூறுவதால், தலைவன் தலைவிக்கு வரதட்சணை பற்றி துன்புறுத்துவது இல்லை என்பது தெளிவாகிறது.
முடிவுரை
ஐங்குறுநூற்றுத் தலைவி அறிந்தும் தெரிந்தும் இருக்கின்றாள். குடும்பம் நடத்துவதிலும், தன்னுடைய குடும்பத்தை யாரிடமும் விட்டுக்கொடுக்காமலும் இருப்பது அப்பெண்ணின் அறிவு முதிர்ச்சியைக் காட்டுகின்றது. அக்காலத்தில் தலைவனும் தலைவியும் பெண்வீட்டிற்கு சென்று வருவது என்பது சிலகாலம் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது. அதாவது பொங்கல் பண்டிகை, ஆடிமாத பிரிவு, திருவிழாக்காலங்களிலும் சென்று வந்துள்ளனர். குடும்பத்தில் பெண் கல்வி அறிவு பெற்றவளாக இருந்து விட்டால் அக்குடும்பமானது சீரும் சிறப்பும் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் பங்கு இல்லாமல் எந்தவொரு நிகழ்வும் நடைபெறுவதில்லை. என்னாதான் நாகரிகம் மக்கள் அடைந்துவிட்டாலும் பாரம்பரியமிக்க தமிழ் மக்கள் தங்களுடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறக்கவும் இல்லை. மறுத்துச் செல்வதும் இல்லை.