இளமையில் ஆமைபோல் வாழ்ந்து விடாதே!

“என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டுகிறேன்” என்று விவேகானந்தர் கூறினார். அவர் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற இளைஞர்களையே கேட்டார். எனவேதான் நன்றாக உழைப்பதற்கு இளமைக்காலமே உகந்தது.

          இளமைக்காலத்தில் உள்ள நீங்கள் நல்ல வழியை தேர்ந்தெடுத்து பலரின் இன்னல்களை நீக்குகின்ற பெரும் செயலைச் செய்வதற்கு உழைக்க வேண்டும். உழைக்கும் மனம் தூய்மையானதாக எந்தவித உணர்வுகளுக்கும் ஆட்படாததாக பக்குவப்பட்டதாக இருக்கவேண்டும். வித்தைகளாக இருந்தாலும் கல்வியாக இருந்தாலும் கற்றுக்கொள்ள இளமையே சிறந்தது. இளமையில் தான் உடலும் உள்ளமும் ஒன்றுசேர்ந்து வேகமும் விவேகமும் கலந்து பலத்துடன் காணப்படும்.

          இந்த இளமைக் காலத்தில் நீங்கள் பிறந்த இந்தச் சமுதாயத்திற்கு செய்ய வேண்டியவை உழைக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன. உதாரணமாக, நீங்கள் பிறந்துள்ள இந்த நாட்டில் சேரிகள் உள்ளன. உணவை விளைவிக்கும் விவசாயிகள் ஏழ்மையால் தற்கொலை செய்துள்ளனர். ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் முதலாளிகளும் உள்ளனர். இவற்றையெல்லாம் நீங்கள் மாற்ற வேண்டாமா? அதற்காக உழைக்க வேண்டாமா? இவற்றை எல்லாம் மாற்றவே நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டாமா? இளமையில் மனப்பக்குவம் என்பது சிறிது சிரமம்தான் என்றாலும், சமுதாயத்தைத் திருத்த பிறந்துள்ள இளமைக்கு புலன்களை அடக்கி ஆளும் மனப்பக்குவம் வேண்டும்.

புலன்களைக் கையாளுங்கள்

       விட்டில் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அவை இரவில் விளக்கு வெளிச்சத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். அந்தப் பூச்சிகளின் கண்களுக்கு ஒரு ஆற்றல் உண்டு. இவை வெளிச்சத்தை மிக அருகில் சென்று பார்க்கும். மனிதர்களின் கண்களானது லைட், சூரியன் போன்றவற்றைப் பார்த்தால் கூசும். எனவே விட்டில் பூச்சிகளுக்கு விளக்கின் வெளிச்சத்தை சுடரின் மிகஅருகே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுடரை நெருங்கும். அப்போது சுடரின் வெப்பத்தால் தாக்கப்பட்டு இறந்துவிடும். அதனுடைய பலவீனம் அதன் கண்களில் உள்ளது. கண்களுக்கு வெளிச்சத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை.

            மீன் பிடிப்பவர்கள் தூண்டிலிட்டு மீனைப்பிடிப்பார்கள், மீனுக்கு அதன் வாய்தான் பலவீனம். தூண்டிலில் ஏதேனும் உணவை மாட்டி விட்டு நீரில் விடுவார்கள். அதை பார்க்கும் மீனின் கண்களுக்கு உணவு மட்டுமே தெரியும். உணவு மாட்டப்பட்டுள்ள கொக்கியோ நூலோ தெரியாது. உண்ண வேண்டும் என்ற ஆசையில் சரியாகக் கவனிக்காமல் தன்வாயால் உணவை பற்றும். பற்றியதும் அதனுடைய வாயின் மேல் பகுதி தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் பின்னர் மனிதர்களுக்கு உணவாகிவிடும். மீனுக்கு அதன்வாய் ஆபத்தை தேடித்தரும். மீனின் பலவீனம் அதன் வாயில்தான் உள்ளது.

மரம் துளைக்கும் வண்டுகள்

       வசந்தகாலத்தில் இயற்கை அழகாக இருக்கும். பசுமை நிறைந்த அக்காலத்தில் எல்லா தாவரங்களும் புல் முதல் மரம் வரை பூத்துக்குலுங்கும். வண்டுகள் அந்த மலர்களைச் சுற்றிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகப் பாடிக்கொண்டே இருக்கும். இந்த வண்டுகளுக்கு மலர்களின் மணம் மிகவும் பிடிக்கும். மாமரப்பூக்களில் வண்டுகள் அமர்ந்து தேனையும் உண்டு மலரின் நறுமணத்திலேயே மயங்கி கிடைக்கும். பூ இதழ்களை மூடிக்கொள்ளும் அதன் உள்ளேயே மாதக்கணக்கில் இருக்கும். அது பிஞ்சாகி காயாகி பழமாகி உண்ணும் வரை வண்டு வெளியே வராது. உள்ளேயே இறந்தும் விடும். ஒரு மரத்தையே துளைத்து துவாரமிடும் ஆற்றல் கொண்ட ஒரு வண்டு ஒரு பூவை துளையிட்டு வெளியே வர இயலாதா? முடியும். ஆனால் அது பூவின் வாசனையிலேயே மயங்கிக் கிடைக்கும். எனவே வண்டுக்கு அதன் மூக்கே ஆபத்தை விளைவித்துவிடும். மூக்குதான் அதன் பலம். ஏனெனில் மலர்களை கண்டறிவது அதன் நறுமணத்தை வைத்துதான். ஆனால் அது அளவுடன் இல்லாமல் மேலும் மேலும் வாசனையை நுகர்ந்து இறப்பை தேடிக்கொள்ளும். எனவே வண்டு அதன் மூக்கால் அழியும்.

நெருப்பில் குளிக்கும் பறவைகள்

           காட்டில் வேட்டையாடும் வேடர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் பறவைகள் விலங்குகள் என்று எல்லாவற்றையும் பிடிப்பதற்கு சில வழிமுறைகளையும் கருவிகளையும் வைத்துக்கொண்டு வேட்டையாடுவர். அவற்றில் அசுணமா என்ற பறவையினம் இசையைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவை. அவற்றை வேட்டையாடும் வேடர்கள் காட்டில் சென்று புல்லாங்குழலை வாசிப்பார்கள். அந்த இசையைக் கேட்டதும் அப்பறவை இசை எங்கிருந்து வருகிறது என்று தேடிக்கொண்டு பறந்தது வந்துவிடும். அவ்வாறு வரும் பறவை இசையை கேட்பதற்காக மிகஅருகில் இன்னும் அருகில் என்று கீழே வந்து பறந்து கொண்டே இருக்கும். குழலை வாசிக்கின்ற வேடன் அதனை கவனித்துக்கொண்டே இருப்பான். பறவை இசையில் மயங்கி வேடனின் தலைக்கு மேலே பறக்கும். மிக அருகிலேயே பறக்கும். உடனே மற்ற வேடர்கள் அந்த வேடனின் அருகில் காய்ந்த சருகுகளைக் கொண்டு நெருப்பை எரிய விடுவர். இசைத்துக் கொண்டிருந்த வேடன் அதை நிறுத்தி விட்டு பறை என்ற தோல் கருவியை எடுத்து தாறுமாறாக அடித்து ஒலி எழுப்புவான். மிகவும் இனிமையான புல்லாங்குழலின் இசையைக் கேட்டு மயங்கிய பறவை அந்த பறையின் சத்தத்தை கேட்டதும் நிலை தடுமாறி நெருப்பில் விழுந்துவிடும். இறுதியில் வேடர்களுக்கு உணவாகிவிடும். அந்தப் பறவைகளின் காதுகளுக்கு கேட்கும் திறன் அதிகம். இசையை மிகமிக அருகில் சென்று கேட்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானதால், வேடர்கள் பிடித்துவிடுவர் என்பதை உணராமல் தலைக்கு மேலேயே பறந்து கொண்டு இசையில் மயங்கி தன் உயிரை போக்கிக்கொண்டது. மற்ற பறவை இனத்திற்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பறவைகளுக்கு அதன் காதுகளால் உள்ளது. ஆனால் ஆசையை ஒரு அளவில் வைக்கலாம் தன்னையே அழிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. அசுணமா பறவைகளுக்கு அதன் காதுகளே பலவீனம்.

மனிதனுக்கு அடிபணியும் யானைகள்

            யானைகளுக்கு மெய்யுணர்வு அதிகம். மனிதர்கள் காட்டு யானைகளைப் பிடிக்க வேண்டுமென்றால் பெண்யானை ஒன்றை பிடித்துச்சென்று காட்டில் ஓரிடத்தில் கட்டிவிடுவார்கள். அது நிற்பதற்கும் சிறிது நடப்பதற்கும், இடம்விட்டு சுற்றிலும் பெரிய குழியைத் தோண்டிவிடுவார்கள். அவ்வாறு தோண்டிய குழி மேலே தெரியாதவாறு மரக்கிளைகளைக் குறுக்காகப் பரப்பி வைத்துவிடுவார்கள். பின்னர் யாரும் இல்லாத அந்தக் காட்டில் தனியாக உள்ள பெண்யானை கத்த ஆரம்பிக்கும்.  ஒலியைக் கேட்டதும் காட்டுயானை கத்துவது பெண்யானைதான் என்பதை உறுதி செய்துகொண்டு அதனுடன் சேரவேண்டும் என்ற ஆசையால் மிக வேகமாக ஓடி வரும். அதற்கு பெண்யானை மட்டுமே கவனத்தில் இருக்கும் சுற்றிலும் குழி தோண்டி இருப்பது கண்களுக்கு புலப்படாது. வேகமாக பெண்யானையை நுகரவந்து குழிக்குள் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளும். காட்டிலேயே பெரிய உடலையும் பலத்தையும் கொண்ட விலங்கினம் தனது மெய்யுணர்வு ஆசையால் சிறிய உருவம் கொண்ட மனிதர்களால் ஆளப்பட்டுவிடும். எனவே அதற்கு அதன் அதிகமாக உள்ள மெய்யுணர்வே துன்பத்திற்கு காரணமாகும்.

விட்டில் பூச்சிகளுக்கு அதன் கண்களால் ஆபத்து ஏற்படும்.

மீனுக்கு அதன் வாயால் ஆபத்து நேரும்

வண்டுக்கு அதன் மூக்கே எமனாகும்

பறவைக்கு அதன் காதுகளே பலவீனமாகும்

யானைகளுக்கு அதன் மெய்யுணர்வே துன்பத்தை கொடுத்து விடும்

இவ்வாறு இந்த விலங்கினங்களுக்கு அவைகளின் ஒரு புலனால் மட்டுமே ஆபத்து உண்டாகும். ஆனால் மனித இனத்திற்கு அவனுடைய ஐந்து புலன்களாலும் ஆபத்து நேர்ந்துவிடும்.

உழைக்கும் காலம், இளமைக்காலமே

       இளைஞர்களாகிய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களின் ஐம்புலன்களால் உண்டாகும் ஆசைகளை கட்டுப்படுத்துங்கள். இளமையில் அது மிகவும் கடினம். நம்முன்னோர்கள் “ஐந்தை அடக்கு” ஐம்புலன்களையும் எவன் ஒருவன் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளானோ அவன்கட்டுக்குள் இந்த உலகம் அடங்கும் என்று கூறியுள்ளனர்.

         இளைஞனே! உனது சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் நீரை மாசுபடுத்திவிட்டனர். காற்றையும் விஷவாயுவாக மாற்றுகின்றனர். இயற்கையாக உணவைத்தரும் மண்ணையும் மாசுபடுத்திவிட்டனர். இன்னும் எவ்வளவோ கூறலாம். இவற்றையெல்லாம் பார்க்கும் உணரும் உமது மனதில் ஒரு வேகம் எழவில்லையா. அடுத்து வரும் சந்ததியினருக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கிறது. இதையெல்லாம் பார்த்துமா உனது மனம் தடுக்க நினைக்க வில்லை? இந்த நிலையை மாற்ற உனது இளமையே சிறந்தது. உழைக்கப்புறப்படு. உன் தேசத்தை சரியாகத் திருத்தப் பயணம் செய். இரவு பகல் என்று பாராமல் உழைப்பதற்கு ஆயத்தமாகு.

உலகம் உனக்கானது. நீயே அதன் அதிபதி. அதன் சேவகன் எல்லாம் நீயே. இங்கு நடக்கும் அநியாயங்களை தடுக்கவில்லை என்றால் அவை நடப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். இந்த உண்மை நீங்கள் சிந்தித்து பார்த்தால் உமக்கே புரியும்.

இளைஞர்களே செய்யும் கைம்மாறு

         இளைஞனே! நீங்கள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வகிக்கும் பதவி, அடையும் மகிழ்ச்சி அனைத்தும் இங்குதான் கிடைத்தன. இவற்றை யெல்லாம் பெற்றுக்கொண்டு இந்தச் சமுதாயத்திற்காக என்ன செய்யப்போகிறாய்? சிந்தனை செய். மனித வாழ்க்கை என்பது இரயில் பயணம் போன்றது, அவரவர் இடம் வந்துவிட்டால் இறங்கிக்கொள்ள வேண்டியதுதான். இறங்குவதற்கு முன்பாக அதாவது காலம் முடிவதற்குள் தீமைகள் சிலவற்றையாவது மாற்றலாம். அவ்வாறு மாற்ற உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு இளமையே சரியானது. உழைக்காமல் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. எனவே சாதிக்க வேண்டியவற்றை இளமையில் செய்து முடிப்பதே உன்னதமானது.

     உங்கள் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் நீங்கள்தான் இவ்வுலகின் தலைவன்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலாயா மகளிர் கல்லூரி, தர்மபுரி.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

  1. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
  2. தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !
  3. மனப்பான்மையை உயர்த்துங்கள்
  4. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here