🌳 பன்னெடுங் காலமாய்
தழைத்திட்ட இயற்கை,
🌳பண்ணிய பாவமென்ன?
பாரை விட்டுப் போவதென்ன?
🌳இறுமார்ந்த இயற்கை
உருமாறத் தொடங்கியதேன்?
🌳வருமானம் வரவேண்டி,
அவமானம் கருதாமல்,
🌳வளமையைக் குழிதோண்டிப்
புதைப்பது தகுமோ?
🌳செருக்கின்றிச் செழித்திட்ட
விளைநிலங்கள் எல்லாமே,
🌳அறுப்பின்றிப் போனதற்குப்
பொறுப்பேற்பார் எவருண்டு?
🌳அடர்ந்திட்ட வனமெலாம்
தொடர்ந்திட்ட இரணத்தாலே,
🌳படர்ந்திட்டக் கொடியறுத்துப்
பாரைவிட்டுப் போனதெங்கே?
🌳நாற்புறமும் பசுமையொடு
நடனமிட்ட இயற்கை,
🌳நான்குவழிச் சாலைக்குள்
முடங்கியது எவர்குற்றம் ?
🌳விசுவாசத் துரோகிகளின்
விஷப்பேச்சின் வீரியத்தால்,
🌳செயற்கை சிரிக்கிறது;
இயற்கை சிதைகிறது!
🌳நிலையில்லா வாழ்வை
நிலையென்று நினைத்து,
🌳விலையில்லா உயிரை
இழப்பதுதான் விதியோ ?
🌳எதிர்காலத் தலைமுறை
சுவாசிக்க வேண்டுமெனில்,
🌳இருக்கும் இயற்கையை
நேசித்துக் காத்திடுவோம்!
கவிதையின் ஆசிரியர்,
முனைவர் சீனு. தண்டபாணி,
தமிழ்த்துறைப் பேராசிரியர்,
சாரதா கங்காதரன் கல்லூரி,
புதுச்சேரி .