இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்
முன்னுரை
நாடு என்பது பல்வேறு வளங்களின் இருப்பிடமாய் இருக்க வேண்டும். வளங்கள் இல்லா நாடு வறுமை உடைய நாடாகவே கருதப்படும். ஆதலால் நாடு பல்வேறு வளங்களையும் இயல்பாகப் பெற்றுத் திகழ வேண்டும். இயற்கை வளமே மற்ற எல்லா வளங்களுக்கும் அடிப்படையாக அமையும். இயற்கையே எல்லாவற்றிற்கும் காரணமாக அமைவதால் மக்கள் அதனைத் தெய்வமாக வழிபட்ட தன்மையைச் சங்க இலக்கியம் புலப்படுத்துகிறது. மற்ற நாடுகளிலிருந்து வளங்களைப் பெறாமல், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாய் நாடு அமைந்திருக்க வேண்டும். இதனை,
“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளம்தரும் நாடு”1
என்ற திருக்குறள் குறிப்பிட்டுள்ளது.
மலை வளம்
மலை கனிம வளங்களின் இருப்பிடமாகும். மழை ஆதாரத்தின் சிறப்பிடமாகும். அருவிகளின் பிறப்பிடமாகும். மலைகள் இல்லை யென்றால் ஆறுகள் கடல்கள் இல்லையெனலாம். அத்தகைய மலைகள் நாட்டினை அணி செய்வதில் இன்றியமையாததாக உள்ளது. சங்ககால மன்னர்கள் மலையினைக் களமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். மலைகளின் பல்வேறு செல்வங்களை அக்கால மக்கள் பெற்றுள்ளனர். குறிஞ்சி நில மக்களின் வாழிடமாக மலை இருந்ததைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
கொண்கானம் கிழான் என்னும் குறுநில மன்னன் கொண்கானம் எனும் மலைப்பகுதியை மக்களின் மனநிலை அறிந்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஆண்ட அம்மலைப் பகுதி வளங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றிருந்தது. அது பகைவர் யாராலும் கைப்பற்ற முடியாத அளவிற்கு வலிமையிலும் சிறந்து விளங்கியது. மற்ற நாடு மன்னர்களின் வளத்திலோ ஏதேனும் ஒன்றில் மட்டும் சிறந்ததாக இருந்தது.
“ஒன்றுநன் குடைய பிறர்குன்றம், என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்”2
என்ற மோசி கீரனாரின் பாடல் அடியால் கொண்கானம் எனும் மலைப்பகுதி, வளத்திலும் வலிமையிலும் சிறந்து விளங்கிய தன்மையினை அறிய முடிகிறது.
பாரி, பறம்பு மலைப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் மலையைப் பகைவர்களால் எளிதில் அணுக முடியாது. அவன் முல்லைக்குத் தேர் கொடுத்த சிறப்புக்குரியவன். அவனது மலைப்பகுதி பல்வேறு வளங்களில் சிறப்புற்றதாய் அமைந்திருந்தது. அம்மலையில் சுனைகள் பல இடங்களில் இருந்தன. அச்சுனை நீரின் சுவைக்கு வேறு எதுவும் ஈடாகாது.
“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர்”3
என்ற கபிலரின் பாடல் பறம்பு மலையின் இயல்பினைப் பதிவு செய்துள்ளது.
நாஞ்சில் வள்ளுவன் பாண்டியனின் படைத் தலைவன். அவன் நாஞ்சில் மலைக்குத் தலைவன். அம்மலை இயற்கை வளங்களை நிரம்பப் பெற்றிருந்தது. மலை மல்லிகையும், கூதாளியும் தழைத்துச் செழித்திருந்தன. தேன் போன்ற சுவை கொண்ட பலா மரங்கள் நிறைந்து விளங்கின. இதனை,
“நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய
………………………………………….
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்”4
என்ற கரூவூர்க் கதப்பிள்ளையின் பாடல் அடிகள் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் மலைகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதையும் அறிய முடிகிறது.
மழை வளம்
மழை நீர் உயிர் நீர் என்பர். மக்கள் உயிர்வாழ நீர் இன்றியமையாதது. மனித உடல் இயக்கத்திற்கும் நீர் அவசியம். மனித உடலில் நீரின் அளவு குறைந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இத்தகைய நீனினை வழங்கவல்லது மழையே ஒரு நாட்டின் இயற்கை வளங்களை மேம்படுத்தும் மழை இல்லையென்றால் உழவுத்தொழில் சிறக்காது. மாதம் மும்மாரி பொழிய வேண்டும்| என்ற கருத்தின் மூலம் சங்ககாலத்தில் மழைக்கு நல்கிய சிறப்பினை அறிய முடிகிறது. மழையே நிலத்தின் வளமைக்கும், நாட்டின் வளமைக்கும் காரணமாக அமைகிறது.
“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவனளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்”5
என்ற இளங்கோவடிகளின் பாடலால் மழையின் சிறப்பினை அறிய முடிகிறது.
வெப்பத்தின் தாக்குதலால் மூங்கில்கள் காய்ந்து வாடின. குன்றுகள் அனைத்தும் பசுமையினை இழந்து வாடின. அருவிகள் நீரற்றுக் காட்சியளித்தன. அத்தகைய வறட்சிக் காலத்திலும், சேரன் செங்குட்டுவன் நாட்டில் மக்கள் பொன் ஏர் பூட்டி உழுது மகிழுமாறு மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொணர்ந்து பொழிந்தன. இதனை,
“இருப்பணை திரங்கப் பெரும் பெயர் ஒளிப்பு,
குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ,
அருவி அற்ற பெருவறல் காலையும்,
அருஞ்செலல் பேர்யாற்று இருங்கரை உடைத்து,
கடிஏர் பூட்டிக் கடுக்கை மலைய
வரைவுஇல் கதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்து,
ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்கு”6
என்ற பரணரின் பாடல் அடிகள் பதிவு செய்துள்ளன. இதன்வழி வெப்பம் மிகுந்த கோடைக் காலத்திலும் செங்குட்டுவனின் நாடு மழையைப் பெறுகின்ற இயல்பினை உடையதை அறிய முடிகிறது. மேலும், இயற்கை வளத்தைப் பேணிய காரணத்தினால் கோடையிலும் மழை பொழிந்ததையும் அறிய முடிகிறது.
நீர்வளம்
நாட்டின் வளங்களுள் நீர்வளம் இன்றியமையாதாது. ~நீரின்றி அமையாது உலகு| என்பதின் மூலம் நீரின் தன்மையை அறிய முடிகிறது. மன்னன் மழை நீரை மட்டும் நம்பி வாழாது, மக்களுக்குப் பயன்படும் படியாக ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளை ஏற்படுத்தி நாட்டில் நீர்வளங்களைப் பெருக்க வேண்டும். நீர்நிலைகளே, கோடைக் காலத்தில் வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாக்கும். நீரினைச் சேமிக்கும் இத்தன்மையால்தான் விவசாயம் செழிக்கும். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கும்.
“இயற்கையினால் உண்டாகும் மழைநீரை, மட்டும் நம்பி தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கினான். குளங்களும், ஏரிகளும் அவனின் விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன”7 என்ற கருத்து நீர்நிலைகளின் தன்மையினையும் அதன் சிறப்பினையும் எடுத்துரைக்கிறது.
நாஞ்சில் மலையை ஆண்ட நாஞ்சில் வள்ளுவன் நீரின் மேன்மையை அறிந்தவன். மழையினை மட்டும் நம்பி வாழாது, பல்வேறு நீர் நிலைகளை ஏற்படுத்தி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்கினான். அதனால்தான், அவன் நாட்டில் நீரில்லையென்றால் காய்ந்து விடும் குவளை மலர் கோடைக் காலத்திலும் செழிப்புற்று வளர்ந்திருந்தது.
“கொண்டல் கொண்ட நீர் கோடைக் காயினும்
கண்அன்ன மலர் பூக்குந்து”8
என்ற ஒருசிறைப் பெரியனாரின் பாடலால் அறியலாம். இயல்பாகவே குவளை மலர் நீர் இல்லையென்றால் காய்ந்துவிடும். ஆனால், நாஞ்சில் நாட்டில் கோடைக் காலத்திலும் செழிப்புற்று குவளை மலர் வளர்ந்திருந்ததின் மூலம், அவன் நாட்டில் நீர்நிலைகள் பெருகியிருந்ததையும், கோடைக் காலத்திலும் வற்றாது காணப்பட்டதையும் அறிய முடிகிறது.
வெள்ளி என்னும் சுக்கிர நட்சத்திரம் மழைக்கு உதவுகின்ற மற்ற விண்மீன்களோடு நிற்க வேண்டிய நாளில் நின்றது. கடலிலிருந்து எழுந்த கார்மேகங்கள் நான்கு திசைகளிலும் பொருந்தி உலகினைக் காத்தற் பொருட்டு கார்காலத்தில் மழைபொழிய வலப்பக்கமாக எழுந்தது. ஆனால் மழை பொழியாது கார் மேகம் மறைந்து விட்டது. கார்மேகம் மழை பொழிய மறந்தாலும், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் நாடு எப்பொழுதும் வற்றாத நீர்வளங்களை உடையது.
“மன்னுயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தனிக் கமஞ்சூல் மாமதை
கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால், வாழ்க நின்வளனே!”9
என்ற பாலை கௌதமனாரின் பாடல் அடிகள் பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் நாடு வற்றாத நீர் நிலைகளைக் கொண்ட தன்மையினைப் பதிவு செய்துள்ளன.
நிலவளம்
நிலம் மனிதனுக்கு இயற்கை தந்த கொடை. நிலத்திற்கு மனிதன் என்ன செய்கிறானோ அதனையே திருப்பி நிலம் மனிதனுக்குச் செய்யும். நிலத்தை மாசு அடையாமல் காத்தால்தான் நாடு வளமையானதாக இருக்கும். சங்ககாலத் தமிழ் மக்கள் நிலத்தின் பயனை நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான், நிலத்தை வளப்படுத்தி, பயிர்களைச் செழுமையாக்கினார். அவர்கள் நிலத்தை நன்செய், புன்செய் என்று பாகுபடுத்தி அதற்கேற்றவாறு விதைகளை விதைத்தனர் என்பதை,
“தமிழ்நாட்டு நிலம் மிக வளப்பமானது. நன்செய் நிலம் நெல், கரும்பு உற்பத்தி ஆகிய அளவிற்கு மெத்த வளமும், புன்செய் கேழ்வரகு, கரும்பு, சோளம் ஆகிய புஞ்சைப் பயிர்கள் பயிராகிற அளவிற்கு ஓரளவு வளமும் உடையது”10 என்ற கருத்தின் வாயிலாக தமிழ்நாட்டு நில வளத்தின் தன்மையினை அறியலாம்.
நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட நிலப்பகுதி மிகவும் வளமுடையதாகத் திகழ்ந்தது. இயல்பாகவே எல்லா நாட்டிலும் மழை பொழியும் காலத்தில் பயிர்கள் செழுமையுடன் வளரும். ஆனால், நாஞ்சில் வள்ளுவன் நாட்டில், மழையில்லாத கோடைக் காலத்திலும் மக்கள் விதைத்த வித்து கரும்பு போல தழைத்தது.
“காய்த்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பின் ஒலிக்குந்து”11
என்ற பாடல் அடியால் நாஞ்சில் நாட்டில் நிலம் வறண்ட கோடைக் காலத்திலும் பயிர்கள் செழித்து வளர்ந்த தன்மையினை அறிய முடிகிறது.
உணவு வளம்
உணவின் மூலாதாரம் விவசாயம். எந்தவொரு நாடு விவசாயத்தில் செழிப்புற்றிருக்கிறாதோ அந்நாட்டில் வறுமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இருக்காது. உணவினைத் தரும் விவசாயத்தை அனைவரும் போற்றிக் காக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கும், உடலை வலிமையோடு வைத்துக் கொள்வதற்கும் உணவு இன்றியமையாததாக விளங்குகிறது. மக்களுக்கு உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைக் கூறுகளில் உணவிற்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மன்னர்களுக்குப் புலவர்கள் நாட்டின் நிலையை அறிவுறுத்துகையில், உணவின் இன்றியமையாமையை அறிவுறுத்தியதனைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. உணவிற்கு அடிப்படையான உழவினையும், உழவர்களையும் மன்னர்கள் போற்றிக் காத்தனர்.
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”12
என்ற குறளானது உணவிற்கு அடிப்படையான உழவின் தன்மையைக் குறிப்பிட்டுள்ளது.
நல்லியக்கோடன் ஓய்மான் நாட்டை ஆட்சி புரிந்தவன். அவன் உணவிற்கு மக்கள் பசியறியாது வாழ்ந்து வந்தனர். அவன் நாட்டில் எங்கும் உணவு வளம் நிறைந்திருந்தது. அவன் நாட்டில் விளையாட்டில் ஈடுபட்ட மக்கள், பன்றி உழுத சேற்றைக் கிளறினர். அப்போது அதிலிருந்து ஆமை முட்டையையும், அல்லிக் கிழங்கையும் எடுத்தனர்.
“கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கோடு பெறூஉம்”13
என்ற புறத்திணை நன்னாகனார் பாடல் அடிகள் நல்லியக்கோடன் நாடு உணவு வளத்தில் குறைவுபடாது இருந்த இயல்பைக் காட்டுகின்றது.
பிட்டன் கொற்றன் நாட்டு மக்கள் பன்றி கிளறியப் புழுதி பரந்த இடத்தில் நல்ல நாளினைப் பார்த்து தினையை விதைத்தனர். தினை வளர்ந்து முற்றியது. அதனை அறுவடை செய்து, மான்கறி சமைக்கப்பட்ட பானையில் தினையைக் கொட்டி, சந்தன விறகினைக் கொண்டு தீமூட்டிச் சமைத்தனர். சமைத்த உணவை வாழை இலையில் பரப்பி, அவன் நாட்டு மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.
“கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூமி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை”14
என்ற கரூவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரின் பாடல் பிட்டன் கொற்றன் நாடு பசியறியாது உணவு வளத்தில் சிறந்திருந்த இயல்பைப் பதிவு செய்துள்ளது.
பாண்டி நாட்டில் பிசிர் என்ற ஊர் உள்ளது. அவ்வூர் உணவு வளம் குன்றாது சிறப்பற்றிருந்தது. அவ்வூரில் இடைச்சி சமைத்த புளியங்கூழை, அவரைக் கொய்பவர்கள் தம் வயிறு நிரம்ப உண்டனர்.
“கவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ”15
என்ற கோப்பெருஞ்சோழரின் பாடல் அடிகள் பாண்டிய நாட்டுப் பிசிர் என்ற ஊரானது வற்றாது உணவு வளத்தைக் கொண்ட தன்மையினைப் பதிவு செய்துள்ளன.
தொகுப்புரை
சங்ககாலம் நிலம், நீர், மலை, மழை, உணவு இயற்கை போன்ற அனைத்து வளங்களையும் பெற்று தன்னிறைவு உடைய சமுதாயமாக விளங்கியது. மன்னன் நீர்நிலைகளை ஏற்படுத்தி வேளாண் தொழிலையும், நீர்வள ஆதாரங்களையும் பெருக்கினான். மழையை நம்பியிராது கோடையிலும் மக்கள் செழிப்புற்று வாழ்ந்துள்ளனர்.
சான்றெண்விளக்கம்
1.திருக்குறள், 739
2.புறம். 156 (1-2)
3.மேலது, 176 (9-10)
4.மேலது, 380 (7-9)
5.சிலம்பு, மங்கல வாழ்த்துப் பாடல், (7-9)
6.பதிற்றுப். 43 (12-18)
7.அ.ச.ஞானசம்பந்தன், அகமும் புறமும், ப.214
8.புறம். 137 (7-8)
9.பதிற்றுப். 24 (27-30)
10.க.ப.அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, ப.188
11.புறம். 137 (5-6)
12.குறள். 1031
13.புறம். 176 (2-4)
14.மேலது, 168 (3-6)
15.மேலது, 215 (1-3)
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
திருமதி அ.கிறிஸ்டி நேசகுமாரி
ஆய்வில் நிறைஞர்
தமிழாய்வுத்துறை,
மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
காளிப்பட்டி, நாமக்கல் – 637501.