இந்தியப் பெண்களின் சமூகநிலை | (Social status of Indian women )

இந்திய பெண்களின் சமூகநிலை

இந்தியப் பெண்களின் சமூகநிலை

(Social status of Indian women )

            மேலைநாடுகளில் பெண்ணியக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ந்து மாறுபாட்டைந்ததைக் கண்டோம். இதற்கு முக்கியக் காரணம் அந்நாடுகளில் மாறிவரும் சமூகச் சூழலுக்கியைந்தவாறு பெண்ணியக் கருத்துக்களும் மாறுபாடடைந்ததாகும். பெண்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், தங்கள் நிலையை மாற்ற இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் இதற்கு வழிகோலின

            இதற்கு மாறாக, பெண்ணியக் கருத்துக்கள் இந்தியாவில் வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலம் ஏற்பட்டவையாகும். பெண்களின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களை ஆட்சியாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளுமே வெளியிட்டனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு உகந்தவை என்று தாங்கள் கருதியவற்றைப் பல திட்டங்களின் மூலமும், சட்டங்களின் மூலமும் செயற்படுத்த விழைந்தனர். இவர்கள் பெரும்பாலும் ஆண்களே ஆவர். ஆரம்ப காலங்களில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.

            இந்தியப் பெண்ணியத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, இந்தியா சுதந்திரமடையுமுன்பு உள்ள காலம்; இரண்டாவது, இந்திய சுதந்திரத்திற்குப் பின் உள்ள காலம் காலகட்டத்தில் இந்தியப் பெண்ணியவாதிகள் ஆங்கிலேயர்களின் ஆளுகைக்குட்பட்டுச் செயலாற்றினர். இரண்டாவது காலகட்டத்தில் அவர்கள் சுதந்திரமாகச் செயலாற்ற முடிந்தது. ஆயின், இரு காலகட்டங்களிலும் இந்தியப் பெண்ணியம் பெரும்பாலும் செயற் திட்டங்களாகவே உள்ளது) அவ்வாறே இந்தியப் பெண்ணியம் இங்கு விளக்கப்படுகின்றது.


இந்தியப் பெண்களின் சமூக நிலை (1947-ஆம் ஆண்டு வரை)

            இந்தியச் சமூகத்தின் ஆரம்ப காலங்களில் இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றிச் சரியான முறையில் விளக்கத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களும், சரித்திரச் சான்றுகளுமே துணை நிற்கின்றன. மேலும் அதிகமான சான்றுகள் கிடைக்குமாயின் இப்பொழுது கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். அல்லது அவற்றை மேலும் உறுதிப்படுத்திக் கூறுமாறும் அமையலாம். ஆயின், 19-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில அரசாலும், கிருத்துவ மதத்தினராலும், சமூக சீர்திருத்தவாதிகளாலும் தொகுக்கப்பட்ட செய்திகள் அக்கால கட்டத்தில் பெண்களின் சமூக நிலையை ஓரளவு எடுத்துக் காட்டுகின்றன. அதனால் ஆரம்ப காலங்களில் உள்ள பெண்களின் நிலையைச் சுருக்கமாகக் கூறி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு வரை உள்ள இந்தியப் பெண்களின் நிலை சற்று விரிவாக விளக்கப்படுகின்றது.


தொடக்க காலக் கண்ணோட்டம்


            வரலாற்று நோக்கில் இந்தியப் பெண்களின் சமூக நிலையை நோக்கும்பொழுது சமூகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருதக் காரணங்கள் உள்ளன சமூகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தாய்வழிச் சமூகம் வழக்கில் இருந்தது என்ற கொள்சை இக்கருத்தை ஆதரிக்க முக்கியக் காரணமாகும்.

            இந்தியப் பெண்களின் சமூக நிலையை வரலாற்று நோக்கில் ஆராய விழைந்த அல்டேகர் (Altekar), கோசாம்பி (Kosambi), குர்யே (Ghurye), ராதா குமுத் முகர்ஜி (Radha Kumud Mokerji) முதலிய சமூக அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் வேதகாலங்களில் பெண்களின் நிலை மேன்மையுற்றிருந்தது என்பதைச் சில ஆதாரங்களோடு விளக்குகின்றனர்.(ரிக் வேதத்தில் காணப்படும் சில பாடல்கள் அக்காலத்தில் வாழ்ந்த சில பெண்களால் இயற்றப்பட்டவை. இவ்வாறு பெண்கள் இயற்றிய இருபது பாடல்கள் ரிக்வேதத்தில் காணப்படுகின்றன. அக்காலப் பெண் தத்துவவாதிகள், ‘பிரமவதனிகள்’ என்றழைக்கப்பட்டனர்) கோஷா, ரோமசா, லோபாமுத்திரா போன்றவர்கள் அவ்வாறான பிரம்மவதனிகள் ஆவர். மேலும், கார்க்கி, லசக்னவி, மைத்ரேயி போன்றவர்களும் பொது விவாதங்களில் கலந்து கொண்ட தத்துவ ஞானிகள் ஆவர்.

            வேத காலத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று குருகுலவாசத்திற்கனுப்பப்பட்டு, ஆண்களுக்கிணையாகக் கல்வி பயின்றனர். அவர்களுக்கும் ஆண்களைப் போன்று உபநயனம் என்ற சடங்கு செய்யப்பட்டு, அவர்களும் இரண்டாவது பிறவி பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு 16 வயதிற்குப் பின்பே திருமணங்கள் நடைபெற்றன. திருமணத்திற்கு முற்பட்ட காலகட்டத்தினை அவர்கள் அறிவை மேம்படுத்துவதற்கே பயன்படுத்தினர்.

            மேலும், பெண்கள் தங்கள் மனத்துக்கு இயைந்த கணவன்மார்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெண்கள் விவசாயம், நெசவுத் தொழில், மட்பாண்டம் வனைதல் போன்ற தொழில்களிலும் ஆண்களுக்கிணையாகப் பணிபுரிந்தனர். ஆண்களைப் போலவே வில், அம்பு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிட்டனர். அவர்கள் ஆசிரியர்களாகவும், பாடகிகளாகவும், அதிகாரிகளாகவும் பணி புரிந்தனர். தாய் வழிப் பெயரையே சூட்டும் பழக்கம் அக்காலத்தில் வழக்கில் இருந்தமை, தாய்வழிச் சமூகம் அக்காலத்தில் இருந்தது என்பதற்குச் சான்றாக விளங்குகின்றது. இவ்வாறான காணரங்களினால் வேத காலத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்தது என்பது இவ்வறிஞர்களின்
கருத்தாகும்.

            தமிழ்நாட்டில் பெண்களைப் பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் (கி.மு. 200 முதல் கி.பி. 200 ஆண்டு வரை) காணக் கிடக்கின்றன. தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும் பெண்களுக்கென்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன. வீரம், தலைமை தாங்கும் பண்பு முதலியவை ஆண்களுக்குரியவை என்று அவற்றை உயர்த்திக் காட்டுகின்றன. அதே சமயம் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்களுக்குரிய குணங்கள் என்று கூறிப் பெண்கள் இவற்றுடன் வாழ்வதே அவர்களுக்கு அழகு என்று வலியுறுத்துகின்றன. மேலும், சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும்.

            அகம் என்னும் பிரிவு ஆண், பெண் உறவுகளைப் பற்றிக்கூறும். இங்கு பெண் தலைவியாவாள். இப்பிரிவில் ஆண் பெண் உறவுகளான காதல், இல்லறம், ஊடல், பிரிவு, மக்களைப் பேணுதல் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. புறம் என்ற பகுதியில் தலைவன் ஆண் ஆவான். இப்பகுதியில் வீட்டிற்கு வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளான போரிடுதல், பொருளீட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இவ்வாறாகத் துறைகளைப் பாகுபடுத்தியதில் தவறெதுவும் இல்லை. ஆயின், இவ்வாறு பாகுபடுத்தியதன் மூலம் பெண்களுக்கென்று பாகுபடுத்திய இயல்புகளும் அதைச் சார்ந்த கடமைகளும் சமூக மதிப்பீட்டில் தாழ்ந்தவை; ஆண்களுக்குரிய இயல்புகளும் அதைச் சார்ந்த கடமைகளும் உயர்வானவை என்ற ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் ஆண் பெண் இனத்தாருக்கிடையே நிலைபெறக் காரணமாயுள்ளன.

            சங்க நூல்களும், அதன் பின்னர் தோன்றிய காப்பியங்களும் பெண்களின் கற்பின் மேன்மையைப் புகழ்ந்துரைக்கின்றன. அவை, பெண்களின் கற்பின் திறம் பற்றியும், பெண்கள் கற்பைத் தங்கள் தனிப்பெருங்குணமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. அவ்வாறான தனிப்பெருங் குணமாகிய கற்பை, ஆண்களும்  கடைப்பிடிக்க வேண்டுமென அவை வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக, ஆண்கள் எத்தனை பெண்களோடும் பாலுறவு கொள்ளலாம்; இவ்வாறு, நடந்து கொள்வது அவர்களது தனித்த உரிமை என்றும் விவரிக்கின்றன.

 
            காலம் செல்லச் செல்ல, இந்தியப் பெண்களின் நிலை மேலும் வீழ்ச்சியுற்று அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாயினர். அதனால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நிலவிய இந்தியப் பெண்களின் சமூக நிலையுடன் ஒப்பிடும் பொழுது சங்ககாலப் பெண்களின் நிலை ஓரளவு மேம்பட்டே இருந்தது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், சங்க நூல்களில் காணப்படும் களவொழுக்கம் அக்காலச் சமூகம் பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்திருந்தது என்பதைக் காட்டுகின்றது.

            தங்களது விருப்பத்திற்குப் பெற்றோர் உடன்படவில்லையெனில் தாங்கள் விரும்பிய ஆண்மகனுடன் ‘உடன்போக்கு’, மேற்கொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டவும் அவர்கள் மனவலிமை பெற்றிருந்தனர். இதைத்தவிர, பெண்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகள் அளிக்கின்றன. வீரத்தில் சிறந்த தாய்மார்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் நிறையவே இருந்திருக்கின்றனர்.


            ஆயினும், ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற சமூக நீதி முறையும், ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் என்ற கருத்தும் சங்க காலம் முதல் தமிழர் சமூகத்தில் காணப்படுகின்றன. இவை காப்பிய காலங்களில் மேலும் வலிமையுற்று பெண்களின் நிலை வீழ்ச்சியுறக் காரணமாயின. காப்பிய நூல்களைத் தொடர்ந்து வந்த நீதி நூல்கள், ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றிப் பெண்கள் தீய குணங்கள் நிறைந்தவர்கள் என்றும், ஆண் மக்களால் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்றும், விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் வலியுறுத்துகின்றன. தமிழில் எழுதப்பட்ட நீதி நூல்கள் வடமொழி நீதி நூலாகிய மனுதர்ம சாஸ்திரத்தின் கருத்துக்களை வலியுறுத்துகின்றன.

            இதற்குக் காரணங்கள் என்ன என்பதைச் சமூகவியலாரும், பெண்ணியவாதிகளும் ஆராயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் காரணம் என்று வலியுறுத்திக் கூறப் பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதாரக் கலாச்சார மாற்றங்களை விளக்கும் சான்றுகள் நமக்கு இல்லை. ஆயினும், இவைகளும் காரணங்களாக இருக்கலாம் என்று கூறச் சில ஆதாரங்கள் உள்ளன.


            இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு போர்களை இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறலாம். இருநாடுகளிடையே போர் நிகழ்ந்து முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேந்தனின் வீரர்கள், தங்கள் வெற்றிக் களிப்பின் ஒரு பகுதியாக தோல்வியுற்ற நாட்டு மன்னனைக் கைது செய்து இழிவுபடுத்துவதும், அந்நாட்டுப் பொருட்களைச் சூறையாடுவதும் காலங்காலமாக வழக்கிலிருந்து வருகின்றன. இவை தவிர, தோல்வியுற்ற நாட்டு மன்னரின் மனைவியரையும், அந்நாட்டுப் பெண்களையும் கவர்ந்து சென்றும், நாட்டுப் பெண்களை இழிவுபடுத்தினர்.

        தோல்வியுற்ற இழிவுபடுத்துவதன் மூலம் அந்நாட்டை இழிவுபடுத்துவதாகக் கருதினர். இவ்வாறு இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகள் அடிக்கடி போர்களைச் சந்திக்க நேர்ந்தபொழுது, அந்நாட்டுப் பெண்கள் வேற்றரசனால் இழிவுபடுத்தப்படுவதற்கு முன்பாக உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மேற்கொண்டனர். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின்மீது படையெடுத்து வந்த அலெக்சாண்டர் என்னும் கிரேக்க அரசர் உடன்கட்டை ஏறும் பழக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றார். காலப்போக்கில் ஒரு சமூகத்தின் பெண்களும், அவர்களது கற்பும் அச்சமூகத்தின் ஆண் மக்களால் காக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

         பெண்கள் சுந்திரமாக வாழ்ந்த நிலை மாறி, ஒரு பெண், ‘அவள் ஆயுட்காலம் முழுவதும் காக்கப்பட வேண்டியவள்’, என்ற கருத்து உருவாயிற்று இதை மனுநீதி போன்ற நூல்கள் ஒரு திருமணத்திற்க முன்பாகத் தந்தையாலும், திருமணத்திற்குப் பின் அவள் கணவனாலும், முதுமைக் காலத்தில் அவளது மகனாலும் காப்பாற்றப்பட வேண்டியவள் என்று வலியுறுத்தின. பெண்கள்  
அவர்களின் வாழநாள் முழுவதும், ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலை உருவாகியபொழுது இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமும் வழக்கில் வந்தது. ஒரு தந்தை தான் பெற்ற பெண்குழந்தையின் பாதுகாவற் பொறுப்பைக் கூடியவிரைவில் திருமணத்தின் மூலம் அடுத்தவர்களிடம் ஒப்படைக்கவே முற்பட்டான்.

       இவ்வாறாகப் பெண்கள் வலிமையற்றவர்கள்; அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்கள் வலிமையுற்றதால் திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைந்தது. பெண்கள் பிறந்தது முதல் கணவன்மார்களுக்குத் தொண்டு செய்து அடிமைகளாக வாழவும், அவர்கள் மூலமாகக் குழந்தைகள் பெற்று வளர்க்கவும், கணவன் வீட்டாரிடம் அடங்கி ஒடுங்கி வாழவுமே பயிற்றுவிக்கப்பட்டனர். இதுவே அவர்களது வாழ்க்கைக் கல்வியாயிற்று. மனத்தையும், அறிவையும் வளப்படுத்தும் கல்வியறிவைப் பெறுவதும், பொது வாழ்வில் ஈடுபடுவதும் தேவையற்றவையாயின.

       மேலும், இளவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றமையால் திருமணமான பின்பு பள்ளிக்குச் சென்று கல்வியறிவு பெறுவதும் யலாத ஒன்றாயிற்று. பெண்களின் உலகம் வீடும் அதைச் சார்ந்த இடமுமே என்று வட்டம் சிறுத்துச் சிறுத்து, வெளி உலகிற்கு அவர்கள் வருவதும் வெளி உலக வாழ்வில் பங்கு கொள்வதும் காலப்போக்கில் தடை செய்யப்பட்டன. மேலும், வெளியுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருந்ததால் பெண்களை வீட்டிற்குள் அடைத்துப் பூட்டி வைக்கும் வழக்கமும் நடைமுறைக்கு வந்தது.

      இவை தவிர, கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்தே வைதீக எதிர்ப்பு மதங்களாகிய ஜைன மதமும், பௌத்த மதமும் பிரபலமாயின. இம்மதங்கள், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கும் துறவு வாழ்வை வாழ்க்கை முறையாகக் கொண்டவையாகும். ஆண்கள் மட்டுமே துறவு வாழ்விற்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். அவ்வாழ்க்கை முறைக்கு, இல்லற வாழ்க்கையும், அதற்குத் துணையான பெண்களும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். அதனால் அம்மதங்கள் பெண்களையும், பெண்களின் தொடர்பினையும் வெறுத்து ஒதுக்க வேண்டுமெனப் போதித்தன. அவ்வாறான வாழ்க்கை முறைக்குச் சாதகமாகப் பெண்களை இழிவுபடுத்திப், பெண்கள் காமம் நிறைந்தவர்கள், இழிவானவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று போதித்தன. மனுதர்ம சாஸ்திரம் முதல் பின்வந்த எல்லா நீதிநூல்களிலும் இவ்வாறான கருத்துக்களே பரவிக் கிடக்கின்றன.

     இவ்வாறான காரணங்களினால் காலம் செல்லச் செல்ல, பெண்களுக்கு வெளியுலகத் தொடர்பு அறுபட்டுப் போயிற்று. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. உரிய உரிமைகள் அளிக்கப்படவில்லை. இவற்றைத் தவிர, பெண்கள் பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறுபட்ட கொடுமைகளுக்கும் உள்ளாயினர்.

       கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த கிருத்துவ மதத்தினரும், ஐரோப்பியர்களும், இந்திய நாட்டை இந்திய மக்களின் பழக்க ஆண்ட ஆங்கிலேயர்களும் வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், சமூக நியதிகளையும் எழுதி வைத்துள்ளனர். இச்செய்திகள் அவர்கள் நம் நாட்டினரைப் புரிந்து கொண்டு அவர்களுடன் பழகவும், மதமாற்றம் செய்யவும், பின்பு நம் நாட்டினரை ஆளவும் தேவைப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் அக்கால இந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையையும் உணர்த்துகின்றன; அவை இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் வெளிப்படுத்துகின்றன.

 

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.



 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here