ஆற்றுப்படை இலக்கியத்தில் திணைசார் உணவுகள்| மோ. விஜயசோபா

ஆற்றுப்படை இலக்கியத்தில் திணைசார் உணவு - மோ. விஜயசோபா
முன்னுரை
           
பண்டைய தமிழர்கள் வாழ்க்கை திணை சார்ந்த வாழ்க்கையாக இயற்கையோடு இணைந்த வாழ்க்கையாக இருந்துள்ளதை நாம் இலக்கியங்கள் வழி உணர்ந்து கொள்ளலாம். ஆற்றுப்படை இலக்கியத்தில் உணவு தேடி அலையும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், ஒவ்வொரு திணைகளில் வாழ்ந்த மக்களின் உணவு தேடிய வாழ்வு குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது.

பொது நிலையில் உணவு குறித்த பார்வை
           
          மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பொருள் உணவாகும். பண்டைய மக்களின் முதல் தேடலே உணவு தேடலாக இருந்தது. பழந்தமிழர்கள் இயற்கையாக கிடைத்த காய், கனிகளையும், விதைகளையும். கிழங்குகளையும் உண்டனர். பின்னர் பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடி தனக்குரிய உணவாக மாற்றிக் கொண்டான்.
   மலைப்பகுதிகளில் தேன், கிழங்;கு போன்றவைகள் மிகுதியாக கிடைக்கும். நெய்தல் நில பகுதிகளில் மீன் கிடைக்கும். முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பதால் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பால், தயிர், மோர், நெய் போன்றவை மிகுதியாக கிடைக்கும். மருத நிலத்தில் நெல்லும், நெல் சோறும் காய்கறிகளும் மிகுதியாக கிடைக்கும். பண்டமாற்று முறை பண்டைய தமிழர்களிடையே காணப்பட்டதையும் நாம் பார்க்கலாம். குறிஞ்சி நில மக்கள் நெய்தல் நில மக்களுக்கு தேனை கொடுத்து மீனை பெற்று கொண்டார்கள். ஆற்றுப்படை இலக்கியம் பயணம் சார்ந்த இலக்கியமாகவும் இருப்பதால் பரிசில் வேண்டி பயணிக்கும் இரவலர்களுக்கு வழியில் பல நிலத்தவர்களும் அளித்த உணவுகள், இரவலர்களை வரவேற்று அவர்களுக்கு மன்னர்கள் அளித்த விருந்துகள் குறித்த குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவரவர் தகுதிக்கேற்பவும் வாழ்ந்த நிலத்தின் தன்மைக்கேற்பவும் அவர்களின் உணவு முறை இருந்துள்ளது.

குறிஞ்சி நில மக்களின் உணவு
           
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் உணவுக்காக இயற்கையை சார்ந்திருந்தனர். சிறிய நிலப்பரப்பில் தினையினை விதைத்து வேளாண்மை செய்துள்ளனர். நன்னன் என்றும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் வாழ்;ந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச் சோறு உண்டதனை
 
           “பரூவக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு           
              குரூஉக்கன் இறடிப் பொம்மல் பெறுகுவீர்”1
           
குறிஞ்சி நில மக்கள் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சி, கடமான் இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை உணவாக உட்கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. நெல்லால் சமைத்த (வடிக்கப்பெற்ற) கள்ளையும் தேனால் செய்த மூங்கில் குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளி, நீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பினையும் உண்டனர்.
           
“வேய் பெயல் விளையுள் தேக்கம் தேறல்           
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து வைகறை
            ………………………………………………..           
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி”2
என்ற அடிகளால் குறமகள் சமைத்த உணவினை நாம் அறிந்து கொள்ளலாம்.
            அதுபோல் காட்டில் வாழுகின்ற கானவர்கள் எய்த அம்புகள் பட்டு மார்பில் புண் பெற்று நிலத்தை குத்தியதால் கொம்பில் மண்பட்டு வழி அறியாமல் விழுந்து கிடக்கின்ற இருள் துண்டுபட்டு கிடப்பது போன்ற பன்றியை கண்டால் மூங்கில்களில் பற்றிய தீயினால் மயிர் நிங்குமாறு சுட்டு தூய்மைப்படுத்தி தின்று தெளிவான சுனை நீரை குடித்து மீதம் உள்ள பனறனி தசையை எடுத்து செல்லுங்கள் என பதிவு வருகிறது.
 
 ………………………………………………           
நிறப்புண் கூர்ந்த நிலத்தின் மருப்பின்           
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்           
இருள் துணிந் தனை ஏனங் காணின்           
முளிகழை இழைந்த காடுபடு தீயின்           
………………………………….. “3
இதனை இந்த வரிகளில் காட்டுவழி பயணத்தை பற்றி அறிய முடிகிறது.

முல்லை மக்களின் உணவும் வாழ்வும்
           
பசுமையான இலை தழைகளைக் கொண்ட காடும் காடு சார்ந்த பகுதி முல்லை நிலமாகும். முல்லை நில மக்கள் உணவு தேவைக்காக பெரும்பான்மை கால்நடைகளையே சார்ந்திருந்தனர். சிறிய நிலப்பகுதியில் வரகு, அவரை போன்ற காய்கறிகளையும் பயிர் செய்துள்ளனர். நன்னது மலைநாட்டு முல்லை நில மக்கள் சிவந்த அவரை விதைகளையும், மூங்கில் அரிசியையும், நெல் அரிசியையும், புளிக்கரைக்கப்பட்ட உலையில் போட்டு புளியங் கூழாக்கி உட்கொண்டார்கள்.
   
 “தொய்யா வெறுங்கையோடு துலின்நுபு குழீஇ           
செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து           
பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும்”4
என்ற அடிகளாலும், முல்லை நில மக்கள் பாலையும் தினை அரிசிச் சோற்றையும் உண்டனர். முல்லை நில சிற்றூர்கள் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” என்ற உணவினை உண்டதை,
           
“நெடுங்குரல் பூளைப்பூலின் அன்ன           
குறுந்தாள் வரகின் குறள் அவிழச் சொன்றி           
புகர்இணர் வேங்கை வீகண் டன்ன           
அவரை வான்புழுக்கு சுட்டி பயில்வுற்று           
இன்சுவை மூரல் பெறுகுவீர்”5
என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. முல்லை நில மக்களின் உணவில் பால், புளி, மூங்கிலரிசி, நெல்லரிசி, வரகரிசி, அவரை போன்றவை இடம் பெற்றிருந்தது என்பதை அறியமுடிகிறது.

மருத நிலத்து மக்களின் உணவும் வாழ்வும்
           
நீர் வளமும், நில வளமும் நிறைந்த வயல் சார்ந்த பகுதி என்பதால் வேளாண்மை மூலம் கிடைக்கும் பொருட்கள் மருத நில மக்கள் உணவில் பெரும்பங்கு வகித்தது. பண்டைய தமிழர் அரிசிச் சோற்றையே தன் சிறப்பு உணவாக உண்டனர். உழவர் குலப்பெண்கள் வைரம் பாய்ந்த உலக்கையின் இரும்பு பூணால் குற்றியெடுத்த வெண்மையான சோற்றுடன், நண்டும், பீர்க்கங்காயும் கலந்து சமைத்த கறிக்கலவையினை விருந்தினருக்கு அளித்ததை
           
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த           
அவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு           
சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்”6
என்னும் அடிகள் கைகுத்தல் அரிசியால் சோறாக்குலார்கள் என்பதையும் நண்டையும், பீர்க்கங்காயையும் சேர்த்து சமைப்பார்கள் என்பதையும் அறியமுடிகிறது. அதுபோல தொண்டைநாட்டு மருத நிலத்து சிறுவர்கள் காலை நேரத்தில் பழைய சோற்றை உண்டதை,
           
“கருங்கை வினைஞர் காதல் அம்சிறாசுர்           
பழஞ்சோற்று அமலை முனைஇ”7
என்ற அடிகளால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
 தொண்டை நாட்டு கடற்கரைப்பட்டினத்திலிருந்து காட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த தோப்பில் வாழ்ந்த உழவர்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு முதலியவற்றை உணவாக கொண்டதை,
          
  தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்           
வீழ் இல் தாழைக் குழலித் தீம்நீர்           
…………………………………           
ஆறுசெல் வம்பலர் காய் பசி தீரச்           
சோறு அடு குழிசி இளக, விழுஉம்”8
என்னும் அடிகள் காட்டுகின்றன. மருதநிலம் வளம்மிக்க பகுதி என்பதால் சோற்றுடன் பல வகையான காய்கள் பழங்கள், கிழங்குகள், இறைச்சி போன்றவை மருத நில மக்கள் உணவில் ஒரு பகுதியாக இருந்துள்ளதை நாம் உணரலாம்.

நெய்தல் நில மக்களின் உணவும் வாழ்வும்
           
கடலும் கடல் சார்ந்த பகுதி என்பதால், கடல் உணவுகள், கள் போன்றவை நெய்தல் நில மக்களின் உணவில் இருந்தன. பண்டைய தமிழகத்தில் கள்ளுண்ணும் வழக்கம் காணப்பட்டது. மன்னர், பாணர், புலவர், கூத்தர், பொருநர், விறலியர் என அனைவரும் கள்ளினை உண்டு களித்தனர். நெய்தல் நகரமான எயிற்பட்டணத்தில் வலைஞர் குலப் பெண்கள் (நுளைமகள்) காய்ச்சிய பழைய கள்ளையும், குழல் மீன் ஒட்டினையும் உணவாக தருவார்கள் என்ற பதிவினை பார்க்க முடிகிறது.
           
நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த           
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப           
…………………………………..           
விறல்குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்”9
இதற்கு இந்த பாடல் அடிகள் வலு சேர்க்கிறது. நெய்தல நிலத்தில் வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள். அவ்வகையில் தமது இல்லத்திற்கு வந்த விருந்தினருக்கு குழல் மீனினை அளித்த நிகழ்வினைக் காணலாகிறது.

பாலை நில உணவும் வாழ்வும்
           
பாலை நிலம் வறட்சியான பகுதி என்பதால் பிற நிலங்களில் விளையும் உணவுப் பொருட்களையும் வழிப்பறி மற்றும் வேட்டையாடுதல் மூலம் கிடைக்கும் உணவுகளை உண்டனர். தொண்டை நாட்டுப் பாலை நில மக்கள் புல்லரிசியைச் சேகரித்து உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கி சமைத்து உப்புக்கண்டத்தோடு உண்டார்கள். மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டதை,
  
“களர்வளர் ஈந்தின் காழ் கண்டன்ன           
சுவல்விளை நெல்லின் செல் அவிழ்ச் சொன்றி         
 ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்           
வறைகால் யாத்தது வயின் தொறும் பெறுகுவீர்”10
என்ற அடிகளால் அறியலாம்.
ஓய்மா நாட்டுப் பாலை நில மக்களான வேடர் குலப்பெண்கள் புளியிட்டுச் சமைத்த சோற்றையும், வேட்டையாடிக் கொண்டு வந்த மானின் ஒட்டிறைச்சியையும் சமைத்தனர். பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் பழந்தமிழரின் வழக்கத்தையும் சிறுபாணாற்றுப்படை பதிவு செய்துள்ளது.
 சுவை மிகுந்த உணவினை புசித்து நோயற்ற வாழ்வும், மாசற்ற சூழ்நிலையும் உருவாக்கி திணைசார் மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தற்கால வாழ்வு முறையை ஒப்பிடும் போது சங்ககால மக்களின் வாழ்வு மிகவும் போற்றுதலுக்குரிய நிலையில் உள்ளது. ஆற்றுப்படை இலக்கியங்களில் இயற்கை வேளாண்மை, தன்னிறைவு பெறுதல், விட்டு கொடுக்கும் பண்பு, தன்னம்பிக்கையோடு பாணர்கள் ஒவ்வொரு நிலத்திலும் பயணித்த முறை சற்றே திகைப்பிற்குரிய நிலையில் உள்ளது. ஆனாலும் அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர் என்பதை திணைசார் உணவு முறை வெளிப்படுத்தும்.

முடிவுரை
           
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களின் உணவுமுறை, வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, பண்டமாற்று முறை மூலம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வினை வாழந்து வந்தனர் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்களில் திணைசார் உணவு முறை வெளிப்படுத்துக்கின்றன என்பதில் ஐயமில்லை.
சான்றெண் விளக்கம்
1.மலைபடுகடாம், பாடல் வரிகள் (168-169)

2.மலைபடுகடாம், பாடல் வரிகள் (171-183)

3.மலைபடுகடாம், பாடல் வரிகள் (245-248)

4.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (434-436)

5.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (192-195)

6.சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் (193-195)

7.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (223-224)

8.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (356-366)

9.சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் (158-163)

10.பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (130-133)

துணை நூற்பட்டியல் 
1.சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் முதற்பதிப்பு, 21 சூன் 2010.
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மோ. விஜயசோபா
முனைவர் பட்ட ஆய்வாளர்

பதிவு எண். 20213094022021

தமிழ்த்துறை ஆய்வகம்,

முஸ்லீம் கலைக்கல்லூரி,

திருவிதாங்கோடு.

மின்னஞ்சல் : 24msobha@gmail.com
நெறியாளர்
முனைவர். ஐ.லாலி ஏதேஸ்,
தமிழ்த்துறை ஆய்வகம்,

முஸ்லீம் கலைக்கல்லூரி,

திருவிதாங்கோடு.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

திருநெல்வேலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here